Sunday, May 31, 2020

அசெம்ப்ளி ப்ரோகிராமில் என் நிழல்

எவருக்கும் தன்னோட உழைப்பை அது மற்றவரிடமிருந்து திருடி எழுதப்பட்டதுன்னு சொன்னா செம கோவம் வரும். நியாயம் தான்!

1991-92. கம்ப்யூட்டர் மேற்படிப்பு படித்த நேரம். கிளாஸ்ல கொடுக்கப்பட்ட அசைன்மண்ட் அசெம்ப்ளி லாங்க்வேஜ்ல கோடு எழுதனும். அதுவும் நாம தொட்டு டைப் அடிக்கிற கீ ஸ்ட்ரோக்ஸ் ரிகக்னைஸ் பண்ணி அதை மானிட்டர்ல டிஸ்ப்லே பண்ணனும். இதை அசெம்ப்ளி லாங்க்வேஜ்ல பண்ணனும். கீ போர்ட்ல இருக்கிற அத்தனை கீ களையும் ரிகக்னைஸ் பண்ணனும்ன்னு அஸைண்ட்மன்ட்.

லாங்க்வேஜ் யாருக்கும் கத்துத் தரப்படலை. ஒரு மாதம் கால அவகாசம்.

கிளாஸ்மேட்ஸ் 25 பேருக்கும் இது பெரிய சேலன்ஞ். கூடப்படித்தவர்களெல்லாம் மிகப்பெரிய அறிவாளிகள். அவர்கள் வாங்கிய மார்க் எல்லாம் என்னோட கம்பேர் பண்ணினால் கிளாஸில் என்னோட ரேங்க் 22-23 வரும்.

காலேஜ் லைப்ரரி போய் முதல்முறையா அசெம்பளி லாங்க்வேஜ் எப்படி இருக்கும்ன்னு படிக்க ஆரம்பிச்சேன். அடுத்து கம்பைளர் எப்படி வேலை செய்யும்ன்னு படிக்க ஆரம்பிச்சேன். சனி ஞாயிறு எல்லாம் கம்ப்யூட்டர் லேப்ல உட்கார்ந்து இதைச் செய்தேன்.

மொத்த வகுப்புல இரண்டே பேர் மட்டும் அத்தனை கீ ஸ்ட்ரோக்கும் ரிகக்னைஸ் பண்ணி டிஸ்ப்ளே பண்ணி காமிச்சோம்

கடைசி நாள் புரபசர் என் கூட உட்கார்ந்து என்னோட புரோகிராமைத் எடுத்து ஒவ்வொரு வரிக்கோடையும் விளக்கமாகப் பார்த்தார். சபாஷ் சொல்லிட்டு A+ grade கொடுத்தார்.

கூடப்படிச்சவங்க யாரும் இதை நம்பவேயில்லை. கூடப்படிச்ச நேவல் ஆபீசர் மற்றும் இன்னொரு நண்பி எல்லாம் இது எப்படி சாத்தியம். இவன் போன வருட ஸ்டண்டோட கோடு திருடி கொடுத்திருக்கான்னாங்க. கிளாஸ்ல இவன் மகா மட்டமாக படிக்கிறவன். நம்மில் யாராலையும் செய்ய முடியலை. இவன் திருடியிருக்கான்னு சொன்னாங்க. நான் உட்கார்ந்து வேலை செய்த கம்ப்யூட்டர் லேப்ல போய் மத்தவங்க கோட் எல்லாம் தேடிப்பார்த்திருக்காங்க! எதுவுமே இல்லை.

என் கோடை நான் ப்ளாப்பி டிஸ்க்ல வச்சிருப்பேன். அதுலேர்ந்தே தான் நான் ரன் செய்வதும்.

எனக்கோ மிகப்பெரிய அவமானம். சொல்வதோ கூடப்படிக்கும் நேவல் ஆபீசர். மற்ற இரு மிலிட்டரி மேஜர்கள்கிட்டயும் என் கோடைக் காண்பிச்சேன். சரி விடுன்னாங்க! அதில் ஒரு மேஜர் கோல்ட் மெடலிஸ்ட். புரபசரே அவர் முன்ன கிளாஸ் எடுக்கும் போது உளறிடுவோமான்னு நடுங்குற ஆள்.

கஷ்டப்பட்டு உழைச்சு சுயமாக எழுதியதை திருடிட்டேன்னு சொல்லிட்டாங்களேன்னு செம வருத்தம்.

திரும்ப புரபசர்ட்ட போனேன். சார் நான் ஒரு சீனியர் கோடைத் திருடிட்டேன்கிறாங்க! நீங்க ஒருத்தர் தான் இந்த கோடு என்னுதுன்னு சொல்ல முடியும். சந்தேகமிருந்தா எனக்கு ஏ ப்ளஸ் தராதீங்கன்னு போய்ச் சொன்னேன்.

புரபசர் அந்த நேவல் ஆபீசரையும் இன்னும் இருவரையும் தன்னோட ஆபீஸ்க்கு கூப்பிட்டு நீண்ட விளக்கம் கொடுத்தார் நான் திருடலைன்னு.

அதற்கப்புறம் தான் அந்த ஆபீசரும் மற்றவர்களும் வந்து என்னோட கோடைப் பார்த்து சரி சரி தப்பிச்சுட்டேன்னாங்க. படிக்கிற காலத்திலும் அவர்கள் தான் நெருங்கிய நண்பர்கள். இப்போதும்.

காலேஜ் முடியற சமயத்துல அவர்களில் ஒருவர் என்னைப்பற்றி எழுதிய கவிதை இது:

ப்ரோகிராமிங் கா வேர்ல்ட் மே தோ தும் ஜீத் சுக்கே ஹோ!
லேகின் இஸ்கோ லேப் மே தியா சபீ நே தங்!

Saturday, May 9, 2020

அலையாத அலைதனில் ஓர் அலகு


அலைகளை அளக்கும் அலகு ஓர் அழகு
    அன்னநடை அலையில் மிதக்கும் அதன் உலகு
அவைதனை சுவைக்க தவமிருக்கும் இலவு!

குளிர்தனைப் போக்க தென்னோக்கி பறந்திடும் கொக்கு
   குளிரையும் சுமக்காமல் நம்மிடம் இறக்கி விட்ட மக்கு
நம்கண்ணிற்கு கொடுப்பதோ எழில் விருந்து!

பருவ காலங்கள் மாறும் நேரம்
  பறவைகள் அதன் போக்கை மாற்றும் நேரம்
வடக்கு நோக்கி வரும் நேரம்
  நம்முள் இருக்கும் இருளைப் போக்கும் நேரம்!

வசந்த காலம் வரவேற்கும் நிலையில் நாம்
   இன்னும் குளிர் விலகாத பருவம்
பறவைகளின் வரவேற்பை எதிர்நோக்கும் காலம்
  சிலநாள் காத்திருக்க வேணும் நாம்!

அன்னநடை அலையில் கிறங்கும் மனது
   அலையில் அலையாத மனநிலையில் அதன் இலக்கு
அவை தரும் காட்சிப்பருகலில் கிறங்கும் மனது!

அலையாத அலைதனில் ஓர் அலகு!

இசையின் மீதான ஆசையில்


இசை மீதான ஆசையில்
   பிறரை வசை பாடும் ஓசை
தாளம் தப்பிப் போகிறது!

இசை எனும் ஓசை
  அது ஓர் அமுதசுரபி
கொடுக்கும் போதே சுரக்கும்!

நடிப்பில் இசை தேடி ஓடிய பதத்தில்
  இன்று ராகம் மாற்றிப் பாடுவது
வளரும் இசைக்கு வழுக்கும் ஸ்ருதியோ!

கமல் எனும் கலைஞன்
   அவர் தன் கலைவாழ் அவரது ஓசையில்
அவரவர் வாழ்க்கை அவரது இசை!

இசை முன் நீ மண்டியடி
  உன் வளத்தைக் ஓசையின்றி கொடுக்கும்
தாளம் தப்ப இடம் பெயராமல்!

மீட்டும் நாதத்தில் இனிமையின் சுவை
   அதை உன் இசையில் வசையின்றி கொடு
கேட்போர்க்கு கிடைக்கும் நறுசுவை!

நாள் முழுவதும் தன் இசையில் என் அம்மிணி
  அவள் முன் இவ்வெளி உலகு சர்ச்சை
நிலைப்பதில்லை மீட்டும் அவள் வீணையில்!

பொழுதெல்லாம் அவள் போக்கு தன் இசையில்
   அவள் கவலை தன் இசையின் பயிற்சி
அதன் வளர்ச்சி தன்னிடம் பயில்பவர்களிடம்!

இசையின் மீதான ஓர் ஆசையில்!

Friday, May 8, 2020

பிறர் போற்றும் பெரியோனை


பிறர் போற்றும் பெரியோனை
  தன் குடை கீழ் இறக்கினாலும்
பாடிச் சென்றவை பிச்சைப் பாத்திரங்களன்று!

கையில் ஏந்திய திருவோட்டில்
  விழுந்ததோ ஓரிரு மணிகள்
சொல்லில் விரிந்ததோ மலர்காவியங்கள்!

ஏந்திப் பிடித்தவனை இழித்தாலும்
  ஏந்திய பாத்திரம் அக்ஷயபாத்திரம்
ஒவ்வொரு பருக்கையும் வண்ண ஜீவிதங்கள்!

திருவோட்டில் விழுந்த மணிகள்
   ஒவ்வொன்றும் ராக கீதங்கள்
பசிப்பிணியாற இறைக்கும் உன்னதங்கள்!

அவரவர் வாழ்வில் ஏந்தும் திருவோடுகள்
  காலம் செல்லும் பாதையில் மறையும்
தியாகய்யனின் கீதங்கள் மறையா ஜீவன்கள்!

கையில் ஏந்துவோம் ஒரு திருவோடு
  அதில் விழும் மணிகளை எண்ணுவோம் பலரோடு
அவை ஒன்று கூட இணையாகாது ஆசானோடு!

தியாகய்யரின் திருவோட்டில் எனது பிச்சை இது!

Sunday, May 3, 2020

வில்வாத்ரி பவன் மிக்சர்

ரிடையர்மெண்ட் அக்கௌண்ட்லயும் தனிப்பட்ட ஸ்டாக் அக்கௌண்ட்லயும் ஷேர் வாங்கி வச்சிருப்பதால வருடா வருடம் வருடாந்திர ஷேர்ஹோல்டர்ஸ் மீட்டிங்குக்கு நோட்டீஸ் வரும்.

இது தான் உன்னோட புது போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ். மனசுலாக்கிகிட்டு மீட்டிங்குக்கு வா, ஓட்டுப்போடு, இல்லாட்டி இந்த ப்ராக்ஸி ஓட்டு போடுன்னு அடிக்கடி ஒன்னு வருது!

ஏகப்பட்டது வருவதால பாதி ஓபன்கூட பண்ணமாட்டேன். மீட்டிங் நடக்குற இடம் நாம போகற தூரமில்லை. வாங்குற கொஞ்சூண்டுக்கு பக்கோடாவா கிடைக்கும். நேரா வீசிறுவேன்.

இன்னிக்கு ஒன்னை ஓபன் பண்ணி பார்க்கலாம்ன்னு பார்த்தாஅமேசான்லேர்ந்து வந்திருக்கு. இந்திரா நூயி அம்மாக்கு ஓட்டு போடுன்னு சொல்றாங்க!

பார்த்தவுடன் அப்பா ஞாபகம் வந்தது.

அப்பா வேலை செய்த கம்பெனியோட ஷேர்ஹோல்டர்ஸ் மீட்டிங் நடக்குற அன்னிக்கு அப்பாவைப் பார்க்கனும்! பிரமாதமாக இருப்பார். நல்ல இஸ்திரி போட்ட பளபளன்னு மல்வேஷ்டி, நல்ல மடிப்பு தெரியற அளவுக்கு விரைப்பா அயர்ன் பண்ணின ஒரு புது சட்டை, நெத்தி நிறைய தண்ணியில குழைச்சடிச்ச விபூதி, நடுவுல சந்தனப் பொட்டோட போவார்.

மீட்டிங் மாலை 4 மணிக்கு நடக்கும். ஐயா காலையில ப்ரெஷ்ஷா குளிச்சு முடிச்சு போவற மாதி பிரமாதமா போவார்.

அப்பா பிரமாதமாக இருக்கேம்பேன்.

டேய்! இன்னிக்கு ஷேர்ஹோல்டர்ஸ் மீட்டிங்டா! நான் வாங்கி வச்சிருக்கிறதே ஒரே ஒரு ஷேர், பத்து ரூவாய். அதுக்கு நான் போடற ஓட்டுக்காடா போறேன். சேர்மன் செக்ரட்டரி போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் எல்லாம் டை கட்டிகிட்டு கோட்சூட்ல பிரமாதமாக வருவாங்க! அதை சைடுல நின்னு பார்க்கனும்டா (அவங்க முன்ன சேர்ல உட்காரமாட்டார், தரையில உட்கார தயங்க மாட்டார்).

நானாவது ஒரு ஷேர் வாங்கிட்டு அங்க வர்ற சேலம் வில்வாத்ரி பவன்லேர்ந்து வர்ற நெய் மணக்குற மிக்சர் ஜாங்கிரி வாங்கி சாப்பிட்டுட்டு வரப்போறேன்.

ஆனால் என்னோட இரண்டு மூனு ஸ்டாக் அதிகம் வாங்கிட்டு, மீட்டிங்ல சேர்மன் டைரெக்டர்ஸை எல்லாம் மத்த பயலுகளும் கேள்வி கேட்பானுங்க பாரு, இவங்க தான் கம்பெனியோட பாதி சொத்த வாங்கி வச்சுகிட்டு கேட்கிற மாதிரி கேப்பாங்க பாரு, அதுக்கும் சளைக்காம டைரெக்டர்ஸ் பதில் சொல்வாங்கடா! இதெல்லாம் ரசிக்கனும்டாம்பார்!

அப்பா! எனக்கும் கொஞ்சம் வில்வாத்ரி பவன் மிக்சர் வேணும்ப்பாம்பேன். இன்னொரு பாக்கெட் கிடைச்சா ஒரு ஃபுல் பாக்கெட், இல்லாட்டி தன்னோடதுல இரண்டு எடுத்து வாயில போட்டுகிட்டு மொத்தத்தையும் எங்ககிட்ட கொடுத்துருவார்.

இன்னிக்கு அமேசான் ஸ்டாக் ப்ராக்ஸி நோட்டிஸைப் பார்த்தவுடனே அப்பாவோட ஷேர்ஹோல்டர் மீட்டிங் ஞாபகம் வந்துருச்சு!

கொரோனா காலத்துல இப்ப எல்லாம் வர்ட்யுவல் மீட்டிங் தான், வந்து கலந்துக்கன்னுட்டாங்க! இவிங்க உட்கார்ந்து பக்கோடா திங்கிறதை நாம வேடிக்கைப் பார்க்கனுமா!

நேத்து வாரன் பஃபெட்டும் 50பில்லியன் போயிடுச்சுப்பான்ட்டார்.

இவிங்க போடற வர்ட்யுவல் மீட்டிங்குக்கு இப்ப வில்வாத்ரி பவன் மிக்சரை நாம தான் சப்ளை பண்ணனும் போலிருக்கே!

ஆண்டவா!

Saturday, May 2, 2020

நான் அறியா கிரகணம்

கிரகணம்

அம்மையின் வீட்டெதிரில் அழகிய பூங்காவொன்று
மரம் செடி வளர்ந்து தழைத்து பசுமையின் பசலை பூமி
காக்கை குருவி பருந்து என பலவித பறவைகளின் உறைவிடம்
பசுமையின் பணபலம் காற்றின் சுவாசத்தில் தரும்!

பறவை ஒலி கேட்காத நாளில்லை
விளையாட்டுச் சிறுவர்கள் புரளும் பூமி
கால்நடை பயிலும் மக்கள் திரள் மூட்டமது
இயற்கைச் சுவாசம் இனிக்கும் சூழலது!

கிரகணத்தில் நான் அறியா புதுமை கண்டேன் இன்று!

மேகமூட்டத்தில் முற்பகல் இருளைக் கண்டேன்
என்றும் உணராக் குளிரைக் கண்டேன்
பறவை ஒலி கண்டில்லை
சிறுவர் எவருமில்லை
மக்கள் நடமாட்டமில்லை
தனித்திருந்த பூங்காவாயிற்று!
பறவை ஒலி சிறுவர் சத்தம் எதுவுமில்லா பாலைவனமானது பூங்கா!

பதினொன்று இருபதுக்கு அனைத்தும் புத்துயிர் பெற்றது
பறவையை உறையில் அடைத்தவர் எவரோ
சூரிய ஒளி பட்டு அனைத்தும் கிசுகிசுக்கின்றன!
அடைத்து வைத்த சிறுவர் கூட்டம்
மடை திறந்த வெள்ளமாய் வந்தது!
புத்துயிர் பெற்றது பூங்கா!

இது நான் அறியா ஓர் கிரகணம்!
பெங்களூர் நகர கிரகத்தில் ஒரு கணம்!

கிரகங்களின் கிரகத்தில்

ஆறு கிரகச்சேர்க்கை ஆற்று வெள்ளமாயினும்
கரைசேரும் ஓடத்திற்கு துடுப்பு தேவைப்படுமோ
ஆறு கிரகங்களின் சேர்க்கை
ஆறு விரல் மோதிரங்களன்று!

எட்டி வைக்கும் ஏணிப்படிகள்
இறங்க வேண்டிய படிகளோ!
விண்மீன் ஒளி தரும் விளக்குகள்
இருண்ட குகைக்குள் வெளிச்சம் வீசும் கதிர்களோ!

ஒரே நாளில் துவள வைக்கும் நிகழ்வுகள்
நம்மை தளர வைக்கும் கிரகங்களோ!
இழப்பை ஈடு செய்ய இயலாவிடினும்
பிடித்தம் போக கிடைக்கும் கசிறும் கதை சொல்லும்!

கிரகங்களின் பாதை எவ்வாறு இருப்பினும்
நம் பாதைத் தடங்கள் நமது கையில்!
எட்டி வைக்கும் அடித்தடங்கள்
சகதி மீதாயினும் வலுவாக இருக்கட்டும்!

கிரகங்களின் கிரகத்தில் ஓர் நாள் இது!

உழைத்த பணம் நெகிழ வைத்த போது

ஹரிகேசநல்லூரும் மற்றும் பேப்பர் ஜோசியமும் அடிக்கடி சமீபத்துல துலா ராசிக்கு சொல்வதைப் பார்த்து அப்படி என்ன நடந்துரப்போவுதுன்னு ஒரு அவநம்பிக்கை உண்டு. உங்களுக்கு வர வேண்டிய பணம் எப்படியாவது தேடி வரும்ன்னு சொல்றாங்க! அதை நம்பமுடியாத நிகழ்வுகள் தான் அதிகம்.

நான் டிசிஎஸ் வேலையை விட்டுவிட்டு அயல்நாடு போய் 23 வருடமாகி விட்டது. போன பிறகு இரண்டு தடவை என்னோட பிஎஃப் செட்டில்மெண்ட்டுக்கு ட்ரை பண்ணினேன் ஒன்னும் நடக்கலை. 18-20 வருடமாக அது பற்றி சில சமயம் நினைவு இருக்கும் ஆனால் வராதுன்னு மனதை சமாதானப்படுத்திக்குவேன். மறந்து போன நாட்களே அதிகம்.

இங்க அம்மாவுடன் கூட இருக்க மூன்று வார லீவுல வந்தேன். வந்தவுடன் அம்மா ‘டேய் உன்னோட லட்டர் ஒன்னு பிரிக்காம இரண்டு மாசமாக இருக்கு, பார்றா’ன்னாங்கு. வந்து 3-4 நாள் அதைப் பிரிக்கலை.

ஓரளவு jet lag குறைய ஆரம்பிக்க எடுத்துப் பிரிச்சேன். சரியாக படிக்கலை மூடி வச்சுட்டேன். அடுத்த இரண்டு நாள் கழிச்சு எடுத்துப் பார்த்தா உன்னோட பிஎஃப் செட்டில்மெண்ட் அல்லது ட்ரான்ஸ்பருக்கு கீழ்கண்டவற்றை செய்யுன்னு டிசிஎஸ் அனுப்பியிருக்கு.

27 வருடம் முன்பு எந்த வீட்டுலேர்ந்து டிசிஎஸ் இன்டர்வியூக்குப் போனேனோ அதே வீட்டுத் திண்ணையில உட்கார்ந்து அந்த செட்டில்மெண்ட் பணம் கையில வாங்குறேன். நம்பக்கூட முடியலை.

டிசிஎஸ் எச்ஆர் நிர்வாகிகள் எந்த அளவு இதில் நேர்மையாக, நல்ல நிர்வாகத் திறமையோட உதவியது மட்டுமல்ல பத்தே நாட்களில் செட்டில் செய்து விட்டனர். டிசிஎஸ் மக்களை நினைச்சா பெருமையாக இருக்கு.

கஷ்டப்பட்டு உழைச்ச பணம்டா, எங்கயும் போகாதுங்குறான் என் கசின்.

நம்நல்வாழ்வில் நாம் உழைத்த கம்பெனிகள் கூட நம்மோடு பல வருடம் கழித்தும் தோள் கொடுத்து நிற்பது மிகப்பெருமையாக இருக்கு.

வாழ்வினிது! நல்லோருடன் வாழ்வது இனிது!

வெங்காயத்தான் வியாவாரம்

அரிசிம்பருப்புல உலகம் உருண்டுகிட்டிருக்கிற இடத்துல வெங்காயத்துக்கு என்ன வேலை இங்கே! இருந்தாலும் சொல்ல முடியாம இருக்க முடியலை!

வெங்காயம் கதையை பப்ளிஷ் பண்ணிவிட்டு சாயந்தரம் சைக்கிள்காரர் கன்னடத்துல என்ன விலை சொன்னார்ன்னு வேலைக்காரம்மாவை தமிழும் கன்னடமும் தெரிஞ்ச உறவினர்ட்ட சொல்லச் சொல்லி உறவினரிடம் கேட்டேன்.

சைக்கிள்காரர் கன்னடத்துல சொன்னது 100 ரூபாய்க்கு ஒன்னேகால் கிலோன்னாராம். நமக்கு எப்படி 180ன்னு மனசுல போச்சோ! கன்னட வேலைக்காரம்மாவும் அப்ப ஜாஸ்தி சொல்றார்ன்னாங்க! அதே சைக்கிள்காரர் போனவாரம் அரை கிலோ 60 ரூபாய்க்கு கொடுத்தார். உண்மையிலேயே அவர் விலையை இந்த வாரம் குறைச்சிருக்கார்.

120 ரூபாய்க்கு ஒரு கிலோ வித்தவர்,  இந்த வாரம் 100 ரூபாய்க்கே ஒன்னேகால் கிலோ இந்த வாரம் தர்றேன்ன்னு சொல்லறதை புரியாம இருக்குற அளவுக்கு நம்ம வெங்காயத்தான் கன்னட அறிவு. என்ன செய்ய!

டெம்போல வித்தவர் சொன்ன விலையும் அதே 80 ரூபாய். சைக்கிள்காரர் சொன்ன விலையும் அதே 80 ரூபாய், ஆனால் சில்லறை பிரச்சனையை சமாளிக்க அவர் ரவுண்ட் பண்ணி 100 ரூபாய்க்கு ஒன்னேகால் கிலோ சொன்னதுல நாம அஷ்டே ஆகிட்டோமே!

போய்யா வெங்காயத்தான் வியாவாரம்(வியாபாரம்)!

சுவையில்லாத பயணம்

சுயநலத்தில் சரியும் சமயம்
  நிமிர்த்தி வைக்கும் உறவுகள்
கடமை விலகும் நேரம்
  கைதூக்கித் தரும் உறவின் ஆறுதல்

தொலை தூர பயணத்தில்
  தொலைக்கப் போகும் உறவு
கொடிவிடாமல் தொடரும் வேர் போல்
   ஒலிக்கும் தாயின் பரிவுரைகள்

இம்மண்ணின் வாசம் எம்மண்ணிலும் இல்லை
  கொடி போல் படறும் பாசவலை
கல் மனதோடு ஒரு பயணம்
    கனத்த பூசணியையும் தாங்கும் தாய் கொடி

விட்டுச் செல்ல மனதில்லை
  கல் நெஞ்சோடு ஓர் பயணம்
கடமையை விட்டு ஓர் கடமை தேடி
  மிதிபடும் சருகுகளில் ஒன்றாய்!

சுவையில்லாத ஓர் பயணம்!

பசியினை வெல்வோம்

(அ)கோரப்பசி

வாழ்க்கையில இதுநாள் வரை பட்டினி இருந்தது கிடையாது!

ஊர் போனப்ப அண்ணன் மகள் சொன்ன ஒரு அறிவுரை: சித்தப்பா! வாழ்க்கையில வெல்ல முடியாத வகைகளை வெல்ல ஒரு பட்டினி பத்தியம் இருந்து செய்து பாரு! பலன் கிடைக்கும்ன்னாப்புல.

எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியலை. சமீப காலங்களில் ரொம்பவே பசிக்குது. இயல்பை விட அதிகமாகவே உண்கிறேன். எப்படி செய்வோம்ன்னு தெரியலை.

முதல்ல எட்டு மணி நேரம், 12 மணி நேரம், 16 மணி நேரம், 20பது - 24ன்னு ட்ரை பண்ணுன்னு சொன்னாள் மகள்.

இன்னிக்கு ஆபீஸ் இல்லை. கடினமான வேலை எதுவும் இல்லாத நாள். இன்னிக்கு ட்ரை பண்ண முயற்சித்தேன்.

நேற்று இரவு சாப்பிட்டதோட சரி. காலையிலிருந்து மாலை 5 மணி வரை 4 தடவை அரை கப் காபி மட்டுமே. 3.30க்கு மேல உடல்ல ஒரு பலகீனம் தெரிய ஆரம்பிக்க, கடைசி கப் காபியில கால் ஸ்பூன் சர்க்கரை சேர்த்துகிட்டேன்.

நடுவில பையனோட அட்வைஸ்: பட்டினி இருக்குற நேரத்துல காபி குடிச்சன்னா உன்னோட லிவர் ப்ராஸஸ் பண்ணும் போது அது ஆல்கஹால் குடிச்ச மாதிரி. தெரிஞ்சுக்கோ!

5 மணிக்கு மேல முடியலை. வூட்டம்மிணிட்ட கெஞ்சி இட்லி சுடச் சொல்லி ஒரு வெட்டு வெட்டினேன்.

பட்டினி இருந்து முடித்த பிறகு கோரப்பசியில ஒரு வெட்டு வெட்டுவோம் பாருங்க! அப்படி ஒரு பசி.

பட்டினியிருந்த பலன் தின்ன இட்லியில கவுந்திருக்கும். இருக்கட்டும். முதல் தடவை இது. இனி கொஞ்சம் உடலை தயார் படுத்திகிட்டு ட்ரை பண்ணனும்.

பசியினை வெல்வோம்!

தொலைதூர வாழ்த்து

தொலைதூரம்
தொலைதூரம் என்ற பெயரில்
  தொலைத்தவை ஒன்றா இரண்டா
விண்ணில் பறப்பதும் தூரம்
  நெருங்க முடியாததும் தூரம்!

கூட இருக்க வேண்டியவையே உறவுகள்
  அது மணவிழா மேடையிலும் சரி
எழுந்து நடக்க உதவுவதிலும் சரி
  உறவுகளின் பாலமே உதவும் கரங்கள்!

அன்பில் ஒருங்கிணைந்தோர் உறவுகள்
  மணமேடைகளில் தொடரும் கொடிகள்
தொலைதூரத்திலிருந்து வாழ்த்தும் உறவுகள்
  அனைத்தும் அமையப்பெற்றால் சுகமே!

அருகிலிருந்து ஓர் வாழ்த்து
   அலைகடல் தாண்டி ஓர் வாழ்த்து
கூடி நிற்போர் கூடி ஒரு வாழ்த்து
  கோடி செல்வம் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்து!

இங்கே ஓர் தொலைதூர வாழ்த்து!

பல்லாண்டு வாழ்க!

மனது சளைக்காத உடல் சரிவு

பேச்சில் உள்ள தெளிவு
   தேகத்தின் தெளிவென்று நினையாது
கன்னடமும் தமிழும் தெளிவாய் தெளித்தாலும்
  உடலின் ரணம் இருமி கரைவதில்லை!

தினமொரு இளநீர் காசில் கரைக்காதே
  மரமேறும் மனிதனை விழை
சொந்த மரத்தின் சுவைக்கு இணையாகாது!

உடல் எழும்ப முடியாவிட்டாலும்
   அடுக்களையில் உலை கொதிப்பது தெரியும்
வெந்நீர் சுட பத்து நிமிடம் போதும்
   Geyser அணையாதது மறவாது!

செவ்வாயன்று தண்ணீர் வரும் நேரம்
  மோட்டர் போட விழைப்பதை மறவாது
மேலே தொட்டி வழியும் முன்
  இங்கே மோட்டர் அணைக்க மறவாது!

மனதின் வலிமை உடலில் இல்லை
  உள்ளத்தின் வலிமை சொல்லில் வருது
அன்பின் வலிமை இடும் கட்டளையில்
    உள்ளத்தின் ஈரம் ஊட்டும் உணவில் தருது!

மனதின் தெளிவும் உடலின் ரணமும்
  தன் போட்டியில் கரையுது
கங்கை ஜலத்தின் அருகாமை தெரியுது
  தேவையென்றால் தேடாதே என்பதில் தெளிவு!

மனதும் சளைக்காத ஒரு உடல் சரிவு!

டிராவல் இன்சூரன்ஸ்

எப்பொழுதும் விமான பயணம் செய்யும் போது டிராவல் இன்சூரன்ஸ் எடுப்பேன். 80-90 சதவீத பயணத்துல செய்திருக்கேன். இந்த தடவை டிக்கெட் விலை ஜாஸ்தி கொடுத்ததால இன்சூரன்ஸ் மட்டும் 153$ வந்தது. யோசிக்காம எடுத்தேன்.

ஊர்லேர்ந்து கிளம்பற அன்னிக்கு ஒரு எமர்ஜென்ஸி வந்து பயணம் இரண்டு வாரம் தள்ளிப்போச்சு. பயணத்தேதி மாத்தியதற்கு 35000 ரூபாய் கட்ட வேண்டியதாகிடுச்சு. இரண்டு நாள் முன்னாடி திரும்பலாம்ன்னா கட்டணம் ஒன்னே கால் லட்சம்ன்னாங்க! என்னயா இது! இப்படி சோதனையான்னு நினைச்சேன்.

6 கிரகங்கள் ஒன்றாய் சேர்ந்த தினம் வேற. எல்லா கஷ்டங்களும் ஒன்னா வருதேன்னு நினைச்சேன். வருவது வரட்டும் பார்ப்போம்ன்னு பார்த்தாச்சு.

ஊர் திரும்பிய பிறகு இன்சூரன்ஸ் க்ளைம் பண்ணினேன். 35000 மட்டும் திருப்பி கொடுக்குறேன்கிறாங்க!

அம்மிணி கிட்ட சந்தோசமா சொன்னேன். ஆனால் பதில் எப்போதும் மாதிரியே வருது. உனக்கு மட்டும் பணம் எப்படியோ வருது!

35000 கட்டியது தான் திரும்பி வருது. அதை திரும்பி வாங்க 153$ (பத்தாயிரம்) செலவு பண்ணயிருக்கேனே! இன்னும் சில டாக்குமெண்ட்ஸ் சப்மிட் பண்ணியிருந்தா இன்னும் கொஞ்சம் வந்திருக்கும்.

எனக்குத் தெரிஞ்சு பலபேர் டிராவல் இன்சூரன்ஸ் எடுப்பதில்லை. நான் துலா ராசி அடி பட்ட பாம்பு. கொஞ்சம் காயத்துக்கு மஞ்சத்தூள் போட கூடவே இன்சூரன்ஸ் எப்போதும் எடுத்துருவேன்.

சொந்த ஊர் நோக்கி

மேற்கத்திய கலாசாரத்திற்கும் இந்திய கலாசாரத்திற்கும் இடையே உள்ள ஒரு பெருவெளி அல்லது வித்தியாசம், ஒரு பண்டிகையோ அல்லது பேரிடர்வோ இந்திய கலாசாரம் தான் வளர்ந்து வந்த/கடந்து வந்த கிராமப்புறம் நோக்கி கூட்டாக விரைவதில் தெளிவாகப் பார்க்கலாம். மேற்கத்திய மக்கள் அவ்வாறு ஓடுவது குறைவு. இதனால் இந்த பேரழிவிலிருந்து தப்பித்தார்கள் என்று அர்த்தமில்லை. ஆனால் அரசாங்கம் தான் நினைப்பதை செயல்படுத்த முடியும்.

பண்டிகைக்கு எல்லோரும் சொந்த ஊர் தேடிப்போற மாதிரி ஒரு பேரிடர்வின் போதும் அவ்வாறு அவர்கள் ஊர் நோக்கி போகாமல் இருப்பார்கள் என்று கணிப்பது ஒரு விதத்தில் தவறாக இருந்தாலும், மக்கள் தன் இடம் நோக்கி ஓடுவதை எப்படி கையாள்வது!

மேற்கத்திய நாடுகளில் அதிபரை மக்கள் ஏற்காவிட்டாலும், அரசு இடும் கட்டளைக்கேற்ப தன்னை உட்படுத்திக்கொள்ள தயங்கமாட்டார்கள்.

ஒரு பேரிடர்வு தன் முன்னோக்கி வருகிறது. 130 கோடி மக்களை எப்படி உள்ளிருத்தி வைப்பது? எப்படி கையாள்வது என்பது போன்ற அச்சம் எல்லோருக்கும் இருக்கும். அதை பரிசோதிக்க காலை 7 மணிமுதல் மாலை வரை மக்களை உள்ளிருத்திப் பார்க்கலாம். அதன் வெற்றி தோல்வியை வைத்து முடிவு செய்யலாம் என்று நினைத்திருக்கலாம். 60-70 சதவீத மக்களின் நம்பிக்கை கிடைத்தது, மாலையில் அனைவரும் வெளிவந்தது தவறாக இருந்தாலும், 21 நாட்கள் உள்ளிருப்பை தைரியமாக அறிவிக்க முடிந்தது. தேவையான ஏற்பாடுகளின்றி அறிவித்தது இன்னும் பேரிடர் தான்.

கலவரங்களின்றி நிறைவேறினாலும், பல்லாயிரம் மக்கள் தன் சொந்த ஊர் திரும்புவார்களென்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இனி வரப்போகும் தொற்றுநோய் கிருமியை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மேலும் மாறுபடும்.

எந்தவொரு செயல்பாடும் மக்களின் ஒத்துழைப்புன்றி செயல்படுத்த முடியாது.

சொல்லும் முன் செய்வனச் சொல்

சொல்ல வருவதை சொல்வதற்கு முன் சொல்பவை சரியான்னு சரிபார்த்து சொல்வது நல்லது.

அப்படி சொல்வது தவறாகும் பட்சத்தில் ஏற்படுத்தும் அவமானங்கள் கேலிகள் உறுத்தினாலும், அவை மேலும் கற்க உதவும் படிக்கட்டுகளாக நினைத்து மேற்கொண்டு கற்க வேண்டும்.

சமீபத்தில் பட்ட அவமானம் ஒன்று:

பேஷண்டை வெண்டிலேட்டர்ல வைக்கும் முறையை டாக்டர் விளக்கும் போது அவர் உபயோகித்த வார்த்தை intubation. அதை இன்னொருவரிடம் சொல்லும் போது வாயில் தவறுதலாக வந்த வார்த்தை incubation.

3வது லட்டர் tயை c ஆக்கியதால் அர்த்தம் மாறிப்போச்சு, tc கொடுத்துட்டாங்க, மருத்துவத்தைப்பற்றி ஒன்னும் தெரியாத மாதிரி அவமானம். அவமானத்தில் வருவது கோவம். கோவம் வந்தால் தேடி வருவது பாபம்.

அதற்கப்புறம் வென்டிலேட்டரின் உபயோகத்தை அதன் மெடிக்கல் டேர்ம்ஸ்உடன் கற்க முடிந்தது.

அது போல், 9 கோள்கள் ஒரே கோட்டில் வருவதும்!

அபிக்யா ஆனந்த் சொல்வது போல சமஸ்கிரத மொழியை அர்த்தம் புரிகிற அளவுக்கு படித்து தெரிந்து கொள்ளாமல் வேதிக் ஆஸ்ட்ராலஜியில் ஒன்றும் செய்யமுடியாது, புரடா உடுவீங்கன்னு! பையன் நமக்கு நேரா சொல்லலை. ஜோதிடக் கல்லூரி புரபசர்களுக்கு சொல்றான். எல்லோருக்கும் பொருந்தும்.

விளக்கு ஏற்றி

சுதந்திர போராட்ட காலத்துல மக்கள், காந்தி எது சொன்னாலும் எந்த போராட்டம் அறிவிச்சாலும் அவர் பின்னாலேயே போனாங்க, செய்தார்கள், அடி வாங்கினாங்க, கடைசியில் வென்றார்கள்.

இன்றும் அதே நிலை. பெருவாரியான மக்களின் பலம் பின்னாடி நிக்குது.

21 நாள் அடைப்பு அறிவிப்பதற்கு முன் மக்கள் தன்னோடு நிற்பார்களான்னு அறிய ஒரு நாள் உள்ளிருப்பு அறிவிப்பு. தொடர்ந்து செயல்படுத்த முடிந்தது.

இப்ப மக்கள் அவதிப்படும் நேரத்தில், பிசினஸ் குறைந்து, ரெவின்யூ குறைந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது.

இந்திய மக்களின் அடிப்படை கிராமப்பொருளாதாரமும் ஆன்மீகமும் தான். இதை வைத்து அரசியல் செய்பவர்கள் பிழைக்க முடியும்.

இன்றைய விளக்கு ஏற்றலும் அதையொட்டி மக்கள் இன்னும் தன்னோடு நிற்கிறார்களா என்று அறிய ஒரு லித்மஸ் டெஸ்ட்.

பல்ஸ் பிடிச்சு பார்த்தாச்சு, இனி அடுத்த கட்ட நடவடிக்கையை தைரியமாக அறிவிக்க முடியும். மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கையோடு வரும்!

ரெவின்யூ இல்லாத நேரத்தில் சம்பளம் கொடுப்பது எப்படி? பெருமளவில் ஆட்குறைப்பு, சம்பளம் குறைப்பு, பென்ஷன் கட், வட்டி குறைப்பு, வங்கி மூடல், எலக்ட்ரிசிட்டி கட் எல்லாம் ஒரு சேர வரப்போகுது. வேறு வழியில்லை!

இவ்வளவு தூரம் துணைநிற்பவர்கள் அதற்கும் துணை நிற்பார்கள்.

கொரோனா நாட்களில் புத்தாண்டு

புதுவருடம் ஒரு புதிர் போல் புலர்கிறது
புடைத்துவிட்ட நெல்லை புழங்க முடியாமல்
உள்ளிருக்கும் புத்துணர்ச்சியை புடம் போட்டு நிமிர்த்தி
வெளிக்கொண்டு வந்தால் இறங்கும் தடிவரிசை!

அத்திவரதர் வந்து சென்றார் அன்று
என்போல் நீயும் உள்அமர்வாய்
ஓர் தினம் என்றுணர்த்தி!

கிருமியின் அழிவைத் தேடும் முன்
தேய்ந்து விழும் மனித சமூகம்
வேறுபாடு எதுவுமின்றி
ஒன்றாய் வீழும் வேறுபாடுகள்!

மஞ்சளும் துளசியும் கருஞ்சீரகமும் போல்
கலந்ததொரு ஓர்உயிர் மருந்து தேடி
அலையும்பொழுதில் வருமென
காத்திருக்கும் நவீனமருந்துகள்!

மனிதனை மிருகங்கள் வாழ்வில் முந்திச்செல்லாமல்
நாம் விதைக்கும் விதைகள் வளரட்டும்
புதுவருடம் புலர்ந்ததில் புத்தொளி தேடி நிற்போம்
செயற்கையின்றி இயற்கையில் சுவாசிப்போம்
மனிதனாய் வாழ்வோம்!

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

இடர்கால நிவாரணம்

ராசிபலன் இன்னிக்கு பணம் வரும்ன்னு போட்டிருந்துச்சி! ஆனால் அது வரப்போவுதுன்னு்தான் இரண்டு நாளாத்தெரியுமே!

காலையில எழுந்தவுடனேயே அக்கௌண்ட் ஓபன் பண்ணி பாத்தாச்சு! சூப்பரு!

அம்மணி வந்து கேப்பாகன்னு அவங்க பங்கை ரெடியா செக் எழுதி வச்சுருந்தேன். வாங்கிகிட்டாங்க. அடுத்து பையனும் வந்து நிப்பான்னு கெதக்ன்னு இருக்கு!

இத்தனை மில்லியன் taxpayersக்கு இடர்கால நிவாரணம் தருவது ஒரு அபரிமிதமான செயல். பெரும்பாலானோர்க்கு குறிப்பாக வேலை இழந்தோர்க்கு தேவை கூட.

இதைத்தவிர வேலையிழந்தவர்களுக்கு, எங்கள் மாநிலத்தில் 3 லட்சம் பேருக்கும் மேல, மாநில அரசு வழங்கும் நிவாரணமுடன் மத்திய அரசு கொடுக்கும் 600$ம் இந்த வாரம் முதல் கொடுக்கப்போகிறார்கள். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இடர்காலத்தில் இது ஒரு பெரிய உதவி!

வாழ்க மனிதநேயம்!

பூரி மசால்

அம்மாவிற்கும் அப்பாவிற்கும் வெங்காயம் ரொம்ப பிடிக்கும். அதனால் எனது சின்னவயதில் வாரத்தில் இரண்டு நாள் பூரி மசால் இரண்டு நாள் பக்கோடா இருக்கும். அம்மா செமையா பண்ணுவாங்க! கடலைமாவை கொஞ்சம் லைட்டா கரைச்சுவிட்டு டேஸ்ட் கூட்டிருவாங்க!

குடும்பம் பெருசு. அதனால் பெரிய அலுமனிய எண்ணெய் வடிகட்டி பாத்திரம் நிறைய பக்கோடா பண்ணுவாங்க! டிரவுசர் பாக்கெட் முழுசும் இரண்டு பக்கம் நிரப்பிகிட்டு போய் விளையாடிகிட்டே சாப்பிட்டு கிட்டு திரும்ப வந்து பாக்கெட் நிரப்பி கிட்டு ஓடுவேன்.

அந்த பழக்கம் இப்ப அடிக்கடி வாட்டுது. எப்படா பக்கோடா கிடைக்கும் பூரி கிடைக்கும்ன்னு மனசு அலையுது!

இந்த தடவை பெங்களூரில் ஐந்து வாரம் இருந்தப்ப ஹோட்டல் தான் தினமும். ஒரு நாள் ஆசையாய் பூரி ஆர்டர் பண்ணினேன். பூரி எண்ணையில மிதக்கிறதைப் பார்த்து முழுசும் சாப்பிடமுடியலை. ஒரு நாள் ஆர்டர் பண்ணினதோடு சரி.

பூரி மசால் ஏக்கம் மனசைவாட்டுது அதிகம் இப்பவெல்லாம். அம்மா டேஸ்ட் வராது. அடிக்கடி அண்ணன் வேற போன் பண்ணி இன்னிக்கு பூரிமசால்டாம்பான். என்னத்த சொல்ல!

எதுக்கு இம்புட்டா! இன்னிக்கு அம்மிணிக்கு திடீர்ன்னு மனசு வந்து எல்லா காயும் தீர்ந்துருச்சு, மசால் பண்றேன்னாப்புல. அடுத்து பூரி வரும்ன்னு நினைச்சீங்கன்னா அது வள்ளுவர்-வாசுகி வூட்டுலத் தான் நடக்கும்.

கூட சப்பாத்தி பண்ணிவைக்குறேன். எவ்வளவு பண்ணனும்ன்னு கேள்வி. என்ன சொல்வீங்கப்பா!

தாயீ கொஞ்சம் மனசு வைச்சு இரண்டு தோசையைப்போடு மசால் வாசனையைப் புடிச்சுக்கிறேன் பின்னாடி 4 சப்பாத்தியைக் கொடுன்னு துன்னாச்சு!

அம்மாவோட பூரியும் போச்சு இந்த வெங்காயத்தானுக்கு!

இடர்கால நிவாரணம் கடனில் கழிந்தால்

ஒரு காலத்துல கடனற்ற வாழ்வு வாழ்வதெப்படின்னு எழுதிகிட்டு இருந்தேன். அதன்படி தான் வாழவும் செய்கிறேன்.

நேற்று தான் இடர்கால நிவாரண நிதி வந்தது. இன்றைய செய்தியில் அந்த பணம் பல மில்லியன் மக்களை அடைவதற்கு முன் நேராக கலெக்‌ஷன் ஏஜன்சிக்கும், கிரெடிட் கார்ட் கடன் மற்றும் பிற கடன்களுக்கும் நேராகப்போய்விடுகிறது என்று வருகிறது.

எந்தவொரு பெனிபிட்டும் அது தேவைப்படும் போது நேரடி உபயோகத்தில் இல்லையென்றால் அரசு எவ்வளவு உதவி செய்தாலும் பலனை அடைய முடியாது!

நோயற்ற வாழ்வே குறைவற்ற/கடனற்ற செல்வம்பாங்க! நோயும் கடனும் சேர்ந்து தாக்கிச்சுன்னா எங்கே போவது!

குறைந்தபட்சம் கடன்களை அடைத்துவிட்டு வாழ முயற்சி செய்யாவிடில் யாராலும் எதுவும் செய்ய முடியாது!

கடன்றற வாழ்வு வாழ முயற்சி செய்வது எப்போதும் நல்லது! மனிதனாக வாழ முடியும். குறைந்தபட்சம் நோய் வருவதற்கு முன் இந்த கடன் நோயை நீக்கனும்!

எப்போது வேலைக்குத் திரும்ப

மாலை வாக்கிங் போகும் போது வழியில் கடந்த இரண்டு தேர்தல்களில் கூட வேலை பார்த்த உள்ளூர் பெண்மணியை இப்ப சந்தித்தேன்.

ரிடையர் ஆன பிறகு அருகிலுள்ள ஒரு பெரிய கடையில் வேலை செய்கிறார்கள். நாளை மட்டும் வேலைக்கு வா, அதற்கப்புறம் வேலை தொடர்ந்து வேலை கொடுக்க முடியுமான்னு தெரியாதுன்னு சொல்லிட்டாங்களாம்.

வேலையிழந்தோர் நிதிக்கு சீக்கிரம் அப்ளை பண்ணுங்க, அது கிடைக்க வேற இரண்டு வாரம் ஆகலாம் என்றேன். ட்ரை பண்ண முயற்சி செய்திருக்கிறார்கள் ஆனால் முற்றிலும் வேலை போன பிறகு வான்னு சொல்லியிருக்கிறார்கள்.

நியூயார்க்கில் அவர்களது நெருங்கிய உறவினர்கள் இருவருக்கும் வேலை போயிடுச்சாம். கஷ்டமான காலம், கார்டனிங் பண்ணி மனதை எளிதாக்கிகிறார்களாம்.

வருமானம் டக்குன்னு குறைவதை நினைச்சு கவலையாகச் சொன்னாங்க!

நாமெல்லாம் இதிலிருந்து சீக்கிரம் மீண்டு வரனும்ன்னேன்!

உடனே அவங்க! ஐயோ இப்ப வேண்டாம். முதல்ல வியாதிக்கு மருந்தும் தடுப்பூசியும் வரட்டும். அப்புறம் கதவைத் திறக்கட்டும்கிறாங்க! வீட்டுல இருந்தா பரவாயில்லை! கடைக்குள்ள வந்து போறவங்களை நேரடியாக சந்திப்பதில் உள்ள கலக்கம், நமக்கில்லைன்னாலும், எதிரில் வருபவனுக்கு இல்லைன்னு எப்படி தெரியும். கொஞ்சம் அடங்கட்டும்ன்னாங்க!

கஷ்டப்படறவங்க நேரில் தினமும் எதிர்கொள்பவர்கள் சொல்வது மிக நியாயமாக இருக்கு!

மருந்தும் தடுப்பூசியும் பரவலாக கிடைக்காத பட்சத்தில் எப்படி வெளியே இயல்பு வாழ்க்கை திரும்புமோ!

ஆடி அடங்கும் வாழ்க்கையடா இது!

மூன்று குணங்கள்

இது இப்ப வாட்சப்ல வந்தது. கொஞ்சம் எடிட் பண்ணி போட்டுள்ளேன்.

3 சமஸ்கிரத வார்த்தைகள். அதற்கான விளக்கங்களை எப்படி சொல்கிறார்கள். வாவ்!

குணத்ரய பரிச்சேத்ர்யை நம:

மனித ஜன்மத்திற்குரிய மூன்று குணங்கள் சத்வ-ராஜஸ-தாமஸ. இந்த மூன்று குணங்களின் ஏற்ற இறக்கங்களே ஒரு மனிதனின் குணத்தை நிர்ணயம் செய்கின்றது. மஹான்களுக்கும், சாதுக்களுக்கும் சத்வ குணம் மேலோங்கி நிற்கும்.

அம்பாள் இந்த மூன்று குணங்களுக்கும் அதிபதியாகி இந்த மூன்று குணங்களுக்கும் அப்பாற்பபட்டு வாஸம் செய்பவள். அம்பாளின் ரூபமான ஶ்ரீ காளி ரூபத்தில்,தாமஸ குணமாக வெளிப்படுகிறது. இடது காலை முன்னிறுத்தி, நாக்கை தொங்கவிட்டு யுத்த களத்திற்கு செல்லும் தோற்றம். இந்த தோற்றத்தை உபாஸனை செய்யும் பக்தன் தன்னுடைய தாமஸ குணத்தை அறிந்து கொண்டு அதனை  உயர் நிலைக்கு மாற்ற முயற்ச்சிசெய்வார்.

ஶ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்வரூபம் ராஜஸ குணத்தை குறிக்கிறது. எவனொருவன் அதிகமான செல்வத்துக்கு அதிபதியாகிறானோ, அவன் கர்வம் கொண்டு ராஜஸ குணத்தை வெளிப்படுத்தி எவரையும் மதிக்காமல் செயல்படுவான். ஶ்ரீ மஹாலஷ்மி உபாஸனை ராஜஸ குணத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும்.

சத்வ-குணம் மஹா ஸரஸ்வதியின் ஸ்வரூபம். உயரிய ஞானம் பெற்றவர்கள், தனது  விநயத்தால் அனைவரையும் கவர்பவர்களாக இருப்பர். (வித்யா விநய ஸம்பன்ன:) என்றும் தனது ஞானத்தால் அனைவரது வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வழி கோலுபவர்களாக இருப்பர்.

இந்த மூன்று குணங்களையும் உள்ளடக்கிய  அம்பாளின் ஸ்வரூபமே ஶ்ரீ சண்டி யாகும். அம்பாள் இந்த மூன்று குணங்களிலும் இருந்தாலும், இதில் எதிலும் ஒட்டாமல் அவற்றிற்கு மேல் அவற்றை ஆட்சி செய்பவளாக இருக்கிறாள்.
அப்பேற்ப்பட்ட அம்பாளுக்கு நமஸ்காரங்கள்.

வீட்டிலிருந்தே வேலை செய்தால்

கொரோனா காலத்தில்:

இப்ப நிறைய ஐடி மக்கள் வீட்டுலேர்ந்தே வேலை செய்கிறார்கள்.
1. மேனேஜர்ஸும் வீட்டிலேர்ந்தே மானிட்டர் பண்ணுகிறார்கள்!
2. புரொடக்‌ஷனில் அதிக நட்டமில்லை!
3. நீண்ட தொலைவு ஆபீஸ் பயணம் தேவையில்லை!
4. மதிய உணவு வீட்டுலேயே!
5. வேலை ஒட்டிய பயணங்கள் செலவுகள் ரத்து!
6. விதவித ஆடைகள் லாண்டரி செலவுகள் ரத்து

கொரோனா முடிந்த பின்:

ஐடி மக்கள் வீட்டுலேயே வேலையைத் தொடருங்க என்று வந்தால்:
1. பில்டிங் வாடகை, எலக்ட்ரிசிட்டி, நெட்வொர்க் செலவு மிச்சம்
2. போக்குவரத்து நெரிசல் குறையுது, தனியார் பஸ் தேவையில்லை
3. மதிய உணவு, டீ செலவு மிச்சம்
4. வொர்க்கர்ஸ் காம்பென்சேஷன் செலவு குறையும்

விளைவுகள்:

0. சம்பளம் குறையும்.
1. ஆபீஸ் ரியல் எஸ்டேட் காலி
2. தனியார் போக்குவரத்து வேலை போகுதல்
3. அலுவலகம் ஒட்டியுள்ள ரெஸ்டாரெண்ட்ஸ் பிசினஸ் காலி
4. வியாபார பயணங்கள், ஏர்லைன்ஸ், டாக்ஸி குறைஞ்சுரும்
5. ஆடை விற்கும் கடைகள், லாண்டரி காலி

மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்துல கொண்டு வந்து விட்டுரும் போலிருக்கே!

# அட கொரோனாவே!

பெற்றோர் என் கனவில்

என்னமோ தெரியலை! இரண்டு நாளா அப்பா அம்மாவோட இருக்கிற நினைவுகள் மட்டும் திரும்பத் திரும்ப ஒவ்வொரு எபிசோடாக பத்து வயது துவக்கத்திலேர்ந்து கனவில் வருது. பகல் நேர உறக்கம் மற்றும் இரவு நேர உறக்கத்திலும் வருது.

அப்பா அம்மா செய்யச் சொல்வது மற்றும் பலவை அவங்களச் சுற்றியே ஓடுகிறது. பல சுவையான மற்றும் என்றுமே அது மாதிரி நடக்காத அடி வாங்கும் நினைவுகள் எல்லாம் வருது.

திடீர்ன்னு அதிர்வில் எழுந்திரிக்கும் போது தான் இப்ப இருவருமே இல்லை, கனவுன்னு உணரமுடிகிறது. அதுவரை நிஜம் போல் நடப்பதாகவே மனதில் படம் ஓடுது. நடக்காத விசயங்கள் நடந்தது போல் ஓடுகிறது.

பெற்றோர் நினைவில் இப்படி வாழ்வது ஆச்சரியமாக இருக்கு! 1986ல் அப்பா ரிடையர் ஆனார். அதிலிருந்து இன்று வரை அவர்கள் ஒட்டியே உழன்று திரிந்ததன் தாக்கம் தொடர்கிறது!

ஸர்வ ஜீவன சுகம்

வாட்சப்பில் வந்தது. எடிட் செய்து:

ஸர்வ ஸஞ்ஜீவனோத்ஸுகாயை நம:

ஜீவனம்- நம்முடைய வாழ்க்கை மற்றும் நாம் வாழும் முறையை குறிக்கும்.

இந்த வாழ்க்கையை நாம் ஆத்ம பலத்துடனும், சரீர பலத்துடனும் சேர்ந்து வாழ்தலே முறையாகும்.

ஆத்ம பலம்( மனோபலம்) இல்லாது வாழ்பவன், எவ்வளவு ஞானஸ்தனாக இருந்தாலும் ஒரு சபையில் தான் நினைத்த விஷயத்தை முழுமையாக வெளிக்கொணர முடியாமல் கலங்கி நிற்பான்.

அதுபோல்,  சரீர பலம் இல்லாது போனால், எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது போகும்.

இந்த ஜீவனத்திற்கு மருந்தாக( ஸஞ்ஜீவனமாக), எல்லாவித நிலைகளிலும் நம்மை தூக்கி நிறுத்தக்கூடியவற்றை வணங்குகிறேன்.

அதுமட்டுமில்லாது, நம்முடைய ஆத்ம பலத்தை பெருக்கி நமக்கு அனேக ஸுகத்தை அளிக்கச்செய்பவரை வணங்குகிறேன்.

ஒரு வேலை இருவருக்கு பகிர்ந்தால்

60 வயதுல ரிடையர் ஆவதை மாற்றி 58 வயதுக்கு ரிடையர்மண்ட் கொண்டு வந்தப்ப சொன்ன சில காரணங்கள்:
1. இளைஞர்களுக்கு ரிடையர் ஆகிறவங்க வேலையை கொடுக்க முடியும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு!
2. வயதாகும் போது வேலையில் சுணக்கம் ஏற்படலாம், இளைஞர்கள் வேலை செய்தால் உற்பத்திதிறன் அதிகமாகும்.

இப்படி பல காரணங்கள் வந்தன!

இனி வரும் காலங்களில் இன்னும் பலருக்கு வேலைவாய்ப்பு தர வேண்டுமென்றால்:
1. 40 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்க தடை செய்ய வேண்டும்.
2. 40 மணி நேரத்திற்கு மேல் செய்ய வேண்டிய வேலையாயின் அதை இன்னொருவருக்கு கொடுக்க வேண்டும்.

இதுவரை நட்டமடைந்ததை ஈடு கட்ட மக்கள் 60 மணி நேரத்திலிருந்து 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டுமென்றால், சக மனிதனை மனிதனாக வாழ விடக்கூடாது என்று அர்த்தம்.

நாட்டை வளமாக்க அவ்வளவு உழைக்க வேண்டுமென்று நினைத்தால், அந்த 90 மணி நேர உழைப்பை இருவருக்கு கொடுத்தீர்களென்றால் அதன் மூலம் இன்னொரு குடும்பம் பிழைக்கும், அரசுக்கு மேற்கொண்டு வரிகள் கிடைக்கும், மற்ற பொருட்கள் விற்பனையாக வழிவகுக்கும். உண்மையில் பொருளாதாரம் வளர இது உதவும்!

நாட்டுப்பற்றுள்ளவர்களாயின் யோசிக்கவும்!

மே தின வாழ்த்துகள்!

ஊர்புரளி

கிராமப்புற வாழ்க்கையில் சில சமயம் புரளிகள் ஊர்வம்புகள் சிறு தீப்பொறி வச்சா பஞ்சு மாதிரி பத்திகிட்டு பறக்கும்.

எங்கள் ஊரும் இதற்கு விதிவிலக்கல்ல. கிட்டத்தட்ட 35 வருடம் முன்ன நடந்த உண்மைச் சம்பவம் இது.

ப்ளஸ் 2 முதன் முதலாக பள்ளியில் ஆரம்பித்த போது போதுமான படித்த ஆசிரியர்கள் இல்லைன்னு மாஸ்டர்ஸ் முடித்து வந்த பட்டதாரிகளை புதிதாக ப்ளஸ் 2 ஆசிரியர்களாக நியமித்தனர்.

தமிழ் மீடியம் பள்ளியில் ப்ளஸ் 2 ஆங்கிலத்தில் புதிதாக ஆரம்பித்ததால் நிறைய மாணவர்கள் புதுவகைப் பாடத்திட்டம் மற்றும் ஆங்கில மொழி வழிக்கல்வியானதால் சிலர் அதே இளம் ஆசிரியர்களிடம் மாலையில் ட்யூசன் போக வேண்டி வந்து போக ஆரம்பித்தனர். குறிப்பாக சில பெண் மாணவிகள்.

இது ஊர்வம்பு கிளம்ப காரணமாகியது. அவனுக்கு அவளோட காதல், அவளுக்கு அவன் மேல் ஒரு பார்வையுண்டு என இல்லாததும் பொல்லாததும் சொல்லும் ஒரு தலைக்காதல் கதைகள் அதிகம் அந்நேரத்தில் பறக்கும். சில பெண்கள் பையனோடு ஓடியதால் ஒரு சில பெற்றோர் தற்கொலை செய்து கொண்டதும் உண்டு. ஒரு ஆசிரியர் தன் மகள் ஒரு பையனோடு போய் விட்டாள் என்று உயிர் மாய்த்ததும் நடந்தது அப்போது.

ஒரு சமயம் இந்த ட்யூசன் போகிற பெண்கள் மற்றும் அந்த பள்ளி ஆசிரியர்கள் ஏதோ டூர் போய்விட்டு வந்தனர்.

அன்று தொடங்கியது ஊர்வம்பு, புரளி சொல்லுதல், இல்லாத பழி போடுதல் எல்லாம். வயது வரம்பற்று பெரியவர்களிலிருந்து சின்னவர்கள் வரை இந்த gossips பரவலாக ஒடிகிட்டு இருந்தது.

மிக மிக தைரியசாலி, நல்ல அழகி, மிக பாப்புலர் பெண் என நாங்கள் நினைத்தவள் முதன் முதலில் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தாள். 12 வது படிக்கும் அந்த இளம் மாணவி தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டாள்.

ஊரே ஆடிவிட்டது! என்ன காரணம் என்ன காரணம்ன்னு எல்லோரும் வெளிப்படையாக கேள்வி; ஆனால் உள் மனதில் இப்படி ஆகி இருக்குமோன்னு சில்மிஷ விஷம நினைப்புகள். யாருக்கும் தெளிவான காரணம் தெரியாது. ஆனால் குரூரமான நினைப்புகள்.

அதிர்ச்சி அடங்க இரண்டு நாள் முடியுமுன்னே அந்த பெண்ணுடன் இருந்த இன்னும் இரண்டு மாணவிகள் அடுத்ததடுத்த நாட்கள் தற்கொலை செய்து கொள்ள, ஊரே பயந்து போய் நின்று விட்டது. மூன்று தற்கொலைகள் மக்களின் புரளிகளால்.

அடுத்து அவர்களுடன் இருந்த இன்னும் இரண்டு பெண்கள் இதைச் செய்வார்கள் என்று நினைத்து அவர்கள் பெற்றோர் மிகவும் அவர்களை கண்காணித்து உயிரைக்காப்பாற்றி விட்டார்கள்.

அதில் ஒரு பெண்ணை 33 வருடம் கழித்து பார்த்த போது அவளிடம் காரணம் கேட்கும் துணிவில்லை. ஆனால் அவர்களுடைய கிளாஸ்மேட் என்னோட உறவினரிடம் பல தடவை விசாரித்ததில் உள்ளூர் மக்களின் இந்த கேவலமான மனநிலை வீண்புரளி கிளப்பிய அவலநிலையைத் தான் காரணம் சொன்னார்கள்.

இதை இப்ப சொல்லக் காரணம் என்ன என்று கேட்கறீர்களா!

35 வருடம் கழித்து புதிதாக தொடர்பில் வந்தவன் இன்று அந்த மரணங்களைப் பற்றி கேட்கிறான். அப்போது அவன் படித்துக் கொண்டிருந்தது 9வதோ 10வதோ. அவ்வளவு சிறுவன். ஆனால் அந்த மரணங்களின் பாதிப்பு நிகழ்வு அதைப்பற்றிய கருத்து எதுவும் மாறவில்லை.

அவன் கேள்வி:
triple suicide case solve aacha ? yaaru kutravaali
sexual harassment dhan kutravaali a
nija kutrvaali kutratthuku appaal ?!

அவனுக்கு என்னோட பதில்:
பொய்பிரச்சாரம் தான் காரணம்ன்னு சொல்றாங்க!

அவனது மறுகேள்வி:
enna poi prachaaram ... vaaruku enna benifit poi prachaaram paanuvadhaal ?
amazed that it was hushed under the carpet in a place like ours.
2 others girls could have been in the pact if suicide but saved on time by parents

அவனுக்கு என்னோட பதில்:
They were classmates of my relative. I had several rounds of discussion with her who says it was the rural mentality of the people interested in gossiping made the situation worst which caused the tragedy. I do agree with her knowing the gossip and rumor spreading attitude of our people.

அதற்கு அவன்:
Ours is a small place and news like this spreads like wild fire however no one woulfd go to the extent of killing oneself if there was no truth ... probably not all three was affected but atleast 1 would have been compromised and the other 2 would have given in to guilt ...

அதற்கு என் பதில்:
Again this is the same type of discussion happened those days which those girls at young age couldn’t take it easily.

இதற்கப்புறம் தொடரலை.

மரணத்திற்குப் பின்னும் அந்த சிறுபெண்களைப் பற்றிய அபிப்ராயங்கள் மாறாதது வருத்தமாக இருக்கிறது.

தற்கொலைகள் எப்போதும் தன் துன்பங்களைப் போக்கப்போவதில்லை, அதை உயிர் வாழ்ந்து நேரில் எதிர்கொள்வதே முன் உதாரணமாய் நிற்கும்.

தற்கொலைகள் கோழைத்தனமானது. ஆனால் அதற்கு அவர்களைத் தள்ளிய ஊர்சனம் தன் குற்றத்தை உணர்வதாயில்லை. ஆதலால் உங்கள் தற்கொலையில் எதைச் சாதித்தீர்கள்? இவர்களை எதிர்கொண்டு போராடி வாழ்ந்திருக்கலாமே! உங்களுடன் இருந்த அந்த உயிர்காப்பாற்றப்பட்ட இருவர் இன்று குழந்தை குடும்பங்களுடன் நன்கு வாழ்கிறார்களே பெண்களே! ஏன் அத்தகைய துரித முடிவை எடுத்தீர்கள்? உங்கள் பெற்றோரும் ஒரு அநாவசிய குற்றச்சாட்டுகளுக்கு கூனி குறுகி வாழ வேண்டியதாகி விட்டதே!

தவறு செய்த ஊர்சனம் தன் குற்றத்திற்கு குறுகவில்லை! உங்கள் மரணத்தின் மூலம் குற்றமற்ற நீங்கள் ஏன் உங்களை குறுக்கிக் கொள்ள வேண்டும்.

மரியாதை குறைவதிலும் குறையின்றி வாழ்தல்

என் அப்பாவை அவரை விட வயதில் 7-10 வயது குறைந்தவர்கள் கூட மரியாதை இல்லாம வாடா போடாவென்று பேசுவார்கள், சில சமயம், படிக்காத ஆளு மேனேஜ்மெண்ட் சப்போர்ட்டுன்னு இருந்துகிட்டு நம்மைவிட அதிகம் சம்பளம் வாங்குறான்னு ஏகப்பட்ட பிராதுகள்.

ஆபீஸ் நேரம் போக காலை மாலையில் ஒரு ladies recreation club கிளப் கணக்கு வழக்குகளைப் பார்த்து வருவார்.

நான் அப்பா கிட்ட முறையிடுவேன். என்னப்பா உன்னை விட இவ்வளவு வயது சின்னவர்; என் முன்னே உன்னை வாடா போடாங்கிறார்ம்பேன். சில பெரிய மனிதர்கள் வீட்டு வாசலில் நிக்க வைச்சு பேசிவிட்டு அனுப்பிவிடுவார்கள். என்னப்பா இதெல்லாம் எதுக்கு அவங்க வீட்டுக்குப் போறேம்பேன். என்னப்பா இவ்வளவு இளக்காரமாக பேசறாங்கம்பேன். உள்ளம் கொதிக்கும். அவர் சிரிச்சுகிட்டே சொல்வார்.

அப்பா அடிக்கடி இதை திருப்பிச் சொல்வார்:

1.  நம்மோடு நெருக்கமாக இருப்பதால் தான் உரிமையோடு வாடா போடா என்று சொல்கிறார்கள்.
2.  நம்மை விட அதிகம் படித்தவர்கள், அறிவாளிகள், அரசியல் பலம் பெற்றவர்கள், பணக்காரர்கள்; இவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள இயலாவிட்டாலும் ஒரு சிறுபுன்னகையுடன் வெளியேறிடு; இவர்களோடு மோதுவதால் நஷ்டம் தான் வரும். நமக்கு பலன் கிடைக்காது. புன்முறுவலோடு நகர்ந்து விடு. என்றாவது ஒரு நாள் இவர்கள் உதவி நமக்குத் தேவைப்படலாம். ஏனென்றால் நமக்கு நம் உழைப்பு மட்டும் போதாது அவர்களின் உதவியும் தேவை.
3.  வீட்டினுள் விடலைன்னா என்ன! மனதார சிரித்து தானே பேசுகிறார்கள். அந்தளவுக்கு நாம் வைத்துக் கொண்டால் போதுமென்பார்.

கடைசி வரை இப்படியே வாழ்ந்து மறைந்தும் விட்டார், சிறு வயதிலேயே பல ஏக்கர் நிலங்களை இழந்தும், எடுபுடி வேலைகள் செய்யத் தயங்காமல் செய்து, ஒரு சிறுபண்ணையின் மகன் அடிமட்டத்திலிருந்து வாழ்வைத் துவங்கி எங்களுக்கு வாழ்க்கையை போதித்து மறைந்தார்.