Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Friday, July 15, 2022

நம் பணத்தின் மதிப்பு

25 வருடமுன்ன இங்க வரும் போது கையில ஒரு 200 டாலராவது எடுத்துகிட்டு வரனும்ன்னு கையில இருந்த அத்தனை பணத்தையும் துடைச்சி எடுத்து மும்பையில் டாலராக மாத்தினேன். அப்ப மார்க்கெட் ரேட் ஒரு டாலருக்கு 26 ருபாய். தாமஸ் குக் அவங்க கமிஷன் போக குறைவாகவே கொடுத்ததை வாங்கிட்டு வந்தேன்.

இங்கு வந்து ஏழெட்டு வருடம் கழித்து மிகவும் வேண்டிய ஒருத்தருக்கு ஒரு லட்ச ரூபாய் அனுப்பினேன். நான் கொடுக்க வேண்டிய பணம் அது, கொடுத்து விட்டேன். அப்ப கன்வர்ஷ்ன் ரேட் 40 ரூபாய் பக்கம். நான் அனுப்பிய தொகை 2500$. ஒரு நல்ல காரியத்திற்கு அனுப்பியது, ஆகவே அதை கணக்கு போடுவது சரியல்ல. அதைப் பற்றி விமர்சிப்பதும் சரியல்ல. நான் கொடுக்க வேண்டிய பணம்.

பின்னாடி சில வருடங்கள் கழித்து ஒரு டாலர் மதிப்பு 62-63 ரூபாய் ஆகி விட்டது. ஆனால் அப்பவும் அவர் அதைக் குறிப்பிடும் போது தான் ஒரு லட்சம் மட்டும் பெற்றதாகக் குறிப்பிடுவார். மறந்து போய் கூட 2500$ என சொல்லி விட மாட்டார். ஆக, அந்த 2500$ன் மதிப்பு இப்ப 1500$ ஆக குறைந்து விட்டது. நான் கொடுக்க வேண்டிய பணம் தான்.

இப்போது ஒரு டாலரின் மதிப்பு 80 ரூபாய் என காண்பிக்கிறது இன்று. ஆக, அந்த 2500$ன் மதிப்பு இப்ப 1250$ தான்.

இது தான் நம் பணத்தின் மதிப்பு. இதில் ஏற்ற தாழ்வு பார்ப்பது என்ன. பொருளாதாரம், பண மதிப்பு அறிந்தவன் தான் நான்.

அமைதியா இருப்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Valor del dinero!

Saturday, May 2, 2020

வீட்டிலிருந்தே வேலை செய்தால்

கொரோனா காலத்தில்:

இப்ப நிறைய ஐடி மக்கள் வீட்டுலேர்ந்தே வேலை செய்கிறார்கள்.
1. மேனேஜர்ஸும் வீட்டிலேர்ந்தே மானிட்டர் பண்ணுகிறார்கள்!
2. புரொடக்‌ஷனில் அதிக நட்டமில்லை!
3. நீண்ட தொலைவு ஆபீஸ் பயணம் தேவையில்லை!
4. மதிய உணவு வீட்டுலேயே!
5. வேலை ஒட்டிய பயணங்கள் செலவுகள் ரத்து!
6. விதவித ஆடைகள் லாண்டரி செலவுகள் ரத்து

கொரோனா முடிந்த பின்:

ஐடி மக்கள் வீட்டுலேயே வேலையைத் தொடருங்க என்று வந்தால்:
1. பில்டிங் வாடகை, எலக்ட்ரிசிட்டி, நெட்வொர்க் செலவு மிச்சம்
2. போக்குவரத்து நெரிசல் குறையுது, தனியார் பஸ் தேவையில்லை
3. மதிய உணவு, டீ செலவு மிச்சம்
4. வொர்க்கர்ஸ் காம்பென்சேஷன் செலவு குறையும்

விளைவுகள்:

0. சம்பளம் குறையும்.
1. ஆபீஸ் ரியல் எஸ்டேட் காலி
2. தனியார் போக்குவரத்து வேலை போகுதல்
3. அலுவலகம் ஒட்டியுள்ள ரெஸ்டாரெண்ட்ஸ் பிசினஸ் காலி
4. வியாபார பயணங்கள், ஏர்லைன்ஸ், டாக்ஸி குறைஞ்சுரும்
5. ஆடை விற்கும் கடைகள், லாண்டரி காலி

மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்துல கொண்டு வந்து விட்டுரும் போலிருக்கே!

# அட கொரோனாவே!

Wednesday, December 26, 2012

சோற்றுக்கணக்கு

ராசக்கா காலையில நேரத்தில எழுந்திரும். எழும் முன்னவே நாள் முழுக்க என்ன செய்யனும்ன்னு எதையோ யோசிச்சிட்டே இருக்கும். ராசக்காவின் மாமனோட உறவு சனம் தினம் பத்து பதினைந்து பேரோ அவங்க வீட்டுல சாப்பிடும். அக்கா  எல்லோரையும்  மிரட்டி எதோ வேலை வாங்கி கிட்டே இருக்கும். ஒருத்தரும் சம்பாதிச்சு கொடுக்க இல்லை. மாமன் கொண்டு வருவது தான். இத்தினி பேர் சாப்பிடுதுங்கலேன்னு ஒரு தடவையும் சொல்லிக் காமிக்காது. ஆனால் ராசக்காவின் பேச்சுத் தொனியே அவிங்களை விலக்கி வைச்சிரும். தன்னோட தடித்த உருவத்தையும் தடித்த குரலையுமே தனது பலமாக வைத்தே வாழும் உசிரு அது.

நான் அது வீட்டுக்குள்ள நுழையும் போது அதன் முகத்தில ஒரு தனி மலர்ச்சி தெரியும். இத்தனிக்கும் மாமன் தான் என்னை தூக்கி வைச்சு விளையாடும். அக்கா வேலையா இருந்தாலும் கண்ணு மட்டும் என்னோட விளையாட்டையும் குறும்பையும் தனியாப் பார்த்து ரசிக்கும். பிறவு தனியா என்ர  ஆத்தா கிட்ட சொல்லும் போது தான் இத்தினியும் கவனிச்சிருக்குன்னு தெரியும். ஒரு வெள்ளி கிண்ணத்துல சோறு பிசைஞ்சு ஊட்டும். மாமனோட வெள்ளித் தட்ட வையுன்னு அடம் பிடிச்சாலும் எதையோ சொல்லி வெளியத் தூக்கி கிட்டு வந்திரும். மாமனோட அக்கா அந்த தட்டை மாமனுக்குத் தவிர யாருக்கும் கொடுக்காது. ரொம்ப கேட்டா போய் உன்ர வீட்டுல துன்னுன்னு விரட்டும். ராசக்கா  வெளிய கூட்டி வந்திரும்.

தினம் பத்து பேரு திங்கிற வீட்டுல ராசக்கா ஏதொ சொல்லிச்சுன்னாத் தான் சண்டை வரும். மாமனோட மச்சான் உள்ள வராம வெளிய நின்னு பேசிட்டுப் போயிரும். யாரும் சாப்பிடுவதற்கு ஒன்னும் சொல்லாது. ஆனால் ஏதொ ஒன்னு சொல்லி சண்டை வர வழவைச்சிரும். எதுவும் புரியாம அங்கேயே விளையாடிகிட்டு இருப்பேன். யாராவது கண்ணு கசங்கிச்சுன்னா ஓடியாந்துருவேன்.

ஊராம் புள்ளைய எடுத்து வளர்த்தா தன்  புள்ளை தானே வளரும்ங்கும். ஆனால் அக்கா வீட்டுல புள்ளைகுட்டி கிடையாது. என்னைத் தவிர அது வளர்த்து விட்டது மாமனோட உறவு சனத்துல மட்டும் தான். அந்த புள்ளைங்களோட விளையாடுவேன். அங்கிருக்கிற வாலிபப் பசங்க பொண்ணு பிள்ளைகளோடு விளையாடுவேன். வீட்டுக்கு சாப்பிட தூங்க மட்டும் வருவேன்.

நான் வளர வளர அந்த வீட்டுல வளர்ந்த மற்ற புள்ளைங்களுக்கும் கல்யாணம் சேர்த்தி எல்லாம் செய்து வைச்சது. அந்த வீட்டு கல்யாணம் பண்டிகை சேர்த்தி எல்லாத்திலும் என்னை பக்கத்தில வைச்சுக்கும்.

ஜெயமோகனின் சோற்றுக்கணக்கு  படிக்கும் போதெல்லாம் அதில் வர்ற கேத்தேல் சாஹிப் என்ர ராசக்கவாத்தான் இருக்கும். ராசக்காவின் சோத்துக் கணக்கை யாராலயும் அடைக்க முடியாது.

Monday, November 26, 2012

தென்னிந்திய முதல்வர்கள் சந்திப்பு

தென்னிந்திய முதல்வர்கள் சந்திப்பு 

இன்று இரு மாநில முதல்வர்கள் கோர்ட் உத்திரவு படி சந்திக்க வேண்டிய நிலைக்கு  உள்ளாகியுள்ளனர். இதை நான் வேறொரு விதமாகக் கற்பனையாக  நினைக்கிறேன்.

இனி வரும் காலங்களில் நான்கு தென்னிந்திய முதல்வர்களும் ஒரு சுழல் முறையில் ஒவ்வொரு மாநிலத்தின் சிறந்த சுற்றுலா பகுதியிலோ அல்லது அனைவரும் இறை நம்பிக்கை உள்ள முதல்வர்களானால் ஒரு திருத்தலத்திலோ மாதம் ஓரிரு முறை சந்தித்து  ஓரிரு மணி நேரம் ஓர் கலந்துரையாடல் நடத்தினால், அல்லது ஒரு சின்ன டீ  பார்ட்டி சந்திப்பு நடத்தி வந்தால் அவர்களுக்குள்ளாக ஒரு சுமுகமான நட்புறவு உருவாகும்.

சந்திப்பில் அரசியல் பொருளாதாரம் சமூக உறவுகளுக்கான ஒரு அடித்தட்டு விவாதம் கலந்துரையாடல் நடத்தி வந்தால் பிற்காலத்தில் பிரச்சனைக்குரிய நதி நீர் பங்கீடு, மாநிலங்களுக்கிடையே ஆன வர்த்தகம் போக்குவரத்து போன்றவற்றில் பேச்சு வார்த்தை நடத்தும் போது  மிக இலகுவாக எல்லாம் நடை பெறும்.

பிரச்சனைக்குறிய வற்றை கொஞ்சம் தாமதமாக கலந்துரையாடினால் அதற்குள் அவர்களுக்குள் ஒரு நல்ல பரஸ்பர நட்பு உருவாகிவிடும். நாளை மத்திய அரசுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தும் போது ஒரு தனி மாநிலத்திற்கான அணுகுமுறை இல்லாமல் ஒட்டு மொத்த தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் ஏற்றவாறு ஒன்றாக செயல் பட வாய்ப்பு ஏற்படுத்தக் கூடும்.

முதல்வர்கள் அளவில் ஒரு நட்புறவு வந்தால், பிற்காலத்தில் நான்கு மாநில மக்களுக்கு இடையிலும் ஒரு சகோதரத்துவம் வளர ஏதுவாக இருக்கும். இனி நீ என்ன வந்து எங்களை கொடு என்று கேட்பது. நாங்களே கொடுக்க மாட்டோமா என்கிற அளவுக்கு நட்பு வளர உதவும்.

ஹலோ ஹலோ ஸ்டாப் ஸ்டாப்.

என்ன கனவு ரொம்ப ஓவராப் போய்  கிட்டு இருக்கு!!

ஓ ! அப்பிடீங்களா ! பரவாயில்லை. ஒரு நாள் நடக்கட்டும்.

முதல்வர்கள் கவனிப்பார்களா?

Thursday, June 7, 2012

புழக்கடை



'எலேய்! புழநியில என்னத்தலே துலவுர'ன்னு கேட்கிற சத்தைக் கேட்டு வெடக்குனு திரும்பின என்னப் பார்த்து சிரிச்சுக் கிட்டே நெருங்கிய ராசக்கா, சத்தம் கேட்டு அஞ்சுர மொவனுக்கு புழநியில என்ன சோளின்னுச்சு.

ராசக்கா குரலும் நடைச் சத்தமும் கண் மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும் தெரிஞ்சுபுடும் எனக்கு. ஆனால் ஒரு நீண்ட லயிப்புல பார்த்து கிட்டுருந்த அந்த பறவையோட செயல் என்ன முடக்கிப் போட்டுருச்சு.

யக்காவ்! சத்தம் போடாம அங்கிட்டுப் பாரு, ஓடிரப் போவுதுன்னு மெதுவா கூவையில, நறுக்குன்னு தலையுல கொட்டிகிட்டே, மரத்தடியில ஒதுங்குரவனை பார்க்கவா புழநியில ஒதுங்கின பொறுக்கிப்பயலே ன்னு வசவு கொடுக்கிற ராசக்காவப் பார்த்து, குட்டு வாங்கின தலையை சொறிஞ்சிக்கிட்டே, மரத்து மேலப் பாருன்னு சொல்றது புரியாம எங்கிட்டோப் பார்த்து பொறணி பேசின, விலசிப் புடுவேன் சாக்கிரதைன்னு கத்துனப் பிறகு தான், அசட்டு சிரிப்பு சிரிச்சுது.

அப்புடி என்னத்தலே அங்கப் பார்த்து கிட்டு இத்தினி நேரமாக் கிடக்கிரன்னு ஒரு கமுட்டுச் சிரிப்போடு கேட்கும் ராசக்காவைப் பார்க்கும் போது அதன் மொவம் மார்ற அழகு பார்த்து ரசிப்போடு, அந்த பட்டுப்போன மரத்தைப் பாருக்கான்னேன்.

அது தலைத் தூக்கிப் பார்க்கையில, அந்த பறவையும் மரத்த ஒரு இடைவிடாம சட சடன்னு கொத்துற சத்தத்தப் பார்த்து, எலேய் மரங் கொத்திப் பறவைலே! என்னமா போடு போடுதுரா ன்னுச்சு.

இப்ப உன் மரமண்டையில சவட்டச் சொல்லட்டுமான்னு நான் சிரிக்கையில, அட வரட்டிப் பயலே, நெனப்பப் பாருன்னுச்சு.

அந்த செத்துப் போன மரத்துல என்னாலே பண்ணுதுன்னு அப்பாவியாக் கேட்கும் ராசக்காவப் பார்த்து, நீ இத்தினி பெருசானாலும் உன்மண்டையில களிமண்ணுன்னு சொல்ல முடியாது. சவட்டி தட்டிரும்.

யக்காவ், அந்த மரம் செத்துப் போச்சு. அதக் கரையான் தான் சாப்பிடுது. மரங்கொத்திப் பறவைக்கு கரையான் பூச்சி துன்னா மாதிரியும் ஆச்சு, அது அரைமணி நேரமா போடற துளையில கூடு கட்டிக்கிட்டா மாதிரியும் ஆயிறும் சொல்ற என்னை ராசக்கா பார்க்கிற பார்வை ஒரு மாதிரி இருந்துச்சு.

ஒன்னும் பேசாம அது நவுரையில, என்னா! ஒன்னும் சொல்லாமப் போறேன்னு கேட்டேன்.

எலேய்! அப்பப்ப ஒரு பெரிய படிப்பு படிச்ச புள்ளையாட்டம் பேசுற நீ! நான் இந்த மாமனோடு புழக்கடையில புழங்க வந்ததிலிருந்து எல்லாம் அத்துப் போச்சுன்னு சொல்லிட்டு போகிற ராசக்காவப் பார்த்து, அது திரும்பிப் போவுற பாதையைத் தான் ஒரு கனத்த மொகத்தொடு பார்க்க முடிஞ்சதே தவிர, அந்த மரங்கொத்தியை திரும்பிப் பார்த்துகிட்டு இருக்க முடியல!

Sunday, April 29, 2012

அரச இலை

காலை நேரத்து இளம் வெயிலின் சூடு முகத்தில அடிக்கும் போது ஒரு வித ரசிப்போடு கண்ணை சுருக்கி கிட்டு அரச மரத்தடியில வந்து உட்காரும் போது எப்போதும் ஒரு தனி சுகமா இருக்கும். இன்னிக்கும் அவ்வாறே பல் துலக்கி கிட்டே வந்து அரச மரத்தடியில் வந்து உட்கார்ந்தேன்.

பக்கத்தில் ஒரு சின்ன மெதுவான அசைவோடு ராசக்கா என் தலையை கோதி விட்டுகிட்டு வந்து உட்கார்ந்துச்சு. வெயிலின் ஒளி கண்ணில் தெறிக்க மெதுவா ராசக்காவை ஒரு சாரைப் பார்வை பார்த்தேன்.

அக்கா ஒரு முறை என்னப் பார்த்து ஒரு புன்முறுவலிட்டுவிட்டு, தலை குனியும் போது அதன் முகம் கொஞ்சமா மாறுவதை உணர்ந்தேன். மறுபடியும் தலையைத் தூக்கி ஒரு அழுத்தத்துடன் 'என்ர வீட்டுக்குப் போய் வரலாம், வரையா?' என்ருச்சு.

எப்போதும் என்னை விட்டு விட்டு கடைக்கும் சந்தைக்கும் நடவுக்கும் போகும் அக்கா, அதன் பின்ன துரத்திகிட்டு ஓடும் எனக்கு, அக்கா உண்மையாத்தான் சொல்லுதான்னு இருந்துச்சு.

'சரி. பத்து நிமிஷத்துல கிளம்புன்னு' சொல்லிட்டு எழுந்திருச்சுப் போயிடுச்சு. யக்காவ் ன்னு கூப்பிடரத்துக்குள்ள போயிடுச்சு.

மாமனை கட்டிக் கிட்டதப்புரம் என்னிக்குமே தன் வீட்டைப் பத்தி ஒன்னும் சொல்லாது. மாமன் இல்லாம ஊருக்கோ ஊர் திருவிழாவுக்கோப் போவாது. இத்தனைக்கும் ராசக்கா வூடு அரை மணி நேரப் பஸ் பயணம் தான். மாமன்ட்ட அங்கப் போவணும்னு என்னைக்குமே கேட்காது. மாமன் ஏதாவது சொல்ல வந்தாலும் ஒன்னும் சொல்லாது.

இன்னிக்கு என்ன ஆயிருச்சுன்னு ஒன்னும் புரியாம, சரி, எங்க! அக்கா விட்டு விட்டுப் போயிருமோன்னு, துள்ளி குதிச்சு கிளம்பிட்டேன்.

வூட்டுக்குப் போய் அவசர அவசரமா கிளம்பி ராசக்கா வூட்டுக்குப் போறேன்னு அப்பனாத்த கிட்ட சொல்லி வெளியே வரும் போது, ஆத்தா சிரிச்சி கிட்டு வந்து இந்த கேப்பை கூழ ஊத்திக்கிட்டுப் போடா ரேன்னுச்சு.

கொஞ்சமா குடிச்சி வைச்சிட்டு வந்தா, அக்கா தயாராயி அரச மரத்தடி கிட்ட நின்னு கிட்டிருந்துச்சு.

எப்ப ரெடியாச்சு, எப்ப மாமன் கிட்ட பேசிச்சுன்னு கேட்கத் தோணிச்சு. கேட்டா அந்த காலை வெயிலின் இளஞ்சுவாசம் அக்கா மூஞ்சியிலிருந்து மாறிருமொன்னு தயக்கத்தோடு, அக்கா தெரிஞ்சிகிடாத மாதிரி  எப்போதும் போல ஒரு துள்ளல் குதியோட நடை போட்டேன். ராசக்கா இளஞ்சிரிப்போடு பின்ன வந்திச்சு.

பஸ் ஸ்டாண்ட் போற வரை சும்மா இருக்க முடியல. 'அக்கா! உன் ஆத்தாவைப் பார்க்கப் போறோமா' ன்னேன். ஒன்னும் பதில் வரலை. 'இன்னிக்கே திரும்பிருவோமா?' கேட்டதுக்கு, 'ஆமாம்லே!' என்ர ஒத்த வரி பதில் தான்.

பஸ்ல அக்கா பக்கத்தில உட்காரும் போது அக்கா முகத்தில ஒரு குதுகூலமான முகத்தோட பளபளப்பு தெரிஞ்சுது. 'என்னாலே! என்ன இப்பிடி பாக்கே!' ன்னுச்சு. ஒரு அசட்டுச் சிரிப்போடு சன்னல் வழியே வேகமா நவரும் வேப்பம் மரங்களைப் பார்க்க ஆரம்பிச்சேன்.

ராசக்கா ஊரு வந்தவுடனே அது வேகமா நட கட்டிச்சு. அக்கா ஸ்பீடுக்கு ஈடு கொடுக்க முடியாம கூட ஓடவும் நடக்கவும் செய்ய கால் நோவ ஆரம்பிச்சு. 'யக்காவ்! உன்ர ஆத்தாவப் பார்க்கிறப் போற உன்ர ஸ்பீட் முடியலக்காவ்!' ன்னேன். சிரிச்சிகிட்டே திரும்பி 'உன்ர வயசில நான் நடப்பேன்னு நினைக்கிற மம்முட்டிப் பயலே'ன்னுச்சு.

ராசக்கா போற ஸ்பீடப் பிடிக்கிறதுக்குள்ள அக்கா ஊர் ஆத்தங்கரைப் போயி தான் நின்னுச்சு.

'யக்காவ்! உன்ர வீட்டுக்குப் போவாம இங்க என்னப் பண்றே!' கேட்க்கிரதக் கூட கண்டுக்காம ஒரு சின்னப் புள்ள கணக்கா, அந்த அரசமரத்தை சுத்துவதும், திட்டு மேல ஏறுவதும், உட்கார்ந்து கால ஆட்டுவதும், ஆத்துக்குள்ள இறங்கி முங்கி எழுவதுமா பண்றதப் பார்த்த யக்காவ் என்னோட சிறுசா இருக்கும் போல என்றிருந்திச்சு.

கரையேறி அரச இலையை எடுத்து சேர்த்து கண்ணுக்கு கண்ணாடி பண்ணிக் கொடுத்தும் அதுவும் எடுத்து ஒன்னு மாட்டிக்கிட்டு என்னோட விளையாட ஆரம்பிருச்சு.

கொஞ்ச நேரத்தில வீட்டுக்கு கூட்டிப் போவும்னு நினைச்ச எனக்கு, ராசக்கா திரும்பி பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடையைக் கட்டுரதப் பார்த்து ஒன்னும் புரியல.

'அக்காவ்! வீட்டுக்கு ...' சொல்வதைக் கூட ஒரு சிரிப்போட பார்த்து 'வா! வூட்டுக்குப் போலாம்னு' பஸ் ஏறிருச்சு.

பஸ்சில ஏறி பக்கத்தில உட்க்கார்ந்து வுடனிருந்து பார்த்து கிட்டே வரேன், ராசக்கா முகத்தில ஒரு சந்தோசம், தானே சிரிச்சு கிட்டு, பஸ் சன்னல் வெளியே கைய ஆட்டிக் கிட்டே வந்துச்சு.

'அக்கா! ஒன்னும் புரியல. உன் ஊருக்கு எதுக்கு வந்த, ஊட்டுக்குப் போவாம ஆத்தங்கரையோட திரும்பற! பசிக்குது எனக்கு! ' ன்னு சொல்வது கூடப் புரியாம, 'உன்னாலத்தான்!' ன்னுச்சு.

ஒன்னும் புரியல. தலை நோவ ஆரம்பிச்சிருச்சு!

'என்னாலா! எதுக்குன்னேன்!'.

'ஏலே! காலையில எழுந்திருச்சு என்ன பண்ணுவே!'ன்னுச்சு.

ஒரு சலிப்போட 'என்ன! ஆத்தா கையில திணிக்கிற பல் துலக்கிற குச்சியோட அரச மரத்தடிக்கு வந்து குந்தறது தான், வேறென்ன!'.

ராசக்கா 'அதான்' ன்னு சொல்லி கையில இருந்த இலையைத் தூக்கி காமிச்சுது.

கையில 'அரச இலை'.

ஆச்சரியமும் சிரிப்பும் சேர்ந்து வந்துச்சு. ரெண்டு பெரும் சத்தமா சிரிச்சுக் கிட்டோம், பஸ்சில இருக்கிறவங்க பார்ப்பதைக் கூட கண்டுக்காம.

Sunday, March 11, 2012

வலையூர் பட்டி கணக்கு

செல்வம் மாமன் தோள் மேல கை போட்டு ஒரு வாஞ்சையோட இழுத்து கிட்டுப் போனாலும், தன் மேல் விழுந்த கையின் வலுமை கொஞ்சம் குப்பண்ணன் மனசை இறுக்கி பிடிச்ச மாதிரியே இருந்தது.

ஊரை பார்க்க வந்தேன் மாமான்னு  சொன்னாலும், அது இருக்கட்டும் மாப்பிள்ள, நீங்க வாங்கன்னு வீட்டுக்கே இழுத்துக் கிட்டுப் போயிருச்சு.

அப்பன் கிட்ட சொல்லாம வந்ததுக்கு வசவு வேறு இருக்குன்னு நினைக்கும் போது குப்பண்ணனுக்கு ஒரு பேச்சும் வரமாட்டீங்குது.

குப்பண்ணன் மெதுவா செல்வம் மாமன் கைய நவுத்துனதும், 'பயப்படாத மாப்ள , அப்பன் கிட்ட சொல்லலைன்னு' மாமன் மெதுவா சொல்ல, மாமன் இப்பிடி மனசைப் படிக்குதேன்னு குப்பண்ணனுக்கு இன்னும் பயம் சேர்ந்து ஒட்டிகிச்சு.

விட்டா ஓடுவதர்க்கே இருந்த குப்பண்ணனுக்கு, அல்லியாம்மா மொவத்தைப்  பார்க்க தைரியம் இல்லாம, மாமன் கிட்ட சொல்லி கிட்டு வயல்வெளி  நோக்கி  நட கட்டிச்சு.

குப்பண்ணனுக்கு மனசு சரியில்லைன்னாலும் சந்தோசமாயிருந்தாலும் ஒத்தையடி வயல் பாதையிலோ ஆத்தங்கரை வோரமா நடக்கத்தான் விரும்பும்.

நடவுக்கு வந்த புள்ளைங்க தன்னைப் பார்த்து சிரிப்பதாகவே தோன்றியதால், எங்கயும் நிக்காம மனசு ஊரை பார்க்கக்  கிளம்பிடுச்சு.

இத்தனையும் மத்தவங்க மூலமே கேள்விப் பட்ட அல்லியம்மா, மாமன் தன்னை ஒன்னும் பார்க்காமலேயே ஊர் திரும்பரதைப் பார்த்து ஒரு அழுகாச்சியா அழுவ, வந்ததே கோவம் அதுக்கு.

'எந்த சிறுக்கி மவன் என் மாமனை கல்லெடுத்து அடிச்சுதுன்னு' ஒரு கத்து கத்திகிட்டே வயல் பக்கம் ஓடிச்சு. எதிர கர்ணம் வீட்டு கணக்கின் மவன் சுந்தரவதனம் வர, மாமன் எங்கேன்னு கேப்போம்ன்னு அவனை நிறுத்திச்சு.

அரண்டு போன சின்ன கணக்கு மொவமே  மாறிருச்சு. அல்லியம்மா கோவம் அம்புட்டும் சுந்தரவதனம் மேல சந்தேகத்தோட திரும்பிருச்சு.

'எலேய்! வலையூர் பட்டி கணக்கு! வாரா இங்கே'ன்னு இழுக்க, பயந்து போன சுந்தரவதனம், 'யக்காவ், தெரியாம கல்லை இட்டுபுட்டேன்'னு சொல்லிட்டு ஓட ஆரம்பிச்சவனை துரத்திகிட்டே ஓட ஓட, சுத்து வட்டம் அலப்பறை பண்ணுவதை கூட கண்டுக்காம அல்லியம்மா ஓடிச்சு.

நடவுக்கு வந்த புள்ளைங்க சத்தமா கூவி சிரிக்க, சிரிக்க, எதிர வந்த ஆளை மோதுறது கூட தெரியாம ஓடிச்சு. திடீர்ன்னு நின்ன சுந்தரவதனம், 'யக்காவ், அதான் உன்ர மாமன் 'ன்னு சொல்லிட்டு ஓடிட்டான்.

எலேய்! வலையூர் பட்டி கணக்கு! வைச்சுகறேண்டா உனக்கு ஒரு நாளுன்னு, சொல்லிப்புட்டு, தன் மாமன் நினவு வர கோவமா  மாமனை நோக்கி திரும்பிச்சு.

குப்பண்ணன்க்கு தான் கட்டிக்கிரப் புள்ளையைப் பார்த்து  ஒரு துளி  என்ன சொல்லன்னு திகிலோட கலந்த ஆச்சரியம்.

 'என்னைப் பார்க்கத்தானே வந்தே நீ'ன்னு கேட்கும் அல்லியம்மாக்கு, மறுபடியும் ஊரைப் பார்க்கத்தான்னு சொன்னா  இங்கயே கொன்னுபுடப்  போவுதுன்னு நினைப்பு வர, எதையோ சொல்லிப் புட்டு நடையை கட்டிருச்சு.

அல்லியம்மா மனசு நோவ ஆரம்பிக்க, அழுகாச்சிய அடக்கிகிட்டே இத்தனைக்கும் காரணம் அந்த சிறுக்கி மவன் வலையூர் பட்டி கணக்கை வைச்சுக்கிறேன் ஒரு நாளுன்னு கருவிச்சு.

நடவு புள்ளைங்களைப் பார்த்து ஒரு முறை முறைச்சுக்கிட்டே போங்கடி போக்கத்தவகன்னு  வைஞ்சுகிட்டே வூட்ட நோக்கி நடக்க ஆரம்பிச்சுது.

1, 2.

Sunday, February 26, 2012

புரியாமப் புரியுது

அம்மா என்னை காலையில ஆட்டி எழுப்பும் போதே என்ர அப்பன் கருப்பட்டி காபியோட வெளியே நிப்பாரு. கண்ணத் துறக்கலாமா வேணாம்னு யோசிச்சு அசையும் போதே அம்மாவ்வோட கேப்பக் களியோட வாசம் இல்லாட்டி ராகிக் கஞ்சி வாசம் இழுத்து அணைக்கும்.

அம்மா இன்னையாவது இட்லி வைக்கலையான்னு லேசா குரல் விடுவேன். அடி சக்கை ன்னு குரலோ அல்லது பெரிய துரைமாரு புள்ளைன்னு நெனப்பு சத்தம் கொஞ்சம் பக்கத்துல வர மாதிரி இருந்துச்சுன்னா புடுறா சொக்கா ஓட்டம்னு இழுத்தெரிஞ்சு ஒரு ஓட்டம் புழனி பக்கம் ஓடிர வேண்டியது தான்.

கழனி மேட்டுல வேலை செய்ய இட்லி தோசை உதவாதுட போக்கத்தப் பயலேன்னு திட்டிக்கிட்டே அம்மா வந்து பல்ல விளக்குறாங்கும். அது கையில வேப்பன் குச்சி ஒன்னு ரெடியா நிக்கும். அத வாங்கி கையில வைச்சு கிட்டே, எப்பிடிரா நம்மஅப்பன் வேணும்னா மட்டும் அம்மா இட்லி வடை சுடுதுன்னு யோசிக்கையில அந்தக் குச்சி முதுக சொரியவாக் கொடுத்தேன் கண்ணுங்கும்.

அப்பன் என்னிக்குமே தனக்கு எதுவும் வேணும்ன்னு நேரச் சொல்லாது. களி திங்கும் போது அந்த அய்யண்ணன் கடை வழியாப் போனேன், இட்லி வடை வீச்சம் நம்ம தோட்டத்துக்கே வந்துருச்சுப் புள்ளங்கும். அம்மா ஒரு பார்வையோட உள்ளாரப் போய் சிரிச்சிக்கும். அடுத்த நாள் காலயில ராசக்காவை வைச்சு வடை சுட வைச்சிரும். அள்ளி வைச்சப் புருசனுக்கு ஆட்டவைச்சுப் படைக்குது பாரு உன்ர ஆத்தான்னு ராசக்கா சுட்டுக் கொடுக்கும்.

அப்பனும் ராசக்கா மாமனும் தோட்டத்துல இதச் சொல்லி சிரிச்சுக்கும். அப்பன் மாமன்கிட்ட எப்பவும் சொல்லுவாரு. எலேய் விளையாட்டுக்கு கூட பொஞ்சாதி மேல கையைத் தூக்கிராதரே, பொஞ்சாதியப் பகைச்சுகிட்டா நட்டம் உனக்குத்தாம்ல என்கும். மாமன் கேட்காத மாதிரி அங்கிட்டு எதோ சத்தம் வந்தம் மாதிரி நடிக்கும்.

ராசக்கா எந்த வேலையை செய்தாலும் ஒரு காரியத்தோட தெரிஞ்சுவைச்சு செய்யும். கவனமா செய்யும். ஆனால் மாமன் வந்தாலே அங்கிட்டு எல்லாமே மாறிரும். மாமன் அதக் கொண்டா இத செய்யுன்னு மிரட்டுவதும் உதைப்பதுமா இருக்கும். அக்கா ஒரு பிடிப்பில்லாமலே செய்யும். நான் மாமன் இல்லாத சமையமாத் தான் ராசக்கா வூட்டுப் பக்கம் தலைஎடுப்பேன், எங்க நம்மையும் சாத்திருமோன்னு. அக்கா புள்ள இல்லாம படர கஷ்டமும் சேர்த்துப் படும். எலேய்! உன்ர அப்பனாத்தவைப் பாருலே. ஒண்ணா இருக்க மாதிரியும் இல்லாம சேர்ந்தா மாதிரியும் இல்லாம பாசாங்காப் பழகிற மாதிரி நடிச்சு ஒட்டிகுதுங்க. என்ர நிலைமையைப் பாருலேங்கும்.

ராசக்கா சொல்றது புரியுதா இல்லையான்னு யோசிக்கத் தெரியாம, அக்கா தெரிஞ்சுவைச்சு தான் சொல்லும்ன்னு வந்துருவேன்.

Thursday, February 23, 2012

வலையூர் பட்டி

வலையூர் பட்டி

பொதுவா கிராமம்னா ஆத்துக்குப் பக்கத்தில இருக்கணும் இல்ல சாலை வசதியோட கொஞ்சமான தண்ணி அள்ளிகிட்டு வர மாதிரியோ இருக்கணும். இரண்டும் இல்லாம ரோடு வந்து சேரவே இரண்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் ஒரு குக்கிராமம் வலையூர் பட்டி.

வலையூர் பட்டியில உனக்கு பொண்ணு எடுக்கப் போறோம்ல என்று குப்பண்ணனோட அப்பத்தா சொல்லிட்டுப் போச்சு. அது சொன்னாலும் சொல்லிச்சு வலையூர் பட்டி எப்பிடி இருக்கும்ன்னு தான் குப்பண்ணனுக்கு நினைப்பே தவிர கட்டப் போறவளப் பத்தி நினைக்கத் தெரியல. அது எப்பிடிஇருந்தா என்ன, அந்த கிராமத்தை பார்த்திடனிம்டின்னு பஸ் ஏறிடிச்சு.

பஸ் நின்ன இடத்துல வழி கேட்கக் கூட சுத்து வட்டம் யாரும் இல்லை. எதோ நடுக்காட்டுல இறக்கி விட்டாப்பல இருக்கேன்னு யோசிக்கும் போது சுளிர்ந்னு முதுகுல ஒரு கல் விழுந்தது. குப்பண்ணன் வலியில ஒரு திட்டு திட்டி சுதாரிக்கும் போது அடுத்து ஒரு செங்கல் வந்து விழுந்தது.

அரண்டு போன குப்பண்ணன் யாருலேன்னு கத்திக்கிட்டே ஒரு ஓட்டம், இருந்த ஒத்தையடிப் பாதையில ஓடிச்சு ஓடிச்சு கண்ணுல ஒரு குடிசை வந்த பிறகு தான் நிப்பாட்டிச்சு. மூச்சிறைப்பு வேகமா நெஞ்சு அடிக்கையில நின்னு தலை தூக்கினா குடிசையிலேர்ந்து செவப்பாட்டி தலையை நீட்ட, குப்பண்ணன் பயந்து போய் ஒ ஊன்னு ஒரு கத்து தன்னையறியாம கத்திருச்சு. செவப்பாட்டி மறுபடியும் யாருன்னு கேட்டப் பொறவு தான் குப்பண்ணனுக்கு உசிரு வந்தது.

ஊரு பாக்க வந்தேன் பாட்டி ன்னு சொல்லி முடிக்கையில செவப்பாட்டி ஒரு கத்து கத்தி ஊரையே கூப்பிட்டிருச்சு. அரண்டு போன குப்பண்ணன் முழிக்கையில ஊர்ப் பஞ்சாயத்து முன்ன நிப்பாட்டிடாங்க. வேறு வழியில்லாம தான் வந்த காரணத்தை சொல்ல வேண்டியாதாப் போச்சு.

பஞ்சாயத்து சனம் அத்தனைக்கும் சிரிப்புத் தாளால. எலேய் நம்ம அல்லியம்மாவ நோட்டம் வுட வந்திருக்காகன்னு ஒரு சிறுக்கிப் பையன் கத்த, குப்பண்ணன் அங்கிட்டுர்ந்து மறுபடியும் ஓடிரலாமான்னு யோசிச்சிட்டிருக்கையில, தோள் மேல ஒரு கனமான கை விழுந்து, நம்ம மாப்பிள்ளை அப்பத்தாவோடையே வந்திருக்கலாமேன்னு சொல்லி இழுக்கையில, மாட்டிநோமடா சாமின்னு தலையத் தூக்கினா பக்கத்தில செல்வம் மாமன் நிக்கறாரு.

மாமா! நீங்க எப்பிடி இங்கன்னு இழுக்கையில, மாப்பிள்ளை வருதுன்னு சொல்லிருந்தா வண்டி கட்டி வந்திருப்போம்ல என்று சொல்ல, தனக்கு வந்த அழுகாச்சிக்கிடையில சிரிப்பு தான் வந்துது. இந்த ஒத்தையடிப் பாதையில என்ன வண்டி கட்டப் போற மாமான்னு திருப்பி கேட்கவும், பாரு மாப்பிள்ளை இந்த தடத்தில நீயே ரோடுபோடறயா இல்லையான்னு செல்வம் மாமன் சொல்லிகிட்டே நடந்தது.

இப்பிடி ஒரு சந்திப்பு வலையூர் பட்டியோட நடக்கும்ன்னு குப்பண்ணன் நினைச்சிப் பார்க்கலை!

Monday, February 20, 2012

ராசக்கா

ராசக்கா

ராசக்கா சந்தைக்கு புறப்பட்டுச்சுன்னா கூடவே ஓடியாந்திருவேன். அக்கா திட்ட திட்ட அது முன்ன நடுந்துகிட்டே இருப்பேன். எலேய் பொறுப்பத்தப் பயலே! உன்ற அப்பனாத்தாட்ட சொல்லி புட்டு வாரான்னு கத்தும். நான் கேட்காத மாதிரியே முன்ன நடப்பேன். அதுவே என்ர அப்பன் ஆத்தாக்கு குரல் கொடுக்கும் ஒரு நமிட்டு சிரிப்போட.

ராசக்கா தலையில ஒரு கூடை தக்காளியும் இடுப்பில ஒரு கூடை வெண்டை கத்திரி அள்ளிகிட்டு இரண்டு கிலோமீட்டர் டவுனு பஸ்சுக்கு நடக்கும். எலேய்! உன்ற மாமன் வந்தா ஒத்தாசையாய் இருந்திருக்கும், எடுப்பெடுத்தவனே உன்னை எப்பிடி டே நான் கவனிப்பது. வ்யாவாரத்தை யாருலே பார்ப்பதுன்னு திட்டும்.

டவுன் பஸ் கண்டக்டர் இடம் கூடை வைக்கிறதுக்கு திட்டு வாங்கும், சின்னப் புள்ளைக்கு என்ன டிக்கெட்டு வேண்டி கிடக்குன்னு சொல்லி இன்னும் வெறுப்பேத்தும். என்னால ஒரு உதவியும் இல்லைன்னாலும் அக்காக்கு ஒரு தெரிஞ்சப் பய உடனிருப்பதை எதோ ஒரு பாதுகாப்புன்னு நினைக்கும்.

ராசக்கா ஒரு ஆம்பிளை கணக்கா விறு விறுன்னு பஸ்சு மேல ஏறி கூடையை ஏத்திரும். இறக்கும் போது யாராவது ஆம்பிளை கிடைக்குமான்னு பார்க்கும். லேட் ஆச்சுன்னா பஸ்காரன் கிட்ட திட்டு வாங்கும். சந்தை வாசலில தரகு மேஸ்திரி ஆளுக இருக்கும். ஆனா உதவாது. அக்கா அவிங்க குறைஞ்ச விலைக்கு கேட்கிராக எங்கும். மேஸ்திரி ஆளு அவிங்க கூடையை முதல்ல இறக்கிய பிறகுதான் அக்காவோட கூடையை இறக்க விடும். ஓரிரு தடவை அக்காவே எடுத்து வந்துச்சு.

ஆனால், தரகு மேஸ்திரி ஆளு பேச்சும் பார்வையும் சரியில்லாததால, பக்கத்து கடை சொர்ணக்கா புருஷனை நாடும். சொர்ணக்கா மிரட்டி சொன்னதால சொர்ணக்கா புருஷன் உடந்தையா இருக்கும். தரக முறைச்சிக்கிட்டா எப்பிடி புள்ள வியாவாரம் நடக்கும்ங்கும். ஒவ்வொரு தடவையும் என்னாத்துக்குப் பொல்லாப்புன்னு தரகுக்கு வணக்கம் சொல்லிப்புட்டு போயிரும்.

ராசக்கா ஒரு தடவை நல்ல செழுப்பா கூடை நிறைய தக்காளி எடுத்து வந்துச்சு. தரகு பஸ் கிட்டயே நிப்பாட்டி இருபது ரூபாய்க்கு கூடையை கொடுத்து விட்டுப் போயிருன்னு மிரட்டுச்சு.அக்கா நல்லா சண்டை போட்டுச்சு. முடியாதுன்னு விறுவிறுன்னு வந்து சொர்ணக்கா கடை பக்கத்திலேயே கடை விரிச்சிகிச்சு.

சொர்ணக்கா தரகப் பகைச்சிக்காத புள்ளன்னு சொல்லிச்சு. இருபது ரூபாய்க்கு கொடுக்க இது என்ன சொத்த தக்காளியா ன்னு சொர்ணக்கவோட கூடையை ஒரு பார்வை பார்த்துச்சு. சொர்ணக்கா ஒன்னும் சொல்லாம தன வ்யாவாரத்தப் பார்க்க ஆரம்பிச்சிருச்சு.

ராசக்கா கடையை அடுக்கிற விதமே அழகாயிருக்கும். லாவகமா தக்காளி அடுக்கும். கூறு கூறா வெண்டை கத்திரி தனியா அடுக்கி வைக்கும். சில ஆளுங்க அக்காவை லுக் விட்டுகிட்டே காயெல்லாம் வாங்கிட்டுப் போயிருவானுக. அப்பிடியும் கடைசியில கொஞ்சம் தங்கிரும்.

மாலை மங்குற நேரத்தில காய் தக்காளி நிறைய தங்கிருச்சுன்னா அக்கா முகம் கறுப்பிலும் கொஞ்சம் மங்கிப் போயிரும். திருப்பி பஸ் கட்டணம் கொடுக்கணும். காலி கூடைக்கு காசு கிடையாது. ஆனா அக்காக்கு காயை மலிசா கொடுக்க மனசு வராது. தரகு கேலி பேசும். இல்லாட்டி இரண்டு ரூபாய்க்கு தா ங்கும்.

ஒரு தடவை பேசாம கொடுத்துட்டு வாயேன்க்கான்னேன். எலேய்! பொறுப்பத்தவனே! வீட்டுல ஒரு சொட்டு வைக்காம அள்ளிட்டு வந்திருக்கேன். நானும் மாமனும் சாப்பிடலாம் அல்லது உங்கப்பன் ஆத்தாக்கு கொடுக்கலாம்லே! மீதியைப் பக்கத்து ஊரு பெரிய சனம் வீட்டுக்கே போய் வித்துட்டு வரலாம்லே ன்னுச்சு.

திரும்பி வரும் போது ராசக்காவைப் பார்க்க பெருமையா இருந்துச்சு. மெதுவா கையப் பிடிச்சு நடந்தேன். அக்காவோட சுரசுரப்பான கை கூட சுகமா இருந்துச்சு. அக்கா அழகா ஒரு புன்முறுவலோட கூட வந்துது.

Sunday, February 19, 2012

மல்லி மேடு சந்தை

மல்லி மேடு சந்தை

குப்பண்ணன் மல்லி மேடு வரும் போதெல்லாம் முண்டாசு கொஞ்சம் பெருசா இறுக்கக் கட்டி வருவாரு! சுத்தியுள்ள சனம் தன்னை உத்துப் பாத்திறக்கூடாதுன்னு நெனப்பு. சந்தை சனம் இதை அறியாததல்ல. இருப்பினும் காமிச்சுக்காது.

குப்பண்ணன் அல்லி அம்மாவோட எல்லை மாரியம்மன் கோவில் வாசல்ல வந்து உட்கார்ந்து ஐந்து வருஷம் ஆயிட்டுது. மாடசாமி அண்ணன் இவிங்களப் பார்த்து விட்டு தன் தோட்டத்தில வந்து வைச்சுக்கிச்சு. என்ன ஏதுன்னு கேட்கலை. எங்கிருந்து வந்ததுன்னு கேட்டு மனம் நோகிறும்மொன்னு தயக்கம். அதுவா சொல்லும்னு விட்டிருச்சு.

ஒதுங்கி வாழ நினைக்கும் குப்பண்ணன் மாடசாமி அண்ணன் கிட்ட அப்பிடி ஒரு கேள்வி வாரமாப் பார்த்துகிச்சு. தோட்டத்துல கிடைக்கும் காய் பழம், அப்பப்ப மாடசாமி அண்ணன் கொடுக்கும் அரிசி பருப்பு, அல்லது தோட்டத்து விளைச்சலை சந்தையில விற்கும் போது கொஞ்சம் தனக்கு வேண்டியதை வாங்கி வரும்.

அல்லியம்மா சொல்லி அழும் போது மட்டும் குடிசைக்கு வெளிய வந்து இன்னும் இந்த கட்ட வேக மாட்டேங்குதுன்னு தன்னைத் தானே நொந்துக்கும். அதுவும் அல்லியம்மா கண்ணுலப் படாமப் பார்த்துக்கும். அப்பிடி ஒன்னும் தப்பு தண்டா பக்கம் எட்டிப் பார்த்ததில்லை. ஆனால் நம்ம நிலைமை இப்பிடி ஆயிட்டதேன்னு நினைப்பு வரும் போது எல்லை மாரியம்மனைச் சுத்தியோ, வாய்க்கா கரைச் சுத்தி நீரின் சலன வளைவைப் பார்த்து நடக்கும்.

இந்த தடவ மல்லி மேடு சந்தைக்கு தானும் வரேன்னு மாடசாமி அண்ணன் சொல்லிப்புட்டுது. குப்பண்ணனுக்கு ஒரே கவலையாயிட்டுது. அண்ணன் நோவுற மாதிரி ஒன்றும் பண்ணலையே! என்ன ஆயிட்டுன்னு ஒரே கவலை.

மாடசாமி அண்ணன் சந்தைக்குப் போற முன்ன கலெக்டர் ஆபீசு பக்கம் இட்டுக்கிட்டுப் போச்சு. குப்பண்ணன் தயங்கி நின்னுருச்சு. வலிய தள்ளிக்கிட்டுப் போய் ஒரு விண்ணப்பத்தைப் கொடுத்து நிரப்பச் சொல்லியது. வேண்டாம்னேன்னு சொல்லிப் பார்த்தும் விடலை. குப்பண்ணன் கொடுத்த விண்ணப்பத்தைப் பார்த்த கலெக்டர் நேரா இரண்டு பேரையும் வலையூர் பட்டி கர்ணம் வீட்டுக்கு இட்டுகிட்டுப் போயிட்டார். குப்பண்ணன் தயங்கித் தயங்கி பின்ன வந்தார்.

கலெக்டர் தன் வீட்டு முன்ன நிற்பதைப் பார்த்த கர்ணம் குப்பண்ணன் கிட்ட ஒன்னும் பேசாம பத்திரத்தை கொடுத்து விட்டாப்பல. குப்பண்ணன் நன்றியுடன் கலெக்டர் க்கு வணக்கம் சொன்னாலும், மாடசாமி அண்ணனுக்கு தன்னைப் பத்தி தெரிஞ்சிருச்சேன்னு தயக்கம். மேலும் அவர்கிட்ட உண்மையை சொல்லாததன் குற்ற உணர்ச்சி அமைதியாகவே மல்லி மேட்டு சந்தை திரும்பினர் இருவரும்.

தோட்டத்துக்கு திரும்பின குப்பண்ணனுக்கு இன்னிக்கு குடிசை வித்யாசமாயிருந்தது. சோகமாவே இருக்கும் அல்லியம்மா வந்துட்டியலான்னுது. என்ன நடக்கு இன்னிக்குன்னு ஒன்னும் புரியல. சோறு வைச்சுகிட்டே அல்லியம்மா சொல்லியது இனி நாம வலையூர் பட்டி போயிறலாம என்று சொல்லிச்சு. அல்லியாம்மாக்கு எப்பிடி விவரம் தெரிந்திருக்கும்னு சொல்லிட்டிருக்கும் போதே கர்ணம் வீட்டுல வலுக்கட்டாயமா இருந்துகிட்டு வேலையாள பணி செய்த தனது கணக்குப்பிள்ளை சுந்தரவதனம் வந்து போனதைச் சொல்லிச்சு.

நாளைப் பொழுது வேறு மாதிரி இருக்கும்ன்னு நினைச்சு குப்பண்ணன் கடைசியா ஒரு முறை வாய்க்காக் கரை ஓரம் நடந்தார்.

Thursday, February 16, 2012

கையில் வெறுமை

ராமு அசையாம கால் நீட்டிப் படுத்திருந்தான். விடிஞ்சா எப்போதும் போல நல்லா குளித்து விட்டு தனியா ஒரு நல்ல உடை உடுத்திச் செல்லனும். முப்பது வருஷ சர்வீஸ் முடிஞ்சு நாளை மதியம் அலுவலக நண்பர்கள் விடை கொடுத்து அனுப்பி விடுவார்கள். எப்போதும் retirement luncheon க்கு மனைவி குழந்தைகளோடு வரணும். குழந்தைகளுக்கு தகவல் சொல்லி விட்டு மனைவிக்கும் ஞாபகப் படுத்தி விட்டு வந்து கட்டிலில் படுத்தான்.

முப்பது வருட சர்வீஸ்ல் ராமு அதிகம் கலகலன்னு யாரிடமும் பழகியது கிடையாது. பேச்சும் உள்ளூர் மக்களைப் போல இல்லாமல் இந்திய மக்களது உச்சரிப்பையே உடல் உடன் ஒட்டி வந்ததாக நினைத்து தனது சிறு வயது பழக்கங்கள் இந்திய கலாசாரம் பண்பாட்டை விட்டுவிடக் கூடாது என்றே வாழ்ந்து விட்டான். இதனால் உள்ளூர் மக்களுடன் ஒட்டவில்லை. பதவியும் உயரவில்லை. ஆனால் அமைதியானவன் என்றே பெயர் எடுத்து கடைசி வரை இருந்து விட்டான்.

இருபது வருஷம் முன் கூட வேலை செய்த பெண்ணுடன் கொஞ்சம் அதிகம் பேசியதை தவறான கண்ணோட்டத்தில் பழகியதாக மனைவிக்கு யாரோ தகவல் சொல்லி விட்டனர். இதனால் வீட்டிலும் ஒன்றும் அலுவலக விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.

பகிர்ந்தாலும் அந்த பெண் ஒட்டிய விஷயங்களைத் துழாவும் மனைவி. பேச்சு அதிகமானாலோ அல்லது குழந்தைகள் வாக்கு வாதம் செய்தாலோ, வேணும்னா அந்த இன்னொரு குடும்பத்தோடப் போய் வாழ வேண்டியது தானே என்பார்கள். ராமு வீட்டிலும் அமைதியாகி விட்டான். உள்ளூர் மக்களைப் போல விருப்பமில்லாத வீட்டிலிருந்து விலகி வாழ முடியாமல் தனது உள்ளுணர்வை அடக்கி வாழ முற்பட்டது இன்று வரைத் தொடர்கிறது.

ராமு இந்த நாள் இவ்வளவு சீக்கிரம் வரும் நினைக்க வில்லை. நாளையுடன் வேறுஒரு பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். படிப்பிலோ அல்லது இறை வழிபாட்டிலோ அல்லது என்ன தான் செய்யனும்னு இனி தான் யோசிக்க வேண்டும்.

ராமுக்கு retirement பெனிபிட் நன்றாகவே இருக்கு. சாப்பாட்டுக்கு தொல்லையில்லை. இருந்தும் ஒரு நிம்மதியற்ற நிலை. இருபது வருஷமாக கணவன் மனைவிக்குள் உன் பணம் என் பணம், வீட்டு கடனைப்பில் உன் பாதி என் பாதி, உன் கார் செலவு என் கார் செலவு என்றே ஓடி விட்டது. வங்கி கணக்கும் வேற, வரவு செலவுகளும் அவர் அவர்களுதே. ஆனால் ஒரே வீட்டில் இத்தனை காலம் தள்ளினார்கள் என்று இருவரும் யோசிக்கும் நிலையிலும் இல்லை.

குழந்தைகள் இந்தப் பிரச்சனை தன்னைத் தொடர வேண்டாம் என்று கல்யாணம் ஆனவுடன் தனியாகப் போய் விட்டார்கள். அவ்வப்போது இருபாலரும் appointment வாங்கி சந்தித்து வருகின்றனர். ஆதலால் ராமுவும் அவர்களைத் தொந்தரவு செய்வதில் விரும்ப மில்லாமலே இருந்தான்.

இந்த தடவை retirement பார்ட்டி க்கு அழைப்பு விடுத்தியிருந்தான். என்ன செய்வார்கள் என்று யாரும் சொல்ல வில்லை. மனைவியும் ஒன்றும் சொல்ல வில்லை.

காலை அமைதியாக விடிந்தது. யாரிடமும் ஒன்றும் பேசாமல் நல்ல உடை உடுத்தி வேலைக்கு கிளம்பினான். ஆபீஸ் டேபிள் காலி செய்து காரில் ஏற்றிக் கொண்டு வர வேண்டும் என்ற நினைப்புடன் இரண்டு காலி அட்டைப் பெட்டியை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

மனது எதிலும் எடுபடவில்லை. வெறும் முகஸ்துதிக்காக எல்லோரிடமும் ஒரு வணக்கம் சொல்லி விட்டு வெளியே ஒரு நடை சுற்றி விட்டு வந்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது. எப்போதும் கண் முன் வரும் அந்த மரத்தடியின் நிழலில் சிறிது நின்றான். என்னமோ மனது அங்கு உட்கார வைத்தது இன்று. திரும்பி பேசாமல் வீட்டிற்குப் போய்விடலாமா என்று மனம் சிந்தித்தது.

மனைவி குழந்தைகள் வரா விட்டால் என்ன செய்ய? எப்பிடி அலுவலக நண்பர்களை சந்திப்பது என்றே யோசனை வாட்டியது. வருவது வரட்டும். இத்தனை காலம் இருந்த வாழ்க்கை தானே என்று சமாதானப் படுத்திக் கொண்டான்.

அமைதியாக எந்த வித முக மாற்றத்தையும் வெளிக்காமிக்காமல் ராமு அமைதியாக பார்ட்டி அறைக்குள் நுழைந்தான். ஆரவாரத்துடன் நண்பர்கள் வரவேற்று மாலை போட்டு வாழ்த்திப் பேசினார்கள்.

கடைசியாக ஒரு சின்னப் பரிசு என்று ஒரு மூலையிலிருந்த அறையின் கதவை முழுவதும் திறக்கச் சொன்னனர். முழுவதும் திறந்த போது மனைவியும் மக்களும் வந்து அணைத்துக் கொண்டனர்.

வழியனுப்பும் முன் நண்பர்கள், இனி இவர்கள் மட்டுமே உன்னை ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டும் என்று வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.