Monday, December 31, 2018

வருடத்தின் கடைசியில

2018

வருடம் முழுவதும் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்தாலும் இந்த வருடத்தின் கடைசி மாதமும் கடைசி நாளும் நிறைவாக முடிவுற்றது. கழிந்த கடினங்களை கழட்டிவிட்டுச் செல்ல மனது இலகுவாகியது.

வீட்டில் இன்றைய வருடக்கடைசி நாள் சமையல் பிரமாதம். மனைவியிடம் மனம் திறந்து பாராட்டினேன். என்ன ஆச்சு இப்படி கலக்குது சமையல்ன்னா புது வருட ஈவ்விற்கான சிறப்புன்னு சிம்பிளா சொல்லிட்டாங்க! எந்த கொண்டாட்டமுமில்லாத ஒரு அமைதியான நாள் இன்று. கடைசி நாளில் செய்ய முடிந்த charityயும் செய்தாகி விட்டது. இரவின் அமைதியில் புலரும் புது வருடத்தை நோக்கி ஆனந்தமாய் எதிர்பார்த்து உறங்கப் போகலாம். 

போன வாரம் முழுவதும் Florida மாநிலத்தில் என்னுடன் படித்த திருச்சி ஜோசப் கல்லூரி நண்பர் ஒருவர் வீட்டில் விடுமுறை நாட்களைக் கழித்தோம். இன்னும் இரண்டு கல்லூரி நண்பர்கள் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டனர். அந்த இருவர் 34 வருடம் கழித்து இப்போது தான் தங்களுக்குள் சந்திக்கின்றனர். ஒரே வீட்டில் 4 குடும்பங்கள் ஒரு வாரம் தங்கி உண்டு களிப்புற்றோம். குழந்தைகளுக்கு அளவிலா மகிழ்ச்சி. ஒரு நாள் யுனிவர்சல், ஒரு நாள் டிஸ்னி கிறிஸ்மஸ் அன்று, ஒரு நாள் பீச். ஒரு நாள் வீட்டிலேயே அடைந்து கிடந்து 4 படங்கள் (3 தமிழ் 1 தெலுங்கு) பார்த்தனர். யாருக்கும் பிரிய மனமில்லாமல் பிரிந்து வந்தோம்.

ஃப்ளோரிடா போறேன்னு ஆபீஸ்ல லீவு போட்ட உடனேயே, மூனு மாதம் பிறகு முடிக்க வேண்டிய வேலையை இப்பவே செய்து கொடுன்னு நிர்பந்திக்க ஆரம்பிச்சாங்க! எப்படியோ தடுமாறி வேலையை முடிக்க வேண்டியதாகப் போயிட்டுது. அடுத்த வருடத்திற்கான ஒரு பெருமைப்படக் கூடிய வொர்க்காக இது இருக்கும் என்கிற நம்பிக்கை. விடுமுறை spoil ஆகாமல், நிறைவாக முடிவுற்றது.

போன வாரம் ராமராஜ்யத்தில் செலவளிந்த நாட்கள் வீட்டில் அனைவருக்கும் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்துள்ளது. பிரிந்து சென்ற நண்பர்கள் குடும்பத்திற்கும் குழந்தைகளுக்கும் அதே ஃபீலிங். போன டிசம்பர் விடுமுறையும் இவர்களுடனே கழிந்தது. இந்த வருடமும்.

எங்களைப் பிரிந்து தவிக்கும் ஜீவன் அவர்கள் வீட்டில் இப்போது துவண்டு படுத்துள்ளது. ஒரு வாரம் இது அத்தனை பேருடனும் ஆடிய ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல. டென்னிஸ் பந்தை கவ்வி வந்து நம் பக்கத்தில் போட்டு தன்னோடு விளையாடுன்னு கெஞ்சும். பாலை கால் பக்கத்தில் போட்டு விட்டு நாம் அதைத் தொடப்போகிற நேரம் வரை வைட் பண்ணும். பக்கத்துல நம்ம கை போகுற நேரத்துல கவ்வி கிட்டு ஓடி நமக்கு பெப்பே பெப்பே காட்டும் அழகு! அப்பா முடியல! அவ்வளவு ஸ்வீட்.

அனைவருக்கும் 2019ம் வருட இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

Tuesday, December 4, 2018

கோவில் மணி ஓசை

கோவில் மணி ஓசை

இது இந்தியாவிற்கான பிரத்யேக ஒலிபெருக்கின்னு நினைச்சு கிட்டு இருந்த காலம் உண்டு. ஆனால் இது ஒரு யுனிவர்சல் சக்தி ஒலின்னு புரிய ஆரம்பிக்கிறது.

சின்ன வயசுல எப்போதும் மார்கழி மாதம் காலையில 4.30 மணிக்கு எழுப்பி அப்பா பஜனைக்கு கூட்டிட்டுப் போவார். எழுந்திரிக்கலைன்னா விட்டுபுட்டு போயிடுவார்ன்னு அரைகுறை தூக்கத்துல குளிக்காம வெறும் பல்லைத் தேய்ச்சுபுட்டு அவரோட ஓடிய காலம் உண்டு. வசித்த காலனியைச் சுற்றி பஜனை பாடி வரும் போது வரும் ஜால்ரா சவுண்டில் உள்ளூர் மக்கள் எழுந்து வந்து வாசலில் நமஸ்கரித்துப் போவதைப் பார்த்து மார்கழி குளிரோடு ரசித்த காலம் ஒன்று உண்டு.

சில வருடங்களுக்குப் பிறகு டீக்கடையிலும் கோவில்களிலும் விடியற்காலையில் ஒலிபெருக்கி மூலம் பாடல்கள் பரவ ஆரம்பித்தது. உள்ளூர் தர்காவிலிருந்து விடியற்காலையில் எல்லா நாட்களில் வரும் அல்லாகு (உ) அக்பர் ஒலி கோவில் மணி ஓசை கேட்க ஆரம்பித்தது. ஜோசப் கல்லூரியில் படிக்க வந்த போது தான் சர்ச்பெல் நாதமும் குறிப்பிட்ட நேரத்தில் ஓங்கி ஒலிப்பதைக் கேட்க முடிந்தது.

ஆன்மீகத்துல ஈடுபாடு இருந்த காலகட்டத்தில் இவையெல்லாம் ஒரு பொதுப்பிரச்சனையாக கருதியதில்லை. மணி ஓசை ஒலிகளின் நாதம் சிலிர்க்க வைத்தது. சத்தங்களிடையே எழுந்திரிப்பதும் தூங்குவதுமானது பெரிய பிரச்சனையாகத் தோன்றியதில்லை!

ஆன்மீகத்தை விட்டு விலக ஆரம்பித்த பிறகு இது ஒரு பொதுப்பிரச்சனையாகத் தோன்ற ஆரம்பித்தது. சிலசமயங்களில் சத்தத்தில் உறக்கம் வரவில்லை. இவர்கள் noise pollution உருவாக்குகிறார்கள்; சட்ட ஒழுங்க நடவடிக்கை எடுக்கனும் என்று தோன்றிய காலமும் உண்டு.

இப்போது மனது ஆன்மீகத்தை நாடும் போது கோவில் மணியும், சர்ச் பெல்லும், தர்கா துவாவும் பிரச்சனையாகத் தோன்றவில்லை. 

இத்தனை நாட்களாக இது இந்தியாவிற்கான ஒரு பிரத்யேக நிகழ்ச்சின்னு நினைச்சு கிட்டு இருந்தேன். இது ஒரு யுனிவர்சல் பிரச்சனைன்னு இன்னிக்கு புரிந்தது.

இன்று ஆபீஸ்லேர்ந்து வரும் போது எப்போதும் கேட்கிற NPRல ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட் ஒலிபரப்புனாங்க. அதில் பாங்காக்கில் ஒரு பௌத்த மதகோவில் மணியோசை பிரச்சனை பற்றியது.

அந்த பௌத்தமதக் கோவிலில் காலை 3 1/2 மணிக்கு கோவில் மணி அடித்து மத்த புத்த பிக்சுக்களை பிரார்த்தனைக்கு அழைப்பார்களாம். இது Bangkokல் சாதாரண வழக்கமாம்.

இப்போது புதிதாக தாய்லாந்திலிருந்து குடியேறிய ஒரு தம்பதி அந்த பௌத்தவளாகத்திற்கு பக்கத்திலுள்ள ஒரு ப்ளாட்டில் வந்து சில நாட்களில் இந்த மணிச்சத்தம் அதிகமாக இருக்குன்னு கம்ப்ளைன்ட் பண்ண, உள்ளூர் நிர்வாகம் கோவிலுக்கு சத்தத்தைக் குறைக்கச் சொல்லி உத்தரவு போட்டிருக்கு. கோவிலும் சத்தத்தைக் குறைக்க, உள்ளூர் மக்கள் கடுப்பாகி கொதித்து எழுந்து விட்டனராம். சிலர் கோவிலுக்கு முன்பிருந்ததை விட ஒரு பெரிய மணி வாங்கிக் கொடுக்கப் போவதாக அறிவிக்க பிரச்சனை மேலும் பெரிசாயிடுச்சாம். உள்ளூர் மக்களோட பேட்டிகளையும் என்பிஆர்ல ஒலிபரப்பினாங்க.

பிரச்சனை அதிகமாவதை உணர்ந்த அந்த தாய்லாந்து மக்கள் எப்ப ப்ளாட்டை காலி பண்ணிட்டு எங்க போனாங்கன்னு தெரியலையாம்.

NPRன் ஒலிபரப்புகளை அவங்க எப்போதும் ஆர்க்கைவ் பண்ணி அவங்க வெப்சைட்ல வைப்பாங்க. இன்னொரு தடவை கேட்கனும்.


கோவில் மணி ஓசையின் நாதம் ஆன்மீகத்தின் ஈடுபாட்டிற்கும் வெறுப்பிற்குமான இடைவெளியை அளவுகோலில் measure செய்யக்கூடிய மாதிரி உலகளவில் பரந்து விரிந்திருக்குறது.

Sunday, December 2, 2018

ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டம்

இது ஆகஸ்ட் மாதம் வரக்கூடிய ஒரு பண்டிகை. அன்றைய தினம் போட்டிருக்கிற பூணலை மாற்றிக் கொண்டு அடுத்த நாள் காயத்ரி ஜபத்திலிருந்து தொடர்ந்து 80-90 நாட்கள் வேதம் கற்றுக் கொண்டு தினமும் வேத பாராயணம் பண்ணனும்ன்னு இந்த ஆவணி அவிட்டப் பண்டிகைக்கு அர்த்தம்.

இப்ப பூணல் போட்டிருக்கிறவர்களில் 90% பிராமின்ஸ் பூணலை மட்டும் மாத்திப்பாங்க. வேதபாராயணம் பண்ணமாட்டாங்க. அதனால வேதத்தில என்ன எழுதியிருக்குன்னு அவர்களுக்கு பெரும்பாலும் தெரியாது.

வீட்டுக்கு வர்ற பெரியவர்கள் காலில் விழுந்து அபிவாதயே சொல்லச் சொல்லுவாங்க. அதில் சொல்லும் போது ஆபஸ்தம்ப சூத்ரஹ யஜுசாஹ அத்யாதி ன்னு தொடர்ந்து வரும். ஆனால் ஆபஸ்தம்ப சூத்ரத்துல என்ன எழுதியிருக்குன்னு தெரியாது!

வீட்டுல பெரியவங்க திட்டுவாங்க! பூணல் போட்டுகிட்டதற்காக அன்னிக்காவது ஒழுங்கா வேதம் கத்துக்க; இல்லாட்டி கஷ்டப்படுவ; பகவானே வந்து உனக்கு கத்துக் கொடுத்து காப்பாத்துவாங்கம்பாங்க! இப்ப வேதம் கத்துக்காதவங்களுக்கு மத்தவங்க வேதம் கத்துக் கொடுக்கிறாங்க!

முப்பது வருடத்திற்கு பிறகு இப்போது தான் திருப்பி பூணலை எடுத்து போட்டுகிட்டு வேதத்துல என்ன எழுதியிருக்குன்னு படிக்க வரும் போது இணைய ஆசான்களில் ஒருவர் தைத்ரீய உபநிஷத் எடுத்து படின்னார். படிக்க ஆரம்பிச்சேன்.

வேதம் என்பது கல்வி, ஞானம், அறிவு. இந்த உபநிஷத்தில் கற்றுத் தரப்படுவது கணிதம், விஞ்ஞானம், வாழ்வின் ஆதாரத்திற்குத் தேவையான நீர் நிலம் காற்று நெருப்பை போற்றி வழிபட்டு காப்பது மட்டுமின்றி மாணாக்கர்களுக்கு வேண்டிய முக்கிய அறிவுரைகள் சொல்லப்படுகிறது.

வேதம் கல்வி ஞானம் அறிவு என்று சொல்லும் போது அன்றைய காலகட்டத்திலிருந்த வாழ்வியல் முறைகள், எதிர்ப்புகள், எதிரிகளை எதிர் கொள்ளுதல் என்பதுவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருக்கலாம். எவற்றை படித்துப் புரிந்து கொள்ள வேண்டும்; எவற்றை நித்யகர்மங்களாகச் செய்ய வேண்டும், எத்தகைய வழிபாட்டு முறைகள் என்று கூட பல வேத குறிப்புகளில் உண்டு. சிலவற்றை புரட்டிப் பார்த்ததில் இருப்பதாகத் தெரிகிறது.

முழுவதும் படித்து அறிந்தவர்கள் குறைவு. இருக்கிற பிராமணர்களில் ஒரு சதவீத மக்களுக்கு கூடத்தெரியாது. ஏனென்றால் வேதம் படிப்பதில்லை. சமஸ்கிரதம் புரியாத காரணமும் கூட.

வேதத்தில் சிலவற்றை மட்டுமே நித்ய கர்மாக்களாகவும், சிலவற்றை படித்து அறிந்து கொள்ள வேண்டியவை என மட்டுமே என்றிருக்கிறது! அன்றைய சூழ்நிலையில் இருந்தவற்றை எழுதி வைத்ததை வாசிக்க மட்டுமே வேண்டும்.

பொதுவாக வேதம் கற்றுக் கொள்ள விடியற்காலையில் எழுந்து குளித்து விட்டு நித்ய கர்மா சந்தியாவந்தனம் செய்த பிறகு வேத பாராயணம் ஆரம்பிக்கனும்பாங்க! பிராமணர்கள் செய்வதில்லை. ஆனால் இப்ப பிராமணர் அல்லாதவர்கள் தான் விடியற்காலை பல் விலக்குவதற்கு முன்னரே எழுத்தவுடன் இன்னிக்கு வேதத்தில் என்ன இருக்கு, 80-90 வருடம் முன் எந்த கோவில்ல யாரை எந்த பார்ப்பான் விடலை, எந்த பார்ப்பான் உள்ள விட்டான், என ஒரே பார்ப்பன புராணமவே இவர்கள் தினம் விடிகிறது.

பார்ப்பான் வேதம் படிக்கிறானோ இல்லையோ
இவர்கள் படிக்க வைத்து விடுவார்கள். அந்த காலத்து பிராமணன் தன்னோட எதிரிகளைத் தன்னோட வேத புத்தகங்களில் எழுதி வைத்து விட்டுப் போனார்கள். இந்த காலத்து பிராமணன் என்ன எழுதி வச்சுட்டுப் போகப் போறானோ! வருந்தக் கூடிய விஷயங்கள்.


Stop preaching hatred.