Sunday, April 22, 2018

குரங்கின் கையிலோர் மடிசார்

புரட்டி அடித்தால் புரோட்டா என்றார்கள்
புரட்டி அடித்தேன் துவைக்கும் துணியை
துணியைப் புரட்டியதில் கிழிந்தது புரோட்டா!

காணும் கண்டதைச் செய்வதறிந்து செய்தேன்
அதைப் புரட்டி எடுத்து கழுவியதுடன் நின்றது அறிவு
கற்றது மண்ணளவு கல்லாதது உலகளவு
கற்றது ஏட்டுச் சுரைக்காய் எனினும்
என்னறிவில் அதுவோர் இமயமலை!

புரட்டி எடுத்து மடிக்கும் மடிப்பை அறியேன்
மாமியின் மடிசாரில் மடிப்பை அறியேன்
அடித்துத் துவைக்கும் துணியின் மடிப்பில்
தானாய் மடித்து நிற்கும் மடிசார்!

குரங்கின் கையிலோர் மடிசார்!

கரைந்துண்ணும் போராட்டம்

வாழ்க்கை எனும் ஜீவ மரணப் போராட்டம்
விரட்டியடிக்கும் காக்கைக் கூட்டம்
தன் பிறவா குஞ்சினை
வாழவைக்கப் போராடும் கூட்டம்!

பருந்தின் கையிலோ மலரத்துடிக்கும் ஜீவன்
பிறந்தும் உலகம் காணமுடியா குருவிக்குஞ்சு!

இரையாடத் துடிக்கும் பருந்தை
அஞ்ச விரட்டும் காக்கை கூட்டம்
ஒன்றோ இரண்டோ அல்ல
தனியாய் எதிர்கொள்ளும் பருந்து!

இரைத்தேடலில் ஜீவமரணப் போராட்டங்கள்
பிறரது இழப்பில் தோன்றும் கடினங்கள்
கூடி வாழ எண்ணும் காக்கைகள்!

காக்கை கரைந்துண்ணும் உணவல்ல
காக்கை விரட்டலில் உண்ணும் உணவு
எளியவனை வலியவன் அழிக்கும் தேடல்!

காக்கையை கரைந்துண்ணும் போராட்டம்!