Saturday, May 2, 2020

மரியாதை குறைவதிலும் குறையின்றி வாழ்தல்

என் அப்பாவை அவரை விட வயதில் 7-10 வயது குறைந்தவர்கள் கூட மரியாதை இல்லாம வாடா போடாவென்று பேசுவார்கள், சில சமயம், படிக்காத ஆளு மேனேஜ்மெண்ட் சப்போர்ட்டுன்னு இருந்துகிட்டு நம்மைவிட அதிகம் சம்பளம் வாங்குறான்னு ஏகப்பட்ட பிராதுகள்.

ஆபீஸ் நேரம் போக காலை மாலையில் ஒரு ladies recreation club கிளப் கணக்கு வழக்குகளைப் பார்த்து வருவார்.

நான் அப்பா கிட்ட முறையிடுவேன். என்னப்பா உன்னை விட இவ்வளவு வயது சின்னவர்; என் முன்னே உன்னை வாடா போடாங்கிறார்ம்பேன். சில பெரிய மனிதர்கள் வீட்டு வாசலில் நிக்க வைச்சு பேசிவிட்டு அனுப்பிவிடுவார்கள். என்னப்பா இதெல்லாம் எதுக்கு அவங்க வீட்டுக்குப் போறேம்பேன். என்னப்பா இவ்வளவு இளக்காரமாக பேசறாங்கம்பேன். உள்ளம் கொதிக்கும். அவர் சிரிச்சுகிட்டே சொல்வார்.

அப்பா அடிக்கடி இதை திருப்பிச் சொல்வார்:

1.  நம்மோடு நெருக்கமாக இருப்பதால் தான் உரிமையோடு வாடா போடா என்று சொல்கிறார்கள்.
2.  நம்மை விட அதிகம் படித்தவர்கள், அறிவாளிகள், அரசியல் பலம் பெற்றவர்கள், பணக்காரர்கள்; இவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள இயலாவிட்டாலும் ஒரு சிறுபுன்னகையுடன் வெளியேறிடு; இவர்களோடு மோதுவதால் நஷ்டம் தான் வரும். நமக்கு பலன் கிடைக்காது. புன்முறுவலோடு நகர்ந்து விடு. என்றாவது ஒரு நாள் இவர்கள் உதவி நமக்குத் தேவைப்படலாம். ஏனென்றால் நமக்கு நம் உழைப்பு மட்டும் போதாது அவர்களின் உதவியும் தேவை.
3.  வீட்டினுள் விடலைன்னா என்ன! மனதார சிரித்து தானே பேசுகிறார்கள். அந்தளவுக்கு நாம் வைத்துக் கொண்டால் போதுமென்பார்.

கடைசி வரை இப்படியே வாழ்ந்து மறைந்தும் விட்டார், சிறு வயதிலேயே பல ஏக்கர் நிலங்களை இழந்தும், எடுபுடி வேலைகள் செய்யத் தயங்காமல் செய்து, ஒரு சிறுபண்ணையின் மகன் அடிமட்டத்திலிருந்து வாழ்வைத் துவங்கி எங்களுக்கு வாழ்க்கையை போதித்து மறைந்தார்.

No comments: