Saturday, October 26, 2019

பெருமாள் ஏகாந்தசேவை

மாதத்தின் கடைசி சனிக்கிழமை உள்ளூர் பெருமாள் கோவிலில் ஏகாந்த சேவைக்கு இரவு அரை மணி நேரம் பெருமாள் முன் வீணை வாசிப்பது அம்மிணிக்கு வழக்கம்.

எப்போதும் எலக்ட்ரிக் அட்டாச்மெண்ட்டோட வர்ற வீணையை எடுத்துப்போகாதே, நம்ம தஞ்சை வீணையை எடுத்துப்போம்பேன். நம் பேச்சு எடுபடாது. சொன்னா கேட்க மாட்டாங்க. வீணையில கிடார் சத்தம் வருதும்பேன். அப்புறம் கடந்த சில மாதங்களாக தஞ்சை வீணையை எடுத்துப் போக ஆரம்பிச்சாங்க!

இன்னிக்கு அம்மிணியோட ஏகாந்தசேவை நேரம். இன்னிக்கு எனக்கு கிச்சன்ல நிறைய வேலை, உன் பேச்சைக் கேட்கப் போவதில்லை, கை வலிக்குது, அதனால அந்த சின்ன வீணையைத் தான் எடுத்துப் போவேன்னு அடம்.

பெருமாள் முன்ன வீணை மற்றும் ஸ்பீக்கர் இறக்கி வச்சுட்டு சிவன் கோவில் போய்ட்டு வந்தா, அம்மணி வீணை நாதம் மெலிதாக எந்த எலக்ட்ரிக் சாதனமின்றி வருது. அம்மணிக்கு முகமே மாறிப்போச்சு. வீணை பேட்டரி செத்துப் போச்சு. ஸ்பீக்கர் வேலை செய்யலை. கோவில் மைக் வைச்சா அதுவும் வேலை செய்யல. அம்மிணிக்கு என்னைப் பார்த்து கோவம், முகம் சோகமா மாறியிருந்து.

எந்த எக்ஸ்டர்னல் equipment எதுவும் தேவையில்லை அப்படியே வாசின்னேன். கடவுளே பார்த்து உனக்கு தீபாவளிக்கு வாசிக்க வாய்ப்பு கொடுத்த மாதிரி இருக்கு, ஒழுங்கா அப்படியே வாசின்னு பின்னாடி போயிட்டேன். முகத்துல ஈயாடல.

அதற்கப்புறம் அன்னமாச்சார்யா மற்றும் பிறர் பாடலை வாசிச்சு முடிச்சவுடனே, வந்த பக்தர்கள் ஒவ்வொருவரும் வந்து ரொம்ப ரொம்ப இனிமையா இருந்ததுன்னு சொன்னவுடனே தான் அம்மிணி முகத்துல மலர்ச்சியே வந்தது.

இதே மாதிரி போன தடவை ராமநவமி அன்னிக்கு சான்ஸ் வந்தப்ப கூட இது மாதிரி தான் ஏதோ குண்டக்க மண்டக்க பேசிகிட்டிருந்தாப்புல. நல்லா திட்டி இழுத்து கிட்டுப் போனேன்.

ஏகாந்தசேவை முடிஞ்சு திரும்பும் போது என் அம்மாக்கு போன்ல நான் சொல்லிகிட்டு இருந்தேன். அம்மா பாரு இவளுக்கு ராமநவமி, தீபாவளி அப்பவெல்லாம் ஏகாந்தசேவைக்கு வாசிக்க சான்ஸ் கிடைக்குது பாரு, கொடுத்து வச்சவன்னேன். கேட்டுகிட்டிருந்த அம்மிணி உடனே, நான் என்னிக்கு நல்லா வாசிக்க முடியலையோ அன்னிக்கு நீ வந்து எல்லாம் தலைகீழா சொல்லிகிட்டு திரியறன்னா! 

வேறென்ன சொல்ல! நான் சொல்ற பேச்சையும் கேட்டு நல்லவீணையையும் எடுத்து வரமாட்ட, நீ வாசிக்கிற நாளோட சிறப்பும் உனக்கு தெரியமாட்டேங்குது! சங்கீத ஞானமேயில்லாத எனக்கு புரியறது உனக்கு புரியமாட்டேங்குதுன்னேன்!

பேசி பிரயோசனமில்லைன்னுட்டாப்புல.

வாழ்க்கையில தானா கிடைக்கிற நல்வாய்ப்புகளை அனுபவிக்கவும் ஒரு பக்குவம் வரனும்.


பெருமாள் மகிமை!

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

நாளைய திருநாள் தீப ஒளித் திருநாள்
சுற்றத்தார் கூடிச் சிறப்பாக்கும் நாள்!
புத்தாடைப்புணிந்து புது மங்கலம் பிறக்க
பெண்டிர் சிறார் குதுகளிக்கும் நாள்!

பட்டாசு வெடித்து பகல் வெளுக்க வைக்கும் நேரம்
காசு கரியானாலும் சிறார் மனசு கரையாது
ஊதுபுகை அலை மோதினாலும்
காற்றுவெளியில் புகையிலையாகாது!

பண்டிகைகள் வந்தால் 
கடைகளில் கூட்டம் வழியிது
கூட்டமிருந்தால் நாடு வளமாகுது
உறவுகள் ஒன்று கூடுது
உள்ளங்கள் மகிழுது!

பண்டிகைகளை நேசிக்கும் நாட்கள்
நாட்டை வளமாக்கும் நாட்கள்
மாசுகுறைவாக வரும் வருங்கால பட்டாசுகள்
வானத்தை மாசற்றதாக்கும் நாட்கள்!

அதுவரை எது எதுவாயினும் 
உற்றார் உறவினர் கூடி
நாளைய நாளை பொன்னாளாக்குக!


இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

Thursday, October 24, 2019

தொலைவிற்கோர் தடை கல் நம் அருகில்

முன்னெடுத்துச் செல்ல முனைவதற்குள்
பின்னிழுத்துக்கொள்ள ஓர் தடை மந்திரம்!
எங்கோ அது தொலைவிலில்லை!
அருகில் அசரீரியாய் ஒலிக்கும் எதிரொலி!

தலைநிமிர்ந்து நடக்க எத்தனிக்கும் முன்
தலையிலிடிக்குமாறு வரும் கணைகள்!
எங்கோ அது தொலைவிலில்லை!
அருகிலிருந்து உணர்த்தும் இயலாமை!

வான்வெளியில் மலர்ந்து பயணிக்க எத்துகையில்
காற்றைக் கிழித்து வரும் அம்புகள்!
எங்கோ அது தொலைவிலில்லை!
உன் கை பின்னால் சிக்கிய முட்கள் அவை!

மலர்களைத் தொடுத்து அணிய முற்படுமுன்
மலர் தொடுக்க உதவும் நாறுகளை
இழுத்துப் பிடிக்கத் தெரிந்த உதடுகளுக்கே!
எதுவும் அஃது தொலைவிலில்லை!


தொலைவிற்கோர் தடை கல் நம் அருகில்!