Wednesday, July 31, 2019

கூடி ஓர் வாழ்த்து மடல்

நண்பனின் சொல்லில் தெரிவது
நட்பைக் காட்டிடும் ஓர் வழிபாடு
சொல்படி கேட்காதவன் செயல்
வழித்தடத்தில் வரும் ஓர் இடிபாடு!

அன்பின் வழியில் ஓர் சொல்
அரவணைப்பில் ஓர் சொல்
ஆர்ப்பரிப்பில் ஓர் சொல்
இகழ்ச்சியில் ஓர் சொல்
எச்சொல் கேட்பினும் முற்படு!

நட்பில் கரையும் மேட்டிமைத்தனம்
சொல்லில் மிரட்டும் குழந்தைத்தனம்
பணியில் நிமிரும் வல்லமைத்தனம்
அனைத்தும் பெற்ற உன் தினம் இன்று!

இன்று போல் என்றும் மகிழ்ந்திட வாழ்வாய்
நட்பில் என்றும் திளைத்திட வாழ்வாய்!

கூடி ஓர் வாழ்த்து மடல்!

Friday, July 26, 2019

அலை மீது ஓர் ஓடம்

அலைகளுக்குத் தெரியும் 
     கரைகள் சாஸ்வதமில்லையென
ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு 
     கரைகள் சொல்லும்
உன் ஆக்ரோஷங்கள் 
      என் முன் அடங்கிவிடுமென!

அலைகளாய் எழும் ஆக்ரோஷங்கள்
     திடமான கரைகள் முன் 
மணலில் எழும் சுவட்டை அழிக்கலாம்
     கரைகளின் அடித்தட்டுகளையல்ல!

அலைகளின் சமரசங்களில் ஓடங்கள்
     காற்றின் இழுப்பிற்கு அசையும்
ஆர்ப்பரிக்கும் அலைகளில்
      ஓடங்கள் கரை சேரும்
திடமான சிந்தனைகள்
     அமைதியின் ஓடங்களாகும்!

அலைகளின் ஆர்ப்பரிப்பிலும்
      கரைகளின் தடுப்பிலும்

அலை மோதி நிற்கும் ஓடம்!

அலை மீது ஓர் ஓடம்!

Thursday, July 25, 2019

வாழ்வின் பிரதிபலன்

உழைத்து வாழ்பவனுக்கு
      உதவி தேவையில்லை
உதவி தேவைப்படுபவன்
       உழைப்பதில்லை!

கல்வியை மதிப்பவனுக்கு
      கல்வியில் பேதமில்லை
கிடைத்த கல்வியில் கற்காதவன்
     எதையும் கற்பதிற்கில்லை!

தொழில் தெரிந்தவனுக்கு
      தொழிலில் பேதமில்லை
பேதமுற்றவனுக்கு
      தொழில் எதுவுமில்லை!

உழைக்கத் தெரிந்த தொழிலாளிக்கு
      உழைப்பே மூலதனம்!
பிறர் உழைப்பில் வாழ்பவனுக்கு
      உணர்வே இழப்பு!

குடும்பத்தை நேசிப்பவனுக்கு
      குடிசையும் கோவில்
குடிசையில் இருப்பவனுக்கும்
       குடும்பமே கோவில்!

பரம்பொருளை தேடுபவனக்கு
     அனைத்திலும் பரம்பொருள்
கிடைக்காத பொருளை தேடுபவனுக்கு
     கிடைப்பது எதுவும் பொருளல்ல!

போற்றிப்பாடுபவனுக்கு
     எதிலும் மகிழ்சசி!
எதையும் தூற்றுபவனுக்கு
     அனைத்திலும் இகழ்ச்சி!

பிறர் பொருளை பறித்து வாழ்பவனுக்கு
     பொருளும் தங்காது
தன் பொருளைக் கொடுத்து வாழ்பவனுக்கு
    தங்குவதெல்லாம் பொருளே!

அன்பிருக்கும் இடத்தில்
      குழந்தை இருக்கும்
அன்பில்லா அன்னையிடம்
      குழந்தையும் தங்காது!

நட்பிருக்கும் இடத்தில்
      பேதமில்லை!
பேதமுல்ல இடத்தில்

      நட்பில்லை!

Tuesday, July 23, 2019

உன் பலன் உனது சுவடு

நினைப்பது நடப்பதில்லை
நடப்பதை நினைப்பதில்லை!
சொல்வது நடப்பதில்லை
நடப்பதைச் சொல்வதில்லை!

தாய் கேட்கும் செய்தியில்
பலன் பல நிற்கின்றன!
என்றாவது அது கிடைக்குமெனில்
தளர்ந்த நடையைத் தள்ளிப்போடலாம்!

கேட்பதில் கிடைக்கும் பலன்
மனதில் தரும் நம்பிக்கை!
செயல் பெறப்போகும் நாளை தேடின்
அது காலம் கடந்த பலனாய்ப் போகுது!

உண்ண உணவும் உடுத்த உடையும்
உடலுக்கு மருத்துவமும் 
கிடைக்கும் நாள்தனை நினைத்து
பொழுதைத் தள்ளும் மன பலன்!

தினம் சொல்லும் நாள் பலன்
தாய் கொடுக்கும் தவப்பலன்
கிடைப்பதைப் பெறுவோம்
பெறுவதைப் போற்றுவோம்!

ஒரு நாள் பலிக்கும் கணிப்பு!
அதைத் தேடி தொலைப்பதை நிறுத்து!
நடப்பதைச் சொல்!
சொல்வதை நடத்து!


உன் பலன் உனது சுவடு!

அழியாச்சுவடு

மணல் சுவடுகள் அடுத்த அலையில்!
மனச்சுவடுகள் இருட்டின் இருப்பில்!
காலச்சுவடுகள் தலைமுறை கையில்!
நம் சுவடு எவர் கையில்!

மணிலில் பதித்த சுவட்டில் எழுதும் தரவுகள்
மனதில் பூட்டிய இருளின் கதவுகள்
காலம் பூட்டும் சுவடுகள்
காத்திருக்கும் தரவுகளின் வழிச்சுவடுகள்!

விண்ணில் பதிக்கும் சுவடுகள்
காற்றில் பதிக்கும் தரவுகளாயின்
காலம் அளித்த சுவடுகள்
காற்றில் மறையும் தரவுகளாகும்!

பிறரின் இழிவில் உதிக்கும் சுவடுகள்
காற்றில் கரையும் தரவுகளாகும்
காலச்சுவட்டில் பதிக்கும் சுவடுகள்
கல்லில் பொறித்த சுவடுகள்!

பிறர் சுவற்றில் பதியும் சுவடுகள்
காலத்தின் அழியாத்தரவுகள்!
அன்பில் பதியும் சுவடுகள்
காலத்தின் அழியாச்சுவடுகள்!

நம் சுவடுகள் நமது பாதையில்!

Saturday, July 6, 2019

சமூக நீதி

சமூக நீதி!
எது அது!
உழைப்பிற்கு கிடைக்குமா அது!
குடும்பத்தின் எச்சம் போக 
கிடைக்கும் அது!

கறுப்பினத்தில் மணந்த இளவரசுக்கு
கிடைக்குமா அந்த நீதி!
இல்லை! ஏன்?
வெள்ளைநிறப் பூனை ஒன்று
வெண்குட்டிகளுடன் உயரத்திலிருக்கு!

பரம்பரையாய் உழைத்து சேர்த்த சொத்து
அதில் பங்கு கேட்க நீ யார்?
உன் வீட்டை உன் சொத்தை 
உன் பிள்ளையைத் தவிர
வேற யாருக்குத் தருவாய் நீ?
எந்த நீதியைத் தேடி வருகிறாய்  நீ
அது சமூக நீதி என்றுரைத்து!

கயிறு கட்டி பறக்க விட்டாலும்
காற்றில்லாமல் பட்டம் ஏது!
இறக்கை முளைத்து பறந்தாலும்
இரை தேடா இறக்கை எதற்கு!

அந்நியரை விமர்சிக்கும் போது
உள்பூட்டு போடுவதில்லை!
ஆட்டி விட்ட தொட்டிலுக்கு
வெளிப்பூட்டு ஏன் அதற்கு?

ஆட்டுகிற தொட்டிலுக்கு
கயிறு பிடித்து ஆட்டு நீ!
பல்லக்கு தூக்குபவனை
படம் பிடித்து காட்டு நீ!
பார்ப்பனைத் திட்டி பரவசம் காணு
அதில் கிடைக்கும் நீதியை
சாமரம் போற்று நீ!

மன்னரை அண்டிப் பிழைக்காமல்
எவரும் வாழ்ந்ததில்லை!
மன்னன் சொல்லும் நீதியே

சமூக நீதி அது!

ஜனநாயகம் ஓர் சம உரிமை

வெட்டிய மரத்தின் இலைகள் காயவில்லை
அரசவையில் பசுமைப் புரட்சி பேசிட
தோற்ற மரங்கள் புறப்பட்டன!

கொட்டிய முரசுகள் வேந்தர்களுக்கு மட்டுமே
முரசு கொட்டுபவனுக்கு ஏதடா மரநிழல்!

வெட்டிச் சாய்த்த கைகள் கழுவும் முன்
தரையில் கிடக்கும் சருகுகளைப் பார்!
அவை ஏதோ சொல்ல முற்படுமுன்
அடுத்த கட்டளை அருகே நிற்கும்!

அரியணை நாற்காலியை சுமப்பவனே!
தெரிந்து கொள்!
மன்னர் குடும்பம் இடும் எச்சத்தில்
கிடைக்கும் பதவிகளே பிறருக்கு!

ஜனநாயக சபையில்
ஏதடா வேந்தனும் மன்னனும்!
உண்மை ஜனநாயகம் தழைக்க
வாரிசுகளற்ற சம உரிமையைப் படை!

நீ ஆற்றும் பணி
உன் வருங்கால சந்ததியருக்கு!
அதை எவரோ ஒரு வாரிசுக்கு
நீ அர்பணித்தால்!
உன் தழை சமுதாயம் என்று வெல்லும்!

வெட்டிய மரத்தின் சருகுகள் 
உன்னிடம் சொன்னவை 


ஜனநாயகம் ஓர் சம உரிமை!