Wednesday, September 29, 2021

உயர்ந்த மனிதர்

 எட்டு வருஷமிருக்கும். பெங்களூர்லேர்ந்து சென்னைக்கு சதாப்தியில் வந்து கொண்டு இருந்தேன். 

ஒரு ராஜ்ஜிய சபா எம் பி தனியாக எந்த பாதுகாப்புமில்லாம எனக்கு பின்னாடியிருந்த பெட்டிக்கும் பக்கத்துப் பெட்டிக்கும் இடையில் நடந்து போய்கிட்டு வந்து கொண்டிருந்தார், பிறகு இரண்டு தடவை என் ரயில் பெட்டியிலேயே நின்றார்.

நான் கல்லூரி மாணவனாக இருந்தப்ப அவரைப் பார்த்தது, பிறகு இப்ப தான் பார்க்கிறேன். பேச தயக்கமாகவும் பயமாகவுமிருந்தது.

எழுந்து வணக்கம் சொன்னேன். யார்ன்னு கேட்டார், எங்கயிருக்கன்னு கேட்டுவிட்டு கதவு ஓரமாக போய் நின்னுகிட்டார்.

துணிவேற்படுத்திகிட்டு அவர்ட்ட பேசலாம்ன்னு கதவுகிட்ட போய் பேசினேன். ஏன் இந்த பெட்டிக்கும் அந்த பெட்டிக்கும் நடுவில் நடமாடிகிட்டு இருக்கீங்க, எந்த பாதுகாப்பும் இல்லை; இப்படி தனியா போறீங்களேன்னேன்.

எப்போதும் சிரிக்கிற அதே புன்முறுவலோடு சொன்னார்.  மனைவியோட பயணிக்கிறேன், ஒரு கல்யாணத்துக்கு வந்துட்டு திரும்பிப் போறோம், அவங்களுக்கு இரண்டு பெட்டி தள்ளி அலாட் ஆகியிருக்கு, எனக்கு இந்த பக்கம் அடுத்த பெட்டி, நடந்து போய் வந்தா உடம்புக்கும் நல்லதுன்னார்.

அசந்து போனேன், கொஞ்சம் அதிர்ந்தும் போனேன். ஏங்க டிடியி கிட்ட நீங்க ஒரு வார்த்தை சொல்லியிருந்தீங்கன்னா, ஒன்னா உங்களை ஒன்னா உட்கார வச்சுருப்பார், இல்லாட்டி இதை விட ஹயர் கிளாஸ்க்கு அனுப்பியிருப்பாரே, இப்படி எந்த சேஃப்டியும் இல்லாம நடக்கறீங்க! 

நான் டிடியிகிட்ட சொல்றேன்னேன்.

தடுத்துட்டார். நான் சொன்னது அவருக்குப் பிடிக்கலை.

என்னோட எம் பி பதவி மக்களுக்கு சேவை செய்ய, என் தனிப்பட்ட பலனுக்காக இல்லை. இதை தவறாக உபயோகிக்க விடமாட்டேன். மக்களோட மக்களா சேர்ந்து பயணிக்கிறதில் மக்கள் கிட்ட கிடைக்குற சேஃப்டி விட வேற என்ன பாதுகாப்பு எனக்கு வேணும். இங்க சாதாரணமாக நடமாடியதாலத் தான் உங்களைப் பார்க்க முடிந்தது. அடுத்த தடவை இந்தியா வரும் போது வந்து பாருங்க, சென்னையில வேலை முடிந்தவுடன் வந்து பாருங்கன்னு நம்பர் கொடுத்தார்.

அசந்து போயிட்டேன். பேச்சு எழலை எனக்கு.

1981-87 கால கட்டங்களில் திருச்சி ஜோசப் கல்லூரியில படிக்கும் போது, கல்லூரி வாசலிலும், சத்திரம் பஸ் ஸ்டாண்டிலும், மெயின்கார்ட்கேட் போஸ்ட் ஆபிஸ் பக்கத்துல அவர் பல தடவை உண்ணாவிரதம் இருந்து போராடியுள்ளதைப் பார்த்திருக்கேன்.

அப்ப எனக்கு வயது 18லிருந்து ஆரம்ப இருபதுகளில், அவருக்கு 45-52 வயதிலிருந்திருக்கலாம்; என் அப்பா வயதை விட சிறியவர் ஆனால் மிக கம்பீரமான ஆஜானுபாகுவான தோற்றம், முறுக்கிவிட்ட மீசையுடன், லைட் க்ரே கலர் பேண்ட் வெள்ளைக் கலர் அரைச்சட்டையில் மிக கம்பீரத் தோற்றத்தில் இருப்பார். Well built strong man. பார்க்கவே கொஞ்சம் பயமாக இருக்கும் தோற்றம்.

கிட்டத்தட்ட 25 வருடம் கழித்து அன்று தான் ரயிலில் அவரை நேரில் பார்க்கிறேன். மற்றபடி அவரைப்பற்றி மீடியா செய்திகளில் படிப்பது தான்.

அதே கம்பீரமான பேச்சு இந்த ரயில் பயணத்திலும் கேட்கும் போது, மனிதர் எப்போதும் போல் உயர்ந்து தான் நிற்கிறார்.

நாளை அவருக்கு 80 வயது துவங்கிறதாம். அவர் டி கே ரங்கராஜன் எம் பி அவர்கள்.

அவரை நீண்ட ஆயுளோடு வாழ்வாங்கு வாழ வாழ்த்துவதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।

Friday, September 17, 2021

விழித்திரு எழுந்திரு

survived renal failure, cardiac arrest and ravaged lungs. At one point, doctors gave him a 5% chance of surviving.

உள்ளூர் தினசரி செய்தி இது.

கோவிட் தாக்கப்பட்டு எட்டு மாதம் ஒவ்வொரு ஹாஸ்பிடலா மாறி மாறி இந்த மாநிலத்தில் வசிக்கும் ஒருவர் எல்லாவற்றிலும் தப்பிப் பிழைத்து வந்துள்ளதாக தினசரியில் வந்துள்ள செய்தி!

இன்னொரு தகவல்:
பையனை காலேஜ் சேர்க்கப் போயிருந்த வாரம் அலுவலகத்தில் பக்கத்து சீட்டுக்காரர் சீக்கிரம் ரிடையர்மெண்ட் வாங்கிக்கிட்டுப் போயிட்டார். அவருக்கு 50 வயசு தான். ஊரில் இல்லாததால் நான் போகலை.

இன்னொரு சக அலுவலர், மூன்று வருடம் முன் ரிடையர்மண்ட் வாங்கிப் போனவர், இந்தப் பார்ட்டிக்கு வந்து எல்லோரிடமும் சகஜமாக சிரிச்சு பேசிட்டுப் போனவர் அடுத்த நாள் காலையில எழுந்திரிக்கவில்லை. 62 வயசு தான் அடுத்த நாள் ஆளில்லை.

என் கசின் சொல்வார்: ஏதாவது சரியில்லைன்னா உடனே டாக்டர்ட்ட போ; உடம்பைக் கிழிச்சு ஒட்டு போட்டு உன் கிட்ட திருப்பிக் கொடுத்துருவாங்க, எந்த கஷடம் வந்தாலும் கவலைப்படாதேம்பார்.

அத்தகைய எண்ணத்தோடு வாழ்ந்தால்
வாழ்வினிது
ओलै सिरिय !

பிகு: தினசரி செய்தியைப் படித்தன் விளைவில்

Wednesday, September 15, 2021

வெறுமை மறத்தல்

பையன் காலேஜ்க்குப் போய் 3 வாரமாச்சு. 18 வருஷமா அவன் பின்னாடியே சுத்தி, புரண்டு, வளைஞ்சு வாழ்ந்து பழகிப் போன நேரத்துல, இந்த வெறுமை புதிதாக இருந்தது.

முதல் ஒரு வாரம் அவன் மாடியில தூங்குவதாகவே பிரமை. பிரமை விலக சில பிரயத்தனங்களை முன்பே யோசித்து வேற வச்சிருந்தேன்.

நண்பர்களோட நாய்கள் ரொம்ப பழகிட்டதால, பையன் வேற அடிக்கடி கேட்க ஆரம்பிச்சான், என்ன! நான் போன பிறகு எந்த நாய் வாங்கப் போற; நீ கண்டிப்பா வாங்குவ, எனக்குத் தெரியும்; அந்தளவுக்கு உன் நண்பர்களோட நாயோடப் பழகிட்டன்னான். நான் இருக்கும் போதே வாங்கியிருந்தா நானும் கொஞ்சியிருப்பேனல்லன்னான்.

உண்மையிலேயே நாய்கள் மீதிருந்த 50 வருட பயம் இப்ப சுத்தமாக விலகிடுச்சு, பாசம் அதிகமாயிடுச்சு. ஆனால் இங்க தினமும் அதோட யார் ஓடறது, பீ அள்ளறது. அதைத் தள்ளிப் போட்டாச்சு.

பையன் நாலைந்து மீன் தொட்டிகள் வாங்கி வந்து சராசரியாக பராமரிக்காம சீரழிஞ்சு கிடந்தது. ஒரே ஒரு தொட்டியில மட்டும் கொஞ்சம் மீன் உசுரோட இருந்துச்சு.

நாயை வளர்த்து தான் பையன் இல்லாத வெறுமையைப் போக்கனுமா, இந்த மீன்களை பராமரிப்போம்ன்னு துவங்கினேன்.

அழுக்கு படிஞ்சு மாசு படிஞ்சு கிடந்த அவன் ரூமிலிருந்த மீன் தொட்டியை சுத்தமாகக் கழுவி, கிச்சன் மேடைகள் மீது வைச்சு, இன்னொரு அழுக்குத் தொட்டியிலிருந்த மீன்களை இதில் எடுத்துப் போட்டு அலங்கரிச்சு வச்சேன்.

அடுத்து அந்த பழைய தொட்டியைக் க்ளீன் பண்ணி, அதில் கொஞ்சம் பெருசுகளை மாத்தி விட்டேன். பெருசுகளுக்கு எம்மேல அம்புட்டு கோவம் வருது, சர்சர்ருன்னு அங்கயும் இங்கயும் ஓடி கண்ணாடியில மோதி தன் கோவத்தை வேற காண்பிக்குதுக! அதுக குட்டிகள் கிட்டேர்ந்து பிரிச்சுட்டேன்னு கோவம்.

பையன் வாங்கி வச்ச அதோட சாப்பாடு குப்பியை நான் திறக்கும் போதெல்லாம் எல்லா குட்டிகளும் பெருசும் ஆவலோட கண் கொட்ட பக்கத்துல வந்து சலசலக்கும். சாப்பாடு போட்ட அடுத்த நிமிசம் அத்தனைப் பரவசம் அதுகளுக்கு!

சாயந்தரம் அம்மிணி வந்த பிறகு அதுகளுக்கும் தேவையானதையெல்லாம் வாங்கி வந்தோம்.

போன வாரம் பையன் கேட்டான்: எப்படி இதெல்லாம் கத்துகிட்ட, எப்படி க்ளீன் பண்ணி, தண்ணி மாத்தி அதுக்குத் தேவையான அத்தனையும் பண்ணின, எப்படி தெரியும்ன்னான்.

அடேய் உனக்கு 40 வருசம் முன்னப் பொறந்தவன்டா, உன்னயை வளர்த்த மாதிரி தான் இதுகளையும், உனக்கு டயப்பர் மாட்டியதிலிருந்து செய்த வேலைகள் தானே, இன்னா பெருசு இதுன்னேன்!

பையன் முகம் சிரிக்கத் துவங்கியதைப் பார்ப்பது அழகு!

வாழ்வினிது
ओलै सिरिय !