Saturday, October 29, 2022

நமக்கான ஒரு தூண் நிற்கையில்

நமக்கென ஒரு இடம்
 அதில் ஒரு ஓரமாய் அமர்வதில்
இருளிலும் ஒதுங்க ஏதுவானது!

நாம் சொல்லும் சொற்கள்
  நம் புலம் பார்த்து மதிப்பிடப்படுகையில்
ஓரமாயிருக்கும் நம்மிடமே தூண்!

ஒரு கல்மண்டபத்தில் ஒதுங்கும் போது
  நமெக்கென இருக்கை ஓரமாய் இருக்கும்,
மண்டபத்தின் தூண்களும் ஊன்றுகோல்கள்!

மண்டபத்தில் பலவகை உரையாடல்கள்
   நம் உரையாடல் ஒரு மூலையில்
எட்டிப் பார்ப்பவர்களின் தூரம் பார்வையில்!

கண்களால் பேசும் அம்மண்டபம்
  நமக்கான ஓரத்தையும் ஏற்கும் பாரம்
இருளிலும் ஏதுவான தூண்கள் அவை!

நமக்கான ஒரு தூண் நிற்கையில்!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Nuestro lugar en la sala del templo!

Friday, October 28, 2022

சப்பாத்திக்கு சாம்பார்

பக்கத்து ஊரிலுள்ள பஞ்சாபி நண்பனின் பெண் வந்து எங்களைப் பார்த்து விட்டுப் போனாள். 

நம்ம பையன் அம்மிணிகிட்ட தனக்கு வேணும்கிற சாம்பார் உருளைக்கிழங்கு சமைச்சு வைக்கச் சொல்ல, பஞ்சாபி பெண்ணுக்கு தோசை சட்னி சாம்பார் வச்சு ஏமாத்திரலாம்ன்னு அம்மிணி ட்ரை பண்ணாங்க, வேலைக்காவல.

நல்ல கொலைப்பசியில வந்த அந்த பொண்ணு சப்பாத்தியே சாப்பிட்டுக்கிறேன்னு சொல்ல, இங்ஙன வீட்டுல முழிக்கிற முழி ஆஹா!

வாழ்க்கையில ஒரு வீர பஞ்சாபி மங்கைக்கு வந்த சோதனை, சப்பாத்திக்கு சாம்பாரையும் உருளைக்கிழங்கையும் தொட்டுகிட்டு, சாப்பிட முடியாம சாப்பிட்டுவிட்டுப் போயிடுச்சு. பாவம் குழந்தை.

அப்புறம் ஏன் சார் அவங்க நம்மளை சாம்பார்ன்னு சொல்ல மாட்டாங்க.

வாழ்வினிது
ओलै सिरिय !
¡Come cualquier cosa cuando tengas hambre!

வெடிச்சத்தம் கொடுக்கும் தீபாவளி வருகை

வீட்டு பக்கத்துல இந்த வருட தீபாவளி கொண்டாட்ட வெடிச்சத்தம் (fireworks) தொடர்ந்து பதினைந்து நிமிடமாகக் கேட்குது.

வெடிச்சத்தம் கேட்டுத் தான் இன்னிக்கு ஊர்சனம் தீபாவளி கொண்டாட்டமே தெரிகிறது.

என்னமோ நம்ம உலகமே தனியாக இயங்குது. எதையும் முன் கூட்டியே தெரிந்து கொண்டு அதில் பங்கேற்க நேரமேயில்லை.

இயந்திரத்தனமாக எங்க இரண்டு பேருக்கும் வேகமாக வாழ்க்கை ஓடுது. மூனு டிவியிருந்தும் ஒன்று கூட ஆன் பண்ணுவதில்லை. ரிமோட் தேடனும்.

அடிக்கடி அம்மிணி கேட்கிறாப்புல: ஏன் நமக்கு நேரமே பத்தமாட்டேங்குது என.

தெரியலை.

வாழ்க்கை இயங்குகிறது. அதன்படி நாங்கள் ஓடுகிறோம்.
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Fuegos artificiales en la vida!

கந்தையேயானாலும் கசக்கிக் கட்டு

வீட்டிலுள்ள பழைய எலக்ட்ரானிக் சாதனங்கள் லேப்டாப்பில் ஏதாவது உடைந்தாலோ பழுதடைந்தாலோ முன்பெல்லாம் தூக்கிப் போட வேண்டிய நிலமைதான்.

வீட்டிலிருந்த மூனு பழைய லேப்டாப்புகளை நானே அப்கிரேட் பண்ணி இன்னும் பத்து வருடமாகியும் அதெல்லாம் சிறப்பாக ஓடுது. 

ஆனால் பையனோட மேக்புக்கின் ஸ்க்ரீன் உடைஞ்சவுடனே அந்தப் பழசைத் தூக்கிப் போட மனசு வரலை. 

சின்ன வயசுல அண்ணன் ஷர்ட்ஸை நான் போடுவதும் என்னோட பேண்ட் ஷர்ட்ஸை காலேஜில் படிக்கும் போது கூட என் தம்பி போடுவதும் எங்க வீட்டில் சகஜம். இப்ப கூட என் பையன் வாங்கி விட்டு போடாம மற்றும் அவன் வளர்ந்து விட்டதால் அவனுதை நானும் என் அண்ணனும் போடுகிறோம். அல்பத்தனமாக இருந்தாலும் எங்க சின்ன வயசு பழக்கவழக்கங்கள் மாறவில்லை. சின்ன வயசில் பணப்பற்றாக்குறையை நிறைய சந்தித்ததால் இது எங்கள் வீட்டில் சகஜமாய்ப் போனது.

பையனோட பழைய மேக்புக் லேப்டாப்பை ஆப்பிளுக்கே எடுத்துப் போயும் பல கடைகளில் ஏறி இறங்கியும் அந்த ஆயிரம் டாலர் பொருளை வீணாகத் தூக்கிப் போட மனசு வரலை. ரிப்பேர் பண்ண ஆகிற செலவுக்கு இன்னும் கொஞ்சம் போட்டு புதுசு வாங்கிடலாம்.

பல இடங்களில் தேடுகையில் ஒரு கடையில் சொன்னார்கள்: இங்கு மாதம் 25$ மெம்பர்ஷிப் எடுத்துக்க. உன் வீட்டிலுள்ள எந்த எலக்ட்ரானிக்ஸ் பொருளையும் அது சுக்கு நூறாக உடைஞ்சா கூட நாங்க ரிப்பேர் பண்ணித் தர்றோம்ன்னாங்க. இரண்டு மூனு மாசம் கழிச்சு தேவையில்லைன்னா மெம்பர்ஷிப் கேன்சல் பண்ணிக்கன்னாங்க. உன் மேக் ஐ நாங்க 100$க்கு ரிப்பேர் பண்ணித் தர்றோம்ன்னாங்க.

இது என்ன புதுசா இருக்கேன்னு நினைச்சேன். மெம்பர்ஷிப் எடுத்த அடுத்த மாதம், உடைஞ்சு கிடந்த லேப்டாப்பை மூன்றே நாளில் உயிர்ப்பித்துக் கொடுத்து விட்டார்கள்.

வாங்கும் போது போனால் கடையில் செம கூட்டம். எல்லோரும் அவர்களிடம் உடைஞ்ச போனை ரிப்பேர் பண்ணுவதும், பிஎஸ்4 என பல விளையாட்டு கேமிங் எலக்ட்ரானிக்ஸ் ஐட்டமெல்லாம் அதன் ரிமோட் கூட உயிர்ப்பித்து வாங்கிகிட்டுப் போறாங்க.

இன்னொரு லேப்டாப்புக்கும் 100 கொடுத்து ssd ட்ரைவ் மாத்திப் போட்டுகிட்டேன். பத்து வருடம் முன்ன வாங்கிய லேப்டாப் இப்ப விண்டோஸ் 10 ssd 1tbல செமையாக ஓடுது.

இப்ப இங்க நிறைய எலக்ட்ரானிக்ஸ் சிப் பற்றாக்குறை. முன்பு எதையுமே வாங்கி தூக்கி எறிந்து கொண்டிருந்த மக்கள் இப்பவெல்லாம் எல்லாப் பொருட்களின் விலையெல்லாம் யானை விலையாக இருப்பதால் பழசை ரிப்பேர் பண்ணி உபயோகிக்கிற நிலைக்கு வந்து விட்டார்கள். பெரிய மாற்றம் தான்.

கந்தையேயானாலும் கசக்கிக் கட்டு.

பழசை உயிரூட்டி புதுப்பிபதில் 
வாழ்வினிது.
ओलै सिरिय 
¡Intenta reutilizar antes de lanzar!

தினபலன் சொல்லும் கதை

நம்ம ஜாதகம் அவங்க கையில எப்படி கிடைச்சதோ தெரியலை அவங்க போடற தினப்பலன் மாதிரியே நடக்குதே! நான் என்ன செய்ய!

போன் மூலம் பொன்னானத் தகவல் வரும்ன்னு இன்னிக்கும் போட்டாங்க!

வருதே! வரிசையாக மூனு போன் கால். (அண்ணன்) பொண்ணே மாப்பிள்ளையோட சேர்ந்து, ஃபோன் பண்ணி வாங்கன்னு கூப்பிடறாங்க. முன்னவே அண்ணன்ட்டேர்ந்தும் ஃபோன்.

ஒரு வருஷமாப் பேசாம ஓடி ஒளிஞ்சு கிட்டு இருந்த நண்பன் இன்னிக்கு திடீர்ன்னு போன் .

எல்லாம் ஒரே சமயத்துல ஒன்னு கட் பண்றதுக்குள்ள இன்னொன்னு.

கூடவே இதையுமல்ல எழுதிப் போட்டிருக்காங்க: இன்னியிலிருந்து 3 நாளைக்கு சந்திராஷ்டமமாம். வாயை மூடி கிட்டு இருங்கிறாங்க. நாளைக்கு peakஆம்.

எப்படி இருக்கிறது. கஷ்டமான காரியமாச்சே! 

எப்படியோ ஓடற வாழ்க்கை வழக்கப்படியே ஓடுது. பழகிடுச்சு!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¿Cómo lo predicen?

மாகாளி மோரில்

அம்மாக்கு மாகாளி வாசனையைக் கண்டாலே ஆகாது. ஆனால் அப்பாக்கும் எனக்கும் ரொம்பப் பிடிக்கும். மத்த சகோதரர்கள் அது பக்கமே வரமாட்டாங்க.

அம்மா எங்களுக்காகவே சகிச்சுகிட்டு எந்தக் குறையிமில்லாம மிக அருமையாக மாகாளி ஊறுகாய் போடுவாங்க.

எனக்கு மாகாளியைப் பார்த்தா கிறுக்கு பிடிச்சுரும். ரொம்பவே விரும்பி சாப்பிடுவேன்.

அம்மிணி இரண்டு நாளைக்குத் தேவையான கறிவேப்பிலை உப்பு போட்ட நீர்மோர் பண்ணி ஃபிரிட்ஜ்ல வச்சுட்டாங்க.

ஒரு பெரிய கப் நீர் மோர் எடுத்து அதுல கொஞ்சம் மாகாளியைப் போட்டுக் குடிக்கிற சுகமே சுகம் தான்.

இன்றைய வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Tómpalo de suero de leche!

நவராத்திரி 2022

நவராத்திரி இங்கு சில பேருக்கு ஒரு passion . ஒரு மாதம் மேலே பிளான் பண்ணி அதற்குத் தகுந்த மாதிரி வீட்டையை மாற்றி அமைப்பது மட்டுமல்ல, கொலுவில் வைத்துள்ள ஒவ்வொரு பொம்மைகளுக்கும் ஒரு தீம் வைத்து அதற்கு கதையே ஒன்றரை மணி அளவுக்கு விவரிக்கும் அளவுக்கு வீடியோ எடுத்து பகிர்வது என்கிற அளவுக்கு ஈடுபாடோடு செய்வார்கள்.

பையனோட கிளாஸ்மேட்டின் அம்மாவின் கைவண்ணம் இந்த கொலு. இதற்கு ஒன்றரை மணிநேர விவரிப்புடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள்.

நவராத்திரி சமயத்தில் அவர்கள் வீட்டிற்கு வரமுடியாதவர்களை இன்று அழைத்திருந்தார்கள். அம்மிணி ஒரு வாரமாக, அவங்ககிட்டேர்ந்து அழைப்பு வந்திருக்குப் போயேயாவனும்ன்னு ஒரு வாரமாக நினைவூட்டல். அப்படி என்னதானிருக்கும்ன்னு இன்று போய் பார்த்ததில் வியந்தவையே கீழேயுள்ள படங்கள்.

பத்து வருடம் முன் ஒரு சின்ன தவறு செய்தேன். ஒரு நண்பர் வீட்டில் கொலுவுக்கு அழைக்க, அவர்கள் வீட்டிலுள்ள கூட்டத்தைப் பார்த்து அம்மிணியை மட்டும் வீட்டினுள் அனுப்பி விட்டு நான் காரிலேயே இருந்து விட்டேன். அவர்களும் இரண்டு அறைகள் முழுக்க கொலு பொம்மைகள் வைப்பது மட்டுமல்ல, அவர்களது உணவுக்கு நான் அடிமை. எங்க பாட்டியின் சமையலின் சுவை இவரது சமையலில் இருக்கும். உள்ளே போன அம்மிணி நான் உள்ளே வராததைப் போட்டுக் கொடுக்க, அவர்கள் என்னிடம் வன்மையாக கடிந்து கொண்டது மட்டுமல்ல, பத்து வருடமாக கொலுவுக்கே கூப்பிடறதில்லை இப்ப.

அம்மிணிக்கு அது மாதிரி ஆயிடக்கூடாதுன்னு இழுத்துகிட்டுப் போனாப்புல. போன இடத்தில் பிரமாதமாக இருந்தது.

அதை உங்களுடன் பகிர்வதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Son divinos!

எனை அறிய முடியாப் பொழுதில்

கடந்த சில நாட்களாகவே என்ன நடக்குதுன்னு புரிய மாட்டேங்குது.

பல நண்பர்கள் பல வருடங்கள் கழித்து இப்போது ஒரு வாரமாக ஃபோனில் பேசுகிறார்கள். அவர்கள் பிள்ளைகள் இப்ப வளர்ந்து கல்லூரியில், சிலர் படிப்பு முடித்தும் விட்டனர். அந்தக் குழந்தைகள் என்னை நினைவு கூர்வதாகச் சொல்கிறார்கள். அப்போது அந்தக் குழந்தைகள் பிஞ்சுகள், எப்படி ஞாபகமிருக்கும்ன்னு தெரியலை.

பணம் நிறையவே சம்பாதித்து விட்டோம், ஆனால் அதை விட இந்த ஓரிரு நிமிட போன் உரையாடலே மகிழ்ச்சி தருவதாகச் சொல்கிறார்கள்.

அவர்களது கடின காலங்களில் சொன்ன அறிவுரைகளை ஏற்கத் தவறியவர்கள் இதில் சிலர். இன்று அதை போனில் நினைவு கூர்கிறார்கள். எவரது தவறுகளையும் நேரடியாக அவர்களிடம் எடுத்துச் சொல்லி செய்யாதேன்னு சொன்னதை இப்ப சொல்கிறார்கள். காலம் தாழ்ந்து என்ன செய்ய.

பழைய தொடர்புகள் தானாகத் துளிர்கின்றன.

எனையே அறியமுடியா ஒரு பொழுதில்
வாழ்வினிது
ओलै सिरिय!
¡Viejos amigos en llamadas telefónicas ahora!

தப்புத்தாளங்கள்

மிகப் பிரபலமானவர்கள் கச்சேரிக்கு நல்ல கூட்டம் வரும். கூட்டத்தில் சிலருக்கு சங்கீதம் தெரியும்.

பிரபலமானவர்கள் ராகம் ஆரம்பிக்கும் போதே அம்மிணியும் அவர்களோட நண்பர்களும் இது என்ன பாட்டுன்னு ஒரு guessing game ஆரம்பிச்சு, ஒரு தனி chat session அல்லது காதுல கிசுகிசு மந்திரம் ஓடிகிட்டு இருக்கும்.

அடுத்து பாடகர் பாட்டை ஆரம்பிச்சவுடனேயே சங்கீதம் தெரிஞ்ச ஆளுங்க எல்லாம் தொடையைத் தட்டி தாளம் போட ஆரம்பிச்சுருவாங்க.

நாம ஞானசூன்யம். பாட்டும் தெரியாது ராகமும் தெரியாது. தெரிஞ்சது எல்லாம் எடுபுடி வேலை தான், மற்றபடி பாட்டையும் எந்த ம்யூசிக் கச்சேரியையும் ரசிக்கத் தான் தெரியும்.

யாரோ என்ன ராகம்ன்னு கேட்டுரப் போறாங்கன்னு பயத்துல உட்கார்ந்திருப்பேன். இப்பவெல்லாம் அம்மிணி அவங்க நண்பர்களைக் கழட்டிவிட்டுட்டு என் பக்கத்தில் உட்காருவதால் அந்தப் பிரச்சனையில்லை, அம்மிணிக்குத் தெரியும். நமக்கு நிம்மதி. தப்பிச்சுருவேன். 

ஆதலால் ரொம்பவும் தலையாட்ட பயம். கச்சேரிகளில் தலையாட்டற கோஷ்டி ஜாஸ்தி.

நேற்று என் பின்னாடி உட்கார்ந்திருந்தவர் கானடாக்கு போடற தாளம், பாடறவர் பாட்டைக் கேட்க முடியாம அவரோடத் தொடையைத் தட்டற சத்தம் பாட்டைக் கேட்க முடியாம ரொம்பத் தொல்லை பண்ண ஆரம்பிச்சுருச்சு.

ரொம்பத் தெரிந்தவராதலால் நான் அவர் தொடையைத் தட்டி அய்யா நிப்பாட்டுங்கன்னு கேட்டுக்க வேண்டியதாப் போச்சு. அவருக்கும் எம்பராஸிங் தான். என்னைச் சுத்தியும் அம்மிணியின் நண்பிகள். எல்லோரும் என்னைப் பார்க்க, அமைதியாக அவங்கப்பக்கமே திரும்பலை நான்.

சபை தட்டுற தப்புத் தாளங்களைக் கண்டுக்காம வாசிக்கற பக்கவாத்யங்கள் ஏன் சபையைப் பார்க்காம பாடறவரைப் பார்த்து வாசிக்கிறாங்கன்னு புரியுது.

நான் தப்பித் தவறி கூட என் நாலு விரலை என் தொடையில தட்டிற மாட்டேன். அம்மிணி கண்டுபுடிச்சுருவாப்புல.

அமைதியா எடுபுடியாக இருப்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Escucha música en silencio!

ஸ்பானிஷ் கற்கும் பொழுதில் - 18

இன்று மாலை வகுப்பில் உதவ வர்றீங்களான்னு எனக்கும் என் கூடப்படிக்கும் அந்த இஞ்சினியர் பெண்மணிக்கும் எங்க ஸ்பானிஷ் புரபசர் ஆங்கிலத்தில் மெசேஜ் அனுப்பிக் கேட்டிருந்தாங்க. 

நான் இந்த வகுப்பிற்குப் போய் உதவக்காரணம் அவங்க இயல்பாக ஸ்பானிஷ் பேசுவதை நேரில் கேட்கும் போது நாம் கற்பது சுலபம்ன்னு.

நான் வருகிறேன்னு ஸ்பானிஷில் பதில் போட, அவ்வளவு தான். அதற்குப் பிறகு எங்கள் மூவரின் உரையாடல்கள் முழுவதும் ஸ்பானிஷிற்கு மாறிடுச்சு.

வகுப்பில் படிப்பது ஒரு வகை, தினசரி நமது புழக்கத்தில் நாம் உபயோகிக்கும் மொழிப்ரவாகம் இன்னொரு வகை.

புரபசர் இந்த உரையாடலி்லுள்ள பிழைகளை கேட்டவுடன் திருத்தி மெசேஜ் அனுப்ப, இன்று புதிதாக கற்றுக் கொள்வதோடு வகுப்பில் கற்பதை இயல்பாக உபயோகப்படுத்தவும் புரிய ஆரம்பிக்கிறது எனக்கு.

நான் அட்மினாக இருக்கும் சம்ஸ்க்ரத க்ரூப்பில் பல தடவை நான் இதைக் கேட்டும் பயனில்லை. நமது அன்றாட தினசரி பேசுகின்ற சொற்றொடர்களை வாக்கியங்களை இயல்பாக எப்படி சம்ஸ்கிரதத்தில் சொல்வது என தினம் ஒன்றிரண்டு வாக்கியங்களை க்ரூப்பில் எழுதுங்கன்னு கேட்டும் பயனில்லை. பல பண்டிதர்கள் உள்ள க்ரூப், கற்பதற்கு காத்திருக்கும் கும்பலும் வைட் பண்ணிக்கொண்டு இருப்பவர்களும் அதிலுண்டு.

தேவைப்படும் போது கற்போம்ன்னு சொல்பவர்களும் உண்டு. ஆங்கிலம் சிறு வயதிலிருந்து கற்றாலும் அதை முறையாக பேச முடியாமல் தடுமாறுபவர்கள் பலருண்டு. இதனால் பல வளர்ச்சிக்கான வாய்ப்புகளை இழந்தவர்களை இழப்பவர்களை அலுவலகங்களில் நாம் பார்க்கிறோம். கான்வெண்ட் இங்க்லீஷ் பேசி எளிதில் மேனேஜராகி விடுவார்கள், இது அவசியம் ஏனென்றால் கம்யூனிகேஷன் நமது வாழ்வில் முக்கியமான அங்கம். மொழி மீதான பற்று மற்றும் அதை பேசுபவர்கள் மீதான இருக்கும் மதிப்பை பொறுத்து நாம் கற்பதில் நம் ஆவலுமிருக்கும்.

பிற மொழி பேசுபவர்களையும் அவர்களது கலாசாரத்தையும் பழக்கவழக்கங்களையும் மதிக்கும் போதும் அந்த அந்நிய மொழி மீது பற்று வருவது நமக்கு இயல்பாக இருக்கும். கற்பதும் சுலபம்.

புதிதாய் ஒரு பற்றுடன் கற்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Aprende con interés!

கோவில் கோபுரம்

பெருமாள் கோவில் கோபுரம் முழுமையடைந்து விட்டது. போன மாதமே கும்பபூஜை முடிவடைந்தது.

இன்று காலை கோவில் போன போது பெயிண்டிங் வேலை நடந்துகிட்டிருந்தது. எதிர்வீட்டு நண்பர் போன் செய்து, தெரியமா, தீபாவளி அன்னிக்கு கவர்னரையும் வரவழைத்து பூரணகும்ப மரியாதையுடன் கோபுர வாசல் திறக்கப் போறாங்கன்னார். அப்ப தான் கவனிச்சேன். இறுதி கட்ட வேலை நடந்து கொண்டிருந்தது.

மாலையில் அம்மிணி இன்று சிவன் கோவிலில் இரவு நேர நீராஜனத்திற்கு கோவிலில் வீணை வாசிக்கனும்ன்னு சொல்ல, போய் சிவன் கோவிலில் அம்மிணி வாசிக்க எல்லா ஏற்பாடும் செய்துவிட்டு பெருமாள் கோவில் பக்கம் வந்தால் நிலவில் கோபுரம் பிரம்மாண்டமாக நிற்குது.

கோபுர தரிசனம் கோடிப்புண்ணியம்டாம்பாங்க அம்மா!

இன்று மதியம் சிவன் கோவில் உண்டகட்டி வெண்பொங்கல். வாவ் என்ன ஒரு நெய் மணக்க ஒரு டேஸ்ட்.  3 தொன்னை வாங்கி சாப்பிட்டதில் மதியம் லன்ச் ஆச்சு.

இரவில் பெருமாள் கோவில் புளியோதரை. வாவ். பிரமாதம். இரண்டு தொன்னை வாங்கி காரில் வச்சேன். புளியோதரையை சிலர் டப்பா டப்பாவாக அள்ளிக் கொடுப்பதைப் பார்த்தேன். டப்பா கேட்கத் தயக்கம். இரண்டாவது தொன்னை சங்கடத்தோடு கேட்டு வாங்கி வந்தேன். அவங்க மலர்ந்த முகத்தோடு நல்லெண்ணத்தில் கொடுத்தாங்க.

எதிர்த்த வீட்டுக்காரங்களும் கோவில் வந்திருந்தார்கள். இன்னிக்கு அவங்க அங்கு ஏகாந்தசேவைக்கு வீணை வாசிச்சாங்க. அவங்க வரும் போது புளியோதரை தீர்ந்திருக்கும்ன்னு தெரியும்.

திரும்பி இரவில் வரும் போது அவருக்கு போன் பண்ணி புளியோதரை கிடைச்சுதான்னு கேட்டேன். வருத்ததோடு ஒன்னுமே கிடைக்கலை, பெருமாள்க்கு வைக்கிற பால் கூட கிடைக்கலைன்னார். 

வீட்டிற்கு வந்தவுடன் ஒரு புளியோதரை தொன்னையை அவருக்கு கொடுக்க, பெருமாள் கோவில் பிரசாதம் கொடுத்து வச்சுருக்கனும்ன்னு வாங்கிட்டுப் போனார். அவர் வைஷ்ணவர், அவருக்கு அது விசேஷம். என்ன ஒரு சுவை அந்த புளியோதரை! வாவ். நானும் அம்மிணியும் ஒரு பருக்கையைக் கூட விடாம வழிச்சு தின்னோம்.

இன்றைய பொழுது அதுவாய்க் கழிந்தது.

வாழ்வினிது.
ओलै सिरिय।
¡La paz en mente está en la devoción!

மொழியும் வேலைவாய்ப்பும்

1987 - தமிழகத்துல pgdca முடிச்சுட்டு வெறும் அதன் சர்ட்டிபிகேட் மட்டும் ஜூலை 6ந்தேதி வாங்கிகிட்டு ஜூலை ஏழாந்தேதி நானும் அம்மா அப்பாவும் சேலத்திலிருந்து அஸ்ஸாம் கிளம்பிப் போனோம். 

போய் ஒரே மாசத்துல வேலை கிடைச்சது. கௌஹாத்தி யுனிவர்சிட்டி புரபசர் இன்டர்வ்யூ பண்ணி ஒரு லோக்கல் இன்ஸ்ட்டிட்யூட்டில் வேலை கிடைச்சது. அரசு சம்பளம் 2200 ரூபாய். அப்ப ஹிந்தியும் தெரியாது அஸ்ஸாமியும் தெரியாது. தினம் தடுமாறுகிற நிலமை. அடுத்த நான்கு ஐந்து மாதங்களில் ஹிந்தி தடுமாறி கத்துக்க ஆரம்பிச்சேன். 

ஒரு வருடம் கழித்து ஸ்டேட் செகரட்டேரியட்ல வேலை வந்து அப்ளை பண்ணினேன். உடனே இன்டர்வ்யூவிற்கு கூப்பிட்டாங்க. கிடைச்சால் 3500 சம்பளம், நிறைய பெனிஃபிட்ஸ். 

போன இடத்துல இன்ட்ர்வ்யூ பண்ணின கமிஷனர் கேட்ட முதல் கேள்வி உனக்கு அஸ்ஸாமி பேச எழுதத் தெரியுமா, அரசு வேலையில் இது முக்கியம்ன்னார். இப்ப கொஞ்சம் புரியுது, இரண்டு மூனு மாசம் டைம் கொடுங்க கத்துகிட்டுப் பேசறேன்னேன். நீங்கெல்லாம் வந்து எங்க வேலையை எடுத்துகிட்டா இங்க லோக்கல் ஆளுக்கு எப்படி கிடைக்கும். நீ போலாம்ன்னு அனுப்பிட்டார். ஒரு அரசு கமிஷனர் இப்படி சொல்லலாமான்னு நினைச்சு வேதனையோடு வெளியே வந்தேன். வேலைக்கு முழு தகுதியிருந்தும் மொழி தெரியாததால் கிடைக்கலை.

இது இன்று ஞாபகம் வரக் காரணம்.

இரண்டு நாளா வாட்சப்புல வர்ற எல்லா தமிழ் பேப்பர்களையும் புரட்டிப் பார்த்ததில் சிலவற்றில் தலைப்புச் செய்திகள் 2023க்குள் மத்திய அரசு எல்லா காலியிடங்களையும் நிரப்பப் போவதாகவும், கிட்டத்தட்ட பத்து லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படுமென்று பார்த்தேன்.

இந்தியாவில் கிட்டத்தட்ட 60-70 கோடி மக்கள் ஹிந்தி பேசத் தெரிந்தவங்க. மத்திய அரசு வேலையில் ஹிந்தி பிரதானமாக தெரியனும்ன்னு பார்த்தால் அந்த 10 லட்சம் காலியிடங்களில் கிட்டத்தட்ட more than two-third அல்லது அதற்கும் மேலே 80 சதவீத வேலை வாய்ப்பு ஹிந்தி பேச எழுதத் தெரிந்தவர்களுக்குப் போகலாம். 

கற்க வேண்டிய நேரத்தில் கற்காமல் என்னைப் போல் இழப்பவர்கள் எத்தனை பேரோ.

கிட்டத்தட்ட 70 கோடி மக்கள் ஹிந்தி பேசுபவர்கள். அவர்கள் வாழ்வாதாராம் உயர அவர்களுக்கான இஞ்சினியரிங், மருத்துவம், மற்றும் பல துறைகளின் பாடத்திட்டங்கள் ஆங்கிலத்திலிருந்து ஹிந்திக்கு மொழி பெயர்க்கப்படும் போது அவர்களுது கல்வி கற்கும் வாய்ப்பு உயருவது மட்டுமல்ல, வேலை வாய்ப்புகளும் பிரகாசமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதைத் தொடர்ந்தால் வட இந்திய மக்களின் வளர்ச்சியை இன்னும் பத்து பதினைந்து வருடங்களில் நாம் கண்கூடாகப் பார்ப்போம்.

வேற்றுமையின்றி கல்வி கற்பதில் மொழி கற்பதில் பலனுண்டு.
வாழ்வினிது.
ओलै सिरिय ।
¡Aprende con respecto a todo!

இன்சூரன்ஸ் புதுப்பிக்கனும்

இப்ப அமெரிக்காவில் open enrollment period. இந்த காலகட்டத்தில் நீங்கள் வேலை செய்யும் இடத்திலும் வெளியிலும் அடுத்த வருடத்திற்கான பலவகை இன்சூரன்ஸ் மற்றும் வரிவிலக்குடன் வரும் திட்டங்களில் சேருவதும் renewal க்குமான கால கட்டம்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் நாம் வாழும் போது நாம் திவாலாகாம இருக்க நம்மையும் நம் குடும்பத்தையும் காப்பாற்றப் போவது இந்த இன்சூரன்ஸ்களே. நமது மாத வருமானத்தில் இதற்கு ஒரு கணிசமான தொகை மாதாமாதம் செலவானாலும் இக்கட்டான நேரத்தில் நம்மைக் காப்பாற்றப் போவது இந்த இன்சூரன்ஸ்களே!

முக்கியமானவை மற்றும் சிலது இப்ப தேவைப்படவில்லையென்றாலும் மறக்காமல் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் எடுத்து வைக்க வேண்டியவை:
1. Health insurance
2. Critical health insurance 
3. Accident and death insurance 
4. Life insurance (individuals and children)
5. Cancer insurance 
6.  Retirement savings adjustments
7. healthcare and childcare flexible spending accounts 
8. Disability supplemental insurance 
9. Dental and vision insurance 
மற்றவைகள் ஞாபகம் வரும்போது குறிப்பிடுகிறேன்.

இதற்கான ப்ரீமியம் மற்றும் மாதக் கட்டணங்கள் நமது சம்பளத்தில் 25-30% ஆனால் கூட பரவாயில்லையென்று எடுக்க வேண்டும். இவையில்லாமல் இங்கு நம்மையோ நம் குடும்பத்தையோ நம் வீட்டையோ நம் சொத்துக்களையோ காப்பாற்றிக் கொள்ள முடியாது.

மறக்காமல் செய்ய வேண்டிய ஒன்று இவைகள். எனக்கு வயது இப்ப கம்மி, பலது தேவையில்லை என்று விட்டால் பிறகு கடினமாகி விடும். கட்டுகிற பணமெல்லாம் ஆபத்து காலத்தில் நமக்கு ஏதாவது ஒரு பெனிஃபிட் பணமாக க்ளைம் பணமாக திரும்பி வந்து விடும் வாய்ப்பு கூட உண்டு.

நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இந்த open enrollment periodஐ கவனத்துடன் கையாள்வதில்
வாழ்வினிது
ओलै सिरिय।
¡Úsalo de manera efectiva sin perder nada!

சிறந்த உணவை உண்ட பொழுதில்

துலா ராசியில் பிறந்ததாலோ என்னவோ எதையும் தராசில் வைத்து எடை பார்த்தே செயல்படுவது இயல்பாகிவிட்டது. பல தடவை எனது செயல்களை பேச்சுகளை தராசு எடையில் வைத்துப் பார்த்துள்ளேன்.

இணையத்தில் என் பிறந்த தேதி நேரத்தை ஒருவரிடம் கூற அவர் ஏப்ரல் 2013 லிருந்து மார்ச் 2020 வரை நீ பட்ட கஷ்டங்களெல்லாம் இப்போது பின்னாடி போயிடுச்சு, வரும் 2023 சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு உனது பிறப்பின் அர்த்தத்தைப் பார்ப்பாய் என்கிறார்.

உண்மையாகவே அந்த ஏழரை வருடங்கள் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளா. அவரால் எப்படி இவ்வளவு தெளிவாக குறிப்பிட முடிகிறதென ஒரு ஆச்சரியம். ஆனால் பல நேரங்களில் பெரும் நஷ்டத்திற்கிடையிலும் என்னால் கொஞ்சம் நிமிர முடிந்ததற்குக் காரணம் எதையும் தராசு நுனியில் வைத்துப் பார்க்கும் குணம், நல்லது கெட்டதுகளை வெளிப்படையாக சொல்வதில் அச்சமின்மை, எவ்வளவோ இழந்த பிறகும் இனி எந்த ஒரு இழப்பும் பெரிதாகத் தெரிவதில்லை. கடந்த இரண்டு வருடத்தில் வரவேண்டியவை தடுக்கப்பட்டு பெருந்தொகையை இழந்ததிலும் அதைப்பற்றிக் கவலையில்லா மனநிலை.

பத்து வருடம் முன் வரை எனது உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடும் ஒரு கெட்டப்பழக்கமுண்டு. ஆனால கடந்த காலகட்டங்களில் ஏற்பட்ட கஷ்டநஷ்டங்களால் உணரமுடிந்தது பல. உணவை விரும்பி உண்ணும் மனைவி. உடலைப் பற்றி துளிகூட கவலைப்படாமல் விதவிதமாக சமைத்து உண்ணும் குணம். உடலுக்குத் தேவையான அத்தனை nutrientsம் கிடைப்பதால், எந்த கஷ்டம் வந்தாலும் அதை ஜஸ்ட் லைக் தட் தட்டிவிட்டு விட்டு ஓடிடும் குணம் மனைவிக்கு. உடலை விட மனது அவ்வளவு ஸ்ட்ராங் அம்மிணிக்கு. உணவை குறை சொல்லாமல் இருக்கும் குணத்தை நான் இப்போது கற்றுக் கொண்டதால் எதுவும் கேட்காமலேயே தட்டு நிறைகிறது.

இங்கு என் மனைவி மூலம் தான் அநேக நட்புகள் மற்றும் நட்பு அழைப்புகள். இன்று மதியம் ஒருத்தர் வீட்டில் உணவு. செம விருந்து. அம்மிணி வராததால் அவருக்கும் கட்டுசாதம் கட்டிக்கொடுத்து விட்டார்கள்.

வல்லமை தாராயோன்னு தேடிய காலம் கடந்து விட்டதாக உணர்கிறேன்.

வருவது இயல்பாகத் தோன்றுகிறது.

ஒரு சிறந்த உணவை உண்ட பொழுதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Come y disfruta de tu comida!

Saturday, October 8, 2022

ஸ்பானிஷ் கற்கும் பொழுதில் - 17

ஒரு மொழியைக் கற்பதற்கு ஏதுவாகத் தயாரிக்கப்படும் புத்தகங்கள் ஏடுகள் மற்றம் பிற உபகரணங்கள் தயாரிக்கப்படும் போது ஒரு ஆழ்ந்த சிந்தனையோடு தயாரித்தால் பலவற்றை ஒரு சின்ன டப்பிக்குள் அடைத்தாலும் அது சரிவர சென்றடைந்து விடும்.

இந்தப் படம் நான் கற்கும் மொழியின் பாடபுத்தகத்தில் ஒரு பக்கம். இதைப் பிரதி எடுத்துப் போடக்கூடாது. இருப்பினும் இதன் தயாரிப்பின் சிறப்பைச் சொல்லவே இதைக் குறிப்பிட்டுள்ளேன்.

ஒரே பக்கத்தில் இதில் நாம் கற்பது:
1. நான்கு வித பருவநிலைகள்
2. மாதங்களின் பெயர்கள்
3. சீதோஷ்ண நிலைகள்
4. எண்ணிக்கை (நம்பர்)
5. சில வார்த்தைகளின் பயன்பாடு.

அனைத்தும் ஒரே டப்பியில் ஒரு பக்கத்தில். கற்பதும் எளிது.

எந்த ஒரு மொழியைக் கற்கும் போதும் கற்பிக்கும் போதும் இத்தகைய எளிமையான முறையைப் பின்பற்றினால் அனைவருக்கும் சுலபமாகப் புரியும் மற்றும் எளிதாக இருக்கும்.

கற்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Aprendizaje de idiomas!

கலைஞனைக் கண்டறிந்தோம் - 2

எங்க ஊர்ல இருக்கிற ஒரு வயதான தம்பதியர் இப்ப முதுமையில் வாடுகிறார்கள். மிகவும் வசதி படைத்தவர்கள், இங்கும் சரி ஊரிலும் சரி. அவர்களுக்கு இங்கு நல்ல மரியாதை உண்டு.

இது அவர்களுடைய வீணை. கடந்த பத்து பதினைந்து வருடமாக உபயோக்கிகாததால் இப்ப இது இப்படியிருக்கு. அவங்க இதை ஒரு வீணை கற்பிக்கும் டீச்சருக்கு இலவசமாக கொடுக்கப் போவதாக அவர்களது நண்பர்களிடம் சொல்ல, அவர்கள் அம்மிணியைக் கூப்பிட்டுச் சொல்ல, இப்ப இது வீடு வந்து சேர்ந்திருக்கு.

இதை முற்றிலும் புதுப்பிக்க ஒரு புது வீணையில் பாதிக்கும் மேல் செலவாகும். தேவையான பெட்டியில் போட்டு வைக்காத்தால் வேக்ஸ் கூடப் போயிருச்சு.

அம்மிணி அந்த உள்ளூர் கிடார் ரிப்பேர் கார்பெண்டரோடு சேர்ந்து புதுப்பிக்கப் போகும் அடுத்த ப்ராஜக்ட் இது. அந்த கார்பெண்டருக்கு இருக்கும் கிடார் பற்றிய அறிவு தான் மூலதனம்.

இதற்கான உபகரணங்களை இந்தியாவிலிருந்து வரவழைக்கிறார் அம்மிணி. வாக்ஸ்க்கு பதில் மரத்தில் அந்த செண்டர் பீஸை இங்கு செய்யனும். பெரிய பிராஜக்ட். செலவு நிறையவே இருக்கு. ஆனால் கண்டிப்பாக மாணவர்களுக்கு உதவும்.

போன வாரம் மாதிரி இன்றும் இன்னொரு பழைய வீணையையும் அந்த கிடார் ரிப்பேர் ஆளிடம் கொடுத்து சரி பண்ணியாச்சு. இந்த தடவை அவருக்கும் எவ்வளவு சார்ஜ் பண்ணனும் புரிய ஆரம்பித்து விட்டது. கேட்டதற்கு மேல் டிப்ஸ் சேர்த்து கொடுத்தாச்சு.

இது மாதிரி ஒரு வீணை ஏழெட்டு வருடம் முன் ஒரு உள்ளூர்க்காரர் ஒரு பழைய வீணையை மிகக் குறைந்த விலையில் கொடுக்க அதைப் புதுப்பித்து இந்த ஏழெட்டு வருடங்களில் பல மாணவர்கள் அதில் கற்றுக் கொண்டுள்ளனர். அது ஒரு ஏகாந்த வீணை. அதன் குடத்தில் இப்ப விரிசல்கள் வர அதை இந்த கிடார் ரிப்பேர் ஆள் அந்த விரிசல்களை சரி செய்து கொடுத்துள்ளார்.

ஒரு நல்ல வீணை ரிப்பேர் ஆள் எங்கள் ஊரில் உருவாகுகிறார்.

கந்தையேயானாலும் கசக்கிக் கட்டும்பாங்க. இது பொக்கிஷங்கள்.

வாழ்வினிது
ओलै सिरिय।
¡Dar energía a los instrumentos!

சாம்பார் ஆகினோம்

பக்கத்து ஊரிலுள்ள பஞ்சாபி நண்பனின் பெண் வந்து எங்களைப் பார்த்து விட்டுப் போனது. 

நம்ம பையன் அம்மிணிகிட்ட தனக்கு வேணும்கிற சாம்பார் உருளைக்கிழங்கு சமைச்சு வைக்கச் சொல்ல, பஞ்சாபி பெண்ணுக்கு தோசை சட்னி சாம்பார் வச்சு ஏமாத்திரலாம்ன்னு அம்மிணி ட்ரை பண்ணாங்க, வேலைக்காவல.

நல்ல கொலைப்பசியில வந்த அந்த பொண்ணு சப்பாத்தியே சாப்பிட்டுக்கிறேன்னு சொல்ல, இங்ஙன வீட்டுல முழிக்கிற முழி ஆஹா!

வாழ்க்கையில ஒரு வீர பஞ்சாபி மங்கைக்கு வந்த சோதனை, சப்பாத்திக்கு சாம்பாரையும் உருளைக்கிழங்கையும் தொட்டுகிட்டு சாப்பிட முடியாம சாப்பிட்டுவிட்டுப் போயிடுச்சு. பாவம் குழந்தை.

அப்புறம் ஏன் சார் அவங்க நம்மளை சாம்பார்ன்னு சொல்ல மாட்டாங்க.

வாழ்வினிது
ओलै सिरिय !
¡Come cualquier cosa cuando tengas hambre!

ஸ்பானிஷ் கற்கும் பொழுதில் -16

எல்லோரோடும் சேர்ந்து படிக்கும் போது அது ஒரு முதியோர் கல்வி போல இருந்தாலும், அங்கு கூடப்படிக்கிறவங்களோட அவங்க சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வது என்பது ஒரு சிறப்பு அம்சம்.

நேற்றும் (10/6/2022) ஆபீஸ் வேலை முடிந்து மாலை ஆறு மணிக்கு புரபசருக்கு உதவ சர்ச்சுக்குப் போனேன். போனவுடனேயே அங்கு படிக்கிற ஒரு வெனிசுலா பெண் என் பெயரைச் சொல்லி, இன்னிக்கு வகுப்பில் பார்ட்டி நடக்கப் போவுது, டான்ஸ் ஆடப்போறோம்ன்னு சொல்ல வந்தாங்க, ஆங்கிலம் தெரியாததால் அவருக்கு சொல்ல வரலை. பாதி ஸ்பானிஷ் பாதி ஆங்கிலம் கலந்து சொன்னாங்க. ஆனாலும் அவங்க விடலை, இதை நான் எப்படி ஆங்கிலத்தில் சொல்வது என சொல்லிக் கொடு, ஒவ்வொரு வார்த்தைக்கும் அதன் உச்சரிப்பை ஒன்னுக்கு இரண்டு தடவை கேட்டு தெரிஞ்சு கிட்டாங்க. 

அவங்க கூட வரும் அவங்களோட 4 வயது குட்டிப் பெண்ணுக்கும் ஆங்கிலம் தெரியாது, ஆனால் கிளாஸில் இன்று பார்ட்டி இருக்குன்னு அந்த சின்னதுக்கு அவ்வளவு சந்தோஷம்.

அந்தக் குட்டிப்பெண் காலையில் ஆங்கிலம் அதே புரபசரிடம் அந்த சர்ச்சில் கற்கிறது. அது கூட நிறைய மெக்ஸிகன் குழந்தைகளும் சேர்ந்து படிப்பதால், அந்தக் குழந்தை அவர்களோடு பழகி நிறைய மெக்ஸிகன் ஸ்பானிஷ் dialects பேசுகிறது. இது அவரோட தாய்க்குப் பிடிக்கவில்லை. 

இந்த வகுப்பில் பாதி பேர் க்யூபா பாதி வெனிசுவேலா. ஆகவே அவர்கள் எல்லோருடமும் இவள் மெக்ஸிகன் கலந்து பேசுவது பிடிக்காததை பகிரங்கமாக சொல்கிறார்கள். 

ஏற்றதாழ்வு பார்க்காத மக்களும் இல்லை மொழிகளும் இல்லை கலாசாரங்களும் இல்லை, மாறிய சமுதாயங்களுமில்லை. எல்லாவற்றையும் பார்த்து அதன் போக்கிலேயே எல்லோரும் போகிறோம்.

ஒரு ஹோட்டலில் வேலை செய்யும் க்யூபன் பெண்மணி, தன்னோடு தன் மகனும் ஆங்கிலம் கற்க, சேர்ந்து வகுப்புக்கு வருகிறார்கள். அந்தப் பையனுக்கு இந்த வாரம் 22 வயது ஆகப்போகிறது. அந்தப் பையனோட பர்த்டே பார்ட்டியைத் தான் சர்ப்ரைஸாகக் கொடுக்க இன்று வகுப்பில் அத்தனை களேபரம்.

பத்து நிமிடத்தில் பர்த்டே பார்ட்டிக்கான அலங்காரம் முடித்து விட்டார்கள், கலர் லைட் பலூன் கேக் சாலட் என எல்லாம் ரெடி.

இரண்டு மணி நேர வகுப்பு முடிந்தவுடன் பார்ட்டி ஆரம்பம். ஆட்டம் பாட்டமென்ன. கலக்கறாங்க. என் கூட அவர்களுக்கு உதவி செய்யும் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி செம டான்ஸ். அவங்க ஆடறதை வீடியோ எடுக்கப் பல தடவை அநுமதி கேட்டும் முடியாதுன்னுட்டாங்க. இல்லாட்டி அந்தப் பார்ட்டியை அழகாகப் படம் பிடிச்சுருப்பேன். 

அந்த க்யூபன் பெண்மணி இந்த வாரம் தான் தன் வாழ்வில் முதல் தடவையாக கார் ஓட்டுவதும், இங்கு ரோட்டில் ஓட்டும் போது ஏற்படும் பயம், ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி, மகிழ்ச்சி எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாகக் கொட்டி புரபசரிடம் சொல்லி அழ, மேலும் தன் பையனுக்கு இங்கு வகுப்பில் ஒரு சர்ப்பரைஸ் பார்ட்டி நடப்பது பார்த்து அவர்கள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.

Caesar salad க்குத் தேவையானவற்றைக் கொண்டு வந்து ஐந்து நிமிடத்தில் டின்னர் ரெடி. அதில் bacon கலந்து விட்டதால் நான் சாப்பிடவில்லைன்னு அவர்களுக்கு வருத்தம்.

செமையாக கேக் வெட்டி ஆட்டம் பாட்டமுடன் பர்த்டே பார்ட்டி. ஆனால் அதற்கு முன் எந்த தொய்வுமில்லாமல் இரண்டு மணிநேர வகுப்பு.

வகுப்பில் அவர்களுக்கு பலவிதங்களில் உதவமுடிவதை எண்ணி எனக்குள் ஒரு அல்ப சந்தோஷம்.

அவர்களது ஆங்கில கிளாஸ் நோட்ஸை எடுத்து நான் அதை ஸ்பானிஷில் எழுதும் போது அவர்களும் நிறைய உதவுவார்கள். புது ஸ்பானிஷ் வார்த்தைகள் தினமும் அறிந்து கொள்ளலாம்.

ஆனால் மிக மிக வேகமாகப் பேசுகிறார்கள். எழுதிப் படிப்பதற்கும் அவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்வதற்கும் இடையே ஒரு பெரிய கோவர்த்தனகிரி மலை நிற்பது போல் தோன்றுகிறது.

கற்கும் போது கலைநயம் நட்புணர்வோடு கற்பது சிறந்தது.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Aprende con diversión!