Friday, August 9, 2019

சுவாசமற்ற ஓர் பறிப்பு

வீட்டில் பூட்டி வைத்து பறித்த சுதந்திரம்
   நாளைய விடிதலுக்கு வலுவற்ற நூலிழை!
தலைமுறைகள் மாறிப்போன இடத்தில்
   பறந்து போன வண்டுகள் வந்தென்ன பயன்!

தடிகளும் குண்டுகளும் தலைதான் வாங்கும்
   எஞ்சி நிற்கப்போவது மரமும் செடியும் மட்டுமே!
மண்ணுள் ஒட்டா செடியை பிடுங்கி நட்டாலும்
   மலர்தனைக் கொடுக்காது!

மனித சுதந்திரம் பிறர் தடுப்பில் பறிபோகாது
    பறித்த சுதந்திரம் பலனிற்றி நிற்கும்
அன்பில் இணையா உள்ளங்களை
  தடிகளும் குண்டுகளும் காத்திட முடியாது!

குள்ளநரி திட்டங்களால் சதி செய்யும் மனிதர்கள்
   மண்ணில் ஓர் சாந்தியை பறிக்கலாம்!
மலரிடம் ஒட்டா வண்டுகளின் மகரந்தசேர்க்கையில்
   மலர்வனமும் பாலைவனமும் ஒன்றே!

இழுபறியில் திணிக்கும் ஓர் சுதந்திரம்
    மண்ணின் மக்களின் சுதந்திரமன்று!
ஜனநாயகம் தழைக்க வேண்டிய இடத்தில்
   தாள்பால் போட்ட கதவுகளின் இடையில் சுவாசமில்லை!


சுவாசமற்ற ஓர் பறிப்பு!

பலன் அறியா பலன்

சொன்னாரய்யா சொன்னாரய்யா
    யோகமான நாளுன்னாருய்யா
வந்துதய்யா வந்துதுய்யா
    வந்ததெல்லாம் சோதனையய்யா
சொல்லாம சொன்னாரய்யா சொன்னாரய்யா
   சோதனையை வெல்லும் நாளென!

குறி சொன்னாரய்யா சொன்னாரய்யா
    நல்ல செய்தி வரும்ன்னாரய்யா
வந்ததய்யா வந்ததய்யா சேதி
   விண்ணப்பம் ஏற்கலைன்னு
சொல்லாம சொன்னாரய்யா சொன்னாரய்யா
    இருக்குறதை விட்டுராதேன்னாரய்யா!

பலன் சொன்னாரய்யா சொன்னாரய்யா
   வளமான செல்வம் வரும்ன்னாரய்யா
வந்ததய்யா வந்ததய்யா
  டாக்டர் பில் வந்ததய்யா!
சொல்லாம சொன்னாரய்யா சொன்னாரய்யா!
   நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்ன்னாரய்யா!

கேட்டானய்யா கேட்டானய்யா
  கேட்டதெல்லாம் புரியாம கேட்டானய்யா!
நினைச்சானய்யா நினைச்சானய்யா
  பணமா வரும்ன்னு நினைச்சான்யா
கிடைச்சதய்யா கிடைச்சதய்யா
  நீண்டதொரு வாழ்க்கை நலம்!


ஹரிகேசநல்லூராய நம:

Wednesday, August 7, 2019

என்றும் ஓர் குடை நிழலில்

பாதைதனில் பயணிப்போர் 
    தொடர்பற்றுப் போனாலும்
பயணமது தொடருமன்றோ!

செல்வமதை செலவளிப்போர்
      கோட்டைகள் தகர்ந்தாலும்
செலவது தொடருமன்றோ!

மனது அதைத் தொலைத்தாலும்
    பாதையதை மறந்தாலும்
மரங்கொத்தி மனதன்றோ அது!

மதி குறைந்து போனாலும்
     மதியாதோர் முன் வீழ்ந்தாலும்
சிந்தனை என்றும் குன்றுவதன்றோ!

மண்ணை விட்டுப் போனாலும்
    மன்னவனேயானாலும்
மண்ணின் மணம் மாறோதன்றோ!


என்றும் ஓர் குடையின் நிழலில்!

பட்சி தரும் ஒலி அலைகள்

மனிதன் நடக்கும் பாதையிலெல்லாம்
கூட வரும் பட்சிகளின் தொடர் ஒலிகள்
பறவை உனை வரவேற்பதில்லை
தம் உறவுக்கு ஒலிக்கும் உணர்வலைகள் அது!

பிறர் வீட்டுச் சுவற்றில் வரையும் சித்திரம்
பட்சிகளின் தொடர் ஒலியில் நனையும்
நம் வீட்டுச் சுவற்றின் கலையாத ஒட்டடைகள்
சிலந்தி வலையில் சிக்கும் பூச்சிகளாயின!

அவர்தம் பாதை பதிக்கும் சுவடுகள்
தொடரும் பறவை ஒலியின் பேதமின்றிருப்பின்
வழி சொல்லும் சாலை மரங்களின்
நிழல் தரும் சுகத்தில் பயணிக்கும்!

பட்சிகளின் கூட்டுத் தொடர் போல்
நம் சுவடு நமதாய் ஒலிக்கட்டும்!


பட்சி தரும் ஒலி அலைகள்!

Sunday, August 4, 2019

பொருத்தமில்லா ஒரு பொழுதில்

மனதில் இருப்பது இறுக்கம்
பகிரும் போது அது கிறங்கும்
உள்மனதில் பூட்டி வைப்பது சுரங்கம்
துளை போட்டு திறப்பது ஓர் அம்பு!

எதிர்பார்ப்போடு நின்றால் ஏமாற்றம்
முயன்று வென்றால் கொண்டாட்டம்
படித்து பெற்றால் பட்டம்
அறிவால் பெற்றால் அது கல்வி!

உழைப்பில் தோன்றுவது ஓர் சிலை
செதுக்கி செழுமையாக்கினால் சிற்பம்
அலங்கரித்து போற்றினால் கடவுள்
மனதில் உருவாக்கும் வரை அது கல்!

பொழுதொன்று மீட்டினாள் வீணை
நரம்புகளை பிடித்து இழுத்தாள் இசை
கைத்தவமாடினாள் ஒரு ராகம்
மனதில் பதிந்து எழும் அது ஓர் சுவை!


பொருத்தமில்லா ஒரு பொழுதில்!