Sunday, February 26, 2012

புரியாமப் புரியுது

அம்மா என்னை காலையில ஆட்டி எழுப்பும் போதே என்ர அப்பன் கருப்பட்டி காபியோட வெளியே நிப்பாரு. கண்ணத் துறக்கலாமா வேணாம்னு யோசிச்சு அசையும் போதே அம்மாவ்வோட கேப்பக் களியோட வாசம் இல்லாட்டி ராகிக் கஞ்சி வாசம் இழுத்து அணைக்கும்.

அம்மா இன்னையாவது இட்லி வைக்கலையான்னு லேசா குரல் விடுவேன். அடி சக்கை ன்னு குரலோ அல்லது பெரிய துரைமாரு புள்ளைன்னு நெனப்பு சத்தம் கொஞ்சம் பக்கத்துல வர மாதிரி இருந்துச்சுன்னா புடுறா சொக்கா ஓட்டம்னு இழுத்தெரிஞ்சு ஒரு ஓட்டம் புழனி பக்கம் ஓடிர வேண்டியது தான்.

கழனி மேட்டுல வேலை செய்ய இட்லி தோசை உதவாதுட போக்கத்தப் பயலேன்னு திட்டிக்கிட்டே அம்மா வந்து பல்ல விளக்குறாங்கும். அது கையில வேப்பன் குச்சி ஒன்னு ரெடியா நிக்கும். அத வாங்கி கையில வைச்சு கிட்டே, எப்பிடிரா நம்மஅப்பன் வேணும்னா மட்டும் அம்மா இட்லி வடை சுடுதுன்னு யோசிக்கையில அந்தக் குச்சி முதுக சொரியவாக் கொடுத்தேன் கண்ணுங்கும்.

அப்பன் என்னிக்குமே தனக்கு எதுவும் வேணும்ன்னு நேரச் சொல்லாது. களி திங்கும் போது அந்த அய்யண்ணன் கடை வழியாப் போனேன், இட்லி வடை வீச்சம் நம்ம தோட்டத்துக்கே வந்துருச்சுப் புள்ளங்கும். அம்மா ஒரு பார்வையோட உள்ளாரப் போய் சிரிச்சிக்கும். அடுத்த நாள் காலயில ராசக்காவை வைச்சு வடை சுட வைச்சிரும். அள்ளி வைச்சப் புருசனுக்கு ஆட்டவைச்சுப் படைக்குது பாரு உன்ர ஆத்தான்னு ராசக்கா சுட்டுக் கொடுக்கும்.

அப்பனும் ராசக்கா மாமனும் தோட்டத்துல இதச் சொல்லி சிரிச்சுக்கும். அப்பன் மாமன்கிட்ட எப்பவும் சொல்லுவாரு. எலேய் விளையாட்டுக்கு கூட பொஞ்சாதி மேல கையைத் தூக்கிராதரே, பொஞ்சாதியப் பகைச்சுகிட்டா நட்டம் உனக்குத்தாம்ல என்கும். மாமன் கேட்காத மாதிரி அங்கிட்டு எதோ சத்தம் வந்தம் மாதிரி நடிக்கும்.

ராசக்கா எந்த வேலையை செய்தாலும் ஒரு காரியத்தோட தெரிஞ்சுவைச்சு செய்யும். கவனமா செய்யும். ஆனால் மாமன் வந்தாலே அங்கிட்டு எல்லாமே மாறிரும். மாமன் அதக் கொண்டா இத செய்யுன்னு மிரட்டுவதும் உதைப்பதுமா இருக்கும். அக்கா ஒரு பிடிப்பில்லாமலே செய்யும். நான் மாமன் இல்லாத சமையமாத் தான் ராசக்கா வூட்டுப் பக்கம் தலைஎடுப்பேன், எங்க நம்மையும் சாத்திருமோன்னு. அக்கா புள்ள இல்லாம படர கஷ்டமும் சேர்த்துப் படும். எலேய்! உன்ர அப்பனாத்தவைப் பாருலே. ஒண்ணா இருக்க மாதிரியும் இல்லாம சேர்ந்தா மாதிரியும் இல்லாம பாசாங்காப் பழகிற மாதிரி நடிச்சு ஒட்டிகுதுங்க. என்ர நிலைமையைப் பாருலேங்கும்.

ராசக்கா சொல்றது புரியுதா இல்லையான்னு யோசிக்கத் தெரியாம, அக்கா தெரிஞ்சுவைச்சு தான் சொல்லும்ன்னு வந்துருவேன்.

Thursday, February 23, 2012

வலையூர் பட்டி

வலையூர் பட்டி

பொதுவா கிராமம்னா ஆத்துக்குப் பக்கத்தில இருக்கணும் இல்ல சாலை வசதியோட கொஞ்சமான தண்ணி அள்ளிகிட்டு வர மாதிரியோ இருக்கணும். இரண்டும் இல்லாம ரோடு வந்து சேரவே இரண்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் ஒரு குக்கிராமம் வலையூர் பட்டி.

வலையூர் பட்டியில உனக்கு பொண்ணு எடுக்கப் போறோம்ல என்று குப்பண்ணனோட அப்பத்தா சொல்லிட்டுப் போச்சு. அது சொன்னாலும் சொல்லிச்சு வலையூர் பட்டி எப்பிடி இருக்கும்ன்னு தான் குப்பண்ணனுக்கு நினைப்பே தவிர கட்டப் போறவளப் பத்தி நினைக்கத் தெரியல. அது எப்பிடிஇருந்தா என்ன, அந்த கிராமத்தை பார்த்திடனிம்டின்னு பஸ் ஏறிடிச்சு.

பஸ் நின்ன இடத்துல வழி கேட்கக் கூட சுத்து வட்டம் யாரும் இல்லை. எதோ நடுக்காட்டுல இறக்கி விட்டாப்பல இருக்கேன்னு யோசிக்கும் போது சுளிர்ந்னு முதுகுல ஒரு கல் விழுந்தது. குப்பண்ணன் வலியில ஒரு திட்டு திட்டி சுதாரிக்கும் போது அடுத்து ஒரு செங்கல் வந்து விழுந்தது.

அரண்டு போன குப்பண்ணன் யாருலேன்னு கத்திக்கிட்டே ஒரு ஓட்டம், இருந்த ஒத்தையடிப் பாதையில ஓடிச்சு ஓடிச்சு கண்ணுல ஒரு குடிசை வந்த பிறகு தான் நிப்பாட்டிச்சு. மூச்சிறைப்பு வேகமா நெஞ்சு அடிக்கையில நின்னு தலை தூக்கினா குடிசையிலேர்ந்து செவப்பாட்டி தலையை நீட்ட, குப்பண்ணன் பயந்து போய் ஒ ஊன்னு ஒரு கத்து தன்னையறியாம கத்திருச்சு. செவப்பாட்டி மறுபடியும் யாருன்னு கேட்டப் பொறவு தான் குப்பண்ணனுக்கு உசிரு வந்தது.

ஊரு பாக்க வந்தேன் பாட்டி ன்னு சொல்லி முடிக்கையில செவப்பாட்டி ஒரு கத்து கத்தி ஊரையே கூப்பிட்டிருச்சு. அரண்டு போன குப்பண்ணன் முழிக்கையில ஊர்ப் பஞ்சாயத்து முன்ன நிப்பாட்டிடாங்க. வேறு வழியில்லாம தான் வந்த காரணத்தை சொல்ல வேண்டியாதாப் போச்சு.

பஞ்சாயத்து சனம் அத்தனைக்கும் சிரிப்புத் தாளால. எலேய் நம்ம அல்லியம்மாவ நோட்டம் வுட வந்திருக்காகன்னு ஒரு சிறுக்கிப் பையன் கத்த, குப்பண்ணன் அங்கிட்டுர்ந்து மறுபடியும் ஓடிரலாமான்னு யோசிச்சிட்டிருக்கையில, தோள் மேல ஒரு கனமான கை விழுந்து, நம்ம மாப்பிள்ளை அப்பத்தாவோடையே வந்திருக்கலாமேன்னு சொல்லி இழுக்கையில, மாட்டிநோமடா சாமின்னு தலையத் தூக்கினா பக்கத்தில செல்வம் மாமன் நிக்கறாரு.

மாமா! நீங்க எப்பிடி இங்கன்னு இழுக்கையில, மாப்பிள்ளை வருதுன்னு சொல்லிருந்தா வண்டி கட்டி வந்திருப்போம்ல என்று சொல்ல, தனக்கு வந்த அழுகாச்சிக்கிடையில சிரிப்பு தான் வந்துது. இந்த ஒத்தையடிப் பாதையில என்ன வண்டி கட்டப் போற மாமான்னு திருப்பி கேட்கவும், பாரு மாப்பிள்ளை இந்த தடத்தில நீயே ரோடுபோடறயா இல்லையான்னு செல்வம் மாமன் சொல்லிகிட்டே நடந்தது.

இப்பிடி ஒரு சந்திப்பு வலையூர் பட்டியோட நடக்கும்ன்னு குப்பண்ணன் நினைச்சிப் பார்க்கலை!

Monday, February 20, 2012

ராசக்கா

ராசக்கா

ராசக்கா சந்தைக்கு புறப்பட்டுச்சுன்னா கூடவே ஓடியாந்திருவேன். அக்கா திட்ட திட்ட அது முன்ன நடுந்துகிட்டே இருப்பேன். எலேய் பொறுப்பத்தப் பயலே! உன்ற அப்பனாத்தாட்ட சொல்லி புட்டு வாரான்னு கத்தும். நான் கேட்காத மாதிரியே முன்ன நடப்பேன். அதுவே என்ர அப்பன் ஆத்தாக்கு குரல் கொடுக்கும் ஒரு நமிட்டு சிரிப்போட.

ராசக்கா தலையில ஒரு கூடை தக்காளியும் இடுப்பில ஒரு கூடை வெண்டை கத்திரி அள்ளிகிட்டு இரண்டு கிலோமீட்டர் டவுனு பஸ்சுக்கு நடக்கும். எலேய்! உன்ற மாமன் வந்தா ஒத்தாசையாய் இருந்திருக்கும், எடுப்பெடுத்தவனே உன்னை எப்பிடி டே நான் கவனிப்பது. வ்யாவாரத்தை யாருலே பார்ப்பதுன்னு திட்டும்.

டவுன் பஸ் கண்டக்டர் இடம் கூடை வைக்கிறதுக்கு திட்டு வாங்கும், சின்னப் புள்ளைக்கு என்ன டிக்கெட்டு வேண்டி கிடக்குன்னு சொல்லி இன்னும் வெறுப்பேத்தும். என்னால ஒரு உதவியும் இல்லைன்னாலும் அக்காக்கு ஒரு தெரிஞ்சப் பய உடனிருப்பதை எதோ ஒரு பாதுகாப்புன்னு நினைக்கும்.

ராசக்கா ஒரு ஆம்பிளை கணக்கா விறு விறுன்னு பஸ்சு மேல ஏறி கூடையை ஏத்திரும். இறக்கும் போது யாராவது ஆம்பிளை கிடைக்குமான்னு பார்க்கும். லேட் ஆச்சுன்னா பஸ்காரன் கிட்ட திட்டு வாங்கும். சந்தை வாசலில தரகு மேஸ்திரி ஆளுக இருக்கும். ஆனா உதவாது. அக்கா அவிங்க குறைஞ்ச விலைக்கு கேட்கிராக எங்கும். மேஸ்திரி ஆளு அவிங்க கூடையை முதல்ல இறக்கிய பிறகுதான் அக்காவோட கூடையை இறக்க விடும். ஓரிரு தடவை அக்காவே எடுத்து வந்துச்சு.

ஆனால், தரகு மேஸ்திரி ஆளு பேச்சும் பார்வையும் சரியில்லாததால, பக்கத்து கடை சொர்ணக்கா புருஷனை நாடும். சொர்ணக்கா மிரட்டி சொன்னதால சொர்ணக்கா புருஷன் உடந்தையா இருக்கும். தரக முறைச்சிக்கிட்டா எப்பிடி புள்ள வியாவாரம் நடக்கும்ங்கும். ஒவ்வொரு தடவையும் என்னாத்துக்குப் பொல்லாப்புன்னு தரகுக்கு வணக்கம் சொல்லிப்புட்டு போயிரும்.

ராசக்கா ஒரு தடவை நல்ல செழுப்பா கூடை நிறைய தக்காளி எடுத்து வந்துச்சு. தரகு பஸ் கிட்டயே நிப்பாட்டி இருபது ரூபாய்க்கு கூடையை கொடுத்து விட்டுப் போயிருன்னு மிரட்டுச்சு.அக்கா நல்லா சண்டை போட்டுச்சு. முடியாதுன்னு விறுவிறுன்னு வந்து சொர்ணக்கா கடை பக்கத்திலேயே கடை விரிச்சிகிச்சு.

சொர்ணக்கா தரகப் பகைச்சிக்காத புள்ளன்னு சொல்லிச்சு. இருபது ரூபாய்க்கு கொடுக்க இது என்ன சொத்த தக்காளியா ன்னு சொர்ணக்கவோட கூடையை ஒரு பார்வை பார்த்துச்சு. சொர்ணக்கா ஒன்னும் சொல்லாம தன வ்யாவாரத்தப் பார்க்க ஆரம்பிச்சிருச்சு.

ராசக்கா கடையை அடுக்கிற விதமே அழகாயிருக்கும். லாவகமா தக்காளி அடுக்கும். கூறு கூறா வெண்டை கத்திரி தனியா அடுக்கி வைக்கும். சில ஆளுங்க அக்காவை லுக் விட்டுகிட்டே காயெல்லாம் வாங்கிட்டுப் போயிருவானுக. அப்பிடியும் கடைசியில கொஞ்சம் தங்கிரும்.

மாலை மங்குற நேரத்தில காய் தக்காளி நிறைய தங்கிருச்சுன்னா அக்கா முகம் கறுப்பிலும் கொஞ்சம் மங்கிப் போயிரும். திருப்பி பஸ் கட்டணம் கொடுக்கணும். காலி கூடைக்கு காசு கிடையாது. ஆனா அக்காக்கு காயை மலிசா கொடுக்க மனசு வராது. தரகு கேலி பேசும். இல்லாட்டி இரண்டு ரூபாய்க்கு தா ங்கும்.

ஒரு தடவை பேசாம கொடுத்துட்டு வாயேன்க்கான்னேன். எலேய்! பொறுப்பத்தவனே! வீட்டுல ஒரு சொட்டு வைக்காம அள்ளிட்டு வந்திருக்கேன். நானும் மாமனும் சாப்பிடலாம் அல்லது உங்கப்பன் ஆத்தாக்கு கொடுக்கலாம்லே! மீதியைப் பக்கத்து ஊரு பெரிய சனம் வீட்டுக்கே போய் வித்துட்டு வரலாம்லே ன்னுச்சு.

திரும்பி வரும் போது ராசக்காவைப் பார்க்க பெருமையா இருந்துச்சு. மெதுவா கையப் பிடிச்சு நடந்தேன். அக்காவோட சுரசுரப்பான கை கூட சுகமா இருந்துச்சு. அக்கா அழகா ஒரு புன்முறுவலோட கூட வந்துது.

Sunday, February 19, 2012

மல்லி மேடு சந்தை

மல்லி மேடு சந்தை

குப்பண்ணன் மல்லி மேடு வரும் போதெல்லாம் முண்டாசு கொஞ்சம் பெருசா இறுக்கக் கட்டி வருவாரு! சுத்தியுள்ள சனம் தன்னை உத்துப் பாத்திறக்கூடாதுன்னு நெனப்பு. சந்தை சனம் இதை அறியாததல்ல. இருப்பினும் காமிச்சுக்காது.

குப்பண்ணன் அல்லி அம்மாவோட எல்லை மாரியம்மன் கோவில் வாசல்ல வந்து உட்கார்ந்து ஐந்து வருஷம் ஆயிட்டுது. மாடசாமி அண்ணன் இவிங்களப் பார்த்து விட்டு தன் தோட்டத்தில வந்து வைச்சுக்கிச்சு. என்ன ஏதுன்னு கேட்கலை. எங்கிருந்து வந்ததுன்னு கேட்டு மனம் நோகிறும்மொன்னு தயக்கம். அதுவா சொல்லும்னு விட்டிருச்சு.

ஒதுங்கி வாழ நினைக்கும் குப்பண்ணன் மாடசாமி அண்ணன் கிட்ட அப்பிடி ஒரு கேள்வி வாரமாப் பார்த்துகிச்சு. தோட்டத்துல கிடைக்கும் காய் பழம், அப்பப்ப மாடசாமி அண்ணன் கொடுக்கும் அரிசி பருப்பு, அல்லது தோட்டத்து விளைச்சலை சந்தையில விற்கும் போது கொஞ்சம் தனக்கு வேண்டியதை வாங்கி வரும்.

அல்லியம்மா சொல்லி அழும் போது மட்டும் குடிசைக்கு வெளிய வந்து இன்னும் இந்த கட்ட வேக மாட்டேங்குதுன்னு தன்னைத் தானே நொந்துக்கும். அதுவும் அல்லியம்மா கண்ணுலப் படாமப் பார்த்துக்கும். அப்பிடி ஒன்னும் தப்பு தண்டா பக்கம் எட்டிப் பார்த்ததில்லை. ஆனால் நம்ம நிலைமை இப்பிடி ஆயிட்டதேன்னு நினைப்பு வரும் போது எல்லை மாரியம்மனைச் சுத்தியோ, வாய்க்கா கரைச் சுத்தி நீரின் சலன வளைவைப் பார்த்து நடக்கும்.

இந்த தடவ மல்லி மேடு சந்தைக்கு தானும் வரேன்னு மாடசாமி அண்ணன் சொல்லிப்புட்டுது. குப்பண்ணனுக்கு ஒரே கவலையாயிட்டுது. அண்ணன் நோவுற மாதிரி ஒன்றும் பண்ணலையே! என்ன ஆயிட்டுன்னு ஒரே கவலை.

மாடசாமி அண்ணன் சந்தைக்குப் போற முன்ன கலெக்டர் ஆபீசு பக்கம் இட்டுக்கிட்டுப் போச்சு. குப்பண்ணன் தயங்கி நின்னுருச்சு. வலிய தள்ளிக்கிட்டுப் போய் ஒரு விண்ணப்பத்தைப் கொடுத்து நிரப்பச் சொல்லியது. வேண்டாம்னேன்னு சொல்லிப் பார்த்தும் விடலை. குப்பண்ணன் கொடுத்த விண்ணப்பத்தைப் பார்த்த கலெக்டர் நேரா இரண்டு பேரையும் வலையூர் பட்டி கர்ணம் வீட்டுக்கு இட்டுகிட்டுப் போயிட்டார். குப்பண்ணன் தயங்கித் தயங்கி பின்ன வந்தார்.

கலெக்டர் தன் வீட்டு முன்ன நிற்பதைப் பார்த்த கர்ணம் குப்பண்ணன் கிட்ட ஒன்னும் பேசாம பத்திரத்தை கொடுத்து விட்டாப்பல. குப்பண்ணன் நன்றியுடன் கலெக்டர் க்கு வணக்கம் சொன்னாலும், மாடசாமி அண்ணனுக்கு தன்னைப் பத்தி தெரிஞ்சிருச்சேன்னு தயக்கம். மேலும் அவர்கிட்ட உண்மையை சொல்லாததன் குற்ற உணர்ச்சி அமைதியாகவே மல்லி மேட்டு சந்தை திரும்பினர் இருவரும்.

தோட்டத்துக்கு திரும்பின குப்பண்ணனுக்கு இன்னிக்கு குடிசை வித்யாசமாயிருந்தது. சோகமாவே இருக்கும் அல்லியம்மா வந்துட்டியலான்னுது. என்ன நடக்கு இன்னிக்குன்னு ஒன்னும் புரியல. சோறு வைச்சுகிட்டே அல்லியம்மா சொல்லியது இனி நாம வலையூர் பட்டி போயிறலாம என்று சொல்லிச்சு. அல்லியாம்மாக்கு எப்பிடி விவரம் தெரிந்திருக்கும்னு சொல்லிட்டிருக்கும் போதே கர்ணம் வீட்டுல வலுக்கட்டாயமா இருந்துகிட்டு வேலையாள பணி செய்த தனது கணக்குப்பிள்ளை சுந்தரவதனம் வந்து போனதைச் சொல்லிச்சு.

நாளைப் பொழுது வேறு மாதிரி இருக்கும்ன்னு நினைச்சு குப்பண்ணன் கடைசியா ஒரு முறை வாய்க்காக் கரை ஓரம் நடந்தார்.

வயசாயிடுச்சு

புதிதாக ஒரு நண்பர் அறிமுகமானார். பார்க்க நம்ம விட கொஞ்சமே வயசானவர் மாதிரி இருந்தார். நானும் நல்ல மரியாதையுடனே பேசி வந்தேன். அவருக்கு முடி அதிகம் போயிட்டுது. தடித்த முகம், பழக மிக நல்ல மனிதர். எப்போதும் மரியாதையாவே பேசுவார். இரண்டு மூணு வாரம் நன்கு பேசிட்டிருந்தோம்.

இந்த வாரம் சந்திக்கும் போதும் நாங்க நல்லா பேசிக்கிட்டிருந்தோம். அவருக்கு ஒரு போன் வந்து தள்ளிப் போய் பேசிவிட்டு வந்தார். அரைகுறையாக காதில் விழுந்தது. திரும்பி வந்து மரியாதையாகவே குனிந்து நிமிர்ந்து பேசும் போது நன்கு புரிந்து விட்டது, நமது வயசுக்கு மதிப்பு கொடுக்கிறார்ன்னு. வணக்கம்னே!

சமீபத்தில் நண்பர்கள் வீட்டிற்கு சாப்பிட அழைத்திருந்தனர். இன்னும் மூன்று family வருவதாகச் சொல்லியிருந்தனர். போகும் வழியில் இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும், வீடு நிறைவாக இருக்கும் என்று மனைவியிடம் பேசிக் கொண்டு காரில் பயணத்திருந்தோம்.

நண்பர் வீடு அடைந்தவுடன் வந்தவர்களை அறிமுகப் படுத்தினர். ஒரு இளம்பெண் நிறை மாத கர்ப்பிணியாக இருந்தது. எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அந்தப் பெண் என் மனைவியிடம் 'ஆண்ட்டி! அந்தக் காய் கொஞ்சம் எடுத்துப் போடறீங்களான்னு' கேட்டது. என் மனைவிக்கு முகமே மாறி விட்டது. கையிலிருந்த தட்டு கீழ இறங்கிட்டது. சிரிச்சுக்கிட்டே அந்தப் பெண்ணுக்கு கொடுத்து விட்டு, என்னை ஒரு பார்வை பார்த்தாங்க பாருங்க!

அமைதியா, காரில திரும்பும் போது சொன்னேன். நமக்கு மனசு இளசு தான், உடல் காமிச்சுக் கொடுத்துருது இல்லன்னு. என்ன நடந்திருக்கும்ன்னு யோசிச்சுப் பாருங்களேன்!

Thursday, February 16, 2012

கையில் வெறுமை

ராமு அசையாம கால் நீட்டிப் படுத்திருந்தான். விடிஞ்சா எப்போதும் போல நல்லா குளித்து விட்டு தனியா ஒரு நல்ல உடை உடுத்திச் செல்லனும். முப்பது வருஷ சர்வீஸ் முடிஞ்சு நாளை மதியம் அலுவலக நண்பர்கள் விடை கொடுத்து அனுப்பி விடுவார்கள். எப்போதும் retirement luncheon க்கு மனைவி குழந்தைகளோடு வரணும். குழந்தைகளுக்கு தகவல் சொல்லி விட்டு மனைவிக்கும் ஞாபகப் படுத்தி விட்டு வந்து கட்டிலில் படுத்தான்.

முப்பது வருட சர்வீஸ்ல் ராமு அதிகம் கலகலன்னு யாரிடமும் பழகியது கிடையாது. பேச்சும் உள்ளூர் மக்களைப் போல இல்லாமல் இந்திய மக்களது உச்சரிப்பையே உடல் உடன் ஒட்டி வந்ததாக நினைத்து தனது சிறு வயது பழக்கங்கள் இந்திய கலாசாரம் பண்பாட்டை விட்டுவிடக் கூடாது என்றே வாழ்ந்து விட்டான். இதனால் உள்ளூர் மக்களுடன் ஒட்டவில்லை. பதவியும் உயரவில்லை. ஆனால் அமைதியானவன் என்றே பெயர் எடுத்து கடைசி வரை இருந்து விட்டான்.

இருபது வருஷம் முன் கூட வேலை செய்த பெண்ணுடன் கொஞ்சம் அதிகம் பேசியதை தவறான கண்ணோட்டத்தில் பழகியதாக மனைவிக்கு யாரோ தகவல் சொல்லி விட்டனர். இதனால் வீட்டிலும் ஒன்றும் அலுவலக விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.

பகிர்ந்தாலும் அந்த பெண் ஒட்டிய விஷயங்களைத் துழாவும் மனைவி. பேச்சு அதிகமானாலோ அல்லது குழந்தைகள் வாக்கு வாதம் செய்தாலோ, வேணும்னா அந்த இன்னொரு குடும்பத்தோடப் போய் வாழ வேண்டியது தானே என்பார்கள். ராமு வீட்டிலும் அமைதியாகி விட்டான். உள்ளூர் மக்களைப் போல விருப்பமில்லாத வீட்டிலிருந்து விலகி வாழ முடியாமல் தனது உள்ளுணர்வை அடக்கி வாழ முற்பட்டது இன்று வரைத் தொடர்கிறது.

ராமு இந்த நாள் இவ்வளவு சீக்கிரம் வரும் நினைக்க வில்லை. நாளையுடன் வேறுஒரு பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். படிப்பிலோ அல்லது இறை வழிபாட்டிலோ அல்லது என்ன தான் செய்யனும்னு இனி தான் யோசிக்க வேண்டும்.

ராமுக்கு retirement பெனிபிட் நன்றாகவே இருக்கு. சாப்பாட்டுக்கு தொல்லையில்லை. இருந்தும் ஒரு நிம்மதியற்ற நிலை. இருபது வருஷமாக கணவன் மனைவிக்குள் உன் பணம் என் பணம், வீட்டு கடனைப்பில் உன் பாதி என் பாதி, உன் கார் செலவு என் கார் செலவு என்றே ஓடி விட்டது. வங்கி கணக்கும் வேற, வரவு செலவுகளும் அவர் அவர்களுதே. ஆனால் ஒரே வீட்டில் இத்தனை காலம் தள்ளினார்கள் என்று இருவரும் யோசிக்கும் நிலையிலும் இல்லை.

குழந்தைகள் இந்தப் பிரச்சனை தன்னைத் தொடர வேண்டாம் என்று கல்யாணம் ஆனவுடன் தனியாகப் போய் விட்டார்கள். அவ்வப்போது இருபாலரும் appointment வாங்கி சந்தித்து வருகின்றனர். ஆதலால் ராமுவும் அவர்களைத் தொந்தரவு செய்வதில் விரும்ப மில்லாமலே இருந்தான்.

இந்த தடவை retirement பார்ட்டி க்கு அழைப்பு விடுத்தியிருந்தான். என்ன செய்வார்கள் என்று யாரும் சொல்ல வில்லை. மனைவியும் ஒன்றும் சொல்ல வில்லை.

காலை அமைதியாக விடிந்தது. யாரிடமும் ஒன்றும் பேசாமல் நல்ல உடை உடுத்தி வேலைக்கு கிளம்பினான். ஆபீஸ் டேபிள் காலி செய்து காரில் ஏற்றிக் கொண்டு வர வேண்டும் என்ற நினைப்புடன் இரண்டு காலி அட்டைப் பெட்டியை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

மனது எதிலும் எடுபடவில்லை. வெறும் முகஸ்துதிக்காக எல்லோரிடமும் ஒரு வணக்கம் சொல்லி விட்டு வெளியே ஒரு நடை சுற்றி விட்டு வந்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது. எப்போதும் கண் முன் வரும் அந்த மரத்தடியின் நிழலில் சிறிது நின்றான். என்னமோ மனது அங்கு உட்கார வைத்தது இன்று. திரும்பி பேசாமல் வீட்டிற்குப் போய்விடலாமா என்று மனம் சிந்தித்தது.

மனைவி குழந்தைகள் வரா விட்டால் என்ன செய்ய? எப்பிடி அலுவலக நண்பர்களை சந்திப்பது என்றே யோசனை வாட்டியது. வருவது வரட்டும். இத்தனை காலம் இருந்த வாழ்க்கை தானே என்று சமாதானப் படுத்திக் கொண்டான்.

அமைதியாக எந்த வித முக மாற்றத்தையும் வெளிக்காமிக்காமல் ராமு அமைதியாக பார்ட்டி அறைக்குள் நுழைந்தான். ஆரவாரத்துடன் நண்பர்கள் வரவேற்று மாலை போட்டு வாழ்த்திப் பேசினார்கள்.

கடைசியாக ஒரு சின்னப் பரிசு என்று ஒரு மூலையிலிருந்த அறையின் கதவை முழுவதும் திறக்கச் சொன்னனர். முழுவதும் திறந்த போது மனைவியும் மக்களும் வந்து அணைத்துக் கொண்டனர்.

வழியனுப்பும் முன் நண்பர்கள், இனி இவர்கள் மட்டுமே உன்னை ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டும் என்று வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

Tuesday, February 14, 2012

ஒரு நாள் பயணம்

ஒவ்வொரு தடவை இந்தியா போகும் முன் இந்த தடவை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியா போய் வரணும்னு நினைப்போம். வெளிநாட்டில வாழும் போது மத்திய தர வர்க்கமாக வாழும் நாம், இந்தியாவில கால் வைக்கும் போது ஒரு முதலாளி அல்லது பண்ணையார் நினைப்போடு ஏர்போர்ட் லிருந்து வெளியேறுவோம். ஒரு நாள் விமானப் பயணம் எப்பிடி நமது மனநிலையை மாற்றுகிறது என்பது வியப்பே. இதனால பிரச்சனைஇல்லாம திரும்பனும் என்ற நினைப்பும் அதே ஒரு நாள் பயணத்தில மாறிரும்.

ஒரு நாள் பயணம் வீட்டை நோக்கி அடையும் போது வரவேற்க மலர்ந்த முகத்துடன் உற்றார் உறவினர் நிறைந்திருப்பர். ஆனால் திரும்பி வரும் போது வரவேற்க நமக்கு வீடு திரும்ப நாம் அழைத்தவர்கள் மட்டுமே இருப்பார்கள். இருந்தாலும் நம் மனநிலை இருவேறு நாடுகளில் இருவேறு விதமாவே இருக்கிறது.

நமது எதிர்பார்ப்புகள் தேவைகள் அந்தந்த நாடுகளின் இயல்பான வாழ்க்கைக்கு ஏற்றவாறு நாம் திட்டமிட்டு ஏற்படுத்திக் கொண்டு பயணம் மேற்கொண்டால் இரு இடத்திலும் பிரச்சனையோ அல்லது அசௌகரியங்கள் இல்லாமல் இருக்க வாய்ப்பு இருக்கு. எத்தனை பேரால் அவ்வாறு செய்ய முடிகிறது.

காரில்லாமல் அடுத்த இடம் நகர முடியாத வாழ்க்கையை அயல்நாடுகளில் பழக்கப் பட்டுள்ளோம்.ஆனால் இந்தியாவில் நாம் தங்கும் இடத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப திட்டமிடாமல் செயல் பட நினைத்தால் எல்லோருக்கும் மனஸ்தாபத்துடன் விலக வேண்டிய நிலை ஏற்படும்.

பொதுவாக ஒரு இடத்திற்குப் போக வழி கேட்டால் சுலபமாக பஸ் அல்லது ரயில் ஒட்டி வழி சொல்லுவார்கள். அதைப் பின்பற்றினால் குறித்த நேரத்தில் செல்ல முடியும். ஆனால் நமக்குப் பழக்கப் பட்ட அல்லது தெரிந்த அயல் நாட்டு போக்கு வரத்து சாதனம் கார், விமானம், டாக்ஸி பற்றி பேச்சு வந்தால் நமக்கு கிடைக்கும் பார்வைகள் பேச்சுகள் மரியாதைகள் எல்லாம் நமது கேட்கும் முறை விதம் உட்பட்டு தான் கிடைக்கும்

இங்கு நாம் எப்பிடி போகிறோம், என்ன செய்யனும்னு கேட்பதற்கோ சொல்வதற்கோ நாதி கிடையாது. நாமே யாருக்காவது போன் பண்ணி சொல்லிக்கணும். ஆனால் இந்தியாவில் எப்பிடி பயணித்தாய், பஸ் இருக்கும் போது ஏன் ஆட்டோ, எதுக்கு இவ்வளவு பணம், என்பது போல ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொல்ல வேண்டும். இரண்டுமே சங்கடங்கள் தான். அவர்கள் சராசரியாய் ஆட்டோக்கும் டாக்டர்க்கும் கொடுப்பத்தை விட நாம் கொடுத்தாலோ கொடுக்க நேர்ந்தாலோ நம்மிடம் சொல்லத் தயங்க மாட்டார்கள். இங்கு நாமாக யார்கிட்டயாவது சொன்னாத் தானுண்டு.

பஸ் வழி சொல்கிறார்களே என்று பஸ்சில் ஏறி போய், அயல் நாட்டிலிருந்து வந்திருக்கும் நமக்கு உயர்தர ஹோட்டல் விருந்து தர நினைக்கும் நண்பனுக்கு நாம் ஏற்படுத்தும் சங்கடம், அல்லது நமது பந்தாவால் ஆவலுடன் நம்மை எதிர் நோக்கி இருக்கும் நண்பனுக்கு நாம் ஏற்படுத்தும் சங்கடம், எல்லாம் கிளம்பும் முன் சொல்லி சமாளித்து இந்தியாவில் செயல்பட வேண்டும். இங்கு நீ சௌகரியமாய் வந்து சேர்ந்தையோ என்றோ அல்லது அவன் வந்து சேர அவன் பட்ட கஷ்டத்தையோ சொல்லி முடித்து விடுவார்கள்.

இது மாதிரி ஒரு பயணத்தில் ஆயிரம் விதமாய் நடக்கும். இருப்பினும் ஒரு நாள் பயணத்தில் நம் மனநிலையை வேறு விதத்தில் பயணிக்க விடாமல் ஒவ்வொரு நாட்டு சூழ்நிலைக்கு ஏற்ப நம் பயணத்தை வெற்றிகரமாக மாற்றிக் கொள்வது நம் கையில் மட்டுமே இருக்கிறது. அந்த ஒரு நாள் எல்லோருக்கும் நல்ல நினைவுகளோடு தொடரக் கூடிய நாட்களாகட்டும்.

Sunday, February 12, 2012

சமீபத்தில் படித்தது

கணவன் நிறைய குடித்து விட்டு வீட்டிற்கு வருகிறான். சமையலறைக்கு அருகில் வரும் போது மனைவி ஏதோ கேட்பது தெரியாமல் முழுவதும் வாந்தி எடுத்து விட்டு கீழ விழுந்து விடுகிறான்.

காலையில் தனது படுக்கையிலிருந்து எழுவதை உணர்ந்து அய்யய்யோ இன்னிக்கு மனைவியோட எந்த சண்டையும் வந்திடக் கூடாதேவென்று படபடப்புடன் சமையலறையை சுத்தம் செய்து மன்னிப்பு கேட்கலாம் என்று செல்கிறான்.

மனைவியில்லை. போச்சுடா இன்னிக்குன்னு நினைக்கும் போது, சமையலறை சுத்தமாக இருப்பதை பார்க்கிறான். மனைவியின் கடிதம் மேஜை மேல் இருக்கு. எடுத்துப் பார்த்தால், honey நான் கடை வரை போய் வருகிறேன் என்று மட்டும் இருப்பதைப் பார்த்து வியப்புடன் தனது மகன் சிறுவனிடம் என்ன நடக்குதுன்னு கேட்கிறான்.

சிறுவன், அப்பா! நீ நேற்று குடித்து விட்டு அறை முழுவதும் வாந்தி எடுத்தது மட்டுமில்லாமல் உன் உடல் பூரா வாந்தி மற்றும் சரக்கு அப்பி இருந்தது. உன்னை தூக்கி அம்மா சுத்தம் செய்ய முற்ப்பட்ட போது, நீ 'ஏய்! பெண்ணே! நான் திருமணமானவன். என்னை விட்டு விடு என்றாய்!'. அதற்கு மேல் நீ முற்றிலும் சுயநினைவு இழந்து விட்டாய். அம்மா ஒன்றும் சொல்லாமல் எல்லாவற்றையும் சுத்தம் செய்து உன்னை படுக்கையில் கிடத்தினாள்.

Friday, February 10, 2012

ஆசிரியை படுகொலை குறித்து எனது விசனம்

ஒரு ஆசிரியை வீட்டிலும் பள்ளியிலும் தினமும் தொடர்ந்து வேலை செய்து வருவதால் ஏற்படும் மனப் பளுவை சுமை அதிகமாக இருக்கும் இடத்தில் இறக்கி வைப்பது சாத்தியமானது. அவ்வாறு அடைந்துள்ளதா என்று பார்க்க வேண்டும்.

மாணவர்களை ஆசிரியர்களுக்கு டீ காபி வாங்க அனுப்புவதும், வேறு சில சில்லறை வேலைகள் செய்ய அனுப்புவதும் நான் மாணவனாக இருந்த காலத்தில் நடந்தவை. உட்படாத சிறுவர்களை தண்டனைக்குள்ளாவது ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்குள் பிரச்சனை ஏற்படும் போது சில மாணவர்கள் குளிர் காய்வதும் உண்டு. ஒரு ஆசிரியர் இன்னொருவரை பாதிப்பு ஏற்படுத்த உபயோகிப்பதும் உண்டு. இல்லா விட்டால் மாணவர்கள் தண்டனைக்குள்ளாவதும் உண்டு.

வகுப்பில் மற்ற மாணவர்கள் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் போது, ஆசிரியர்கள் கண்ணில் தவறுதலாகப் படும் மாணவன் அதிகமாக அதிக காலம் தண்டிக்கப் படுவது என் விஷயத்தில் நடந்தது. இரண்டு மாத காலம் தரையில் உட்கார நேர்ந்தது. நான் பயந்த சுபாவம் உள்ளதால் அமைதியாகி விட்டேன். அவமானத்தை உள்ளடக்கி கொள்ளத்தான் பழக்கப் பட்டுள்ளேன், பழகி விட்டேன். அது மாதிரி ஏதாவது நடந்து விட்டதா.

சமீப காலமாக பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களை மார்க் poda வில்லை என்றால் மிரட்டுவது உண்டு.

அனுமானங்களுக்கு உட்படாமல் ஒரு குற்றமாக விசாரித்தால் உண்மை வரலாம். அதை படிப்பினையாக ஏற்றுக் கொண்டு மாற்றி அமைத்துக் கொள்ள ஆசிரியர் மாணவ சமுதாயம் தயாரா ?

ஒருத்தர் வெறுப்பை சம்பாதிப்பது மூலம் சொல்வதில் உண்மை இருந்தாலும் எதிலும் வெற்றி காண இயலாது. அனுசரித்துப் போவது நல்லது. முடியா விட்டால் விலகுவதே சிறந்தது.

ஆசிரியை படுகொலை குறித்து எனது விசனம்.

மொழி

எனக்கும் ஹிந்தி திணிப்பு பிடிக்காது. ஆனால் தேவைக்காக கற்பது அவசியம்னு தோணுது. ஆங்கிலம் இன்னும் தேவைப் படுது. சரிவர சரளமாக பேச வரவில்லை என்றால் தனிப் பட்ட வளர்ச்சிக்கும் வேலை செய்யுற இடத்தில சில நேரங்களில் அவமானத்திற்கும், உயர் பதவி கிடைக்காமல் போவதற்கும்  ஏதுவாகிறது.
 
எண்பது இறுதியில் தொண்ணுறு  ஆரம்பத்தில் தமிழகத்தில் வேலை கிடைப்பதை விட வெளிமாநிலங்களில் தான் சுலபமாக வேலை கிடைத்தது. தெரிந்த சிலர் மொழி தெரியாது என்ற பயத்தால் வேலைவாய்ப்புகள் தேடாமல் இருந்தனர். தமிழ்நாடு விட்டு வேறு இடங்களுக்கு apply  பண்ண மாட்டாங்க. வேறு மாநிலங்களுக்குப் போனவர்களுக்கு மொழி சரியான தடையாக இருந்தது. ஆங்கிலம் படிச்சவன் அத்தனை பேரும் அயல்நாடு வேலை தேடி காத்திருக்க முடியாது.
 
என் பள்ளி ஆசிரியர் என்னை வலுக்கட்டாயமா வரவழைச்சு சில நாள் ஹிந்தி சொல்லிக் கொடுத்தார். டிமிக்கி கொடுத்து விட்டு விளையாடப் போய்விடுவேன். பெரியவனான பிறகு வெளி மாநிலம் செல்ல வேண்டிய அவசியம் வந்தவுடன் அவரிடம் போய் பத்து நாளாவது சொல்லிக் கொடுங்க சார் ன்னு  கேட்டேன். இன்னும் பத்து பேரை கூட்டியா சொல்லித் தரேன் என்று சொல்லி விட்டார். சில நண்பர்களுக்கு விருப்பமில்லை.
 
ஹிந்தி கத்துக்காம வடகிழக்குப் போய் ஒன்னும் புரியல. சின்னக் குழந்தைகளோடு தினமும் அவங்க லெவல்க்கு விளையாடி அவர்களிடம் கற்றுக் கொண்டேன். அப்பவும் சரளமா வராது. கண்ணாடி புட்டியில கோலிகுண்டு போட்டு ஆட்டின மாதிரி தான் வரும்.
 
அரசாங்க வேலைத் தேர்வுக்குப் போனா உள்ளூர் மொழி தெரியாது என்று IAS  commissioner  வெளியேப் போகச் சொல்லிட்டான். படித்த படிப்பை விட மொழி அறிவு தான் முக்கியமா தோன்றுகிற அளவுக்கு மனித வளர்ச்சி குறித்து வெறுப்பு தான் வருகிறது.
 
ஓர் நாட்டுக்குள் எந்த மொழி பேசினால் என்ன ? அனைவரும் இந்தியரே என்ற மனப்பான்மை இல்லை. வேறு மொழி பேசும் அண்டை மாநிலத்தவரோடு வாய்க்கா வரப்புத் தகராறு.  அவனைத் திருந்தச் சொல் நான் திருந்துகிறேன் என்ற எண்ணம் தான் எல்லோரிடமும்.
 
இன்று பள்ளிகளில் ஹிந்தி சொல்லிக் கொடுத்தால் அதை வாய்ப்பாக உபயோகிப்பது நல்லதாக இருக்கும். வெளி மாநிலங்களில் வேலை தேடுவதற்கு பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நாங்க பட்ட கஷ்டங்கள் அவர்கள் படத் தேவையிருக்காது.
 
அவங்கெல்லாம் தமிழ் கத்துக்கிராங்கலான்னு ஒரு வாதம் வரும். இப்ப வேலை தேடி அதிகம் வருவதாக என் நண்பர்கள் சொல்கிறார்கள். கண்டிப்பாக கத்துப்பாங்க அவங்க. மொழிக்கு பயந்து வேறு மாநிலம் போகத் தயங்காதவர்களுக்கு மொழிப் பிரச்சனையாக இருக்காது.
 
ஹிந்தி கத்துப்பது பிரச்சனை அல்லது விருப்பமில்லை என்றால் ஆங்கிலமாவது சரளமாகப் பேசக் கற்றுக் கொள்வது நல்லது. இல்லாட்டி தேவையில்லாமல் இது நமக்கு ஒரு ஊனமாகப் போய்விடும். தாய் தந்தையிரின் விருப்பு வெறுப்புகளைப் பார்க்காமல் இதை ஒரு additional ஸ்கில் என்று ஊக்குவித்தால் பிற்காலத்தில் குழந்தைகளுக்கு உதவும்.

Sunday, February 5, 2012

இடைவெளி

வயதில் மூத்த நண்பர் வரும் போது எல்லா ஜோடிகளும் அறையில் உட்கார்ந்திருக்கும் விதத்தைப் பார்த்து, இங்கு எல்லோருக்கும் கல்யாணம் ஆயி எத்தனை வருஷம்னு சுலபமா சொல்லிரலாம்னார்.

புதிதாக கல்யாணம் ஆன ஜோடி இடிச்சு நெருக்கிகிட்டு இருந்தாங்க. வருஷம் ஏற ஏற ஜோடிகளுக்கு இடையே இருந்த இடைவெளியும் அதிகமாக இருந்தது. எல்லோருக்கும் ஆச்சரியம் கலந்த வியப்பு.

மனைவியின் சித்தப்பா சித்தி மட்டும் நெருங்கி உட்கார்ந்திருந்தனர். அவர்கள் மற்றவர்கள் பார்த்துப் பொறாமைப் படும் அளவு இன்று வரை காதலர்களே !

வருடம் ஏறினாலும் இடைவெளி அதிகமாகமல் பார்த்துக் கொண்டால் மணவாழ்வும் சிறக்கும்.