Saturday, May 2, 2020

உழைத்த பணம் நெகிழ வைத்த போது

ஹரிகேசநல்லூரும் மற்றும் பேப்பர் ஜோசியமும் அடிக்கடி சமீபத்துல துலா ராசிக்கு சொல்வதைப் பார்த்து அப்படி என்ன நடந்துரப்போவுதுன்னு ஒரு அவநம்பிக்கை உண்டு. உங்களுக்கு வர வேண்டிய பணம் எப்படியாவது தேடி வரும்ன்னு சொல்றாங்க! அதை நம்பமுடியாத நிகழ்வுகள் தான் அதிகம்.

நான் டிசிஎஸ் வேலையை விட்டுவிட்டு அயல்நாடு போய் 23 வருடமாகி விட்டது. போன பிறகு இரண்டு தடவை என்னோட பிஎஃப் செட்டில்மெண்ட்டுக்கு ட்ரை பண்ணினேன் ஒன்னும் நடக்கலை. 18-20 வருடமாக அது பற்றி சில சமயம் நினைவு இருக்கும் ஆனால் வராதுன்னு மனதை சமாதானப்படுத்திக்குவேன். மறந்து போன நாட்களே அதிகம்.

இங்க அம்மாவுடன் கூட இருக்க மூன்று வார லீவுல வந்தேன். வந்தவுடன் அம்மா ‘டேய் உன்னோட லட்டர் ஒன்னு பிரிக்காம இரண்டு மாசமாக இருக்கு, பார்றா’ன்னாங்கு. வந்து 3-4 நாள் அதைப் பிரிக்கலை.

ஓரளவு jet lag குறைய ஆரம்பிக்க எடுத்துப் பிரிச்சேன். சரியாக படிக்கலை மூடி வச்சுட்டேன். அடுத்த இரண்டு நாள் கழிச்சு எடுத்துப் பார்த்தா உன்னோட பிஎஃப் செட்டில்மெண்ட் அல்லது ட்ரான்ஸ்பருக்கு கீழ்கண்டவற்றை செய்யுன்னு டிசிஎஸ் அனுப்பியிருக்கு.

27 வருடம் முன்பு எந்த வீட்டுலேர்ந்து டிசிஎஸ் இன்டர்வியூக்குப் போனேனோ அதே வீட்டுத் திண்ணையில உட்கார்ந்து அந்த செட்டில்மெண்ட் பணம் கையில வாங்குறேன். நம்பக்கூட முடியலை.

டிசிஎஸ் எச்ஆர் நிர்வாகிகள் எந்த அளவு இதில் நேர்மையாக, நல்ல நிர்வாகத் திறமையோட உதவியது மட்டுமல்ல பத்தே நாட்களில் செட்டில் செய்து விட்டனர். டிசிஎஸ் மக்களை நினைச்சா பெருமையாக இருக்கு.

கஷ்டப்பட்டு உழைச்ச பணம்டா, எங்கயும் போகாதுங்குறான் என் கசின்.

நம்நல்வாழ்வில் நாம் உழைத்த கம்பெனிகள் கூட நம்மோடு பல வருடம் கழித்தும் தோள் கொடுத்து நிற்பது மிகப்பெருமையாக இருக்கு.

வாழ்வினிது! நல்லோருடன் வாழ்வது இனிது!

No comments: