Friday, July 15, 2022

வீட்டுப்பெண்கள் பேச்சைக் கேளுங்கள்

சின்ன வயசுல பள்ளிக்கூடம் போய்விட்டு சாயந்திரம் 4.30மணிக்கு வீட்டுக்குள்ள நுழையும் போதே இன்னிக்கு அம்மா பூரி மசால் பண்ணியிருக்காங்களா, பக்கோடா, பஜ்ஜி இருக்கா, இல்லாட்டி புளிமாவு அல்லது மோர்க்களி பண்ணியிருக்காங்களா அல்லது முள்ளு முருக்கு தட்டையாவது இருக்கான்னு எதிர்பார்த்தே வருவேன். குடும்பம் பெருசு, அம்மா ஏதாவது செய்து வச்சிருப்பாங்க. எதுவுமில்லைன்னா என்ர முகத்துல பசியில அம்புட்டு கோவமும் பிரதிபலிக்கும்.

இப்ப காலம் வேற.

அம்மிணிக்கு கோவிட் காலத்திலும் தினமும் வேலைக்குப் போயாவனும். சாயந்திரம் உள்ள நுழையும் போதே முகத்தில் பசியில் அவ்வளவு கடுகடுன்னு இருக்கும்.

வர்க் ஃப்ரம் ஹோம்ன்னு சொல்லிகிட்டு வீட்டுல  உட்கார்ந்துகிட்டு துன்கறவனுக்கும் சேர்த்தி இப்ப வந்து என்ன சமைக்கனும்ன்னு யோசிச்சு கிட்டு, இருக்கிற பசிக்கு எதைத் திங்கலாம்ன்னு ஒரு கொலைவெறியோட இருப்பாப்புல.

அம்மிணிக்குப் பிடிக்காத வேலை பாத்திரம் கழுவுற வேலை. அதை மட்டும் செய்ஞ்சு கொடுத்து ஓபி அடிச்சு ஓட்டிருவேன். லன்ச் டைம் மற்றும் கிடைக்குற காபி ப்ரேக் அப்பவெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பாத்திரம் லோடு பண்ணி அம்மிணி வர்றதுக்குள்ள டிஷ் லோடு பண்ணிருவேன். இல்லாட்டி அந்த வெறுப்பும் உச்சி மண்டையில ஏறுச்சுன்னா செத்தோம். எப்படியெல்லாம் தப்பிப் பிழைக்க வேண்டியிருக்கு.

நேற்று வந்து படபடன்னு உள்ள நுழைஞ்ச ஆளு ஒவ்வொன்னா ஆரம்பிக்க மிக்ஸி வர்க் ஆவலை. தான் பிளான் பண்ணிய எல்லாம் ஆப்பு. அது என்னவா, ஒன்னுமில்லை. வெறும் அதுல தேங்காய்ச் சட்னி அரைச்சு வச்சா பழைய சாம்பர் இருக்கு, இந்த வீட்டுல உட்கார்ந்து துன்கிறவனுக்கு ஐஞ்சு தோசையை வார்த்துக் கொடுத்தா ஆச்சுன்னு நினைப்புல வந்தாப்புல, அதுக்கு ஆப்பு. மிக்ஸி போச்சு.

இருக்கிற அப்செட்ல கன்வெர்ட்டர் ஃப்யூஸ் போயிடுச்சான்னு நேராத் திருவி ஃப்யூஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டாப்புல. அரண்டு போயிட்டேன். விட்டா அப்பவே மிக்ஸியை பார்ட் பார்ட்டா கழட்டியிருப்பாப்புல.

படபடப்பா இருக்கிறவங்கிட்ட நிதானமாகப் பேசற பழக்கம் எனக்கு. ஏன்னா சேதாரம் கம்மி பண்ணிக்கனுமில்ல.

கவலைப்படாதே நான் திருச்சி ஶ்ரீரங்கத்திலிருந்து வந்த அந்த அருமையான தோசை இட்லி மிளகாய்ப்பொடியை வச்சு சமாளிச்சுக்கிறேன் டோண்ட் வொர்ரின்னு சொல்லி ஓட்டியாச்சு.

இன்னிக்கு காலையில வேலைக்குப் போகும் போது எல்லா ஸ்பேர் பார்ட்ஸும் எடுத்து வச்சு, சாயந்திரம் வர்றதுக்குள்ள சரி பண்ணி வையுன்னு ஒரு லிஸ்ட்டு கொடுத்துட்டுப் போயிருக்காப்புல.

ஒரு நாள் லீவுல சும்மா இருக்கலாம்ன்னா முடியலை. உழைக்கிற பெண்கள் கிட்ட சொன்ன பேச்சு கேட்டு நடந்துக்கங்கப்பா, சேதாரம் கம்மியாக இருக்கும்.

மிக்ஸியை சரி பண்ணிவிட்டு அமைதியாக காலை ஆட்டிக் கொண்டிருப்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Escuchar a las mujeres!

No comments: