Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Sunday, June 18, 2023

ஒரு சரித்திர வீணை

ஒரு சரித்திர நிகழ்வில் ஒரு சரித்திரப்புகழ் வாய்ந்த ஒரு வீணையின் கதையை உங்களிடம் பகிரப்போகிறேன்.

படத்திலுள்ள முதல் வீணை 1863ம் வருடத்திய வீணை. இது இங்கு வர்ஜீனியா கோவில் ஒன்றில் பாழடைந்து காணப்பட்டது. அதை இந்தப் பெண்மணி, எங்களுக்கு மிகவும் தெரிந்தவர் இவர், கண்டெடுத்து மீட்டு புனரமைத்து இந்த நிகழ்ச்சியில் வாசித்தார்.

நிகழ்ச்சி முடிந்த இரவு க்ளீவ்லேண்ட் யுனிவர்சிட்டி வாசலில் நானும் அம்மிணியும் டின்னர் சாப்பிட்டுவிட்டு வர, அந்த குளிரில் இவர் எங்கள் எதிரே வந்தார். அங்கேயே க்ளீவ்லேண்ட் டவுன்டவுன் ரோடில் நின்று பேசிக் கொண்டிருந்தோம்.

அவர் கூறியது: இதை முதலில் பார்த்த போது ஏதோ பழசு தொட்டா உடைஞ்சுருமோன்னு நினைச்சேன். துடைக்க துடைக்க ஏதோ கருப்பா வந்துகிட்டே இருந்தது. ஒரு கட்டத்துக்கு மேல துடைக்கும் போது இது உடைஞ்சுருமோன்னு நினைக்கையில், இந்த வீணையின் குடம் உலோகத்தில் செய்ஞதுன்னு புரிந்தது. அப்புறம் இதை நாம பாத்திரம் தேய்க்கிற மாதிரி உப்பு புளி போட்டு தேய்ச்சு இதை மீட்டேன். அப்புறம் புதுசா மேளம் கட்டி கிடார் ஸ்டிரிங்க் போட எல்லாம் மீட்டெடுத்தாச்சு. இப்ப இந்த கான்செர்ட்டுக்கு கொண்டு வரும் போது கூட இது உடைஞ்சா என்ன செய்யன்னு இன்னொரு வீணையும் கொண்டு வந்தேன்னாங்க!

அப்புறம் எங்க உரையாடல் குடும்பம் குசலவிசாரிப்பாக மாறிடுச்சு.

இந்தப்படம் அவங்க லலிதாவில் ஆலாபனை வாசிக்கும் போது. அவங்க பேரும் அதே.

நிகழ்ச்சியில் இதை விதுஷி நிர்மலா அறிமுகப்படுத்தியவிதமும் மிகச்சிறப்பு. இதற்காக இவங்களுக்கு இந்த பழம் வீணை 1863 வருடத்தியதில் வாசிக்க ஒரு தனி ஆலாபனை லலிதாவில் வாசிக்க கொடுத்தார்.

பார்த்ததில் கேட்டதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Instrumento musical antiguo!
ஏப்ரல் 15 2023

க்ளீவ்லேண்ட் ஆராதனை 2023

எடுபுடி வேலைக்கு ஆசைப்பட்டுப் போனா அது மட்டும் அப்படியே 100 பர்சண்ட் நடக்கனுமா! கொஞ்சம் இடைவேளை கொடுத்து இரண்டு கச்சேரியாவது பார்க்க வாய்ப்பு கிடைச்சுருக்கக் கூடாதா! 

கிடைக்கலையே! சித்தாள் வேலைக்குப் போய் பொதி சுமந்ததோட சரி!

அது கிடக்கட்டும், பழகிப் போச்சு நமக்கு!

புதன்கிழமையே போக வேண்டிய பிராக்டீஸ்க்குப் போக முடியலை, வியாழனும் மிஸ்ஸிங். வெள்ளைக்கிழமை காலை ஐந்தரைக்குப் புறப்பட்டு மதியம் 3க்குத் தான் போய்ச் சேர்ந்தோம்.

அன்றைய மாலை பிராக்டீஸ்லயே விதுஷி நிர்மலா ராஜசேகர் சொல்லிட்டாங்க, உங்களுக்காக ஒரு தனி பீஸ் வச்சுருந்தேன்மா, நீ நேற்று வரலை, இப்ப இரண்டு வேளை பிராக்டீஸ்ல ரிஸ்க் எடுக்க முடியாதுன்னுட்டாங்க. ஒரு நல்ல சான்ஸ் போச்சு, ஆனால் அம்மிணிக்கோ இவங்க உள்ளே விட்டதே பெரிய விஷயம்ன்னு இருந்துட்டாப்புல. அப்பவும் ஒரு இடத்துல ஸ்வரம் வாசிக்க இடம் கொடுத்தாங்க. ஆனால் அடுத்த நாள் ப்ராக்டீஸப்ப வித்வான் தஞ்சை முருகபூபதி தனி ஃபீஸ் பலவற்றை தள்ளுபடி செய்துட்டார்.

வெள்ளி இரவு பிராக்டீஸ் முடியரப்ப விதுஷி நிர்மலா ராஜசேகர் ஒரு போனஸ் கொடுத்தாங்க பாருங்க! அசந்து போயிட்டோம். உச்சி குளிர்ந்து போச்சு.

அடுத்த நாள் காலை நடக்கவிருக்கும் க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனையில் மேடையில் பஞ்சரத்ன கீர்த்தனை க்ருதிகளில் பங்கேற்க தன்னோட ஸ்டூடண்ட்ஸ் ஆறு பேருக்கு இடம் வாங்கியிருப்பதாகவும் அதில் அவங்க பின்னாடி உட்கார்ந்து வாசிக்க அம்மணிக்கு முதல் வாய்ப்பு கொடுத்தாங்க பாருங்க, உச்சி குளிர்ந்து போச்சு.

இத்தனை வருடங்கள் அங்கு போனதில் அரங்கில் நிற்கக்கூட இடமில்லாம ஒடுங்கி நெருங்கி பார்த்து திரும்பி வந்தது எங்கே, இப்ப அதே மேடையில அவங்க பக்கத்துல உட்கார்ந்து வாசிக்க அம்மிணிக்கு அவங்களே வாய்ப்பு கொடுத்தது எங்கே!

ஆறில் ஒரு இடம் பாக்கி இருந்தது, யார் வர்றீங்கன்னு கேட்டதில் அம்மிணியோட மாணவிக்கு 4 கீர்த்தனைகள் கத்துக் கொடுத்தது தெரியும்கிறதினால் அந்த மாணவியை நானும் அம்மிணியும் புஷ் பண்ண, அந்த பொண்ணு தான் இப்ப ப்ராக்டீஸ் பண்ணலை வரலைன்னுடுச்சு. வீணை ஒன்னு இரண்டு கீர்த்தனைக்காவது வாசி மத்ததுக்கு சும்மாவது வந்து உட்காருன்னு அவங்களே சொல்லியும் கூட அந்தப் பொண்ணுக்குத் தயக்கம். நல்ல வாய்ப்பு போச்சு. என்ன இப்படி பண்ணிட்டியேன்னு அந்தப் பொண்ணுகிட்ட வருத்தப்பட்டேன். அடுத்த வருடத்திற்காவது ரெடி பண்ணிக்கச் சொல்லியிருக்கேன்.

தியாகராஜ ஆராதனையில் பஞ்சரத்ன க்ருதி வைபவத்தில் சுதா ரகுநாதன், நெய்வேலி, திருச்சி சங்கரன், நாகை முரளி, திருவாரூர் வைத்தியநாதன், காயத்ரி கிரீஷ், சசிகிரண், கிர்ணாவளி, கணேஷ், சந்தீப் நாராயண், ஜெயந்த், லால்குடி வாரிசுகளெல்லாம் நடுநாயகமாக அலங்கரிக்க, விதுஷி நிர்மலா ராஜசேகர் தனது பரிவாரங்களுடன் மேடையின் வலது கோடியில் அலங்கரிக்க, 500 பேர் அமர்ந்து பாடிய/இசைத்த/தாளமித்த ஒரு அமர்களமான அரங்கேற்றம்.

கிடைத்தர்க்கரிய ஒரு வாய்ப்பு கிடைத்த பெருமிதம். 10000 பேர் பக்கம் இருந்த அரங்கில் மேடையில் 500ல் ஒருவராக. இவ்வளவு தூரம் பயணம் பட்ட கஷ்டத்திற்கு கிடைத்த பரிசு.

நிறைவானதொரு ஆராதனை!
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡La música es divina y talentosa!
ஏப்ரல் 14 2023

அன்பைத் தேடி

அம்மிணி பாட்டுக்க அம்மா, குலதெய்வம்ன்னு கிளம்பிப் போயிட்டாங்க.

வார இறுதியில் சும்மா இருக்க முடியலை. சின்க்ளையும் பாத்திரம் இல்லை. வெட்டியாக இருக்கிறதை விட எடு மாட்டைப்பூட்டு வண்டியைக் கிளப்பு.

பையனைப் பார்க்க கிளம்பி வந்தாச்சு. பையன் அப்பாயிண்ட்மென்ட்டுக்கு வெயிட்டிங். 

பால்ய நண்பரின் மகள் கொலம்பஸ் டப்ளின் வந்துள்ளதைக் கேள்விப்பட்டு வழியில் அவர்களையும் சந்தித்து விட்டு வந்த திருப்தி.

பையனின் தரிசனத்திற்கு வைட்டிங். நாளை டெட்ராய்ட் நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் கூடுதல் மகிழ்ச்சி.

போன வாரம் தெற்கே பயணம். இந்த வாரம் வடக்கு நோக்கி வந்தாச்சு. போக வர கிட்டத்தட்ட 3000 மைல் பயணம்.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Viajar es tedioso, pero necesario!
மார்ச் 24 2023

ஆஸ்டின் டெக்ஸஸ் பயணம்

வாழ்க்கையில ஒரு நாள் எல்லாவிதமான கஷ்டங்கள் பட்டாலும் அடுத்த நாளே நம்ம நாளை இனிமையாக்கினா பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறந்து போயிடுது. பழகியும் போச்சு.

தம்பியுடையார் படைக்கு அஞ்சார். தம்பி பேச்சைக் கேட்கலைன்னா வனவாசம்.

பொண்டாட்டியுடையார் கஷ்டத்துக்கு அஞ்சார். மனைவி பேச்சைக் கேட்கலைன்னா எல்லா கஷ்டமும் தாராள மனசோட அள்ளிக்க நிறையவே கிடைக்கும்.

அத்தகைய பயணம் ஆஸ்டின் பயணம். முன்ன பின்ன போகாத இடம்.

காலையிலிருந்தே எல்லாப் பக்கமும் இடி விழுது. எதையும் தவிர்க்கமுடியலை. இரவும் அதே. அடி வாங்குவது பழகிப்போச்சு.

வேலை முடிஞ்சு கிளம்பியது இரவில். கனெக்டிங் ப்ளைட் டிலே. கார் ரென்டல் மூடிட்டான். ஹோட்டலில் ரூம் போச்சு பணம் போச்சு. இரவு தூக்கம் போச்சு. கசினைக் கூப்பிட்டா அவர்களும் தூங்கிட்டாங்க. ஏர்போர்ட்லேயே இரவு வாழ்க்கை. 

காலையில் கார் கிடைச்சு funeral முடிஞ்சு மதியம் வேற ஓட்டல். இரவு தூங்கும் போது நடுராத்திரியில் யாரோ ஹோட்டல் ரூம் கதவை ஓங்கி அடிச்சு அடிச்சு தட்ட, எழுந்து பார்த்தா யாருமில்லை. தூக்கம் பாதி போச்சு.

மனசு சந்தோஷமாக இருந்த நேரங்கள் துக்க நேரத்திலும் உறவினர்களின் சந்திப்பு, அளவலாவல்.

இவ்வளவு தூரம் இனி எங்க வரப்போறோம், போவது மத்யமானாலும் பரவாயில்லைன்னு ஆஸ்டின் கோவில் போனேன். பிரமாதம். மனம் சாந்தியுற்றது.

இன்று மார்ச் 18, கார் ரிடர்ன் பண்ணியப்ப அவங்களே கட்டணத்தை 260லிருந்து 180 ஆக்கிட்டாங்க. மொத்தம் ட்ரைவ் பண்ணதே 50 மைல் கூட இல்லை.

டெல்டா ப்ளைட் கேட்டில் வரலாறு காணாத வரவேற்பு அனைவருக்கும் இன்று. கேட் வாசலில் புதுசா காபி போட்டு ஃப்ரீயாக அனைவருக்கும் கொடுக்கிறாங்க. எல்லோருக்கும் அங்கயே பாப்கார்ன் freshஆக பண்ணிக் கொடுத்தனர். ப்ளைட்டில நான் கேட்ட சீட் கட்டணமில்லாமல் கேட்ட உடன் கொடுத்தனர். ஃப்ளைட் 20 நிமிஷம் முன்னாடியே வந்துடுச்சு.

போகும் போது பட்ட அத்தனை கஷ்டங்களையும் வரும் போது மறக்க வச்சு மனசை குளிர வச்சுட்டாங்க. 

போனதால் உறவினர்களின் பந்தமும் சிறப்படைந்தது. அவர்களும் அதை வெளிப்படையாகவே தெரிவித்தனர். நாள் பூரா என்னை எல்லோரும் அண்ணா அண்ணான்னு கூப்பிட்டதை கேட்டது இப்பவும் காதில் எதிரொலிக்கிறது.

அம்மிணி சொன்ன டைமுக்குள் வீடு திரும்பியதால் இங்கிட்டும் எந்தப் பிரச்சனையுமில்லை. அம்மிணி ரெஸ்டாரண்ட்க்கு கூட்டிப் போய் டின்னர் வாங்கிக் கொடுத்தாங்க.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡La vida está llena de subs y bajadas!
மார்ச் 18 2023

அன்பானவர்க்கு ஒரு அஞ்சலி

வாழ்க்கையில் எந்த உயரத்துக்குப் போனாலும் எனது சில உறவினர்களில் சிலர் என் அப்பா அம்மாக்கு கொடுக்கும் மரியாதையைப் பார்க்கும் போது மெய் சிலிர்க்கும். அவர்களுக்குள் எந்த அந்தஸ்து ஈகோ எதுவும் அவர்கள் நட்பு மற்றும் உறவுக்கு முன் நிற்காது.

எனது அம்மாவோ பள்ளிக்கூடமே போக வாய்ப்பு இழந்தவர்கள். அப்பா ஏழாவது படிக்கும் போதே எல்லா நிலங்களையும் இழந்து ஊரை விட்டு வந்தவர்.

அப்பாவோட கசின் விங் கமாண்டராக இருந்து ரிடையரானவர். இப்போ அவருக்கு 83 வயது. அவர் அவரது மனைவியெல்லாம் மெத்தப்படித்தவர்கள், ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் எல்லாம் சரளமாக எழுதப் பேசக்கூடியவர்கள். 

மூன்று வருடம் முன் அவர்கள் அம்மாவைப் பார்க்க வந்த போது கூட அம்மா காலில் நெடுஞ்சான்கிடையாக விழுந்து நமஸ்காரம் பண்ணினார்கள்.

நான் அப்பவே அவரைத் தடுத்தேன். சித்தப்பா உங்களுக்கே இப்ப 80 வயசு, இந்த வயசுல கீழ விழுந்து என்னத்துக்கு நமஸ்காரம் பண்றீங்க, அடிபட்டதுன்னா என்ன பண்றதுன்னேன்.

அதுக்கு அவர்கள் இரண்டு பேரும் சொன்ன பதில் ஆடிப்போச்சு, வயசு என்னடா, அவங்க 3 வயசு பெரியவங்க, மன்னி ஸ்தானம் பெருசு, அவங்க ஆசீர்வாதம் கிடைச்சா எனக்குத்தான்டா புண்ணியம்ன்னார்.

அசந்து போய் பார்த்தேன். அம்மா கூட அவங்க போன பிறகு சொன்னாங்க, எவ்வளவு பெரிய பதவி வகிச்சவர், அவர் கமாண்டிங்ல எவ்வளவு பேர் இருந்திருந்துக்காங்க, எவ்வளவு பணம் பதவி படிப்பு எல்லாம் அவருக்கு. என்னையும் அப்பாவையும் பார்க்க வாரம் இரண்டு தடவையாது வருவாங்க, ஒவ்வொரு தடவை வரும் போதும் யாரிருந்தாலும் பார்க்காம நமஸ்காரம் பண்ணாமப்  போக மாட்டாங்க! அப்படி நாம என்ன பண்ணிட்டோம் நாலு வார்த்தை அவங்களோட அன்பாப் பேசறதை விட என்றார்கள்.

அந்த சித்தி இங்கு மறைந்து விட்டார். சித்தப்பாவிற்கும் கொஞ்சம் மறதி ப்ராபளம் இப்ப புதுசா. சித்தியின் funeralக்கு நாளை இரவு ஆஸ்டின் பயணிக்கிறேன். முன் பின் போகாத இடம். 

இங்கிருந்து கிளம்புவதற்குள் இங்கு ஆயிரத்தெட்டு சமாளிக்க வேண்டியிருக்கு. இடி எல்லாப் பக்கத்திலுமிருந்து விழுது. ஆதலால் நாளை இரவு தான் பயணம்.

மரியாதைக்கு மொத்த உருவமாக வாழ்ந்தவர்கள். அவர்களில் ஒருவருக்கு அஞ்சலி செலுத்தவதே சிறந்தது என கிளம்பி விட்டேன். நினைத்ததை விட அதிக செலவு. அதை யோசிக்கக் கூடாத தருணம்.

நம் வாழ்விலிருந்து ஒருத்தர் மறையும் போது தான் அவர்கள் நம்முடன் பழகிய விதம், பேசிய விதம், அன்பு, உதவி மற்றும் மரியாதைகளெல்லாம் நிழல்களாக கூடவே வருகிறது.

மிகவும் அன்பானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப் பயணிப்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Una vida para apreciar!
மார்ச் 15 2023

Monday, July 15, 2013

Auto

2009 - சென்ட்ரல் டு திருவான்மியூர் - ராத்திரி பத்து மணிக்கு ஆட்டோ புடிச்சேன். 200 கேட்டார். 150க்கு பேரம் பேசி போயிட்டிருக்கும் போது எப்பிடியும் ஊர் சுத்தி ஏமாத்திருவார் ங்கிற மாதிரி நினைச்சுகிட்டிருந்தேன். 

ராயப்பேட்டை வழியா போகும் போது ஏதோ ஊர் தெரிஞ்சா மாதிரி அவர்கிட்ட ஏன் இப்பிடி போறீங்கன்னேன் . பயப்படாம வாங்க சார் ன்னார். நம்ம கால் ஆடறது தெரிஞ்சிடுத்தா என்று நினைச்சேன்.

மந்தைவெளி தாண்டும் போது எல்லா ஆட்டோ காரங்களும் ஏமாத்தரவங்க இல்லைன்னார். என்ர வாய் சும்மா இருக்காம எப்பிடி சார் அதை முகத்தைப் பார்த்து தெரிஞ்சிக்கிறதுன்னு கேட்டு வைச்சுட்டேன். வண்டியை அங்கேயே நிப்பாட்டி இறக்கி விட்டுருவாரோன்னு கொஞ்சம் பயம் கூட.

பிறகு மெதுவா சொன்னார். நான் AGS ஆபீஸ் ல வொர்க் பண்றேன். பையங்க இன்ஜினியரிங் படிக்கிறாங்க. தேவைக்காக மாலையிலிருந்து இரவு ஒரு மணி வரை ஆட்டோ ஓட்டுவேன் என்றார். ஏமாற்றி பிழைக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

அதுக்கப்புறம் வீடு போறவரை நான் தான் அவரை சார் போட்டு அழைச்சேன்.
இறங்கும் போதும் அவரை என் பெட்டி எடுத்துக் கொடுக்க விடவில்லை. நானே!

சார் உங்க போன் நம்பர் கொடுங்க. சென்னையில் இருக்கிறவரை உங்களைக் கூப்பிடறேன் என்றேன். அவர் சொன்ன பதில் கேட்டு அமைதியாயிட்டேன்.

அவர்  'நான் கொடுத்தாலும்  உங்களுக்கு use இல்லை. நான் வசிப்பது தண்டையார்பேட் பக்கம். அங்கிருந்து இவ்வளவு தூரம் வந்து போவது சாத்தியமில்லை' என்று விட்டார்.

எக்ஸ்ட்ரா கொடுத்த பணம் மட்டும் வாங்கிக்கிட்டார்.

பாட்சா படம் பார்த்து வந்தா மாதிரி இருந்தது.

Thursday, July 5, 2012

தடைகள்

சமீப காலங்களில் இந்தியாவில் ரயில், பஸ் களில் பயணித்ததில், எந்த ரயிலும் பஸ் எதுவும் காலியாகப் போனதில்லை. டிக்கெட் கிடைக்கவில்லை என்று திரும்பிப் போனவர்களும், ஏமாற்றப் படுபவர்களும் அதிகம். இடம் இல்லாததால் தவறான முறைகளில் பயணிப்பதற்கான காரணங்களை ரயில்வே மற்றும் பேருந்து கழகங்கள் உருவாக்குகின்றன. ஏன் மேலும் தொடர் ரயிலும் பஸ் ம் விட மாட்டேங்கிறாங்கன்னு புதிராகவே இருக்கு. கேட்பாரில்லை.

மேலும் அதிக ரயில், பஸ் விடுவதால், மேலும் அதிக வேலை வாய்ப்பு, அரசுக்கு வருமானம், மக்கள் தவறான முறைகளில் அதிகம் செலவளிக்காமல் பயணிக்க முடியும். இருந்தும் செய்வதில்லை, சிலர் செய்ய விடுவதும் இல்லை.

வருமானம் வர ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தால் வெளி நாடுகளில் அதை எளிதாகப் பயன்படுத்தி சம்பாதித்து விடுகின்றனர். இந்தியாவில் போக்குவரத்து மூலம் அதிகம் வருமானம், வேலை வாய்ப்பு, மக்களை தவறான வழியில் செல்லாமல் ஓரளவுக்கு நெறி படுத்த முடியும்.

அமெரிக்காவில் கார் industry மற்ற போக்குவரத்துகளை தடை படுத்துவது போல இந்தியாவிலும் அப்பட்டமாக நடக்கிறது.

Tuesday, February 14, 2012

ஒரு நாள் பயணம்

ஒவ்வொரு தடவை இந்தியா போகும் முன் இந்த தடவை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியா போய் வரணும்னு நினைப்போம். வெளிநாட்டில வாழும் போது மத்திய தர வர்க்கமாக வாழும் நாம், இந்தியாவில கால் வைக்கும் போது ஒரு முதலாளி அல்லது பண்ணையார் நினைப்போடு ஏர்போர்ட் லிருந்து வெளியேறுவோம். ஒரு நாள் விமானப் பயணம் எப்பிடி நமது மனநிலையை மாற்றுகிறது என்பது வியப்பே. இதனால பிரச்சனைஇல்லாம திரும்பனும் என்ற நினைப்பும் அதே ஒரு நாள் பயணத்தில மாறிரும்.

ஒரு நாள் பயணம் வீட்டை நோக்கி அடையும் போது வரவேற்க மலர்ந்த முகத்துடன் உற்றார் உறவினர் நிறைந்திருப்பர். ஆனால் திரும்பி வரும் போது வரவேற்க நமக்கு வீடு திரும்ப நாம் அழைத்தவர்கள் மட்டுமே இருப்பார்கள். இருந்தாலும் நம் மனநிலை இருவேறு நாடுகளில் இருவேறு விதமாவே இருக்கிறது.

நமது எதிர்பார்ப்புகள் தேவைகள் அந்தந்த நாடுகளின் இயல்பான வாழ்க்கைக்கு ஏற்றவாறு நாம் திட்டமிட்டு ஏற்படுத்திக் கொண்டு பயணம் மேற்கொண்டால் இரு இடத்திலும் பிரச்சனையோ அல்லது அசௌகரியங்கள் இல்லாமல் இருக்க வாய்ப்பு இருக்கு. எத்தனை பேரால் அவ்வாறு செய்ய முடிகிறது.

காரில்லாமல் அடுத்த இடம் நகர முடியாத வாழ்க்கையை அயல்நாடுகளில் பழக்கப் பட்டுள்ளோம்.ஆனால் இந்தியாவில் நாம் தங்கும் இடத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப திட்டமிடாமல் செயல் பட நினைத்தால் எல்லோருக்கும் மனஸ்தாபத்துடன் விலக வேண்டிய நிலை ஏற்படும்.

பொதுவாக ஒரு இடத்திற்குப் போக வழி கேட்டால் சுலபமாக பஸ் அல்லது ரயில் ஒட்டி வழி சொல்லுவார்கள். அதைப் பின்பற்றினால் குறித்த நேரத்தில் செல்ல முடியும். ஆனால் நமக்குப் பழக்கப் பட்ட அல்லது தெரிந்த அயல் நாட்டு போக்கு வரத்து சாதனம் கார், விமானம், டாக்ஸி பற்றி பேச்சு வந்தால் நமக்கு கிடைக்கும் பார்வைகள் பேச்சுகள் மரியாதைகள் எல்லாம் நமது கேட்கும் முறை விதம் உட்பட்டு தான் கிடைக்கும்

இங்கு நாம் எப்பிடி போகிறோம், என்ன செய்யனும்னு கேட்பதற்கோ சொல்வதற்கோ நாதி கிடையாது. நாமே யாருக்காவது போன் பண்ணி சொல்லிக்கணும். ஆனால் இந்தியாவில் எப்பிடி பயணித்தாய், பஸ் இருக்கும் போது ஏன் ஆட்டோ, எதுக்கு இவ்வளவு பணம், என்பது போல ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொல்ல வேண்டும். இரண்டுமே சங்கடங்கள் தான். அவர்கள் சராசரியாய் ஆட்டோக்கும் டாக்டர்க்கும் கொடுப்பத்தை விட நாம் கொடுத்தாலோ கொடுக்க நேர்ந்தாலோ நம்மிடம் சொல்லத் தயங்க மாட்டார்கள். இங்கு நாமாக யார்கிட்டயாவது சொன்னாத் தானுண்டு.

பஸ் வழி சொல்கிறார்களே என்று பஸ்சில் ஏறி போய், அயல் நாட்டிலிருந்து வந்திருக்கும் நமக்கு உயர்தர ஹோட்டல் விருந்து தர நினைக்கும் நண்பனுக்கு நாம் ஏற்படுத்தும் சங்கடம், அல்லது நமது பந்தாவால் ஆவலுடன் நம்மை எதிர் நோக்கி இருக்கும் நண்பனுக்கு நாம் ஏற்படுத்தும் சங்கடம், எல்லாம் கிளம்பும் முன் சொல்லி சமாளித்து இந்தியாவில் செயல்பட வேண்டும். இங்கு நீ சௌகரியமாய் வந்து சேர்ந்தையோ என்றோ அல்லது அவன் வந்து சேர அவன் பட்ட கஷ்டத்தையோ சொல்லி முடித்து விடுவார்கள்.

இது மாதிரி ஒரு பயணத்தில் ஆயிரம் விதமாய் நடக்கும். இருப்பினும் ஒரு நாள் பயணத்தில் நம் மனநிலையை வேறு விதத்தில் பயணிக்க விடாமல் ஒவ்வொரு நாட்டு சூழ்நிலைக்கு ஏற்ப நம் பயணத்தை வெற்றிகரமாக மாற்றிக் கொள்வது நம் கையில் மட்டுமே இருக்கிறது. அந்த ஒரு நாள் எல்லோருக்கும் நல்ல நினைவுகளோடு தொடரக் கூடிய நாட்களாகட்டும்.

Sunday, January 15, 2012

பாணதீர்த்தம் அருவி

தென் தமிழ்நாட்டின் எழில் மிகு பகுதிகளில் மிகவும் பிரமிக்க வைக்கும் ஒரு அருவி பாணதீர்த்தம். தாமிரபரணி ஆற்றின் பிரவாகமாய் காரையார் அணையை ஒட்டி ஒரு ரம்மியமான சூழ்நிலையில் அமைந்துள்ள ஒரு அற்புத எழிலோவியம். அருவியை அடைய தாமிரபரணி ஆற்றில் கட்டப்பட்டுள்ள அணையின் மீதான ஒரு விசைப் படகு சவாரி, கூடவே நம்மை சுற்றியுள்ள இயற்கையின் அழகைப்பார்த்து பிரமிக்க வைக்கிறது.

குற்றாலம் பார்க்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆவலை நண்பரிடம் சொன்ன போது, 'அதுக்கென்ன! இரண்டு நாள் சேர்ந்தார்ப் போலிருந்தால் எல்லாம் பார்த்துவிடலாம்' என்றார். சேலத்திலிருந்து குற்றலாம் நோக்கிய எங்கள் பயணம், திடீர் திருப்பமாய் முண்டந்துறை புலிகள் சரணலாயம் மற்றும் பாணதீர்த்தம் அருவி நோக்கி நகரும் பயணமாக மாறிவிட்டது.

பாபநாசம் நெருங்கும் போது மாலை 5 மணிக்கு மேலாகிவிட்டதால், வனக்காவலர்கள் அனுமதிக்காததினால் வருத்தத்துடன் திருநெல்வேலி திரும்ப வேண்டியதாகி விட்டாலும், வழி நெடுக இருந்த வயல்களில் இயல்பாய்த் திரியும் ஆண் பெண் மயில்களின் அலங்கார நடையும், பல்வேறு விதமான பறவைகளின் வாசம் கணக்கிலடங்கா எண்ணிக்கையில் புழங்கும் அச்சூழல் அத்தனையும் மறக்கச் செய்தது. பாபநாசம் சிவன் கோவில் வாசலில் பிரவாகமாய் விரிந்தாடும் தாமிரபரணியின் ஆற்றுக் கரையில் காலை வைத்து அந்த குளிர்ந்த நீரில் மிதக்கும் துள்ளி விளையாடும் மீன்களைப் பார்க்கும் மாலைப் பொழுது, நமது சின்ன சின்ன ஆசைகளை அசை போட வைக்கிறது.

இங்கிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் கட்டப்பட்டுள்ள புழக்கமில்லாத புது அரசினர் விடுதிக்கு முன் உள்ள மரத்தில் கொஞ்சும் கிளிகளின் ஆரவாரம் சூழ்நிலையை மெருகூட்டுகிறது. இயற்கை மட்டுமா! அதன் எதிரில் உள்ள டீ கடையில் கண்முன் செய்து கொடுக்கப்படும் சூடான இட்லி, வடை, பூரி எல்லாம் சுவை மட்டுமல்ல, அதன் விலையும் எளிதான மக்களின் சுயநலமற்ற வாழ்வு கைகூப்ப வைக்கிறது. இட்லி 2 ரூபாய் மட்டுமே.

மறுநாள் காலையே முண்டந்துறை சரணாலயத்தில் மதிய உணவுக்குப் பணம் கட்டி விட்டு, பாணதீர்த்தம் நோக்கிப் பயணமானோம். வனம் முழுக்கப் பார்த்து பரவசமடைய வைக்கிறது. கீரி தனது இரையான பாம்பை இழுத்து செல்வதும், கொம்பேறி மூக்கன் பாம்பு என்று அழைக்கப் பட்ட அந்த நீளமான ஊர்வனம் சிறு துளி நிமடங்களில் தரையிலிருந்து மரம் ஏறி எங்களை நோக்கியதும், வழி நெடுக மயில் மற்றும் காடைகளின் தரிசனங்களோடு செல்லக்கூடிய பயணம் அது.

முழுதும் நிரம்பி வழிகின்ற அணையை சீக்கிரமே அடைந்து ஒரு தனி விசைப் படகில் பாணதீர்த்தம் நோக்கிப் பயணமானோம். சுற்றிலும் மலைப் பிரதேசம், நடுவில் மிகப் பெரிய நீர்த் தேக்கம், அதன் நடுவில் செல்லும் எங்கள் விசைப் படகின் அசைவு, ஒரு தாலாட்டு பாடி அழைத்துச் செல்வதாகவே உணர்ந்தேன். அருவியின் தரிசனம் படகிலிருந்து கிடைக்கும் போது ஏற்பட்ட உணர்வு மலைப்பாக இருந்தது. அருவியில் குளிக்கும் போது தலையில் விழும் சட சடவென்ற சத்தம் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அருவியி தூய நீரை யாரும் சோப்பு போட்டு மாசு படுத்தாமல் இருந்தது மிகவும் வரவேற்கத் தக்கது. தண்ணீரின் சுத்தம் நேரடியாக அருந்தும் போது மட்டுமல்ல, நமது தலை முடி அந்த நீர் பட்டு மிகவும் soft ஆக மாறியதை நன்கு உணர முடிந்தது.

பாணதீர்த்தம் அருவி நோக்கிய எங்கள் பயணம் மிக சிறந்ததாக இருந்தது.

குற்றாலத்தில் எல்லோரும் தேவைக்கு அதிகமாக சோப்பு உபயோகிப்பது மட்டுமில்லாமல், அருகிலுள்ள குப்பைத் தொட்டியில் மீதியை வீசாமல், அந்த நீரிலேயே வீசுவது நீரின் நிறம் சுவை, நீரினத்தின் வாழ்வு அனைத்தையும் வீழ்த்துவது  உணராமல் செய்யும் செயல் எதுவும் பாண தீர்த்தத்தில் இல்லாதிருப்பது மேலும் மனதிற்கு நிறைவாக இருந்தது.

நீங்களும் ஒரு முறை சென்று வாருங்கள்.