Sunday, September 25, 2022

ஸ்பானிஷ் கற்கும் பொழுதில் - 10

கம்யூனிட்டி காலேஜில் ஸ்பானிஷ் படிக்கும் எங்க செட் மக்களை, எங்க புரபசர் தான் பக்கத்திலுள்ள சர்ச்சில் ஸ்பானிஷ் பேசும் மக்களுக்கு தான் நடத்தும் ஆங்கிலப் பயிற்சி கிளாசில் உதவ முடியுமான்னு கேட்க, யாராவது வேண்டாம்ன்னு சொல்வோமா. எல்லோரும் ஆஜர்.

இன்னிக்கு சர்ச்சில் நடந்த முதல் கிளாஸ்க்கு இரண்டு பேரும், இரண்டாவது கிளாஸ்க்கு நானும் இன்னொருத்தரும் போய் கலந்துகிட்டோம்.

இந்த ஆறு மாசமாக ஆன்லைன்ல ஸ்பானிஷ் கத்துக்கிறதால யாரும் ஒருத்தரை ஒருத்தர் நேரில் பார்த்தது கிடையாது. ஒருவர் மட்டும் என்னோட பத்து வருடம் முன் வேலை செய்தவர். இன்னிக்குத் தான் புரபசரை நேரில் பார்க்கிறோம். அவங்களும்.

முதல் கிளாஸ் ரூமே நிரம்பி வழியுது, உட்கார இடமில்லை. இரண்டாவது கிளாஸில் சிலர் வராததால் மூவர் இருந்தனர். வந்த மூவரில் இரண்டு பேர் வெனிசுலா (வெனேசுயேலா), மற்றவர் க்யூபா (குபானா).

ஆங்கிலம் பேசினா அரைகுறையாகப் புரியுது அவங்களுக்கு. ஸ்பானிஷ்ல சரளமாக வெளுத்து வாங்கறாங்க, அவ்வளவு ஸ்பீட். அவங்க பேசறது ஆரம்பத்துல புரிய தடுமாறிச்சு, அப்புறம் போகப் போக அவங்க பேசறதை என்னை ஆங்கிலத்தில் சொல்லச் சொல்ல, புரபசருக்கே ஆச்சரியம், நீ இவ்வளவு தூரம் புரிஞ்சுக்கறன்னு. ஆனால் எனக்குப் பேச வரலை, செம தடுமாற்றம். என் கூட வந்தவங்க தைரியமாகப் பேச ட்ரை பண்றாங்க, ஆனால் அவங்க ஸ்பானிஷ் பேசறதில் சிலது தான் புரியுதுன்னாங்க.

வெனிசுலா க்யூபா ஸ்பானிஷ் நன்கு வேறுபடுது, ஆனால் அவங்களுக்குள் நன்கு புரிஞ்சுக்கிறாங்க. எங்க ஸ்பானிஷ் உச்சரிப்பு மற்றும் கிராமரை அழகாக கரெக்ட் பண்ணிச் சொல்றாங்க.

க்யூபாக்காரர் நாங்கப் போனதைக் கண்டு ரொம்பவே நெகிழ்ந்து போயிட்டு ஒரு பெரிய ஸ்பீச்சே ஸ்பானிஷ்ல கொடுத்தார். ஒன்னும் புரியலை. அவ்வளவு ஸ்பீடு. புரபசர் மொழிப் பெயர்த்துச் சொன்னார். 

அவங்க மூனு பேருக்குமே ஆங்கிலம் தெரியாமப் படற கஷ்டத்தை அவங்க ஸ்பானிஷ்ல சொல்லும் போது நமக்கே மனசு கலங்கிப் போச்சு. 

டாக்டர் ஆபீஸ் அப்பாயின்ட்மென்ட் வாங்க முடியறதில்லை, நோ ஸ்பானிஷ்ன்னு டக்குன்னு போனை அவங்க கீழே வைப்பதாகச் சொன்னவுடன் எங்களுக்கு ஆடிப் போச்சு. க்யூபாக்காரர் வேலை செய்யற இடத்துல படற கஷ்டங்களைச் சொன்னார்.

நாங்க அவங்களோடு சேர்ந்து ஸ்பானிஷ் கத்துக்கறதைப் பார்த்து ரொம்பவே நெகிழ்ந்து போய் உருகிப்பேசினார். அடுத்த முறை நாங்க வரும் போது க்யூபன் டெலிகசிஸ் செய்து கொண்டு வந்து தர்றேன்னு சொன்னார். அவ்வளவு தான் என் கூட வந்த ஆப்பிரிக்க அமெரிக்கன் பெண்மணி சந்தோஷத்துல குதிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

புரபசர் எங்களைப் பேச விட்டுவிட்டு அடுத்த கிளாஸ்க்குப் போய் விட்டார். ரெஸ்டாரண்ட் போனா எப்படி ஆர்டர் பண்றதுன்னு அவங்க கேட்க, என் கூட வந்தப் பெண்மணி ‘may I get’க்கும் ‘can I get’க்கும் அமெரிக்காவிலுள்ள வித்தியாசத்தை மிக அழகாக அமெரிக்கன் ஸ்டைலில் விவரிக்க அவங்க அசந்து போய் மகிழ்ச்சியோடு பார்த்ததுமில்லாம நோட்ஸ்ஸும் எடுத்துகிட்டாங்க.

அடுத்து டாக்டர் ஆபீஸில் எப்படி போனில் பேசுவது என ஆரம்பிச்சேன், அதுக்குள்ள புரபசர் வந்து இன்றைய கிராமர் லெஸன்ஸ் எடுக்க எங்களுக்கும் அது ஒரு புது அநுபவமாகப் போச்சு.

இத்தனை நாள் என் கிட்ட நீ ஸ்பானிஷ் கத்துகிட்டு என்ன பண்ணப் போறேன்னு பலர் கேட்டாங்க. சரியான பதில் இல்லாம முழிச்சு கிட்டு இருந்தேன். இன்னிக்கு சர்ச்சில் புரபசர் காட்டிய வழி, நாம படிப்பதில் ஒரு பர்சண்ட் ஆவது மற்றவர்களுக்கு உதவ வாய்ப்பு இருக்கிறது என்று உணரும் போது சந்தோஷமாக இருந்துச்சு.

கற்பது வீணாகப் போவதில்லை என்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Aprender y ayudar a los demás!

No comments: