Friday, July 15, 2022

எரி பொருள்

இப்பவெல்லாம் கெரசின்/மண்ணெண்ணை கிடைக்குதா அங்க? இப்ப நான் பார்த்ததெல்லாம் அங்கு பெரும்பாலும் கேஸ் ஸ்டவ் மற்றும் எலக்டிரிக் தான். தெரிந்து கொள்ள.

என் சின்ன வயசுல, ரேஷன் கடையில க்யூவில நின்னு அவங்க கொடுக்கிற வாரம் இரண்டு லிட்டர் வச்சு தான் வீட்டுல சமையல். இல்லாட்டி குமுட்டி தான். இதெல்லாம் அப்ப காஸ்ட்லியான ஐட்டங்கள். கிடைப்பதும் கஷ்டம். 

ஐந்து லிட்டர் கெரசின் ரேஷன்ல கிடைச்சுதுன்னா அம்மா முகத்துல அவ்வளவு சந்தோஷம் பார்ப்போம். அந்த வாரம் ஏகப்பட்ட பட்சணங்கள் பண்ணுவாங்க.

பெரும்பாலும் குளிக்க சுடு தண்ணிக்கு விறகடுப்பு தான். அதுல அம்மா சமைக்க விரும்ப மாட்டாங்க. கஷ்டம் கூட.

அஸ்ஸாம் போனப்ப தான் தனியாக சமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு, முதல் முதலாக ஒரு திரி ஸ்டவ்வும், பம்ப் பண்ற ஸ்ட்வ்வும் வாங்கினேன். 

ஆனால் அதற்கு மண்ணெண்ணெய் கிடைக்காது. அஸ்ஸாமில் வெளி மாநிலத்திலிருந்து வந்தவருக்கு, வெளி மாநிலத்தவருக்கு ரேஷன் கார்ட் கிடையாது. தர மாட்டார்கள். அதுவில்லாமல் கெரசின் வாங்க முடியாது. ரேஷன் கடை தவிர மற்ற கடைகளில் கெரசின் கிடைப்பதும் அரிது. 

வேற வழியில்லாமல் அந்த ரேஷன் கடைக்காரர் கிட்டயே தெரிஞ்ச அரைகுறை இந்தியில் பேசி அவர் கொடுக்கிற விலைக்கு வாங்கி வந்து உபயோகித்திருக்கிறேன்.

கேஸ் அடுப்பெல்லாம் அப்ப தான் அறிமுகமாகி வந்த நேரம். முதலில் கனெக்‌ஷன் கிடைக்காது. அதற்கும் ரேஷன் கார்ட் கேட்பார்கள். விலையும் ரொம்ப ஜாஸ்தி. வாங்கிய சம்பளத்துக்கு வேலைக்காவது. மேலும் ஒரு ஆளுக்கு ஒரு சிலிண்டர் தேவையற்ற ஒன்று. குளிர்காலத்தில் அஸ்ஸாமில் குளிர் பின்னிரும். அப்ப வெந்நீர் சுடுதண்ணி இல்லாம ஒன்னும் வேலைக்காவாது. அதற்குத் தான் பெரும்பாலும் அதிகம் எரிபொருள் செலவாகும்.

மும்பை வந்த பிறகு கேஸ் அடுப்பு சுலபமாக கிடைத்து. இரண்டாவது சிலிண்டர் கிடைக்க அப்ப பெரிய கஷ்டம். ஒரு சிலிண்டர் தீர்ந்து போனால் வாங்க அடுத்த 45 நாட்கள் வைட் பண்ணனும். இன்னொரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு சமூகத்தில் ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் கிடைச்ச மாதிரி தான். அசாமில் ஒரு கேஸ் ஸ்டவ் வைத்திருந்தாலே அதுக்கு ஒரு தனி கௌரவம் அப்ப உண்டு.

இங்க வந்த நாள் முதல் எலக்ட்ரிக் ஸ்டவ் தான். வீடு, அபார்ட்மெண்ட்டோடு சேர்ந்தே வந்துரும். அணில் கடிக்காது. அதிகம் பிரச்சனை சந்தித்ததில்லை. மேலும் இங்கு ஒன்னு கிடைக்கலைன்னா அடுத்ததை நோக்கிப் போய்கிட்டே இருப்பாங்க மக்கள். அவரவர் வாழ்க்கை அவரவரது தேவைக்கேற்ப அமைத்துக் கொள்வர்.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Combustible para cocinar!

No comments: