Friday, December 25, 2020

டிசம்பர் மாத அலங்காரங்கள்

 அந்நிய மண்ணில் இருப்பவர்கள் கிறிஸ்துமஸ் சமயத்துல செய்வதெல்லாம் ஒரு ஓவர்ஆக்டிங், சுயவிளம்பரம், இன்னும் என்னன்னவோ பேர் வச்செல்லாம் பகடி வருது.

அடிப்படையில பார்த்தா நகர வாழ்க்கைக்கு நகர்ந்த பின்னர் பக்கத்து ப்ளாட்ல இருக்கிறவங்களோட கூட நட்பாக பழகாத நிலைக்கு நம்ம வாழ்க்கையைச் சுருக்கிய பிறகு, கடந்து வந்த பாதை மறந்து போன பிறகு, எல்லாமே ஒரு சுயநலமாகவும் போலித்தனமாகவும் பார்க்க, புரிந்து கொள்ள வாய்ப்புண்டு!

சின்ன ஊரில கிராமத்துல வளர்ந்த போது, ஒருத்தர் வீட்டுல கல்யாணமோ அல்லது ஏதாவது ஒரு விசேஷம்ன்னா அந்த தெரு முழுவதற்குமே பந்தல் போட்டு தோரணம் கட்டி அந்த தெருவே விழாக்கோலமாக மாறிவிடும். எங்க ஊர்ல ஒருத்தர் வீட்டு பூணலுக்கு கூட அந்த தெருவிலுள்ள அனைவருக்கும் ஒன்னா சமையல் பண்ணி, தெரு மக்களே ஆளுக்கு ஒரு வாளியைத் தூக்கிகிட்டு பரிமாற ஆரம்பிச்சுருவாங்க.

என் நண்பனோட அண்ணனுக்கு பக்கத்து சர்ச்சுல கல்யாணம் நடந்தப்ப, வந்த அனைவருக்கும் இலை போட்டு காலை டிபன் வழங்கியது நானும் இன்னொரு நண்பன் டாக்டர் துவாரக்நாத்தும். 

இதெல்லாம் ஊர் வாழ்க்கையில சகஜம்.

இங்க கிறிஸ்துமஸ்க்கு தெருவெல்லாம் டிசம்பர் மாதம் முதலில் இருந்தே அலங்கரித்து விடுவார்கள். ஒரு சப்டிவிஷனில் 50லிருந்து 200 வீடுகளிருக்கும். அதில் இந்திய வம்சாவளி 10லிருந்து 20 இருந்தா பெருசு! 90 சதவிகித வீடுகள் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் போது, இந்த 5-10 சதவீதம் வேற்று மதம்ன்னு அலங்கரிக்கமாட்டேன்னு சொன்னா, மாலை 5 மணிக்கே இருட்டுகிற ஊரில், மற்ற எல்லா வீடுகளும் பிரகாசமாக இருக்க, உங்கள் வீடு மட்டும் இருளில் இருந்தால் அது எப்படி இருக்கும். வேற்றுமதத்தினர் திட்டமிட்டு பகிஷ்கரிப்பதாக எடுத்துக் கொண்டால் என்ன ஆவது! 

இந்திய இந்துக்களின் முதன்மையான வழிபாடே தீபம் ஏற்றி வழிபடுதல். தீபம் ஏற்றி, விளக்கு ஏற்றி உண்மையாக வழிபடுபவர்கள், கிறிஸ்துமஸ் சமயத்தில் அலங்கரிப்பதை பெருமையாகத்தான் எடுத்துக்கொள்வார்கள்.

ஒரு சப்டிவிஷனில் (குடியிருப்பில்) குடியிருப்பவர்கள் தன் வீட்டு வாசலில் உள்ள புல்லை சரிவர வெட்டாமல், வீட்டு முன்புறம் பளிச்சென இல்லாமல் mold படிந்து இருந்தால் நமது வீடு மட்டும் அந்த குடியிருப்பில் எவ்வாறு தெரியும். மக்கள் இதை எப்படி பார்ப்பார்கள். home owners associationல கேட்பது அப்புறமிருக்கட்டும்.

குடியிருக்கிற வீடு பிரகாசமாக சுத்தமாகஇருக்கனும், அது வாழ்க்கையில் நல்ல சுவாசம் மட்டுமல்ல ஒரு நல்ல மனநிலையோடு வாழ உதவும்கிறது கூட படிச்சது மறந்து போற அளவுக்கு நகர்புற வாழ்க்கையில் ஒளிந்து கொண்டு தன் சுயத்தை இழந்தவர்களால் மட்டுமே சிந்திக்க முடியும்.

இதை வெறும் peer pressure அல்லது ஊரோடு ஒற்று வாழ்ன்னு கடந்து போவது, தனது மனதில் இன்னும் வெளிச்சம் வரவில்லை என்பதைத் தான் காட்டுகிறது.

அதிகாலையில் சூரியனைக் கும்பிடுவதே இருள் விலகி வெளிச்சம் வந்து உலகைப் பிரகாசமாக்கியதின் குறியீடே சூரிய வந்தனம் செய்வது. ஹோமகுண்டத்தில் வளரும் தீயை வணங்குவதும் அதிலிருந்து வரும் ஒளிப்பிரவாகத்தின் vibrations குறித்தே! 

பனிப்பொழிவு காலத்தில், கடும் குளிர்காலத்தில், சூரியன் சீக்கிரம் மறையும் காலத்தில், வீட்டு வாசலில் அலங்கரிக்கப்படும் அலங்கார மின் விளக்குகளும் நம் வாழ்வு பிரகாசமாக ஒளிர ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டு வழக்கப்படி செய்து கொள்ளும் ஒரு வழிபாடே!

புரிந்தவர்கள் வாழ்வினிது!
ओलै सिरिय !

Wednesday, December 23, 2020

துலாபாரம் தடுமாறும் பொழுதில்

 குற்றம் செய்திடல் கொற்றவனின் கருணையுடன்
கருணையின் குற்றம் கொற்றவனின் கையூடல்
மண்ணின் குற்றம் கொற்றவனின் அரியணை!

வாழ்வியல் நீதி கொற்றவனுக்கில்லை
மண்ணின் நீதி மனிதனுக்கில்லை
ஏற்றமும் இறக்கமும் கொற்றவன் அசைவில்!

வழித்தடம் வகுத்தல் கொற்றவனுக்கு அழகு
நீதியும் நேர்மையும் தராசின் நுனியில் தடுமாறின்
கொற்றவன் வகுத்ததே சமணின்றி பாரங்கள்!

மனிதன் வகுக்கும் நீதிபரிபாலனம்
கொற்றவன் கையில் சிக்கிய பூமாலை போல்
உதிரும் மலர்கள் மண்ணின் அவலம்!

துலாபாரம் தடுமாறும் பொழுதில்!

ओलै सिरिय !

Thursday, December 17, 2020

தனிமையில்லை இவ்வுலகில்

அண்ணனுக்கு 60 வயது போன மாதம் பூர்த்தியடைந்தது. பிறந்த தினம் அன்று கோவிலில் சிறப்பு பூஜை செய்து கொள்ளலாம்ன்னு நினைத்தால் வரிசையாக உறவினர்கள் தவறியதில் சாத்தியமில்லாமல் போயிற்று.

அடுத்த மாதம் வருகிற நட்சத்திரத்தில் செய்து கொள்ளலாம் என்று சொன்னதால் நேற்று வாரத்தின் நடுநாளான புதன்கிழமையில் அண்ணன் நட்சத்திரத்தில் வைத்து, வர்ஜீனியாவில் எல்லாம் இனிதாய் நடந்து முடிந்தது.

அண்ணன் அண்ணி சாஸ்திரி தவிர நான் மட்டுமே கலந்து கொண்டது. இந்த stormல் எப்படி தனியாக வர்ஜீனியா போய் வருவது என்று கலக்கமாக, இருந்தாலும் அடாது கொட்டிய பெரும் மழையில் சென்று வந்தாகி விட்டது. போகும் போது பரவாயில்லை. வரும்போது செம அடைமழை.

இந்தியாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் உறவினர்கள் பார்க்க வேண்டும் என்று சொல்ல, எப்படி லைவ் ஒளிபரப்பு செய்வது என்று தடுமாறி கடைசியில் ஒரு ஃபேஸ்புக் லைவ் மற்றும் ஒரு கூகுள் மீட் ஒன்றும் கடைசியில் அங்கு அநுமதி கேட்டுப் போட்டு அனைவரும் கண்டுகளிக்க ஏற்பாடு செய்துவிட்டேன்.

அதுவரை என்னடா இது எந்த உறவினர் நண்பர்கள் இல்லாமல் தனிமரமா நிற்கிறோமே என்ற கவலைகள் எல்லாம் இந்த லைவ் பிராட்காஸ்டில் பார்த்த உறவினர்கள் அனைவரும் போக்கி விட்டனர். தொடர்ந்த அவர்களது chattering ஐ கேட்க கேட்க எல்லோரும் கூடவே இருக்கிற ஃபீலிங். அவர்களும் அதே சென்டிமன்ட்டை அங்கிருந்தே தெரிவிக்க மிக நிறைவாக இருந்தது.

அவர்களோட chattering எல்லாம் கேட்கக்கேட்க ஏதோ மண்டபத்தில் பக்கத்துல உட்கார்ந்து கேட்கிற ஃபீலிங். எல்லோரும் கூடவே இருக்கிற ஃபீலிங்.

எல்லோருக்கும் என்னுடைய நன்றியை இவ்வாறு தெரிவித்துக் கொண்டேன்: When you all were there virtually, and hearing every single chatters, I never felt was alone there. Thanks all, you made our day.

வாழ்வினிது!
ओलै सिरिय !

Saturday, December 12, 2020

செயலற்று நின்ற பொழுதில்

 பொழுதன்னிக்கும் தன்னோட வீணைகளோடே ஜீவனம் செய்யும் அம்மிணி தன்னோட ம்யூசிக் ரூம்ல லைட் பத்தலைன்னாங்க! சரி, இருந்த பல்ப் இரண்டையும் எடுத்துபுட்டு நல்ல பவுர்ஃபுல் பல்பு ஆறு மாதம் முன் போட்டேன். நல்லாத் தான் ப்ரைட்டா இருந்துச்சு.

நேற்று காஸ்ட்கோ போனப்ப ஒரு LED ceiling light பார்த்தேன். டிஸ்கவுண்டல அவங்க போட்டதால வாங்கி வந்தேன். பையன் ரூம்ல ஆறு மாசம் முன்ன போட்ட led விளக்கு பிரகாசமாக இருப்பதால், இப்ப குளிர்காலத்துல சாயந்திரம் 5 மணிக்கே இருட்ட ஆரம்பிப்பதாலும், அம்மிணி சாயவேளையிலிருந்து இரவு தூங்கப் போகும் வரை அங்கயே செலவிடுவதால், இன்று அந்த ரூமைப் பிரகாசமாக்கிடனும்ன்னு செயலில் இறங்கினேன்.

ஆமை புகுந்த இடம் மாதிரி, அம்மிணி ரூம்ல நாம காலை வைச்சா என்ன ஆவும், அதே தான் ஆச்சு.

இருக்குற 4 வீணையையும் அந்த ரூம்ல ஒதுக்கச் சொல்லிபுட்டு, ஒரு 5 அடி ஏணியில ஏறி பழைய சீலிங் லைட் யூனிட்டைக் கழட்டினேன். இரண்டு கையையும் நீளமாக உயர்த்தி செய்ய வேண்டிய அளவு சீலிங் உயரம் வேற அந்த ரூம்ல. ஒரு ஏழெட்டு அடி ஏணியில ஏறியிருந்தா சுலபமாக செய்திருக்கலாம்.

இந்த குட்டி ஏணியில பல தடவை ஏறி இறங்க சிரமமாக இருந்ததால் சமையல்கட்டுல இருந்த அம்மிணியை உதவிக்கு கூப்பிட்டேன். பையனைக் கூப்பிடுங்க அவன் உயரத்துக்கு சுலபமாக முடியும்ன்னாப்புல. எலக்ட்ரிசிட்டி வேலையில ஒன்னும் தெரியாத இளசை விட்டா ஒன்னுக்கு இரண்டா நஷ்டமாகிரும். எது சொன்னாலும் கேட்க மாட்டான். தனக்கு எல்லாம் தெரியும்கிற பருவம். அம்மிணியை கம்முனு இருன்னு அடக்கிட்டேன்.

பழைசை முற்றிலும் கழிட்டிபுட்டு, புதுசோட base unitன் வயர் மூன்றையும் கனெக்‌ஷன் சரியாகக் கொடுத்து, லீக் செக் பன்ற வோல்டேஜ் டிடக்டர் வச்சு எல்லாம் சரி பார்த்துபுட்டு, யூனிட்டை ஸ்க்ரூ பண்ணி டைட் பண்ற நேரத்துல இடது கை மேல தூக்க முடியாமப்போயிருச்சு. இடது கையில பிடிச்சாத் தான் வலது கையில டைட் பண்ணமுடியும். இடது கை தூக்கவே முடியலை. ஒரு விதக்கலக்கம். இது என்ன புதுசா இது மாதிரின்னு பயம். 

யூனிட் வயர் கனெக்‌ஷனோடு தொங்குது. இனி எலக்ட்ரீஷியனை எப்ப கூப்பிட்டு என்ன செய்வதுன்னு கலக்கும். பக்கத்து வீட்டுக்காரரைக் கூப்பிடலாம். ஆனால் வசனங்கள் கேட்க வேண்டி வரும். 

தடுமாறி அந்தரத்துல நிற்கையில அம்மிணி சொல்றாப்புல நீங்க கீழ இறங்குங்க நான் பண்றேங்கிறாங்க. இதென்ன புது சோதனைன்னு நினேச்சேன். அம்மிணி என்னை விட குட்டை. இரண்டடி ஸ்டெப் ஸடூல்ல ஏறுவதற்கே தயங்கும் அம்மிணி, ஐந்தடி ஏணியில ஏறி எம்பி எப்படி டைட் பண்ணுவாப்பல, பின்னாடி கிளாஸ் வைச்சு எப்படி சீல் பண்ணுவாகன்னு சந்தேகம். வாழ்க்கையில இதுவரை அவங்க இதெல்லாம் செய்ததேயில்லை.

என்னோட கஷ்டத்தைப் பார்த்து மிக தைரியமாக ஏணி மேல ஏறிட்டாப்புல. எம்பி கையை மேல உசத்தி துக்கி அதை டைட் பண்ணியதுமில்லாம, நழுவி விழற கிளாஸையும் பிடிச்சு கிட்டு ஃபிக்ஸ் பண்ணியதைப் பார்த்து அசந்து போய் நிக்குறேன். ஒத்த கையில குச்சியைப்பிடுச்சு கொஞ்சம் ஒத்தாசை செய்துகிட்டு இருந்தேன்.

அம்மிணிக்கு இவ்வளவு தைரியம் எப்படி வந்துன்னு தெரியலை. அம்மிணி முகத்துல அம்புட்டு சந்தோஷம். இனி எல்லா ரூமிலும் நாமே மாத்திரலாம், தான் செய்யறேங்குறாப்புல. அவ்வுளவு பெருமை முகத்துல.

சரி எல்லாம் ஆச்சு. என் வீணை ரூமைக் காலி பண்ணுங்க. க்ளீனாக இருக்கனும்கிறாப்புல, இடது கை பழய படி வேலை செய்ய ஆரம்பிச்சுருச்சு. ஒன்னு விடாம எல்லாத்தையும் க்ளீன் பண்ணிபுட்டு வந்தேன்.

என்னவொரு சோதனை தேவையற்ற நேரத்துல வருது! ஒருத்தருக்கு புது தைரியம் வருது! அசாத்தியமானதாக இருக்கு. இனிமேல் எல்லாம் ஆள் வச்சுத்தான் செய்யனும்.

வாழ்வினிது!

ओलै सिरिय !

Tuesday, December 8, 2020

உறங்கா தனிமையில் ஒரு நாள்

 மனம் ஒற்றி இல்லை மலைபோல் மகுடு

உறங்க உயிலா மனவலைகள் வகுடாய்

தூரதேசத்தில் ஒவ்வொன்றாய் நிழலாட

தொலைபேசி தொடர்புகளே உறவாடுது!


ஏற்றம் இறக்கம் வாழ்விலில்லை தனிமையே

பனிவிழும் சூழலில் புயலாய் மன ஓசைகள்

தொடர்ந்து வரும் நிகழ்வுகளுக்கு 

வழி வகுக்கும் இயல்புகளின் திசைகரங்கள்!


எண்ணங்கள் சிதறாமல் செல்லுதல் கொடுப்பினை

வழித்தடம் வகுத்துக் கொடுக்கும் உறவுப்பிடிகள்

எக்கரையில் ஒதுங்கினாலும் மறுகரையில் பாசமாய்

வந்து செல்லும் பாதையில் தடையற்ற பயணம்!


உறங்கா தனிமையில் ஒரு நாள்!

புனர்வாழ்வு புனர்ஜென்மம்

என்னோட அஸ்ஸாமிய நண்பன் நாசர் அகமது மெத்தப்படித்தவன், நல்ல பணக்காரன், சிறந்த பண்பாளன், அதிக நாட்டுப்பற்று கொண்டவன். அவனது தங்கை அரசு அதிகாரி, அவரும் மெத்தப்படித்தவர்.

நான் அங்க கம்ப்யூட்டர் இன்ஸ்டிட்யூட்ல டீச்சராக இருக்கும் போது நாசர் கால்நடை மருத்துவக்கல்லூரி மேல்நிலைப்படிப்பு மாணவன். அவனது மாஸ்டர்ஸ்க்கு புள்ளியியல் கணக்கெல்லாம் கம்ப்யூட்டர்ல செய்துகொடுன்னு என் கிட்ட வந்தான். அவனுக்காக புதுசு புதுசா பேசிக் மொழியில புரோகிராம் எழுதிக் கொடுத்தேன். அன்றிலிருந்து இன்று வரை சிறந்த நண்பன். இன்று ஒரு அயல்நாட்டில் ஒரு சிறந்த அதிகாரி. 

நான் எனது மேல் படிப்புக்கு போய்விட்டு 92ல் திரும்பி வரும் போது, அவன் கல்லூரி மாஸ்டர்ஸ் முடித்த கையோடு அதே மருத்துவக்கல்லூரியில் அசிஸ்டண்ட் புரபசராக சேர்ந்து விட்டான்.

கௌஹாத்தி பூரா அவனோட சுத்தாத இடமில்லை. அவனிடமிருந்து நான் கற்றுக்கொண்டது நிறைய. ஆனால் அவன் இன்றும் சொல்கிறான் இது நமக்குள்ள ம்யூச்சுவல், உன்னிடமிருந்து கற்றுக்கொண்டது நிறைய என்கிறான். அது எந்த அளவுக்கு கிரேசின்னா, 92 கடைசியில் நான் அஸ்ஸாமை விட்டுவிட்டு வந்த பிறகு, நான் உட்கார்ந்திருந்த அதே சீட்டில் அதே கால்நடை மருத்துவக்கல்லூரி அலுவலகத்தில் நான் செய்த அதே கம்ப்யூட்டர் வேலையைச் செய்தானாம். அதில் பெற்ற திருப்தி அநுபவம் பெற்ற பிறகு தான் அவனது பயணத்தில் இன்று அயல்நாட்டில் போய் செட்டிலானானாம். இன்றும் ஒரு சிறந்த அதிகாரி அவன்.

அவனிடமிருந்து நான் கற்றவை மிக அதிகம். இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன். அவனை ஒரு நாள் ஒரு இடதுசாரி கட்சி அலுவலகத்திற்குக் கூட கூட்டிப் போனேன். ஆனால் அந்த அலுவலகத்தில் எங்களிடம் நீங்கள் இங்கு வராதீர்கள் என்று சொல்லிவிட்டார்கள். அல்ஃபா உங்களை எளிதில் அடையாளம் கண்டுகொண்டு போட்டுத் தள்ளிவிடுவார்கள் வராதீர்கள் என்றனர். பிறகு அங்கு போகவில்லை.

அங்கு நான் இருந்த காலத்தில் அல்ஃபாவின் அட்டகாசங்கள் தீராத ஒன்று. பிரதான சாலையிலேயே படுகொலைகள் குண்டுவெடிப்பு நடக்கும். நான் தனியாக குடியிருந்த வீட்டில் பக்கத்து போர்ஷன் ஒரு சப்இன்ஸ்பெக்டர், செம குடிகாரர். ஆனால் அவர் பையன் அல்ஃபாவில சேர்ந்து அப்ப புதுசா பைக் வாங்கியதைப் பெருமையாகச் சொல்வார். அப்ப அங்கு பல பெற்றோர்க்கு அவர்கள் பிள்ளைகள் அல்ஃபாவில்(உல்ஃபாவில்) சேருவது பெருமை கூட. அவரையும் அல்ஃபா போட்டுத் தள்ளி விட்டதாக நான் 92ல் அங்கு படிப்பு முடித்து திரும்பிய போது சொன்னார்கள்.

ஒரு நாள் மதியம் 3 மணிக்கு நாசர் அவன் வீட்டுக்கு வரச்சொன்னான். அவனோட அம்மா போட்டுக்கொடுத்த அஸ்ஸாம் டீயை சுவைச்சிட்டு பேசிகிட்டிருந்தோம்.

அப்ப ஒரு மாருதி 800 கார் வந்தது. வா போலாம்ன்னான். நான் பின் சீட்டுல உட்கார நாசரும் அவனும் முன்னாடி சீட்ல உட்கார்ந்து அசாமில பேசிகிட்டு வந்தாங்க. எனக்கு அஹோமியா புரியும் பேச வராது. ஏதோ farm செட் அப் பண்ணனும்ன்னு அவன் கேட்க, நாசர் கால்நடை மருத்துவன்கிறதால அவனுக்கு பண்ணை வைக்க என்ன பண்ணனும்ன்னு சொல்லுன்னு கேட்டுகிட்டு வந்தான். 

சரி ஏதோ பிசினஸ் டீல்ன்னு நினைச்சேன். அந்த பண்ணை இடம் வந்து சேர்ந்த பிறகு, காரோட்டி இறங்கிப் போனான். நாசர் என் கிட்ட திரும்பி கேட்டான் இவன் யாருன்னு தெரியுமான்னான், தெரியாதுன்னேன். இந்த பையில என்ன இருக்கு தெரியுமா, கைத்துப்பாக்கி இருக்குன்னான். 

என் நெஞ்சு பக் பக்ன்னு அடிக்க ஆரம்பிச்சுருச்சு! அவன் யாருன்னு புரிஞ்சு போச்சு! என்னை ஏண்டா இவனோட கூட்டி வந்தேன்னேன். ஏண்டா இங்க வந்து என் உசுரு போகனுமான்னேன்.

இருடா! வரும்போது அவன் கார் ஓட்டி வந்த விதம் பார்த்தையான்னான். இல்லையேடான்னேன். ஒரு கை அந்த துப்பாக்கியிலும், அவன் கண்ணு இந்த காரை யாரோ ஃபாலோ பண்றாங்களான்னு பார்த்து கிட்டே வந்தான் பாருன்னு இன்னும் பயமுறுத்தினான்.

யார்றா இவன். எதுக்குடா நமக்கு இந்த வேலைன்னேன்.

நான் அரசு கால்நடை மருத்துவன்டா! கால்நடை பண்ணை அமைக்க யார் உதவி கேட்டு வந்தாலும் செய்ய வேண்டியது நம்ம கடமைடான்னான். அரசு வேலைடான்னான். அவன் டிபார்ட்மண்ட் அது.

இவன் யார்றான்னேன்.

அல்ஃபாவோட முன்னாள் பப்ளிசிட்டி செகரெட்டரி இவன். பெயரும் சொன்னான். அந்த பெயரைக் கேட்ட உடனே உசுரேப் போச்சு. இருடா, இவன் இப்ப அரசுகிட்ட சரண்டைந்த முன்னாள் அல்ஃபா, இப்ப சல்ஃபான்னான். 

அடப்பாவின்னேன். அந்த பெயர்களெல்லாம் அசாம் வீதிகளில் மிகப்பிரபலம் அப்ப. எல்லா லோக்கல் பேப்பர்களில் வரும்.

இப்ப அரசு கொடுக்கிற மானியம் மற்றும் பேங்க் லோன் மட்டுமல்ல, அரசு அநுமதி பெற்ற துப்பாக்கி இது. இந்தப் பண்ணை வைக்க இவன் சொல்ற அமௌண்ட் ஏதோ பேங்குல கொள்ளை அடிச்சுருப்பான், கொள்ளையடிக்கத்தான்டா அதுல சேர்றானுங்க, அதோட அரசு கொடுத்த பணத்தையும் போட்டு பண்ணை வைக்கறான். ஒரிஜனல் அல்ஃபா இவனை குறியும் வச்சிருப்பாங்க! அதான் இவ்வளவு உசாரா இருக்கான். பின்னாடி தூரத்துல சிஐடி கார் வரும். இல்லாட்டி இவனுங்க எல்லாம் இந்த பகல்நேரத்துல இவ்வளவு ஃப்ரீயா சுத்த மாட்டாங்கன்னான்.

திரும்பி நாசர் வீடு வர்றவரை கையில உசிரு இல்லை! அந்தக் கார்ல திரும்பும் போது முகம் பேயறைஞ்சு போச்சு எனக்கு. 

வந்த பிறகு நாசர் சொல்றான் நான் செய்யற இந்த வேலையும் அரசு வேலைதாண்டா. இவனுங்களுக்கு rehabilitation இதுன்னான்.

இனிமே இது மாதிரி வேலைகெல்லாம் என்னை இழுக்காதே, எனக்கு என் உசிரு முக்கியம்ன்னு சொல்லிட்டு வந்தேன்.

வாழ்க்கையில நேரிலப் பார்த்த பயங்கரவாதி கொலைகாரனுக்கு அரசுதவியோட புனர்வாழ்வு.

நமக்கு பக் பக்ன்னு இவனுகளைப் பார்த்தா அடிச்சுக்குது. எத்தனை கொலைகள் கொடூரங்கள் அந்த கௌஹாத்தி வீதிகளில்!

முகநூலில் பார்த்த இன்னொரு போஸ்ட் பார்த்து பழையது ஞாபகத்திற்கு வந்தது.

முருகா காப்பாத்து!
ओलै सिरिय

Sunday, December 6, 2020

வேலைக்கான தகுதி எடைபார்த்தலில்

 அஸ்ஸாம்ல போன பத்து பதினைஞ்ச நாள்க்குள்ளவே வீட்டுல சும்மா உட்காரேதேன்னு ஒரு ஆடிட்டர் ஆபீஸ்ல பொட்டிதட்ட அண்ணன் அனுப்பிட்டான். அவனே பேசி அவனே 1000 ரூபாய் சம்பளமும் பேசி துரத்திட்டான். மூனு மாசம் அங்க ஓட்டியிருப்பேன்.

பின்னாடி அரசு உதவியில நடக்கும் ஒரு இன்ஸ்டிட்யூட்ல ஜூனியர் ப்ரோகிராமர்/அசிஸ்டண்ட் புரபசர் வேலைக்கு பேப்பர்ல விளம்பரம் வந்தது. கௌஹாத்தி யுனிவர்சிட்டி கம்ப்யூட்டர் சயின்ஸ் புரபசர் எச்ஓடி தான் இன்டர்வியூ பண்ணினார். நான் அப்ப தான் கல்லூரி படிப்ப முடிச்சு வந்திருக்கேன், இன்னும் மாணவன்கிற மென்டாலிட்டி தான். இன்டர்வ்யூ பண்றவர் பெரிய புரபசர், மிகவும் பிரபலமானவர். அவர் முன்ன போட்டிருந்த சேர்ல உட்காரச்சொன்னார். பெரிய புரபசர் முன்ன உட்கார மனசு வரலை. நுனி சீட்ல உட்கார்ந்தேன். ரிலாக்ஸ்ன்னார்.

இன்டர்வியூ எல்லாம் முடிஞ்சு கடைசியில எழுந்து போகுற நேரத்துல அவர் சொன்னார். என்னோட பல ஸ்டூடன்ட்ஸ் இந்த போஸ்ட்டுக்கு அப்ளை பண்ணியிருக்காங்க, எல்லோரையும் இன்டர்வ்யூ பண்ணியாச்சு நீ தான் கடைசி, நீ ஒருத்தன் தான் எங்கிருந்தோ இங்க பிழைப்பு தேடி வந்துருக்க. நீ எல்லாத்துலையும் அதிகம் மார்க் வாங்கலைன்னாலும், என்னோட சில ஸ்டூடண்ட்ஸ் உன்னை விட அதிக மார்க் வாங்கியிருக்காங்க. ஆனால் ...

ஆனால்ன்னு சொல்லி நிறுத்திட்டார்.

என்ன சொல்லப் போறார்ன்னு பக்குன்னுச்சு. ஏன்னா அந்த காலத்துல அஸ்ஸாம் agitation மும்முரமாக நடந்து முடிந்து பிரஃபுல்ல மகந்தா முதலமைச்சர் வேற. 
சரி நமக்கு கிடைக்காது நினைச்ச நேரம், வாயைத் திறந்தார்.

இந்த போஸ்ட் நான் உனக்குத் தர்றேன். அதுக்கு ஒரே ஒரு காரணம் தான். அவர் டேபுள் முன்ன இன்டர்வியூ ஆரம்பிக்கிறதுக்கு முன்ன நான் கொடுத்த என்னோட மார்க்‌ஷீட்ஸ் எல்லாம் பரப்பி வைத்திருந்தார். சொல்றார். நீயும் மற்றவர்களைப் போல் எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தாய். ஆனால் இதுல பார் உன் 10வது, 12வது, டிகிரி, மாஸ்டர்ஸ்ல இருக்கிற ஒவ்வொரு ஷீட்லையும் பார், ஒரு consistency இருக்கு பார். The same score percentage, no fluctuations தெரியுது பார். Inadvertently you have some mental stability and it is needed when you live in an outside domain where you are not accustomed to in life. when you get stress you will be able to handle it easily ன்னார். அதுக்காவே இந்த போஸ்ட் உனக்குத் தர்றேன்னு சொல்லிக் கொடுத்தார். 2200 ரூபாய் அரசு சம்பளம். அப்ப அவர் சொன்ன இந்த காரணங்கள் எதுவும் புரியலை. புரிஞ்சுக்கிற வயதுமில்லை. 23-24 வயசு தான். மிக மிக மரியாதையோட எழுந்து நன்றி சொல்லிட்டு வந்தேன்.

அடுத்த ஆறு மாதத்துல இன்னொரு போஸ்ட்ல அவரோட ஸ்டூடண்ட்க்கு கொடுத்தார். அந்த ஸ்டூடண்ட் வந்து என் கிட்ட சொன்னான், போன இன்டர்வ்யூவிலேயே நான் ரொம்ப நல்லா பண்ணினேன், நான் அவரோட பெஸ்ட் ஸ்டூடண்ட், ஏன் அப்ப கிடைக்கலைன்னு தெரியலைன்னான். நான் அவன்ட்ட ஒன்னும் சொல்லலை. அவர்ட்டயே பிஎச்டி பண்ணப் போறேன்னு சொல்லிகிட்டு இருந்தான்.

நான் என்றும் போற்றும் மாமனிதர் கௌஹாத்தி யுனிவர்சிட்டி புரபசர் அவர்.

வாழ்வினிது
ओलै सिरिय

குழந்தைகளே ஆசிரியர்கள்

 1987 ஜூலை 7ந்தேதி கடைசியாக தமிழகத்தை விட்டு கிளம்பியது. சேலத்திலிருந்து கௌஹாத்தி எக்ஸ்ப்ரஸ்ல அப்பா அம்மாவோட ஏறி 10ந்தேதி கௌஹாத்தி வந்து இறங்கினோம். மூனு பேருக்கும் ஒரு வார்த்தை इिन्दि தெரியாது. அண்ணன் ஸ்டேஷன் வந்து கூட்டிப் போனதால தப்பிச்சோம்.

பக்கத்து வீடு சர்தார்ஜி குடும்பம். இரண்டு குட்டிப் பெண் குழந்தைகள், இன்னும் ஸ்கூலுக்கு கூட போகலை அது. வீட்டுல கணவன்-மனைவி பஞ்சாபியில பேசிகிட்டாலும், குழந்தைங்க கிட்ட ஹிந்தி தான் பேசுவாங்க. ஸ்கூல் போக ஆரம்பிச்சா அஸ்ஸாமி வேற கத்துக்கனும். 

அந்த இரண்டு குழந்தைகளும் தான் எனக்கு हिन्दि டீச்சர்ஸ். முதல்ல நான் கத்துகிட்ட வரிகள் ये (यह्) क्या है தான். இதைச் சொல்லிச்சொல்லியே அந்த குழந்தைங்களைத் துளைச்சு எடுத்து ஒவ்வொரு வார்த்தையாக் கத்துகிட்டேன். ஏதோ தப்பா சொல்லிட்டா வாசல்ல எச்சையைத் துப்பிட்டு ஓடிரும். तू मत करன்னு அதுங்க கிட்ட சொல்ல வராது! துப்பாதே துப்பாதேன்னு தமிழிலேயே சொல்லி சொல்லியே அதுங்க முதல் வார்த்தை து வை வைச்சு புரிஞ்சுக்கும்.

இப்ப அந்த குழந்தைங்க பெரிய யுவதி ஆகியிருக்கும். தொடர்பு இல்லாமப் போயிருச்சு! அசாமில இருந்த பிரச்சனைகளால சொந்த ஊர் அம்ரித்ஸர் போயிடுவேன்னாங்க. தெரியலை. தேடனும்.

அக்குழந்தைகள் நினைவில்

வாழ்வினிது!


ओलै सिरिय !

Tuesday, December 1, 2020

சுயமாய் செய்திடல் காலத்திற்கேற்ப

 பல இடங்களில் பல க்ரூப்களில் சேமிப்பது, ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட்மண்ட் பத்தியெல்லாம் நிறைய க்ரூப்ல நிறைய பேர் பேசறாங்க!

நாம எவ்வளவு பேசினாலும் கொஞ்சம் யோசித்து செய்ய வேண்டியது அன்றைய சூழ்நிலையில் எந்த மாதிரி ஸ்டாக் வாங்கனும்ன்னு பார்த்து வாங்கினால் தான் ஓரளவுக்கு சம்பாதிக்க முடியும்.

மத்தவங்க சொல்லி வாங்கிப் போடலாம்ன்னு செய்யுற செயல்கள் அதிக பலனைத் தராது. எல்லோரும் சுயமாக யோசித்து, இன்றைய சூழ்நிலைக்கு என்ன வாங்கனும்ன்னு பார்த்து வாங்கினால் தான் லாபம் பார்க்க முடியும்.

ஒபாமா வந்த காலத்துல அவர் புது ஹெல்த்கேர் பிளான் கொண்டு வரப்போறேன்னார். அந்த சமயத்துல ஹெல்த்கேர் ஸ்டாக் அல்லது ம்யூச்சுவல் ஃபண்ட்ல இன்வெஸ்ட் பண்ணவங்க இன்று 300-500% சம்பாதிச்சுருக்க வாய்ப்பிருக்கு.

ட்ரம்ப் வந்தப்ப முதல்ல இன்ஃப்ராஸ்டர்க்ச்சர், பார்டர்ல சுவர் எழுப்பறதைப்பத்தி தான் அதிகம் பேசினார். அந்த கட்டத்துல கேட்டர்பில்லர், ஜான் டியர் போன்ற கம்பெனிகளின் ஸ்டாக் வாங்கியிருந்தா டபுள் ஆகியிருக்கும்.

இன்றைய கொடுநோய் கொரோனா காலத்துல ட்ரம்ப் அதிகம் கவனம் செலுத்தியது செலவழித்தது எல்லாம் கொரோனாக்கு தடுப்பூசி, சுவாசத்திற்கு வென்டிலேட்டர் போன்றவற்றில் தான். அதைத் தயாரிக்கும் கம்பெனிகள் ஸ்டாக் மற்றும் ஃபார்மசிகள் ஸ்டாக் மற்றும் ஹெல்த்கேர் ஸ்டாக்கில் இன்வெஸ்ட் பண்ணும் போது மட்டுமே அதிகம் சம்பாதிக்க முடியும். 

மேலும் இந்த கொரோனா காலத்தில் எல்லோரும் வீட்டிலிருந்தே படிக்க வேண்டும், வேலை செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் வரும்போது, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், கம்யூனிகேஷன் டெக்னாலஜி ஸ்டாக்குகள் ம்யூச்சுவல் ஃபண்ட்ஸும் தான் பலன் கொடுக்கும்.

அடுத்து வரும் பைடன் ஆட்சியில் அவர் எதில் அதிக கவனம் செலுத்தப்போகிறார் என்று தெரிந்து கொண்டு இன்வெஸ்ட் செய்தால் மட்டுமே சம்பாதிக்க முடியும்.

மற்றவர்கள் சொல்லி வாங்குவதும் சரி. கொஞ்சம் சுயமாக சிந்தித்து நாமே வாங்கி விற்பது அதிக பலனீட்டும்.

முயல்பவற்களுக்கு வாழ்வினிது!