Sunday, May 27, 2012

வனச்சுவடு


பாணதீர்த்தம் போய் ஆறு மாதமானாலும் அந்த சூழ்நிலை நிகழ்வுகள் மனதை விட்டு விலக மாட்டேங்குது. முண்டந்துறை காடு அதன் வளம் ஒரு நீங்கா நினைவாக அமைந்து விட்டது.

எனது நண்பர்கள் நீண்ட காலமாக இயற்கை, வனாந்திரம், வன விலங்குகளை பார்க்க நீண்ட பயணம் செய்து வனச்சுவடு பதிப்பதில் பேரின்பம் அடைவர். இந்த தடவை ஒரு கீறி பாம்பை இழுத்துச் செல்லும் காட்சியைப் பார்த்ததிலிருந்து தனித்துவம் அடைந்து விட்டது எங்கள் பயணம்.

எனது நண்பர்கள் உணவை விரும்பிச் சுவைத்து சாப்பிடுவார்கள். அதற்கான முன்னேர்ப்பாடுகளை நன்கு செய்து விடுவார்கள். இந்த ஏற்பாடு எதுவும் இந்த தடவை இல்லை. முண்டந்துறை வனக் காவலர்களின் சமையல் காரரிடம் சொல்லி ஏதாவது செய்து கொள்ளலாம் என்று நினைத்ததும் நடக்கவில்லை. தாமிரபரணி ஆற்றின் மீன் சுவை அதிகம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தேடிய பெண்மணி சுட்டுக் கொடுக்க இல்லை.

வனக்காவலர்களே அங்குள்ள ஒரு சிறு உணவு விடுதியைக் காண்பித்தனர். விடுதி ஒரு கூரை வேய்ந்த ஒரு தடுப்புச் சுவற்றுக்குள் நான்கு மேசை மீது. தடுப்புக்கு பின் புறம் காட்டு விறகு வைத்து சமைத்துக் கொடுக்கும் ஒரு பெண்மணி, உதவிக்கு இருவர்.

சில நாட்கள் முன்னர் ஒரு சிறுத்தைப் புலி அந்த விடுதி முன் கண்டதினால், அங்கு யாரும் இரவில் தங்குவதோ, சமைப்பதோ கிடையாது. பாபனாசத்திலிருந்து பொருட்கள் கொண்டு வந்து சமைப்பதால் அங்கு காலையில் வந்து முன்பணம் கொடுத்து பதிவு செய்பவர்களுக்கு மட்டும் தான். முப்பது சாப்பாடு விற்றால் ரொம்ப பெரிய விஷயம் என்று அந்த பெண்மணி சொன்னார்கள். சைவ சாப்பாடு மட்டும் தான்.

நாங்கள் தான் முதலில் முன்பணம் கொடுத்தவர்கள். அருவியில் நன்கு குளித்து நல்ல பசியுடன் ஒரு மணிக்குத் திரும்பினோம். கடை நிரம்பி வழியுது. சிலர் அந்தப் பெண்மணியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். எங்களைப் பார்த்தவுடன், முதல்ல பணம் கட்டிய எங்களுக்கு உணவு இல்லாமப் போயிடுமோன்னு ரொம்ப விசனப் பட்டுது.

எங்களுக்கு ஒரு இடம் ஒதுக்கி சோறு போட்டாங்க. அவங்க பண்ணியிருந்த கொஞ்சமா பூண்டு போட்ட ஒரு மிளகு ரசம், கோசுப் பொரியலுடன் நல்லா இருந்தது. நானும் பையனும் ரசிச்சு சாப்பிட்டோம். ஒரு சின்ன டம்ளர் ல ரசம் குடிக்க கிடைக்குமான்னு நான் கேட்டவுடன் அந்தம்மா முகம் மலர்ந்து கொண்டு வந்து கொடுத்தாங்க.

கடையில கூட்டம் அதிகம் இருந்ததால எங்க மேலும் கேட்டுருவோம்ன்னு ஒரு கவலையும் அவங்க முகத்தில இருந்தது.

வெளிய வரும் போது உணவு ரொம்ப நல்லா இருந்ததுன்னு நாங்க சொன்ன வுடனே அந்த அம்மா முகத்தில கொஞ்சம் ஆனந்தக் கண்ணீர். இத்தனை நேரம் இந்த சோறு தான் சரியில்லைன்னு இத்தினி நேரம் சண்டப் போட்டுட்டு போறாங்கன்னாங்க.

நாங்க உண்மையிலேயே சொல்றோங்க. நீங்களே என் பையன் சாப்பிட்டதைப் பர்த்தீங்கலேன்னு சொன்ன வுடன் இன்னும் சந்தோசமாயிட்டாங்க.

நிறைய நாட்கள் இருபது சாப்பாடு கூட விற்க முடியாம காட்டுல கொட்டியிருக்கோம். இன்னிக்கு நீங்க தான் முதல்ல பணம் கொடுத்தது, முப்பது பேருக்கு சமைச்சதை ஐம்பது பேருக்கு கொடுக்க வேண்டியதாயிட்டுது. உங்களுக்கே இல்லாமப் போயிருமோன்னு கொஞ்சம் சோறு எடுத்து வைக்கச் சொன்னேங்கன்னாங்க. எங்கள் மனம் நெகிழ்ந்து விட்டது. நல்ல சோற்றுடன் கரும்பு தின்னக் கூலி.

ஒரு காட்டில், வெளியூர் லிர்ந்து பொருள் கொண்டு வந்து சமைத்துக் கொடுக்கும் ஒரு பெண்மணியின் செயலை, ஒரு உதவியாகப் பார்க்க முடியாத படி நம்ம சனம் இருக்கு. வியாபார ரீதியாகப் பார்த்தாலும் இரு நூறு முன்னூறுக்கு மேல் சேர்ந்திருக்காது. அதற்கும் எவ்வளவு ஒரு கடினமான உழைப்பு.

நாமும் நம் வீட்டில் இதே தவறு செய்கிறோம். வனச்சுவடுகள் நல்ல பாதை அமைத்துக் கொடுக்கட்டும். :)

Wednesday, May 23, 2012

Demo

மதியம் 3 மணிக்கு அலுவலக பெரிய தலைகளுக்கு ஒரு product டெமோ கொடுக்கணும். சரியா கொடுக்கலைன்னா பின்விளைவுகள் அதிகம். கடந்த இரண்டு நாளா வேறு அலுவலகத்தில வேலை. நைட் கொஞ்சம் தயார் பண்ணிட்டு, காலையில ஆபீஸ் போனா சரக்கு (product ) சுத்தமா வேலை செய்யலை.

என் லேப்டாப் ல அலுவலக technicians எவ்வளவோ செய்தும் ஒன்னும் விளங்கலை. என் மேனேஜர், மற்றும் சிலரது machine எல்லாத்தலையும் ட்ரை பண்ணி ஒன்னும் வேலைக்காவலை. இரண்டு தடவை மேனேஜர் வந்து panic பட்டன் தட்டி விட்டுடட்டுமான்னு கேட்டு விட்டுப் போயாச்சு.

சுத்தமா கை விடற நிலைமைக்கு வந்தாச்சு. இனி ஒன்னும் ஆவப் போவதில்லைன்னு, இரண்டு மணிக்கு கொண்டு வந்த சாப்பாடு சாப்பிட்டேன். நடுவில கூட வேலை செய்பவர்களுக்கு அவங்க டேமோக்கு உதவி செய்ய வேண்டி இருந்தது.

கூட வேலை செய்பவர் பேசாம எங்க டெமோ வேடிக்கைப் பாருன்னு போயிட்டார். வேலை செய்யாதுன்னு முழுசும் தெரிஞ்சும் நான் சாப்பிடும் போது இன்னொருத்தரைக் கூப்பிட்டு அந்த சரக்கை conference ரூமில இன்ஸ்டால் பண்ணச் சொல்லிட்டார்.

சரியா 3 மணிக்கு conference ரூம் போனேன். எல்லா தலைகளும் உட்கார்ந்திருக்கு. technician வந்து இன்ஸ்டால் பண்றார். அவருக்கும் நம்பிக்கை இல்லை, எனக்கும் இல்லை. காலையிலிருந்து பட்ட அல்லல்களை இருவரும் சிரிச்சிக்கிட்டே பெருசுகங்கக் கிட்ட சொன்னேன். என் மேனேஜர் முகத்தில செம கவலை படர்ந்த ரேகை பளிச்சுன்னு தெரியுது. என்ன பிரயோஜனம். படிப்பு experience இருந்தும் சரக்கு வேலை செய்யலைன்னா வீட்டுலப் போய் சரக்கடிக்க வேண்டியது தான். டேச்னிசியன் இனி உன் பாடுன்னு போயிட்டான்.

எல்லோர் முகமும் என் மேல் இருக்க ஒவ்வொன்னா ட்ரை பண்ணேன். failure .

ஒரு தலை எழுந்து போய் தன் machine செக் பண்ணி விட்டு வேலை செய்யுதேன்னார். நம்ப முடியல. வேற ஒரு டாகுமென்ட் எடுத்து டெஸ்ட் பண்ணேன். எல்லாம் வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சு.

ஒன்னும் புரியல. எனது டெமோ க்கு ஒதுக்கிய நேரம் வெறும் 3 நிமிஷம். ஆனால் இருபது நிமிஷம் வரை நானும் தொடர அவர்களும் விடலை. Success .

என்ன காரணம் தெரியுமா?

காலையிலிருந்து நாங்க முட்டி மோதியது, எல்லோருக்கும் புதுசா வந்த கம்ப்யூட்டர், விண்டோஸ் 7 64 பிட் ல.

சரக்கு வேலை செய்த இரண்டு கம்ப்யூட்டர் ம் விண்டோஸ் XP 32 பிட்.
சரக்குக்குத் தேவையான plugin 32 பிட்.

இன்னியோட முடிஞ்சிது, செம அவமானம்னு நினைச்சேன். நடந்தது வேற.

வெளிய வந்து பிளஸ் ஓபன் பண்ணா வானம்பாடிகள் பாலா சார் ன் தன் பையனுக்குத் தாளிச்சுக் கொடுத்த விண்டோஸ் 7 64 பிட் பிளஸ். சத்தமா சிரிச்சிட்டேன். இத எழுதத் தூண்டியது இது.

Disci : post dedicated to Srinath Balaji.

Monday, May 21, 2012

கருப்பு பணம்

கருப்பு பணம்

கறுப்புப் பணம் என்று எல்லோரும் எதைச் சொல்றோம்னு அனைவருக்கும் தெரியும். 60 ஆண்டுகளாக வெளிய போன பணம் கணக்கிலடங்கா. இப்போ 140 பில்லியன் மட்டும் சொல்றாங்க.

வெளிநாட்டு வங்கிகள், அந்த நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு சுழற்சிக்கு உபயோகப் படுத்துது. அதையே உலக வங்கிகள் மூலம் பிற நாடுகளுக்கு கடனாகக் கொடுக்கலாம். அதன் பலனும் அவர்களுக்கே.

இடைப்பட்ட நாட்களில் அந்நிய வங்கியில் செலுத்திய பணத்திற்கு சரியான வாரிசு உரிமை கொடுக்காமல், கொடுக்க முடியாமல் போனால் அதன் பலனும், உரிமை முற்றிலும் வெளிநாடுகளுக்கே.

திருப்பிக் கொண்டு வர பாராளுமண்டபத்தில் எழுப்ப படும் கேள்விகள் எதுவும் திரும்பி வர ஏதுவாக இல்லை. குற்றவாளிக் கூண்டில் நிற்கப் படுத்துவதற்க்கான செயல்களாகவே இருக்கு. எவனும் ஒரு பைசா கொண்டு வந்து மாட்டிக்க மாட்டான்.

சிறு திருத்தங்கள் செய்து சட்ட உதவியுடன் குறைந்த அளவாவது கொண்டு வர முடியும். 10 அல்லது 15 சதவீத வரி மூன்று ஆண்டுகளுக்குள் கட்ட அனுமதிக்கலாம். எந்த ஒரு பழி வாங்கலும் இருக்காது என்று சிறிது உத்திரவாதம் கொடுத்தால், இன்று உள்ள ஐரோப் அமெரிக்க பொருளாதார நெருக்கடியில் மாட்டியுள்ளவர்கள் சிறிது அளவாவது கறுப்புப் பணம் இந்தியா திரும்ப கொண்டு வரவாய்ப்பு இருக்கு.

கொண்டு போனவன் வசதி உள்ளவன். திருப்பிக் கொண்டு வந்து சும்மா வைக்க மாட்டான். நல்ல முதலீடு செய்ய வாய்ப்பு இருக்கு.

கறுப்புப் பணம் கருப்பு நிறத்திலிருந்து வெள்ளையா மாறினா கொண்டு போனவனும் பயனடைவான். இந்திய மக்களும் பயனடையலாம்.

கருப்பு கலர் பணம் கொஞ்சம் வெளுக்கட்டும்.

டிஸ்கி:எங்கிட்ட இல்லைங்க.


.

Saturday, May 19, 2012

நினைவலைகள் 1

அஸ்ஸாம்ல முன்னெல்லாம் ரயில்வே ஸ்டேஷன் போனா தான் ரயில் விவரம் தெரியும். போன் பண்ணா எடுக்க மாட்டாங்க. நேர்ல போனா என்குயரி கவுன்ட்டர் முன்ன பெரிய queue இருக்கும்.

அண்ணே ! வண்டி எப்போ வரும்?

அதோ அங்க எழுதியிருக்குல்ல.

ஆமாண்ணே! அதே தான் நாலு மணி நேரமாப் பார்க்கிறோம்.

வந்துரும். வரணும்.

வந்தா சரியான நேரத்துக்கு எடுத்துருவியலா?

அது பக்கத்துலையே எழுதியிருக்குது பார்.

இப்ப போன் பண்ணி கேட்டு சொல்லு அண்ணே  !

எலேய் வரும் போது வரும். நீ நவுரு. என்குயரி கவுன்ட்டர்ல ஒரு கேள்வி மேல கேட்கக்கூடாது போ! மறுபடியும் வரிசை பின்னாடி போய் நில்லு.

இருண்ணே! அடுத்த ஆளுக்கு என்ன பதில் வருதுன்னு பார்க்கிறேன்.

எலேய்! அவனும் இதத் தான் கேட்பான், நானும் இதே தான் சொல்லனும்ல. போய் சோலியப் பாரு.

(பக்கத்தில உள்ள சக ஊழியரிடம் திரும்பி இன்னிக்கு வேலை ரொம்ப ஜாஸ்திங்க. ஒரு வெத்திலை, டீ சாப்பிட்டு வரேன் !)

Friday, May 18, 2012

அளந்து பேசு

மூணாவது படிக்கும் பையனுக்கு மூணு நாளா வருடக் கடைசிப் பரீட்சை நடக்குது. மூணு நாளா வீட்டுல டிவி பார்க்கிரதத் தவிர வேறு ஒன்னும் செய்ய மாட்டேங்கிறான். வீட்டு அம்மிணியும் சொல்லிப் பார்த்துட்டு ஒன்னும் நடக்கல. பையன் துளி கூட அசராமா, பரீட்சைக்கு முன் ராத்திரியில நல்லா எங்க டீச்சர் தூங்கச் சொல்லியிருக்காங்கன்னு சொல்லிட்டு, குட் நைட் டாட் சொல்லிட்டு ஐயா படுத்துருவார்.

ஆபீஸ் போனா மேனேஜர் அவர் பையன் பரீட்சைப் பத்தி கவலையில ஒரே புலம்பல். இத்தனைக்கும் அவர் பையன் படிப்பது நாலாவது. முதல் இரண்டு நாள் பரீட்சைக்கு அவர் மனைவியும் இன்னிக்கு அவரும் லீவ் போட்டு விட்டு பையனுக்கு ஊக்கம் கொடுக்கப் பையனோடு ஸ்கூல் ல உட்கார்ந்திருக்காங்க.

நம்ம நிலைமைய அவிங்க கிட்ட சொல்லிக்க முடியாது. அப்பா, 140 கேள்விகள்ல எழுபது சரியாச் சொன்னாப் போதும், இட்ஸ் ஓகே ன்ட்டுப் போயிடறான். ஒன்னும் சொல்ல முடியல. சரி வா, பரீட்சை முடிந்ததுக்குப் போய் நல்லா சாப்பிட்டு வந்தோம்.

வீடு திரும்பிய வுடன் நேரா டிவி முன்ன. சமயம் பார்த்து டிவி education ப்ரோக்ராம்ல 'ஹைபோதேசிஸ்' ன்னு ஒரு வார்த்தை வந்தது. புள்ள எப்பிடி தானிருக்குதுன்னு தெரிஞ்சிக்க, ஹைபோதேசிஸ் நா என்னன்னு கேட்டேன். 'இட் இஸ் அன் ஐடியா தட் யு கேன் டெஸ்ட்' ன்னு ஐயா கூலா சொல்றான். அமைதியா இடத்த காலிப் பண்ணிட்டு வந்திட்டேன். நம்மள கேள்வி கேட்டா இவ்வளவு சுலவமா பதில் சொல்லத் தெரியாதே நமக்கு.

Saturday, May 12, 2012

நாடோடிகள்

நாடோடிகள்

சில மணித்துளி முன் வானம்பாடிகள் பாலா சார் எழுதிய கேரக்டர் கண்னீப்பா படிக்கும் போது நான் சின்ன வயசில பார்த்த நாடோடி கூட்டங்கள் ஞாபகத்துக்கு வருது.

நாங்கள் வசித்தது ஒரு கம்பனியின் colony குடியிருப்பில். காலனி வெளியே ரோட்டிற்கு மறுபுறம் ரயில்வே நிலம். அதன் ஆக்கிரமிப்பை தடுப்பதற்காக பெரிய தடுப்பு இரும்பில் போட்டிருப்பார்கள். அதன் நடுவில் ஒரு நுழைவு ஏற்படுத்திக்கொண்டு தண்டவாளத்தை ஒட்டி கும்பலாக சில மாதங்கள் வாழ்வார்கள்.

நாங்கள் அவர்களை லம்பாடிகள், நாடோடிகள் என்றும், குறவன் குறத்தி என்றும் வாய்க்கு வந்ததை வைத்து அழைத்துக் கொள்வோம். வெவ்வேறு குழுக்கள் வரும். சில மாதங்களில் காணாமல் போய்விடுவார்கள்.

ரயில்வே நிலத்தில தங்கியிருப்பதாலும், பெரிய கம்பனியின் குடியிருப்பிற்கு எதிரில் இருப்பதாலும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவர்களைத் துரத்தப் பார்ப்பார்கள். எங்களுக்கோ அவர்களது வருகை ஒரு காட்சிப் பொருள். பெரிய பொழுது போக்கு. பள்ளி முடிந்ததும் நண்பர்களுடன் அவர்களை வேடிக்கைப் பார்க்க காலனி வெளியே ரோட்டோரம் நிப்போம்.

அவர்களைப் பார்த்து எங்களுக்குள் உள்ள கற்பனையை மேலும் வளர்த்துக் கொள்வோம். எங்களில் ஒருத்தன் அவர்கள் உடும்பை பிடித்து கட்டியிருந்ததைப் பார்த்ததாகச் சொல்வான். அது எங்கள் கண்ணில் படுதா என்று தேடுவோம்.

அந்த சமயங்களில் கரும்குரங்கு லேகியம் பற்றி பரவலாக பேச்சு இருந்தது. நாடோடி குழுக்களிடம் எப்பிடியும் ஒரு குரங்கு வைத்திருப்பார்கள். அதை கயிற்றில் ஒரு இரும்பு கம்பியில் கட்டியிருப்பார்கள். எங்களுக்கு அதுவும் ஒரு பெரிய வேடிக்கை காட்சிப் பொருள்.

உடன்இருந்த ஒருத்தன் இன்னிக்கு இந்த குரங்கு காலிடா, எப்பிடிரா லேகியம் பண்றாங்கன்னு பார்க்கனும்பான். அவர்களைப் பற்றிய எப்போதும் ஒரு தவறான புரளியே எங்களிடம் அதிகம் பரவியிருந்தது. என்றுமே ஒரு சரியான தகவல் இருந்தது இல்லை. அதைப் பற்றி கவலைப் பட்டதில்லை. எங்களைப் பொறுத்த வரை புரளி பேச வாயில் அவல் கிடைத்த வாய்ப்பு தான்.

ஒவ்வொரு குழுக்களின் உடை பேச்சு கொஞ்சம் வித்தியாசமாவே இருக்கும். ஒரு தடவை வந்த குழு வடஇந்தியாவில இருந்து வந்த மாதிரி இருந்தது. அவர்கள் பேசியது ஒன்று கூட புரியவில்லை. ஒரு நாள் மாலை அவர்களை தண்டவாளம் அருகில் போய் தைரியமாக அருகில் போய் பார்த்தோம். எதை எதையோ சாப்பிடுவார்கள் என்று கதை கட்டிக் கொண்டிருந்த எங்களுக்கு, அவர்கள் சப்பாத்தி மாவை கையாலேயே வட்டமாகத் தட்டி நேராகவே நெருப்பில் காட்டி சுட்டதைப் பார்த்து அசந்து விட்டோம். அதுவும் ஒவ்வொரு சப்பாத்தியும் நம் வீட்டில் சுடுவதை விட இரண்டு மூணு மடங்கு பெரிதாகவும் தடுமனாகவும் இருந்தது. எங்களுக்கு மிகப் பெரிய ஆச்சரியம். நாங்கள் அவர்களைப் பார்ப்பதைப் பார்த்து எங்களைத் துரத்தி விட்டனர்.

ஊர்ப் பெரிசுங்களுக்கோ அவர்களைக் கண்டால் பயம். திருடு போயிரும், ரொம்ப சாக்கிரதையாக இருக்கணும்னு அவர்கள் பேசிக்கும் போது, சிறியவர்களான எங்களுக்கு அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் ஏற்படாமல், ஒரு அச்சம், மடமை, புரளி பேசுவதாகவே முடிந்து விட்டது.

ஊர் பெரிசு, ரயில்வே, போலீஸ், சுற்றியிருந்த கடையிருப்புகள் எல்லாம் அவர்களைத் துரத்துவதிலேயே குறியாக இருந்ததால், எங்கள் பொழுது போக்கு, கற்பனை வளங்களை பெருக்குவதற்கு, நாங்கள் பார்க்க நினைத்த கீரி, உடும்பு, நரி, கருங்குரங்கு எல்லாம் கற்பனை உருவகமாகவே இருந்து விட்டது.