நேற்று ஸ்பானிஷ் கிளாஸ்ல ஒரு பிரசண்டேஷன் கொடுக்கனும். இதற்கு முந்தின வாரமே புரபசர் சொன்னாங்க, கூகிளாண்டவர் கிட்ட வரம் வாங்கிட்டு வராம சொந்தமாக எழுதிகிட்டு வந்து ப்ரசண்ட் பண்ணுன்னாங்க.
நானும் அதை உண்மைன்னு நம்பி சொந்தமாக எழுதிகிட்டுப் போய் செம சுமாராப் போனதால, ஏகப்பட்ட கதை வசனம் பாட்டு கேட்க வேண்டியதாகப் போச்சு. மத்தவங்கெல்லாம் கூகுளாண்டவர் உதவியில வெளுத்துக் கட்டிட்டாங்க.
வகுப்பு முடியிற நேரத்துல ஸ்பானிஷ் 3 அடுத்த மாசம் துவங்குதுன்னாங்க. நான் ஒரு ப்ரேக் எடுத்து ரிவைஸ் பண்ணிகிட்டு வர்றேன்னு சொன்னா, ஒட்டு மொத்தக் கிளாஸும் ஏகக்குரலில் உன்ர ரிக்வஸ்ட்டை வீட்டோ பண்றோம், ஒழுங்கா வந்து சேருன்னு ஏகோபித்த குரலில்.
நான் சொன்னேன், அவங்களைப் பாருங்க நாம ஸ்பானிஷ் 2ல உட்கார்ந்து கிட்டு இருக்கோம், அவங்க ஸ்பானிஷ் 5 லெவல்ல பேசிகிட்டு இருக்காங்கன்னா, கிளாஸே சிரிக்குது.
இப்பவெல்லாம் நான் கிளாஸ்ல ஏதோ சொன்னா கிளாஸே சிரிக்குது.
நேற்றைய கிளாஸில் ஸ்பானிஷில் 4 கேள்வி, எல்லாம் ஒரே கேள்விகள், கேட்கனும், மத்தவங்க பதில் சொல்லனும்.
புரபசர் ஆரம்பிக்கும் போது என்னை இப்பவெல்லாம் முதலில் களத்துல இறக்கி விட்டுடறாங்க. அவங்க என்னைக் கேப்பாங்க, அடுத்து நான் இன்னொரு கிளாஸ்மேட்டை ஸ்பானிஷ்ல கேட்கனும். அவங்க பதில் சொல்லனும்ன்னு.
முதல் கேள்வி: எந்த கடையில போய் துணி வாங்குவ? Bargain பண்ணுவையான்னு?
நான் இந்தக் கேள்வியைக் கேட்டப்ப, கிளாஸ்மேட் அவங்கப் போறக் கடையைச் சொன்னாங்க. யப்பான்னேன், எல்லோரும் சிரிக்கறாங்க.
Bargain பண்ணுவயான்னு கேட்டா, நல்லா பண்ணுவேன்னாங்க. என்ன கதையடிக்கிற அந்த கடையில வேலைக்காவாது, நீ ரொம்பவே ரீல் விடறன்னா, கிளாஸே சிரிப்புல அதிருது.
கடைசியல புரபசர், இவனை இரண்டு நிமிசத்துல நாலு கேள்வியைக் கேட்டு முடிப்பான்னு பார்த்தா 5 நிமிஷத்துக்கு இழுத்தடிக்கிறானேங்கிறாங்க. நம்ம ஓட்ட வாய் எங்கப் போனாலும் சும்மா இருக்க மாட்டேங்குது.
ஸ்பானிஷ் 1ல சேரும் போது 20 பேர் இருந்தோம். முடிக்கும் போது 13 பேர் தானிருந்தோம். ஸ்பானிஷ் 2 துவங்கிய போது 14 பேர் துவங்கினோம் இப்ப எட்டு பேரோட நிக்குது.
நான் ஸ்பானிஷ் 2 லெசன் 3 அண்ட் 4ஐயே மூனு நாலு தடவை திருப்பி படிச்சு கிட்டு இருக்கேன். மனசுல நிக்க மாட்டேங்குது. ஒவ்வொரு லெசன்லையும் 70-80 புதுப்புது வார்த்தைகள். இப்ப கடைசி லெசன் 6 ஓடுது. நான் இன்னும் 3,4,5ஐயே திருப்பித் திருப்பி படிச்சு கிட்டு இருக்கேன்.
ஒரு ப்ரேக் எடுத்தா நல்லாயிருக்கும். புரபசர் என்னமோ, நீ ஆரம்பத்துல எப்படியிருந்த இப்ப எவ்வளவு கத்துகிட்டு இருக்க, ஸ்பானிஷ் 3க்கு நீங்க எல்லோருமே ரெடி, வந்து சேருங்கன்னு ஒட்டு மொத்த கிளாஸும் சொல்லுது.
மேலும் இந்த புரபசர் இங்க ஊர்ல உள்ள ஒரு சர்ச்சில் வாரா வாரம், ஸ்பானிஷ் மட்டுமே தெரிந்துள்ள சின்னப் பசங்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தர்றாங்க. நீங்கெல்லாம் அங்க வாலண்டியரா வாங்க, வாரத்தில் ஒரு நாள் நீங்க அவங்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தாங்க, அவங்க ஸ்பானிஷ் மட்டுமே பேசறதை வச்சு நீங்க ஸ்பானிஷ் கத்துக்கலாம். உங்களுக்கும் நல்லது அவங்களுக்கும் நல்லதுன்னாங்க.
புரபசர் சொல்லி முடிக்கிறதுக்குள்ளயே அம்புட்டு பேரும் கையைத் தூக்கிட்டோம். அதுவும் அடுத்த மாசம் சர்ச்சுல துவங்குது.
என்ர அம்மிணி கிட்ட இன்னும் ஒன்னும் சொல்லலை. வீட்டுல ஒரு வேலை நடக்க மாட்டேங்குது, நீ பாட்டுக்க இப்படி சுத்தறயேம்பாங்க. அம்மிணி கிட்ட வீணை கத்துக்க புதுசா 3 பேர் வந்துருக்காங்க.
அம்மிணியோட பழைய ஸ்டூடண்ட் கிட்ட நாலு வருஷம் முன்ன, அந்தப் பொண்ணு எட்டாவது படிக்கும் போது சொன்னேன். நல்லா தினமும் பிராக்டீஸ் பண்ணு, என்ர அம்மிணி போல பெருமாள் கோவில் ஏகாந்த சேவைக்கு வீணை வாசிக்கலாம்ன்னு. அந்த பொண்ணு இப்ப ஏகாந்த சேவைக்கு தானும் வாசிக்கனும்ன்னு அம்மிணியோட தனி ப்ராக்டீஸ் ஆரம்பிச்சுருக்கு. போன மாத ஏகாந்த சேவைக்கு அம்மிணி கூட கோவிலில் வாசிச்சுது அந்த பொண்ணு. நமக்குத் தெரிஞ்சது எடுபுடி வேலை மட்டுமே. இரண்டு வீணையையும் ஒரே ஸ்பீக்கர்ல கனெக்ட் பண்ணி விட்டு நிம்மதியாக வாசிச்சாங்க.
அம்மிணியும் busy நானும் busy .
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Aprendo a hablar en español!
No comments:
Post a Comment