Wednesday, June 22, 2022

ஆச்சார்ய தேவோ பவ

विद्या ददाति विनयं विनयाद्याति पात्रताम् । पात्रत्वाद्धनमाप्नोति धनाद्धर्मं ततः सुखम् ॥
     - விதூஷ்

(பாத்ரத்வா தனமாப் ப்னோதின்னு வரனும்ன்னு நினைக்கிறேன்)

ஏழெட்டு வயசுல வெளியே, திறந்தவெளி சினிமாத்திரை கட்டற கம்பம் கீழ, மண்ணுல நண்பர்களோடு விளையாடிகிட்டருப்பேன்.

அதற்கெதுத்தாப்புல இருக்கிற கட்டிடத்தின் மாடியில் எங்க ஹைஸ்கூல் வாத்யார், (இவர் பிற்காலத்தில் எனக்கு பத்தாவதிற்கு கணக்கு வாத்யார் கூட), ஊர் பசங்க பொண்ணுங்களுக்கு சம்ஸ்கிரதம் ஹிந்தி சொல்லித் தருவார். மாசம் ஒரு ரூபாய் கட்டணம், நான் அது கூட கட்டியதில்லை.

மண்ணுல விளையாடிகிட்டிருக்கும் போது, மேலேர்ந்து அசரீரி மாதிரி குரல் கேட்கும், என் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவார். கையில் நோட்புக் கிடையாது, பென்சில் கிடையாது, காலில் ஒட்டியிருக்குற மண்ணைத் தள்ளி விட்டுகிட்டு மாடிக்கு ஓடுவேன்.

சார், தானே ஒரு பேப்பர் பென்சில் கொடுத்து அவர் போர்ட்ல எழுதியிருக்கிறதைப் பார்த்து எழுதச் சொல்வார்.

முதல் கிளாஸ்லேயே ஆரம்பிச்சது:
த்வமேவ மாதாच पिता त्वमेव ।

அதுக்கடுத்து மேலேயுள்ள ஸ்லோகம். இப்படி ஒவ்வொன்னா சொல்லிக் கொடுத்து எழுதச் சொல்லிக் கொடுத்து சம்ஸ்க்ரத பாலபோதாவும் ஹிந்தி ப்ராத்மிக்கும் எழுத வைச்சார். 

அவர் கொடுத்த பென்சில் பேப்பர் கல்வி. படிக்காமலேயே இதுல இவ்வளவு வாங்கியிருக்க, இன்னும் முயற்சி செய்யலாமில்லேன்னார். பாலபோதாவில வாங்கின மார்க் 50க்கு 49, அந்த ஒரு மார்க் போற அளவுக்கு ஏன் இப்படி எப்பப் பார்த்தாலும் இப்படி மண்ணுல விளையாடிகிட்டே இருக்கேன்னார். அவர்ட்டேர்ந்து டபாய்ச்சுகிட்டு ஓடி அவர் கண்ணுல படாம வேற இடத்துல போய் விளையாடுவேன்.

பிற்காலத்தில் அஸ்ஸாம் போக வேண்டி வந்தப்ப, விட்ட ஹிந்தியைத் தொடர மறுபடியும் அவர்கிட்ட ஓடினேன். உனக்கு எவ்வளவு தடவை சொல்லிக் கூப்பிட்டிருக்கேன், ஒழுங்கா வந்து கத்துக்கோன்னு. அப்ப என்னை ஏமாத்தின, இப்ப நீ ஏமாந்து நிற்கிற பாருன்னார். அப்ப நான் சொன்னதைக் கேட்டிருந்தா, இந்நேரம் உருது கூட கத்துகிட்டு இருந்திருக்கலாம்ன்னார். அவ்வளவு உருதுக்கவிதைகள் புரிஞ்சுருக்கும்ன்னார்.

அவர் இன்றைய சென்னை சம்ஸ்கிரதக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளின் அண்ணன் ஆர் எஸ் சார். ஐஐடி சம்ஸ்கிரதப் பேராசியரின் பெரியப்பா!

அவர் இன்றுவரை எனது மானசீக குரு! 🙏.
ஆச்சார்ய தேவோ பவ! 🙏

குரவே நம:

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Saludo a tu profesor (आचार्य)!

ஸ்பானிஷ் கற்கும் பொழுதில் - 5

வயசான காலத்துல கல்லூரியில் சேர்ந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு புது மொழியைக் கற்பதிலுள்ள சிரமம் நேத்து சோகத்தை உண்டு பண்ணியிருச்சு. 

என் அண்ணன் தம்பிங்க எவரும் ஒன்னாவதுலேர்ந்து எஸ்எஸ்எல்சி வரை எந்த ஒரு சப்ஜெக்ட்லையும் 90க்கு கீழே அவங்க மார்க் வாங்கினதில்லை. 90க்கு கீழே மார்க் இருக்கிறதை என்னோடதை வச்சுத் தான் தெரிஞ்சுக்கிட்டவங்க. இதுல இரண்டு பேர் ஓரியண்டல் பள்ளி ஸ்டேட் ஃபர்ஸ்ட் கூட. சம்ஸ்கிரதம் அத்துபுடி, ஒருத்தன் சம்ஸ்கிரதத்துல கவிதை (கடி கவுஜ) கூட எழுதுவான் (ஆனால் நாத்திகர்கள்).

நான் இதுவரை வாழ்க்கையில 90 மார்க் பார்த்ததில்லை. எங்கூட்டு வெள்ளாட்டு மந்தையில நான் ஒரு கருப்பு ஆடு. அந்தக் குறை இப்போதும் துரத்துகிறது.

தினமும் இரண்டு மணி நேரம் ஸ்பானிஷ் படிச்சாலும் சில வார்த்தைகள் மனசுல நிற்க மாட்டேங்குது. டெஸ்ட்லையும் quizலையும் அந்த வார்த்தைகள் வந்து மார்க்கை இறக்கி விட்டுருது.

அதுவும் ஒரே மாதிரியான வார்த்தை ஜாலங்களில் பல verbs வச்சு நம்மளைக் காலி பண்ணிடுது: poner, pensar, poder, pedir, perder. எல்லாம் ஒரே மாட்டு வண்டி மாதிரி இருக்கு. இம்புட்டு வார்த்தைகளை மனப்பாடம் பண்ணினாலும் மனசுல நிக்கமாட்டேங்குது. எக்ஸாம்ல அடி வாங்க வைக்குது.

போனத் திங்கள் கிழமை ஸ்பானிஷ் presentation க்காக பல மணி நேரப் பிரப்பரேஷன். இந்த வாரம் முடிஞ்ச சாப்ட்டரோட யூனிட் டெஸ்ட் மற்றும் quiz எல்லாம் நேற்று முடிக்க வேண்டி வந்து. ஐந்து நாளா பிரிப்பேர் பண்ணி முடிச்சும் நம்ம விதி நம் தலையெழுத்தில் உள்ளதை மாற்ற முடியலை. இதிலும் 90 பார்க்க சாத்தியமில்லாமல் போகுது.

இவ்வளவு நேரம் செலவழித்துப் படித்தும் மண்டையில மாங்காய் தான் நிக்குது. அம்மிணி வேற பையன்ட்ட கம்ப்ளைன்: வீட்டுல ஒரு வேலை நடக்க மாட்டேங்குது. இந்த எல்லாக் கஷ்டத்துலையும் இந்த வாரம் முழுக்க ஒழுங்கா டிஷ்லோடு பண்ணியிருக்கேன். நேற்று முழுவதும் படிப்பு டெஸ்ட்டுன்னு போனதில, அம்மிணி கடுப்பாகி தானே பாத்திரம் டிஷ்லோடு பண்ணிட்டாப்புல.

எம்புட்டு படிச்சும் அதை மார்க்காக கன்வெர்ட் பண்ண முடியாத நிலையை நினைக்கையில் மனசு சோகமாக இருந்தாலும் ஒரே ஆறுதல் இப்ப ஒரு ஸ்பானிஷ் paragraph படிச்சா குத்துமதிப்பா அவங்க என்ன சொல்ல வர்றாங்கன்னு புரியுது. அம்புட்டு தான். என் வகுப்பில் சிலர் தாங்களாகவே இந்த கோர்ஸை இரண்டாவது தடவையாக ஏன் எடுத்துப் படிக்கிறாங்கன்னு இப்பத் தான் புரியுது.

எதுவாயினும் பின்னோக்கிப் போனாலும் கற்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Trabaja duro!

இணையாத உலகமது நிலைக்காத கனவாய்

பாடாத குயிலும் கரையாத காகமும்
  நோகாத நடையும் கடவாமல் செல்வதேன்
தோன்றாத உருவமும் தொழுகாத மனதும்
  ஏற்காத வேட்கையும் இல்லாமல் வாழ்வதேன்!

எண்ணாத செயலும் எழுதாத கவிதையும்
  இறையாத கனவும் கலைந்திடும் நட்பாய்
காணாத அன்பும் கிடைக்காத கருணையும்
  உருகாத பனியாய் ஆடிடும் சிலையானதே!

வாடாத இலைகள் வாசமில்லா மலர்தனில்
  தேனில்லா பூவாய் வாசமாய் மணக்காமல்
பெய்யாத மழையால் நனையாத நிலமதில்
  காய்க்காத மரமாய் காட்டில் தனிமரமானதேன்!

இணையாத உலகமது நிலைக்காத கனவாய் இல்லாத ஒரு பொழுதில்

வாழ்வினிது!
ओलै सिरिय
¡Deseo de una vida feliz!

ஜனநாயகத்தின் கல்தூண்கள்

ஒரு நாட்டின் ஜனாதிபதி பதவியை வெறும் ஒரு பொம்மைப் பதவியாக சித்தரிக்கும் பலவித போஸ்ட்டுகளை இரண்டு நாட்களாகப் பார்க்கிறேன். அதே மாதிரி கவர்னர் பதவியையும் ஆட்டுக்கு தாடி மாதிரி சித்தரிப்பவர்களையும் பார்க்கிறேன்.

ஒரு வலுவான எதிர்கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுக்க முடியாமல் போன எதிர்கட்சிகளின் பலஹீனத்தின் பிரதிபலிப்பே இத்தகைய விமர்சனங்கள். 

தோல்விகளை நேர்முறையில் ஏற்றுக்கொள்வதே ஒரு மக்கள் ஜனநாயக அரசு அமைப்பாக எந்த ஒரு நாடும் இருக்க உதவும். இல்லாவிட்டால் அது சர்வாதிகார மன்னராட்சியாகவோ ராணுவ ஆட்சியாக வர வழி வகுக்கும்.

மேலும் எங்க நாட்டு ஜனாதிபதி போஸ்ட்டு டம்மி போஸ்ட்டுன்னு எவனாவது போய் வெளிநாட்டு அரசுகளிடம் சொன்னால், முதலில் சொல்பவரின் அரசியல் அறிவு கேள்விக்குறியாவது மட்டுமல்ல அந்த நாட்டைப் பற்றியே மற்ற அரசுகள் கேவலமாக நினைக்கும்.

இவ்வாறு ஒரு டம்மி போஸ்டாகவா ஜனாதிபதி பதவி இருந்துள்ளது. இல்லவேயில்லை என்பது தான் நிதர்சனம். அவ்வாறு சொல்பவர்களின் அறியாமையை கடந்து போவதே நல்லது.

துணை ஜனாதிபதியாக இருந்த ஆர் வெங்கட்ராமன் ஜனாதிபதியான தொடக்க காலத்திலேயே ஒரு தொங்கு பாராளுமன்றத்தை சீரமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது மட்டுமல்ல, 180-190 சீட்டுகள் மட்டுமே பெற்ற ராஜீவ் காந்தியை அரசமைக்க அழைக்க விரும்பினாலும் பெரும்பான்மையில்லாத அரசை ராஜீவ் காந்தி விரும்பாததால் (உண்மையான சிக்கல் வேறு) சந்திரசேகர், வி பி சிங், சரண்சிங் என பல நிலையற்ற அரசுகளை அமைப்பது மட்டுமல்ல அவை வீழும் போது அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கா நாட்டிலுள்ள அனைத்து தலைவர்களும் நின்ற இடம் ராஷ்ட்டிரபதி பவன். ஜனாதிபதி ஆர் வெங்கட்ராமன் பாராளுமன்ற எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் ஒரு நாட்டின் ஜனாதிபதியாகவே இருந்து நாட்டையே ஆட்சி செய்யுமளவுக்கு தள்ளப்பட்ட நிலமை அப்ப. கட்சித் தாவல் சட்டமெல்லாம் நிறைவேற்ற வேண்டிய அவலநிலை ஜனநாயக அரசுக்கு ஏற்பட்ட காலம் அது.

அடுத்து ஜனாதிபதி அப்துல் கலாம் பதவி வகித்த நேரத்தில் அவருக்கும் சோனியா காந்தியை அமர்த்துவதா வேண்டாமா என்ற சிக்கல் எழுந்த போதெல்லாம் அன்றைய எதிர்கட்சியான பிஜேபியிலிருந்து அனைத்துக் கட்சியினரும் படையெடுத்த இடம் அதே ராஷ்ட்டிரபதி பவன்.

இது மாதிரி சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே ஒவ்வொரு ஜனாதிபதியைப் பற்றிச் சொல்ல வரலாற்றுக் குறிப்புகள் அரசுகளிடமுள்ளது.

மேலும் அனைத்து மக்களும் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது: அதிகாரத்தின் அதிகார அமைப்பின் checks and balances.

ஒரு ஜனநாயக குடியரசு அமைப்பின் முக்கியமான மூன்று பிரிவுகள்: அட்மினிஸ்ட்ரேஷன்(ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர்), பாராளுமன்றம், நீதித்துறை. மற்றவை அனைத்தும் இந்த பிரிவுகளுக்கு கீழ் தான் வரும். இவ்வாறு இருந்தால் அது மக்கள் ஜனநாயக அரசாக இருக்க முடியும். குறிப்பாக ராணுவத்துறை ஜனாதிபதியின் நேரடி பார்வையில் வரும். ராணுவம் இந்த மூன்று பிரிவுகளில் நுழைந்தால் இனி நாம் மக்கள் ஜனநாயக அரசமைப்பை பற்றி பேச இயலாது. எளிய ஜனநாயக உரிமைகள் அனைத்தும் முடக்கப்பட்டுவிடும். அது ராணுவ ஆட்சியாக இருக்கும். ராணுவம் ஜனாதிபதி கீழ் வந்ததிற்கு நீங்க உண்மையிலேயே வாழ்த்த வேண்டியது constitutionஐ வடிவமைத்தவர்களை. 

ஒரு நாட்டின் அவ்வளவு பெரிய பவுர்ஃபுல் ராணுவமே ஒரு ஜனாதிபதியின் நேரடிப் பார்வையில் வருகிறது. அப்பேர்ப்பட்ட பதவியை டம்மி பதவியாக சித்தரிக்கிற மக்களின் அறிவை பொன் தட்டுகளில் தான் பொரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பாராளுமன்றம் ஒரு ஸ்திரமற்ற நிலைக்கு வந்து நின்றால் ஒரு அரசு முடங்கிப் போவது மட்டுமல்ல, அந்த நாடே மற்ற நாடுகளின் படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு மற்றும் எல்லைப்பிரச்சனை, தீவிரவாதம் என பலவற்றை சமாளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டால் பொது மக்களின் அன்றாட வாழ்வு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும். பசி பஞ்சம் தலைவிரித்து ஆடும்.

சிலர் மக்களவை இருக்கும் போது எதற்கு மாநிலங்களவைன்னு புத்திசாலித்தனமாகக் கேட்பாங்க. தேவையா? ஆம் தேவை. கண்டிப்பாகத் தேவை. ஏன்னு யோசிச்சுப் பாருங்க. ஒரு ஜனநாயக அமைப்பின் மூன்று அங்கங்களில் ஒன்று கூட பலமிழந்து போகாமல் இருப்பதற்காக. அவை ஜனநாயகத்தின் தூண்கள்.

கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக இருந்த ஜனாதிபதிகள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட தேவைப்படாமல் போனதென்பது என்ன/எதை பிரதிபலிக்கிறது என்றால் அது அந்த நாட்டின் ஸ்திரதன்மையை, வீக்னெஸ்ஸை அல்ல. பாராளுமன்றம் நீதிமன்றம் ராணுவமெல்லாம் தானாக இயங்கும் போது ஜனாதிபதி பதவி ஒரு அமைதியான பதவியாக இருப்பது நாட்டுக்கு நல்லது மக்களுக்கு நல்லது.

ஜனாதிபதி பிரதிபா பட்டீல் பதவிக்காலம் போல் இப்போதுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காலம் முடிவது நாட்டின் ஸ்திரத்தன்மையைத் தான் காட்டுகிறது.

ஜனாதிபதிகள் ஆர் வெங்கட்ராமன், கே ஆர் நாராயணன் போன்றோர் மாதிரி ஜனாதிபதிகளின் காலம் இருக்கனும்ன்னு நினைச்சா, நீங்கள் பேசும் போது உங்கள் நாட்டின் ஸ்திரத்தன்மையையும் யோசித்துப் பேசுவது அறிவார்த்தமாகப் பேசுவது உங்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது, உங்கள் நாட்டைப் பற்றி வெளிநாட்டவர்களிடம் உங்கள் அரசமைப்பை கேவலப்படுத்தாமல் இருக்கும் நிலையாக இருக்கும்.

அரசு, அரசமைப்பு, அதிகாரம் எல்லாம் என்னவென்று தெரியாமல் ஜனாதிபதி பதவியைப்பற்றி விமர்சனம் செய்வது நல்லதல்ல.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு மக்கள் ஜனநாயக அரசே சிறந்தது, அதில் எந்த தூணும் குறைந்ததல்ல என்று சொல்லிக் கொள்வதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Mantén tu democracia segura!

Thursday, June 9, 2022

கரையோரம் மூழ்கும் வீரர்கள்

கரையோரம் மூழ்கும் கலைஞன்
  தலை தூக்கத் தெரியாத மீன் அவன்
கடலிலும் கனவிலும் எழும் அலை அது!

கரையில் துடுப்பு போடும் துயிலன்
  அலைகள் இழுப்பது அறியா கலைஞன்
எண்ணமும் செயலும் ஒருங்கிணையாதவன்!

கை பிடித்து இழுக்கும் ஒரு நண்பன்
 கரை சேர்க்கத் துடிக்கும் இன்னொருவன்
 எவரும் கரையேர அறியா துடுப்பு வீரர்கள்!

எழுபவன் இழுக்க விழுபவன் விழ
 இழுப்பவன் சரிய கரையது கடலாயாகியது
விதி வசம் பிழைத்தவர்கள் விதிப்படி நடக்கவில்லை!

கரையோரம் மூழ்கும் படகுகள் அவர்கள்!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Nadar!

நம் கரை நோக்கி பயணமாதலில்

ஐவிரல் ஒன்றாகா ஒன்றாகும் உள்ளங்கையால்
   கால் விரல்கள் ஒன்றாகா ஒன்றாகும் நடைதனில்
எழுத்தும் எண்ணமும் ஒன்றாகா ஒன்றாகும் நல்மனதில்!

எண்ணமதில் இருக்கும் அன்பு எழுத்தில் கறையானால்
  வண்ணக் கோலங்கள் ஒளிராமல் அலங்கோலமாகும்
அவரவர் பாதைகளில் அவரவரது ஒளிவிளக்குகள்!

வாழ்க்கை எனும் கடலில் நாம் ஒரு சிறுதுளி
   ஏறுகின்ற பயணிகளை இறக்கியதோடு முடியும் பயணவழி
பயணமதில் சலனமின்றி துடுப்புவதே நிலவின் ஒளி!

நாம் நம் கரை நோக்கி பயணமாதலில்!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Navegación!

வண்ணத்துப் பூச்சியாய் உணரும் பொழுதில்

வன்முறையையும் ரத்தத்தையும் அருகில் ஸ்வாசித்தவன்
  அமைதியாய் உறங்குகையில் 
வண்ணத்துப்பூச்சிகளின் கைகளில் அக்னிசட்டி ஏன்!

உழைப்பவன் களைப்பில் உறங்குவான்
  உள்ளமது உறங்கும் ஒரு கவளம் களிசோறில்
சமூகம் அவன் உழைப்பில் உறங்கும்!

பூக்களின் கிறக்கம் வண்ணத்துப் பூச்சியிடமும்
   எண்ணங்களின் நெருக்கம் அமைதியான உறக்கம்
சாந்தியுகமே அச்சமற்ற பேதமையின் கைகளில்!

வண்ணத்துப் பூச்சியாய் உணரும் பொழுதில்!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Mariposa!

ஸ்பானிஷ் கற்கும் பொழுதில் - 4

இன்னிக்கு ஸ்பானிஷ் கிளாஸ்ல தனக்குப் பிடிச்ச ஒரு பொழுதுபோக்கு பற்றி ஒரு பிரசண்டேஷன் கொடுக்கனும்.

ஒரு வாரமாக மண்டையை உருட்டி கடந்த இரண்டு நாளாக ஒரு பவர்பாயிண்ட் ஏழு பக்கத்துக்குத் தயார் பண்ணி ரெடி பண்ணி வச்சுருந்தேன்.

வகுப்புக்குப் போனால் ஒவ்வொருத்தரும் தான் நாயைக் கூட்டிகிட்டு நடக்கிறதைப் பற்றியும் டான்ஸ் ஆடுவதையும் பற்றியும் தென் அமெரிக்கப் பயணம் பற்றி அவங்கவங்க அடிச்சு விட நமக்கு மட்டும் கிலி பிடிச்சுகிச்சு. ஓரளவுக்கு இரண்டு நாளா பிரிப்பேர் பண்ணியிருந்தாலும் இவங்களிடமிருந்து வேறுபட்டு முற்றிலும் இவங்களுக்குப் புரியாத ஒரு விளையாட்டைப் பற்றி எழுதி ஏழு ஸ்லைடு போட்டு அடிச்சுவிட்டிருக்கேன்.

நம்ம வாய் கோணவாய், சும்மாயில்லாம கடைசியாக இப்படி வேற முடிச்சு வச்சுருக்கேன். எவ்வளவு மார்க் வருமோத் தெரியலை. பார்ப்போம்.

Me gusta jugar el críquet con pelota de tenis en la calle que en un estadio.

இதுல கொடுமை இன்னான்னா jugarங்கிற வார்த்தையை சரியாக உச்சரிக்காததினால் அதை பத்து தடவை சொல்ல வச்சுட்டாங்க. தொண்டையைப் பிடிச்சு கிட்டு சொல்லுன்னு தொண்டையைப் பிடிக்க வேண்டியதாகப் போச்சு. 

ஊர்ல சின்ன வயசுல முட்டி போட வச்சு வெளுத்து வாங்கின ஞாபகம் தான் வந்துச்சு.

கையில வந்து விழுந்தாலும் கப்பை விட்டுப் பழகின நமக்கு இதிலும்

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Pasatiempos!

நடைபயணமே சுமையான பொழுதில்

சுமக்கின்ற தூரம் சுமையாயில்லை
   மனதில் சுமைப்பவை தூரமாய் நிற்கையில்
வாழ்வில் நடைபயணம் நாலடி தூரத்தில்!

கைகள் சுமக்கும் முகவுரைகள்
  பாதபூஜைகளில் தூரம் குறைவதில்லை
சுமப்பவன் சுமக்கும் சுமையான பொழுதில்!

சுமைகளை இறக்கும் எழுதுகோல்
   மனதின் சுமைகளைக் கழியும் திறவுகோல்
அது சுமப்பவனுக்கும் சுமைக்கும் இல்லா தூரம்!

நடைபயணமே சுமையான பொழுதில்!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Peso pesado!

அவர் கொடுத்த கல்வி அது

विद्या ददाति विनयं विनयाद्याति पात्रताम् । पात्रत्वाद्धनमाप्नोति धनाद्धर्मं ततः सुखम् ॥
     - விதூஷ்

(பாத்ரத்வா தனமாப் ப்னோதின்னு வரனும்ன்னு நினைக்கிறேன்)

ஏழெட்டு வயசுல வெளியே, திறந்தவெளி சினிமாத்திரை கட்டற கம்பம் கீழ, மண்ணுல நண்பர்களோடு விளையாடிகிட்டருப்பேன்.

அதற்கெதுத்தாப்புல இருக்கிற கட்டிடத்தின் மாடியில் எங்க ஹைஸ்கூல் வாத்யார், (இவர் பிற்காலத்தில் எனக்கு பத்தாவதிற்கு கணக்கு வாத்யார் கூட), ஊர் பசங்க பொண்ணுங்களுக்கு சம்ஸ்கிரதம் ஹிந்தி சொல்லித் தருவார். மாசம் ஒரு ரூபாய் கட்டணம், நான் அது கூட கட்டியதில்லை.

மண்ணுல விளையாடிகிட்டிருக்கும் போது, மேலேர்ந்து அசரீரி மாதிரி குரல் கேட்கும், என் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவார். கையில் நோட்புக் கிடையாது, பென்சில் கிடையாது, காலில் ஒட்டியிருக்குற மண்ணைத் தள்ளி விட்டுகிட்டு மாடிக்கு ஓடுவேன்.

சார், தானே ஒரு பேப்பர் பென்சில் கொடுத்து அவர் போர்ட்ல எழுதியிருக்கிறதைப் பார்த்து எழுதச் சொல்வார்.

முதல் கிளாஸ்லேயே ஆரம்பிச்சது:
த்வமேவ மாதாच पिता त्वमेव ।

அதுக்கடுத்து மேலேயுள்ள ஸ்லோகம். இப்படி ஒவ்வொன்னா சொல்லிக் கொடுத்து எழுதச் சொல்லிக் கொடுத்து சம்ஸ்க்ரத பாலபோதாவும் ஹிந்தி ப்ராத்மிக்கும் எழுத வைச்சார். 

அவர் கொடுத்த பென்சில் பேப்பர் கல்வி. படிக்காமலேயே இதுல இவ்வளவு வாங்கியிருக்க, இன்னும் முயற்சி செய்யலாமில்லேன்னார். பாலபோதாவில வாங்கின மார்க் 50க்கு 49, அந்த ஒரு மார்க் போற அளவுக்கு ஏன் இப்படி எப்பப் பார்த்தாலும் இப்படி மண்ணுல விளையாடிகிட்டே இருக்கேன்னார். அவர்ட்டேர்ந்து டபாய்ச்சுகிட்டு ஓடி அவர் கண்ணுல படாம வேற இடத்துல போய் விளையாடுவேன்.

பிற்காலத்தில் அஸ்ஸாம் போக வேண்டி வந்தப்ப, விட்ட ஹிந்தியைத் தொடர மறுபடியும் அவர்கிட்ட ஓடினேன். உனக்கு எவ்வளவு தடவை சொல்லிக் கூப்பிட்டிருக்கேன், ஒழுங்கா வந்து கத்துக்கோன்னு. அப்ப என்னை ஏமாத்தின, இப்ப நீ ஏமாந்து நிற்கிற பாருன்னார். அப்ப நான் சொன்னதைக் கேட்டிருந்தா, இந்நேரம் உருது கூட கத்துகிட்டு இருந்திருக்கலாம்ன்னார். அவ்வளவு உருதுக்கவிதைகள் புரிஞ்சுருக்கும்ன்னார்.

அவர் இன்றைய சென்னை சம்ஸ்கிரதக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளின் அண்ணன் ஆர் எஸ் சார். ஐஐடி சம்ஸ்கிரதப் பேராசியரின் பெரியப்பா!

அவர் இன்றுவரை எனது மானசீக குரு! 🙏.
ஆச்சார்ய தேவோ பவ! 🙏

குரவே நம:

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Saludo a tu profesor (आचार्य)!