Sunday, November 15, 2020

நரகாசுரவதம்

 நரகாசுரவதத்தை எப்படி கொண்டாடுவது!

ரொம்ப சிம்பிள்! யாருக்காவது கொரோனா வந்துடுச்சுன்னு சிம்ப்ளா சொன்னா முடிஞ்சுது கதை! போதும், நம்மளை நரகாசுரவதம் பண்ணிருவாங்க!

அத்தகைய நரகாசுரவதம் நாள் நேற்று. எவ்வளவு இடி வாங்கினாலும் கொண்டாடற பக்குவம் வந்துடுச்சுங்கிறதால இதையும் சுலபமாக ஓசியில பட்டாசு வெடிக்க நமக்கு கத்துக்கொடுக்கனுமா! புடம் போட்டல்ல வச்சிருக்காக நம்மை!

நேற்று காலை அம்மணியோட ஆபீஸ்லேர்ந்து போன். அம்மிணி கீழ வேலை செய்யற ஒருத்தருக்கு பாசிடிவ்ன்னு வர, அவங்க அம்மிணியை ஒரு நிமிடம் ஆபீஸில் பார்த்ததாக county ஆபீஸில் சொல்ல, அம்மிணி ஆபீஸில் அம்மிணி இன்சார்ஜ்ங்கிறதால முடிஞ்சது கதை! ஆபீஸ் முழுக்க சானிடைஸ் பண்ண நடவடிக்கை எடுக்கனும், போன்ல அவங்களைப் போட்டு வறுத்து எடுத்தது போக, இப்ப வூட்டுல அம்புட்டு பேரும் டெஸ்ட் எடுக்கனும்ன்னு நம்ம பக்கம் திரும்பிருச்சு நரகாசுரவதம்.

பையன் தான் இதுக்கு முன்ன போன pediatric urgent care தான் போவேங்குறான். அம்மிணி அவங்க டாக்டர் கிட்டத்தான் போவேங்குறாங்க! நடுவுல செத்தாண்டா சேகரு நிலை!

பையன் சொன்ன இடத்துக்குப் போன் பண்ணினா அவங்க ஒரு ஆளுங்கு டெஸ்ட்டுக்கு 150$ கேட்கிறாங்க. அவங்க கிட்ட இந்த கோவிட் டெஸ்ட் ஃப்ரீ ஆச்சே, எங்க இன்சூரன்ஸ்ல ஃப்ரீ ஆச்சேன்னா, அதெல்லாம் முடியாது, நீ உள்ளவந்தா இந்த வருச deductibles எல்லாம் சேர்த்து ஒரு ஆளுக்கு 150ங்கிறாங்க! மூனு பேருக்கு 450$.

என்னடா சத்திய சோதனை இது வேற செலவான்னு நினைக்கையில, இவங்க இரண்டு பேருக்கும் உசுரு முக்கியமா காசா முக்கியம்கிறாங்க. உண்மை தான். இவ்வளவு கோடி பணம் அரசு இந்த டெஸ்ட்டுக்கு ஒதுக்கி செலவு செய்யுது, எதுக்கு இன்னும் நாம செலவு பண்ணனும்ன்னு நினைச்சு வேற இடம் தேடறதுக்குள்ள என்னை வூட்டுல ஊசி பட்டாசு சரவெடியில கொளுத்த, இதையும் மீறி நமக்கு திரியை வெளிய நீட்டத் தெரியாதா!

Countyயோட வெப்சைட் போய் இன்னிக்கு எங்க அவங்க டெஸ்ட் பண்ற இடம் தேடினா இன்றைய ரிசர்வேஷன் எல்லாம் ஃபுல். அரை மணி்நேரத்துல 30 பேருக்கு டெஸ்ட் பண்ற இடமெல்லாம் ஃபுல். 

ஊரெல்லையில ஒன்னு கிடைக்க 3 பேருக்கும் ரிசர்வ் பண்ணினா இவங்க வரமாட்டேங்குறாங்க. ஏன்னா அங்க போனா டெஸ்ட் ரிசல்ட் வர 48-72 மணி நேரமாகுமாம், இவங்க அவ்வளவு நேரம் பொறுக்க முடியாதாம். ரிசல்ட் உடனே தெரியனுமாம். 450$ கட்டினா 8 மணி நேரத்துல ரிசல்ட் போட்டு ஒரே குடைச்சல். ரோட்டுல வெடிக்கிற பட்டாசெல்லாம் ஒன்னுமேயில்லாத கதை தான்.

நம்ம கிட்ட எதுவும் செல்லுபடியாகாதுன்னு இரண்டு பேரும் வர, county testing siteக்கு கூட்டிப் போனேன். செம சேஃப்டி. மத்தவங்க எதையும் கையுல தொடுவது கிடையாது. நம்ம காரில் உட்கார்ந்து நாமே டெஸ்ட் பண்ண எல்லாம் automatic ப்ரொசீஜர்ஸ். பார்க்கிங் லாட் உள்ளே நுழையும் போதே ஆளுக்கு ஒரு டெஸ்ட் கிட் சேஃப்டி புரோசீஜரோடு கொடுக்கறாங்க! காரை தள்ளிப் பார்க் பண்ணி, நம்ம போன் மூலம் பார்கோடு ஸ்கேன் பண்ணி் நம்ம டீடெயில்ஸ் போன் மூலம் என்டர் பண்ணி, வெரிஃபை பண்ணினா நாம ரெடி!

டெஸ்ட் எடுக்க படம் போட்டு விளக்கத்தோட எல்லாம் பிளாஸ்டிக் கவர்ல இருக்கு! நாமளே test swabஐ மூக்குல உட்டு எடுத்து குப்பியில போட்டு ஒரு கூலர் பாக்ஸ்ல போட்டா ஏழு மணி நேரத்துல லேப்கார்ப் டெஸ்ட் ரிசல்ட் நம்ம போனுக்கு வருது. பையனுக்கு இப்பவே தான் ஒரு மெடிகல் புரொபஷனல்ன்னு நினைப்பு, அவரு தான் மூக்குல சொருகுவாரம்! உள்மூக்குல போட்டு குடைஞ்சுபுட்டான். அங்கயே தும்மலை அடக்க முடியாமப்போயிருச்சு!

யாரும் யாரையும் தொடுவதில்லை. கிளினிக் உள்ளப்போனா கதவைத் தொட்டோம் அதைத் தொட்டோம் இதைத் தொட்டோம், சானிடைஸ் பண்ணுன்னு ஒரு தொந்திரமும் இல்லாம நம்ம காரில் உட்கார்ந்தே எல்லாம் இலவசமாக முடிந்தது!

காலையிலிருந்து ஒவ்வொருத்தரும் அய் என் ரிசல்ட் நெகடிவ்ன்னு என் ரிசல்ட் நெகடிவ்ன்னு சந்தோசத்துல குதிக்கிறாங்க!

இரண்டு பேரும் உங்க 150$ எடுத்து வைங்க எங்கிட்டேன்னேன். கொடுக்கிற ஆளுங்களா இவங்க! அடுத்த பட்டாசோட ரெடியாக நிப்பாங்க!

தீபாவளி நரகாசுரவதம் எப்படி இருக்கும்ன்னு கேட்கிறாகளே! இதுவல்லவோ எங்கள் வதம்!

Friday, November 13, 2020

அமெரிக்க தேர்தல் 2020 - பகுதி 5

 அமெரிக்க தேர்தல் 2020 - பகுதி 5

தேர்தல்ல வேலை செய்யறப்போ பொதுவாக எந்த அரசியல் கட்சி பத்தியோ, தங்கள் கட்சி சார்பு பத்தியோ எதுவும் பேசிக்க மாட்டோம். பேசக்கூடாது கூட. மேலும் இந்த தேர்தல்ல கட்சி சார்ந்த பார்வையாளர்களே (observers) நேரில் poll place உள்ளே இருந்ததால் யாரும் தன் வேலையைத் தவிர வேற எதுவும் பேசலை.

தேர்தல் முடிஞ்சு டேபுலேட்டர் கவுண்ட் முடிச்சு எல்லாம் க்ளோஸ் பண்ணிய பிறகு, ஒருத்தருக்கொருத்தர் நன்றி சொல்லி, polling place எல்லாம் க்ளீன் பண்ணி, விடைபெறுகிற நேரம், அதிகாரிகளில் ஒருத்தர் நடுவுல மேடைப்பேச்சு பேசற மாதிரி வந்து நின்னார்.

இது தான் அவர் முதல் தடவையாக எலக்‌ஷன் ட்யூட்டி பார்க்கிறது. புதுசா என்ன சொல்லப்போறார்ன்னு வேடிக்கைப் பார்த்தோம். எங்க பிரிசின்கட் ரிசல்ட் பார்த்து கொஞ்சம் மனசுடைஞ்சுட்டார்ன்னு சொல்லலாம். ஆனாலும் பெருமையாக ஆரம்பிச்சார்.

வெடரன் காங்கிரஸ் மேன் மறைந்த ஜான் லூயிஸ் போன்றோர் நடத்திய அந்த வாஷிங்க்டன் நடைபயணத்தில் கலந்துகிட்ட இரண்டு வெள்ளை இனத்தவர்களில் இவரது அப்பாவும் ஒருவராம். அப்போது இவருக்கு 1 1/2 வயதாம், அதனால் மார்ட்டின் லூதர் கிங்கை சந்தித்தது நினைவு இல்லையாம், ஆனால் அவர்களிடமிருந்து இவரது அப்பா பாராட்டு பெற்றதை அன்று நினைவுகூர்ந்தார். நாம் இந்த நாட்டில் இத்தகைய பாரம்பரியத்தோடு வந்துள்ளோம், ஆதலால் இந்த எலக்‌ஷன்ல உங்களோடு வேலை செய்தது எனக்கு மிகப் பெருமையாக இருக்கு, இன்று என் பிறந்த நாள் கூட. 

எல்லோரும் பிறந்த நாளுக்கு லீவு எடுத்து எங்கோ விடுமுறைக்குப் போவாங்க! ஆனால் என் பிறந்த நாளை இந்த 14-15 மணி நேரம் உங்களோடு தேர்தலில் பணியாற்றியதையே பெருமையாக நினைக்கிறேன்னார்.

எல்லோரும் பிறந்தநாள் வாழ்த்து சொன்னோம். சிலர் MLKவை நேரில் பார்த்தீங்களா என்றனர். எனக்கு அப்ப 1 1/2 வயசு ஞாபகமில்லை, ஆனால் என் அப்பா அவரோடு குடும்பத்துடன் கலந்து கொண்டது என்றார். 

மேற்கொண்டு எந்த அரசியலும் பேசக்கூடாதுன்னு நினைவுபடுத்திகிட்டு எல்லோரும் 14 மணி நேர வேலையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திரும்பினோம்.

இப்ப எல்லோரும் ஈமெயில் மூலம் நன்றி சொல்லிக்கும் போது இன்னொருவர் என் பெயரைக்குறிப்பிட்டு இந்த தனிப்பட்ட வேலையை கற்றுக்கொள்ள நான் உதவியதற்கு நன்றி சொல்லும் போது நம் கடமையை நாம் செவ்வனே செய்தது நிறைவு தருகிறது.

Sunday, November 8, 2020

அமெரிக்க தேர்தல் 2020 - பகுதி 4

 அமெரிக்க தேர்தல் 2020 - பகுதி 4

நடந்து முடிந்த இந்த தேர்தல் உண்மையிலேயே வரலாற்றில் குறிக்கப்பட வேண்டிய ஒன்றுஅமெரிக்காவுலஉட்கார்ந்துகிட்டு இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் ரொம்ப பேசறாங்கன்னு விமர்சனம் வரும்ஆனால்அவர்கள் உண்மையிலேயே பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய ஜனநாயக அமைப்பு இதுசியர்ஸ்!


ஒரு உண்மையான ஜனநாயக ஆட்சியில் சாதாரண கடைநிலை குடிமகன்களே தேர்தல் அதிகாரிகளாகபணியாற்றி தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வாக்காளர்களுக்கு உதவ பணியாற்ற வரும் அமைப்பு இது அரசு அதிகாரிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களை வைத்து மட்டும் அரசு அமைப்பால் நடத்தப்படும்தேர்தல்களல்ல இவையார் வேண்டுமானாலும் தேர்தல் அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்.


பொதுவாக பல்வேறு தனியார் மற்றும் அரசு ஊழியர்களோ பொதுமக்களோதேர்தல் வேலைகளில் பங்காற்றிஅதில் கிடைக்கும் additional income அவர்கள் வாழ்க்கைக்கு உதவுமென்று பொதுவாக ரிடையர்ட் மக்கள்வயதில் பெரியவர்களே இங்கு தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றுவார்கள்அவர்களுக்கே இந்த வேலையையும்கொடுப்பார்கள்.


இதைப்பற்றியெல்லாம் அறியாமல் அரசியலில் இருந்த ஆர்வத்தில் நான்கைந்து வருடம் முன் முதல் தடவையாஎலக்‌ஷனில் தேர்தல் பணி செய்ய நான் சென்ற போது மற்ற அதிகாரிகள் என்னிடம் மறைமுகமாக கேட்டகேள்வி do you need this additional income ன்னுபக்குன்னுச்சு எனக்குஎன்னடா நல்ல சம்பளத்திலிருக்கும்நாம் இன்னிருத்தரோட வருமானத்தைக் கெடுக்கிறோமான்கிற guilty feelings லேயே அந்த தேர்தலில்பணியாற்றினேன்.


நான் தேர்தல் கமிஷனில் நேரடியாக வேலை செய்யும் ஆளல்லமுழுநேரப்பணி வேறொரு இடத்தில்ஆனால்கடந்த தேர்தல்களில் தேர்தலுக்கு முன் வாலிண்டியராக பதிவுசெய்து தேர்தலுக்கு சில நாட்கள் முன் ட்ரைனிங்எடுத்துக் கொண்டு வேலை செய்தேன்இதற்கு முன் நடந்த தேர்தல்களுக்கும் இந்த தேர்தலுக்குமுள்ளவித்தியாசத்தை நன்கு நேரில் பார்த்தவன்.


எந்தவொரு தனிநபரும் இங்கே தேர்தலில் பணியாற்றமுடியும்இந்த தடவை இரண்டு கல்லூரி மாணவர்கள்என்னுடன் பணியாற்றினர்அதில் ஒருவருக்கு இன்னும் ஓட்டளிக்க கூட வயது வரவில்லைஇங்கேயே பிறந்துவளர்ந்த மெஜாரிட்டி வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு என்னைப் போன்ற அயல்மண்ணில் பிறந்து இங்குவந்து குடியேறியவர்கள் தேர்தல் முறையாக நடைபெற உழைக்கும் உழைப்பை மட்டுமல்லஅவர்களும் எவ்வாறுசெயல்பட வேண்டும் என்று என்னிடம் வந்து கேட்கும் போதும்கேட்டு செயல்படும் போதும் அவர்களுக்கும் இந்தஜனநாயக அமைப்பின் பன்முகத்தன்மை முற்றிலும் விளங்கும்.


அரசு பார்வையில் அரசு ஊழியர்களை வைத்து மட்டுமே நடக்கும் தேர்தல்களல்ல அமெரிக்க தேர்தல்ஒவ்வொருcountyயிலும் தாங்கள் குடியிருக்கும் வீட்டைச் சுற்றியுள்ள சாதாரண மக்களே தங்கள் வாக்குச்சாவடியில் (poll place in their precinct) பணியாற்றுவார்கள்மற்ற precinct லிருந்தும் வந்து பணியாற்றுவார்கள்.


அனைவருக்கும் தேர்தலுக்கு முன் முறையான பயிற்சிஎதையும் மனப்பாடம் செய்யத் தேவையில்லைமனப்பாடம் செய்து மறந்து போய் தவறிழைத்துடக் கூடாதென்று ஒவ்வொருவித வாக்காளர்களின் situationsக்குஎவ்வாறு செயல்பட வேண்டுமென்று வடிவமைக்கப்பட்ட தேர்தல் விதிகள் ஒவ்வொன்றும் flowchart வடிவத்தில்தங்கள் கண்முன்னே வைத்து பணிபுரியும் வசதியுடன் நடப்பதுஇவற்றில் சில வாக்களர்கள் situation பொறுத்துநேரடியா தேர்தலாணையத்தின் ஹெல்ப்லைனில் பேசி உடனடியா வாக்காளருக்கு பணிசெய்ய உதவும்வகையில் வடிவமைக்கப்பட்டவைதவறிழைப்பது மிகவும் அரிது மற்றும் வெகு குறைவாகத்தானிருக்கும்.


மேலும் தொடரலாம்!

Saturday, November 7, 2020

அமெரிக்க தேர்தல் 2020 - பகுதி 3

 அமெரிக்க தேர்தல் 2020 - பகுதி 3

ஒரு தனிமகனின் எண்ணம் இது. அதை பதிவு செய்கிறேன். நான் பலரைப் போல் ஒருவர் வெற்றியையோ ஒருவர் தோல்வியையோ பெரிதாக எண்ணவில்லை. ஆனால் ஜனநாயகத்தின் முழுமையான வெற்றிப்பாதைகள் நம் கண் முன்னே தெரிகிறது. ஒரு polarized election ஜனநாயகத்தை அசைத்துப் பார்க்கக் கூடியது நடந்துள்ளது. மாநில சுயாட்சியின் அதிகாரங்கள் புடம் போட ஒரு சரித்திரம் நிகழ்ந்துள்ளது. 

புதிதாய் வருபவர்களிடம் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கு. செய்வார்களா? எவ்வளவு செய்ய முடியும்? நடத்து முடிந்தவைகளை மாற்றி அமைக்கவே இவர்கள் காலம் ஓடப்போகிறதா அல்லது போன ஆட்சியை விட இவங்க பெட்டர்ன்னு ஒரு ஆப்ஷனுக்காக நடந்து முடிந்த தேர்தலாக முடிந்து விடக்கூடாது!

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மிக அதிக அளவில் வாக்குகள் வந்து குவிந்துள்ளது. இதுவரை பார்க்காத சூழ்நிலையில் தொற்றுநோயின் கிடுக்கிப்பிடி நடுவே இதுவரை அதிகம் நடைபெறாத தேர்தல் வழிமுறைகளை மாற்றி அமைத்து நடத்த வேண்டிய கட்டாயத்துடன் நடந்து முடிந்துள்ளது.

பத்து பன்னிரெண்டு வருடமாக வாக்குச்சாவடி உள்ளே நுழையாதவர்கள் இந்த தேர்தலில் நேரில் வந்து வாக்களிக்கிறார்கள். 3 பேரை நானே நேரில் எதிர்கொண்டேன். வாக்குச்சாவடியில் நுழையும் வாக்காளரை வாக்களிக்கமுடியாமல் வெளியே போவச் சொல்வது voter intimidation, அதைச் செய்ய ஃபெடரல் சட்டம் அநுமதிப்பதில்லை. இவ்வளவு வருடம் வராதவர்கள் எத்தகைய எதிர்பார்ப்புடன் வாக்குச்சாவடி நோக்கி வந்துள்ளனர்.

இவர்கள் எதிர்பார்ப்புகள் போன்றது தான் நம் எதிர்பார்ப்போம். செய்ய வேண்டியவை அதிக அளவில் கண் முன்னே நிற்கிறது.

வாக்காளரை மதிக்கச் சொல்லும் சட்டம், வந்தாரை வாழ வைக்க, குறைந்தபட்சம் மானத்தோடு விளிப்பதற்காகவாவது உதவ வேண்டும்.

எத்தகைய பேரிடரில் எத்தகைய பெரிய வாக்குப்பதிவை மாநில மற்றும் கவுன்டி தேர்தல் மையங்கள் நடத்தியுள்ளது. அந்த வழிமுறையை செழுமைப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. ஆனால் அதையேகேள்விகுறியாக்குமிடத்தில் தகுந்த பதிலளித்துள்ளது கிடைத்த அதிகபட்ச வாக்குப்பதிவுகளே! அது யாருக்கு கிடைத்தது என்பதைப்பற்றி கவலையில்லை! எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பதை உணரவேண்டும். இது ஜனநாயக அமைப்பிலேயே சாத்தியம்.

மேலும் தொடரலாம்!

Thursday, November 5, 2020

அமெரிக்க தேர்தல் 2020 - பகுதி 2

 அமெரிக்க தேர்தல் 2020 - பகுதி 2

அமெரிக்க ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றியே அது மாநிலங்களுக்குத் தரும் மாநில சுயாட்சி, பலம் பொருந்திய மாநிலங்களின் ஆட்சியே அதன் அடிப்படை வேர். மத்திய அரசின் ஆணைகள் சிலவற்றை நிராகரிக்கக் கூடிய சக்தி கூட மாநிலங்களுக்கு உண்டு. அத்தகைய பலங்களில் ஒன்று தேர்தல் நடத்தும் அதிகாரம் அதிக அளவில் மாநிலங்கள் கையிலிருப்பது.

தேர்தலில் முக்கியமானது ஒவ்வொரு பிரஜையின் ஓட்டுரிமை. அமெரிக்கப் பெண்களும் சிறுபான்மையினரும் ஒரு நீண்டதொரு போராட்டத்தில் பெற்றது இந்த ஓட்டு போடும் உரிமை. இதைப் பறிக்கக்கூடிய எந்த ஒரு செயலும் அவர்களை கொதித்து எழ வைக்கும். 

அமெரிக்கா பரப்பளவில் ஒரு மிகப்பெரிய நாடு. 3 வித time zone. ஆதலால் ஒரே நேரத்தில் துவங்கி ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை. அந்தந்த மாநிலங்களே நேரத்தை காலத்தை நிர்ணயம் செய்யும். எத்தனை ஓட்டுச்சாவடிகள் என்பதை தேவைக்கேற்ப மாநிலத்திற்குள் உள்ள county நிர்ணயம் செய்யும். இதெல்லாம் உள்ளாட்சித்துறையின் மிகப்பெரிய அதிகாரம், ஜனநாயகத்தின் வெற்றி இது.

இங்கு நீண்டகாலமாக ஓட்டாளரிடம் ஓட்டுச்சாவடியில் ID கேட்கும் பழக்கம் கிடையாது. பெயர் மற்றும் முகவரி மட்டுமே! ஒரே பெயரில் இருவர் இருந்தால் வயது மற்றும் பிறவற்றை சரிபார்க்கனும். தேர்தலில் இந்த தடவை ஓட்டு போடுபவர்கள் ஐடி காண்பிக்கனும்ன்னு எங்கள் மாநிலத்தில் சட்டம் இயற்றினார்கள். கோர்ட் அதை தடை செய்துள்ளது. கோர்ட் தடையை விலக்கும் வரை ஐடியை காண்பி என்று ஓட்டுச்சாவடியில் சொல்ல முடியாது.

மேலும் பல மாநில அரசுகள் தேர்தலன்றே வோட்டாளர் பதிவுகளையும் அனுமதிக்கிறது. ஆகவே முன்னர் அறிவித்த மொத்த வேட்பாளர் எண்ணிக்கைக்கும், தேர்தலன்றும் அதற்கு முந்தைய தினத்தில் பதிவானவர்களையும் முழுமையாக கணக்கிலெடுக்க வேண்டிய நாளை CANVASS date என்பர். இது எங்கள் மாநிலத்தில் நவம்பர் 13. தேர்தலன்று பதிவானவர்கள் இந்த கேன்வஸ் தேதிக்கு முன் எலக்‌ஷன் கமிசன் அலுவலகத்திற்கு ஏதாவது ஒரு அட்ரஸ் proof கொடுக்கனும் ( ட்ரைவர் லைசன்ஸ், பாஸ்போர்ட், யுடிலிடி பில், இன்னும் பிற வகைகளில் ஏதாவது ஒன்று). அதுவரை இவர்களது ஓட்டுகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படாது சில மாநிலங்களில். இதை provisional ballots என்பர். இந்த canvass date என்பது ஒவ்வொரு countyயும் பதிவான ஓட்டுகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு election processஐ நிறைவு செய்ய certify பண்ணும் நாள். அன்று தான் ஒரு மாநிலத்தின் தேர்தல் முடிவு நிறைவு பெறும் நாள்.

அமெரிக்க மக்கள் இடம் விட்டு இடம் பெயர்வது அதிகம். அத்தகையவர்கள் தங்கள் முகவரி மாற்றும் போது உடனே எலக்‌ஷன் கமிசனுக்குத் தெரிவித்தால் அது உடனே ரிஜிஸ்டரில் பதிவாகும். இல்லாவிட்டால் லைசன்ஸ் மாத்தும் போது dmvல் சொன்னால் அது எலக்‌ஷன் ரிஜிஸ்டரில் பதிவாகும். ப்ரைவசி சட்டங்கள் படி வேட்பாளர் சொல்லாமல் எதையும் மாற்ற முடியாது. 

இறந்து போனவர்கள் பற்றிய தகவல்களை ஏதாவது ஒரு உறவினர் எழுத்து மூலம் தேர்தல் இடத்திலோ முன் கூட்டியோ தெரிவிக்கலாம். அந்தத் தகவலை எலக்‌ஷன் கமிசன் சரிபார்த்த பிறகே வோட்டர் லிஸ்டிலிருந்து இறந்தவர்கள் பெயரை எடுக்க முடியும். இறந்தவர்கள் பெயரில் ஓட்டு போடுவது அல்லது பிறரது பெயரில் ஓட்டு போடுவது felony. கண்டுபிடிக்கப்பட்டால் தண்டனை தான்.

ஓட்டு போடுவது ஒவ்வொருவரது உரிமை. அதை தடை செய்ய இயலாது. தேர்தலிடத்தில் வோட்டாளர் குறிப்பில் சரியாக இருந்தால் வோட்டாளரே தங்கள் ballot ஐ tabulator உள்ளே தள்ள முடியும். அவை உடனே கணக்கிலெடுத்துக் கொள்ளப்படும்.

வோட்டாளர் குறிப்பில் (poll book) பெயர் இல்லாதவர்கள் ஓட்டு போட வந்தால் எலக்‌ஷன் சட்டமுறைகளிலுள்ள செக்லிஸ்ட் ஒவ்வொன்றையும் சரிபார்த்து அவர்கள் provisional ballots மூலம் ஓட்டு போட முடியும். அவை எலக்‌ஷன் கமிஷனர்ஸ்  மற்றும் அப்சர்வர்ஸ் (3, 5, 7 ... மாநிலங்கள் சட்டப்படி) முன் பரிசீலனை செய்யப்பட்டு முடிவுசெய்யப்படும்.

எலக்‌ஷன் முடிந்து இரண்டு நாள் கழித்தும் ரிசல்ட் தெரியலை என்று வருத்தப்படுபவர்களுக்கு, குறை கூறுபவர்களுக்கு, நான் சொல்ல வருவது: ஒவ்வொருவரும் போராடிப்பெற்றது ஓட்டுரிமை. ஓவ்வொரு ஓட்டையும் முறையாக பரிசீலித்து ஒவ்வொன்றையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டியது ஒரு மிகப்பெரிய ஜனநாயகத்தின் கடமை. Every vote counts. Hail our democracy.  அது எவ்வளவு நாட்களானாலும்.

அடுத்த பதிவில் தொடரலாம்!

அமெரிக்க தேர்தல் 2020 - பகுதி 1

அமெரிக்க தேர்தல் 2020

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் அதிபர், செனட், காங்கிரஸ் மற்றும் பல்வேறு மாநிலங்களில் கவர்னர் முதல் மாநில பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்து இப்போது ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது. இன்றைய pandemic காலகட்டத்தில் இது மாதிரி ஒரு தேர்தலை நடத்துவது எளிதான காரியமில்லை. நடத்தியதே ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி.

நடந்து முடிந்த தேர்தல் பல உலக நாடுகளுக்கு இது ஒரு மிகப்பெரிய பாடமாக, உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று. இதுவரை நடந்து முடிந்த தேர்தல்களை விட இந்த தடவை மிக அதிக அளவில் மக்கள் ஓட்டளித்துள்ளனர். கடந்த 10-12 வருடமாக ஓட்டு போடாதவர்கள், மற்றும் தேர்தல் பற்றி இதுவரை கவலைப்படாத பல இளைஞர்கள் தங்களை பதிவு செய்து கொண்டு ஓட்டளித்துள்ள ஒரு மிகவித்தியாசமான் தேர்தல் இது.

முதலில் தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரிகள் கிடைப்பதே அரிதான சூழ்நிலையாக மாறிப்போன ஒன்று இந்த கொரோனா காலம். பெரும்பாலும் ரிடையர் ஆன வயதானவர்களே தேர்தல் நடத்த உதவுபவர்கள், இந்த தடவை அவர்கள் வரவில்லை. பல தேர்தல்களில் என்னுடன் அதிகாரிகளாக வேலை செய்தவர்கள் கொரோனா பயத்தில் வரவில்லை.

புதிய அதிகாரிகள் அநுபவமற்றவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ட்ரைனிங் ஆன்லைனில் மட்டுமே கொடுத்து ஒரு தேர்தல் வேலையில் இறக்கி, முறையான பாதுகாப்பு முறைகளை இக்கொரோனா காலத்தில் கடைபிடித்து நடத்துவது மிகப்பெரிய கடினமான வேலை. அதையும் மிகத் திறமையாக செய்துள்ளனர். வந்த பல புதிய அதிகாரிகளுக்கு கூட இருக்கும் அநுபவமுள்ள அதிகாரிகளே தேர்தலிடத்தில் பலவற்றை சொல்லித்தர வேண்டிய கட்டாயம்.

தேர்தல் அதிகாரிகள் கிடைக்காத பல இடங்களில் தேர்தல் சாவடிகள் குறைந்து போக இதுவும் காரணம். சிலர் நீண்ட க்யூ, திட்டமிட்டு தேர்தல் சாவடிகள் குறைப்பு என்று கருதுகின்றனர். 

இதுவரை நடந்த தேர்தல்களில் தேர்தல் அதிகாரிகளுக்கு குறைந்தது 3 மணி நேரம் நேரில் ஒரு வகுப்பில் ஒரு ட்ரைனர் முன் நடந்தது. என்னைப்போன்றவர்களுக்கு 6 மணி நேர இரண்டு பகுதி ட்ரைனிங். இவையனைத்தும் இந்த கொரோனா காலத்தில் சாத்தியமில்லாமல் போய்விட்டது. அந்த 3 மணி நேர 6 மணி நேர ட்ரைனிங் எல்லாம் இப்ப ஆன்லைன் மூலம் மாற்ற வேண்டியதாகிவிட்டது.

பல தொலைதூர countyகளில் மிகவேகமாக இயங்கக்கூடிய இன்டர்நெட் வசதி இன்றும் சில ஊர்களில் இல்லை. அந்த ஊர்களில் பகுதிகளில் ட்ரைனிங் நேரில் கொடுக்க முடியாத சூழ்நிலை சில countyகளில்.

தேர்தல் சாவடியில் குறைந்தபட்சம் டேபுள் துடைக்க ஆள் வேண்டுமானாலும் அவர்கள் குறைந்தபட்சம் 3 மணிநேரம் ட்ரைனிங் எடுக்கனும். இது உதாரணத்திற்குச் சொன்னாலும் அனைத்து அதிகாரிகளும் எல்லா வேலையும் செய்யனும். கதவு இடுக்குகளைத் துடைப்பது, ஓட்டு போடும் இடங்களை ஒவ்வொருத்தரம் வந்து போன பிறகு ஒவ்வொரு டேபுள் நாற்காலியையும் சானிடைஸ் பண்ணனும். சாதாரணமாக ஏழெட்டு பேர் வேலை செய்யும் சாவடியில் இந்த தடவை 10-12 பேர் வேலை செய்தனர்.

நெருங்கிய மக்கள் தொகை இருக்கும்இடத்தில் சாவடிகள் கம்மி என்று குறைகூறுவது சுலபம். வேலை செய்ய ஆட்கள் தேவை. ட்ரைனிங் எடுத்தவர்கள் மட்டுமே தேர்தலில் வேலை செய்யமுடியும் என்பது சட்டம். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் இந்த 3-6 மணி நேர ட்ரைனிங் அவசியம் என்பதும் சட்டம்.

ஓட்டு போட வரும் ஒவ்வொருவருக்கும் மாஸ்க் மற்றும் பேனா ஒருத்தர் எடுத்துக் கொடுக்கனும். அதை மக்கள் கீழே போடாமல் அவர்களை எடுத்துச் செல்ல வைக்கனும். இல்லாவிட்டால் அவற்றை முறையாக எடுத்து குப்பையில் போடனும். இதுவரை நடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் எலக்‌ஷனில் வேலை செய்யும் ஆட்களுக்கு/அதிகாரிகளுக்கு டபுள் மடங்கு வேலை. ஆட்கள் குறைவு கூட.

போஸ்டல் ballot பற்றி அடுத்த வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

அமெரிக்க தேர்தல் 2020

ஜனநாயகத்துல முக்கியமானது ஓட்டு போடுவது. ஓட்டு போட்ட பிறகு யாரு ஜெயிப்பாக யாரு தோற்கனும்ன்னு தாயகட்டை உருட்டறது ஒரு சுகம். என்ர சுகம் தேர்தல் அன்னிக்கு தேர்தல் அதிகாரியாகப் போய் மக்களுக்கு உதவுவது.

இந்த தடவையும் எங்க ஓட்டுச்சாவடியில தேர்தல் அதிகாரியாகப் போனேன். முதல்ல மொத்த சாவடிக்கு chiefஆகப் போறயான்னு கேட்டாங்க. முன் அனுபவம் இல்லைன்னு அவங்க கிட்டு சொல்லிட்டு, கொடுத்தால் சரி செய்யறேன்னேன். நம் கீழ 10-12 எலக்‌ஷன் அதிகாரிகள் வேலை செய்வார்கள். வேற ஒருவர் கிடைத்ததால், நான் இப்ப கொடுத்திருக்கிற வேலையைச் செய்தாப்போதும்ன்னுட்டாங்க. இதுக்கு முன்னாடி எலக்‌ஷ்ன்ல நீ வேலை செய்தப்ப இருந்த ஒரு சீஃப் ஜட்ஜ் உன்னை ரெகமண்ட் பண்ணியதால் உன்னைக் கேட்டோம்ன்னாங்க.

ஆனால் பாருங்க, இந்த சந்திராஷ்டமம் அன்னிக்குப் போய் இந்த வேலைக்குப் போனால் சந்திராஷ்டமம் சும்மா இருக்குமா! 

அம்மிணி விடியற்காலையில் என்னை ஓட்டுச்சாவடியில் விட்டு விட்டு தான் ஓட்டு போட வரிசையில் நிற்க, 

6.30 மணிக்குத் திறந்த ஓட்டுச்சாவடியில் வந்த முதல் ஆளே என்கிட்ட வந்த ஆளு செமையா பிடிச்சு வெளுத்து வாங்க, அம்மிணிக்கு ஒரே ஆச்சரியம், பயம். அம்மணி உள்ள வந்ததைப் பார்த்தேன், ஆனால் எப்ப வெளியப்போனாப்புலன்னு பார்க்கக் கூட நேரமில்லை. சந்திராஷ்டமம் வெளுத்து வாங்குறான் மனுசன்.

பத்து வருசமாக ஓட்டுச்சாவடிக்கே வராத மனுசன், கடைசியாக ஓபாமா காலத்துல ஓட்டு போட்ட ஆளு, நேத்து வந்து எங்கடா என் ஓட்டுன்னு கேட்க, அவனுக்கு உதவிய அதிகாரிகள் என் கிட்ட அனுப்பிட்டாங்க. மனுசனுக்கு சக்க கோவம். 

காலையில 6.30 மணி, முதல் ஆளு என் கிட்ட, சந்திராஷ்டமத்தின் உக்ரத்தோட, எங்கயா என் பேருன்னு கேட்க, எல்லாம் வெளிறிப்போச்சு எனக்கு. 

எலக்‌ஷன் கமிஷன் ஆபீஸுக்கு முதல் ஆளா போன் பண்ணி, இந்த ஆளுக்கு என்ன பண்ணன்னு கேட்டு, எலக்‌ஷன் சட்டப்படி அந்த ஆளுக்கு ஓட்டு போட உதவி செய்யறதுக்குள்ள அடுத்த இரண்டு பேரை என் கிட்ட அனுப்பிட்டாங்க! என்னடா இன்னிக்கு விட்டு வாங்கப்போவுதுன்னு நினைச்சேன்.

மற்ற அதிகாரிகள் என்னைப் பரிதாபமாகப் பார்க்க, அதுக்குத்தான் நாங்க அந்த வேலையை நாங்க எடுத்துக்கிறதில்லைன்னு எனக்கு அவங்க அறிவுரை சொல்ர மாதிரி சொல்ல, வாழ்க்கையில எவ்வளவோ சந்திராஷ்டமங்களைப் பார்த்து நிந்தனைகளை எதிர்கொண்டு வந்தவனுக்கு இதெல்லாம் ஜுஜுபியா!

இந்த தேர்தலில் எவ்வளவு அநுபவம். ஓட்டுச்சாவடிப் பக்கம் பத்து பன்னிரெண்டு வருசமா வராதவங்கெல்லாம் (மூனு கேஸுக்கு மேல) ஓட்டுச்சாவடி பக்கம் வந்து ஓட்டு போட வர்றாங்க!

அனைவருக்கும் உதவுவதே ஒரு ஜனநாயகக்கடமை!

ஜனநாயக கடமையாற்றிய ஒரு நிறைவோடு!

Monday, November 2, 2020

அசரீரி வாழ்த்தில் நனைகையில்

 டின்னர் சாப்பிடும் போது எதுவும் பேசக்கூடாதுன்னு அமைதியாக தட்டு எடுத்துகிட்டு வந்து டைனிங் டேபுள்ள உட்கார்ந்தேன். நல்லப்பையனா முன்னாடியே டிஷ் லோடு வேறபண்ணியாச்சு. சிக்கல் எதுவும் வேண்டாம்ன்னு அமைதியாக இருந்தேன்.

தோசை வார்த்துகிட்டு இருந்த அம்மணி திடீர்ன்னு ஏதோ சொல்ல, exhaust fan சத்தத்துல ஒரு அசரீரியாட்டும் வந்து விழுந்துச்சு.

அம்மணி முகத்துல சிரிப்போட வேற வந்துச்சா : how come you are always perfect in judging people and say in advance ன்னாப்புல.

பக்குன்னுச்சு. என்னடா ஒன்னுமே சொல்லலை. வசிஷ்டர் வாயில பிரம்மரிஷின்னு வந்து விழுவது. நாளைக்குத் தானே சந்திராஷ்டமம் ஆரம்பம்ன்னு பார்த்தேன். இது என்ன pre-existing conditions மாதிரி வந்து விழுதுன்னு நினைச்சேன்.

வாயில உள்ள போன தோசை தொண்டையிலேயே நின்னுருச்சு.

என் முகம் வெளிறிப்போனதைப் பார்த்த அம்மிணி சிரிச்சுகிட்டே சொல்றாப்புல, அன்னிக்கு வீணைக்கச்சேரிக்குத் தாளம் போட என் நண்பியைக் கூப்பிட்டேன், அப்ப அதெல்லாம் வேணாம்; இத்தனை வருசமா வாசிக்கிற சரளமாக வரவேண்டாமா, வேணும்ன்னா ஃபோன் appஐ வச்சு சவுண்ட் கம்மியாக வச்சு தாளம் போட்டுக்கன்னு சொன்ன, நான் கேட்கலை அப்பன்னாப்புல.

அதுசரி. இப்ப என்ன அதுக்குன்னேன்?

இல்லை. நாலு நாளா உன் கிட்ட சொல்லலை, சொன்னா திட்டுவன்னு. நீ சொன்ன மாதிரியே அந்த நண்பி தப்பு தப்பா தாளம் போட நான் தடுமாறிட்டேன். பக்கவாத்தியம் மிருதங்கம் சின்னப்பையன், அவன் கூட அந்த தாளத்தைத் தவிர்த்துட்டான். 

தாளம் தப்பா போட்டது மட்டுமல்ல, பின்னாடி உடனே ஃபோன்ல கூப்பிட்டு நீ இந்தந்த இடத்துல எல்லாம் கேப் விட்டு வாசிச்சுட்டேன்னு சொல்றா! எனக்கு தலையே சுத்துது ஒன்னும் சொல்ல முடியலைன்னாப்புல.

எப்படி உன்னோட லைப்ல இப்படி பர்பெக்டாவே எல்லாத்தையும் வச்சுக்கிறன்னாப்புல, மறுபடியும்.

என்னய்யா ஆச்சு இன்னிக்கு எனக்குன்னு ஒன்னும் புரியமாட்டேங்குது. சந்திராஷ்டமம் சீக்கிரம் கூட துவங்குமா, இல்லை இந்தியா டயத்துக்கு இங்கிட்டு எபக்டா!

தொண்டையில நின்ன தோசை அதுவும் துப்பாம உள்ள இறங்கிடுச்சு!

அம்மாடி!

வாழ்வினிது.