Sunday, September 25, 2022

ஸ்பானிஷ் கற்கும் பொழுதில் - 14

நேரமின்மை மற்றும் எல்லா நேரமும் ஸ்பானிஷ் கற்பதிலேயே செலவாவதால் மனதைக் கொஞ்சம் திசை திருப்ப ஸ்பானிஷ் கிளாஸ்க்கு ஒரு பிரேக் எடுத்தேன். 

ஆறு மாதம் தொடர்ந்து படிச்ச பழக்கம் விட முடியாம தினமும் ஒரு அரை மணி நேரம் ஸ்பானிஷ் 1 & 2 வை ரிவைஸ் பண்ணி வருகிறேன். கோர்ஸ் பாஸ் பண்ணுவது ஒரு பக்கமிருந்தாலும் அது அந்த மொழியை முழுவதும் புரிந்து கொண்டு பேச இன்னும் நிறைய முயற்சி தேவைப்படுவதால் இந்த பிரேக் எனக்கு அவசியமாகப்படுகிறது.

ஆனால் கற்பிக்கும் புரபசரும் மற்ற சக மாணவர்களும் ஸ்பானிஷ் 3 தொடரச் சொல்கிறார்கள். அடுத்த வருடம் பார்ப்போம்.

அந்த புரபசர் ஸ்பானிஷ் பேசும் மக்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தரும் சர்ச்சுக்கு இன்று அவருக்கு உதவப்போனேன். ஆறு பேரில் மூவர் வெனிசுலா மூவர் க்யூபா. அவர்கள் எல்லோரும் கடந்த ஒரு வருடமாக சர்ச்சில் ஆங்கிலம் கற்று வருகிறார்கள். புரபசரும் ஆறு வருடம் முன்பு தான் வெனிசுலாவிலேர்ந்து வந்தவராதலால் அவருக்கு ஆங்கிலம் தடுமாறும். நாங்கள் போய் உதவுவது அவருக்கு மிக உபயோகமாக இருக்கு.

இரண்டு க்யூபன் மக்கள் பேசுவது சுத்தமாகப் புரியமாட்டேங்குது. மற்றவர்கள் பேசுவது நெத்துகுப்பாகப் புரியுது. நான் புரபசரிடம் எவ்வளவு முயற்சி செய்தும் வார்த்தைகள் வாய்க்குள்ளவே அடைச்சுக்குது பேச வரமாட்டேங்குது, ஆனால் படிச்சா ஓரளவுக்குப் புரியுது என்ன செய்யன்னு கேட்டேன். நீ இப்ப தான் இரண்டு படி தாண்டியிருக்க, இன்னும் நாலைந்து படிகளிருக்கு, வரும், அவசரப்படாதேங்கிறாங்க!

இன்று என்னைப் போல் கூட உதவ வந்த ஆப்பிரிக்க அமெரிக்க சக மாணவி (என் வயசு, என் முன்னாள் சக அலுவலர், கட்டிட இஞ்சினியர்) ஸ்பானிஷ் வார்த்தைகள் பேச முடியாம ஓ ன்னு கிளாஸில் அழ ஆரம்பிச்சுட்டாங்க. ஆங்கிலம் கற்கும் அந்த ஸ்பானிஷ் மக்கள் நாங்களும் இப்ப அதே நிலமைதான்னு ஒருத்தருக்கொருத்தர் ஆறுதல்.

இன்று புதிதாக ஒரு பாட்டியம்மாவும் புரபசருக்கு உதவ வந்தாங்க. அவங்களும் என்னைப் போல ஸ்பானிஷ் 1 & 2 மட்டும் முடித்தவர். பாட்டியம்மா முதலில் என்னிடம் நீ எப்படி இவ்வளவு இங்க்லீஷ் பேசறன்னாங்க. அவருக்கு என்னைப் போல் ஒரு இந்திய வம்சாவளி ஆளும் வந்து இதில் சேருவது ஆச்சரியமாக இருந்தாலும் அவர் நாம பலமொழி பேசுபவர்கள் என்று தெரிந்து வைத்திருக்கிறார். அவர் என்னிடம் ‘இது நீ கற்கும் எத்தனாவது மொழி?’ன்னார். எதிர்பார்க்காத இந்த கேள்விக்கு பதில் சொன்ன பிறகு விழி பிதுக்கி விட்டு வேறு பக்கம் போய் உதவப் போய்விட்டார்.

ஒரு மொழியைப் புதிதாக கற்க ஆறு மாதம் ஒரு வருடமெல்லாம் பத்தவில்லை என்பது எங்களனைவருக்கும் நன்கு புரிகிறது.

பொறுத்திருந்து கற்போம்.
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Aprende de forma lenta y constante!

No comments: