Saturday, May 12, 2012

நாடோடிகள்

நாடோடிகள்

சில மணித்துளி முன் வானம்பாடிகள் பாலா சார் எழுதிய கேரக்டர் கண்னீப்பா படிக்கும் போது நான் சின்ன வயசில பார்த்த நாடோடி கூட்டங்கள் ஞாபகத்துக்கு வருது.

நாங்கள் வசித்தது ஒரு கம்பனியின் colony குடியிருப்பில். காலனி வெளியே ரோட்டிற்கு மறுபுறம் ரயில்வே நிலம். அதன் ஆக்கிரமிப்பை தடுப்பதற்காக பெரிய தடுப்பு இரும்பில் போட்டிருப்பார்கள். அதன் நடுவில் ஒரு நுழைவு ஏற்படுத்திக்கொண்டு தண்டவாளத்தை ஒட்டி கும்பலாக சில மாதங்கள் வாழ்வார்கள்.

நாங்கள் அவர்களை லம்பாடிகள், நாடோடிகள் என்றும், குறவன் குறத்தி என்றும் வாய்க்கு வந்ததை வைத்து அழைத்துக் கொள்வோம். வெவ்வேறு குழுக்கள் வரும். சில மாதங்களில் காணாமல் போய்விடுவார்கள்.

ரயில்வே நிலத்தில தங்கியிருப்பதாலும், பெரிய கம்பனியின் குடியிருப்பிற்கு எதிரில் இருப்பதாலும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவர்களைத் துரத்தப் பார்ப்பார்கள். எங்களுக்கோ அவர்களது வருகை ஒரு காட்சிப் பொருள். பெரிய பொழுது போக்கு. பள்ளி முடிந்ததும் நண்பர்களுடன் அவர்களை வேடிக்கைப் பார்க்க காலனி வெளியே ரோட்டோரம் நிப்போம்.

அவர்களைப் பார்த்து எங்களுக்குள் உள்ள கற்பனையை மேலும் வளர்த்துக் கொள்வோம். எங்களில் ஒருத்தன் அவர்கள் உடும்பை பிடித்து கட்டியிருந்ததைப் பார்த்ததாகச் சொல்வான். அது எங்கள் கண்ணில் படுதா என்று தேடுவோம்.

அந்த சமயங்களில் கரும்குரங்கு லேகியம் பற்றி பரவலாக பேச்சு இருந்தது. நாடோடி குழுக்களிடம் எப்பிடியும் ஒரு குரங்கு வைத்திருப்பார்கள். அதை கயிற்றில் ஒரு இரும்பு கம்பியில் கட்டியிருப்பார்கள். எங்களுக்கு அதுவும் ஒரு பெரிய வேடிக்கை காட்சிப் பொருள்.

உடன்இருந்த ஒருத்தன் இன்னிக்கு இந்த குரங்கு காலிடா, எப்பிடிரா லேகியம் பண்றாங்கன்னு பார்க்கனும்பான். அவர்களைப் பற்றிய எப்போதும் ஒரு தவறான புரளியே எங்களிடம் அதிகம் பரவியிருந்தது. என்றுமே ஒரு சரியான தகவல் இருந்தது இல்லை. அதைப் பற்றி கவலைப் பட்டதில்லை. எங்களைப் பொறுத்த வரை புரளி பேச வாயில் அவல் கிடைத்த வாய்ப்பு தான்.

ஒவ்வொரு குழுக்களின் உடை பேச்சு கொஞ்சம் வித்தியாசமாவே இருக்கும். ஒரு தடவை வந்த குழு வடஇந்தியாவில இருந்து வந்த மாதிரி இருந்தது. அவர்கள் பேசியது ஒன்று கூட புரியவில்லை. ஒரு நாள் மாலை அவர்களை தண்டவாளம் அருகில் போய் தைரியமாக அருகில் போய் பார்த்தோம். எதை எதையோ சாப்பிடுவார்கள் என்று கதை கட்டிக் கொண்டிருந்த எங்களுக்கு, அவர்கள் சப்பாத்தி மாவை கையாலேயே வட்டமாகத் தட்டி நேராகவே நெருப்பில் காட்டி சுட்டதைப் பார்த்து அசந்து விட்டோம். அதுவும் ஒவ்வொரு சப்பாத்தியும் நம் வீட்டில் சுடுவதை விட இரண்டு மூணு மடங்கு பெரிதாகவும் தடுமனாகவும் இருந்தது. எங்களுக்கு மிகப் பெரிய ஆச்சரியம். நாங்கள் அவர்களைப் பார்ப்பதைப் பார்த்து எங்களைத் துரத்தி விட்டனர்.

ஊர்ப் பெரிசுங்களுக்கோ அவர்களைக் கண்டால் பயம். திருடு போயிரும், ரொம்ப சாக்கிரதையாக இருக்கணும்னு அவர்கள் பேசிக்கும் போது, சிறியவர்களான எங்களுக்கு அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் ஏற்படாமல், ஒரு அச்சம், மடமை, புரளி பேசுவதாகவே முடிந்து விட்டது.

ஊர் பெரிசு, ரயில்வே, போலீஸ், சுற்றியிருந்த கடையிருப்புகள் எல்லாம் அவர்களைத் துரத்துவதிலேயே குறியாக இருந்ததால், எங்கள் பொழுது போக்கு, கற்பனை வளங்களை பெருக்குவதற்கு, நாங்கள் பார்க்க நினைத்த கீரி, உடும்பு, நரி, கருங்குரங்கு எல்லாம் கற்பனை உருவகமாகவே இருந்து விட்டது.