Monday, December 31, 2012

வருடத்தின் கடைசி நாளில்

வருடத்தின் கடைசி நாளில் புதிதாக ஒரு restaurant போக முடிவெடுத்து நானும் என் மகனும் ஒரு pizza inn கடைக்குள் மதியம் buffet உண்டு என்றறிந்து சென்றோம்.

நுழையும் போதே மிக மலர்ந்த முகத்துடன் சீன கொரியா பெண்கள் வரவேற்றனர். கடையில் முழுவதும்  வேலை செய்வது சீன கொரியா பெண்கள் என்று தெரிந்தது. முப்பதுக்கும் மேல் ஆட்கள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

நானும் பையனும் உள்ள நுழையும் முன்னரே அதிகம் vegetarian கிடைக்காது என்று தெரிந்தும் கிடைத்த வேகிடரியன் மட்டும் உண்டு விட்டு மேலும் பசியிருந்தால் வேறு இடம் பார்க்கலாம் என்று முடிவோடு தான் போனோம்.

ஏழெட்டு pizza tray முழுவதும் non-vegetarian pizza மட்டும் இருந்தது அதிர்ச்சியாக இருந்தது. எப்போதும் cheese pizza இருக்கும். அதுவும் காணோம். பையனும் நானும் கொஞ்சம் அதிர்ந்து விட்டோம்.

ஒரே ஒரு பணியாளரிடம் vegetarian pizza ஏதாவது இருக்கா என்று கேட்டேன். சிறிது கூட முகம் கறுக்காமல் சிரித்துக் கொண்டே அமருங்கள் வரும் என்றனர்.

அடுத்த பத்து பதினைந்து நிமிடங்களில் நடந்தது கனவா என்று தெரியவில்லை.

வரிசையாக ஐந்து விதமான vegetarian pizza எட்டு எட்டு துண்டுகளாக நறுக்கி ஐந்து tray இல் buffet டேபிளில் கொண்டு வந்து நிரப்பி விட்டனர்.

ஒவ்வொரு  தட்டும்  கொண்டு வந்த பின்னர் ஒருவர் வந்து முகமலர்ச்சியுடன், இப்போது spinnach pizza , இப்ப ப்ரோக்கொலி வித் lettuce, அடுத்து vegetarian pizza டேபிளில் வைத்திருக்கிறோம் என்று சொல்லி கொண்டு வந்து அசத்தி விட்டனர். ஒவ்வொன்றும் செம ருசி. கடைசி வரை நின்று கவனித்தனர்.

ஒரே கட்டணம். அதிகம் ஒன்றும் சொல்ல வில்லை, முகம் சுளிக்க வில்லை. மலர்ந்த முகத்துடன் செய்தனர்.

கடைசியில் விடை பெறும் போது இன்று நீங்கள் மட்டும் தான் vegetarian இங்கே என்று சிரித்துக் கொண்டே சொன்னார்கள்.

ஒரு பெரிய வாழ்த்துடன் விடை பெற்றோம்.

வருடத்தின் கடைசி நாளை நல்ல சுவையுடன் உணவளித்து ஒரு மலர்ந்த நினைவலைகளை உருவாக்கிய நம்மைப் போன்ற அந்த தென் ஆசிய மக்களை புத்தாண்டு நினைவோடு வாழ்த்துகிறேன்.

வரும் புத்தாண்டு உங்களையும் இவ்வாறு சிறக்க வைக்க வேண்டுதலுடன் உங்கள் அனைவருக்கும் ஒரு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்.

Wednesday, December 26, 2012

சோற்றுக்கணக்கு

ராசக்கா காலையில நேரத்தில எழுந்திரும். எழும் முன்னவே நாள் முழுக்க என்ன செய்யனும்ன்னு எதையோ யோசிச்சிட்டே இருக்கும். ராசக்காவின் மாமனோட உறவு சனம் தினம் பத்து பதினைந்து பேரோ அவங்க வீட்டுல சாப்பிடும். அக்கா  எல்லோரையும்  மிரட்டி எதோ வேலை வாங்கி கிட்டே இருக்கும். ஒருத்தரும் சம்பாதிச்சு கொடுக்க இல்லை. மாமன் கொண்டு வருவது தான். இத்தினி பேர் சாப்பிடுதுங்கலேன்னு ஒரு தடவையும் சொல்லிக் காமிக்காது. ஆனால் ராசக்காவின் பேச்சுத் தொனியே அவிங்களை விலக்கி வைச்சிரும். தன்னோட தடித்த உருவத்தையும் தடித்த குரலையுமே தனது பலமாக வைத்தே வாழும் உசிரு அது.

நான் அது வீட்டுக்குள்ள நுழையும் போது அதன் முகத்தில ஒரு தனி மலர்ச்சி தெரியும். இத்தனிக்கும் மாமன் தான் என்னை தூக்கி வைச்சு விளையாடும். அக்கா வேலையா இருந்தாலும் கண்ணு மட்டும் என்னோட விளையாட்டையும் குறும்பையும் தனியாப் பார்த்து ரசிக்கும். பிறவு தனியா என்ர  ஆத்தா கிட்ட சொல்லும் போது தான் இத்தினியும் கவனிச்சிருக்குன்னு தெரியும். ஒரு வெள்ளி கிண்ணத்துல சோறு பிசைஞ்சு ஊட்டும். மாமனோட வெள்ளித் தட்ட வையுன்னு அடம் பிடிச்சாலும் எதையோ சொல்லி வெளியத் தூக்கி கிட்டு வந்திரும். மாமனோட அக்கா அந்த தட்டை மாமனுக்குத் தவிர யாருக்கும் கொடுக்காது. ரொம்ப கேட்டா போய் உன்ர வீட்டுல துன்னுன்னு விரட்டும். ராசக்கா  வெளிய கூட்டி வந்திரும்.

தினம் பத்து பேரு திங்கிற வீட்டுல ராசக்கா ஏதொ சொல்லிச்சுன்னாத் தான் சண்டை வரும். மாமனோட மச்சான் உள்ள வராம வெளிய நின்னு பேசிட்டுப் போயிரும். யாரும் சாப்பிடுவதற்கு ஒன்னும் சொல்லாது. ஆனால் ஏதொ ஒன்னு சொல்லி சண்டை வர வழவைச்சிரும். எதுவும் புரியாம அங்கேயே விளையாடிகிட்டு இருப்பேன். யாராவது கண்ணு கசங்கிச்சுன்னா ஓடியாந்துருவேன்.

ஊராம் புள்ளைய எடுத்து வளர்த்தா தன்  புள்ளை தானே வளரும்ங்கும். ஆனால் அக்கா வீட்டுல புள்ளைகுட்டி கிடையாது. என்னைத் தவிர அது வளர்த்து விட்டது மாமனோட உறவு சனத்துல மட்டும் தான். அந்த புள்ளைங்களோட விளையாடுவேன். அங்கிருக்கிற வாலிபப் பசங்க பொண்ணு பிள்ளைகளோடு விளையாடுவேன். வீட்டுக்கு சாப்பிட தூங்க மட்டும் வருவேன்.

நான் வளர வளர அந்த வீட்டுல வளர்ந்த மற்ற புள்ளைங்களுக்கும் கல்யாணம் சேர்த்தி எல்லாம் செய்து வைச்சது. அந்த வீட்டு கல்யாணம் பண்டிகை சேர்த்தி எல்லாத்திலும் என்னை பக்கத்தில வைச்சுக்கும்.

ஜெயமோகனின் சோற்றுக்கணக்கு  படிக்கும் போதெல்லாம் அதில் வர்ற கேத்தேல் சாஹிப் என்ர ராசக்கவாத்தான் இருக்கும். ராசக்காவின் சோத்துக் கணக்கை யாராலயும் அடைக்க முடியாது.

Saturday, December 15, 2012

Paper Weight

எனது வீட்டிற்கு உறவினர்கள் நண்பர்கள் வரும் போது விருந்தோம்பல் கொஞ்சம் அதிகமாவே இருக்கும். மனைவி நிறைய பதார்த்தங்கள் செய்து அசத்தி விடுவார். இது இங்கும் சரி முன்பு மும்பையில் இருந்த போதும் நடக்க கூடியது. சொந்த ஊர் மற்றும் சொந்தங்களை விட்டு அதி தொலைவில் பெரும்பாலும் வாழ்வதால் இது நடக்கும்.

உறவினர் மட்டும் சில நாட்கள் உடன் தங்குவர். வார இறுதியில் விடை பெரும் போது  மூன்று உறவினர்கள் மட்டும் கையில் ஒரு லட்டர் கொடுத்து விட்டு போவார்கள். கையில் கொடுக்கவில்லை என்றால் சில நாட்களில் வந்து விடும். முன்பு தபாலிலும் தற்போது ஈமெயில் லிலும் வந்து விடும்.

இந்த கடிதங்கள் குடும்பத்தில் ஒரு சச்சரவை எப்போதும் ஏற்படுத்தி விடும். சந்தோசமாக இருந்த நாட்கள் மனதை விட்டு அகண்டு விடும். கடிதத்திலுள்ள நல்ல அம்சங்களை விட கண்டுள்ள குறைகள் அல்லது அறிவுரைகள் மிகவும் எரிச்சலூட்டி விடும்.

தேவைக்கு அதிகமாக பொருட்கள் இருக்கு அல்லது பையனுக்கு தேவைக்கு மேலவே நடக்கிறது; இருந்த நாட்களில் இதைச் செய்தீர்கள், வேறு விதமாய்ச் செய்திருந்தால் செலவு குறைந்திருக்கும். இது மாதிரி ஏதோ ஒரு லிஸ்ட் வரும்.

மேல் குறிப்பிட்டுள்ள விஷயங்களில் எதிலுமே அவர்கள் மேல் சிரமத்தை கொடுத்திருக்கவே மாட்டோம். ஆனால் எல்லாத்தியும் நோட் பண்ணி லெட்டர் வந்திடும். இது மாதிரி அனுப்புவது அவர்கள் வழக்கமாம். மாற்றிக் கொள்ளமாட்டார்கள்.

இது மாதிரி விஷயங்களில் அனுபவம் முன்பே இருந்தாலும் அடுத்த முறை இதை மனதில் வைத்து கவனிக்க முடியாம இருக்க முடியாது. அப்பவும் லெட்டர்  வரும்.

ஊரில் சிலவற்றில் இவர்களை நம்பி இருப்பதால் இந்த கடிதச் சுமைகளை தாங்கத் தான் வேண்டும்.

ஒவ்வொருத்தருடைய சந்திப்புகளும் ஒரு பேப்பர் வெயிட் ஆக கடிதச் சுமையாக இல்லாமல் இருத்தல் வேண்டும்.

டிஸ்கி : சமீபத்தில் யாரும் வரவில்லை. லெட்டரும் வரவில்லை.

Friday, December 7, 2012

நீங்கள் விதைக்கும் விதை

கையெடுத்து கும்பிடும் கைகள் 
கையில் கடப்பாறை தூக்கி
கோவிலையையும் மசூதியையும்
இடிக்க புறப்பட்ட போதே
அந்த கூர்மையான கடப்பாறை
நிலத்தில் ஆழமாக
இறங்கி விட்டது.
 
கும்பிடும் ஆத்திகனே 
இடிக்கும்
நாத்திகனாகி விட்டான்.
வம்பிடும் நாத்திகனோ 
இடிக்காதே எனும்
ஆத்திகனாகி விட்டான்.
 
நீங்கள் நடத்தும் 
செய்கைகளுக்கு 
நீங்கள் வணங்கும் 
தெய்வங்களே வந்து 
மறுபடியும் 
அவதரித்து இன்னொரு 
இதிகாசம் வழங்க 
வேண்டி வரும்!

இன்று இருப்பவர்களை 
இறந்ததாக புரளி கிளப்பி
இருக்கின்ற மற்றவர்களை 
சமாதிக்கு அனுப்பி
ஆறுதலடையப் போவதாக
நம்பும் சனமாக
அடிமையாக உருவாக்கி
கொள்கையினால் பிரியாமல்
சுயலாபத்திற்குப் பிரிந்தவர்கள்
வைத்த விதையும்
நிலத்தில் ஆழமாக
இறங்கிவிட்டது.

கொள்கையற்று நீங்கள் 
பிரித்த கூட்டம்
இன்று உங்களை 
உயிருடன் சமாதிக்கு 
அனுப்ப இருக்கிறது.

மொழி வாரி மாநிலமாகப் 
பிரித்தால் மொழி வளரும் 
நாடு வளரும் செழிக்குமென 
நினைத்தவன் விதைத்த விதையும் 
வளரத் தெரியாமல் வளர்ந்து 
இயற்கை வளத்தையும் 
மொழி பிரித்து 
நிலத்தில் இறக்கி
விட்டு வைத்திருக்கிறது.

இன்று அதே 
மொழியின் காரணத்தினால் 
இயற்க்கை வளம் 
பகிர மறுக்கப்படுகிறது.

ஆண்டான் அடிமை உறவு 
என்றும் உடையாமல் இருக்க 
படைத்தவன் விட்டுச் சென்ற 
சாதிகளும் உரமிட்டு வளர்ந்து 
நிலத்தில் நீண்டு 
இறங்கி விட்டது.

இன்று ஆண்டானையும் 
அடிமையையையுமே 
ஆட்டுவிக்கும் சக்தியாகி விட்டது 
அவர்கள் வைத்த விதை.

விஞ்ஞானம் பொருளாதாரம் 
வளர்ந்தாலும் 
அதையும் உரமாக 
உபயோகிப்பதற்கு ஏற்றவாறுதான் 
விதைத்த விதை 
நிலத்தில் இறங்கியிருக்கு.
 

இனி பிரிப்பதற்கு 
ஏதேனும் உருவாக்க 
முயற்சித்தால்
நீங்கள் விதைக்கும் விதை   

உங்களை 
இதே மண்ணில் 
சமாதியாக்காவே வளரும்.

Monday, December 3, 2012

தவமாய் காத்திருந்து

தவமாய் காத்திருந்து 

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு குழந்தை பிறக்க இருக்கிறது. அதன் வரவை எதிர் நோக்கி மிக ஆவலோடு இருக்கிறோம். 

பிரசவத்தின் போது மனைவியுடன் அருகிலிருந்து மிக ஆவலுடன் பிறக்கப் போகும் நமது வரவை எதிர் நோக்கி இருக்கையில், குழந்தை meconium சாப்பிட்டிருக்க சாத்தியமிருக்குன்னு டாக்டர் சொல்லி மிகப் பரவசமாக அவசரமாக காரியத்தில் இருக்கும் போது, நம் மனதில் ஒரு சுளீரென ஒரு வலி, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமப் போயிடுமோன்னு ஒரு கவலை; உயிருடன் பார்ப்போமா அல்லது இறந்து தான் பார்க்க வாய்ப்பு கிடைக்குமான்னு மனதில் ஒரு பெரிய சுழல் காற்று மனதில் ஓடி, வெளி வரும் குழந்தையை மட்டும் நோக்க வைத்து விடுகிறது.
 

மனைவியின் பிரசவ வலியும் உணர முடியாமல் பிறந்த குழந்தை உடன் அழுவானா பிழைப்பானா என்று மட்டும் நமது வலி பெரிதாக இருக்கிறது. அடுத்தஅரை மணி நேரம்  குழந்தையைப் பற்றி டாக்டர் சொல்லப் போகும் வார்த்தைக்கு தவமாய்த் தவமிருந்து நல்ல செய்தி வரும் போது ஒரு நிம்மதி, பெரிய கடல் அலை ஓய்ந்து, ஒரு மெதுவான சலனம் நம் மனதில், அப்போது தான் மனைவி சொல்லும் வார்த்தை என் பிரசவ வலியின் துடிப்பு கேட்ட மாதிரி ் தெரியலையேன்னு சொல்லும் போது இத்தனை நேரம் நம் மனது தவித்த வற்றை உடன் பகிர முடியா ஒரு அழுத்தம் வருகிறது.


இதையே அன்பு பா.ரா.வும் நேற்று பகிர்ந்திருந்தார். பாம்பறியும் பாம்பின கால்.

இன்று அலுவலகத்தில் சக ஊழியனுக்கு என்ன துயரமோ, பிரசவத்தின் போது  இழப்பு. அதிகமாவே  துடித்திருப்பான். :-(

Sunday, December 2, 2012

அமெரிக்கன் லாட்டிரி


அமெரிக்கன் லாட்டிரி 

எங்களது
ஆசைக் கனவுகள்
அவர்களை
மில்லியானராக்கியது.

கண்டோம் 
கனவுகள்
ஆனால்
அதிலுள்ள பூஜ்யங்களை
மட்டும்
தெரிந்து கொள்ளக் கூடிய 
தவறான
கனவாகி விட்டது
கண்டவனுக்கு. 

Monday, November 26, 2012

தென்னிந்திய முதல்வர்கள் சந்திப்பு

தென்னிந்திய முதல்வர்கள் சந்திப்பு 

இன்று இரு மாநில முதல்வர்கள் கோர்ட் உத்திரவு படி சந்திக்க வேண்டிய நிலைக்கு  உள்ளாகியுள்ளனர். இதை நான் வேறொரு விதமாகக் கற்பனையாக  நினைக்கிறேன்.

இனி வரும் காலங்களில் நான்கு தென்னிந்திய முதல்வர்களும் ஒரு சுழல் முறையில் ஒவ்வொரு மாநிலத்தின் சிறந்த சுற்றுலா பகுதியிலோ அல்லது அனைவரும் இறை நம்பிக்கை உள்ள முதல்வர்களானால் ஒரு திருத்தலத்திலோ மாதம் ஓரிரு முறை சந்தித்து  ஓரிரு மணி நேரம் ஓர் கலந்துரையாடல் நடத்தினால், அல்லது ஒரு சின்ன டீ  பார்ட்டி சந்திப்பு நடத்தி வந்தால் அவர்களுக்குள்ளாக ஒரு சுமுகமான நட்புறவு உருவாகும்.

சந்திப்பில் அரசியல் பொருளாதாரம் சமூக உறவுகளுக்கான ஒரு அடித்தட்டு விவாதம் கலந்துரையாடல் நடத்தி வந்தால் பிற்காலத்தில் பிரச்சனைக்குரிய நதி நீர் பங்கீடு, மாநிலங்களுக்கிடையே ஆன வர்த்தகம் போக்குவரத்து போன்றவற்றில் பேச்சு வார்த்தை நடத்தும் போது  மிக இலகுவாக எல்லாம் நடை பெறும்.

பிரச்சனைக்குறிய வற்றை கொஞ்சம் தாமதமாக கலந்துரையாடினால் அதற்குள் அவர்களுக்குள் ஒரு நல்ல பரஸ்பர நட்பு உருவாகிவிடும். நாளை மத்திய அரசுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தும் போது ஒரு தனி மாநிலத்திற்கான அணுகுமுறை இல்லாமல் ஒட்டு மொத்த தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் ஏற்றவாறு ஒன்றாக செயல் பட வாய்ப்பு ஏற்படுத்தக் கூடும்.

முதல்வர்கள் அளவில் ஒரு நட்புறவு வந்தால், பிற்காலத்தில் நான்கு மாநில மக்களுக்கு இடையிலும் ஒரு சகோதரத்துவம் வளர ஏதுவாக இருக்கும். இனி நீ என்ன வந்து எங்களை கொடு என்று கேட்பது. நாங்களே கொடுக்க மாட்டோமா என்கிற அளவுக்கு நட்பு வளர உதவும்.

ஹலோ ஹலோ ஸ்டாப் ஸ்டாப்.

என்ன கனவு ரொம்ப ஓவராப் போய்  கிட்டு இருக்கு!!

ஓ ! அப்பிடீங்களா ! பரவாயில்லை. ஒரு நாள் நடக்கட்டும்.

முதல்வர்கள் கவனிப்பார்களா?

Wednesday, November 14, 2012

துரதிர்ஷ்டம்

தோல்வி கண்டு துவண்டதில்லை 
துரதிர்ஷ்டம் கடைசி வரை 
துரத்தும் போதும் 
துவண்டு போகத் தெரியாமலே 
வளரத் தெரியாமல் 
வளர்ந்து விட்டேன்.

நேற்றும் துரதிர்ஷ்டம் துரத்தினாலும் 
அரண்டு போகும் சுற்றம் முன் 
என் கண் முன் தெரிந்தது 
வேறொரு மார்க்கம் தானே ஒழிய 
தோல்வி கண்டு துவண்டதில்லை.

ஆனால் துரதிர்ஷ்டம் 
ஏன் என்னை கடைசி வரை 
துரத்த வேண்டும்.
துரதிர்ஷ்டம் என்று ஒன்று 
இல்லை என்று அறிந்து 
கொள்ளத் தானோ!
ஏனோ! வளரத் 
தெரியாமலே 
வளர்ந்து விட்டேன்.

Wednesday, October 17, 2012

சுண்டல் நவராத்திரி

சுண்டல் நவராத்திரி

பசியிலிருக்கும் நவராத்திரி இரவுகள்
மனைவி கொண்டு வரும்
கொண்டக் கடலை சுண்டலின் சுவையில்
வயிற்றுச் சுவற்றில் கொண்டாட்டம் போடுகிறது.

சுண்டலோடு அறுசுவை உணவையும்
அள்ளி வழங்கும் அன்பு சகோதரிகளின்
உபசரிப்பில் அள்ளி வந்து பகிர்ந்துண்ணும்
துணையாளின் அன்பில் மிளிருது சுகம்.

நவராத்திரிகளைக் கொண்டாடும் பெண்டிரின்
சுவையான சுண்டலை நோக்கியே
எதிர் பார்த்திருக்கும் என்னைப் போன்ற
பேதையிரின் நோக்கில்
பொம்மைகளை கலை உணர்வோடு வைத்து
சமூக மக்களோடு கலந்துறவாடும்
பெண்களின் அன்புறவாடலை
சுண்டலின் சுவையால் மட்டுமே காண முடிகிறது.

சுண்டலற்ற ஒரு நவராத்திரி
என்னைச் சுண்டி விடும் என்ற
பேதமையின் அவதானிப்பில்
இனி வரும் இரவுகளில் கிடைக்கும்
சுண்டல் வகைகள் எள்ளி நகையாடும்.

இனிய நவராத்திரி இரவு சுண்டல்கள்.

Saturday, September 1, 2012

நேசம்

நேரில் காணா நேசனை
நேச நெஞ்சம் தொழும்
எண்ணற்ற தேச மக்கள்
நெறிமுறைக் கடன் படைத்து
ஒரு உன்னத உத்தமராக்கி
உயர்த்தி வைத்திருக்கும் நிலையில்

அல்லல் படும் வாழ்க்கையில்
அவதி நீக்க வாரும்
என்றழைக்கும் பேதை மனதிற்கு
நேர்முகம் இல்லாத நேசன்
நேவிவிட வருவது எப்படி?

நேசமுள்ள மக்களை நேர்முகனாக்கி
நெறிமுறைக் கடன் படைத்து
ஒரு உன்னத உத்தமராக்கி
அல்லல் படும் வாழ்க்கைக்கு
அவதி நீக்கச் செய்திடுவாயோ!

Thursday, August 23, 2012

தோல்வி

தோல்வி 

கண்டு துவண்டதும்  இல்லை
துன்பப்படவும் தெரிவதில்லை
தோல்வியைத் தவிர 
எதுவும் அறியாத போது!

இதோ இன்னொன்று நம் முன்னே 
வருகிறதென்று தெரிய  வரும் போது
தளராத எனக்கு  
முன்கண்ட தோல்வியை விட
எவ்வகையில் சிறந்ததென்று 
யோசிப்பதைத் தவிர 
வேறெதுவம் வருவதில்லை!

சரி! தோல்வி என்றால் என்ன?
நினைப்பது நடக்கா விட்டால் 
அது தோல்வியா அல்லது
நடப்பவற்றை நினையாததா?

தோல்வியைக் காணும் போதெல்லாம்
துவண்டு விழுவது அறியாத எனக்கு
தோல்வி என ஏற்றுக் கொள்ள வேண்டியது 
அடுத்து நடப்பவைகளைக் கண்டு அஞ்சுவதே!

Sunday, August 12, 2012

எனது தேவை

எனது தேவை

வலிமையுடன் இருந்த போதும்
உங்கள் பேச்சைக் கேட்க
நாங்கள் தயாராயில்லை!

வலிமையிழந்த பின்னும்
உங்கள் பேச்சைக் கேட்க
கூடிய நிலையில் இல்லை நாங்கள்!

தேவையற்ற நேரத்தில்
தேவையற்றவைகளை அள்ளி வழங்கி
தேவைப் படாமல் செய்வதை விடுங்கள்!

 சுதந்திரம் என்பது
ஒருங்கிணைந்த மக்களின்
ஒரு ஒருங்கினைந்தப் போராட்டம்!

தேட வேண்டிய எங்கள் சுகம்
தேடிக் கொள்வோம் நாங்களே!

- கவிதை

Monday, July 30, 2012

Anger


There once was a little boy who had a bad temper.  His Father gave him a bag of nails and told him that every time he lost his temper, he must hammer a nail into the back of the fence.

The first day the boy had driven 37 nails into the fence.  Over the next few weeks, as he learned to control his anger, the number of nails hammered daily gradually dwindled down.  He discovered it was easier to hold his temper than to drive those nails into the fence.  Finally the day came when the boy didn't lose his temper at all.

He told his father about it and the father suggested that the boy now pull out one nail for each day that he was able to hold his temper.

The days passed and the young boy was finally able to tell his father that all the nails were gone.

The father took his son by the hand and led him to the fence.  He said, 'You have done well, my son, but look at the holes in the fence.  The fence will never be the same.  When you say things in anger, they leave a scar just like this one.  You can put a knife in a man and draw it out.  But It won't matter how many times you say I'm sorry, the wound will still be there.  A verbal wound is as bad as a physical one.
Remember that friends are very rare jewels indeed.

They make you smile and encourage you to succeed; they lend an ear, they share words of praise and they always want to open their hearts to us.

Please forgive me if I have ever left a 'hole' in your fence.

Disci : Written by some nice guy. Received in email

Thursday, July 5, 2012

தடைகள்

சமீப காலங்களில் இந்தியாவில் ரயில், பஸ் களில் பயணித்ததில், எந்த ரயிலும் பஸ் எதுவும் காலியாகப் போனதில்லை. டிக்கெட் கிடைக்கவில்லை என்று திரும்பிப் போனவர்களும், ஏமாற்றப் படுபவர்களும் அதிகம். இடம் இல்லாததால் தவறான முறைகளில் பயணிப்பதற்கான காரணங்களை ரயில்வே மற்றும் பேருந்து கழகங்கள் உருவாக்குகின்றன. ஏன் மேலும் தொடர் ரயிலும் பஸ் ம் விட மாட்டேங்கிறாங்கன்னு புதிராகவே இருக்கு. கேட்பாரில்லை.

மேலும் அதிக ரயில், பஸ் விடுவதால், மேலும் அதிக வேலை வாய்ப்பு, அரசுக்கு வருமானம், மக்கள் தவறான முறைகளில் அதிகம் செலவளிக்காமல் பயணிக்க முடியும். இருந்தும் செய்வதில்லை, சிலர் செய்ய விடுவதும் இல்லை.

வருமானம் வர ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தால் வெளி நாடுகளில் அதை எளிதாகப் பயன்படுத்தி சம்பாதித்து விடுகின்றனர். இந்தியாவில் போக்குவரத்து மூலம் அதிகம் வருமானம், வேலை வாய்ப்பு, மக்களை தவறான வழியில் செல்லாமல் ஓரளவுக்கு நெறி படுத்த முடியும்.

அமெரிக்காவில் கார் industry மற்ற போக்குவரத்துகளை தடை படுத்துவது போல இந்தியாவிலும் அப்பட்டமாக நடக்கிறது.

Tuesday, July 3, 2012

FETNA

இன்னும் சில நாட்களில் FETNA வெள்ளி விழா துவங்க இருக்கிறது. எனது அருமை நண்பர் பழமைபேசி முதல் முறையாக தலைமைக் குழுவில் இருந்து அவரது நண்பர்களுடன் நடத்தி வருகிறார். விழா வெற்றி பெற வாழ்த்துகள்.

எனது சக அலுவல நண்பர் மற்றும் தெரிந்தவர்கள் குடும்பமாக செல்கிறார்கள். குடும்பமாக செல்லும் பொது 300, 400 டாலர் க்கும் மேல் செலவானாலும் நண்பர்களுடன் சேர்ந்திருக்க கண்டுகளிக்க செல்கிறார்கள்.

கடந்த சில வருடங்களாக FETNA பற்றிய விமர்சனங்களைப் படித்து வருகிறேன். சிலவற்றில் உண்மைகள் இருந்தாலும் முழுமையாக ஏற்க முடியவில்லை. நல்ல விமர்சனங்கள் புடம் போட உதவும். ஆனால் அதை எடுத்துக் கொள்பவர்கள் பொறுத்து.

நான்கு வருடம் முன் முதல் முறையாக எங்கள் ஊரில் நடந்த போது போயிருந்தேன். மூன்று நாட்கள் முழுவதும் அரங்கத்திலேயே இருந்தேன். ரசித்தவை பல. ரசிக்க முடியாதவை பல. எல்லாம் நம் விருப்பப் படி தான் நடக்கனும்னு எதிர் பார்த்தல் சாத்தியமில்லை. தமிழகத்தில் நலிந்து வரும் நடனக் கலைகளை, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், இன்னும் பல்வேறு நடனங்களை ஒருமித்துப் பார்க்க முடிந்தது. இலங்கை சம்பந்தப் பட்ட அரசியல் தவிர, இந்திய அரசியல் பற்றிய கருத்துகள் விமர்சனங்கள் அதிகமில்லை. வந்திருந்த அரசியல் கட்சித் தலைவரும் கலைகளை ரசித்து விட்டு சென்று விட்டார்.

இந்த தடவை எதிர்பார்க்காத நல்லக்கண்ணு ஐயா, ராமகிருஷ்ணன், மற்றும் இவர்கள் கருத்துகளுக்கு முற்றிலும் மாறு பட்ட ஆன்மிக யோகா குரு ஆகியோர் வருகை தர இருக்கின்றனர். வித்தியாசமாகத் தான் இருக்கப் போகிறது.

விழாவிற்கு செல்பவர்கள் தேர்ந்தெடுந்து பார்த்து மகிழ வேண்டியது தான். எல்லோருடைய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ள இது வரை இது போன்று எந்தவொரு அமைப்பும் பெரிய அளவில் வந்ததில்லை. இது மற்றும் விதிவிலக்கென்று எதிர் பார்க்க முடியாது. மாறுபட்ட கொள்கைகளை மாறுபட்ட விருப்பு வெறுப்புகளைக் கொண்டே வளர்ந்துள்ளோம். அதில் இந்த விழாவில் நடக்கும் நிகழ்ச்சிகளும் அவ்வாறே.

மூன்று நாட்கள் ஒரே அரங்கத்திற்குள் உட்கார்ந்து கொண்டு வெறும் ஒருவருடைய  விருப்பத்திற்கு ஏற்றவாறு மட்டும் நிகழ்ச்சிகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், நாம் வளர்ந்து வந்த விதத்திற்கு விலக்காகப் போய் விடலாம்.

எந்த விஷயத்திலும் குண்டக்க மண்டக்கா வாகவே பேசுவது, யோசிப்பது, செயல் படுவது என்றுள்ள மக்கள் மத்தியில் எல்லா மக்களின் விருப்பங்களையும் நிறைவு செய்வது சாத்தியமில்லை. எல்லா விதத்திலும் பிளவு பட்டுள்ள மக்கள், சாதி, மதம், அரசியல், ஆன்மீகம், ஆத்திகம்/நாத்திகம், ஒன்று கூட விடாமல் எல்லாத்திலும் வேறுபட்டுள்ள மக்கள், ஒரு அரங்கத்தில வந்து உட்காரனும்னா, என்ன செய்யனும்னு யோசனை அனுப்பலாம். அதனை FETNA மக்கள் ஏற்புடையவையாக இருந்தால் வரும் காலத்தில் அமுல் படுத்த வேண்டிக் கொள்ளலாம்.

துணிக் கடைக்கோ அல்லது ஒரு Mall சென்றாலோ தேவைப் பட்டதை மட்டும் வாங்கி வருவதைப் போல தனக்கு பிடித்த அல்லது எதிர் பார்த்த நிகழ்ச்சிகளைப் பார்த்து வரலாம். தேவையில்லா விட்டால் அல்லது அதை வேறு விதத்தில் செலவிடலாம். பார்க்க நினைத்த சில நண்பர்களைப் பார்க்க முடியாமல் போகும். தனி நபர் விருப்பம்.

FETNA அதன் வருமானத்தை பிற நல்ல காரியங்களுக்கு செலவிட வேண்டும். அதை அறிவித்து செயல் படுத்த வேண்டும்.

வாழ்த்துகளுடன்

Thursday, June 7, 2012

புழக்கடை



'எலேய்! புழநியில என்னத்தலே துலவுர'ன்னு கேட்கிற சத்தைக் கேட்டு வெடக்குனு திரும்பின என்னப் பார்த்து சிரிச்சுக் கிட்டே நெருங்கிய ராசக்கா, சத்தம் கேட்டு அஞ்சுர மொவனுக்கு புழநியில என்ன சோளின்னுச்சு.

ராசக்கா குரலும் நடைச் சத்தமும் கண் மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும் தெரிஞ்சுபுடும் எனக்கு. ஆனால் ஒரு நீண்ட லயிப்புல பார்த்து கிட்டுருந்த அந்த பறவையோட செயல் என்ன முடக்கிப் போட்டுருச்சு.

யக்காவ்! சத்தம் போடாம அங்கிட்டுப் பாரு, ஓடிரப் போவுதுன்னு மெதுவா கூவையில, நறுக்குன்னு தலையுல கொட்டிகிட்டே, மரத்தடியில ஒதுங்குரவனை பார்க்கவா புழநியில ஒதுங்கின பொறுக்கிப்பயலே ன்னு வசவு கொடுக்கிற ராசக்காவப் பார்த்து, குட்டு வாங்கின தலையை சொறிஞ்சிக்கிட்டே, மரத்து மேலப் பாருன்னு சொல்றது புரியாம எங்கிட்டோப் பார்த்து பொறணி பேசின, விலசிப் புடுவேன் சாக்கிரதைன்னு கத்துனப் பிறகு தான், அசட்டு சிரிப்பு சிரிச்சுது.

அப்புடி என்னத்தலே அங்கப் பார்த்து கிட்டு இத்தினி நேரமாக் கிடக்கிரன்னு ஒரு கமுட்டுச் சிரிப்போடு கேட்கும் ராசக்காவைப் பார்க்கும் போது அதன் மொவம் மார்ற அழகு பார்த்து ரசிப்போடு, அந்த பட்டுப்போன மரத்தைப் பாருக்கான்னேன்.

அது தலைத் தூக்கிப் பார்க்கையில, அந்த பறவையும் மரத்த ஒரு இடைவிடாம சட சடன்னு கொத்துற சத்தத்தப் பார்த்து, எலேய் மரங் கொத்திப் பறவைலே! என்னமா போடு போடுதுரா ன்னுச்சு.

இப்ப உன் மரமண்டையில சவட்டச் சொல்லட்டுமான்னு நான் சிரிக்கையில, அட வரட்டிப் பயலே, நெனப்பப் பாருன்னுச்சு.

அந்த செத்துப் போன மரத்துல என்னாலே பண்ணுதுன்னு அப்பாவியாக் கேட்கும் ராசக்காவப் பார்த்து, நீ இத்தினி பெருசானாலும் உன்மண்டையில களிமண்ணுன்னு சொல்ல முடியாது. சவட்டி தட்டிரும்.

யக்காவ், அந்த மரம் செத்துப் போச்சு. அதக் கரையான் தான் சாப்பிடுது. மரங்கொத்திப் பறவைக்கு கரையான் பூச்சி துன்னா மாதிரியும் ஆச்சு, அது அரைமணி நேரமா போடற துளையில கூடு கட்டிக்கிட்டா மாதிரியும் ஆயிறும் சொல்ற என்னை ராசக்கா பார்க்கிற பார்வை ஒரு மாதிரி இருந்துச்சு.

ஒன்னும் பேசாம அது நவுரையில, என்னா! ஒன்னும் சொல்லாமப் போறேன்னு கேட்டேன்.

எலேய்! அப்பப்ப ஒரு பெரிய படிப்பு படிச்ச புள்ளையாட்டம் பேசுற நீ! நான் இந்த மாமனோடு புழக்கடையில புழங்க வந்ததிலிருந்து எல்லாம் அத்துப் போச்சுன்னு சொல்லிட்டு போகிற ராசக்காவப் பார்த்து, அது திரும்பிப் போவுற பாதையைத் தான் ஒரு கனத்த மொகத்தொடு பார்க்க முடிஞ்சதே தவிர, அந்த மரங்கொத்தியை திரும்பிப் பார்த்துகிட்டு இருக்க முடியல!

Tuesday, June 5, 2012

ரத்தம்

ரத்தம்

சக அலுவலருடன் காரில போகும் போது, நான் என் மனைவியைப் பற்றி சொன்னா நம்ப மாட்டேன்னாரு. தலையை தூக்கிப் பார்த்தேன்.

என் மனைவிக்கு ரத்தத்தை கண்டா பயம்ன்னாரு. யாருக்குதானில்லை ன்னு நினைக்குறதுக்குள்ள, என் மனைவி நர்ஸ் ன்னாரு.

என் வாய் சும்மா இல்லாம, வர்ற patient பாவம்ல ன்னு சொல்லிட்டேன். அவர் சிரிச்சுக்கிட்டே, அதுவும் emergency வார்டு ல வேலை செய்யறாங்கன்னு சொன்னாரு. பகிருன்னுச்சு. ரோடு accident ல மாட்டுறவன் கதி அதோகதி தான்னு நினைக்கையில, சும்மா இருக்க முடியாம, 'பாவம். emergency டாக்டருக்கு இன்னொரு நர்ஸ் இருந்தா தான் வர்றவன் பொழைப்பான்' ன்னுட்டேன்.

அவர் சிரிச்சுக்கிட்டே, இரு இன்னும் பாக்கி இருக்குன்னாரு.

என் மனைவிக்கு நைட் ஷிப்ட் தான் ரொம்ப பிடிச்சிருக்கு. ஏன்னா இரவிலத் தான் உண்மையான experience கிடைக்குது. வர்ற கேஸ் எல்லாம் மாபியா கும்பல் ஒருத்தனுக்கு ஒருத்தன் சுட்டுகிட்டு வர்ற கேஸ், இல்லாட்டி இரவில் விபத்தில் வர்ற கேஸ். இரண்டுக்குமே அவசர உதவி முக்கியம், சதை பிஞ்சும் ரத்தம் கொட்டிக்கிட்டு இருந்தாலும், நர்ஸ் அம்மாக்கு ஒன்னும் ஆவுரதில்லையாம், ரத்தம் ஒன்னும் பயமுறுத்துவதில்லை ன்னாரு.

பகல்ல வர்ற கேஸ் எல்லாம் ஒண்ணா மூக்கொழுகல் இல்லாட்டி சுரம், வலின்னு. என்னா த்ரில்லு இதிலன்னுட்டாங்கலாம்.

நம்ப முடியாம, நம்பலாமா வேணாமானு யோசிக்கையில, அவரே தொடர்ந்தார்.

இரண்டு வருஷம் முன்னாடி தான் நர்ஸ் பயிற்சி முடிச்சாங்களாம். அதுக்கு முன்னே இவருக்கு அல்லது பிள்ளைங்களுக்கோ துளி அடி அல்லது சிராய்ப்பில் ரத்தம் வந்தா இரண்டு பண்ணிருவாங்கலாம்.

திருமணமான புதிதில் ஒரு நாள் கையில ரத்தம் வருதுன்னு அவசர அவசரமா இவருக்கு அழைப்பு வந்து ஓடிப் போய் பார்த்தா கையை அழுத்திப் பிடிச்சிகிட்டு கால் நடுவே தலையைப் புதைத்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்து பயந்து போய் ரத்தம் எங்கேன்னு கேட்டா, தலையை எடுக்காம விரலைக் காட்டினா, வெறும் ஒரு சொட்டு காய்ஞ்சு போன ரத்தமாம்.

இவருக்கோ இவர் பிள்ளைகளுக்கோ ரத்தம் வந்தா இப்பவும் நடக்கிற கூத்து செமையா இருக்குமாம். ஆனால் emergency வார்டு செம த்ரில்லிங் experience ன்னு கேட்கும் போது, வரும் patient பொழைக்கலாம்ன்னு ஆஸ்ப்பத்திரி வந்து உயிர் விடற நிலைமையை நினைச்சு ஒன்னும் சொல்ல முடியல.

எந்த hospital ள்ள வேலை செய்யறாங்கன்னு மட்டும் தெரிஞ்சு வைச்சிகிட்டேன். நம்ம உசுரு நமக்கு முக்கியமுள்ள! :-)

Sunday, May 27, 2012

வனச்சுவடு


பாணதீர்த்தம் போய் ஆறு மாதமானாலும் அந்த சூழ்நிலை நிகழ்வுகள் மனதை விட்டு விலக மாட்டேங்குது. முண்டந்துறை காடு அதன் வளம் ஒரு நீங்கா நினைவாக அமைந்து விட்டது.

எனது நண்பர்கள் நீண்ட காலமாக இயற்கை, வனாந்திரம், வன விலங்குகளை பார்க்க நீண்ட பயணம் செய்து வனச்சுவடு பதிப்பதில் பேரின்பம் அடைவர். இந்த தடவை ஒரு கீறி பாம்பை இழுத்துச் செல்லும் காட்சியைப் பார்த்ததிலிருந்து தனித்துவம் அடைந்து விட்டது எங்கள் பயணம்.

எனது நண்பர்கள் உணவை விரும்பிச் சுவைத்து சாப்பிடுவார்கள். அதற்கான முன்னேர்ப்பாடுகளை நன்கு செய்து விடுவார்கள். இந்த ஏற்பாடு எதுவும் இந்த தடவை இல்லை. முண்டந்துறை வனக் காவலர்களின் சமையல் காரரிடம் சொல்லி ஏதாவது செய்து கொள்ளலாம் என்று நினைத்ததும் நடக்கவில்லை. தாமிரபரணி ஆற்றின் மீன் சுவை அதிகம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தேடிய பெண்மணி சுட்டுக் கொடுக்க இல்லை.

வனக்காவலர்களே அங்குள்ள ஒரு சிறு உணவு விடுதியைக் காண்பித்தனர். விடுதி ஒரு கூரை வேய்ந்த ஒரு தடுப்புச் சுவற்றுக்குள் நான்கு மேசை மீது. தடுப்புக்கு பின் புறம் காட்டு விறகு வைத்து சமைத்துக் கொடுக்கும் ஒரு பெண்மணி, உதவிக்கு இருவர்.

சில நாட்கள் முன்னர் ஒரு சிறுத்தைப் புலி அந்த விடுதி முன் கண்டதினால், அங்கு யாரும் இரவில் தங்குவதோ, சமைப்பதோ கிடையாது. பாபனாசத்திலிருந்து பொருட்கள் கொண்டு வந்து சமைப்பதால் அங்கு காலையில் வந்து முன்பணம் கொடுத்து பதிவு செய்பவர்களுக்கு மட்டும் தான். முப்பது சாப்பாடு விற்றால் ரொம்ப பெரிய விஷயம் என்று அந்த பெண்மணி சொன்னார்கள். சைவ சாப்பாடு மட்டும் தான்.

நாங்கள் தான் முதலில் முன்பணம் கொடுத்தவர்கள். அருவியில் நன்கு குளித்து நல்ல பசியுடன் ஒரு மணிக்குத் திரும்பினோம். கடை நிரம்பி வழியுது. சிலர் அந்தப் பெண்மணியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். எங்களைப் பார்த்தவுடன், முதல்ல பணம் கட்டிய எங்களுக்கு உணவு இல்லாமப் போயிடுமோன்னு ரொம்ப விசனப் பட்டுது.

எங்களுக்கு ஒரு இடம் ஒதுக்கி சோறு போட்டாங்க. அவங்க பண்ணியிருந்த கொஞ்சமா பூண்டு போட்ட ஒரு மிளகு ரசம், கோசுப் பொரியலுடன் நல்லா இருந்தது. நானும் பையனும் ரசிச்சு சாப்பிட்டோம். ஒரு சின்ன டம்ளர் ல ரசம் குடிக்க கிடைக்குமான்னு நான் கேட்டவுடன் அந்தம்மா முகம் மலர்ந்து கொண்டு வந்து கொடுத்தாங்க.

கடையில கூட்டம் அதிகம் இருந்ததால எங்க மேலும் கேட்டுருவோம்ன்னு ஒரு கவலையும் அவங்க முகத்தில இருந்தது.

வெளிய வரும் போது உணவு ரொம்ப நல்லா இருந்ததுன்னு நாங்க சொன்ன வுடனே அந்த அம்மா முகத்தில கொஞ்சம் ஆனந்தக் கண்ணீர். இத்தனை நேரம் இந்த சோறு தான் சரியில்லைன்னு இத்தினி நேரம் சண்டப் போட்டுட்டு போறாங்கன்னாங்க.

நாங்க உண்மையிலேயே சொல்றோங்க. நீங்களே என் பையன் சாப்பிட்டதைப் பர்த்தீங்கலேன்னு சொன்ன வுடன் இன்னும் சந்தோசமாயிட்டாங்க.

நிறைய நாட்கள் இருபது சாப்பாடு கூட விற்க முடியாம காட்டுல கொட்டியிருக்கோம். இன்னிக்கு நீங்க தான் முதல்ல பணம் கொடுத்தது, முப்பது பேருக்கு சமைச்சதை ஐம்பது பேருக்கு கொடுக்க வேண்டியதாயிட்டுது. உங்களுக்கே இல்லாமப் போயிருமோன்னு கொஞ்சம் சோறு எடுத்து வைக்கச் சொன்னேங்கன்னாங்க. எங்கள் மனம் நெகிழ்ந்து விட்டது. நல்ல சோற்றுடன் கரும்பு தின்னக் கூலி.

ஒரு காட்டில், வெளியூர் லிர்ந்து பொருள் கொண்டு வந்து சமைத்துக் கொடுக்கும் ஒரு பெண்மணியின் செயலை, ஒரு உதவியாகப் பார்க்க முடியாத படி நம்ம சனம் இருக்கு. வியாபார ரீதியாகப் பார்த்தாலும் இரு நூறு முன்னூறுக்கு மேல் சேர்ந்திருக்காது. அதற்கும் எவ்வளவு ஒரு கடினமான உழைப்பு.

நாமும் நம் வீட்டில் இதே தவறு செய்கிறோம். வனச்சுவடுகள் நல்ல பாதை அமைத்துக் கொடுக்கட்டும். :)

Wednesday, May 23, 2012

Demo

மதியம் 3 மணிக்கு அலுவலக பெரிய தலைகளுக்கு ஒரு product டெமோ கொடுக்கணும். சரியா கொடுக்கலைன்னா பின்விளைவுகள் அதிகம். கடந்த இரண்டு நாளா வேறு அலுவலகத்தில வேலை. நைட் கொஞ்சம் தயார் பண்ணிட்டு, காலையில ஆபீஸ் போனா சரக்கு (product ) சுத்தமா வேலை செய்யலை.

என் லேப்டாப் ல அலுவலக technicians எவ்வளவோ செய்தும் ஒன்னும் விளங்கலை. என் மேனேஜர், மற்றும் சிலரது machine எல்லாத்தலையும் ட்ரை பண்ணி ஒன்னும் வேலைக்காவலை. இரண்டு தடவை மேனேஜர் வந்து panic பட்டன் தட்டி விட்டுடட்டுமான்னு கேட்டு விட்டுப் போயாச்சு.

சுத்தமா கை விடற நிலைமைக்கு வந்தாச்சு. இனி ஒன்னும் ஆவப் போவதில்லைன்னு, இரண்டு மணிக்கு கொண்டு வந்த சாப்பாடு சாப்பிட்டேன். நடுவில கூட வேலை செய்பவர்களுக்கு அவங்க டேமோக்கு உதவி செய்ய வேண்டி இருந்தது.

கூட வேலை செய்பவர் பேசாம எங்க டெமோ வேடிக்கைப் பாருன்னு போயிட்டார். வேலை செய்யாதுன்னு முழுசும் தெரிஞ்சும் நான் சாப்பிடும் போது இன்னொருத்தரைக் கூப்பிட்டு அந்த சரக்கை conference ரூமில இன்ஸ்டால் பண்ணச் சொல்லிட்டார்.

சரியா 3 மணிக்கு conference ரூம் போனேன். எல்லா தலைகளும் உட்கார்ந்திருக்கு. technician வந்து இன்ஸ்டால் பண்றார். அவருக்கும் நம்பிக்கை இல்லை, எனக்கும் இல்லை. காலையிலிருந்து பட்ட அல்லல்களை இருவரும் சிரிச்சிக்கிட்டே பெருசுகங்கக் கிட்ட சொன்னேன். என் மேனேஜர் முகத்தில செம கவலை படர்ந்த ரேகை பளிச்சுன்னு தெரியுது. என்ன பிரயோஜனம். படிப்பு experience இருந்தும் சரக்கு வேலை செய்யலைன்னா வீட்டுலப் போய் சரக்கடிக்க வேண்டியது தான். டேச்னிசியன் இனி உன் பாடுன்னு போயிட்டான்.

எல்லோர் முகமும் என் மேல் இருக்க ஒவ்வொன்னா ட்ரை பண்ணேன். failure .

ஒரு தலை எழுந்து போய் தன் machine செக் பண்ணி விட்டு வேலை செய்யுதேன்னார். நம்ப முடியல. வேற ஒரு டாகுமென்ட் எடுத்து டெஸ்ட் பண்ணேன். எல்லாம் வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சு.

ஒன்னும் புரியல. எனது டெமோ க்கு ஒதுக்கிய நேரம் வெறும் 3 நிமிஷம். ஆனால் இருபது நிமிஷம் வரை நானும் தொடர அவர்களும் விடலை. Success .

என்ன காரணம் தெரியுமா?

காலையிலிருந்து நாங்க முட்டி மோதியது, எல்லோருக்கும் புதுசா வந்த கம்ப்யூட்டர், விண்டோஸ் 7 64 பிட் ல.

சரக்கு வேலை செய்த இரண்டு கம்ப்யூட்டர் ம் விண்டோஸ் XP 32 பிட்.
சரக்குக்குத் தேவையான plugin 32 பிட்.

இன்னியோட முடிஞ்சிது, செம அவமானம்னு நினைச்சேன். நடந்தது வேற.

வெளிய வந்து பிளஸ் ஓபன் பண்ணா வானம்பாடிகள் பாலா சார் ன் தன் பையனுக்குத் தாளிச்சுக் கொடுத்த விண்டோஸ் 7 64 பிட் பிளஸ். சத்தமா சிரிச்சிட்டேன். இத எழுதத் தூண்டியது இது.

Disci : post dedicated to Srinath Balaji.

Monday, May 21, 2012

கருப்பு பணம்

கருப்பு பணம்

கறுப்புப் பணம் என்று எல்லோரும் எதைச் சொல்றோம்னு அனைவருக்கும் தெரியும். 60 ஆண்டுகளாக வெளிய போன பணம் கணக்கிலடங்கா. இப்போ 140 பில்லியன் மட்டும் சொல்றாங்க.

வெளிநாட்டு வங்கிகள், அந்த நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு சுழற்சிக்கு உபயோகப் படுத்துது. அதையே உலக வங்கிகள் மூலம் பிற நாடுகளுக்கு கடனாகக் கொடுக்கலாம். அதன் பலனும் அவர்களுக்கே.

இடைப்பட்ட நாட்களில் அந்நிய வங்கியில் செலுத்திய பணத்திற்கு சரியான வாரிசு உரிமை கொடுக்காமல், கொடுக்க முடியாமல் போனால் அதன் பலனும், உரிமை முற்றிலும் வெளிநாடுகளுக்கே.

திருப்பிக் கொண்டு வர பாராளுமண்டபத்தில் எழுப்ப படும் கேள்விகள் எதுவும் திரும்பி வர ஏதுவாக இல்லை. குற்றவாளிக் கூண்டில் நிற்கப் படுத்துவதற்க்கான செயல்களாகவே இருக்கு. எவனும் ஒரு பைசா கொண்டு வந்து மாட்டிக்க மாட்டான்.

சிறு திருத்தங்கள் செய்து சட்ட உதவியுடன் குறைந்த அளவாவது கொண்டு வர முடியும். 10 அல்லது 15 சதவீத வரி மூன்று ஆண்டுகளுக்குள் கட்ட அனுமதிக்கலாம். எந்த ஒரு பழி வாங்கலும் இருக்காது என்று சிறிது உத்திரவாதம் கொடுத்தால், இன்று உள்ள ஐரோப் அமெரிக்க பொருளாதார நெருக்கடியில் மாட்டியுள்ளவர்கள் சிறிது அளவாவது கறுப்புப் பணம் இந்தியா திரும்ப கொண்டு வரவாய்ப்பு இருக்கு.

கொண்டு போனவன் வசதி உள்ளவன். திருப்பிக் கொண்டு வந்து சும்மா வைக்க மாட்டான். நல்ல முதலீடு செய்ய வாய்ப்பு இருக்கு.

கறுப்புப் பணம் கருப்பு நிறத்திலிருந்து வெள்ளையா மாறினா கொண்டு போனவனும் பயனடைவான். இந்திய மக்களும் பயனடையலாம்.

கருப்பு கலர் பணம் கொஞ்சம் வெளுக்கட்டும்.

டிஸ்கி:எங்கிட்ட இல்லைங்க.


.

Saturday, May 19, 2012

நினைவலைகள் 1

அஸ்ஸாம்ல முன்னெல்லாம் ரயில்வே ஸ்டேஷன் போனா தான் ரயில் விவரம் தெரியும். போன் பண்ணா எடுக்க மாட்டாங்க. நேர்ல போனா என்குயரி கவுன்ட்டர் முன்ன பெரிய queue இருக்கும்.

அண்ணே ! வண்டி எப்போ வரும்?

அதோ அங்க எழுதியிருக்குல்ல.

ஆமாண்ணே! அதே தான் நாலு மணி நேரமாப் பார்க்கிறோம்.

வந்துரும். வரணும்.

வந்தா சரியான நேரத்துக்கு எடுத்துருவியலா?

அது பக்கத்துலையே எழுதியிருக்குது பார்.

இப்ப போன் பண்ணி கேட்டு சொல்லு அண்ணே  !

எலேய் வரும் போது வரும். நீ நவுரு. என்குயரி கவுன்ட்டர்ல ஒரு கேள்வி மேல கேட்கக்கூடாது போ! மறுபடியும் வரிசை பின்னாடி போய் நில்லு.

இருண்ணே! அடுத்த ஆளுக்கு என்ன பதில் வருதுன்னு பார்க்கிறேன்.

எலேய்! அவனும் இதத் தான் கேட்பான், நானும் இதே தான் சொல்லனும்ல. போய் சோலியப் பாரு.

(பக்கத்தில உள்ள சக ஊழியரிடம் திரும்பி இன்னிக்கு வேலை ரொம்ப ஜாஸ்திங்க. ஒரு வெத்திலை, டீ சாப்பிட்டு வரேன் !)

Friday, May 18, 2012

அளந்து பேசு

மூணாவது படிக்கும் பையனுக்கு மூணு நாளா வருடக் கடைசிப் பரீட்சை நடக்குது. மூணு நாளா வீட்டுல டிவி பார்க்கிரதத் தவிர வேறு ஒன்னும் செய்ய மாட்டேங்கிறான். வீட்டு அம்மிணியும் சொல்லிப் பார்த்துட்டு ஒன்னும் நடக்கல. பையன் துளி கூட அசராமா, பரீட்சைக்கு முன் ராத்திரியில நல்லா எங்க டீச்சர் தூங்கச் சொல்லியிருக்காங்கன்னு சொல்லிட்டு, குட் நைட் டாட் சொல்லிட்டு ஐயா படுத்துருவார்.

ஆபீஸ் போனா மேனேஜர் அவர் பையன் பரீட்சைப் பத்தி கவலையில ஒரே புலம்பல். இத்தனைக்கும் அவர் பையன் படிப்பது நாலாவது. முதல் இரண்டு நாள் பரீட்சைக்கு அவர் மனைவியும் இன்னிக்கு அவரும் லீவ் போட்டு விட்டு பையனுக்கு ஊக்கம் கொடுக்கப் பையனோடு ஸ்கூல் ல உட்கார்ந்திருக்காங்க.

நம்ம நிலைமைய அவிங்க கிட்ட சொல்லிக்க முடியாது. அப்பா, 140 கேள்விகள்ல எழுபது சரியாச் சொன்னாப் போதும், இட்ஸ் ஓகே ன்ட்டுப் போயிடறான். ஒன்னும் சொல்ல முடியல. சரி வா, பரீட்சை முடிந்ததுக்குப் போய் நல்லா சாப்பிட்டு வந்தோம்.

வீடு திரும்பிய வுடன் நேரா டிவி முன்ன. சமயம் பார்த்து டிவி education ப்ரோக்ராம்ல 'ஹைபோதேசிஸ்' ன்னு ஒரு வார்த்தை வந்தது. புள்ள எப்பிடி தானிருக்குதுன்னு தெரிஞ்சிக்க, ஹைபோதேசிஸ் நா என்னன்னு கேட்டேன். 'இட் இஸ் அன் ஐடியா தட் யு கேன் டெஸ்ட்' ன்னு ஐயா கூலா சொல்றான். அமைதியா இடத்த காலிப் பண்ணிட்டு வந்திட்டேன். நம்மள கேள்வி கேட்டா இவ்வளவு சுலவமா பதில் சொல்லத் தெரியாதே நமக்கு.

Saturday, May 12, 2012

நாடோடிகள்

நாடோடிகள்

சில மணித்துளி முன் வானம்பாடிகள் பாலா சார் எழுதிய கேரக்டர் கண்னீப்பா படிக்கும் போது நான் சின்ன வயசில பார்த்த நாடோடி கூட்டங்கள் ஞாபகத்துக்கு வருது.

நாங்கள் வசித்தது ஒரு கம்பனியின் colony குடியிருப்பில். காலனி வெளியே ரோட்டிற்கு மறுபுறம் ரயில்வே நிலம். அதன் ஆக்கிரமிப்பை தடுப்பதற்காக பெரிய தடுப்பு இரும்பில் போட்டிருப்பார்கள். அதன் நடுவில் ஒரு நுழைவு ஏற்படுத்திக்கொண்டு தண்டவாளத்தை ஒட்டி கும்பலாக சில மாதங்கள் வாழ்வார்கள்.

நாங்கள் அவர்களை லம்பாடிகள், நாடோடிகள் என்றும், குறவன் குறத்தி என்றும் வாய்க்கு வந்ததை வைத்து அழைத்துக் கொள்வோம். வெவ்வேறு குழுக்கள் வரும். சில மாதங்களில் காணாமல் போய்விடுவார்கள்.

ரயில்வே நிலத்தில தங்கியிருப்பதாலும், பெரிய கம்பனியின் குடியிருப்பிற்கு எதிரில் இருப்பதாலும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவர்களைத் துரத்தப் பார்ப்பார்கள். எங்களுக்கோ அவர்களது வருகை ஒரு காட்சிப் பொருள். பெரிய பொழுது போக்கு. பள்ளி முடிந்ததும் நண்பர்களுடன் அவர்களை வேடிக்கைப் பார்க்க காலனி வெளியே ரோட்டோரம் நிப்போம்.

அவர்களைப் பார்த்து எங்களுக்குள் உள்ள கற்பனையை மேலும் வளர்த்துக் கொள்வோம். எங்களில் ஒருத்தன் அவர்கள் உடும்பை பிடித்து கட்டியிருந்ததைப் பார்த்ததாகச் சொல்வான். அது எங்கள் கண்ணில் படுதா என்று தேடுவோம்.

அந்த சமயங்களில் கரும்குரங்கு லேகியம் பற்றி பரவலாக பேச்சு இருந்தது. நாடோடி குழுக்களிடம் எப்பிடியும் ஒரு குரங்கு வைத்திருப்பார்கள். அதை கயிற்றில் ஒரு இரும்பு கம்பியில் கட்டியிருப்பார்கள். எங்களுக்கு அதுவும் ஒரு பெரிய வேடிக்கை காட்சிப் பொருள்.

உடன்இருந்த ஒருத்தன் இன்னிக்கு இந்த குரங்கு காலிடா, எப்பிடிரா லேகியம் பண்றாங்கன்னு பார்க்கனும்பான். அவர்களைப் பற்றிய எப்போதும் ஒரு தவறான புரளியே எங்களிடம் அதிகம் பரவியிருந்தது. என்றுமே ஒரு சரியான தகவல் இருந்தது இல்லை. அதைப் பற்றி கவலைப் பட்டதில்லை. எங்களைப் பொறுத்த வரை புரளி பேச வாயில் அவல் கிடைத்த வாய்ப்பு தான்.

ஒவ்வொரு குழுக்களின் உடை பேச்சு கொஞ்சம் வித்தியாசமாவே இருக்கும். ஒரு தடவை வந்த குழு வடஇந்தியாவில இருந்து வந்த மாதிரி இருந்தது. அவர்கள் பேசியது ஒன்று கூட புரியவில்லை. ஒரு நாள் மாலை அவர்களை தண்டவாளம் அருகில் போய் தைரியமாக அருகில் போய் பார்த்தோம். எதை எதையோ சாப்பிடுவார்கள் என்று கதை கட்டிக் கொண்டிருந்த எங்களுக்கு, அவர்கள் சப்பாத்தி மாவை கையாலேயே வட்டமாகத் தட்டி நேராகவே நெருப்பில் காட்டி சுட்டதைப் பார்த்து அசந்து விட்டோம். அதுவும் ஒவ்வொரு சப்பாத்தியும் நம் வீட்டில் சுடுவதை விட இரண்டு மூணு மடங்கு பெரிதாகவும் தடுமனாகவும் இருந்தது. எங்களுக்கு மிகப் பெரிய ஆச்சரியம். நாங்கள் அவர்களைப் பார்ப்பதைப் பார்த்து எங்களைத் துரத்தி விட்டனர்.

ஊர்ப் பெரிசுங்களுக்கோ அவர்களைக் கண்டால் பயம். திருடு போயிரும், ரொம்ப சாக்கிரதையாக இருக்கணும்னு அவர்கள் பேசிக்கும் போது, சிறியவர்களான எங்களுக்கு அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் ஏற்படாமல், ஒரு அச்சம், மடமை, புரளி பேசுவதாகவே முடிந்து விட்டது.

ஊர் பெரிசு, ரயில்வே, போலீஸ், சுற்றியிருந்த கடையிருப்புகள் எல்லாம் அவர்களைத் துரத்துவதிலேயே குறியாக இருந்ததால், எங்கள் பொழுது போக்கு, கற்பனை வளங்களை பெருக்குவதற்கு, நாங்கள் பார்க்க நினைத்த கீரி, உடும்பு, நரி, கருங்குரங்கு எல்லாம் கற்பனை உருவகமாகவே இருந்து விட்டது.

Sunday, April 29, 2012

அரச இலை

காலை நேரத்து இளம் வெயிலின் சூடு முகத்தில அடிக்கும் போது ஒரு வித ரசிப்போடு கண்ணை சுருக்கி கிட்டு அரச மரத்தடியில வந்து உட்காரும் போது எப்போதும் ஒரு தனி சுகமா இருக்கும். இன்னிக்கும் அவ்வாறே பல் துலக்கி கிட்டே வந்து அரச மரத்தடியில் வந்து உட்கார்ந்தேன்.

பக்கத்தில் ஒரு சின்ன மெதுவான அசைவோடு ராசக்கா என் தலையை கோதி விட்டுகிட்டு வந்து உட்கார்ந்துச்சு. வெயிலின் ஒளி கண்ணில் தெறிக்க மெதுவா ராசக்காவை ஒரு சாரைப் பார்வை பார்த்தேன்.

அக்கா ஒரு முறை என்னப் பார்த்து ஒரு புன்முறுவலிட்டுவிட்டு, தலை குனியும் போது அதன் முகம் கொஞ்சமா மாறுவதை உணர்ந்தேன். மறுபடியும் தலையைத் தூக்கி ஒரு அழுத்தத்துடன் 'என்ர வீட்டுக்குப் போய் வரலாம், வரையா?' என்ருச்சு.

எப்போதும் என்னை விட்டு விட்டு கடைக்கும் சந்தைக்கும் நடவுக்கும் போகும் அக்கா, அதன் பின்ன துரத்திகிட்டு ஓடும் எனக்கு, அக்கா உண்மையாத்தான் சொல்லுதான்னு இருந்துச்சு.

'சரி. பத்து நிமிஷத்துல கிளம்புன்னு' சொல்லிட்டு எழுந்திருச்சுப் போயிடுச்சு. யக்காவ் ன்னு கூப்பிடரத்துக்குள்ள போயிடுச்சு.

மாமனை கட்டிக் கிட்டதப்புரம் என்னிக்குமே தன் வீட்டைப் பத்தி ஒன்னும் சொல்லாது. மாமன் இல்லாம ஊருக்கோ ஊர் திருவிழாவுக்கோப் போவாது. இத்தனைக்கும் ராசக்கா வூடு அரை மணி நேரப் பஸ் பயணம் தான். மாமன்ட்ட அங்கப் போவணும்னு என்னைக்குமே கேட்காது. மாமன் ஏதாவது சொல்ல வந்தாலும் ஒன்னும் சொல்லாது.

இன்னிக்கு என்ன ஆயிருச்சுன்னு ஒன்னும் புரியாம, சரி, எங்க! அக்கா விட்டு விட்டுப் போயிருமோன்னு, துள்ளி குதிச்சு கிளம்பிட்டேன்.

வூட்டுக்குப் போய் அவசர அவசரமா கிளம்பி ராசக்கா வூட்டுக்குப் போறேன்னு அப்பனாத்த கிட்ட சொல்லி வெளியே வரும் போது, ஆத்தா சிரிச்சி கிட்டு வந்து இந்த கேப்பை கூழ ஊத்திக்கிட்டுப் போடா ரேன்னுச்சு.

கொஞ்சமா குடிச்சி வைச்சிட்டு வந்தா, அக்கா தயாராயி அரச மரத்தடி கிட்ட நின்னு கிட்டிருந்துச்சு.

எப்ப ரெடியாச்சு, எப்ப மாமன் கிட்ட பேசிச்சுன்னு கேட்கத் தோணிச்சு. கேட்டா அந்த காலை வெயிலின் இளஞ்சுவாசம் அக்கா மூஞ்சியிலிருந்து மாறிருமொன்னு தயக்கத்தோடு, அக்கா தெரிஞ்சிகிடாத மாதிரி  எப்போதும் போல ஒரு துள்ளல் குதியோட நடை போட்டேன். ராசக்கா இளஞ்சிரிப்போடு பின்ன வந்திச்சு.

பஸ் ஸ்டாண்ட் போற வரை சும்மா இருக்க முடியல. 'அக்கா! உன் ஆத்தாவைப் பார்க்கப் போறோமா' ன்னேன். ஒன்னும் பதில் வரலை. 'இன்னிக்கே திரும்பிருவோமா?' கேட்டதுக்கு, 'ஆமாம்லே!' என்ர ஒத்த வரி பதில் தான்.

பஸ்ல அக்கா பக்கத்தில உட்காரும் போது அக்கா முகத்தில ஒரு குதுகூலமான முகத்தோட பளபளப்பு தெரிஞ்சுது. 'என்னாலே! என்ன இப்பிடி பாக்கே!' ன்னுச்சு. ஒரு அசட்டுச் சிரிப்போடு சன்னல் வழியே வேகமா நவரும் வேப்பம் மரங்களைப் பார்க்க ஆரம்பிச்சேன்.

ராசக்கா ஊரு வந்தவுடனே அது வேகமா நட கட்டிச்சு. அக்கா ஸ்பீடுக்கு ஈடு கொடுக்க முடியாம கூட ஓடவும் நடக்கவும் செய்ய கால் நோவ ஆரம்பிச்சு. 'யக்காவ்! உன்ர ஆத்தாவப் பார்க்கிறப் போற உன்ர ஸ்பீட் முடியலக்காவ்!' ன்னேன். சிரிச்சிகிட்டே திரும்பி 'உன்ர வயசில நான் நடப்பேன்னு நினைக்கிற மம்முட்டிப் பயலே'ன்னுச்சு.

ராசக்கா போற ஸ்பீடப் பிடிக்கிறதுக்குள்ள அக்கா ஊர் ஆத்தங்கரைப் போயி தான் நின்னுச்சு.

'யக்காவ்! உன்ர வீட்டுக்குப் போவாம இங்க என்னப் பண்றே!' கேட்க்கிரதக் கூட கண்டுக்காம ஒரு சின்னப் புள்ள கணக்கா, அந்த அரசமரத்தை சுத்துவதும், திட்டு மேல ஏறுவதும், உட்கார்ந்து கால ஆட்டுவதும், ஆத்துக்குள்ள இறங்கி முங்கி எழுவதுமா பண்றதப் பார்த்த யக்காவ் என்னோட சிறுசா இருக்கும் போல என்றிருந்திச்சு.

கரையேறி அரச இலையை எடுத்து சேர்த்து கண்ணுக்கு கண்ணாடி பண்ணிக் கொடுத்தும் அதுவும் எடுத்து ஒன்னு மாட்டிக்கிட்டு என்னோட விளையாட ஆரம்பிருச்சு.

கொஞ்ச நேரத்தில வீட்டுக்கு கூட்டிப் போவும்னு நினைச்ச எனக்கு, ராசக்கா திரும்பி பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடையைக் கட்டுரதப் பார்த்து ஒன்னும் புரியல.

'அக்காவ்! வீட்டுக்கு ...' சொல்வதைக் கூட ஒரு சிரிப்போட பார்த்து 'வா! வூட்டுக்குப் போலாம்னு' பஸ் ஏறிருச்சு.

பஸ்சில ஏறி பக்கத்தில உட்க்கார்ந்து வுடனிருந்து பார்த்து கிட்டே வரேன், ராசக்கா முகத்தில ஒரு சந்தோசம், தானே சிரிச்சு கிட்டு, பஸ் சன்னல் வெளியே கைய ஆட்டிக் கிட்டே வந்துச்சு.

'அக்கா! ஒன்னும் புரியல. உன் ஊருக்கு எதுக்கு வந்த, ஊட்டுக்குப் போவாம ஆத்தங்கரையோட திரும்பற! பசிக்குது எனக்கு! ' ன்னு சொல்வது கூடப் புரியாம, 'உன்னாலத்தான்!' ன்னுச்சு.

ஒன்னும் புரியல. தலை நோவ ஆரம்பிச்சிருச்சு!

'என்னாலா! எதுக்குன்னேன்!'.

'ஏலே! காலையில எழுந்திருச்சு என்ன பண்ணுவே!'ன்னுச்சு.

ஒரு சலிப்போட 'என்ன! ஆத்தா கையில திணிக்கிற பல் துலக்கிற குச்சியோட அரச மரத்தடிக்கு வந்து குந்தறது தான், வேறென்ன!'.

ராசக்கா 'அதான்' ன்னு சொல்லி கையில இருந்த இலையைத் தூக்கி காமிச்சுது.

கையில 'அரச இலை'.

ஆச்சரியமும் சிரிப்பும் சேர்ந்து வந்துச்சு. ரெண்டு பெரும் சத்தமா சிரிச்சுக் கிட்டோம், பஸ்சில இருக்கிறவங்க பார்ப்பதைக் கூட கண்டுக்காம.

Sunday, March 11, 2012

வலையூர் பட்டி கணக்கு

செல்வம் மாமன் தோள் மேல கை போட்டு ஒரு வாஞ்சையோட இழுத்து கிட்டுப் போனாலும், தன் மேல் விழுந்த கையின் வலுமை கொஞ்சம் குப்பண்ணன் மனசை இறுக்கி பிடிச்ச மாதிரியே இருந்தது.

ஊரை பார்க்க வந்தேன் மாமான்னு  சொன்னாலும், அது இருக்கட்டும் மாப்பிள்ள, நீங்க வாங்கன்னு வீட்டுக்கே இழுத்துக் கிட்டுப் போயிருச்சு.

அப்பன் கிட்ட சொல்லாம வந்ததுக்கு வசவு வேறு இருக்குன்னு நினைக்கும் போது குப்பண்ணனுக்கு ஒரு பேச்சும் வரமாட்டீங்குது.

குப்பண்ணன் மெதுவா செல்வம் மாமன் கைய நவுத்துனதும், 'பயப்படாத மாப்ள , அப்பன் கிட்ட சொல்லலைன்னு' மாமன் மெதுவா சொல்ல, மாமன் இப்பிடி மனசைப் படிக்குதேன்னு குப்பண்ணனுக்கு இன்னும் பயம் சேர்ந்து ஒட்டிகிச்சு.

விட்டா ஓடுவதர்க்கே இருந்த குப்பண்ணனுக்கு, அல்லியாம்மா மொவத்தைப்  பார்க்க தைரியம் இல்லாம, மாமன் கிட்ட சொல்லி கிட்டு வயல்வெளி  நோக்கி  நட கட்டிச்சு.

குப்பண்ணனுக்கு மனசு சரியில்லைன்னாலும் சந்தோசமாயிருந்தாலும் ஒத்தையடி வயல் பாதையிலோ ஆத்தங்கரை வோரமா நடக்கத்தான் விரும்பும்.

நடவுக்கு வந்த புள்ளைங்க தன்னைப் பார்த்து சிரிப்பதாகவே தோன்றியதால், எங்கயும் நிக்காம மனசு ஊரை பார்க்கக்  கிளம்பிடுச்சு.

இத்தனையும் மத்தவங்க மூலமே கேள்விப் பட்ட அல்லியம்மா, மாமன் தன்னை ஒன்னும் பார்க்காமலேயே ஊர் திரும்பரதைப் பார்த்து ஒரு அழுகாச்சியா அழுவ, வந்ததே கோவம் அதுக்கு.

'எந்த சிறுக்கி மவன் என் மாமனை கல்லெடுத்து அடிச்சுதுன்னு' ஒரு கத்து கத்திகிட்டே வயல் பக்கம் ஓடிச்சு. எதிர கர்ணம் வீட்டு கணக்கின் மவன் சுந்தரவதனம் வர, மாமன் எங்கேன்னு கேப்போம்ன்னு அவனை நிறுத்திச்சு.

அரண்டு போன சின்ன கணக்கு மொவமே  மாறிருச்சு. அல்லியம்மா கோவம் அம்புட்டும் சுந்தரவதனம் மேல சந்தேகத்தோட திரும்பிருச்சு.

'எலேய்! வலையூர் பட்டி கணக்கு! வாரா இங்கே'ன்னு இழுக்க, பயந்து போன சுந்தரவதனம், 'யக்காவ், தெரியாம கல்லை இட்டுபுட்டேன்'னு சொல்லிட்டு ஓட ஆரம்பிச்சவனை துரத்திகிட்டே ஓட ஓட, சுத்து வட்டம் அலப்பறை பண்ணுவதை கூட கண்டுக்காம அல்லியம்மா ஓடிச்சு.

நடவுக்கு வந்த புள்ளைங்க சத்தமா கூவி சிரிக்க, சிரிக்க, எதிர வந்த ஆளை மோதுறது கூட தெரியாம ஓடிச்சு. திடீர்ன்னு நின்ன சுந்தரவதனம், 'யக்காவ், அதான் உன்ர மாமன் 'ன்னு சொல்லிட்டு ஓடிட்டான்.

எலேய்! வலையூர் பட்டி கணக்கு! வைச்சுகறேண்டா உனக்கு ஒரு நாளுன்னு, சொல்லிப்புட்டு, தன் மாமன் நினவு வர கோவமா  மாமனை நோக்கி திரும்பிச்சு.

குப்பண்ணன்க்கு தான் கட்டிக்கிரப் புள்ளையைப் பார்த்து  ஒரு துளி  என்ன சொல்லன்னு திகிலோட கலந்த ஆச்சரியம்.

 'என்னைப் பார்க்கத்தானே வந்தே நீ'ன்னு கேட்கும் அல்லியம்மாக்கு, மறுபடியும் ஊரைப் பார்க்கத்தான்னு சொன்னா  இங்கயே கொன்னுபுடப்  போவுதுன்னு நினைப்பு வர, எதையோ சொல்லிப் புட்டு நடையை கட்டிருச்சு.

அல்லியம்மா மனசு நோவ ஆரம்பிக்க, அழுகாச்சிய அடக்கிகிட்டே இத்தனைக்கும் காரணம் அந்த சிறுக்கி மவன் வலையூர் பட்டி கணக்கை வைச்சுக்கிறேன் ஒரு நாளுன்னு கருவிச்சு.

நடவு புள்ளைங்களைப் பார்த்து ஒரு முறை முறைச்சுக்கிட்டே போங்கடி போக்கத்தவகன்னு  வைஞ்சுகிட்டே வூட்ட நோக்கி நடக்க ஆரம்பிச்சுது.

1, 2.

Monday, March 5, 2012

இதயம் பேசுகிறது

கருப்பு வெள்ளை டிவி யும் தூர்தர்ஷன் மட்டுமே கொடிகட்டிட்டிருந்த காலம். எத்தனை நாள் தான் வயலும் வாழ்வும் பார்க்கிறது. அதனால எப்போதும் வீட்டு வெளியே விளையாட்டும், வீட்டுக்குள்ள சிறுகதைகளும், குறுநாவல்களும் படிச்சு அலசிக்கிட்டிருந்த காலம்.

பத்தாவது படிக்கும் முன்னே யவன ராணி, கடல் புறா, பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் முடிச்சிட்டு, எவன் முதல்ல எந்த பாகத்தை படிச்சு முடிச்சான்னு அலட்டுவதும் ஒரு த்ரில்லு. கொஞ்சம் மாறுதலாப் படிக்கணும்னு இந்துமதி, சிவசங்கரி, வாஸந்தி, ரமணி சந்திரன், ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் எல்லாம் படிச்சிருவோம். எவன் அதிகமா படிச்சான்னு ஒரு போட்டி இருக்கும்.

என் நண்பன் கொஞ்சம் அறிவு பூர்வமாவே எதையும் செய்வான். அப்ப சுஜாதா படிப்பதெல்லாம் மாடர்ன் trend . என் நண்பன் முதல்ல இருப்பான். இதயம் பேசுகிறது மணியன். லேனா தமிழ்வாணன் பற்றியெல்லாம் பேசக் கூடியவன்.

எப்போதும் பள்ளி மதிய இடைவேளையில ஸ்கூல் ஒட்டி கடை வீதி பஸ் ஸ்டான்ட் எல்லாம் சுற்றி வருவோம். ஒரு நாள் ஒரு ஹோட்டல் வாசலில் ஒரு டூர் பஸ் 'இதயம் பேசுகிறது சுற்றுலா பேருந்து' என்ற banner உடன் நின்று கொண்டிருந்தது. இருவரும் ஆவலுடன் அதை நோக்கி நடந்தோம்.

பஸ்சின் பின் ஒரு பதினைஞ்சு அடி தூரத்தில் நாங்க நெருங்க வரும் போது ஒரு பெண்மணி பஸ்சிலிருந்து தலையை நீட்ட, என் நண்பன் 'டேய்! இந்துமதி' டான்னான். அவங்க எப்பிடிரா இதயம் பேசுகிறது பஸ்ல, கண்டிப்பா இருக்காதுன்னு நான் மறுக்க, என்ன பெட் என்றான். கையில பத்து பைசா மேல வைச்சிருக்காத எனக்கு கம்முனு இருக்கத் தோணாம, பத்து ரூவாடான்னேன். ரொம்பப் பெரிய அமௌன்ட் எனக்கு.

உறுதி செய்ய அவங்க உட்கார்ந்திருந்த ஜன்னலருகில் போனோம். என் அம்மா வயது இருக்கும் அவங்களுக்கு. என்னை மட்டும் பக்கத்தில கூப்பிட்டாங்க. ஒரே தயக்கம். எவ்வளவு பெட் கட்டின என்றாங்க. ஒன்னும் சொல்லலை நான். ஜோப்புல எவ்வளவு இருக்கு. அதை உன் friend கிட்ட கொடுன்னாங்க. எனக்கு ஆடிப் போயிருச்சு. வீடு திரும்ப பஸ்க்கு என்ன பண்ணுவது. ஏழு கிலோ மீட்டர் நடக்கணும். கால் தானாவே பின்ன போக ஆரம்பிருச்சு. பேச்சு சுத்தமா போயிடுச்சு எனக்கு.

உனக்கு மட்டும் ஆட்டோகிராப் தரேன்னு என் friend கிட்ட அவங்க சொல்ல, டேய் சீக்கிரம் ஒரு பேப்பர் பென்சில் கொடுறாங்கிறான், எங்கப் போவது. எனக்கோ அவமானத்திலும் பயத்திலும் கண்ணில நீர் கோர்க்குது. கடைக்காரன் கிட்ட கேட்டா திட்டுவான். தரையில கிடந்த பேப்பரை கொடுத்தேன் அவனிடம். மிக அழகான கையெழுத்திட்டு அவனுக்கு கொடுத்தாங்க.

என் காதில மணியன், தமிழ்வாணன் எல்லாம் கூட வந்திருக்கலாண்டான்னான். எப்பிடிரா அவ்வளவு பெரிய ஆளெல்லாம் இந்த மாதிரி டூர் வருவாரு. MS உதயமூர்த்தி வேணா இருக்கலாண்டான்னேன். எப்பிடி தான் அந்த அம்மா காதில விழுந்துதோ தெரியல, என் friend a மறுபடியும் கூப்பிட்டு, ஹோட்டல் உள்ள சாப்பிடராங்கப், போய்ப் பாருன்னாங்க. கூடவே சிவசங்கரியும் வந்திருக்காங்க என்று சொன்னாங்க.

என்னைப் பார்த்து, முதல்ல அந்தப் பத்து ரூவாயை அவனுக்கு கொடுக்கிரதப் பாருன்னாங்க. இனியும் நான் அங்கு நிப்பேன்னு நினைக்கிறீங்க. அவனுக்கும் அவர்களைப் பார்க்கிற சான்ஸ் போச்சு. பிடிறா மவனே ஓட்டம். நகர்ந்திட்டேன்.

இருபந்தைந்து வருஷம் கழிச்சு இந்த விஷயத்தை நான் நினைவு படுத்த, ரொம்ப நல்லா ஞாபகம் இருக்குடா. அந்த ஆட்டோகிராப் தானில்லைன்னான்.

பல பிரபலங்களை ஒருங்கப் பார்க்கிற சான்ஸ் என்னாலப் போயிடுச்சு. சின்ன வயசு சொலவடையினால, வடை போச்சு.

என்னோட இதயம் தான் இன்னும் பேசுகிறது.

Sunday, March 4, 2012

நிறத்தின் மாற்றம்

சமீபத்தில இது மாதிரி இரண்டு தடவ ஆயிட்டுது. பையனை வயலின் கிளாஸ்ல் விட்டுவிட்டு வரும் போது நல்ல காபி வாங்கிட்டு திரும்பலாம்னு காபி கடை போனேன். நான் வசிக்கும் ஊரில் எந்த கடைக்குப் போனாலும் ஒரு வரவேற்பு அல்லது ஒரு புன்முறுவலுடன் how கேன் i ஹெல்ப் யு என்பார்கள்.

இன்று வழிபாடு முடிஞ்சு திரும்பும் மக்கள் அதே கடையில் படையெடுத்து நின்றிருந்தனர். என் முறை வந்து காபி வாங்கி வெளிய வரும் போது கதவை அடைத்து நின்றிருந்த பெண்மணி உடம்பை அசைத்து வழி விட்டனர். பக்கத்தில் நின்றிருந்த அவள் கணவன், என்னை கடைக்கண்ணில் பார்த்துக் கொண்டே நக்கலாக, 'popular ஷாப், இஸ் இட் நாட்?' என்று அவளிடம் கூறினான். நான் ஒன்றும் பதில் சொல்லாமல் வழி விட்டதற்கு நன்றி சொல்லி விட்டு வந்து விட்டேன்.

சில மாதம் முன் இதே மாதிரி பையனை வகுப்பில் விட்டுவிட்டு காபி கடைக்குப் போய் நின்றேன். பணம் வாங்கும் பெண்ணோ அல்லது கலந்து கொடுக்கும் பெண்ணோ துளி கூட ஏறுடுத்துப் பார்க்கல, ஏதும் வரவேற்பு இல்லை, மற்றவர்களை மட்டும் கவனிப்பதில் ரொம்ப மும்முரமாக இருந்தனர். ஒன்றும் பேசாமல் வெளியேறி விட்டேன்.

அங்கு நிற்கும் போது மதியாதோர் வாசல் மிதிக்க வேண்டாம்னு மிகவும் தோன்றியதால், அருகில் கடை இருந்தாலும் போவதைத் தவிர்த்து வருகிறேன். ஆனால் உங்களிடம் பொல்லாங்கு சொல்லாமல் இருக்க முடியவில்லை.

பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கவும் நற்குணங்களையும் பெற மனமுவந்து சென்று வழிபடுகிறோம். முடிந்து வெளி வரும் போது நிறத்தின் மாற்றம் நம்மை பழையபடி செய்யத் தூண்டுகிறதா?

Friday, March 2, 2012

மாற்றம்

 மாற்றம்
 
நம்ம அன்றாட வாழ்க்கையில திடீர்ன்னு ஒரு மாற்றம் வருதுன்னு வைச்சுக்குங்க. அதற்கு நாம முன்கூட்டியே தயாராயிட்டோம் என்றால் அது நமக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுக்காது. மாற்றம் சொல்லிக்கிட்டா வரும்.
 
ஆறு மாசத்துக்கு ஒரு முறை வந்தா ஒரு பல்லைக் கடிச்சிகிட்டே அதற்கு ஏற்ப தேவைகளை ஏற்பாடு செய்து கொள்ளலாம். ஆனால் வரும் மாற்றம் நமக்கு அதிர்ச்சி அளிக்ககூடிய வகையில் இருந்தால், எப்பிடி மீண்டு வருவது. சிலருக்கு depression வரும். சிலருக்கு அலுவலகத்தில் பகை வரும். வீட்டுல அமைதியின்மை வரும்.
 
உதாராணமா, அலுவலகத்தில நல்ல பதவியிலிருந்து அல்லது நல்ல காசு பார்க்கக் கூடிய இடத்திலிருந்து வெகு சுமாரான இடத்துக்கு மாத்திட்டாங்கன்னா என்ன பண்ணுவது. எத்தனை பேருக்கு இதை சமாளிக்க மன தைரியம் இருக்கு.
 
வழி இல்லையா? இருக்கு. கொஞ்சம் உட்கார்ந்து யோசிங்க. :-)
 
எங்கிருந்து உங்களை மாற்றியிருக்காங்க. என்ன தகராறு ஆயிருக்கு? இதை மேலும் பிரச்சனை பண்ணினா என்ன நடக்கும். அந்த தகராறில உங்க பக்கம் நியாயம் இருந்து நீங்க வெற்றி அடைஞ்சிட்டா, என்ன நடக்கும். திருப்பி அதே மக்களோட சேர்ந்து வேலை செய்யணும். பழையப் பகையை வைச்சு மறுபடியும் குடைச்சல் தரலாம். நிலைமை இன்னும் மோசமாகலாம்.
 
விடுங்க. இப்ப புதுசா வந்திருக்கிற இடத்தைப் பாருங்க.
 
இங்க நீங்க அதிக experience உள்ள ஆளா இருக்கலாம். அல்லது ஒரு பெரிய பாப்புலரான பதவியிலிருந்தோ அல்லது அதிக தொழில்நுட்பம் தெரிஞ்ச இடத்திலிருந்து வந்திருப்பதால புதிய இடத்தில் மதிப்பும் மரியாதையும் தர வாய்ப்பு உள்ளது. இங்கு பெரிய பதவி கிடைக்க அதிகம்  வாய்ப்பு உள்ளது.
 
அங்கு நீங்கள் பத்தில ஒருத்தர். இங்க நீங்க பத்தில முதல்வர். உங்களை மதித்து நடக்க புதிய இடத்தில் வாய்ப்பு அதிகம்.
 
பழைய இடத்துப் பகைமையை நினைத்து வருந்துவதினால், நமக்கு மன உளைச்சலும், அதனால் குடும்பத்தில் மாறுபட்டு நடக்க வாய்ப்பு உள்ளது.
 
பழைய ஆளுங்களோட மறுபடியும் மல்லுக்கு நின்னா புது  இடத்திலும் உங்களை கண்டு பயப்பட வாய்ப்பு உள்ளது. புது இடத்திலும் பெரிய பதவிக்கு  உங்கள எடுப்பதற்கோ அல்லது கூட வேலை செய்பவர்கள் உங்களோடு அணுகுவதற்கு, பேசுவதற்கோ பயப்பட மாட்டாங்களா? 
 
விட்டுத் தள்ளுங்க மக்கா. toilet பேப்பர் தொடைச்சி தூக்கி விட்டேறிஞ்சிட்டு வருவதில்லையா? திருப்பி அது நம்ம மேல ஒட்டாமப் பார்த்துக்கணும். இல்லையா  மக்கா.
 
மாற்றம் நம்ம வீழ்த்திடாம, நம்ம முன்னேற்றத்திற்கு உதவுவதற்கு மாற்றத்தை சாதகமாக மாற்றிக் கொள்ளுங்க. நம்மால முடியும். நம்ம கையிலத் தானிருக்கு.

Sunday, February 26, 2012

புரியாமப் புரியுது

அம்மா என்னை காலையில ஆட்டி எழுப்பும் போதே என்ர அப்பன் கருப்பட்டி காபியோட வெளியே நிப்பாரு. கண்ணத் துறக்கலாமா வேணாம்னு யோசிச்சு அசையும் போதே அம்மாவ்வோட கேப்பக் களியோட வாசம் இல்லாட்டி ராகிக் கஞ்சி வாசம் இழுத்து அணைக்கும்.

அம்மா இன்னையாவது இட்லி வைக்கலையான்னு லேசா குரல் விடுவேன். அடி சக்கை ன்னு குரலோ அல்லது பெரிய துரைமாரு புள்ளைன்னு நெனப்பு சத்தம் கொஞ்சம் பக்கத்துல வர மாதிரி இருந்துச்சுன்னா புடுறா சொக்கா ஓட்டம்னு இழுத்தெரிஞ்சு ஒரு ஓட்டம் புழனி பக்கம் ஓடிர வேண்டியது தான்.

கழனி மேட்டுல வேலை செய்ய இட்லி தோசை உதவாதுட போக்கத்தப் பயலேன்னு திட்டிக்கிட்டே அம்மா வந்து பல்ல விளக்குறாங்கும். அது கையில வேப்பன் குச்சி ஒன்னு ரெடியா நிக்கும். அத வாங்கி கையில வைச்சு கிட்டே, எப்பிடிரா நம்மஅப்பன் வேணும்னா மட்டும் அம்மா இட்லி வடை சுடுதுன்னு யோசிக்கையில அந்தக் குச்சி முதுக சொரியவாக் கொடுத்தேன் கண்ணுங்கும்.

அப்பன் என்னிக்குமே தனக்கு எதுவும் வேணும்ன்னு நேரச் சொல்லாது. களி திங்கும் போது அந்த அய்யண்ணன் கடை வழியாப் போனேன், இட்லி வடை வீச்சம் நம்ம தோட்டத்துக்கே வந்துருச்சுப் புள்ளங்கும். அம்மா ஒரு பார்வையோட உள்ளாரப் போய் சிரிச்சிக்கும். அடுத்த நாள் காலயில ராசக்காவை வைச்சு வடை சுட வைச்சிரும். அள்ளி வைச்சப் புருசனுக்கு ஆட்டவைச்சுப் படைக்குது பாரு உன்ர ஆத்தான்னு ராசக்கா சுட்டுக் கொடுக்கும்.

அப்பனும் ராசக்கா மாமனும் தோட்டத்துல இதச் சொல்லி சிரிச்சுக்கும். அப்பன் மாமன்கிட்ட எப்பவும் சொல்லுவாரு. எலேய் விளையாட்டுக்கு கூட பொஞ்சாதி மேல கையைத் தூக்கிராதரே, பொஞ்சாதியப் பகைச்சுகிட்டா நட்டம் உனக்குத்தாம்ல என்கும். மாமன் கேட்காத மாதிரி அங்கிட்டு எதோ சத்தம் வந்தம் மாதிரி நடிக்கும்.

ராசக்கா எந்த வேலையை செய்தாலும் ஒரு காரியத்தோட தெரிஞ்சுவைச்சு செய்யும். கவனமா செய்யும். ஆனால் மாமன் வந்தாலே அங்கிட்டு எல்லாமே மாறிரும். மாமன் அதக் கொண்டா இத செய்யுன்னு மிரட்டுவதும் உதைப்பதுமா இருக்கும். அக்கா ஒரு பிடிப்பில்லாமலே செய்யும். நான் மாமன் இல்லாத சமையமாத் தான் ராசக்கா வூட்டுப் பக்கம் தலைஎடுப்பேன், எங்க நம்மையும் சாத்திருமோன்னு. அக்கா புள்ள இல்லாம படர கஷ்டமும் சேர்த்துப் படும். எலேய்! உன்ர அப்பனாத்தவைப் பாருலே. ஒண்ணா இருக்க மாதிரியும் இல்லாம சேர்ந்தா மாதிரியும் இல்லாம பாசாங்காப் பழகிற மாதிரி நடிச்சு ஒட்டிகுதுங்க. என்ர நிலைமையைப் பாருலேங்கும்.

ராசக்கா சொல்றது புரியுதா இல்லையான்னு யோசிக்கத் தெரியாம, அக்கா தெரிஞ்சுவைச்சு தான் சொல்லும்ன்னு வந்துருவேன்.

Thursday, February 23, 2012

வலையூர் பட்டி

வலையூர் பட்டி

பொதுவா கிராமம்னா ஆத்துக்குப் பக்கத்தில இருக்கணும் இல்ல சாலை வசதியோட கொஞ்சமான தண்ணி அள்ளிகிட்டு வர மாதிரியோ இருக்கணும். இரண்டும் இல்லாம ரோடு வந்து சேரவே இரண்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் ஒரு குக்கிராமம் வலையூர் பட்டி.

வலையூர் பட்டியில உனக்கு பொண்ணு எடுக்கப் போறோம்ல என்று குப்பண்ணனோட அப்பத்தா சொல்லிட்டுப் போச்சு. அது சொன்னாலும் சொல்லிச்சு வலையூர் பட்டி எப்பிடி இருக்கும்ன்னு தான் குப்பண்ணனுக்கு நினைப்பே தவிர கட்டப் போறவளப் பத்தி நினைக்கத் தெரியல. அது எப்பிடிஇருந்தா என்ன, அந்த கிராமத்தை பார்த்திடனிம்டின்னு பஸ் ஏறிடிச்சு.

பஸ் நின்ன இடத்துல வழி கேட்கக் கூட சுத்து வட்டம் யாரும் இல்லை. எதோ நடுக்காட்டுல இறக்கி விட்டாப்பல இருக்கேன்னு யோசிக்கும் போது சுளிர்ந்னு முதுகுல ஒரு கல் விழுந்தது. குப்பண்ணன் வலியில ஒரு திட்டு திட்டி சுதாரிக்கும் போது அடுத்து ஒரு செங்கல் வந்து விழுந்தது.

அரண்டு போன குப்பண்ணன் யாருலேன்னு கத்திக்கிட்டே ஒரு ஓட்டம், இருந்த ஒத்தையடிப் பாதையில ஓடிச்சு ஓடிச்சு கண்ணுல ஒரு குடிசை வந்த பிறகு தான் நிப்பாட்டிச்சு. மூச்சிறைப்பு வேகமா நெஞ்சு அடிக்கையில நின்னு தலை தூக்கினா குடிசையிலேர்ந்து செவப்பாட்டி தலையை நீட்ட, குப்பண்ணன் பயந்து போய் ஒ ஊன்னு ஒரு கத்து தன்னையறியாம கத்திருச்சு. செவப்பாட்டி மறுபடியும் யாருன்னு கேட்டப் பொறவு தான் குப்பண்ணனுக்கு உசிரு வந்தது.

ஊரு பாக்க வந்தேன் பாட்டி ன்னு சொல்லி முடிக்கையில செவப்பாட்டி ஒரு கத்து கத்தி ஊரையே கூப்பிட்டிருச்சு. அரண்டு போன குப்பண்ணன் முழிக்கையில ஊர்ப் பஞ்சாயத்து முன்ன நிப்பாட்டிடாங்க. வேறு வழியில்லாம தான் வந்த காரணத்தை சொல்ல வேண்டியாதாப் போச்சு.

பஞ்சாயத்து சனம் அத்தனைக்கும் சிரிப்புத் தாளால. எலேய் நம்ம அல்லியம்மாவ நோட்டம் வுட வந்திருக்காகன்னு ஒரு சிறுக்கிப் பையன் கத்த, குப்பண்ணன் அங்கிட்டுர்ந்து மறுபடியும் ஓடிரலாமான்னு யோசிச்சிட்டிருக்கையில, தோள் மேல ஒரு கனமான கை விழுந்து, நம்ம மாப்பிள்ளை அப்பத்தாவோடையே வந்திருக்கலாமேன்னு சொல்லி இழுக்கையில, மாட்டிநோமடா சாமின்னு தலையத் தூக்கினா பக்கத்தில செல்வம் மாமன் நிக்கறாரு.

மாமா! நீங்க எப்பிடி இங்கன்னு இழுக்கையில, மாப்பிள்ளை வருதுன்னு சொல்லிருந்தா வண்டி கட்டி வந்திருப்போம்ல என்று சொல்ல, தனக்கு வந்த அழுகாச்சிக்கிடையில சிரிப்பு தான் வந்துது. இந்த ஒத்தையடிப் பாதையில என்ன வண்டி கட்டப் போற மாமான்னு திருப்பி கேட்கவும், பாரு மாப்பிள்ளை இந்த தடத்தில நீயே ரோடுபோடறயா இல்லையான்னு செல்வம் மாமன் சொல்லிகிட்டே நடந்தது.

இப்பிடி ஒரு சந்திப்பு வலையூர் பட்டியோட நடக்கும்ன்னு குப்பண்ணன் நினைச்சிப் பார்க்கலை!

Monday, February 20, 2012

ராசக்கா

ராசக்கா

ராசக்கா சந்தைக்கு புறப்பட்டுச்சுன்னா கூடவே ஓடியாந்திருவேன். அக்கா திட்ட திட்ட அது முன்ன நடுந்துகிட்டே இருப்பேன். எலேய் பொறுப்பத்தப் பயலே! உன்ற அப்பனாத்தாட்ட சொல்லி புட்டு வாரான்னு கத்தும். நான் கேட்காத மாதிரியே முன்ன நடப்பேன். அதுவே என்ர அப்பன் ஆத்தாக்கு குரல் கொடுக்கும் ஒரு நமிட்டு சிரிப்போட.

ராசக்கா தலையில ஒரு கூடை தக்காளியும் இடுப்பில ஒரு கூடை வெண்டை கத்திரி அள்ளிகிட்டு இரண்டு கிலோமீட்டர் டவுனு பஸ்சுக்கு நடக்கும். எலேய்! உன்ற மாமன் வந்தா ஒத்தாசையாய் இருந்திருக்கும், எடுப்பெடுத்தவனே உன்னை எப்பிடி டே நான் கவனிப்பது. வ்யாவாரத்தை யாருலே பார்ப்பதுன்னு திட்டும்.

டவுன் பஸ் கண்டக்டர் இடம் கூடை வைக்கிறதுக்கு திட்டு வாங்கும், சின்னப் புள்ளைக்கு என்ன டிக்கெட்டு வேண்டி கிடக்குன்னு சொல்லி இன்னும் வெறுப்பேத்தும். என்னால ஒரு உதவியும் இல்லைன்னாலும் அக்காக்கு ஒரு தெரிஞ்சப் பய உடனிருப்பதை எதோ ஒரு பாதுகாப்புன்னு நினைக்கும்.

ராசக்கா ஒரு ஆம்பிளை கணக்கா விறு விறுன்னு பஸ்சு மேல ஏறி கூடையை ஏத்திரும். இறக்கும் போது யாராவது ஆம்பிளை கிடைக்குமான்னு பார்க்கும். லேட் ஆச்சுன்னா பஸ்காரன் கிட்ட திட்டு வாங்கும். சந்தை வாசலில தரகு மேஸ்திரி ஆளுக இருக்கும். ஆனா உதவாது. அக்கா அவிங்க குறைஞ்ச விலைக்கு கேட்கிராக எங்கும். மேஸ்திரி ஆளு அவிங்க கூடையை முதல்ல இறக்கிய பிறகுதான் அக்காவோட கூடையை இறக்க விடும். ஓரிரு தடவை அக்காவே எடுத்து வந்துச்சு.

ஆனால், தரகு மேஸ்திரி ஆளு பேச்சும் பார்வையும் சரியில்லாததால, பக்கத்து கடை சொர்ணக்கா புருஷனை நாடும். சொர்ணக்கா மிரட்டி சொன்னதால சொர்ணக்கா புருஷன் உடந்தையா இருக்கும். தரக முறைச்சிக்கிட்டா எப்பிடி புள்ள வியாவாரம் நடக்கும்ங்கும். ஒவ்வொரு தடவையும் என்னாத்துக்குப் பொல்லாப்புன்னு தரகுக்கு வணக்கம் சொல்லிப்புட்டு போயிரும்.

ராசக்கா ஒரு தடவை நல்ல செழுப்பா கூடை நிறைய தக்காளி எடுத்து வந்துச்சு. தரகு பஸ் கிட்டயே நிப்பாட்டி இருபது ரூபாய்க்கு கூடையை கொடுத்து விட்டுப் போயிருன்னு மிரட்டுச்சு.அக்கா நல்லா சண்டை போட்டுச்சு. முடியாதுன்னு விறுவிறுன்னு வந்து சொர்ணக்கா கடை பக்கத்திலேயே கடை விரிச்சிகிச்சு.

சொர்ணக்கா தரகப் பகைச்சிக்காத புள்ளன்னு சொல்லிச்சு. இருபது ரூபாய்க்கு கொடுக்க இது என்ன சொத்த தக்காளியா ன்னு சொர்ணக்கவோட கூடையை ஒரு பார்வை பார்த்துச்சு. சொர்ணக்கா ஒன்னும் சொல்லாம தன வ்யாவாரத்தப் பார்க்க ஆரம்பிச்சிருச்சு.

ராசக்கா கடையை அடுக்கிற விதமே அழகாயிருக்கும். லாவகமா தக்காளி அடுக்கும். கூறு கூறா வெண்டை கத்திரி தனியா அடுக்கி வைக்கும். சில ஆளுங்க அக்காவை லுக் விட்டுகிட்டே காயெல்லாம் வாங்கிட்டுப் போயிருவானுக. அப்பிடியும் கடைசியில கொஞ்சம் தங்கிரும்.

மாலை மங்குற நேரத்தில காய் தக்காளி நிறைய தங்கிருச்சுன்னா அக்கா முகம் கறுப்பிலும் கொஞ்சம் மங்கிப் போயிரும். திருப்பி பஸ் கட்டணம் கொடுக்கணும். காலி கூடைக்கு காசு கிடையாது. ஆனா அக்காக்கு காயை மலிசா கொடுக்க மனசு வராது. தரகு கேலி பேசும். இல்லாட்டி இரண்டு ரூபாய்க்கு தா ங்கும்.

ஒரு தடவை பேசாம கொடுத்துட்டு வாயேன்க்கான்னேன். எலேய்! பொறுப்பத்தவனே! வீட்டுல ஒரு சொட்டு வைக்காம அள்ளிட்டு வந்திருக்கேன். நானும் மாமனும் சாப்பிடலாம் அல்லது உங்கப்பன் ஆத்தாக்கு கொடுக்கலாம்லே! மீதியைப் பக்கத்து ஊரு பெரிய சனம் வீட்டுக்கே போய் வித்துட்டு வரலாம்லே ன்னுச்சு.

திரும்பி வரும் போது ராசக்காவைப் பார்க்க பெருமையா இருந்துச்சு. மெதுவா கையப் பிடிச்சு நடந்தேன். அக்காவோட சுரசுரப்பான கை கூட சுகமா இருந்துச்சு. அக்கா அழகா ஒரு புன்முறுவலோட கூட வந்துது.

Sunday, February 19, 2012

மல்லி மேடு சந்தை

மல்லி மேடு சந்தை

குப்பண்ணன் மல்லி மேடு வரும் போதெல்லாம் முண்டாசு கொஞ்சம் பெருசா இறுக்கக் கட்டி வருவாரு! சுத்தியுள்ள சனம் தன்னை உத்துப் பாத்திறக்கூடாதுன்னு நெனப்பு. சந்தை சனம் இதை அறியாததல்ல. இருப்பினும் காமிச்சுக்காது.

குப்பண்ணன் அல்லி அம்மாவோட எல்லை மாரியம்மன் கோவில் வாசல்ல வந்து உட்கார்ந்து ஐந்து வருஷம் ஆயிட்டுது. மாடசாமி அண்ணன் இவிங்களப் பார்த்து விட்டு தன் தோட்டத்தில வந்து வைச்சுக்கிச்சு. என்ன ஏதுன்னு கேட்கலை. எங்கிருந்து வந்ததுன்னு கேட்டு மனம் நோகிறும்மொன்னு தயக்கம். அதுவா சொல்லும்னு விட்டிருச்சு.

ஒதுங்கி வாழ நினைக்கும் குப்பண்ணன் மாடசாமி அண்ணன் கிட்ட அப்பிடி ஒரு கேள்வி வாரமாப் பார்த்துகிச்சு. தோட்டத்துல கிடைக்கும் காய் பழம், அப்பப்ப மாடசாமி அண்ணன் கொடுக்கும் அரிசி பருப்பு, அல்லது தோட்டத்து விளைச்சலை சந்தையில விற்கும் போது கொஞ்சம் தனக்கு வேண்டியதை வாங்கி வரும்.

அல்லியம்மா சொல்லி அழும் போது மட்டும் குடிசைக்கு வெளிய வந்து இன்னும் இந்த கட்ட வேக மாட்டேங்குதுன்னு தன்னைத் தானே நொந்துக்கும். அதுவும் அல்லியம்மா கண்ணுலப் படாமப் பார்த்துக்கும். அப்பிடி ஒன்னும் தப்பு தண்டா பக்கம் எட்டிப் பார்த்ததில்லை. ஆனால் நம்ம நிலைமை இப்பிடி ஆயிட்டதேன்னு நினைப்பு வரும் போது எல்லை மாரியம்மனைச் சுத்தியோ, வாய்க்கா கரைச் சுத்தி நீரின் சலன வளைவைப் பார்த்து நடக்கும்.

இந்த தடவ மல்லி மேடு சந்தைக்கு தானும் வரேன்னு மாடசாமி அண்ணன் சொல்லிப்புட்டுது. குப்பண்ணனுக்கு ஒரே கவலையாயிட்டுது. அண்ணன் நோவுற மாதிரி ஒன்றும் பண்ணலையே! என்ன ஆயிட்டுன்னு ஒரே கவலை.

மாடசாமி அண்ணன் சந்தைக்குப் போற முன்ன கலெக்டர் ஆபீசு பக்கம் இட்டுக்கிட்டுப் போச்சு. குப்பண்ணன் தயங்கி நின்னுருச்சு. வலிய தள்ளிக்கிட்டுப் போய் ஒரு விண்ணப்பத்தைப் கொடுத்து நிரப்பச் சொல்லியது. வேண்டாம்னேன்னு சொல்லிப் பார்த்தும் விடலை. குப்பண்ணன் கொடுத்த விண்ணப்பத்தைப் பார்த்த கலெக்டர் நேரா இரண்டு பேரையும் வலையூர் பட்டி கர்ணம் வீட்டுக்கு இட்டுகிட்டுப் போயிட்டார். குப்பண்ணன் தயங்கித் தயங்கி பின்ன வந்தார்.

கலெக்டர் தன் வீட்டு முன்ன நிற்பதைப் பார்த்த கர்ணம் குப்பண்ணன் கிட்ட ஒன்னும் பேசாம பத்திரத்தை கொடுத்து விட்டாப்பல. குப்பண்ணன் நன்றியுடன் கலெக்டர் க்கு வணக்கம் சொன்னாலும், மாடசாமி அண்ணனுக்கு தன்னைப் பத்தி தெரிஞ்சிருச்சேன்னு தயக்கம். மேலும் அவர்கிட்ட உண்மையை சொல்லாததன் குற்ற உணர்ச்சி அமைதியாகவே மல்லி மேட்டு சந்தை திரும்பினர் இருவரும்.

தோட்டத்துக்கு திரும்பின குப்பண்ணனுக்கு இன்னிக்கு குடிசை வித்யாசமாயிருந்தது. சோகமாவே இருக்கும் அல்லியம்மா வந்துட்டியலான்னுது. என்ன நடக்கு இன்னிக்குன்னு ஒன்னும் புரியல. சோறு வைச்சுகிட்டே அல்லியம்மா சொல்லியது இனி நாம வலையூர் பட்டி போயிறலாம என்று சொல்லிச்சு. அல்லியாம்மாக்கு எப்பிடி விவரம் தெரிந்திருக்கும்னு சொல்லிட்டிருக்கும் போதே கர்ணம் வீட்டுல வலுக்கட்டாயமா இருந்துகிட்டு வேலையாள பணி செய்த தனது கணக்குப்பிள்ளை சுந்தரவதனம் வந்து போனதைச் சொல்லிச்சு.

நாளைப் பொழுது வேறு மாதிரி இருக்கும்ன்னு நினைச்சு குப்பண்ணன் கடைசியா ஒரு முறை வாய்க்காக் கரை ஓரம் நடந்தார்.

வயசாயிடுச்சு

புதிதாக ஒரு நண்பர் அறிமுகமானார். பார்க்க நம்ம விட கொஞ்சமே வயசானவர் மாதிரி இருந்தார். நானும் நல்ல மரியாதையுடனே பேசி வந்தேன். அவருக்கு முடி அதிகம் போயிட்டுது. தடித்த முகம், பழக மிக நல்ல மனிதர். எப்போதும் மரியாதையாவே பேசுவார். இரண்டு மூணு வாரம் நன்கு பேசிட்டிருந்தோம்.

இந்த வாரம் சந்திக்கும் போதும் நாங்க நல்லா பேசிக்கிட்டிருந்தோம். அவருக்கு ஒரு போன் வந்து தள்ளிப் போய் பேசிவிட்டு வந்தார். அரைகுறையாக காதில் விழுந்தது. திரும்பி வந்து மரியாதையாகவே குனிந்து நிமிர்ந்து பேசும் போது நன்கு புரிந்து விட்டது, நமது வயசுக்கு மதிப்பு கொடுக்கிறார்ன்னு. வணக்கம்னே!

சமீபத்தில் நண்பர்கள் வீட்டிற்கு சாப்பிட அழைத்திருந்தனர். இன்னும் மூன்று family வருவதாகச் சொல்லியிருந்தனர். போகும் வழியில் இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும், வீடு நிறைவாக இருக்கும் என்று மனைவியிடம் பேசிக் கொண்டு காரில் பயணத்திருந்தோம்.

நண்பர் வீடு அடைந்தவுடன் வந்தவர்களை அறிமுகப் படுத்தினர். ஒரு இளம்பெண் நிறை மாத கர்ப்பிணியாக இருந்தது. எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அந்தப் பெண் என் மனைவியிடம் 'ஆண்ட்டி! அந்தக் காய் கொஞ்சம் எடுத்துப் போடறீங்களான்னு' கேட்டது. என் மனைவிக்கு முகமே மாறி விட்டது. கையிலிருந்த தட்டு கீழ இறங்கிட்டது. சிரிச்சுக்கிட்டே அந்தப் பெண்ணுக்கு கொடுத்து விட்டு, என்னை ஒரு பார்வை பார்த்தாங்க பாருங்க!

அமைதியா, காரில திரும்பும் போது சொன்னேன். நமக்கு மனசு இளசு தான், உடல் காமிச்சுக் கொடுத்துருது இல்லன்னு. என்ன நடந்திருக்கும்ன்னு யோசிச்சுப் பாருங்களேன்!

Thursday, February 16, 2012

கையில் வெறுமை

ராமு அசையாம கால் நீட்டிப் படுத்திருந்தான். விடிஞ்சா எப்போதும் போல நல்லா குளித்து விட்டு தனியா ஒரு நல்ல உடை உடுத்திச் செல்லனும். முப்பது வருஷ சர்வீஸ் முடிஞ்சு நாளை மதியம் அலுவலக நண்பர்கள் விடை கொடுத்து அனுப்பி விடுவார்கள். எப்போதும் retirement luncheon க்கு மனைவி குழந்தைகளோடு வரணும். குழந்தைகளுக்கு தகவல் சொல்லி விட்டு மனைவிக்கும் ஞாபகப் படுத்தி விட்டு வந்து கட்டிலில் படுத்தான்.

முப்பது வருட சர்வீஸ்ல் ராமு அதிகம் கலகலன்னு யாரிடமும் பழகியது கிடையாது. பேச்சும் உள்ளூர் மக்களைப் போல இல்லாமல் இந்திய மக்களது உச்சரிப்பையே உடல் உடன் ஒட்டி வந்ததாக நினைத்து தனது சிறு வயது பழக்கங்கள் இந்திய கலாசாரம் பண்பாட்டை விட்டுவிடக் கூடாது என்றே வாழ்ந்து விட்டான். இதனால் உள்ளூர் மக்களுடன் ஒட்டவில்லை. பதவியும் உயரவில்லை. ஆனால் அமைதியானவன் என்றே பெயர் எடுத்து கடைசி வரை இருந்து விட்டான்.

இருபது வருஷம் முன் கூட வேலை செய்த பெண்ணுடன் கொஞ்சம் அதிகம் பேசியதை தவறான கண்ணோட்டத்தில் பழகியதாக மனைவிக்கு யாரோ தகவல் சொல்லி விட்டனர். இதனால் வீட்டிலும் ஒன்றும் அலுவலக விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.

பகிர்ந்தாலும் அந்த பெண் ஒட்டிய விஷயங்களைத் துழாவும் மனைவி. பேச்சு அதிகமானாலோ அல்லது குழந்தைகள் வாக்கு வாதம் செய்தாலோ, வேணும்னா அந்த இன்னொரு குடும்பத்தோடப் போய் வாழ வேண்டியது தானே என்பார்கள். ராமு வீட்டிலும் அமைதியாகி விட்டான். உள்ளூர் மக்களைப் போல விருப்பமில்லாத வீட்டிலிருந்து விலகி வாழ முடியாமல் தனது உள்ளுணர்வை அடக்கி வாழ முற்பட்டது இன்று வரைத் தொடர்கிறது.

ராமு இந்த நாள் இவ்வளவு சீக்கிரம் வரும் நினைக்க வில்லை. நாளையுடன் வேறுஒரு பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். படிப்பிலோ அல்லது இறை வழிபாட்டிலோ அல்லது என்ன தான் செய்யனும்னு இனி தான் யோசிக்க வேண்டும்.

ராமுக்கு retirement பெனிபிட் நன்றாகவே இருக்கு. சாப்பாட்டுக்கு தொல்லையில்லை. இருந்தும் ஒரு நிம்மதியற்ற நிலை. இருபது வருஷமாக கணவன் மனைவிக்குள் உன் பணம் என் பணம், வீட்டு கடனைப்பில் உன் பாதி என் பாதி, உன் கார் செலவு என் கார் செலவு என்றே ஓடி விட்டது. வங்கி கணக்கும் வேற, வரவு செலவுகளும் அவர் அவர்களுதே. ஆனால் ஒரே வீட்டில் இத்தனை காலம் தள்ளினார்கள் என்று இருவரும் யோசிக்கும் நிலையிலும் இல்லை.

குழந்தைகள் இந்தப் பிரச்சனை தன்னைத் தொடர வேண்டாம் என்று கல்யாணம் ஆனவுடன் தனியாகப் போய் விட்டார்கள். அவ்வப்போது இருபாலரும் appointment வாங்கி சந்தித்து வருகின்றனர். ஆதலால் ராமுவும் அவர்களைத் தொந்தரவு செய்வதில் விரும்ப மில்லாமலே இருந்தான்.

இந்த தடவை retirement பார்ட்டி க்கு அழைப்பு விடுத்தியிருந்தான். என்ன செய்வார்கள் என்று யாரும் சொல்ல வில்லை. மனைவியும் ஒன்றும் சொல்ல வில்லை.

காலை அமைதியாக விடிந்தது. யாரிடமும் ஒன்றும் பேசாமல் நல்ல உடை உடுத்தி வேலைக்கு கிளம்பினான். ஆபீஸ் டேபிள் காலி செய்து காரில் ஏற்றிக் கொண்டு வர வேண்டும் என்ற நினைப்புடன் இரண்டு காலி அட்டைப் பெட்டியை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

மனது எதிலும் எடுபடவில்லை. வெறும் முகஸ்துதிக்காக எல்லோரிடமும் ஒரு வணக்கம் சொல்லி விட்டு வெளியே ஒரு நடை சுற்றி விட்டு வந்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது. எப்போதும் கண் முன் வரும் அந்த மரத்தடியின் நிழலில் சிறிது நின்றான். என்னமோ மனது அங்கு உட்கார வைத்தது இன்று. திரும்பி பேசாமல் வீட்டிற்குப் போய்விடலாமா என்று மனம் சிந்தித்தது.

மனைவி குழந்தைகள் வரா விட்டால் என்ன செய்ய? எப்பிடி அலுவலக நண்பர்களை சந்திப்பது என்றே யோசனை வாட்டியது. வருவது வரட்டும். இத்தனை காலம் இருந்த வாழ்க்கை தானே என்று சமாதானப் படுத்திக் கொண்டான்.

அமைதியாக எந்த வித முக மாற்றத்தையும் வெளிக்காமிக்காமல் ராமு அமைதியாக பார்ட்டி அறைக்குள் நுழைந்தான். ஆரவாரத்துடன் நண்பர்கள் வரவேற்று மாலை போட்டு வாழ்த்திப் பேசினார்கள்.

கடைசியாக ஒரு சின்னப் பரிசு என்று ஒரு மூலையிலிருந்த அறையின் கதவை முழுவதும் திறக்கச் சொன்னனர். முழுவதும் திறந்த போது மனைவியும் மக்களும் வந்து அணைத்துக் கொண்டனர்.

வழியனுப்பும் முன் நண்பர்கள், இனி இவர்கள் மட்டுமே உன்னை ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டும் என்று வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

Tuesday, February 14, 2012

ஒரு நாள் பயணம்

ஒவ்வொரு தடவை இந்தியா போகும் முன் இந்த தடவை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியா போய் வரணும்னு நினைப்போம். வெளிநாட்டில வாழும் போது மத்திய தர வர்க்கமாக வாழும் நாம், இந்தியாவில கால் வைக்கும் போது ஒரு முதலாளி அல்லது பண்ணையார் நினைப்போடு ஏர்போர்ட் லிருந்து வெளியேறுவோம். ஒரு நாள் விமானப் பயணம் எப்பிடி நமது மனநிலையை மாற்றுகிறது என்பது வியப்பே. இதனால பிரச்சனைஇல்லாம திரும்பனும் என்ற நினைப்பும் அதே ஒரு நாள் பயணத்தில மாறிரும்.

ஒரு நாள் பயணம் வீட்டை நோக்கி அடையும் போது வரவேற்க மலர்ந்த முகத்துடன் உற்றார் உறவினர் நிறைந்திருப்பர். ஆனால் திரும்பி வரும் போது வரவேற்க நமக்கு வீடு திரும்ப நாம் அழைத்தவர்கள் மட்டுமே இருப்பார்கள். இருந்தாலும் நம் மனநிலை இருவேறு நாடுகளில் இருவேறு விதமாவே இருக்கிறது.

நமது எதிர்பார்ப்புகள் தேவைகள் அந்தந்த நாடுகளின் இயல்பான வாழ்க்கைக்கு ஏற்றவாறு நாம் திட்டமிட்டு ஏற்படுத்திக் கொண்டு பயணம் மேற்கொண்டால் இரு இடத்திலும் பிரச்சனையோ அல்லது அசௌகரியங்கள் இல்லாமல் இருக்க வாய்ப்பு இருக்கு. எத்தனை பேரால் அவ்வாறு செய்ய முடிகிறது.

காரில்லாமல் அடுத்த இடம் நகர முடியாத வாழ்க்கையை அயல்நாடுகளில் பழக்கப் பட்டுள்ளோம்.ஆனால் இந்தியாவில் நாம் தங்கும் இடத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப திட்டமிடாமல் செயல் பட நினைத்தால் எல்லோருக்கும் மனஸ்தாபத்துடன் விலக வேண்டிய நிலை ஏற்படும்.

பொதுவாக ஒரு இடத்திற்குப் போக வழி கேட்டால் சுலபமாக பஸ் அல்லது ரயில் ஒட்டி வழி சொல்லுவார்கள். அதைப் பின்பற்றினால் குறித்த நேரத்தில் செல்ல முடியும். ஆனால் நமக்குப் பழக்கப் பட்ட அல்லது தெரிந்த அயல் நாட்டு போக்கு வரத்து சாதனம் கார், விமானம், டாக்ஸி பற்றி பேச்சு வந்தால் நமக்கு கிடைக்கும் பார்வைகள் பேச்சுகள் மரியாதைகள் எல்லாம் நமது கேட்கும் முறை விதம் உட்பட்டு தான் கிடைக்கும்

இங்கு நாம் எப்பிடி போகிறோம், என்ன செய்யனும்னு கேட்பதற்கோ சொல்வதற்கோ நாதி கிடையாது. நாமே யாருக்காவது போன் பண்ணி சொல்லிக்கணும். ஆனால் இந்தியாவில் எப்பிடி பயணித்தாய், பஸ் இருக்கும் போது ஏன் ஆட்டோ, எதுக்கு இவ்வளவு பணம், என்பது போல ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொல்ல வேண்டும். இரண்டுமே சங்கடங்கள் தான். அவர்கள் சராசரியாய் ஆட்டோக்கும் டாக்டர்க்கும் கொடுப்பத்தை விட நாம் கொடுத்தாலோ கொடுக்க நேர்ந்தாலோ நம்மிடம் சொல்லத் தயங்க மாட்டார்கள். இங்கு நாமாக யார்கிட்டயாவது சொன்னாத் தானுண்டு.

பஸ் வழி சொல்கிறார்களே என்று பஸ்சில் ஏறி போய், அயல் நாட்டிலிருந்து வந்திருக்கும் நமக்கு உயர்தர ஹோட்டல் விருந்து தர நினைக்கும் நண்பனுக்கு நாம் ஏற்படுத்தும் சங்கடம், அல்லது நமது பந்தாவால் ஆவலுடன் நம்மை எதிர் நோக்கி இருக்கும் நண்பனுக்கு நாம் ஏற்படுத்தும் சங்கடம், எல்லாம் கிளம்பும் முன் சொல்லி சமாளித்து இந்தியாவில் செயல்பட வேண்டும். இங்கு நீ சௌகரியமாய் வந்து சேர்ந்தையோ என்றோ அல்லது அவன் வந்து சேர அவன் பட்ட கஷ்டத்தையோ சொல்லி முடித்து விடுவார்கள்.

இது மாதிரி ஒரு பயணத்தில் ஆயிரம் விதமாய் நடக்கும். இருப்பினும் ஒரு நாள் பயணத்தில் நம் மனநிலையை வேறு விதத்தில் பயணிக்க விடாமல் ஒவ்வொரு நாட்டு சூழ்நிலைக்கு ஏற்ப நம் பயணத்தை வெற்றிகரமாக மாற்றிக் கொள்வது நம் கையில் மட்டுமே இருக்கிறது. அந்த ஒரு நாள் எல்லோருக்கும் நல்ல நினைவுகளோடு தொடரக் கூடிய நாட்களாகட்டும்.

Sunday, February 12, 2012

சமீபத்தில் படித்தது

கணவன் நிறைய குடித்து விட்டு வீட்டிற்கு வருகிறான். சமையலறைக்கு அருகில் வரும் போது மனைவி ஏதோ கேட்பது தெரியாமல் முழுவதும் வாந்தி எடுத்து விட்டு கீழ விழுந்து விடுகிறான்.

காலையில் தனது படுக்கையிலிருந்து எழுவதை உணர்ந்து அய்யய்யோ இன்னிக்கு மனைவியோட எந்த சண்டையும் வந்திடக் கூடாதேவென்று படபடப்புடன் சமையலறையை சுத்தம் செய்து மன்னிப்பு கேட்கலாம் என்று செல்கிறான்.

மனைவியில்லை. போச்சுடா இன்னிக்குன்னு நினைக்கும் போது, சமையலறை சுத்தமாக இருப்பதை பார்க்கிறான். மனைவியின் கடிதம் மேஜை மேல் இருக்கு. எடுத்துப் பார்த்தால், honey நான் கடை வரை போய் வருகிறேன் என்று மட்டும் இருப்பதைப் பார்த்து வியப்புடன் தனது மகன் சிறுவனிடம் என்ன நடக்குதுன்னு கேட்கிறான்.

சிறுவன், அப்பா! நீ நேற்று குடித்து விட்டு அறை முழுவதும் வாந்தி எடுத்தது மட்டுமில்லாமல் உன் உடல் பூரா வாந்தி மற்றும் சரக்கு அப்பி இருந்தது. உன்னை தூக்கி அம்மா சுத்தம் செய்ய முற்ப்பட்ட போது, நீ 'ஏய்! பெண்ணே! நான் திருமணமானவன். என்னை விட்டு விடு என்றாய்!'. அதற்கு மேல் நீ முற்றிலும் சுயநினைவு இழந்து விட்டாய். அம்மா ஒன்றும் சொல்லாமல் எல்லாவற்றையும் சுத்தம் செய்து உன்னை படுக்கையில் கிடத்தினாள்.

Friday, February 10, 2012

ஆசிரியை படுகொலை குறித்து எனது விசனம்

ஒரு ஆசிரியை வீட்டிலும் பள்ளியிலும் தினமும் தொடர்ந்து வேலை செய்து வருவதால் ஏற்படும் மனப் பளுவை சுமை அதிகமாக இருக்கும் இடத்தில் இறக்கி வைப்பது சாத்தியமானது. அவ்வாறு அடைந்துள்ளதா என்று பார்க்க வேண்டும்.

மாணவர்களை ஆசிரியர்களுக்கு டீ காபி வாங்க அனுப்புவதும், வேறு சில சில்லறை வேலைகள் செய்ய அனுப்புவதும் நான் மாணவனாக இருந்த காலத்தில் நடந்தவை. உட்படாத சிறுவர்களை தண்டனைக்குள்ளாவது ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்குள் பிரச்சனை ஏற்படும் போது சில மாணவர்கள் குளிர் காய்வதும் உண்டு. ஒரு ஆசிரியர் இன்னொருவரை பாதிப்பு ஏற்படுத்த உபயோகிப்பதும் உண்டு. இல்லா விட்டால் மாணவர்கள் தண்டனைக்குள்ளாவதும் உண்டு.

வகுப்பில் மற்ற மாணவர்கள் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் போது, ஆசிரியர்கள் கண்ணில் தவறுதலாகப் படும் மாணவன் அதிகமாக அதிக காலம் தண்டிக்கப் படுவது என் விஷயத்தில் நடந்தது. இரண்டு மாத காலம் தரையில் உட்கார நேர்ந்தது. நான் பயந்த சுபாவம் உள்ளதால் அமைதியாகி விட்டேன். அவமானத்தை உள்ளடக்கி கொள்ளத்தான் பழக்கப் பட்டுள்ளேன், பழகி விட்டேன். அது மாதிரி ஏதாவது நடந்து விட்டதா.

சமீப காலமாக பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களை மார்க் poda வில்லை என்றால் மிரட்டுவது உண்டு.

அனுமானங்களுக்கு உட்படாமல் ஒரு குற்றமாக விசாரித்தால் உண்மை வரலாம். அதை படிப்பினையாக ஏற்றுக் கொண்டு மாற்றி அமைத்துக் கொள்ள ஆசிரியர் மாணவ சமுதாயம் தயாரா ?

ஒருத்தர் வெறுப்பை சம்பாதிப்பது மூலம் சொல்வதில் உண்மை இருந்தாலும் எதிலும் வெற்றி காண இயலாது. அனுசரித்துப் போவது நல்லது. முடியா விட்டால் விலகுவதே சிறந்தது.

ஆசிரியை படுகொலை குறித்து எனது விசனம்.

மொழி

எனக்கும் ஹிந்தி திணிப்பு பிடிக்காது. ஆனால் தேவைக்காக கற்பது அவசியம்னு தோணுது. ஆங்கிலம் இன்னும் தேவைப் படுது. சரிவர சரளமாக பேச வரவில்லை என்றால் தனிப் பட்ட வளர்ச்சிக்கும் வேலை செய்யுற இடத்தில சில நேரங்களில் அவமானத்திற்கும், உயர் பதவி கிடைக்காமல் போவதற்கும்  ஏதுவாகிறது.
 
எண்பது இறுதியில் தொண்ணுறு  ஆரம்பத்தில் தமிழகத்தில் வேலை கிடைப்பதை விட வெளிமாநிலங்களில் தான் சுலபமாக வேலை கிடைத்தது. தெரிந்த சிலர் மொழி தெரியாது என்ற பயத்தால் வேலைவாய்ப்புகள் தேடாமல் இருந்தனர். தமிழ்நாடு விட்டு வேறு இடங்களுக்கு apply  பண்ண மாட்டாங்க. வேறு மாநிலங்களுக்குப் போனவர்களுக்கு மொழி சரியான தடையாக இருந்தது. ஆங்கிலம் படிச்சவன் அத்தனை பேரும் அயல்நாடு வேலை தேடி காத்திருக்க முடியாது.
 
என் பள்ளி ஆசிரியர் என்னை வலுக்கட்டாயமா வரவழைச்சு சில நாள் ஹிந்தி சொல்லிக் கொடுத்தார். டிமிக்கி கொடுத்து விட்டு விளையாடப் போய்விடுவேன். பெரியவனான பிறகு வெளி மாநிலம் செல்ல வேண்டிய அவசியம் வந்தவுடன் அவரிடம் போய் பத்து நாளாவது சொல்லிக் கொடுங்க சார் ன்னு  கேட்டேன். இன்னும் பத்து பேரை கூட்டியா சொல்லித் தரேன் என்று சொல்லி விட்டார். சில நண்பர்களுக்கு விருப்பமில்லை.
 
ஹிந்தி கத்துக்காம வடகிழக்குப் போய் ஒன்னும் புரியல. சின்னக் குழந்தைகளோடு தினமும் அவங்க லெவல்க்கு விளையாடி அவர்களிடம் கற்றுக் கொண்டேன். அப்பவும் சரளமா வராது. கண்ணாடி புட்டியில கோலிகுண்டு போட்டு ஆட்டின மாதிரி தான் வரும்.
 
அரசாங்க வேலைத் தேர்வுக்குப் போனா உள்ளூர் மொழி தெரியாது என்று IAS  commissioner  வெளியேப் போகச் சொல்லிட்டான். படித்த படிப்பை விட மொழி அறிவு தான் முக்கியமா தோன்றுகிற அளவுக்கு மனித வளர்ச்சி குறித்து வெறுப்பு தான் வருகிறது.
 
ஓர் நாட்டுக்குள் எந்த மொழி பேசினால் என்ன ? அனைவரும் இந்தியரே என்ற மனப்பான்மை இல்லை. வேறு மொழி பேசும் அண்டை மாநிலத்தவரோடு வாய்க்கா வரப்புத் தகராறு.  அவனைத் திருந்தச் சொல் நான் திருந்துகிறேன் என்ற எண்ணம் தான் எல்லோரிடமும்.
 
இன்று பள்ளிகளில் ஹிந்தி சொல்லிக் கொடுத்தால் அதை வாய்ப்பாக உபயோகிப்பது நல்லதாக இருக்கும். வெளி மாநிலங்களில் வேலை தேடுவதற்கு பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நாங்க பட்ட கஷ்டங்கள் அவர்கள் படத் தேவையிருக்காது.
 
அவங்கெல்லாம் தமிழ் கத்துக்கிராங்கலான்னு ஒரு வாதம் வரும். இப்ப வேலை தேடி அதிகம் வருவதாக என் நண்பர்கள் சொல்கிறார்கள். கண்டிப்பாக கத்துப்பாங்க அவங்க. மொழிக்கு பயந்து வேறு மாநிலம் போகத் தயங்காதவர்களுக்கு மொழிப் பிரச்சனையாக இருக்காது.
 
ஹிந்தி கத்துப்பது பிரச்சனை அல்லது விருப்பமில்லை என்றால் ஆங்கிலமாவது சரளமாகப் பேசக் கற்றுக் கொள்வது நல்லது. இல்லாட்டி தேவையில்லாமல் இது நமக்கு ஒரு ஊனமாகப் போய்விடும். தாய் தந்தையிரின் விருப்பு வெறுப்புகளைப் பார்க்காமல் இதை ஒரு additional ஸ்கில் என்று ஊக்குவித்தால் பிற்காலத்தில் குழந்தைகளுக்கு உதவும்.

Sunday, February 5, 2012

இடைவெளி

வயதில் மூத்த நண்பர் வரும் போது எல்லா ஜோடிகளும் அறையில் உட்கார்ந்திருக்கும் விதத்தைப் பார்த்து, இங்கு எல்லோருக்கும் கல்யாணம் ஆயி எத்தனை வருஷம்னு சுலபமா சொல்லிரலாம்னார்.

புதிதாக கல்யாணம் ஆன ஜோடி இடிச்சு நெருக்கிகிட்டு இருந்தாங்க. வருஷம் ஏற ஏற ஜோடிகளுக்கு இடையே இருந்த இடைவெளியும் அதிகமாக இருந்தது. எல்லோருக்கும் ஆச்சரியம் கலந்த வியப்பு.

மனைவியின் சித்தப்பா சித்தி மட்டும் நெருங்கி உட்கார்ந்திருந்தனர். அவர்கள் மற்றவர்கள் பார்த்துப் பொறாமைப் படும் அளவு இன்று வரை காதலர்களே !

வருடம் ஏறினாலும் இடைவெளி அதிகமாகமல் பார்த்துக் கொண்டால் மணவாழ்வும் சிறக்கும்.

Monday, January 30, 2012

வெற்றிப் பாதை

நமது நண்பர்கள் பிரபலமாவதை, வெற்றியடைவதைப் பார்த்து, நான் பிரபலமாவதை விட பெருமிதம்  கொள்கிறேன். ஒருவரது வெற்றியின் பின் ஒரு அயராத முயற்சி உள்ளது. அதில் எத்தனை சதவீதம் நாம் முயன்றுள்ளோம்  என்று பார்க்கும் போது நமது  நண்பனின் வெற்றியின் ரகசியம் புலப்படுகிறது.

பல தடவை ஏதோ ஒன்றில் வெற்றி அடைய வேண்டும் என்று முயற்சித்துள்ளேன். அனால் வெற்றி கிடைக்கும் முன்னரே தடங்கலோ தவற விட்டவையோ தான் முன் வந்து நிற்கிறது. ஆகவே, வெற்றி அடைந்த நண்பனின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு பெருமை கொள்கிறேன்.

வெற்றி அடையாததால் அல்லது பிரபலமாகாததால் நமது வாழ்க்கையில் ஏதேனும் மாறுகிறதா? இல்லை! அடுத்த முயற்சியை நோக்கி நமது நடை பாதை அமைகிறது. வெற்றி பெற்ற நண்பனின் வாழ்விலோ பெற்ற வெற்றியைத் தக்க வைக்கப் போராட்டம் நடைபெறுகிறது. இருப்பினும் அவன் வாழ்க்கையிலும் ஏற்படும் போராட்டத்திலும் வெற்றியைக் காணும் போது பெருமை கொள்கிறேன்.

வாழ்வின் இறுதி நாள் வரை இத்தகைய வாழ்வை நோக்கிச் செல்லும் நம் பாதையும் ஒரு வெற்றிப்பாதையே !