கருப்பு வெள்ளை டிவி யும் தூர்தர்ஷன் மட்டுமே கொடிகட்டிட்டிருந்த காலம். எத்தனை நாள் தான் வயலும் வாழ்வும் பார்க்கிறது. அதனால எப்போதும் வீட்டு வெளியே விளையாட்டும், வீட்டுக்குள்ள சிறுகதைகளும், குறுநாவல்களும் படிச்சு அலசிக்கிட்டிருந்த காலம்.
பத்தாவது படிக்கும் முன்னே யவன ராணி, கடல் புறா, பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் முடிச்சிட்டு, எவன் முதல்ல எந்த பாகத்தை படிச்சு முடிச்சான்னு அலட்டுவதும் ஒரு த்ரில்லு. கொஞ்சம் மாறுதலாப் படிக்கணும்னு இந்துமதி, சிவசங்கரி, வாஸந்தி, ரமணி சந்திரன், ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் எல்லாம் படிச்சிருவோம். எவன் அதிகமா படிச்சான்னு ஒரு போட்டி இருக்கும்.
என் நண்பன் கொஞ்சம் அறிவு பூர்வமாவே எதையும் செய்வான். அப்ப சுஜாதா படிப்பதெல்லாம் மாடர்ன் trend . என் நண்பன் முதல்ல இருப்பான். இதயம் பேசுகிறது மணியன். லேனா தமிழ்வாணன் பற்றியெல்லாம் பேசக் கூடியவன்.
எப்போதும் பள்ளி மதிய இடைவேளையில ஸ்கூல் ஒட்டி கடை வீதி பஸ் ஸ்டான்ட் எல்லாம் சுற்றி வருவோம். ஒரு நாள் ஒரு ஹோட்டல் வாசலில் ஒரு டூர் பஸ் 'இதயம் பேசுகிறது சுற்றுலா பேருந்து' என்ற banner உடன் நின்று கொண்டிருந்தது. இருவரும் ஆவலுடன் அதை நோக்கி நடந்தோம்.
பஸ்சின் பின் ஒரு பதினைஞ்சு அடி தூரத்தில் நாங்க நெருங்க வரும் போது ஒரு பெண்மணி பஸ்சிலிருந்து தலையை நீட்ட, என் நண்பன் 'டேய்! இந்துமதி' டான்னான். அவங்க எப்பிடிரா இதயம் பேசுகிறது பஸ்ல, கண்டிப்பா இருக்காதுன்னு நான் மறுக்க, என்ன பெட் என்றான். கையில பத்து பைசா மேல வைச்சிருக்காத எனக்கு கம்முனு இருக்கத் தோணாம, பத்து ரூவாடான்னேன். ரொம்பப் பெரிய அமௌன்ட் எனக்கு.
உறுதி செய்ய அவங்க உட்கார்ந்திருந்த ஜன்னலருகில் போனோம். என் அம்மா வயது இருக்கும் அவங்களுக்கு. என்னை மட்டும் பக்கத்தில கூப்பிட்டாங்க. ஒரே தயக்கம். எவ்வளவு பெட் கட்டின என்றாங்க. ஒன்னும் சொல்லலை நான். ஜோப்புல எவ்வளவு இருக்கு. அதை உன் friend கிட்ட கொடுன்னாங்க. எனக்கு ஆடிப் போயிருச்சு. வீடு திரும்ப பஸ்க்கு என்ன பண்ணுவது. ஏழு கிலோ மீட்டர் நடக்கணும். கால் தானாவே பின்ன போக ஆரம்பிருச்சு. பேச்சு சுத்தமா போயிடுச்சு எனக்கு.
உனக்கு மட்டும் ஆட்டோகிராப் தரேன்னு என் friend கிட்ட அவங்க சொல்ல, டேய் சீக்கிரம் ஒரு பேப்பர் பென்சில் கொடுறாங்கிறான், எங்கப் போவது. எனக்கோ அவமானத்திலும் பயத்திலும் கண்ணில நீர் கோர்க்குது. கடைக்காரன் கிட்ட கேட்டா திட்டுவான். தரையில கிடந்த பேப்பரை கொடுத்தேன் அவனிடம். மிக அழகான கையெழுத்திட்டு அவனுக்கு கொடுத்தாங்க.
என் காதில மணியன், தமிழ்வாணன் எல்லாம் கூட வந்திருக்கலாண்டான்னான். எப்பிடிரா அவ்வளவு பெரிய ஆளெல்லாம் இந்த மாதிரி டூர் வருவாரு. MS உதயமூர்த்தி வேணா இருக்கலாண்டான்னேன். எப்பிடி தான் அந்த அம்மா காதில விழுந்துதோ தெரியல, என் friend a மறுபடியும் கூப்பிட்டு, ஹோட்டல் உள்ள சாப்பிடராங்கப், போய்ப் பாருன்னாங்க. கூடவே சிவசங்கரியும் வந்திருக்காங்க என்று சொன்னாங்க.
என்னைப் பார்த்து, முதல்ல அந்தப் பத்து ரூவாயை அவனுக்கு கொடுக்கிரதப் பாருன்னாங்க. இனியும் நான் அங்கு நிப்பேன்னு நினைக்கிறீங்க. அவனுக்கும் அவர்களைப் பார்க்கிற சான்ஸ் போச்சு. பிடிறா மவனே ஓட்டம். நகர்ந்திட்டேன்.
இருபந்தைந்து வருஷம் கழிச்சு இந்த விஷயத்தை நான் நினைவு படுத்த, ரொம்ப நல்லா ஞாபகம் இருக்குடா. அந்த ஆட்டோகிராப் தானில்லைன்னான்.
பல பிரபலங்களை ஒருங்கப் பார்க்கிற சான்ஸ் என்னாலப் போயிடுச்சு. சின்ன வயசு சொலவடையினால, வடை போச்சு.
என்னோட இதயம் தான் இன்னும் பேசுகிறது.
1 comment:
நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
Post a Comment