Saturday, October 29, 2022

நமக்கான ஒரு தூண் நிற்கையில்

நமக்கென ஒரு இடம்
 அதில் ஒரு ஓரமாய் அமர்வதில்
இருளிலும் ஒதுங்க ஏதுவானது!

நாம் சொல்லும் சொற்கள்
  நம் புலம் பார்த்து மதிப்பிடப்படுகையில்
ஓரமாயிருக்கும் நம்மிடமே தூண்!

ஒரு கல்மண்டபத்தில் ஒதுங்கும் போது
  நமெக்கென இருக்கை ஓரமாய் இருக்கும்,
மண்டபத்தின் தூண்களும் ஊன்றுகோல்கள்!

மண்டபத்தில் பலவகை உரையாடல்கள்
   நம் உரையாடல் ஒரு மூலையில்
எட்டிப் பார்ப்பவர்களின் தூரம் பார்வையில்!

கண்களால் பேசும் அம்மண்டபம்
  நமக்கான ஓரத்தையும் ஏற்கும் பாரம்
இருளிலும் ஏதுவான தூண்கள் அவை!

நமக்கான ஒரு தூண் நிற்கையில்!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Nuestro lugar en la sala del templo!

Friday, October 28, 2022

சப்பாத்திக்கு சாம்பார்

பக்கத்து ஊரிலுள்ள பஞ்சாபி நண்பனின் பெண் வந்து எங்களைப் பார்த்து விட்டுப் போனாள். 

நம்ம பையன் அம்மிணிகிட்ட தனக்கு வேணும்கிற சாம்பார் உருளைக்கிழங்கு சமைச்சு வைக்கச் சொல்ல, பஞ்சாபி பெண்ணுக்கு தோசை சட்னி சாம்பார் வச்சு ஏமாத்திரலாம்ன்னு அம்மிணி ட்ரை பண்ணாங்க, வேலைக்காவல.

நல்ல கொலைப்பசியில வந்த அந்த பொண்ணு சப்பாத்தியே சாப்பிட்டுக்கிறேன்னு சொல்ல, இங்ஙன வீட்டுல முழிக்கிற முழி ஆஹா!

வாழ்க்கையில ஒரு வீர பஞ்சாபி மங்கைக்கு வந்த சோதனை, சப்பாத்திக்கு சாம்பாரையும் உருளைக்கிழங்கையும் தொட்டுகிட்டு, சாப்பிட முடியாம சாப்பிட்டுவிட்டுப் போயிடுச்சு. பாவம் குழந்தை.

அப்புறம் ஏன் சார் அவங்க நம்மளை சாம்பார்ன்னு சொல்ல மாட்டாங்க.

வாழ்வினிது
ओलै सिरिय !
¡Come cualquier cosa cuando tengas hambre!

வெடிச்சத்தம் கொடுக்கும் தீபாவளி வருகை

வீட்டு பக்கத்துல இந்த வருட தீபாவளி கொண்டாட்ட வெடிச்சத்தம் (fireworks) தொடர்ந்து பதினைந்து நிமிடமாகக் கேட்குது.

வெடிச்சத்தம் கேட்டுத் தான் இன்னிக்கு ஊர்சனம் தீபாவளி கொண்டாட்டமே தெரிகிறது.

என்னமோ நம்ம உலகமே தனியாக இயங்குது. எதையும் முன் கூட்டியே தெரிந்து கொண்டு அதில் பங்கேற்க நேரமேயில்லை.

இயந்திரத்தனமாக எங்க இரண்டு பேருக்கும் வேகமாக வாழ்க்கை ஓடுது. மூனு டிவியிருந்தும் ஒன்று கூட ஆன் பண்ணுவதில்லை. ரிமோட் தேடனும்.

அடிக்கடி அம்மிணி கேட்கிறாப்புல: ஏன் நமக்கு நேரமே பத்தமாட்டேங்குது என.

தெரியலை.

வாழ்க்கை இயங்குகிறது. அதன்படி நாங்கள் ஓடுகிறோம்.
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Fuegos artificiales en la vida!

கந்தையேயானாலும் கசக்கிக் கட்டு

வீட்டிலுள்ள பழைய எலக்ட்ரானிக் சாதனங்கள் லேப்டாப்பில் ஏதாவது உடைந்தாலோ பழுதடைந்தாலோ முன்பெல்லாம் தூக்கிப் போட வேண்டிய நிலமைதான்.

வீட்டிலிருந்த மூனு பழைய லேப்டாப்புகளை நானே அப்கிரேட் பண்ணி இன்னும் பத்து வருடமாகியும் அதெல்லாம் சிறப்பாக ஓடுது. 

ஆனால் பையனோட மேக்புக்கின் ஸ்க்ரீன் உடைஞ்சவுடனே அந்தப் பழசைத் தூக்கிப் போட மனசு வரலை. 

சின்ன வயசுல அண்ணன் ஷர்ட்ஸை நான் போடுவதும் என்னோட பேண்ட் ஷர்ட்ஸை காலேஜில் படிக்கும் போது கூட என் தம்பி போடுவதும் எங்க வீட்டில் சகஜம். இப்ப கூட என் பையன் வாங்கி விட்டு போடாம மற்றும் அவன் வளர்ந்து விட்டதால் அவனுதை நானும் என் அண்ணனும் போடுகிறோம். அல்பத்தனமாக இருந்தாலும் எங்க சின்ன வயசு பழக்கவழக்கங்கள் மாறவில்லை. சின்ன வயசில் பணப்பற்றாக்குறையை நிறைய சந்தித்ததால் இது எங்கள் வீட்டில் சகஜமாய்ப் போனது.

பையனோட பழைய மேக்புக் லேப்டாப்பை ஆப்பிளுக்கே எடுத்துப் போயும் பல கடைகளில் ஏறி இறங்கியும் அந்த ஆயிரம் டாலர் பொருளை வீணாகத் தூக்கிப் போட மனசு வரலை. ரிப்பேர் பண்ண ஆகிற செலவுக்கு இன்னும் கொஞ்சம் போட்டு புதுசு வாங்கிடலாம்.

பல இடங்களில் தேடுகையில் ஒரு கடையில் சொன்னார்கள்: இங்கு மாதம் 25$ மெம்பர்ஷிப் எடுத்துக்க. உன் வீட்டிலுள்ள எந்த எலக்ட்ரானிக்ஸ் பொருளையும் அது சுக்கு நூறாக உடைஞ்சா கூட நாங்க ரிப்பேர் பண்ணித் தர்றோம்ன்னாங்க. இரண்டு மூனு மாசம் கழிச்சு தேவையில்லைன்னா மெம்பர்ஷிப் கேன்சல் பண்ணிக்கன்னாங்க. உன் மேக் ஐ நாங்க 100$க்கு ரிப்பேர் பண்ணித் தர்றோம்ன்னாங்க.

இது என்ன புதுசா இருக்கேன்னு நினைச்சேன். மெம்பர்ஷிப் எடுத்த அடுத்த மாதம், உடைஞ்சு கிடந்த லேப்டாப்பை மூன்றே நாளில் உயிர்ப்பித்துக் கொடுத்து விட்டார்கள்.

வாங்கும் போது போனால் கடையில் செம கூட்டம். எல்லோரும் அவர்களிடம் உடைஞ்ச போனை ரிப்பேர் பண்ணுவதும், பிஎஸ்4 என பல விளையாட்டு கேமிங் எலக்ட்ரானிக்ஸ் ஐட்டமெல்லாம் அதன் ரிமோட் கூட உயிர்ப்பித்து வாங்கிகிட்டுப் போறாங்க.

இன்னொரு லேப்டாப்புக்கும் 100 கொடுத்து ssd ட்ரைவ் மாத்திப் போட்டுகிட்டேன். பத்து வருடம் முன்ன வாங்கிய லேப்டாப் இப்ப விண்டோஸ் 10 ssd 1tbல செமையாக ஓடுது.

இப்ப இங்க நிறைய எலக்ட்ரானிக்ஸ் சிப் பற்றாக்குறை. முன்பு எதையுமே வாங்கி தூக்கி எறிந்து கொண்டிருந்த மக்கள் இப்பவெல்லாம் எல்லாப் பொருட்களின் விலையெல்லாம் யானை விலையாக இருப்பதால் பழசை ரிப்பேர் பண்ணி உபயோகிக்கிற நிலைக்கு வந்து விட்டார்கள். பெரிய மாற்றம் தான்.

கந்தையேயானாலும் கசக்கிக் கட்டு.

பழசை உயிரூட்டி புதுப்பிபதில் 
வாழ்வினிது.
ओलै सिरिय 
¡Intenta reutilizar antes de lanzar!

தினபலன் சொல்லும் கதை

நம்ம ஜாதகம் அவங்க கையில எப்படி கிடைச்சதோ தெரியலை அவங்க போடற தினப்பலன் மாதிரியே நடக்குதே! நான் என்ன செய்ய!

போன் மூலம் பொன்னானத் தகவல் வரும்ன்னு இன்னிக்கும் போட்டாங்க!

வருதே! வரிசையாக மூனு போன் கால். (அண்ணன்) பொண்ணே மாப்பிள்ளையோட சேர்ந்து, ஃபோன் பண்ணி வாங்கன்னு கூப்பிடறாங்க. முன்னவே அண்ணன்ட்டேர்ந்தும் ஃபோன்.

ஒரு வருஷமாப் பேசாம ஓடி ஒளிஞ்சு கிட்டு இருந்த நண்பன் இன்னிக்கு திடீர்ன்னு போன் .

எல்லாம் ஒரே சமயத்துல ஒன்னு கட் பண்றதுக்குள்ள இன்னொன்னு.

கூடவே இதையுமல்ல எழுதிப் போட்டிருக்காங்க: இன்னியிலிருந்து 3 நாளைக்கு சந்திராஷ்டமமாம். வாயை மூடி கிட்டு இருங்கிறாங்க. நாளைக்கு peakஆம்.

எப்படி இருக்கிறது. கஷ்டமான காரியமாச்சே! 

எப்படியோ ஓடற வாழ்க்கை வழக்கப்படியே ஓடுது. பழகிடுச்சு!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¿Cómo lo predicen?

மாகாளி மோரில்

அம்மாக்கு மாகாளி வாசனையைக் கண்டாலே ஆகாது. ஆனால் அப்பாக்கும் எனக்கும் ரொம்பப் பிடிக்கும். மத்த சகோதரர்கள் அது பக்கமே வரமாட்டாங்க.

அம்மா எங்களுக்காகவே சகிச்சுகிட்டு எந்தக் குறையிமில்லாம மிக அருமையாக மாகாளி ஊறுகாய் போடுவாங்க.

எனக்கு மாகாளியைப் பார்த்தா கிறுக்கு பிடிச்சுரும். ரொம்பவே விரும்பி சாப்பிடுவேன்.

அம்மிணி இரண்டு நாளைக்குத் தேவையான கறிவேப்பிலை உப்பு போட்ட நீர்மோர் பண்ணி ஃபிரிட்ஜ்ல வச்சுட்டாங்க.

ஒரு பெரிய கப் நீர் மோர் எடுத்து அதுல கொஞ்சம் மாகாளியைப் போட்டுக் குடிக்கிற சுகமே சுகம் தான்.

இன்றைய வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Tómpalo de suero de leche!

நவராத்திரி 2022

நவராத்திரி இங்கு சில பேருக்கு ஒரு passion . ஒரு மாதம் மேலே பிளான் பண்ணி அதற்குத் தகுந்த மாதிரி வீட்டையை மாற்றி அமைப்பது மட்டுமல்ல, கொலுவில் வைத்துள்ள ஒவ்வொரு பொம்மைகளுக்கும் ஒரு தீம் வைத்து அதற்கு கதையே ஒன்றரை மணி அளவுக்கு விவரிக்கும் அளவுக்கு வீடியோ எடுத்து பகிர்வது என்கிற அளவுக்கு ஈடுபாடோடு செய்வார்கள்.

பையனோட கிளாஸ்மேட்டின் அம்மாவின் கைவண்ணம் இந்த கொலு. இதற்கு ஒன்றரை மணிநேர விவரிப்புடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள்.

நவராத்திரி சமயத்தில் அவர்கள் வீட்டிற்கு வரமுடியாதவர்களை இன்று அழைத்திருந்தார்கள். அம்மிணி ஒரு வாரமாக, அவங்ககிட்டேர்ந்து அழைப்பு வந்திருக்குப் போயேயாவனும்ன்னு ஒரு வாரமாக நினைவூட்டல். அப்படி என்னதானிருக்கும்ன்னு இன்று போய் பார்த்ததில் வியந்தவையே கீழேயுள்ள படங்கள்.

பத்து வருடம் முன் ஒரு சின்ன தவறு செய்தேன். ஒரு நண்பர் வீட்டில் கொலுவுக்கு அழைக்க, அவர்கள் வீட்டிலுள்ள கூட்டத்தைப் பார்த்து அம்மிணியை மட்டும் வீட்டினுள் அனுப்பி விட்டு நான் காரிலேயே இருந்து விட்டேன். அவர்களும் இரண்டு அறைகள் முழுக்க கொலு பொம்மைகள் வைப்பது மட்டுமல்ல, அவர்களது உணவுக்கு நான் அடிமை. எங்க பாட்டியின் சமையலின் சுவை இவரது சமையலில் இருக்கும். உள்ளே போன அம்மிணி நான் உள்ளே வராததைப் போட்டுக் கொடுக்க, அவர்கள் என்னிடம் வன்மையாக கடிந்து கொண்டது மட்டுமல்ல, பத்து வருடமாக கொலுவுக்கே கூப்பிடறதில்லை இப்ப.

அம்மிணிக்கு அது மாதிரி ஆயிடக்கூடாதுன்னு இழுத்துகிட்டுப் போனாப்புல. போன இடத்தில் பிரமாதமாக இருந்தது.

அதை உங்களுடன் பகிர்வதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Son divinos!

எனை அறிய முடியாப் பொழுதில்

கடந்த சில நாட்களாகவே என்ன நடக்குதுன்னு புரிய மாட்டேங்குது.

பல நண்பர்கள் பல வருடங்கள் கழித்து இப்போது ஒரு வாரமாக ஃபோனில் பேசுகிறார்கள். அவர்கள் பிள்ளைகள் இப்ப வளர்ந்து கல்லூரியில், சிலர் படிப்பு முடித்தும் விட்டனர். அந்தக் குழந்தைகள் என்னை நினைவு கூர்வதாகச் சொல்கிறார்கள். அப்போது அந்தக் குழந்தைகள் பிஞ்சுகள், எப்படி ஞாபகமிருக்கும்ன்னு தெரியலை.

பணம் நிறையவே சம்பாதித்து விட்டோம், ஆனால் அதை விட இந்த ஓரிரு நிமிட போன் உரையாடலே மகிழ்ச்சி தருவதாகச் சொல்கிறார்கள்.

அவர்களது கடின காலங்களில் சொன்ன அறிவுரைகளை ஏற்கத் தவறியவர்கள் இதில் சிலர். இன்று அதை போனில் நினைவு கூர்கிறார்கள். எவரது தவறுகளையும் நேரடியாக அவர்களிடம் எடுத்துச் சொல்லி செய்யாதேன்னு சொன்னதை இப்ப சொல்கிறார்கள். காலம் தாழ்ந்து என்ன செய்ய.

பழைய தொடர்புகள் தானாகத் துளிர்கின்றன.

எனையே அறியமுடியா ஒரு பொழுதில்
வாழ்வினிது
ओलै सिरिय!
¡Viejos amigos en llamadas telefónicas ahora!

தப்புத்தாளங்கள்

மிகப் பிரபலமானவர்கள் கச்சேரிக்கு நல்ல கூட்டம் வரும். கூட்டத்தில் சிலருக்கு சங்கீதம் தெரியும்.

பிரபலமானவர்கள் ராகம் ஆரம்பிக்கும் போதே அம்மிணியும் அவர்களோட நண்பர்களும் இது என்ன பாட்டுன்னு ஒரு guessing game ஆரம்பிச்சு, ஒரு தனி chat session அல்லது காதுல கிசுகிசு மந்திரம் ஓடிகிட்டு இருக்கும்.

அடுத்து பாடகர் பாட்டை ஆரம்பிச்சவுடனேயே சங்கீதம் தெரிஞ்ச ஆளுங்க எல்லாம் தொடையைத் தட்டி தாளம் போட ஆரம்பிச்சுருவாங்க.

நாம ஞானசூன்யம். பாட்டும் தெரியாது ராகமும் தெரியாது. தெரிஞ்சது எல்லாம் எடுபுடி வேலை தான், மற்றபடி பாட்டையும் எந்த ம்யூசிக் கச்சேரியையும் ரசிக்கத் தான் தெரியும்.

யாரோ என்ன ராகம்ன்னு கேட்டுரப் போறாங்கன்னு பயத்துல உட்கார்ந்திருப்பேன். இப்பவெல்லாம் அம்மிணி அவங்க நண்பர்களைக் கழட்டிவிட்டுட்டு என் பக்கத்தில் உட்காருவதால் அந்தப் பிரச்சனையில்லை, அம்மிணிக்குத் தெரியும். நமக்கு நிம்மதி. தப்பிச்சுருவேன். 

ஆதலால் ரொம்பவும் தலையாட்ட பயம். கச்சேரிகளில் தலையாட்டற கோஷ்டி ஜாஸ்தி.

நேற்று என் பின்னாடி உட்கார்ந்திருந்தவர் கானடாக்கு போடற தாளம், பாடறவர் பாட்டைக் கேட்க முடியாம அவரோடத் தொடையைத் தட்டற சத்தம் பாட்டைக் கேட்க முடியாம ரொம்பத் தொல்லை பண்ண ஆரம்பிச்சுருச்சு.

ரொம்பத் தெரிந்தவராதலால் நான் அவர் தொடையைத் தட்டி அய்யா நிப்பாட்டுங்கன்னு கேட்டுக்க வேண்டியதாப் போச்சு. அவருக்கும் எம்பராஸிங் தான். என்னைச் சுத்தியும் அம்மிணியின் நண்பிகள். எல்லோரும் என்னைப் பார்க்க, அமைதியாக அவங்கப்பக்கமே திரும்பலை நான்.

சபை தட்டுற தப்புத் தாளங்களைக் கண்டுக்காம வாசிக்கற பக்கவாத்யங்கள் ஏன் சபையைப் பார்க்காம பாடறவரைப் பார்த்து வாசிக்கிறாங்கன்னு புரியுது.

நான் தப்பித் தவறி கூட என் நாலு விரலை என் தொடையில தட்டிற மாட்டேன். அம்மிணி கண்டுபுடிச்சுருவாப்புல.

அமைதியா எடுபுடியாக இருப்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Escucha música en silencio!

ஸ்பானிஷ் கற்கும் பொழுதில் - 18

இன்று மாலை வகுப்பில் உதவ வர்றீங்களான்னு எனக்கும் என் கூடப்படிக்கும் அந்த இஞ்சினியர் பெண்மணிக்கும் எங்க ஸ்பானிஷ் புரபசர் ஆங்கிலத்தில் மெசேஜ் அனுப்பிக் கேட்டிருந்தாங்க. 

நான் இந்த வகுப்பிற்குப் போய் உதவக்காரணம் அவங்க இயல்பாக ஸ்பானிஷ் பேசுவதை நேரில் கேட்கும் போது நாம் கற்பது சுலபம்ன்னு.

நான் வருகிறேன்னு ஸ்பானிஷில் பதில் போட, அவ்வளவு தான். அதற்குப் பிறகு எங்கள் மூவரின் உரையாடல்கள் முழுவதும் ஸ்பானிஷிற்கு மாறிடுச்சு.

வகுப்பில் படிப்பது ஒரு வகை, தினசரி நமது புழக்கத்தில் நாம் உபயோகிக்கும் மொழிப்ரவாகம் இன்னொரு வகை.

புரபசர் இந்த உரையாடலி்லுள்ள பிழைகளை கேட்டவுடன் திருத்தி மெசேஜ் அனுப்ப, இன்று புதிதாக கற்றுக் கொள்வதோடு வகுப்பில் கற்பதை இயல்பாக உபயோகப்படுத்தவும் புரிய ஆரம்பிக்கிறது எனக்கு.

நான் அட்மினாக இருக்கும் சம்ஸ்க்ரத க்ரூப்பில் பல தடவை நான் இதைக் கேட்டும் பயனில்லை. நமது அன்றாட தினசரி பேசுகின்ற சொற்றொடர்களை வாக்கியங்களை இயல்பாக எப்படி சம்ஸ்கிரதத்தில் சொல்வது என தினம் ஒன்றிரண்டு வாக்கியங்களை க்ரூப்பில் எழுதுங்கன்னு கேட்டும் பயனில்லை. பல பண்டிதர்கள் உள்ள க்ரூப், கற்பதற்கு காத்திருக்கும் கும்பலும் வைட் பண்ணிக்கொண்டு இருப்பவர்களும் அதிலுண்டு.

தேவைப்படும் போது கற்போம்ன்னு சொல்பவர்களும் உண்டு. ஆங்கிலம் சிறு வயதிலிருந்து கற்றாலும் அதை முறையாக பேச முடியாமல் தடுமாறுபவர்கள் பலருண்டு. இதனால் பல வளர்ச்சிக்கான வாய்ப்புகளை இழந்தவர்களை இழப்பவர்களை அலுவலகங்களில் நாம் பார்க்கிறோம். கான்வெண்ட் இங்க்லீஷ் பேசி எளிதில் மேனேஜராகி விடுவார்கள், இது அவசியம் ஏனென்றால் கம்யூனிகேஷன் நமது வாழ்வில் முக்கியமான அங்கம். மொழி மீதான பற்று மற்றும் அதை பேசுபவர்கள் மீதான இருக்கும் மதிப்பை பொறுத்து நாம் கற்பதில் நம் ஆவலுமிருக்கும்.

பிற மொழி பேசுபவர்களையும் அவர்களது கலாசாரத்தையும் பழக்கவழக்கங்களையும் மதிக்கும் போதும் அந்த அந்நிய மொழி மீது பற்று வருவது நமக்கு இயல்பாக இருக்கும். கற்பதும் சுலபம்.

புதிதாய் ஒரு பற்றுடன் கற்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Aprende con interés!

கோவில் கோபுரம்

பெருமாள் கோவில் கோபுரம் முழுமையடைந்து விட்டது. போன மாதமே கும்பபூஜை முடிவடைந்தது.

இன்று காலை கோவில் போன போது பெயிண்டிங் வேலை நடந்துகிட்டிருந்தது. எதிர்வீட்டு நண்பர் போன் செய்து, தெரியமா, தீபாவளி அன்னிக்கு கவர்னரையும் வரவழைத்து பூரணகும்ப மரியாதையுடன் கோபுர வாசல் திறக்கப் போறாங்கன்னார். அப்ப தான் கவனிச்சேன். இறுதி கட்ட வேலை நடந்து கொண்டிருந்தது.

மாலையில் அம்மிணி இன்று சிவன் கோவிலில் இரவு நேர நீராஜனத்திற்கு கோவிலில் வீணை வாசிக்கனும்ன்னு சொல்ல, போய் சிவன் கோவிலில் அம்மிணி வாசிக்க எல்லா ஏற்பாடும் செய்துவிட்டு பெருமாள் கோவில் பக்கம் வந்தால் நிலவில் கோபுரம் பிரம்மாண்டமாக நிற்குது.

கோபுர தரிசனம் கோடிப்புண்ணியம்டாம்பாங்க அம்மா!

இன்று மதியம் சிவன் கோவில் உண்டகட்டி வெண்பொங்கல். வாவ் என்ன ஒரு நெய் மணக்க ஒரு டேஸ்ட்.  3 தொன்னை வாங்கி சாப்பிட்டதில் மதியம் லன்ச் ஆச்சு.

இரவில் பெருமாள் கோவில் புளியோதரை. வாவ். பிரமாதம். இரண்டு தொன்னை வாங்கி காரில் வச்சேன். புளியோதரையை சிலர் டப்பா டப்பாவாக அள்ளிக் கொடுப்பதைப் பார்த்தேன். டப்பா கேட்கத் தயக்கம். இரண்டாவது தொன்னை சங்கடத்தோடு கேட்டு வாங்கி வந்தேன். அவங்க மலர்ந்த முகத்தோடு நல்லெண்ணத்தில் கொடுத்தாங்க.

எதிர்த்த வீட்டுக்காரங்களும் கோவில் வந்திருந்தார்கள். இன்னிக்கு அவங்க அங்கு ஏகாந்தசேவைக்கு வீணை வாசிச்சாங்க. அவங்க வரும் போது புளியோதரை தீர்ந்திருக்கும்ன்னு தெரியும்.

திரும்பி இரவில் வரும் போது அவருக்கு போன் பண்ணி புளியோதரை கிடைச்சுதான்னு கேட்டேன். வருத்ததோடு ஒன்னுமே கிடைக்கலை, பெருமாள்க்கு வைக்கிற பால் கூட கிடைக்கலைன்னார். 

வீட்டிற்கு வந்தவுடன் ஒரு புளியோதரை தொன்னையை அவருக்கு கொடுக்க, பெருமாள் கோவில் பிரசாதம் கொடுத்து வச்சுருக்கனும்ன்னு வாங்கிட்டுப் போனார். அவர் வைஷ்ணவர், அவருக்கு அது விசேஷம். என்ன ஒரு சுவை அந்த புளியோதரை! வாவ். நானும் அம்மிணியும் ஒரு பருக்கையைக் கூட விடாம வழிச்சு தின்னோம்.

இன்றைய பொழுது அதுவாய்க் கழிந்தது.

வாழ்வினிது.
ओलै सिरिय।
¡La paz en mente está en la devoción!

மொழியும் வேலைவாய்ப்பும்

1987 - தமிழகத்துல pgdca முடிச்சுட்டு வெறும் அதன் சர்ட்டிபிகேட் மட்டும் ஜூலை 6ந்தேதி வாங்கிகிட்டு ஜூலை ஏழாந்தேதி நானும் அம்மா அப்பாவும் சேலத்திலிருந்து அஸ்ஸாம் கிளம்பிப் போனோம். 

போய் ஒரே மாசத்துல வேலை கிடைச்சது. கௌஹாத்தி யுனிவர்சிட்டி புரபசர் இன்டர்வ்யூ பண்ணி ஒரு லோக்கல் இன்ஸ்ட்டிட்யூட்டில் வேலை கிடைச்சது. அரசு சம்பளம் 2200 ரூபாய். அப்ப ஹிந்தியும் தெரியாது அஸ்ஸாமியும் தெரியாது. தினம் தடுமாறுகிற நிலமை. அடுத்த நான்கு ஐந்து மாதங்களில் ஹிந்தி தடுமாறி கத்துக்க ஆரம்பிச்சேன். 

ஒரு வருடம் கழித்து ஸ்டேட் செகரட்டேரியட்ல வேலை வந்து அப்ளை பண்ணினேன். உடனே இன்டர்வ்யூவிற்கு கூப்பிட்டாங்க. கிடைச்சால் 3500 சம்பளம், நிறைய பெனிஃபிட்ஸ். 

போன இடத்துல இன்ட்ர்வ்யூ பண்ணின கமிஷனர் கேட்ட முதல் கேள்வி உனக்கு அஸ்ஸாமி பேச எழுதத் தெரியுமா, அரசு வேலையில் இது முக்கியம்ன்னார். இப்ப கொஞ்சம் புரியுது, இரண்டு மூனு மாசம் டைம் கொடுங்க கத்துகிட்டுப் பேசறேன்னேன். நீங்கெல்லாம் வந்து எங்க வேலையை எடுத்துகிட்டா இங்க லோக்கல் ஆளுக்கு எப்படி கிடைக்கும். நீ போலாம்ன்னு அனுப்பிட்டார். ஒரு அரசு கமிஷனர் இப்படி சொல்லலாமான்னு நினைச்சு வேதனையோடு வெளியே வந்தேன். வேலைக்கு முழு தகுதியிருந்தும் மொழி தெரியாததால் கிடைக்கலை.

இது இன்று ஞாபகம் வரக் காரணம்.

இரண்டு நாளா வாட்சப்புல வர்ற எல்லா தமிழ் பேப்பர்களையும் புரட்டிப் பார்த்ததில் சிலவற்றில் தலைப்புச் செய்திகள் 2023க்குள் மத்திய அரசு எல்லா காலியிடங்களையும் நிரப்பப் போவதாகவும், கிட்டத்தட்ட பத்து லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படுமென்று பார்த்தேன்.

இந்தியாவில் கிட்டத்தட்ட 60-70 கோடி மக்கள் ஹிந்தி பேசத் தெரிந்தவங்க. மத்திய அரசு வேலையில் ஹிந்தி பிரதானமாக தெரியனும்ன்னு பார்த்தால் அந்த 10 லட்சம் காலியிடங்களில் கிட்டத்தட்ட more than two-third அல்லது அதற்கும் மேலே 80 சதவீத வேலை வாய்ப்பு ஹிந்தி பேச எழுதத் தெரிந்தவர்களுக்குப் போகலாம். 

கற்க வேண்டிய நேரத்தில் கற்காமல் என்னைப் போல் இழப்பவர்கள் எத்தனை பேரோ.

கிட்டத்தட்ட 70 கோடி மக்கள் ஹிந்தி பேசுபவர்கள். அவர்கள் வாழ்வாதாராம் உயர அவர்களுக்கான இஞ்சினியரிங், மருத்துவம், மற்றும் பல துறைகளின் பாடத்திட்டங்கள் ஆங்கிலத்திலிருந்து ஹிந்திக்கு மொழி பெயர்க்கப்படும் போது அவர்களுது கல்வி கற்கும் வாய்ப்பு உயருவது மட்டுமல்ல, வேலை வாய்ப்புகளும் பிரகாசமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதைத் தொடர்ந்தால் வட இந்திய மக்களின் வளர்ச்சியை இன்னும் பத்து பதினைந்து வருடங்களில் நாம் கண்கூடாகப் பார்ப்போம்.

வேற்றுமையின்றி கல்வி கற்பதில் மொழி கற்பதில் பலனுண்டு.
வாழ்வினிது.
ओलै सिरिय ।
¡Aprende con respecto a todo!

இன்சூரன்ஸ் புதுப்பிக்கனும்

இப்ப அமெரிக்காவில் open enrollment period. இந்த காலகட்டத்தில் நீங்கள் வேலை செய்யும் இடத்திலும் வெளியிலும் அடுத்த வருடத்திற்கான பலவகை இன்சூரன்ஸ் மற்றும் வரிவிலக்குடன் வரும் திட்டங்களில் சேருவதும் renewal க்குமான கால கட்டம்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் நாம் வாழும் போது நாம் திவாலாகாம இருக்க நம்மையும் நம் குடும்பத்தையும் காப்பாற்றப் போவது இந்த இன்சூரன்ஸ்களே. நமது மாத வருமானத்தில் இதற்கு ஒரு கணிசமான தொகை மாதாமாதம் செலவானாலும் இக்கட்டான நேரத்தில் நம்மைக் காப்பாற்றப் போவது இந்த இன்சூரன்ஸ்களே!

முக்கியமானவை மற்றும் சிலது இப்ப தேவைப்படவில்லையென்றாலும் மறக்காமல் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் எடுத்து வைக்க வேண்டியவை:
1. Health insurance
2. Critical health insurance 
3. Accident and death insurance 
4. Life insurance (individuals and children)
5. Cancer insurance 
6.  Retirement savings adjustments
7. healthcare and childcare flexible spending accounts 
8. Disability supplemental insurance 
9. Dental and vision insurance 
மற்றவைகள் ஞாபகம் வரும்போது குறிப்பிடுகிறேன்.

இதற்கான ப்ரீமியம் மற்றும் மாதக் கட்டணங்கள் நமது சம்பளத்தில் 25-30% ஆனால் கூட பரவாயில்லையென்று எடுக்க வேண்டும். இவையில்லாமல் இங்கு நம்மையோ நம் குடும்பத்தையோ நம் வீட்டையோ நம் சொத்துக்களையோ காப்பாற்றிக் கொள்ள முடியாது.

மறக்காமல் செய்ய வேண்டிய ஒன்று இவைகள். எனக்கு வயது இப்ப கம்மி, பலது தேவையில்லை என்று விட்டால் பிறகு கடினமாகி விடும். கட்டுகிற பணமெல்லாம் ஆபத்து காலத்தில் நமக்கு ஏதாவது ஒரு பெனிஃபிட் பணமாக க்ளைம் பணமாக திரும்பி வந்து விடும் வாய்ப்பு கூட உண்டு.

நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இந்த open enrollment periodஐ கவனத்துடன் கையாள்வதில்
வாழ்வினிது
ओलै सिरिय।
¡Úsalo de manera efectiva sin perder nada!

சிறந்த உணவை உண்ட பொழுதில்

துலா ராசியில் பிறந்ததாலோ என்னவோ எதையும் தராசில் வைத்து எடை பார்த்தே செயல்படுவது இயல்பாகிவிட்டது. பல தடவை எனது செயல்களை பேச்சுகளை தராசு எடையில் வைத்துப் பார்த்துள்ளேன்.

இணையத்தில் என் பிறந்த தேதி நேரத்தை ஒருவரிடம் கூற அவர் ஏப்ரல் 2013 லிருந்து மார்ச் 2020 வரை நீ பட்ட கஷ்டங்களெல்லாம் இப்போது பின்னாடி போயிடுச்சு, வரும் 2023 சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு உனது பிறப்பின் அர்த்தத்தைப் பார்ப்பாய் என்கிறார்.

உண்மையாகவே அந்த ஏழரை வருடங்கள் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளா. அவரால் எப்படி இவ்வளவு தெளிவாக குறிப்பிட முடிகிறதென ஒரு ஆச்சரியம். ஆனால் பல நேரங்களில் பெரும் நஷ்டத்திற்கிடையிலும் என்னால் கொஞ்சம் நிமிர முடிந்ததற்குக் காரணம் எதையும் தராசு நுனியில் வைத்துப் பார்க்கும் குணம், நல்லது கெட்டதுகளை வெளிப்படையாக சொல்வதில் அச்சமின்மை, எவ்வளவோ இழந்த பிறகும் இனி எந்த ஒரு இழப்பும் பெரிதாகத் தெரிவதில்லை. கடந்த இரண்டு வருடத்தில் வரவேண்டியவை தடுக்கப்பட்டு பெருந்தொகையை இழந்ததிலும் அதைப்பற்றிக் கவலையில்லா மனநிலை.

பத்து வருடம் முன் வரை எனது உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடும் ஒரு கெட்டப்பழக்கமுண்டு. ஆனால கடந்த காலகட்டங்களில் ஏற்பட்ட கஷ்டநஷ்டங்களால் உணரமுடிந்தது பல. உணவை விரும்பி உண்ணும் மனைவி. உடலைப் பற்றி துளிகூட கவலைப்படாமல் விதவிதமாக சமைத்து உண்ணும் குணம். உடலுக்குத் தேவையான அத்தனை nutrientsம் கிடைப்பதால், எந்த கஷ்டம் வந்தாலும் அதை ஜஸ்ட் லைக் தட் தட்டிவிட்டு விட்டு ஓடிடும் குணம் மனைவிக்கு. உடலை விட மனது அவ்வளவு ஸ்ட்ராங் அம்மிணிக்கு. உணவை குறை சொல்லாமல் இருக்கும் குணத்தை நான் இப்போது கற்றுக் கொண்டதால் எதுவும் கேட்காமலேயே தட்டு நிறைகிறது.

இங்கு என் மனைவி மூலம் தான் அநேக நட்புகள் மற்றும் நட்பு அழைப்புகள். இன்று மதியம் ஒருத்தர் வீட்டில் உணவு. செம விருந்து. அம்மிணி வராததால் அவருக்கும் கட்டுசாதம் கட்டிக்கொடுத்து விட்டார்கள்.

வல்லமை தாராயோன்னு தேடிய காலம் கடந்து விட்டதாக உணர்கிறேன்.

வருவது இயல்பாகத் தோன்றுகிறது.

ஒரு சிறந்த உணவை உண்ட பொழுதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Come y disfruta de tu comida!

Saturday, October 8, 2022

ஸ்பானிஷ் கற்கும் பொழுதில் - 17

ஒரு மொழியைக் கற்பதற்கு ஏதுவாகத் தயாரிக்கப்படும் புத்தகங்கள் ஏடுகள் மற்றம் பிற உபகரணங்கள் தயாரிக்கப்படும் போது ஒரு ஆழ்ந்த சிந்தனையோடு தயாரித்தால் பலவற்றை ஒரு சின்ன டப்பிக்குள் அடைத்தாலும் அது சரிவர சென்றடைந்து விடும்.

இந்தப் படம் நான் கற்கும் மொழியின் பாடபுத்தகத்தில் ஒரு பக்கம். இதைப் பிரதி எடுத்துப் போடக்கூடாது. இருப்பினும் இதன் தயாரிப்பின் சிறப்பைச் சொல்லவே இதைக் குறிப்பிட்டுள்ளேன்.

ஒரே பக்கத்தில் இதில் நாம் கற்பது:
1. நான்கு வித பருவநிலைகள்
2. மாதங்களின் பெயர்கள்
3. சீதோஷ்ண நிலைகள்
4. எண்ணிக்கை (நம்பர்)
5. சில வார்த்தைகளின் பயன்பாடு.

அனைத்தும் ஒரே டப்பியில் ஒரு பக்கத்தில். கற்பதும் எளிது.

எந்த ஒரு மொழியைக் கற்கும் போதும் கற்பிக்கும் போதும் இத்தகைய எளிமையான முறையைப் பின்பற்றினால் அனைவருக்கும் சுலபமாகப் புரியும் மற்றும் எளிதாக இருக்கும்.

கற்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Aprendizaje de idiomas!

கலைஞனைக் கண்டறிந்தோம் - 2

எங்க ஊர்ல இருக்கிற ஒரு வயதான தம்பதியர் இப்ப முதுமையில் வாடுகிறார்கள். மிகவும் வசதி படைத்தவர்கள், இங்கும் சரி ஊரிலும் சரி. அவர்களுக்கு இங்கு நல்ல மரியாதை உண்டு.

இது அவர்களுடைய வீணை. கடந்த பத்து பதினைந்து வருடமாக உபயோக்கிகாததால் இப்ப இது இப்படியிருக்கு. அவங்க இதை ஒரு வீணை கற்பிக்கும் டீச்சருக்கு இலவசமாக கொடுக்கப் போவதாக அவர்களது நண்பர்களிடம் சொல்ல, அவர்கள் அம்மிணியைக் கூப்பிட்டுச் சொல்ல, இப்ப இது வீடு வந்து சேர்ந்திருக்கு.

இதை முற்றிலும் புதுப்பிக்க ஒரு புது வீணையில் பாதிக்கும் மேல் செலவாகும். தேவையான பெட்டியில் போட்டு வைக்காத்தால் வேக்ஸ் கூடப் போயிருச்சு.

அம்மிணி அந்த உள்ளூர் கிடார் ரிப்பேர் கார்பெண்டரோடு சேர்ந்து புதுப்பிக்கப் போகும் அடுத்த ப்ராஜக்ட் இது. அந்த கார்பெண்டருக்கு இருக்கும் கிடார் பற்றிய அறிவு தான் மூலதனம்.

இதற்கான உபகரணங்களை இந்தியாவிலிருந்து வரவழைக்கிறார் அம்மிணி. வாக்ஸ்க்கு பதில் மரத்தில் அந்த செண்டர் பீஸை இங்கு செய்யனும். பெரிய பிராஜக்ட். செலவு நிறையவே இருக்கு. ஆனால் கண்டிப்பாக மாணவர்களுக்கு உதவும்.

போன வாரம் மாதிரி இன்றும் இன்னொரு பழைய வீணையையும் அந்த கிடார் ரிப்பேர் ஆளிடம் கொடுத்து சரி பண்ணியாச்சு. இந்த தடவை அவருக்கும் எவ்வளவு சார்ஜ் பண்ணனும் புரிய ஆரம்பித்து விட்டது. கேட்டதற்கு மேல் டிப்ஸ் சேர்த்து கொடுத்தாச்சு.

இது மாதிரி ஒரு வீணை ஏழெட்டு வருடம் முன் ஒரு உள்ளூர்க்காரர் ஒரு பழைய வீணையை மிகக் குறைந்த விலையில் கொடுக்க அதைப் புதுப்பித்து இந்த ஏழெட்டு வருடங்களில் பல மாணவர்கள் அதில் கற்றுக் கொண்டுள்ளனர். அது ஒரு ஏகாந்த வீணை. அதன் குடத்தில் இப்ப விரிசல்கள் வர அதை இந்த கிடார் ரிப்பேர் ஆள் அந்த விரிசல்களை சரி செய்து கொடுத்துள்ளார்.

ஒரு நல்ல வீணை ரிப்பேர் ஆள் எங்கள் ஊரில் உருவாகுகிறார்.

கந்தையேயானாலும் கசக்கிக் கட்டும்பாங்க. இது பொக்கிஷங்கள்.

வாழ்வினிது
ओलै सिरिय।
¡Dar energía a los instrumentos!

சாம்பார் ஆகினோம்

பக்கத்து ஊரிலுள்ள பஞ்சாபி நண்பனின் பெண் வந்து எங்களைப் பார்த்து விட்டுப் போனது. 

நம்ம பையன் அம்மிணிகிட்ட தனக்கு வேணும்கிற சாம்பார் உருளைக்கிழங்கு சமைச்சு வைக்கச் சொல்ல, பஞ்சாபி பெண்ணுக்கு தோசை சட்னி சாம்பார் வச்சு ஏமாத்திரலாம்ன்னு அம்மிணி ட்ரை பண்ணாங்க, வேலைக்காவல.

நல்ல கொலைப்பசியில வந்த அந்த பொண்ணு சப்பாத்தியே சாப்பிட்டுக்கிறேன்னு சொல்ல, இங்ஙன வீட்டுல முழிக்கிற முழி ஆஹா!

வாழ்க்கையில ஒரு வீர பஞ்சாபி மங்கைக்கு வந்த சோதனை, சப்பாத்திக்கு சாம்பாரையும் உருளைக்கிழங்கையும் தொட்டுகிட்டு சாப்பிட முடியாம சாப்பிட்டுவிட்டுப் போயிடுச்சு. பாவம் குழந்தை.

அப்புறம் ஏன் சார் அவங்க நம்மளை சாம்பார்ன்னு சொல்ல மாட்டாங்க.

வாழ்வினிது
ओलै सिरिय !
¡Come cualquier cosa cuando tengas hambre!

ஸ்பானிஷ் கற்கும் பொழுதில் -16

எல்லோரோடும் சேர்ந்து படிக்கும் போது அது ஒரு முதியோர் கல்வி போல இருந்தாலும், அங்கு கூடப்படிக்கிறவங்களோட அவங்க சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வது என்பது ஒரு சிறப்பு அம்சம்.

நேற்றும் (10/6/2022) ஆபீஸ் வேலை முடிந்து மாலை ஆறு மணிக்கு புரபசருக்கு உதவ சர்ச்சுக்குப் போனேன். போனவுடனேயே அங்கு படிக்கிற ஒரு வெனிசுலா பெண் என் பெயரைச் சொல்லி, இன்னிக்கு வகுப்பில் பார்ட்டி நடக்கப் போவுது, டான்ஸ் ஆடப்போறோம்ன்னு சொல்ல வந்தாங்க, ஆங்கிலம் தெரியாததால் அவருக்கு சொல்ல வரலை. பாதி ஸ்பானிஷ் பாதி ஆங்கிலம் கலந்து சொன்னாங்க. ஆனாலும் அவங்க விடலை, இதை நான் எப்படி ஆங்கிலத்தில் சொல்வது என சொல்லிக் கொடு, ஒவ்வொரு வார்த்தைக்கும் அதன் உச்சரிப்பை ஒன்னுக்கு இரண்டு தடவை கேட்டு தெரிஞ்சு கிட்டாங்க. 

அவங்க கூட வரும் அவங்களோட 4 வயது குட்டிப் பெண்ணுக்கும் ஆங்கிலம் தெரியாது, ஆனால் கிளாஸில் இன்று பார்ட்டி இருக்குன்னு அந்த சின்னதுக்கு அவ்வளவு சந்தோஷம்.

அந்தக் குட்டிப்பெண் காலையில் ஆங்கிலம் அதே புரபசரிடம் அந்த சர்ச்சில் கற்கிறது. அது கூட நிறைய மெக்ஸிகன் குழந்தைகளும் சேர்ந்து படிப்பதால், அந்தக் குழந்தை அவர்களோடு பழகி நிறைய மெக்ஸிகன் ஸ்பானிஷ் dialects பேசுகிறது. இது அவரோட தாய்க்குப் பிடிக்கவில்லை. 

இந்த வகுப்பில் பாதி பேர் க்யூபா பாதி வெனிசுவேலா. ஆகவே அவர்கள் எல்லோருடமும் இவள் மெக்ஸிகன் கலந்து பேசுவது பிடிக்காததை பகிரங்கமாக சொல்கிறார்கள். 

ஏற்றதாழ்வு பார்க்காத மக்களும் இல்லை மொழிகளும் இல்லை கலாசாரங்களும் இல்லை, மாறிய சமுதாயங்களுமில்லை. எல்லாவற்றையும் பார்த்து அதன் போக்கிலேயே எல்லோரும் போகிறோம்.

ஒரு ஹோட்டலில் வேலை செய்யும் க்யூபன் பெண்மணி, தன்னோடு தன் மகனும் ஆங்கிலம் கற்க, சேர்ந்து வகுப்புக்கு வருகிறார்கள். அந்தப் பையனுக்கு இந்த வாரம் 22 வயது ஆகப்போகிறது. அந்தப் பையனோட பர்த்டே பார்ட்டியைத் தான் சர்ப்ரைஸாகக் கொடுக்க இன்று வகுப்பில் அத்தனை களேபரம்.

பத்து நிமிடத்தில் பர்த்டே பார்ட்டிக்கான அலங்காரம் முடித்து விட்டார்கள், கலர் லைட் பலூன் கேக் சாலட் என எல்லாம் ரெடி.

இரண்டு மணி நேர வகுப்பு முடிந்தவுடன் பார்ட்டி ஆரம்பம். ஆட்டம் பாட்டமென்ன. கலக்கறாங்க. என் கூட அவர்களுக்கு உதவி செய்யும் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி செம டான்ஸ். அவங்க ஆடறதை வீடியோ எடுக்கப் பல தடவை அநுமதி கேட்டும் முடியாதுன்னுட்டாங்க. இல்லாட்டி அந்தப் பார்ட்டியை அழகாகப் படம் பிடிச்சுருப்பேன். 

அந்த க்யூபன் பெண்மணி இந்த வாரம் தான் தன் வாழ்வில் முதல் தடவையாக கார் ஓட்டுவதும், இங்கு ரோட்டில் ஓட்டும் போது ஏற்படும் பயம், ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி, மகிழ்ச்சி எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாகக் கொட்டி புரபசரிடம் சொல்லி அழ, மேலும் தன் பையனுக்கு இங்கு வகுப்பில் ஒரு சர்ப்பரைஸ் பார்ட்டி நடப்பது பார்த்து அவர்கள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.

Caesar salad க்குத் தேவையானவற்றைக் கொண்டு வந்து ஐந்து நிமிடத்தில் டின்னர் ரெடி. அதில் bacon கலந்து விட்டதால் நான் சாப்பிடவில்லைன்னு அவர்களுக்கு வருத்தம்.

செமையாக கேக் வெட்டி ஆட்டம் பாட்டமுடன் பர்த்டே பார்ட்டி. ஆனால் அதற்கு முன் எந்த தொய்வுமில்லாமல் இரண்டு மணிநேர வகுப்பு.

வகுப்பில் அவர்களுக்கு பலவிதங்களில் உதவமுடிவதை எண்ணி எனக்குள் ஒரு அல்ப சந்தோஷம்.

அவர்களது ஆங்கில கிளாஸ் நோட்ஸை எடுத்து நான் அதை ஸ்பானிஷில் எழுதும் போது அவர்களும் நிறைய உதவுவார்கள். புது ஸ்பானிஷ் வார்த்தைகள் தினமும் அறிந்து கொள்ளலாம்.

ஆனால் மிக மிக வேகமாகப் பேசுகிறார்கள். எழுதிப் படிப்பதற்கும் அவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்வதற்கும் இடையே ஒரு பெரிய கோவர்த்தனகிரி மலை நிற்பது போல் தோன்றுகிறது.

கற்கும் போது கலைநயம் நட்புணர்வோடு கற்பது சிறந்தது.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Aprende con diversión!

Friday, September 30, 2022

வெகுளியின் பொருட்டு எழும் விழுப்புண்

வெகுளியாய்க் கேட்டதென்னவோ 
     விழுப்புண்ணை தொட்டுவிட்டது
உள்ளத்து குமுறல் வெகுளித்தனமாய் வழிகிறது!

உள்நோக்கில்லா கேள்விகள்
  உலோகத்தை உருக்குமாயின்
உருக்குத் தத்துவங்கள் உள்நோக்கமானது!

என்னை மறந்து ஒரு கேள்வி
  என்னையே ஆட்டிப்போட்டது
எவரது கேள்விகளும் மறவாது!

வாழ்வியல் சூழ்நிலை தரும் சுகம்
  பிறர் தன் வாழ்வைப் பதம்பார்க்கையில்
வெகுளியாய் நிற்பது அறிவிலிபோலாயிற்று!

வெகுளியின் பொருட்டு எழும் விழுப்புண்!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Las preguntas inocentes duelen!

ஸ்பானிஷ் கற்கும் பொழுதில் - 15

நேற்று 9/29/2022 என் முறை என்று நினைத்து ஸ்பானிஷ் புரபசர் நடத்தும் வகுப்பிற்கு உதவ சர்ச்சிற்குச் சென்றேன். போனது ஒரு விதத்தில் அவருக்கு நல்லதாகப் போனது.

நிறைய இடங்களில் அவர் என் உதவியை நாட வேண்டி வந்தது. ஸ்பானிஷ் மக்களிடம் ஒரு பழக்கமிருக்கு. அது ‘ஏன் அதை அப்படி தான் சொல்லனும்’ன்னு எல்லாத்துக்கும் கேள்வி கேட்பார்கள் அதற்கு பதில் சொல்லனும். 

ஸ்பானிஷில் பெரும்பாலும் சப்ஜக்ட், அடுத்து வரும் வெர்பிலேயே இணைந்திருப்பதால் சப்ஜக்ட்டைக் குறிப்பிட வேண்டியதில்லை. ஆங்கிலத்தில் குறிப்பிடனும்.

எல்லோருக்கு object pronouns, possessive pronouns, adjective pronouns யூஸ் பண்ணும் போது தான் நிறைய சிக்கல் வரும். இது எனக்கும் என் கிளாஸ்மேட்ஸுக்கும் ஸ்பானிஷில் தடுமாற்றம் வரும், ஏனெனில் அவர்கள் அதை ஆரம்பத்திலோ அல்லது வெர்பிலோ இணைத்து விடுவார்கள். இவர்கள் நேற்று ஆங்கிலத்தில் இங்கு தடுமாறுவதைப் பார்க்க முடிந்தது. 

இரண்டு மணி நேர வகுப்பு முடிந்து வகுப்பு கடைசியில் இடைவேளை போது சிலர் நாங்கள் க்யூபாவிலிருந்து வந்தவர்கள்ன்னாங்க, ஒருத்தர் கொலம்பியான்னார். முன்பு வெனிசுவேலான்னு முன்பு சிலர் சொன்னார்கள்.

நேற்று க்யூபான்னு சொன்னவர்களிடம் யாராவது ஃபிடல் காஸ்ட்ரோவைப் பார்த்திருக்கறீர்களா என்றேன். அவருக்கும் சே க்கும் இந்தியாவில் நல்ல மரியாதை உண்டுன்னேன்.

அவ்வளவு தான், வகுப்பு நடப்பது மாறிப்போச்சு. கடைசியில் ஏண்டா இந்தக் கேள்வியைக் கேட்டேன்னு வருத்தப்பட வேண்டியதாகப் போயிடுச்சு எனக்கு. சிலர் கண்ணில் அழுகை. கேட்டதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு வந்தேன்.

ஒருத்தர் இங்குள்ள ஓட்டலில் வேலை செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து இங்கிருந்து பணம், மின் விசிறி, லைட் பல்பிலிருந்து சின்ன சின்னப் பொருட்களைக் கூட அங்கு அனுப்புவதாகவும், தான் தன்னோட ஒரு மகனோடு இங்கு ஓட்டலில் வேலை செய்து சந்தோஷமாக வசதியாக இருப்பதாகவும், அங்கு தன் குடும்பம் கஷ்டப்படுவதாகவும் சொல்லி வகுப்பில் கண்ணீர் விடுவதைக் கண்டு, ஏண்டா அந்தக் கேள்வியைக் கேட்டோம்ன்னு ஆச்சு. கொலம்பியாவிலிருந்து வந்தவரும் இதே கதை தான். எல்லோரும் நாங்க இங்க வசதியாக நிம்மதியாக இருக்கோம்கிறாங்க.

கேட்கக் கூடாதது கேட்டு வகுப்பு போச்சு. சாரி சொன்னேன். புரபசர், இதற்கெல்லாம் வருத்தப்படாதே, இது தான் எங்கள் வாழ்க்கை, அரசியல் கஷ்டங்கள் எங்களுக்குப் பழகி விட்டது, நீ வருத்தப்படாதேன்னாங்க.

அப்ப தான் புரபசர் செய்யும் உதவி எவ்வளவு பெரிய உதவின்னு புரிய ஆரம்பிச்சுச்சு. இந்த நாட்டில் வாழ, மருத்துவ வசதிக்கும் அன்றாட வாழ்க்கைக்கும் இங்கு ஆங்கிலம் தேவை. அவர்கள் எவருக்கும் ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரியவில்லை. எல்லோருக்கும் ஆங்கிலம் கற்பிப்பதும், எங்களைப் போன்றவர்களுக்கு கம்யூனிட்டி காலேஜில் ஸ்பானிஷ் கற்பிப்பதையுமே தினசரி தொழிலாக செய்து வருகிறார். காலையில் அவர்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலம், மாலையில் இவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கிறார். இது ஒரு மகத்தான செயல்.

நேரடி அநுபவங்களைத் தெரிந்து கொள்வதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡La vida no es fácil para todos!

Tuesday, September 27, 2022

செங்காலிபுரம் அனந்தராம தீக்‌ஷிதர்

செங்காலிபுரம் அனந்தராம தீக்‌ஷிதர்

நேற்று இரவு படுக்கப்போவதற்கு முன் இவர் பெயரை நண்பர்கள் குறிப்பிடுவதைப் பார்த்தேன். அப்பாவிற்கு மிகவும் பரிச்சயமானவர், பிடித்தவர்.

தீக்‌ஷிதர் வீட்டுக்கு அப்பா நிறைய தடவை போயிருக்கிறார். அவர் கதாகாலட்சேபம் கேட்டது அவர் வீட்டுற்குப் போனப்பவெல்லாம் எனக்கு நான்கு ஐந்து வயது தானிருக்கும். நான் ஒரு தடவை போனப்ப அவர் வீட்டிலில்லை. 

அப்ப அவர் ஒரு மிகப்பெரிய ஆளுமை. கம்பீரமான பெருத்த உருவம். அப்பா எல்லா இடங்களிலும் எடுபுடி வேலை செய்வார். தீக்‌ஷிதர் கதாகாலட்சேபம் பண்ண வரும் போதெல்லாம் அவருக்கு கம்பெனி கார் போகும். அதில் அவரோடு ஓரிரு தடவை அப்பா பயணித்திருக்கிறார்.

அவர் மறைந்த பிறகு ஒரு தடவை அவர் வீட்டுக்கு அப்பா ஒரு மாலை நேரத்தில் போகும் போது நானும் போயிருந்தேன். அப்ப எனக்குப் பத்து பன்னிரெண்டு வயதிருக்கும். உள்ளே மாமி பிசியாக இருந்தார்கள். வெளிய திண்ணை முன் பார்த்து விட்டு அப்பா திரும்பி விட்டார்.

அப்பா அப்போது என்னிடம் வெளியிலிருந்தே, உள்ளே ஹாலைக் காண்பித்து, அந்த ஹாலில் தான்டா அவர் கம்பீரமாக உட்கார்ந்திருப்பார், அவரோட பூஜை ரூம்ல அவர் பூஜை பண்றதைப் பார்க்கறதும், அங்கு அவர் பஜனை மற்றும் பாராயணம் பண்ணும் போதெல்லாம் பார்க்க கொடுத்து வைத்திருக்கனும்டான்னார்.

நான் அப்பாவோட சண்டை போட்டுகிட்டே திரும்பி வந்தேன். உள்ளே போகலை, வெளியேயிருந்தே வந்துட்டோம்ன்னு சண்டை. எனக்கு அதைப் பார்க்கலைன்னு ஒரே வருத்தம்.

அப்பா மிகவும் மதித்துப் போற்றிய ஒரு ஆளுமை தீக்‌ஷிதர். அவரது மகன் தான் விட்டல்தாஸ் ஸ்வாமிகளென்று நினைக்கிறேன்.

இன்று அப்பாவின் திதி. நேற்று அப்பா தனது 86 வயதில் மறைந்த தினம். எட்டு வருடம் ஓடி விட்டது.

அவரது நினைவு தினத்தில் அவருக்குப் பிடித்த ஒரு ஆளுமையின் பெயரைக் கேட்டதில் 
வாழ்வினிது.
ओलै सिरिय ।
¡Gran personalidad!

Sunday, September 25, 2022

கலைஞனை கண்டறிந்தோம் - 1

அம்மிணி தான் நினைச்சதை சாதிக்காம விடமாட்டாப்புல. பையனும் இப்ப அப்படித்தான்.

அம்மிணிக்கு தன் வீணைகள் மீது அளவுமீறிய மோகம். தன்னிடமே மூன்று இருந்தும், தன்னிடம் பயில்பவர்களுக்கும் தன்னுடையதைக் கொடுக்கனும்ங்கிற போது ஒரு தயக்கமிருக்கும். இத்தனை வருடங்கள் கொடுத்தாப்புல.

இப்ப இரண்டு பழைய வீணையை மற்றவர்கள் உபயோகிக்காமல் பாழடைந்து போன இரண்டை விலைக்கு வாங்கி வச்சுருக்காங்க. ஒன்று முற்றிலும் பழுதடைந்த ஒன்னு நிறையவே புதுப்பிக்கனும், நிறைய செலவாகும். இன்னொன்று நல்ல மரத்தில் செய்யப்பட்ட 30-40 வருட பழமையானது. வாசிக்க நன்றாக இருக்கும்.

அதில் ஸ்ருதி அடிக்கடி இறங்கி விடுவதால் புதிதாக வீணை கற்பவர்களுக்கு தன்னோட வீணையும் சேர்த்து கொடுக்க வேண்டி வரும். புதிதாக கற்பவர்கள் வீணையை handle பண்ணுவதைப் பார்க்க கொஞ்சம் பயமாக இருக்கும்.

இந்த வீணைகளைப் புதுப்பிக்கனும், ஸ்ருதி இறங்காம இருக்க கிடார் பெக்ஸ் fix பண்ணனும்ன்னு இரண்டு வருஷமா ஒரு தொழில்நுட்பம் தெரிஞ்ச ஆளைத் தேடறோம். என்னால் செய்ய முடியும், ஆனால் ரிஸ்க் அதிகம். துளை போடும் போது தவறு செய்தால் நஷ்டமாயிரும்.

இங்கு உள்ளூரில் ரிப்பெர் செய்யத்தெரிந்த ஆளில்லை. அமெரிக்கப் பெருநகரங்களில் ஆட்களிருக்கிறார்கள், ஆனால் அவ்வளவு பெரிய வீணையை அனுப்பி செய்து திரும்ப வரவழைக்க நேரம் பணமெல்லாம் மிக அதிகம் செலவாகும்.

இங்கு நிறைய கிடார் ரிப்பேர் கடைகளுண்டு. அங்கு கொண்டு போய் எப்படி செய்யனும்ன்னு சொல்லியும் அவர்கள் இது பெரிய இன்ஸ்ட்ருமண்ட், ரிஸ்க் எடுக்க மாட்டோம்ன்னுட்டாங்க.

அம்மிணி விடாமத் தேடி ஒரு carpenterஐ பிடிச்சாப்புல இந்த வாரம். வெறும் 28 வயது வாலிபர், carpenter, பல வித மரங்களை அறுத்து அதில் கிடார் பண்ணுவதும், பழையை கிடார்களைப் புதுப்பித்து செய்வதும் அந்த இளைஞரின் திறமை. வசதியில்லாததால் கடை வைக்காமல் ஒரு ஸ்டோரேஜ் ரூமை வாடகைக்கு எடுத்து அதில் இந்த தச்சு வேலை மற்றும் கிடார் எலக்ட்ரானிக்ஸ் பார்ட் பிக்ஸ் பண்ணி புத்தம் புது கிடார் செய்து விற்கிறார். மரத்தை அறுக்கும் போதே அந்த துகள்களின் வாசம் வச்சு அது என்ன மரம்ன்னு சொல்றார்.

அம்மிணி அவருக்கு வீணை எப்படி ரிப்பேர் பண்ணனுங்கிற வீடியோ அனுப்பி, அதற்கான எல்லாப் பார்ட்ஸையும் இந்தியாவிலிருந்து வரவழைச்சு, இன்னிக்கு என்னைக் கூட்டிப் போய் அவர்ட்ட இதை எப்படி ரிப்பேர் பண்ணனும்ன்னு அவருக்கு விளக்கிச் சொல்லுங்கன்னு இழுத்துகிட்டுப் போயிட்டாப்புல.

அந்த இளம் தச்சர் இப்படி ஒரு இசைக்கருவியை வாழ்வில் பார்த்ததில்லை. ஆனால் தச்சு வேலையில் தெளிவான skilled worker. 

அவரிடம் வீணையில் எங்கெங்கு ஓட்டை போடனும் எதை எங்கு ஃபிக்ஸ் பண்ணனும்ன்னு தெளிவாக ஒவ்வொரு பார்ட்ஸும் வச்சுக் காண்பிச்சேன். அவர் பார்த்திருந்த அம்மிணி அனுப்பியிருந்த ரிப்பேர் வீடியோவையும் பார்த்ததை நினைவு படுத்திகிட்டார். இன்னொரு வீணையைக் கொண்டு போய் அதில் எப்படி செய்திருக்குன்னு காண்பிச்சேன்.

அவ்வளவு தான் மனுசனுக்கு உற்சாகம், curiosity, தான் புதிதாக கற்கிற ஆர்வம், தன்னோட முழு ஆர்வத்தையும் காண்பிச்சு ஒரே நாளில் ஐந்து மணி நேரத்தில் எல்லாத்தையும் ஃபிக்ஸ் பண்ணிக் கொடுத்துவிட்டார். அவர் முகத்தில் அவ்வளவு ஆர்வம், மகிழ்ச்சி, உற்சாகத்தில் துள்ளி குதிக்கிறார். அவ்வளவு சந்தோஷம் அவருக்கு.

வீணையில துளை போடற நேரத்துல வந்த மரவாசனையை வச்சு இது எந்த மரத்தில் செய்ததுன்னு சொல்றார். அம்மிணி ஒரு இடத்தில் வேக்ஸ் போயிருக்குன்னாப்புல. அதற்கு bee-wax போட்டு சரி பண்ணட்டுமான்னு அவர் கேட்டார். இல்லை இது சார்கோல் வேக்ஸுன்னு அம்மிணி சொல்ல, மநுசன் தன்னிடமிருந்த ஒரு மரத்துண்டை எரிச்சு அதில் கரித்துண்டு எடுத்து வேக்ஸில் மிக்ஸ் பண்ணி அதே மாதிரி செய்து கொடுத்து விட்டார்.

வீணை பழசானதால் சில இடங்களில் crack இருந்த gapல் எல்லாம் தன்னோட தச்சு வேலையில் சில glueக்களை நம் கண் முன்னே கலந்து ஒரு புது கலவை உருவாக்கி அதை அடைக்கிறார்.

இந்த இளம் வயதில் அவ்வளவு ஆர்வம், தொழில் தெரிந்து வைத்திருக்கிறார். அவர் கேட்டதற்கு மேலேயே கொடுத்தோம், அவர் அவ்வளவு எதிர்பார்க்கலை.

அவர் போட்டுக் கொடுத்துள்ள வீணை ஸ்ட்ரிங் சர்வ சாதாரணமாக g போகுது. அவரோட ட்யூனர்ல பேட்டிரி இல்லை, இல்லாவிட்டால் இந்த வீணையைத் தான் எப்படி கிடார் ட்யூன் பண்ணிக் கொடுப்பேனோ அது மாதிரி செய்ய முடியும்கிறார். இன்னிக்கு உங்கள் மூலம் நிறைய கத்துகிட்டேன்னார். அவருக்கு அவ்வளவு சந்தோஷம். நீங்க இந்தியாவிலிருந்து வரவழைச்ச பார்ட்ஸெல்லாம் நானே ஜந்து-பத்து டாலருக்குள் செய்துடுவேன்கிறார்.

இப்ப இந்த ஊருக்கே வீணை ரிப்பேர் பண்ண ஒரு ஆள் கிடைச்சுருச்சு. அடுத்த வாரம் இன்னொரு வீணைக்கு கிடார் பெக்ஸ் மாற்ற அவரிடம் அப்பாயிண்மென்ட் வாங்கியாச்சு.

முற்றிலும் பாழடைந்து போயுள்ள வீணையை எப்படி அவர் புதுப்பிக்கனும்ன்னு அடுத்த பிராஜக்ட் அவருக்கு. அதைப் பற்றி விளக்கிவிட்டு வந்துள்ளோம். நிறைய செலவாகும். 

ஒரு வீணை ரிப்பேர் கலைஞர் எங்கள் ஊரில் உருவாகுகிறார்.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Reparación de instrumentos musicales!

தோள் கொடுக்கும் துணைவர்

வீட்டுல இருக்கிற ஒவ்வொரு மீனும் விடைபெற்றுவிட கடைசியாக எஞ்சியிருப்பது இது இரண்டும். 

தொட்டியில் பாசி பச்சை படிவதை தடுக்க இரண்டு நத்தைகளைப் போட்டது மீன் குடும்பங்களுக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும் ஒவ்வொன்றும் முழுசா வளர்ந்து மண்டையப் போட்டுருச்சு.

இதுக கடைசி. கீழே இருப்பது தன் கடைசி நாட்களில் உள்ளது. கடந்த நான்கு ஐந்து நாட்களாக இறுதி கட்டப் போராட்டம் நடத்துகிறது.

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு துணை முக்கியமென்பதை அந்த மேலேயுள்ள மீன் நடத்திக் காண்பிக்கறது. தனது துணை துவண்டு போகும் போதெல்லாம் அதை உசுப்பி மிதக்க விடுகிறது, நகர வைக்கிறது. அதை விட்டு நான்கு நாட்களாக நகரவில்லை. அதற்கப்புறம் அதன் தனிமையில் வாடும்.

இத்தோடு இந்த மீன் வளர்ப்பை முடித்துக் கொள்ளப் போகிறேன். இது நாள் வரைப் பார்த்த பலவற்றின் அதன் இறுதி கட்ட போராட்டங்கள் மற்றும் மரணம் நம்மை அசைத்துப் பார்க்கிறது.

நமது வாழ்க்கையைப் பார்ப்போம். வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு துணை முக்கியம். விலங்குகளுக்கும். இந்த மீன் வளர்ப்பு அதை கவனிக்கும் போது அது நமக்கு உணர்த்தும் அந்தக் குடும்ப உணர்வுகள் ஒரு ஆத்ம ஊக்கத்தைக் கொடுக்கும் அன்பளிப்புகள்.

துணையுடன் தோள் கொடுத்து வாழ்வதைப் பார்ப்பதில் 
வாழ்வினிது.
ओलै सिरिय ।
¡Vivir con una pareja es importante!

பிகு: இன்று மாலை கீழிருந்தவர் விடைபெற்று விட்டார். மற்றவர் தனிமையில் அவதியில்.

மூஞ்சியில் வாசனை வீசுது

போன வெள்ளிக்கிழமை அம்மிணி கிட்ட ‘ நான் இரண்டு வாரம் இந்த மாதக்கடைசி வரை வெளிய சாப்பிட மாட்டேன், இன்னிக்கு எனக்குப்பிடிச்ச பஞ்சாபி ரெஸ்டாரண்ட்ல போய் சாப்பிடப் போறேன்’ன்னு சொல்லிபுட்டு அங்க போய் அவங்க மெனுவை நமக்கு ஏற்ற மாதிரி மாற்றி ஒரு வெட்டு வெட்டிவிட்டு வந்தேன். அம்மிணி கூப்பிட்டும் வரலை.

கடந்த ஒரு வாரமாக காபி தண்ணி கூட வீட்டுலத் தான்.

இன்னிக்கு அம்மிணி அவங்க ஆபீஸ் ஆட்களோடு அதே ரெஸ்டாரண்ட் போகப் போறாங்களாம்.

என்னைப் பழி வாங்கனும்ன்னு நினைச்சாப்புலயா இல்லையான்னு தெரியலை இதுவரை மூனு நாளு தடவை கேட்டு உசுப்பேத்தறாப்புல: நீ அந்த கடையில எந்த காம்போ ப்ளேட் வாங்கின, காம்போ நம்பர் என்ன, என்னென்ன நீ அதுல மாத்தினேன்னு மாறி மாறி கேள்வியா அடுக்கறாப்புலயே.

இரண்டு வாரம் வாயைக் கட்டி உட்காரனும்ன்னு உட்கார்ந்துகிட்டு இருக்கேன். திருப்பித் திருப்பி என் ஃபேவரிட் கடை மெனுவைக் கேட்டு ஆட்டம் காமிக்கறாப்புல.

இருபது வருடமாக அந்தக் கடையில் சாப்பிடறேன். அதே சர்தார் குக் அதே முதலாளி. நம்மைப் பார்த்தா நமக்கு வேணுங்கிற மாதிரி மாத்தித் தருவாங்க!

இரண்டு வாரம் முடியட்டும். இன்னிக்கு சத்திய சோதனையாக ஆட்டம் காண்பிக்கறாக அம்மிணி!

நாவடக்கத்தில் வாழ்வினிது
ओलै सिरिय।
¡Espera tu regalo!

ஸ்பானிஷ் கற்கும் பொழுதில் - 14

நேரமின்மை மற்றும் எல்லா நேரமும் ஸ்பானிஷ் கற்பதிலேயே செலவாவதால் மனதைக் கொஞ்சம் திசை திருப்ப ஸ்பானிஷ் கிளாஸ்க்கு ஒரு பிரேக் எடுத்தேன். 

ஆறு மாதம் தொடர்ந்து படிச்ச பழக்கம் விட முடியாம தினமும் ஒரு அரை மணி நேரம் ஸ்பானிஷ் 1 & 2 வை ரிவைஸ் பண்ணி வருகிறேன். கோர்ஸ் பாஸ் பண்ணுவது ஒரு பக்கமிருந்தாலும் அது அந்த மொழியை முழுவதும் புரிந்து கொண்டு பேச இன்னும் நிறைய முயற்சி தேவைப்படுவதால் இந்த பிரேக் எனக்கு அவசியமாகப்படுகிறது.

ஆனால் கற்பிக்கும் புரபசரும் மற்ற சக மாணவர்களும் ஸ்பானிஷ் 3 தொடரச் சொல்கிறார்கள். அடுத்த வருடம் பார்ப்போம்.

அந்த புரபசர் ஸ்பானிஷ் பேசும் மக்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தரும் சர்ச்சுக்கு இன்று அவருக்கு உதவப்போனேன். ஆறு பேரில் மூவர் வெனிசுலா மூவர் க்யூபா. அவர்கள் எல்லோரும் கடந்த ஒரு வருடமாக சர்ச்சில் ஆங்கிலம் கற்று வருகிறார்கள். புரபசரும் ஆறு வருடம் முன்பு தான் வெனிசுலாவிலேர்ந்து வந்தவராதலால் அவருக்கு ஆங்கிலம் தடுமாறும். நாங்கள் போய் உதவுவது அவருக்கு மிக உபயோகமாக இருக்கு.

இரண்டு க்யூபன் மக்கள் பேசுவது சுத்தமாகப் புரியமாட்டேங்குது. மற்றவர்கள் பேசுவது நெத்துகுப்பாகப் புரியுது. நான் புரபசரிடம் எவ்வளவு முயற்சி செய்தும் வார்த்தைகள் வாய்க்குள்ளவே அடைச்சுக்குது பேச வரமாட்டேங்குது, ஆனால் படிச்சா ஓரளவுக்குப் புரியுது என்ன செய்யன்னு கேட்டேன். நீ இப்ப தான் இரண்டு படி தாண்டியிருக்க, இன்னும் நாலைந்து படிகளிருக்கு, வரும், அவசரப்படாதேங்கிறாங்க!

இன்று என்னைப் போல் கூட உதவ வந்த ஆப்பிரிக்க அமெரிக்க சக மாணவி (என் வயசு, என் முன்னாள் சக அலுவலர், கட்டிட இஞ்சினியர்) ஸ்பானிஷ் வார்த்தைகள் பேச முடியாம ஓ ன்னு கிளாஸில் அழ ஆரம்பிச்சுட்டாங்க. ஆங்கிலம் கற்கும் அந்த ஸ்பானிஷ் மக்கள் நாங்களும் இப்ப அதே நிலமைதான்னு ஒருத்தருக்கொருத்தர் ஆறுதல்.

இன்று புதிதாக ஒரு பாட்டியம்மாவும் புரபசருக்கு உதவ வந்தாங்க. அவங்களும் என்னைப் போல ஸ்பானிஷ் 1 & 2 மட்டும் முடித்தவர். பாட்டியம்மா முதலில் என்னிடம் நீ எப்படி இவ்வளவு இங்க்லீஷ் பேசறன்னாங்க. அவருக்கு என்னைப் போல் ஒரு இந்திய வம்சாவளி ஆளும் வந்து இதில் சேருவது ஆச்சரியமாக இருந்தாலும் அவர் நாம பலமொழி பேசுபவர்கள் என்று தெரிந்து வைத்திருக்கிறார். அவர் என்னிடம் ‘இது நீ கற்கும் எத்தனாவது மொழி?’ன்னார். எதிர்பார்க்காத இந்த கேள்விக்கு பதில் சொன்ன பிறகு விழி பிதுக்கி விட்டு வேறு பக்கம் போய் உதவப் போய்விட்டார்.

ஒரு மொழியைப் புதிதாக கற்க ஆறு மாதம் ஒரு வருடமெல்லாம் பத்தவில்லை என்பது எங்களனைவருக்கும் நன்கு புரிகிறது.

பொறுத்திருந்து கற்போம்.
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Aprende de forma lenta y constante!

கால் முட்டி வலி

திடீர்ன்னு இப்ப சில நாட்களாக இடது கால் முட்டி வலி.

முன்பு வலி வந்தப்ப எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தாச்சு. ஆரம்ப காலம். Knee replacement தேவையில்லை.

பையனைப் பார்க்கப் போன நீண்ட பயணத்தில் 12 மணி நேரம் உட்கார்ந்து கார் ஓட்ட முடியாத அளவு வலி. நடந்தா வலி மறையுது, வலியிருந்த மாதிரியேத் தெரியலை.

முன்பு வாங்கியிருந்த கோட்டக்கல் கொட்டன்சுக்கதி மற்றும் சில ஸ்ப்ரேக்களும் உபயோகித்து வலியை ஓரளவு குறைக்க முடிந்தது.

நேற்று இரண்டரை மைல் நடந்து போய் வந்தேன். வலியிருந்த இடம் தெரியலை. உட்கார்ந்தால் வலி.

பல வித ஆயில் மற்றும் இங்கு கிடைக்கும் ஸ்பரே எல்லாம் ட்ரை பண்ணி வீக்கத்தைக் குறைத்தாகிவிட்டது. ஆனால் உட்கார்ந்தால் முட்டி மூட்டு வலி.

இப்ப நீலகிரித் தைலம் யூகலிப்டஸ் ஆயில் தடவிய பிறகு நல்ல நிவாரணம் கிடைக்குது. ஆச்சரியமாக இருக்கு. அதுவும் கொஞ்ச நேரம் தான்.

நானும் தேய்கிறேன் என்கிறது.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Caminar ayuda!

படத்தின் ட்ரைலர் பார்த்து

பொன்னியின் செல்வன் ட்ரைலர் பார்த்து விட்டு எல்லோரும் படம் வர ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

ஒரு மொழியோட சிறப்பு அதிலுள்ள வார்த்தைகளின் உச்சரிப்பில், ஒலி அளவில் கொடுக்கும் உயர்வில் தான் சிறப்பாக இருக்கும்.

எனக்கென்னமோ இந்த ட்ரைலர் பார்த்த பிறகு தோன்றுவது, ஒவ்வொரு கதாபாத்திரமும் தமிழ் உச்சரிப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. 

கல்கியின் எழுத்திலுள்ள ஆதிக்கத்தை ஆர்வத்தை இந்த படத்தில் அதன் உச்சரிப்பில் கோட்டை விட்டுவிட்டதாக இருக்கு. கவனம் தேவை என்று தோன்றுகிறது.

ஆர்வமுடன் எதிர்பார்ப்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Sonido del lenguaje!

விநாயகச் சதுர்த்தி

வாழ்க்கையில சில பேருக்குத் தான் அவங்க நினைக்காமலேயே எல்லா நல்லவைகளும் நடக்கும், ஆனால் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். நமக்கு அது பெரியதாகத் தோன்றலாம்.

அத்தகைய தினம் இது.

சில வருடங்கள் முன் அம்மிணிக்கு பெருமாள் கோவில் ஏகாந்தசேவைக்கு வீணை வாசிக்க வாய்ப்பு கிடைச்சப்ப சில வெட்டிக்காரணங்களைக் கூறி தள்ளிப் போடப் பார்த்தாப்புல. நான், பெருமாள் கூப்பிடறார் ஒழுங்காப் போய் வாசிக்கிறதைப் பாரு, தேதி மாத்தாதேன்னு மிரட்டி வச்சேன். கடைசியில வாசிக்கப் போகிற அன்னிக்கு ராமநவமி. அம்மிணி பின்னாடி சொல்றாப்புல உன்னால ஒரு நல்ல காரியம் நல்ல நாளில் பண்ண முடிஞ்சதுன்னு.

இப்ப எனக்குத் தெரியாமல் அவங்க நண்பர்கள் மூலம் மாதத்தில் ஒரு நாள் சிவன் கோவில் நடைசாத்தும் நேரம் ஏகாந்த சேவைக்கு கஷ்டப்பட்டு தேதி வாங்கியிருக்காப்புல. போன மாதம் கேட்டதற்கு அவர்கள் சிவன் கோவில் சேவைக்கு இன்று நாள் ஒதுக்கியிருந்தார்கள்.

இரண்டு வாரம் கழித்து தான் தெரிந்தது அவர்கள் அலாட் பண்ணிய நாளான இன்று இங்கு கோவிலில் விநாயகச் சதுர்த்தி துவக்கம் என்று.

இப்ப தான் ஏகாந்த சேவை முடித்து வீட்டிற்கு வந்தோம். அம்மிணிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு விநாயகச்சதுர்த்தி நாளன்று.

கோவிலில் செம கூட்டம், கார் நுழையவே கடினம். உள்பிரகாரம் போனால் ஹாலுக்குள் நுழைய முடியாத அளவு கூட்டம். எல்லோரையும் ஒதுக்கி வீணை மற்றும் ஸ்பீக்கர் செட் பண்ணி எல்லா எடுபுடி வேலையும் செய்த திருப்தி இன்று.

அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.

வாழ்வினிது
ओलै सिरिय ।
 ¡Todos nosotros obemos las bendiciones de Dios!

மாலை நடைபயணத்தில்

எப்போதும் நமது மாலைவேளை நடைபயணத்தின் போது 1/2 மைல் தள்ளிப் போகும் போது அங்கு வசிக்கும் ஒரு உள்ளூர்க்காரர் தனது நாயோடு வாக்கிங் போகும் போது நின்னு என்னுடன் பேசி விட்டுப் போவார். இவரைப் பற்றி முன்பே எழுதியிருக்கேன்.

அவர் ஒரு இஞ்சினியர். பல நாடுகளில் அவரது கம்பெனியில் ஆட்களை அமர்த்தி இவரை மேற்பார்வைக்கு அனுப்புவார்கள். இப்போது பல நாடுகளுக்குப் பயணம் செய்கிறார். இந்தியாவிலும் இவருக்கு ஆட்களுண்டு. 

இதற்கு முன் பேசும் போது இவர் இந்திய மக்களுக்குள் இருக்கும் வேறுபாடுகள் பிரிவுகள், நார்த் சவுத் பிரச்சனைகள் பற்றியெல்லாம் கவலையாகச் சொன்னார்.

இரண்டு நாள் முன் பார்த்தப்ப, அவர் என்னிடம் என்ன உன்னை நடுவுல ஒரு மாசம் பார்க்கலை, நான் உங்க ஊருக்குப் பத்து நாள் போனேன்னார். அஸ்ஸாம்ல போன மாசம் ஒரு வாரம் இருந்ததைச் சொன்னார். அன்று சந்தோஷமாக அவர் அநுபவங்கள், என் அநுபவங்களைப் பேசினோம்.

இன்று மாலை பார்க்கும் போது, அவரிடம் நான், அன்னிக்கு நான் ஒன்னு சொல்லலை, அது நான் முப்பது வருடம் முன் இருக்கும் போது அங்கு தீவிரவாதிகள் அதிகம், வெளிநாட்டினரைக் கடத்தி பணயக் கைதிகளாக வச்சுருவாங்க, நீங்க அந்தப் பக்கம் போனா பாதுகாப்போடு போங்க, தனியா போகாதீங்கன்னேன்.

மனுசன் சிலிர்த்து எழுந்துட்டார்.

நான் பல நாட்டுக்குப் போயிருக்கேன், ஆனால் இந்தியர்கள் மாதிரி மோசமான ஆட்களைப் பார்த்ததில்லை, நீங்கள் ஒருவருக்கொருவர் அவன் சரியில்லை இவன் சரியில்லை, நேரில் பார்த்து பேசியது கூட கிடையாது, அநுமானத்தில் அடிச்சுவுடறீங்க, அதுவும் உங்களுக்குள்ளவே இன்னொருத்தரை நம்பாம மோசமாக சொல்றீங்கன்னு போட்டு சாத்து சாத்துன்னு சாத்திபுட்டார் மனுசன். உங்களுக்குள்ள நிறைய ஜாதி, மத, இனம், மொழி, ரீஜன் என பலவிதத்துல ஒருத்தரை ஒருத்தர் discriminate பண்றீங்க. இவ்வளவு மோசமாக நான் எங்கயும் பார்க்கலைன்னு சொல்லி, அவரோட கம்பெனியில் நடந்த நார்த்சவுத் சண்டையைச் சொல்றார்.

என்னப்பா இது, அங்க பாதுகாப்பா இருங்க, மூனு வருஷம் வாழ்ந்திருக்கேன்னு சொன்னா, மநுசன் போட்டு உருட்டி தள்ளி மொத்தி புட்டு போயிட்டார்.

ஒழுங்கா பேசாம நடந்து போயிட்டு வந்திருக்கலாம். இல்லாத சந்திராஷ்டமத்தை வரவழைச்சுகிட்டேன்.

நம்ம ஜாதகம் சுயமாகவே இயல்பாக இயங்குதுப்பா!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Camina en silencio!

கண்ணாடி மாற்றிய பொழுது

ஒரு கண்ணாடி மாத்தினதுக்கே நம்ம மக்கள் அதகளம் ஆடிட்டாங்க!

இதுக்கு என்ன சொல்வாங்களோன்னு கெதக்ன்னு இருக்கு.

எனக்கு இந்த மருவாதை வேண்டாம் அன்பர்களே!

அமைதியாக இருப்போம் அதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Gafas de sol!

தேவையற்ற அல்ப ஆசைகள்

வாழ்க்கையில ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு அல்ப ஆசை இருக்கும். எனக்கும் அது உண்டு, ஆனால் செயல்படுத்திக்க தள்ளிப் போட்டுருவேன். 

இங்கிருந்து ஊர் போகும் போதெல்லாம் ஊரில் யாராவது ஒருத்தர் ray ban sunglasses கேப்பாங்க. விலை கம்மியாக கிடைக்கும் போது வாங்கிக் கொண்டு போய் கொடுத்துருக்கேன். மத்த சமயத்துல இது நமக்கு கட்டுபடியாகாதுன்னு சொல்லிருவேன். அடிமனதிலுள்ள கஞ்சத்தனம் தடுத்துரும்.

ஆனால் ஒரு தடவை கூட தனக்கு வாங்கிக்கனும்ன்னு மனதில் எழவில்லை, அது விலை ஜாஸ்தி நமக்கு வேண்டாம்ன்னு தள்ளிடுவேன். சின்ன வயது வாழ்க்கைப் பாடம், அப்பா அம்மா அடிக்கடி சொல்லும் வசனம், எல்லா கடனையும் அடைச்சுட்டுத் தான் நமக்கு வாங்கிக்கனும்கிறது அடிமனதில் படிந்து போய்விட்டது.

இப்ப எல்லா கடன்களையும் மூன்று வருடமுன்னே அடைத்து விட்டதால் அந்த பழைய அல்ப ஆசை மனதில் மறுபடியும் வர ஆரம்பிக்க, இனியும் தள்ளிப்போட்டு என்னத்த சாதிக்கப்போறோம்ன்னு மனதில் தோன்ற, போன தடவை கண் செக்கப் பண்ணப்ப டாக்டர் கிட்ட sunglasses க்கு ஒரு தனி prescription கேட்டேன். 

அவங்க ஏன் sunglasses யும் progressive lensஆகவே வாங்கிக்கயேன், உனக்கு இரண்டு விதத்துல உதவும்ன்னாங்க.

கடைசியில இருந்த ஒரு அல்ப ஆசையையும் நிறைவேத்திகிட்டாச்சு. இனசூரன்ஸ் போக ஒரு சுளையான அமௌண்ட் போனாலும் இப்ப அதை நினைக்கையில் எதுக்கு இப்படி ஒரு அல்பையாக இருந்திருக்கோம்ன்னு தோணிச்சு. பையன் கேட்டப்ப யோசிக்காம அம்மிணி அவனுக்கு வாங்கிக் கொடுத்தாப்புல.

தேவையற்ற அல்பத்தனங்களிலிருந்து விடுபடனும்.
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Deseos tontos!

ஜனநாயகத்தில் மாநில உரிமைகள்

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர், இந்தியா டுடே  கரண் தாபருக்கு கொடுத்த பேட்டியைப் பார்த்தேன். உண்மையில் அனைவரும் காண வேண்டிய ஒன்று.

ஒரு ஜனநாயக அமைப்பில் யார், எது எவ்வாறு இருக்கனும்ன்னு புரிஞ்சுக்க, ஒரு ஜனநாயக அமைப்பை வலுப்படுத்த இந்த பேட்டி உதவும்ன்னு நினைக்கிறேன்.

இதற்கு முன் நான் பார்த்த கரண் தாபர் பேட்டிகளில் அவர் பேட்டியாளரை வீழ்த்துவதைத் தான் பார்த்துள்ளேன். முதல் தடவையாக அவராலேயே பேட்டிக்கு, பேட்டியாளருக்கு எதிராக பேச முடியாத நிலையைப் பார்க்கிறேன்.

ஒரு வேளை தமிழக நிதி அமைச்சர் கூறியதன் உண்மையின் தாக்கத்தை அவரது சொந்தக் கருத்தோடு ஒத்துப் போவதால் கூட இருக்கலாம்.

அனைவரும் காண வேண்டிய காணொளி அது. தெளிவான கருத்துகள் ஒரு ஜனநாயக அமைப்பு நிலைபெற அமைய.

எந்தவொரு inhibition மற்றும் முன்னவே ஒரு prejudgement approach இல்லாமல் ஒரு திறந்த மனதோடு பேட்டியைக் கேட்டால் உங்களுக்கும் பிடிக்கலாம்.

இன்றைய பொழுது 
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Escuchar con el corazón abierto!

ஸ்பானிஷ் கற்கும் பொழுதில் -13

கடைசியில் வாழ்க்கையில் முதல் தடவையாக அந்த மாஜிக் ஸ்கோரைத் தாண்டி மார்க் எடுத்து ஸ்பானிஷ் 2 கோர்ஸ் முடித்தாகி விட்டது. இத்தனை வருடங்களாக தாண்ட முடியாத ஒன்றை தாண்டிய நிறைவு இன்று கிடைத்தது.

இந்த வாரத்தோடு கிளாஸ் ஆன்லைன் வெப்சைட் மூடிவிடுவார்கள். புரபசருக்கு மெசேஜ் அனுப்பி கடைசி டெஸ்ட் உடனே திருத்திக் கொடுத்தால் என்னோட கிரேடை டவுன்லோட் பண்ணிக்க முடியும்ன்னு கேட்டேன். அவங்க உடனே evaluate பண்ணி உண்மையிலேயே நான் எதிர்பார்க்காத மார்க் கொடுத்ததால் ஓவரால் கிரேட் அந்த மாஜிக் ஸ்கோரை கீழே தள்ளாமல் கொடுத்திருக்கு.

கடைசி டெஸ்ட் ரொம்பவே கடினம். சின்ன கிராமர் தப்பிற்கும் மார்க் குறைஞ்சுரும்.  இந்த டெஸ்ட்டில் நிறையவே சுயமாக ஸ்பானிஷில் எழுத வேண்டியிருந்தது. நிறைய உட்பகுதிகள், கேள்விகள், அதற்கு விளக்கமாக பதில் அளிக்கனும். விழி பிதுங்கிடுச்சு.

கடைசியில் ஒரு முழு பாரா போன வார இறுதியில் என்ன பண்ணினோம், எந்த கடையில் என்ன துணி என்ன கலரில் வாங்கினோம்ன்னுவெல்லாம் ஸ்பானிஷ்ல எழுதனும். போன வாரம் முழுவதும் உடம்பு சரியில்லாமல் வெளியே போக முடியவில்லை, கிளாஸ்க்கே போகலை. ஆகவே, அதையே உண்மையாக நடந்ததை அப்படியே ஸ்பானிஷில் எழுதிப் போஸ்ட் பண்ணிவிட்டேன். உடம்பு சரியில்லை, கடையில் துணி வாங்கவில்லை, அதற்கு பதிலாக மெடிசின்ஸ் வாங்கினேன் என்றே எழுதியிருந்தேன். கிராமர் மிஸ்டேக் இல்லாததால் அப்படியே எடுத்துக் கொண்டு மதிப்பீடும் கிடைச்சுருச்சு. தேவையற்ற பொய்கள் நம்பகத்தன்மையைக் குறைத்து விடும்.

ஒரு வழியாக இந்த கோர்ஸ் முடிந்தது. அந்த மாஜிக் மதில் சுவரையும் தாண்டியாச்சு.

வாழ்வினிது.
ओलै सिरिय ।
¡Curso completado correctamente!

எளியவர்களும் வரி கட்டுபவர்களே

நிறைய இடத்துல இதைப் படிப்பதால் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். எல்லோரும் மிக சாதாரணமாக எழுதி கடந்து செல்வது பணக்காரர்கள் மட்டுமே அதிகம் வரிகட்டுவதாகவும், அவர்கள் கட்டும் வரியில் தான் மற்றவர்கள் வாழ்வதாகவும் இலவசங்கள் கிடைப்பதாகவும் படிக்கிறேன்.

இது ஒரு தவறான புரிதல்.

பணக்காரர்கள் அதிகம் சம்பாதிப்பதால் அதற்காக விதிக்கப்பட்டுள்ள வரியை கட்டுகிறார்கள். இப்ப வருமான வரி விலக்குக்கு கீழே சம்பாதிப்பவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வரிச்சலுகையினால் அவர்கள் வருமான வரி வேண்டுமானால் கட்டாமலிருக்கலாம், ஆனால் ஒரு நாட்டில் பிறந்த எந்த குடிமகனும், குழந்தையேயானாலும், வரி கட்டாத ஆட்கள் கிடையாது.

Sales tax, excise tax, property tax, gst, … … என வரிசைப் படுத்தினோம்ன்னா நாட்டுல ஏதாவது  ஒரு வகை/பல வகை/எல்லா வகை வரிகளும் கட்டாத ஆட்களேயில்லை. பஸ், ட்ரைன், ரோட்டுல நடந்தா கூட ஏதாவது ஒரு வரி நம் கண் முன் படும்.

மத்திய, மாநில, உள்ளாட்சி, நகராட்சிக்கெல்லாம் வரும் இந்த வருமானம் எல்லா பொது மக்களிடமிருந்து தான். பணக்காரர்களிடமிருந்து மட்டுமே அது வருவது அல்ல. அவர்கள் பங்கு வேணா எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும்.

எல்லா வரியும் கட்டிய பிறகும் பணக்காரர்களிடம் மீதி நிற்கும் proportional amountம் சாதாரண இன்கம்டாக்ஸ் வரி விலக்குக்கு கீழே இருக்கிறவங்க கிட்ட மீதமாகிற பணத்தோட proportion கணக்குப் போட்டா mathematicalஆக யார் வருமானத்தில் அதிக பர்சண்டேஜ் செலவு பண்ணி நாட்டை இயங்க வைக்கறாங்களுகோ, அவங்களுக்கும் நாட்டில் பங்கு உண்டு, கிடைக்கும் இலவசத்திலும்.

புரிதல்படுத்திக் கொள்வதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Todos pagamos impuestos!

ஸ்பானிஷ் கற்கும் பொழுதில் - 12

இன்றோடு ஸ்பானிஷ் 2 முடிந்தது. கடைசி நாள் வகுப்பு முடிந்தவுடன் எல்லோரும் ஏதாவது ஒரு ஸ்பானிஷ் பேசும் நாட்டோட ரெஸ்டாரண்ட் போய் எல்லோரும் ஐட்டமெல்லாம் ஸ்பானிஷ்ல ஆர்டர் கொடுக்கனும்ன்னு இன்னிக்குப் பிளான்.

எல்லோரும் போயிருக்காங்க, நான் போக முடியலை. போன வாரம் உடம்பு சரியில்லாததால் இந்த வாரம் பொதுவெளியில் போகத் தவிர்க்கிறேன். இந்த வாரம் சர்ச் கிளாஸுக்கும் வரலைன்னு சொல்லிட்டேன். அடுத்த மாதம் வர்றேன்னு சொல்லியிருக்கேன்.

ஸ்பானிஷ் 3 சேரலை. ரொம்ப hectic ஆக வாழ்க்கை ஓடுது. எல்லாத்தையும் ஒரு ரிவைஸ் பண்ணிட்டு ஜனவரியில் சேர்றேன்னு சொல்லியிருக்கேன். திரும்ப வருவேன்னு பிராமிஸ் பண்ணுங்கிறாங்க.

வகுப்பெல்லாம் முடிந்தாலும் தினமும் ஸ்பானிஷ் படிக்கிற பழக்கம் போக மாட்டேங்குது. கை சும்மாயிருந்தா புத்தகத்தை தூக்கி வச்சுக்கத் தோனுது.

கடந்த ஆறுமாதமாக ஒரு வார இடைவெளி கூடயில்லாம ஒவ்வொரு வாரமும் படிச்சுகிட்டே இருந்ததால இப்ப அநிச்சையாக ஸ்பானிஷ் புத்தகத்தை தூக்கி வச்சுக்கத் தோனுது.

இன்று காலேஜ் வெப்சைட் போய் இந்த நாலு மாதத்தில் மட்டும் எவ்வளவு வொர்க் பண்ணியிருக்கேன்னு பார்த்தப்ப, 35 ஹோம்வொர்க், 35 quizzes, 2 பிரசன்டேஷன் மற்றும் 4 யூனிட் டெஸ்ட் எழுதியிருக்கேன், ஒரே ஒரு கிளாஸ் மட்டும் மட்டமடிச்சுருக்கேன் அதுவும் இன்று, நடுவில் தேர்தல் வந்ததால் 2 கிளாஸ் பாதி நாள் தான் அட்டெண்ட் பண்ணியிருக்கேன்.

கடைசி டெஸ்ட் ஸ்கோர் வந்தா தான் வாழ்க்கையில இதுவரை அடைய முடியாத இலக்கை அடைந்தேனான்னு தெரியும். அது வந்தாலும் இப்ப அதற்கான தகுதியில்லைன்னு உணர முடியுது. ஆகவே அது அதுவாகவே இருக்கட்டும்.

இப்போது ஸ்பானிஷ் எப்படி முறையாக கற்க முடியும்ங்கிற நம்பிக்கை வந்துருச்சு. கற்றுக்கொடுத்த புரபசருக்கும் கூடவே உற்சாகமாகப் பயணித்த சக மாணவர்களுக்கும் மனமார்ந்த நன்றி 🙏.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡El viaje comienza aquí!

தேசியக்கொடி

இத்தனை நாள் தேசியக்கொடி பிடிக்காதவங்கெல்லாம், ஒரு பிராயச்சித்தமாக தேசியக்கொடியைப் பிடிக்கறாங்க.

இந்தியாக்கு முழுச்சுதந்திரம் வரலைன்னு சொல்லிகிட்டு இருந்தவங்களும் இப்ப கொண்டாடறாங்க.

சந்தோஷப்படுங்கப்பா!

ஒரு நாடு அனைவருக்கும் சொந்தமானது, அதன் கொடி அந்த நாட்டு மக்கள் அனைவருக்குமே சொந்தம். அனைவரும் ஏற்றட்டும்.

இந்திய சுதந்தர தினத்தை வாழ்த்துவதில், ஜனநாயக அரசு அமைப்புகளின் சுதந்திரத்தைக் கொண்டாடுவதில்

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Día de la Independencia!

தொலைத்த உறவுகள்

நம் அருகில் நிற்க வேண்டியவர்கள்
  அந்நியமாய் தொலைவில் நிற்கிறார்கள்
அம்மையும் சகோதரர்களும் தொலைவில்!

உடன் பிறந்தவர்கள் அந்நியமாய்
  உடன்பிறவாதவர்கள் சொந்தச் சகோதரனாய்
உடன்பாடில்லாத பேச்சில் உறவுகளே அந்நியமாய்!

எவரெவரோ தாயாய் தங்கையாய் சகோதரனாய்
  உடன்பிறந்த உறவுகளோ எதிரியாய் நிற்கையில்
நிழற்ற நிஜமாய்ப் போனது நம் வாழ்க்கை!

உறவுகளின் பிடிப்பை உணர முடியா சூழல்கள்
   விசேஷங்களுக்கு வரமுடியாத உறவுகளாய் மாறியதில்
உறவுகளற்ற விசேஷங்கள் சாம்பலாய் கரைகிறது.

நிமிர்த்திப் பிடிக்க வேண்டிய உறவுகள்
  நம் வீம்புப் பேச்சில் கரைந்து போய்விட்டன
இனி உறவுகளை தேடி நட வேண்டும்!

கலைக்கக் கூடாத கூடுகள் சொந்த உறவுகள்!

தொலைத்த உறவுகள் நிழலாடுவதில் தவறை உணரும் தருணம்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Los familiares son la vida!

அம்மாவின் பவளமாலை

அம்மா கடைசியாகப் போட்டிருந்த மாலை இது. இங்க நடந்த ஒரு gem showல அம்மிணி பவளம் வாங்கிப் போய் என் அம்மாக்கு கொடுக்க, அதை அம்மா மாலையாகப் பண்ணி கடைசி வரை போட்டிருந்தாங்க.

நான் என் சகோதரர்களிடம் இதைக் கேட்டு வாங்கி தினமும் போட்டுக் கொள்கிறேன். குளியல் போது கூட எடுப்பதில்லை. பவளம் நன்கு சிவந்து ஒளிரும்.

அம்மிணிக்கு எப்போதும் இது மேல ஒரு கண்ணு, கேப்பாப்புல, நான் தரமாட்டேன்.

நேற்று வரலக்ஷமி பூஜையப்ப அம்மனுக்குப் போடனும் கொடுன்னு கேட்டப்ப, நான் சொன்னேன், எப்போதும் என் கழுத்தில் போட்டிருப்பது, நல்லா வாஷ் பண்ணிட்டு அம்மனுக்குப் போடுன்னேன்.

வெறும்ன கழுவாம பாத்திரம் தேய்க்கிற liquid சேர்த்துப் போட்டு தேய்ச்சுருக்காப்புல, பவளம் கலரேப் போச்சு. அதோட softness வேறப் போச்சு. கையில சொரசொரங்குது.

ரொம்ப அழுவாத வேற வாங்கித் தர்றேன்னு சால்ஜாப்பு வேற.

என்னத்த சொல்ல.

கிடைத்ததை வைத்திருப்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Cadena de coral y perlas!

ஸ்பானிஷ் கற்கும் பொழுதில் - 11

நேற்று ச்ர்ச் இங்க்லீஷ் கிளாஸ்ல புரபசர் subject pronouns பத்தி அந்த ஸ்பானிஷ் மக்களுக்கு அறிமுகப்படுத்திகிட்டு இருந்தார்.

ஸ்பானிஷ்ல it க்கு சமமான வார்த்தை கிடையாது. அதை அவங்களுக்குப் புரிய வச்சு கிட்டு இருந்தார். இல்லாத ஒரு வார்த்தையை எப்படி உபயோகிக்கிறதுங்கிறதுன்னு அவங்களுக்கு சிரமமாக இருந்தது. 

அதுவும் புரபசர் it ஐ எந்த ஆணையோ பெண்ணையோ பார்த்து குறிப்பிட்டு சொல்லிடாதே, அது தப்பாப் போயிடும்ன்னாங்க. அவங்க ரொம்பவே குழம்பிட்டாங்க.

நான் எழுந்து white boardல் living thing and non-living things ன்னு இரண்டு வகையாகப் பிரிச்சு எழுத புரபசர், அந்த லிவிங், non-லிவிங்கை ஸ்பானிஷில் விளக்கமாகச் சொல்லி, அந்த non-livingற்கு it உபயோகிக்கச் சொல்ல அவங்களுக்கு பெருமூச்சே வந்தது.

இன்னொரு விஷயம் என்னனென்னா, ஸ்பானிஷில் பெரும்பாலும் சப்ஜக்ட் pronouns அடுத்து வரும் verbலேயே புதைந்திருக்கும், அதை வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியமிருக்காது. தமிழிலும் இது உண்டு. ஆனால் ஆங்கிலத்தில் அதை வெளிப்படையாகச் சொல்லியாக வேண்டும். பாவம் முழிக்கிறாங்க.

இன்னொன்று.

நேற்று புரபசர் he is, he does வித்தியாசம் சொல்லும் போது எக்காரணம் கொண்டும் he is doesன்னு சொல்லிடாதீங்க, அப்படி சேர்ந்து வராதுன்னு சொல்றாங்க, அதுக்கு அந்த வெனிசுலா்பொம்பளை சொல்றாங்க is does நம்ம புருஷன்/கணவன் மாதிரி, ஒத்து போவாதுங்கிறாங்க.

ஆம்பளைங்க எல்லா நாட்டுலையும் ஒரே மாதிரியாகத் தானிருக்கோமய்யா!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Diferencias de idioma!

ஸ்பானிஷ் கற்கும் பொழுதில் - 10

கம்யூனிட்டி காலேஜில் ஸ்பானிஷ் படிக்கும் எங்க செட் மக்களை, எங்க புரபசர் தான் பக்கத்திலுள்ள சர்ச்சில் ஸ்பானிஷ் பேசும் மக்களுக்கு தான் நடத்தும் ஆங்கிலப் பயிற்சி கிளாசில் உதவ முடியுமான்னு கேட்க, யாராவது வேண்டாம்ன்னு சொல்வோமா. எல்லோரும் ஆஜர்.

இன்னிக்கு சர்ச்சில் நடந்த முதல் கிளாஸ்க்கு இரண்டு பேரும், இரண்டாவது கிளாஸ்க்கு நானும் இன்னொருத்தரும் போய் கலந்துகிட்டோம்.

இந்த ஆறு மாசமாக ஆன்லைன்ல ஸ்பானிஷ் கத்துக்கிறதால யாரும் ஒருத்தரை ஒருத்தர் நேரில் பார்த்தது கிடையாது. ஒருவர் மட்டும் என்னோட பத்து வருடம் முன் வேலை செய்தவர். இன்னிக்குத் தான் புரபசரை நேரில் பார்க்கிறோம். அவங்களும்.

முதல் கிளாஸ் ரூமே நிரம்பி வழியுது, உட்கார இடமில்லை. இரண்டாவது கிளாஸில் சிலர் வராததால் மூவர் இருந்தனர். வந்த மூவரில் இரண்டு பேர் வெனிசுலா (வெனேசுயேலா), மற்றவர் க்யூபா (குபானா).

ஆங்கிலம் பேசினா அரைகுறையாகப் புரியுது அவங்களுக்கு. ஸ்பானிஷ்ல சரளமாக வெளுத்து வாங்கறாங்க, அவ்வளவு ஸ்பீட். அவங்க பேசறது ஆரம்பத்துல புரிய தடுமாறிச்சு, அப்புறம் போகப் போக அவங்க பேசறதை என்னை ஆங்கிலத்தில் சொல்லச் சொல்ல, புரபசருக்கே ஆச்சரியம், நீ இவ்வளவு தூரம் புரிஞ்சுக்கறன்னு. ஆனால் எனக்குப் பேச வரலை, செம தடுமாற்றம். என் கூட வந்தவங்க தைரியமாகப் பேச ட்ரை பண்றாங்க, ஆனால் அவங்க ஸ்பானிஷ் பேசறதில் சிலது தான் புரியுதுன்னாங்க.

வெனிசுலா க்யூபா ஸ்பானிஷ் நன்கு வேறுபடுது, ஆனால் அவங்களுக்குள் நன்கு புரிஞ்சுக்கிறாங்க. எங்க ஸ்பானிஷ் உச்சரிப்பு மற்றும் கிராமரை அழகாக கரெக்ட் பண்ணிச் சொல்றாங்க.

க்யூபாக்காரர் நாங்கப் போனதைக் கண்டு ரொம்பவே நெகிழ்ந்து போயிட்டு ஒரு பெரிய ஸ்பீச்சே ஸ்பானிஷ்ல கொடுத்தார். ஒன்னும் புரியலை. அவ்வளவு ஸ்பீடு. புரபசர் மொழிப் பெயர்த்துச் சொன்னார். 

அவங்க மூனு பேருக்குமே ஆங்கிலம் தெரியாமப் படற கஷ்டத்தை அவங்க ஸ்பானிஷ்ல சொல்லும் போது நமக்கே மனசு கலங்கிப் போச்சு. 

டாக்டர் ஆபீஸ் அப்பாயின்ட்மென்ட் வாங்க முடியறதில்லை, நோ ஸ்பானிஷ்ன்னு டக்குன்னு போனை அவங்க கீழே வைப்பதாகச் சொன்னவுடன் எங்களுக்கு ஆடிப் போச்சு. க்யூபாக்காரர் வேலை செய்யற இடத்துல படற கஷ்டங்களைச் சொன்னார்.

நாங்க அவங்களோடு சேர்ந்து ஸ்பானிஷ் கத்துக்கறதைப் பார்த்து ரொம்பவே நெகிழ்ந்து போய் உருகிப்பேசினார். அடுத்த முறை நாங்க வரும் போது க்யூபன் டெலிகசிஸ் செய்து கொண்டு வந்து தர்றேன்னு சொன்னார். அவ்வளவு தான் என் கூட வந்த ஆப்பிரிக்க அமெரிக்கன் பெண்மணி சந்தோஷத்துல குதிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

புரபசர் எங்களைப் பேச விட்டுவிட்டு அடுத்த கிளாஸ்க்குப் போய் விட்டார். ரெஸ்டாரண்ட் போனா எப்படி ஆர்டர் பண்றதுன்னு அவங்க கேட்க, என் கூட வந்தப் பெண்மணி ‘may I get’க்கும் ‘can I get’க்கும் அமெரிக்காவிலுள்ள வித்தியாசத்தை மிக அழகாக அமெரிக்கன் ஸ்டைலில் விவரிக்க அவங்க அசந்து போய் மகிழ்ச்சியோடு பார்த்ததுமில்லாம நோட்ஸ்ஸும் எடுத்துகிட்டாங்க.

அடுத்து டாக்டர் ஆபீஸில் எப்படி போனில் பேசுவது என ஆரம்பிச்சேன், அதுக்குள்ள புரபசர் வந்து இன்றைய கிராமர் லெஸன்ஸ் எடுக்க எங்களுக்கும் அது ஒரு புது அநுபவமாகப் போச்சு.

இத்தனை நாள் என் கிட்ட நீ ஸ்பானிஷ் கத்துகிட்டு என்ன பண்ணப் போறேன்னு பலர் கேட்டாங்க. சரியான பதில் இல்லாம முழிச்சு கிட்டு இருந்தேன். இன்னிக்கு சர்ச்சில் புரபசர் காட்டிய வழி, நாம படிப்பதில் ஒரு பர்சண்ட் ஆவது மற்றவர்களுக்கு உதவ வாய்ப்பு இருக்கிறது என்று உணரும் போது சந்தோஷமாக இருந்துச்சு.

கற்பது வீணாகப் போவதில்லை என்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Aprender y ayudar a los demás!

கல்லூரி மகனின் தந்தையாய்

பசங்க கல்லூரியிலப் படிக்கும் போது அவங்க பின்னாடியே சுத்தி இந்த செமஸ்ட்டர் பீஸ் கட்டறத்துக்குள்ள ஆயிரத்தெட்டு பாடு பட வேண்டியிருக்கு.

நாங்க படிக்கிற காலத்துல பொறுப்பாய் நாங்க அம்மா அப்பா கிட்ட (வீட்டுல அம்மா தான் ஃபைனான்ஸ் மேனேஜர்) வாங்கிப் போய் கட்டிப் படிப்போம்.

இங்க பசங்க தெளிவாக இருக்காங்க, நாம துரத்த வேண்டியதாக இருக்கு. அவனுங்க லாஜிக் நீ கட்டினாப் படிக்கிறேன், இல்லாட்டி வேலைக்குப் போறேன்னு தெளிவாக இருக்கானுங்க. நாம இவங்க பின்னாடி ஓட வேண்டியிருக்கே!

யப்பா! ம்.

வாழ்வினிது தான்
ओलै सिरिय।
¡Sigue a tus hijos!

காலம் காட்டும் வழிப்பாதையில்

முன்னே பின்னே நடந்தாலும் 
   முழங்கால் மடங்கவில்லை
என்னை நானே நகர்த்த முயல்கிறேன்!

முன் செல்ல ஊர்தி தேவையில்லை
  பின் திரும்ப இறக்கம் தேவையில்லை
வாழ்க்கை அதன் பாதையில் நடக்கிறேன்!

முன்னால் நிற்பவர் அறிமுகமானவரோ
  பின்னால் வருபவர் தொடர்வதேனோ
நடை வேகத்தை அறியாமல் நடக்கிறேன்!

காலம் காட்டும் வழிப்பாதையில்!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡La vida está en un camino!

தேர்தல் பணிகள்

இந்த வாரம் எங்க ஊர்ல இரண்டாவது பிரைமரி தேர்தல் நடந்தது. இரண்டு மாதமாகவே தேர்தல் ஆணையத்துலேர்ந்து பல தடவை கேட்டுட்டாங்க முழு வார்டுக்கும் தலைமைப் பதவி எடுத்துக்க, நீ வேற இடத்துல தலைமைக்கு ஆளில்லாதப்ப உன்னை அனுப்ப வசதியாக இருக்கும்ன்னு பல தடவை கேட்டாங்க. பல காரணங்களால் தவிர்த்து விட்டேன்.

இங்க கூட வேலை செய்யறவங்க ரெகமண்ட் பண்ணதால நம்ம பேர் மேலே வருது. ஆனால் நிறைய சிக்கல்கள். சிலருக்கு எங்கிருந்தோ வந்தவன் நாம நம்ம தேர்தலில் சொல்ற வேலையைச் செய்யனுமான்னு எகதாளம் வேற. நேரடியாகவே காண்பிக்கிறார்கள், நாம் கேட்கும் போதே புறம் பேசுகிறார்கள்.

யாராவது ஒரு தேர்தல் பணியாளர் கொஞ்சம் ப்ரேக் எடுக்கப் போகும் நேரத்தில் நாம் அங்கு அந்த இடத்தில் உதவிக்குப் போனால் கூட வேலை செய்யும் சிலரின் நக்கல்களைப் பார்க்க முடியும். இப்போதெல்லாம் தலைமைக்கு அடுத்த கட்ட தலைமையில் இருப்பதால் பொது மக்களோ கண்காணிப்பாளர்களோ குறை கூறா வண்ணம் ஓடியாடி எல்லா வேலையும் செய்ய வேண்டிய கடமையுண்டு. அதனால் தான் எனக்கு அவர்களை விட இதில் வருவாய் கொஞ்சம் அதிகம். 

நிறையவே வேலை செய்வேன். எல்லாம் அத்துபடி, புதிதாக வருபவர்களுக்குச் சொல்லித் தருவேன். ஓட்டு போட வருபவர்களும் இதை வியந்து பார்ப்பது உண்டு.

இது அவர்களுக்கு எக்ஸ்ட்ரா இன்கம், எனக்கல்ல. எனக்கு சமுதாயக்கடமை செய்யற ஃபீலிங். உள்ளூர் மக்களோடு நன்கு கலக்கமுடியக் கூடிய வாய்ப்பு. தேர்தல் கள நிலவரம் நேரில் உணர முடியும்.

சமீப காலமாக தேர்தல் முறையை சிலர் கேள்விக்குள்ளாக்குவதால் தேர்தல் பணியாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை நேரில் உணர முடிகிறது. அந்த பயத்திலும் தலைமைப் பதவியைத் தவிர்ப்பது நல்லதாகத் தோன்றுகிறது.

ஐந்து வருடம் முன் முதன் முதலாக இப்பணியாற்ற வந்த போது ஒரு சின்ன காபி ப்ரேக்கோ அல்லது பாத்ரூம் போனால் கூட, கூட வேலை செய்யும் ஆள் ஒருவர் பின்னாடியே வந்து வேவு பார்க்கிற வேலை செய்தான். இப்படியெல்லாம் பணியாற்ற வேண்டுமா, விலகிடலாம்ன்னு அப்ப நினைச்சேன்.

அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளி விட்டு கடந்த ஐந்து வருடமாக ஒவ்வொரு தேர்தலிலும் கடுமையாக நம் கடமையைச் செய்ததன் விளைவு தான் இப்ப அவர்களே தலைமைப் பொறுப்பு எடுத்துக்கன்னு கொடுக்கும் வரை வந்துள்ளது.

நாம் தலைமைப் பொறுப்பில் வந்தால் இவர்களுக்கு வேலை ஒதுக்கும் போது வேண்டுமென்றே ஏதாவது நடந்து விட்டால் பிரச்சனை வந்து விடும் என்கிற பயமும் இருக்கு.

வருகிற தேர்தல்களில் அமைதியாக ஒரு சிறு பங்காற்றிவிட்டு வந்தால் போதுமென்று இருக்கிறது இப்பவெல்லாம்.

சிறு அளவு பொதுப்பணியோடு நிறுத்திக் கொள்வதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Asistencia social!

ஒரு மாலைப் பொழுது

இந்த வாரம் ஒரு நாள் வேலை முடிஞ்சு மனைவியின் நண்பி வீட்டில் டின்னர். அனைவரும் தெலுகு மக்கள். மொழி அரைகுறையாக புரிந்து கொள்கிற ஒரே ஆள் நான். எனக்காக எல்லோரும் என்னுடன் ஆங்கிலத்தில் பேசினார்கள். தெலுகு புரிகிற மொழியானாலும் அதில் அவர்களுடன் உரையாட முடியாத நிலை கண்டு வருத்தமே!

பேச்சு வார்த்தைக்கிடையில் சமீபத்தில் என்ன படம் பார்த்தேன்னாங்க. இந்த மூனு நாலு வருடத்தில் நான் பார்த்த படமே ஒன்னு இரண்டுதானிருக்கும்ன்னேன்.  என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். 

உடனே அவர்கள் நாங்கள் இந்த இரண்டு வருடத்தில் மட்டும் 400 படங்களுக்கு மேல் பார்த்திருக்கோம், ஒரே நாளில் இரண்டு மூன்று பார்த்திருக்கோம்ன்னாங்க. அவர்கள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.

உடனே அம்மிணி, ஏன் நாம மட்டும் படமே பார்க்காம இருக்கோம், மற்ற எல்லாத்திலும் பொழுது போக்குறோம்ன்னாங்க. 

விடை தெரியலை. ஆனால் இருவருக்கும் நேரம் மற்றவற்றிலேயே செலவாகுது. வீட்டில் மூன்று டிவிக்கள் இருக்கின்றன. ரிமோட் தேடற நிலமையில்.

என்னுடன் நிறைய அரசியல் பேசினார்கள். சந்தோஷமாகப் பொழுது போனது அன்று.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Entretenimiento para ver películas!

லெஜண்ட்

லெஜெண்ட் படத்தை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் என்னோட கல்லூரியில் ஐந்து வருடம் ஒரே கிளாஸில் படித்தவர்கள்.

அவங்க உழைப்பின் சந்தோஷத்தைக் கொண்டாட நேற்று அவர்கள் கூடப்படித்தவர்களுக்கு சத்யம் தியேட்டரில் ஸ்பெஷல் ஷோ காண்பித்திருக்கிறார்கள். 

கல்லூரி வாட்ஸப் க்ரூப்பில் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். நெருங்கிய நண்பர்கள் போய் விட்டு வந்து வாட்சப்பில் நிறைய படங்கள் வருது.

கல்லூரியில் படிக்கிற காலத்துலயும் அவங்ககிட்ட வம்பு பண்ணுவேன். இப்பவும் கூட. அவங்க நிறைய சரவணா ஸ்டோர்ஸ் போதீஸ் விளம்பரங்கள் எடுத்து எங்க க்ரூப்பில் முதலில் போட்டு விமர்சனம் கேட்பார்கள்.

நம்ம வாய் தான் சும்மா இருக்காதே. ஏண்டா அந்த சரவணா ஸ்டோர் விளம்பரத்துல எங்களைப் போட்டிருந்தா நல்லாவே நடிச்சிருப்போம்டேம்பேன். பதிலே சொல்ல மாட்டானுங்க.

அவங்க முயற்சி வெற்றியடையட்டும்.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Lanzamiento de la película!

நண்பனின் தந்தையிடமிருந்து

கல்லூரி நண்பனின் அப்பாவின் தினசரி முத்துக்களில் ஒன்று:

சிந்தனைத் துளிகள் 

1) Never assume that loud is strong and quiet is weak!

2) "சந்தோஷம்" என்பதை எங்கும் வாங்க இயலாது.
அது நல்லதோர் வாழ்க்கை எனும் முதலீடு ஈட்டிய வட்டி!

3) அர்த்தமற்ற வார்த்தைகளை அறிவற்ற மனிதர்  நடுவே உதிர்ப்பதைக் காட்டிலும், அர்த்தமுடன்  அமைதி காத்தல் நலம்!

4) இன்றைய கவலைகள் இன்றைய முயற்சிக்கு முட்டுக்கட்டை மட்டுமல்ல! நாளைய மகிழ்ச்சிக்கும் தடை ஆகிறது!

5) நமது எண்ணங்களும் உணர்வுகளும் சொற்களும் செயல்களும் நம்மை சுற்றி உள்ளவரை மகிழ்விக்கும் எனில் நாம் தனியே இன்பத்தை தேடி எங்கும் பயணிக்க தேவை இல்லை!

நீதி

மனம் ஒரு ஆலயம்! அதில் கருணை எனும் இறைவன் அருளாசி புரிதல் வேண்டும்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

கனிவுடன் இனிய காலை வணக்கம் 
மாதவன் 

———-
படித்ததில் பிடித்தது.
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Vive tu vida en tu camino!

வெட்டிப் பொழுது

நமக்குத் தான் யார் கேட்கலைன்னாலும் ஃப்ரீ அட்வைஸ் தர்ற பழக்கம் உண்டே. ஆதலால் யாராவது எனக்கு நேரமேயில்லைன்னு கதை விட்டாங்கன்னா எனது மூன்றாவது கண் திறந்துரும். சும்மா நமக்குத் தெரிஞ்ச டைம் மேனேஜ்மண்ட் பத்தி அடிச்சிவுட்டு விடுவது தான், பிறகு நம்மப் பக்கமே வரமாட்டாங்க.

ஆனால் இன்னிக்கு என்ர நிலமை அப்படி. ஏகப்பட்ட வேலை ஒன்னு மாத்தி ஒன்னு, நேரமில்லை. நெற்றிக்கண் தானாகத் திறந்துகிச்சு.

என்னைப் பார்க்க வர்றேன்னு சொல்றவங்க வரமாட்டாங்க. ஆனால் அவங்க வந்தாங்கன்னா என்ன செய்யன்னு நானும் அம்மிணியும் ஆயிரத்தெட்டு பிளான் போட்டு மாத்துவோம். கடைசியல ஒன்னும் பண்ணாம நேரமேயில்லைன்னு இரண்டு பேரும் அலுத்துக்குவோம். ஒருத்தரை ஒருத்தர் நீ வெட்டியாக இருக்கேன்னு சொல்லிரக்கூடாதல்ல.

நேற்று மாலை ஐந்தரை மணிக்கு ஒருத்தர் வர்றேன்னார், அவர் வந்தா டின்னருக்கு வெளியப் போலாமேன்னு நினைச்சேன். ஆனால் மாலை வரலை, காலையில் வர்றேன்னார். சரி், பிளான் மாத்தியாச்சு.

வெள்ளிக்கிழமை இரவு பண்ற ஸ்பானிஷ் ஹோம் வொர்க் பண்ணலை. சரி இன்று சனிக்கிழமை காலையில பண்ணலாம்ன்னு விட்டேன். இப்ப அவர் மறுபடியும் மாலை வரப்போறேங்கிறார். 

இரவு பெருமாள் கோவில் ஏகாந்த சேவைக்குப் போகனும். அம்மிணியும் ஸ்டூடண்டும் பெருமாளுக்குத் தாலாட்டு வாசிக்கனும்.

முக்கியமான இந்தியக் கடமையைச் செய்யனும் அங்க என்ர ஃபோன் ரிப்பேர். கடமையைச் செய்திருக்கேன் ஃபோனில்லாம.

அடுத்து ஸ்பானிஷ் ஹோம்வொர்க் எடுத்தா அரண்டு போயிட்டேன். எல்லாம் ஸ்பானிஷ் விளம்பரம் மற்றும் சூப்பர்மார்க்கெட் வீடியோ போட்டு விட்டு அதிலிருந்து எல்லா கேள்விகளும் ஸ்பானிஷ்ல. இப்ப ஸ்பானிஷ் படிச்சா கொஞ்சம் நெப்புகுத்தாப் புரியரதால, அத்தனை கேள்விகளுக்கு ஸ்பானிஷ்லேயே பதிலளிச்சாச்சு.

அடுத்து மதியம் ஒரு வேலை இருக்கு, சாயந்தரம் அவர் வந்தா (வருவாராத் தெரியலை) கொஞ்ச நேரம். 

இரவு பெருமாள்ட்ட சரணாகதி.

அம்மிணி வேற நீ எப்பப் பார்த்தாலும் இந்த ஃபோன்லயே பொழுத ஓட்டறேங்கிறாப்புல. நேரம் பத்தவில்லை பெருமாளே!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Gestiona tu tiempo con prudencia!

எலி வலையில் சிக்கிய பொழுது

எலி வலைகளுக்குள் வலிய புகுந்த வச்சுடறாங்க! ஒவ்வொரு தடவையும் ஒவ்வொன்னுலையும் இழப்புகள் அதிகமாகவே ஆகிகிட்டு இருக்கு. எதுவுமே செய்ய முடிவதில்லை. இழந்தவை மிக அதிகம். இயல்பாக நடக்கிறது இப்ப.

இழப்புகளை இப்பவெல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள பழகிடுச்சு இப்ப. 

என் உறவினர்களுக்குச் சொல்வேன் எப்போதும் குறைகளைப் பட்டியலிடாதே, அதுவே, அந்த லிஸ்டே நமக்கு பாரமாக வந்து நிற்குமென. 

கஷ்டங்களைக் கடந்து விடலாம். ஆனால் கஷ்டங்களின் பட்டியல் தான் மனதில் பாரமாய் நிற்கும்.

எவ்வாறு களைவது இதை!

கவலைகளுக்கு நம்மைப் பிடிப்பதால் அவை நம் அருகில் வருகிறதென அறிக.

வருவதை ஏற்றுக் கொள். வலை விரித்தாலும் புகுந்து கொள், அதில் நடக்கப் பழகிக்கொள்.

மனதில் சுமையா, கவலைப் படாதே, சுமையை இறக்க பல நடைபாதைகள் கிடைக்கும். அதில் நம் நகைச்சுவையின் நகைப்பில் பாரத்தை இறக்கி விடு.

பெருமாள் கோவில் தட்டில் போடும் அந்த ஐந்து பைசாவில் உன் கவலையைக் கரைத்து விடு.

கவலைகளைக் களைய உலா புறப்பட்ட ஒரு பொழுதில்
வாழ்வினிது
ओलै सिरिय।
¡No te preocupes en tu sonrisa!

பின் குறிப்பு: சும்மா எழுதத் தோன்றியது.

சுதந்திரமாய் பேச முடியலையே

அக்னிபத் ன்னு ஒருத்தர் போஸ்ட்ல கமெண்ட் போட்டேன், அம்புட்டு தான். அக்னி பொசுக்கிடுச்சு. இனி உனக்கு கமெண்ட் போட உன்னை விட மாட்டேன்னு தூக்கிட்டாப்புல.

கேஸ் விலை ஏறிப் போச்சுன்னு புலம்பினாங்க. சரி எலக்ட்ரிக் ஸ்டவ் உபயோகிக்கறேன்னு சொன்னேன். இப்ப அதோட விலை ஏறிப்போச்சு. அடுத்து மண்ணெண்ணெய் கெரசின் கரி அடுப்புக்கு எப்ப விலை ஏறுமோ தெரியலை. அதுக்குள்ள அங்குட்டும் கமெண்ட் போட ஃப்யூஸ் போயிடும்.

அரிசிக்கு வரின்னாங்க, நம்ம தொப்பை சைஸ் பார்த்து வரி வருமான்னேன். அவர் கறிக்கடை ரேட்டு கூட அத்துப்புடியா இருக்கார். இப்ப என்ர கமெண்ட்டுக்கு என்ன ரேட் வைப்பாரோ தெரியலை.

ஒருத்தர் இன்சூரன்ஸ் எடுக்கலைன்னா வரி போட்டுருவார் போலயிருக்கு. மனுசன் படிச்சு படிச்சு சொல்றாப்புல. ஆனால் உங்களுக்கு ஃபைன் போட்டாத் தான் சரி வருவீங்கன்னு இன்னும் சொல்லாத குறை தான். என்ர கமெண்ட்ஸ்க்கெல்லாம் ஒரு லயபிலிட்டி இன்சூரன்ஸ் வாங்கி வச்சுக்கனும் போல.

எங்கூர்ல பெட்ரோல் டீசல் வண்டிக்கு மட்டுமல்ல, நீ எலக்ட்ரிக் வண்டி ரோட்டுல ஓட்டுனா கூட வரி போடப்போறோம். அடுத்த நாம ரோட்டுல நடக்கிறதுக்குக் கூட வரி கட்ட வேண்டி வரும்.

இதெல்லாம் சொன்னா, சொன்ன அடுத்த பத்து நிமிசத்துல என்ர போஸ்ட்டையே உள் டப்பியில பொசுக்க வேண்டி வருதே!

நமக்கெல்லாம் எப்பயா சுதந்திரம் வரப்போவுது!

வாய் நீளம். குறைக்க முடியல, குரைக்கரோம்.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Mantente fresco!

வீட்டில் கிடைக்கும் பல்புகள்

இதுவரை இங்கு இன்று வாங்கிய பல்ப் கோட்டா இரண்டு.

அம்மிணியைப் பார்க்க அவங்க நண்பி வந்திருக்காங்க, அவங்க முன்பு வீணை ஸ்டூடண்ட்.

சரி இரண்டு பேரும் வீணை வாசிப்பாங்கன்னு பார்த்தா, இரண்டு பேரும் அரட்டை, ஊர் வம்பு வேற பேசி கிட்டு இருக்காங்க.

இரண்டு பேர்ட்டையும் ஊர் வம்பு பேசறதை விட்டுவிட்டு வீணை வாசிக்கிறதைப் பாருங்கன்னா, வந்தவங்க உள்ளேர்ந்து குரல் கொடுக்கறாங்க: நான் வீணை வாசிக்க வரலை, இவ அம்மாகிட்ட கத்துக்கறேன், இப்ப ஊர் வம்பு பேச வந்தேன்னு உள்ளேர்ந்து திருப்பி குரல் கொடுக்கறாங்க.

ஸ்பானிஷ் படிச்சு கிட்டு இருக்கிறேன். ஹோம் வொர்க் பண்ணிகிட்டு இருக்கேன்.  நடுவுல இங்க வந்தா ஒரு பல்ப். வீட்டுக்குள்ள ஒரு பல்ப்.

இன்னிக்கு எங்கப் போனாலும் பல்ப் பிரகாசமாக எரியுது.

ராசிபலன் இயல்பாக வேலை செய்கிறது
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Concentrarse y estudiar!

அரசு அலுவலர்களை அவமதித்தல்

பதிவிலிருந்ஒது த்த வரியை எடுத்துகிட்டுப் போய் அதைத் தான் எப்போதும் எதையாவது உருட்டுவது போல உருட்டுவதற்குப் பயன்படுத்தியுள்ளதைப் பார்த்தேன். இணையத்துல எதை வேணா வெட்டி ஒட்டிக்கலாமில்ல. பதிவோட முழு content அவர்களுக்குப் ஒரு பொருட்டல்ல. தான் உருட்டுவதற்கு ரோடு போட ஏதோ கிடைச்சாப் போதும் இவர்களுக்கு.

அரசு அலுவலங்களில் விபூதி சந்தனப் பொட்டு இயற்கையாகவே பல காலகாலமாக இருக்கு. அதை வெறும் ஒரு மதத்தோட ஒப்பிட்டு அதன் சின்னம்ன்னு அரசு அலுவலகத்தில் ஏனிருக்கனும்ன்னு நேரிடையாக கேள்வி கேட்க யாவருக்கும் உரிமையிருக்கு. ஆனால் அந்த அலுவலகத்திலிருப்பவர் அனைவரும் நாத்திகர்கள், லஞ்ச லாவண்யத்தில் திளைப்பவர்கள் என்று முத்திரை குத்துவது அனைத்து அரசு அலுவலர்களையும் கேவலப்படுத்தும் ஒரு செயலல்லவா.

லஞ்சம் வாங்குவது குற்றமென்றால், அந்த அலுவலகத்திலிருக்கும் அனைவரும் நாத்திகர்களென்றால், லஞ்சம் கொடுப்பதும் குற்றமல்லவா. ஒரு அரசு அலுவலகத்தில் 500 பேர் தன்னோட அப்ளிகேஷன் கொடுத்து இருக்கிறார்களென்றால், அவர்கள் வரிசைப்படி பிராஸஸ் செய்ய விடாமல் ஒரு புரோக்கர் புடிச்சு அரசு அலுவலருக்கு சட்டத்துக்கு மீறி பணம் கொடுத்து இவர்கள் அப்ளிகேஷனை முன் கூட்டியே பிராஸாஸ் செய்ய வைப்பவர்கள் சட்டத்துக்கு முன் குற்றவாளியில்லையா, இவர்கள் செய்வது அறம் சார்ந்த செயலா? 

அரசு அலுவலகங்களை தனது சுயநலத்துக்கா தன் வேலை முன் கூட்டியே நடத்திக் கொள்வதற்காக ஒரு புரையோடிய அலுவலகமா மாற்றிய பங்கு அனைவருக்கும் உண்டு. அனைவரும் குற்றவாளிகளே, நாத்திகர்களே உங்கள் கூற்றுப்படி. அறம் படி.

ஒரு கமெண்டில் சொல்வதை எடுத்துக் கொண்டு போய், அதில் ஒரு ப்யூன் கூட அரசு அலுவலகத்தில் பொது மக்களைக் கேவலமாக நடத்துவதாகச் சொல்கிறார்கள். அதன் மூலம் அவர் சொல்ல வருவது: மனு கொடுக்க வந்த பெண்ணின் தலையில் அதே மனுவை வைத்து தலையில் அடித்தது தவறல்ல, இவரது பார்வையில் அது ஒரு செல்லத் தட்டு தானோ. தர்மபுரி எம்பி பொதுமக்கள் முன்னிலையில் ஒரு பொதுப்பணித்துறை அதிகாரியை மரியாதையற்ற முறையில் நடத்தியது சரி தானோ.

ப்யூன் கதைக்கு முதலில் வருவோம். நம்மூர் கோர்ட்டில் நீதிபதி வந்து தன் சீட்டில் அமர்ந்து அன்றைய வழக்குக் கட்டுகளைப் பார்க்க உட்காரும் முன் அந்த நீதிபதி அருகில் நிற்கும் அந்த நீதிபதியின் உதவியாளருக்குப் பணத்தைக் கொடுத்து, தன்னோட வழக்கு சீக்கிரம் முன் கூட்டியே வருவதற்கு, தன்னோட வழக்குக்கட்டு அந்த அடுக்கில் மேலெழுந்து வருவதற்கு அந்த உதவியாளர்களுக்கு பணம் கொடுப்பது யாரென்று பாருங்கள். நீதித்துறையையே இப்படி மாற்றி செயல்பட வைக்கும் ஊரில் மிகச் சாதாரணமான ஒரு அரசு அலுவலகத்தைக் குறிப்பிடுகறீர்கள்.

ஒரு ப்யூனுக்கு இவ்வளவு அளவுக்கு அவரை எதேச்சதிகாரமாக செயல்பட வைக்க வைத்தது யாரு. உங்கள் காரியம் நடக்க நீங்கள் கொடுக்கும் லஞ்சப் பணமில்லையா? இங்கு குற்றவாளி யாரு? அரசு அலுவலகர் மட்டுமா?

ஒரு ஜனநாயகத்தின் முக்கியமான மூன்று ஆணிவேர்களில் ஒன்று நீதித்துறை. அதை ஒழுங்கு முறையாக செயல்பட வைக்கும் போது தான் நமது ஜனநாயகம் தழைக்க முடியும்.

அடுத்து எம்பியின் செயலுக்கு வருவோம். அன்று நடந்த செயல் உண்மையில் கண்டிக்கதக்கது, முறையற்றது. பாராளுமன்ற சபாநாயகரிடம் கம்ப்ளைன்ட் செய்ய வேண்டிய குற்றமது. 

இந்தியாவில் காலகாலமாக அடிக்கல் நாட்டு விழா நடப்பது தான். அதை பூமி பூஜையாக நடத்த விரும்புவர்கள் புரோகிதரை வைத்தோ, அல்லது கோழி அறுத்து பலி கொடுத்தோ, வசதியுள்ளவர்கள் ஆடு அறுத்து துவங்குவதோ, அல்லது இன்னும் பலவகையாக காலம்காலமாக நடப்பது. இப்போது கிறித்துவப் பாதிரியார்கள் கூட இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றத் துவங்கியுள்ளனர். இத்தகைய பூமி பூஜைகள், அடிக்கல் நாட்டு விழாக்கள் மதம் சார்ந்தது மற்றுமல்ல, மக்களின் அந்தந்த ஊர் வழக்கப்படி நடக்கும் கலாச்சார பண்பாடு சம்பந்தப்பட்டது கூட. 

அந்த எம்பி அவமதித்தது ஒரு அரசுப்பணியாளரை மட்டுமல்ல, பொதுமக்களோட கலாச்சார பண்பாட்டு வழக்கத்தையும். அந்த எம் பி கேட்ட மாதிரி அவருக்கு ஒரு புரோகிதர் வைத்து நடத்துவது பிடிக்கவில்லையென்றால் அவருக்கு எது பிடிக்குமோ அதை முன் கூட்டியே தெரிவித்திருக்கலாம். அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருபவர்க்கு இதெல்லாம் முன்பே தெரியாது என்று சொல்வதெல்லாம் நம்பத் தகுந்ததல்ல. திட்டமிட்ட ஒரு அவமதிப்பு அரங்கேற்ற நாடகம். கண்டிக்கத்தக்கது.

பதிவு ரொம்ப பெருசாயிடுச்சு. அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

நாடகமேடையில் நானும் ஒரு கதாபாத்திரம் என்பதில் 
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Drama escénico!

தடி எடுத்தவனெல்லாம்

அரசு, அரசமைப்பு, அதிகாரம், நீதி, சட்டம், ஜனநாயகம் இவற்றைப் பற்றிய சரியான புரிதல் பெரும்பாலோர்க்கு இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் எந்த அளவுக்கு அதிகாரம் செல்வாக்கு உள்ளது என்கிற check and balance தெரிந்து செயல்படுவது மிகவும் நல்லது.

தடியெடுத்தவன் தண்டக்காரன், சத்தம் போட்டு மிரட்டுபவர் சட்டாம்பிள்ளை கதை தான் எல்லா இடங்களிலும்.

ஒருவர் தன் பதவியின் அளவுக்கு மீறி மற்றவர்களை மிரட்டுவது, கையை நீட்டுவது, அதிகாரிகள் மற்றும் மக்கள் ஒன்றும் செய்ய முடியாமல் அடங்கிப் போவது, நடந்த நிகழ்வு தேவையா தேவையற்றதா, பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதா வேண்டாமா எனப் பரிசீலித்து செயல்படுவதா வேண்டாமா என நடக்கும் பிரச்சனைகள் எல்லா நாடுகளிலும் உண்டு, இங்கும் உண்டு.

என்ன, இங்கைக்கும் அங்கைக்கும் உள்ள ஒரே வித்தியாசம், இங்கு நடைமுறை பழக்கவழக்கங்களை இயல்பாகக் கடைபிடித்தோமென்று சொல்லி விட்டு எளிதாகக் கடந்து போக முடியும். எவரும் மற்றவர் மீது கை நீட்ட அல்லது மிரட்ட முடியாது. திரைமறைவு செயல்களில் விளைவுகள் தெரியவரும்.

பதவியில் ஏறிய பிறகும் சக மனிதனை மனிதனாக நடத்தும் போது
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Respetar a los demás!

Friday, July 15, 2022

பிரபஞ்சத்தின் ஒளிக்கற்றை

1986ல் திருச்சி ஜோசப் கல்லூரியில் கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்க உள்ள நுழைஞ்ச போது எனக்கு 22 வயது. இது வரை படித்துப் பெற்ற பட்டங்களை வச்சு வேலை வாங்குறது கஷ்டம், இனி வருங்காலம் கம்ப்யூட்டர் கையில் தான்னு புரிய ஆரம்பிச்சு அதுல எப்படியாவது சேர்ந்து படிக்கனும்ன்னு ஒரு புரபசர் உதவியோட மாலை நேரக் கல்லூரியில் கம்ப்யூட்டர் படிக்க ஆரம்பிச்சேன்.

கல்லூரியில் நாலு dumb terminals, கம்ப்யூட்டர்ல இருந்த மெமரி 16kb தான். வாரத்தில் இரண்டு நாள் 40 நிமிஷம் கம்ப்யூட்டர் முன் கிடைக்கும், அந்த குறுகிய நேரத்திற்குள் நாம எழுதிகிட்டுப் போன ப்ரோக்ராமை பன்ச் பண்ணி, error proof பார்த்து ஓட வைக்கனும். அங்க போய் புதுசா எழுத நேரமில்லை. அப்படி எழுதி கத்துகிட்டது தான் basic, cobol, fortran. Pascal பின்னாடி கத்துகிட்டேன். தஞ்சை LIC போனப்ப அவங்க punched card system reader வச்சுகிட்டு ஓட்டிகிட்டு இருந்தாங்க.

காலை நேரத்துல அப்ப இருந்த அரசியல் உணர்வோடு வங்கி வாசல்லையும் இன்சூரன்ஸ் கம்பெனி வாசல்லையும் போயி, வங்கிகளிலும் இன்சூரன்ஸிலும் கம்ப்யூட்டரைப் புகுத்தாதே வேலை வாய்ப்பைப் பறிக்காதேன்னு கத்திவிட்டு வருவேன்.

மாலை நேரத்துல உட்கார்ந்து கம்ப்யூட்டர் சயின்ஸ், ப்ரோக்ராம் படிப்பேன். படிக்கும் போது தான் இந்த விஞ்ஞான வளர்ச்சி எப்படியெல்லாம் உதவப்போகிறதுன்னு புரிய ஆரம்பிச்சுச்சு.

என்னோட இந்த காலை மாலை முரணான இரட்டை நிலையை நினைச்சு ரொம்பவே யோசிக்க ஆரம்பிச்ச காலம் அது. வயசும் 22 தான். எல்லாவற்றையும் ஒரேயடியாக புரிஞ்சுக்கிற வயதல்ல. இருப்பினும் விஞ்ஞான வளர்ச்சியை குறை சொல்ல மற்றும் தடுக்கக் கூடிய சக்தியாக எனது செயல் இருந்ததை நினைத்து வருந்தியது உண்டு.

இப்ப இந்த 35 வருட வளர்ச்சியில் பார்த்தால் கம்ப்யூட்டர் உள்ளே நுழையாத ஒன்று கூட இல்லை என்று சொல்லலாம். Arts, literature, medical, astronomy, ஆன்மீகம், archaeology, architecture, science, biology, chemistry, veterinary, history and geography, கம்யூனிகேஷன் என எல்லாயிடத்திலும் கம்ப்யூட்டர், அது உள்ளே புகாத இடமே கிடையாது இப்ப. அதன் மூலம் எந்த ஒரு நாடும் அடைந்த வளர்ச்சி மிக அதிகம்.

சிலர் எழுதுகிறார்கள்: ஆர்ட்ஸ், literature, கவிதையெல்லாம் எழுதிகிட்டு இருக்கிறவனுக்கு விஞ்ஞானத்தைப் பத்தி ஒன்னும் தெரியாதுன்னு. ரைட்டு. அது அவர்கள் ஒபீனியன். நடைமுறையில் அதுவல்ல எவரது வாழ்க்கையும்.

நேற்று நாசா வெளியிட்டுள்ள டெலஸ்கோப் இமேஜை வச்சுகிட்டு பலர் தனக்கேற்றவாரு எல்லோரும் உருட்ட ஆரம்பிச்சுட்டாங்க. இது ஒரு மிகப்பெரிய வளர்ச்சி, அது மற்றவைகளைப் புரட்டிப் போடப் போகிறதென.

என்னைப் பொருத்தவரை இது ஒரு அருமையான கண்டுபிடிப்பு. கம்ப்யூட்டர் வளர்ச்சி எவ்வாறு அனைத்து துறையினருக்கும் உதவியதோ, அது போல இதுவும் அனைத்து துறையினருக்கும் உதவக்கூடிய ஒன்றாக மாறலாம். ஒவ்வொருவருடைய தேடலும் அவரவரது தேவை, நம்பிக்கை, வாழ்வியல், வளர்ச்சி என தேவைப்படும் ஒவ்வொன்றுக்கும் இதிலிருந்து அவர்கள் எதை வேணுமானாலும் தேடி எடுக்கலாம். அத்தகைய கண்டுபிடிப்பாக இந்த பிரபஞ்சத்தின் ஒளிக்கற்றை நமக்கு ஒளி வீசட்டும்.

விஞ்ஞானம் அனைவருக்கும் சொந்தமானது. அவரவரது தேவைக்கேற்ப இதில் தேடிக்கொள்வார்கள்.

தடைகளை கண்டு அஞ்சாத எறும்பு போல் ஊர்வோம்.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Los inventos científicos son para todos!

நம் பணத்தின் மதிப்பு

25 வருடமுன்ன இங்க வரும் போது கையில ஒரு 200 டாலராவது எடுத்துகிட்டு வரனும்ன்னு கையில இருந்த அத்தனை பணத்தையும் துடைச்சி எடுத்து மும்பையில் டாலராக மாத்தினேன். அப்ப மார்க்கெட் ரேட் ஒரு டாலருக்கு 26 ருபாய். தாமஸ் குக் அவங்க கமிஷன் போக குறைவாகவே கொடுத்ததை வாங்கிட்டு வந்தேன்.

இங்கு வந்து ஏழெட்டு வருடம் கழித்து மிகவும் வேண்டிய ஒருத்தருக்கு ஒரு லட்ச ரூபாய் அனுப்பினேன். நான் கொடுக்க வேண்டிய பணம் அது, கொடுத்து விட்டேன். அப்ப கன்வர்ஷ்ன் ரேட் 40 ரூபாய் பக்கம். நான் அனுப்பிய தொகை 2500$. ஒரு நல்ல காரியத்திற்கு அனுப்பியது, ஆகவே அதை கணக்கு போடுவது சரியல்ல. அதைப் பற்றி விமர்சிப்பதும் சரியல்ல. நான் கொடுக்க வேண்டிய பணம்.

பின்னாடி சில வருடங்கள் கழித்து ஒரு டாலர் மதிப்பு 62-63 ரூபாய் ஆகி விட்டது. ஆனால் அப்பவும் அவர் அதைக் குறிப்பிடும் போது தான் ஒரு லட்சம் மட்டும் பெற்றதாகக் குறிப்பிடுவார். மறந்து போய் கூட 2500$ என சொல்லி விட மாட்டார். ஆக, அந்த 2500$ன் மதிப்பு இப்ப 1500$ ஆக குறைந்து விட்டது. நான் கொடுக்க வேண்டிய பணம் தான்.

இப்போது ஒரு டாலரின் மதிப்பு 80 ரூபாய் என காண்பிக்கிறது இன்று. ஆக, அந்த 2500$ன் மதிப்பு இப்ப 1250$ தான்.

இது தான் நம் பணத்தின் மதிப்பு. இதில் ஏற்ற தாழ்வு பார்ப்பது என்ன. பொருளாதாரம், பண மதிப்பு அறிந்தவன் தான் நான்.

அமைதியா இருப்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Valor del dinero!

எரி பொருள்

இப்பவெல்லாம் கெரசின்/மண்ணெண்ணை கிடைக்குதா அங்க? இப்ப நான் பார்த்ததெல்லாம் அங்கு பெரும்பாலும் கேஸ் ஸ்டவ் மற்றும் எலக்டிரிக் தான். தெரிந்து கொள்ள.

என் சின்ன வயசுல, ரேஷன் கடையில க்யூவில நின்னு அவங்க கொடுக்கிற வாரம் இரண்டு லிட்டர் வச்சு தான் வீட்டுல சமையல். இல்லாட்டி குமுட்டி தான். இதெல்லாம் அப்ப காஸ்ட்லியான ஐட்டங்கள். கிடைப்பதும் கஷ்டம். 

ஐந்து லிட்டர் கெரசின் ரேஷன்ல கிடைச்சுதுன்னா அம்மா முகத்துல அவ்வளவு சந்தோஷம் பார்ப்போம். அந்த வாரம் ஏகப்பட்ட பட்சணங்கள் பண்ணுவாங்க.

பெரும்பாலும் குளிக்க சுடு தண்ணிக்கு விறகடுப்பு தான். அதுல அம்மா சமைக்க விரும்ப மாட்டாங்க. கஷ்டம் கூட.

அஸ்ஸாம் போனப்ப தான் தனியாக சமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு, முதல் முதலாக ஒரு திரி ஸ்டவ்வும், பம்ப் பண்ற ஸ்ட்வ்வும் வாங்கினேன். 

ஆனால் அதற்கு மண்ணெண்ணெய் கிடைக்காது. அஸ்ஸாமில் வெளி மாநிலத்திலிருந்து வந்தவருக்கு, வெளி மாநிலத்தவருக்கு ரேஷன் கார்ட் கிடையாது. தர மாட்டார்கள். அதுவில்லாமல் கெரசின் வாங்க முடியாது. ரேஷன் கடை தவிர மற்ற கடைகளில் கெரசின் கிடைப்பதும் அரிது. 

வேற வழியில்லாமல் அந்த ரேஷன் கடைக்காரர் கிட்டயே தெரிஞ்ச அரைகுறை இந்தியில் பேசி அவர் கொடுக்கிற விலைக்கு வாங்கி வந்து உபயோகித்திருக்கிறேன்.

கேஸ் அடுப்பெல்லாம் அப்ப தான் அறிமுகமாகி வந்த நேரம். முதலில் கனெக்‌ஷன் கிடைக்காது. அதற்கும் ரேஷன் கார்ட் கேட்பார்கள். விலையும் ரொம்ப ஜாஸ்தி. வாங்கிய சம்பளத்துக்கு வேலைக்காவது. மேலும் ஒரு ஆளுக்கு ஒரு சிலிண்டர் தேவையற்ற ஒன்று. குளிர்காலத்தில் அஸ்ஸாமில் குளிர் பின்னிரும். அப்ப வெந்நீர் சுடுதண்ணி இல்லாம ஒன்னும் வேலைக்காவாது. அதற்குத் தான் பெரும்பாலும் அதிகம் எரிபொருள் செலவாகும்.

மும்பை வந்த பிறகு கேஸ் அடுப்பு சுலபமாக கிடைத்து. இரண்டாவது சிலிண்டர் கிடைக்க அப்ப பெரிய கஷ்டம். ஒரு சிலிண்டர் தீர்ந்து போனால் வாங்க அடுத்த 45 நாட்கள் வைட் பண்ணனும். இன்னொரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு சமூகத்தில் ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் கிடைச்ச மாதிரி தான். அசாமில் ஒரு கேஸ் ஸ்டவ் வைத்திருந்தாலே அதுக்கு ஒரு தனி கௌரவம் அப்ப உண்டு.

இங்க வந்த நாள் முதல் எலக்ட்ரிக் ஸ்டவ் தான். வீடு, அபார்ட்மெண்ட்டோடு சேர்ந்தே வந்துரும். அணில் கடிக்காது. அதிகம் பிரச்சனை சந்தித்ததில்லை. மேலும் இங்கு ஒன்னு கிடைக்கலைன்னா அடுத்ததை நோக்கிப் போய்கிட்டே இருப்பாங்க மக்கள். அவரவர் வாழ்க்கை அவரவரது தேவைக்கேற்ப அமைத்துக் கொள்வர்.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Combustible para cocinar!

வரி வட்டி கிஸ்தி

வரி வட்டி கிஸ்தி

இங்கிருக்கிற பல மாநிலங்களில் அரசிற்கு சாலை போக்குவரத்து, பிரிட்ஜ், ferries மற்றும் இன்னும் சில வகைப் போக்குவரத்து துறைகளுக்கு எல்லாம் சேர்த்து பெரும்பாலும் வருடத்திற்கு 800 மில்லியனிலிருந்து 1 பில்லியன் வரை செலவாகுது. இது தான் ஒரு வருட அரசு போக்குவரத்து பட்ஜெட்டாகச் சொல்லுவார்கள். நாமும் இதை வெளிப்படையாகப் பார்க்கலாம். 

இதற்குப் பெரும்பாலும் நாம நம்ம வண்டிகளுக்குப் போடுகிற பெட்ரோல் டீசலிலிருந்து நாம போடற ஒரு கேலனுக்கு 2$ - 3$ வரை கட்டினால் அதில் 35 செண்ட்லிருந்து 70 செண்ட் வரை அரசுக்கு வருமானம் வரியாகக் கிடைக்கும். இதை வைத்து தான் நீங்க ரோட்டுல பார்க்கிற புது ரோடுகளும், புது பிரிட்ஜ் மற்றும் பழையதை புதுப்பிக்கிற வேலைகள் கிடைக்கும்.

முன்பெல்லாம் ஒரு கேலனுக்கு 20-25 மைல் வண்டிகள் ஓடிகிட்டு இருந்தப்ப, ஒருத்தர் வருடத்திற்கு 12000-15000 மைல் வரை கார் ஓட்டினால் அவர்களிடமிருந்து அரசுக்கு வருடத்திற்கு 220-250$ வரை வரி கிடைத்து வந்தது.

பிரசிடண்ட் ஒபாமா காலத்தில் வண்டிகள் குறைந்த பட்சம் 35 மைல் ஒரு காலனுக்கு கொடுக்கனும்ன்னு அரசு உத்தரவு வந்த பிறகு, இப்பவெல்லாம் மாநிலங்களுக்கு அந்த 220$ வருமானம் 160$க்கும் கீழே இறங்கிடுச்சு.

அடுத்து இப்ப எல்லோரும் ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் கார்கள் வாங்க ஆரம்பிக்க, அரசுக்கு இப்ப வருமானம் அதிலிருந்து சுத்தமாக நின்று போய் விட்டது. அவர்களுக்கு பெட்ரோல் டீசல் தேவையில்லாததால்.

மேலும் இமிக்ரேஷன் டைட்டன் பண்ணியதில் இப்ப லேபர் கிடைப்பதில்லை. பல பிராஜக்ட்கள் தள்ளிப் போகுது, ரோடு மோசமாகிட்டிருக்கு, ரிப்பேர் பண்ண கால தாமதமாகுது.

இப்ப பட்ஜெட் பற்றாகுறையை எப்படி சமாளிப்பது. வேறெதிலிருந்து வரி போட்டு போக்குவரத்து துறைக்கு செலவளிப்பது. பல மாநில அரசுகளுக்கு இது இப்ப ஒரு தலையாயப் பிரச்சனை.

சில மாநிலங்களில் இவ்வாறு யோசிக்கிறார்கள். பெட்ரோல் டீசல் போடாத வண்டிகள் ஒரு மாதத்திற்கு எத்தனை மைல்கள் ஓடுதோ அதற்கேற்றவாறு வரி வசூலிப்பது என. இனி எலக்ட்ரிக் வண்டி வாங்கிட்டா எந்தப் பிரச்சனையுமில்லைன்னு நினைச்சு ஓட முடியாது ஓட்ட முடியாது.

வருங்காலத்தில் நாம வெறுங்காலில் நடந்தாலும் எவ்வளவு தூரம் நடக்கிறோம்ன்னு கணக்கிட்டு வரி போட வந்தாலும் வரலாம். வீட்டுலேயே உட்கார்ந்தாலும் வரி உண்டு.

நம் வாழ்க்கையை நாம் புரிந்து கொண்டு வரியற்ற ஒரு சமுதாயத்தை நாம் உருவாக்கும் போது
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Pagar impuestos sinceramente!

வீட்டுப்பெண்கள் பேச்சைக் கேளுங்கள்

சின்ன வயசுல பள்ளிக்கூடம் போய்விட்டு சாயந்திரம் 4.30மணிக்கு வீட்டுக்குள்ள நுழையும் போதே இன்னிக்கு அம்மா பூரி மசால் பண்ணியிருக்காங்களா, பக்கோடா, பஜ்ஜி இருக்கா, இல்லாட்டி புளிமாவு அல்லது மோர்க்களி பண்ணியிருக்காங்களா அல்லது முள்ளு முருக்கு தட்டையாவது இருக்கான்னு எதிர்பார்த்தே வருவேன். குடும்பம் பெருசு, அம்மா ஏதாவது செய்து வச்சிருப்பாங்க. எதுவுமில்லைன்னா என்ர முகத்துல பசியில அம்புட்டு கோவமும் பிரதிபலிக்கும்.

இப்ப காலம் வேற.

அம்மிணிக்கு கோவிட் காலத்திலும் தினமும் வேலைக்குப் போயாவனும். சாயந்திரம் உள்ள நுழையும் போதே முகத்தில் பசியில் அவ்வளவு கடுகடுன்னு இருக்கும்.

வர்க் ஃப்ரம் ஹோம்ன்னு சொல்லிகிட்டு வீட்டுல  உட்கார்ந்துகிட்டு துன்கறவனுக்கும் சேர்த்தி இப்ப வந்து என்ன சமைக்கனும்ன்னு யோசிச்சு கிட்டு, இருக்கிற பசிக்கு எதைத் திங்கலாம்ன்னு ஒரு கொலைவெறியோட இருப்பாப்புல.

அம்மிணிக்குப் பிடிக்காத வேலை பாத்திரம் கழுவுற வேலை. அதை மட்டும் செய்ஞ்சு கொடுத்து ஓபி அடிச்சு ஓட்டிருவேன். லன்ச் டைம் மற்றும் கிடைக்குற காபி ப்ரேக் அப்பவெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பாத்திரம் லோடு பண்ணி அம்மிணி வர்றதுக்குள்ள டிஷ் லோடு பண்ணிருவேன். இல்லாட்டி அந்த வெறுப்பும் உச்சி மண்டையில ஏறுச்சுன்னா செத்தோம். எப்படியெல்லாம் தப்பிப் பிழைக்க வேண்டியிருக்கு.

நேற்று வந்து படபடன்னு உள்ள நுழைஞ்ச ஆளு ஒவ்வொன்னா ஆரம்பிக்க மிக்ஸி வர்க் ஆவலை. தான் பிளான் பண்ணிய எல்லாம் ஆப்பு. அது என்னவா, ஒன்னுமில்லை. வெறும் அதுல தேங்காய்ச் சட்னி அரைச்சு வச்சா பழைய சாம்பர் இருக்கு, இந்த வீட்டுல உட்கார்ந்து துன்கிறவனுக்கு ஐஞ்சு தோசையை வார்த்துக் கொடுத்தா ஆச்சுன்னு நினைப்புல வந்தாப்புல, அதுக்கு ஆப்பு. மிக்ஸி போச்சு.

இருக்கிற அப்செட்ல கன்வெர்ட்டர் ஃப்யூஸ் போயிடுச்சான்னு நேராத் திருவி ஃப்யூஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டாப்புல. அரண்டு போயிட்டேன். விட்டா அப்பவே மிக்ஸியை பார்ட் பார்ட்டா கழட்டியிருப்பாப்புல.

படபடப்பா இருக்கிறவங்கிட்ட நிதானமாகப் பேசற பழக்கம் எனக்கு. ஏன்னா சேதாரம் கம்மி பண்ணிக்கனுமில்ல.

கவலைப்படாதே நான் திருச்சி ஶ்ரீரங்கத்திலிருந்து வந்த அந்த அருமையான தோசை இட்லி மிளகாய்ப்பொடியை வச்சு சமாளிச்சுக்கிறேன் டோண்ட் வொர்ரின்னு சொல்லி ஓட்டியாச்சு.

இன்னிக்கு காலையில வேலைக்குப் போகும் போது எல்லா ஸ்பேர் பார்ட்ஸும் எடுத்து வச்சு, சாயந்திரம் வர்றதுக்குள்ள சரி பண்ணி வையுன்னு ஒரு லிஸ்ட்டு கொடுத்துட்டுப் போயிருக்காப்புல.

ஒரு நாள் லீவுல சும்மா இருக்கலாம்ன்னா முடியலை. உழைக்கிற பெண்கள் கிட்ட சொன்ன பேச்சு கேட்டு நடந்துக்கங்கப்பா, சேதாரம் கம்மியாக இருக்கும்.

மிக்ஸியை சரி பண்ணிவிட்டு அமைதியாக காலை ஆட்டிக் கொண்டிருப்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Escuchar a las mujeres!

Wednesday, July 13, 2022

பொன்னியின் செல்வன் டீசர்

எல்லோரும் பொன்னியின் செல்வனைப் பத்தியே பேசறாங்க!

கடல்புறா மஞ்சளழகி படம் எப்ப வருமோ!

வரும் வரை காத்திருப்போம்.

பத்தாவது முடிப்பதற்குள்ளயே பொன்னியின் செல்வன், யவன ராணி, கடல் புறா எல்லா பாகங்களும் படிச்ச காலம் அது.

எனது அண்ணனுக்கும் என் தம்பிக்கும் வயது இடைவெளி ஒன்பது வருடங்கள். இரவில் எல்லோரும் ஒரே ஒரு சின்ன ரூமில் தான் ஒன்றாய் படுப்போம்.

தினமும் என் அண்ணன், என் தம்பிக்கு யவன ராணி கதையைச் சொல்லி அவனைத் தூங்க வைப்பான். நான் என் அண்ணன்ட்ட என்ன நீ இந்த காதல் கதையெல்லாம் இவனுக்கு சொல்லி தூங்க வைக்குற என்ன புரியும் இவனுக்குன்னா, இரண்டு பேரும் என்னை மடக்கிடுவாங்க. யவன ராணி முடிந்து கடல் புறா கூட கொஞ்சம் ஆரம்பிச்சான் அவனுக்கு.

என் தம்பி எனது அண்ணனின் முக எக்ஸ்பிரஷனை வாயப் பிளந்து பார்த்து கிட்டே தூங்கிடுவான்.

அது ஒரு காலம்.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Historias nocturnas!

நேற்று இந்த போஸ்டை என் அண்ணனுக்கு copy paste பண்ணி அனுப்பிச்சு, இது ஞாபகமிருக்கான்னு கேட்டேன்.

வெரி மச் ன்னு பதில் போட்டான். கூடவே பழசையெல்லாம் ஞாபகம் வச்சுருக்கயே நன்றின்னு எழுதியிருந்தான்.

நினைவுகள் புரண்டாடும் வயதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Viejos recuerdos!

ஸ்பானிஷ் கற்கும் பொழுதில் - 9

நேற்று ஸ்பானிஷ் கிளாஸ்ல ஒரு பிரசண்டேஷன் கொடுக்கனும். இதற்கு முந்தின வாரமே புரபசர் சொன்னாங்க, கூகிளாண்டவர் கிட்ட வரம் வாங்கிட்டு வராம சொந்தமாக எழுதிகிட்டு வந்து ப்ரசண்ட் பண்ணுன்னாங்க.

நானும் அதை உண்மைன்னு நம்பி சொந்தமாக எழுதிகிட்டுப் போய் செம சுமாராப் போனதால, ஏகப்பட்ட கதை வசனம் பாட்டு கேட்க வேண்டியதாகப் போச்சு. மத்தவங்கெல்லாம் கூகுளாண்டவர் உதவியில வெளுத்துக் கட்டிட்டாங்க.

வகுப்பு முடியிற நேரத்துல ஸ்பானிஷ் 3 அடுத்த மாசம் துவங்குதுன்னாங்க. நான் ஒரு ப்ரேக் எடுத்து ரிவைஸ் பண்ணிகிட்டு வர்றேன்னு சொன்னா, ஒட்டு மொத்தக் கிளாஸும் ஏகக்குரலில் உன்ர ரிக்வஸ்ட்டை வீட்டோ பண்றோம், ஒழுங்கா வந்து சேருன்னு ஏகோபித்த குரலில்.

நான் சொன்னேன், அவங்களைப் பாருங்க நாம ஸ்பானிஷ் 2ல உட்கார்ந்து கிட்டு இருக்கோம், அவங்க ஸ்பானிஷ் 5 லெவல்ல பேசிகிட்டு இருக்காங்கன்னா, கிளாஸே சிரிக்குது.

இப்பவெல்லாம் நான் கிளாஸ்ல ஏதோ சொன்னா கிளாஸே சிரிக்குது.

நேற்றைய கிளாஸில் ஸ்பானிஷில் 4 கேள்வி, எல்லாம் ஒரே கேள்விகள், கேட்கனும், மத்தவங்க பதில் சொல்லனும்.

புரபசர் ஆரம்பிக்கும் போது என்னை இப்பவெல்லாம் முதலில் களத்துல இறக்கி விட்டுடறாங்க. அவங்க என்னைக் கேப்பாங்க, அடுத்து நான் இன்னொரு கிளாஸ்மேட்டை ஸ்பானிஷ்ல கேட்கனும். அவங்க பதில் சொல்லனும்ன்னு.

முதல் கேள்வி: எந்த கடையில போய் துணி வாங்குவ? Bargain பண்ணுவையான்னு?

நான் இந்தக் கேள்வியைக் கேட்டப்ப, கிளாஸ்மேட் அவங்கப் போறக் கடையைச் சொன்னாங்க. யப்பான்னேன், எல்லோரும் சிரிக்கறாங்க.

Bargain பண்ணுவயான்னு கேட்டா, நல்லா பண்ணுவேன்னாங்க. என்ன கதையடிக்கிற அந்த கடையில வேலைக்காவாது, நீ ரொம்பவே ரீல் விடறன்னா, கிளாஸே சிரிப்புல அதிருது.

கடைசியல புரபசர், இவனை இரண்டு நிமிசத்துல நாலு கேள்வியைக் கேட்டு முடிப்பான்னு பார்த்தா 5 நிமிஷத்துக்கு இழுத்தடிக்கிறானேங்கிறாங்க. நம்ம ஓட்ட வாய் எங்கப் போனாலும் சும்மா இருக்க மாட்டேங்குது.

ஸ்பானிஷ் 1ல சேரும் போது 20 பேர் இருந்தோம். முடிக்கும் போது 13 பேர் தானிருந்தோம். ஸ்பானிஷ் 2 துவங்கிய போது 14 பேர் துவங்கினோம் இப்ப எட்டு பேரோட நிக்குது. 

நான் ஸ்பானிஷ் 2 லெசன் 3 அண்ட் 4ஐயே மூனு நாலு தடவை திருப்பி படிச்சு கிட்டு இருக்கேன். மனசுல நிக்க மாட்டேங்குது. ஒவ்வொரு லெசன்லையும் 70-80 புதுப்புது வார்த்தைகள். இப்ப கடைசி லெசன் 6 ஓடுது. நான் இன்னும் 3,4,5ஐயே திருப்பித் திருப்பி படிச்சு கிட்டு இருக்கேன். 

ஒரு ப்ரேக் எடுத்தா நல்லாயிருக்கும். புரபசர் என்னமோ, நீ ஆரம்பத்துல எப்படியிருந்த இப்ப எவ்வளவு கத்துகிட்டு இருக்க, ஸ்பானிஷ் 3க்கு நீங்க எல்லோருமே ரெடி, வந்து சேருங்கன்னு ஒட்டு மொத்த கிளாஸும் சொல்லுது.

மேலும் இந்த புரபசர் இங்க ஊர்ல உள்ள ஒரு சர்ச்சில் வாரா வாரம், ஸ்பானிஷ் மட்டுமே தெரிந்துள்ள சின்னப் பசங்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தர்றாங்க. நீங்கெல்லாம் அங்க வாலண்டியரா வாங்க, வாரத்தில் ஒரு நாள் நீங்க அவங்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தாங்க, அவங்க ஸ்பானிஷ் மட்டுமே பேசறதை வச்சு நீங்க ஸ்பானிஷ் கத்துக்கலாம். உங்களுக்கும் நல்லது அவங்களுக்கும் நல்லதுன்னாங்க.

புரபசர் சொல்லி முடிக்கிறதுக்குள்ளயே அம்புட்டு பேரும் கையைத் தூக்கிட்டோம். அதுவும் அடுத்த மாசம் சர்ச்சுல துவங்குது.

என்ர அம்மிணி கிட்ட இன்னும் ஒன்னும் சொல்லலை. வீட்டுல ஒரு வேலை நடக்க மாட்டேங்குது, நீ பாட்டுக்க இப்படி சுத்தறயேம்பாங்க. அம்மிணி கிட்ட வீணை கத்துக்க புதுசா 3 பேர் வந்துருக்காங்க. 

அம்மிணியோட பழைய ஸ்டூடண்ட் கிட்ட நாலு வருஷம் முன்ன, அந்தப் பொண்ணு எட்டாவது படிக்கும் போது சொன்னேன். நல்லா தினமும் பிராக்டீஸ் பண்ணு, என்ர அம்மிணி போல பெருமாள் கோவில் ஏகாந்த சேவைக்கு வீணை வாசிக்கலாம்ன்னு. அந்த பொண்ணு இப்ப ஏகாந்த சேவைக்கு தானும் வாசிக்கனும்ன்னு அம்மிணியோட தனி ப்ராக்டீஸ் ஆரம்பிச்சுருக்கு. போன மாத ஏகாந்த சேவைக்கு அம்மிணி கூட கோவிலில் வாசிச்சுது அந்த பொண்ணு. நமக்குத் தெரிஞ்சது எடுபுடி வேலை மட்டுமே. இரண்டு வீணையையும் ஒரே ஸ்பீக்கர்ல கனெக்ட் பண்ணி விட்டு நிம்மதியாக வாசிச்சாங்க.

அம்மிணியும் busy நானும் busy . 
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Aprendo a hablar en español!