Sunday, April 29, 2012

அரச இலை

காலை நேரத்து இளம் வெயிலின் சூடு முகத்தில அடிக்கும் போது ஒரு வித ரசிப்போடு கண்ணை சுருக்கி கிட்டு அரச மரத்தடியில வந்து உட்காரும் போது எப்போதும் ஒரு தனி சுகமா இருக்கும். இன்னிக்கும் அவ்வாறே பல் துலக்கி கிட்டே வந்து அரச மரத்தடியில் வந்து உட்கார்ந்தேன்.

பக்கத்தில் ஒரு சின்ன மெதுவான அசைவோடு ராசக்கா என் தலையை கோதி விட்டுகிட்டு வந்து உட்கார்ந்துச்சு. வெயிலின் ஒளி கண்ணில் தெறிக்க மெதுவா ராசக்காவை ஒரு சாரைப் பார்வை பார்த்தேன்.

அக்கா ஒரு முறை என்னப் பார்த்து ஒரு புன்முறுவலிட்டுவிட்டு, தலை குனியும் போது அதன் முகம் கொஞ்சமா மாறுவதை உணர்ந்தேன். மறுபடியும் தலையைத் தூக்கி ஒரு அழுத்தத்துடன் 'என்ர வீட்டுக்குப் போய் வரலாம், வரையா?' என்ருச்சு.

எப்போதும் என்னை விட்டு விட்டு கடைக்கும் சந்தைக்கும் நடவுக்கும் போகும் அக்கா, அதன் பின்ன துரத்திகிட்டு ஓடும் எனக்கு, அக்கா உண்மையாத்தான் சொல்லுதான்னு இருந்துச்சு.

'சரி. பத்து நிமிஷத்துல கிளம்புன்னு' சொல்லிட்டு எழுந்திருச்சுப் போயிடுச்சு. யக்காவ் ன்னு கூப்பிடரத்துக்குள்ள போயிடுச்சு.

மாமனை கட்டிக் கிட்டதப்புரம் என்னிக்குமே தன் வீட்டைப் பத்தி ஒன்னும் சொல்லாது. மாமன் இல்லாம ஊருக்கோ ஊர் திருவிழாவுக்கோப் போவாது. இத்தனைக்கும் ராசக்கா வூடு அரை மணி நேரப் பஸ் பயணம் தான். மாமன்ட்ட அங்கப் போவணும்னு என்னைக்குமே கேட்காது. மாமன் ஏதாவது சொல்ல வந்தாலும் ஒன்னும் சொல்லாது.

இன்னிக்கு என்ன ஆயிருச்சுன்னு ஒன்னும் புரியாம, சரி, எங்க! அக்கா விட்டு விட்டுப் போயிருமோன்னு, துள்ளி குதிச்சு கிளம்பிட்டேன்.

வூட்டுக்குப் போய் அவசர அவசரமா கிளம்பி ராசக்கா வூட்டுக்குப் போறேன்னு அப்பனாத்த கிட்ட சொல்லி வெளியே வரும் போது, ஆத்தா சிரிச்சி கிட்டு வந்து இந்த கேப்பை கூழ ஊத்திக்கிட்டுப் போடா ரேன்னுச்சு.

கொஞ்சமா குடிச்சி வைச்சிட்டு வந்தா, அக்கா தயாராயி அரச மரத்தடி கிட்ட நின்னு கிட்டிருந்துச்சு.

எப்ப ரெடியாச்சு, எப்ப மாமன் கிட்ட பேசிச்சுன்னு கேட்கத் தோணிச்சு. கேட்டா அந்த காலை வெயிலின் இளஞ்சுவாசம் அக்கா மூஞ்சியிலிருந்து மாறிருமொன்னு தயக்கத்தோடு, அக்கா தெரிஞ்சிகிடாத மாதிரி  எப்போதும் போல ஒரு துள்ளல் குதியோட நடை போட்டேன். ராசக்கா இளஞ்சிரிப்போடு பின்ன வந்திச்சு.

பஸ் ஸ்டாண்ட் போற வரை சும்மா இருக்க முடியல. 'அக்கா! உன் ஆத்தாவைப் பார்க்கப் போறோமா' ன்னேன். ஒன்னும் பதில் வரலை. 'இன்னிக்கே திரும்பிருவோமா?' கேட்டதுக்கு, 'ஆமாம்லே!' என்ர ஒத்த வரி பதில் தான்.

பஸ்ல அக்கா பக்கத்தில உட்காரும் போது அக்கா முகத்தில ஒரு குதுகூலமான முகத்தோட பளபளப்பு தெரிஞ்சுது. 'என்னாலே! என்ன இப்பிடி பாக்கே!' ன்னுச்சு. ஒரு அசட்டுச் சிரிப்போடு சன்னல் வழியே வேகமா நவரும் வேப்பம் மரங்களைப் பார்க்க ஆரம்பிச்சேன்.

ராசக்கா ஊரு வந்தவுடனே அது வேகமா நட கட்டிச்சு. அக்கா ஸ்பீடுக்கு ஈடு கொடுக்க முடியாம கூட ஓடவும் நடக்கவும் செய்ய கால் நோவ ஆரம்பிச்சு. 'யக்காவ்! உன்ர ஆத்தாவப் பார்க்கிறப் போற உன்ர ஸ்பீட் முடியலக்காவ்!' ன்னேன். சிரிச்சிகிட்டே திரும்பி 'உன்ர வயசில நான் நடப்பேன்னு நினைக்கிற மம்முட்டிப் பயலே'ன்னுச்சு.

ராசக்கா போற ஸ்பீடப் பிடிக்கிறதுக்குள்ள அக்கா ஊர் ஆத்தங்கரைப் போயி தான் நின்னுச்சு.

'யக்காவ்! உன்ர வீட்டுக்குப் போவாம இங்க என்னப் பண்றே!' கேட்க்கிரதக் கூட கண்டுக்காம ஒரு சின்னப் புள்ள கணக்கா, அந்த அரசமரத்தை சுத்துவதும், திட்டு மேல ஏறுவதும், உட்கார்ந்து கால ஆட்டுவதும், ஆத்துக்குள்ள இறங்கி முங்கி எழுவதுமா பண்றதப் பார்த்த யக்காவ் என்னோட சிறுசா இருக்கும் போல என்றிருந்திச்சு.

கரையேறி அரச இலையை எடுத்து சேர்த்து கண்ணுக்கு கண்ணாடி பண்ணிக் கொடுத்தும் அதுவும் எடுத்து ஒன்னு மாட்டிக்கிட்டு என்னோட விளையாட ஆரம்பிருச்சு.

கொஞ்ச நேரத்தில வீட்டுக்கு கூட்டிப் போவும்னு நினைச்ச எனக்கு, ராசக்கா திரும்பி பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடையைக் கட்டுரதப் பார்த்து ஒன்னும் புரியல.

'அக்காவ்! வீட்டுக்கு ...' சொல்வதைக் கூட ஒரு சிரிப்போட பார்த்து 'வா! வூட்டுக்குப் போலாம்னு' பஸ் ஏறிருச்சு.

பஸ்சில ஏறி பக்கத்தில உட்க்கார்ந்து வுடனிருந்து பார்த்து கிட்டே வரேன், ராசக்கா முகத்தில ஒரு சந்தோசம், தானே சிரிச்சு கிட்டு, பஸ் சன்னல் வெளியே கைய ஆட்டிக் கிட்டே வந்துச்சு.

'அக்கா! ஒன்னும் புரியல. உன் ஊருக்கு எதுக்கு வந்த, ஊட்டுக்குப் போவாம ஆத்தங்கரையோட திரும்பற! பசிக்குது எனக்கு! ' ன்னு சொல்வது கூடப் புரியாம, 'உன்னாலத்தான்!' ன்னுச்சு.

ஒன்னும் புரியல. தலை நோவ ஆரம்பிச்சிருச்சு!

'என்னாலா! எதுக்குன்னேன்!'.

'ஏலே! காலையில எழுந்திருச்சு என்ன பண்ணுவே!'ன்னுச்சு.

ஒரு சலிப்போட 'என்ன! ஆத்தா கையில திணிக்கிற பல் துலக்கிற குச்சியோட அரச மரத்தடிக்கு வந்து குந்தறது தான், வேறென்ன!'.

ராசக்கா 'அதான்' ன்னு சொல்லி கையில இருந்த இலையைத் தூக்கி காமிச்சுது.

கையில 'அரச இலை'.

ஆச்சரியமும் சிரிப்பும் சேர்ந்து வந்துச்சு. ரெண்டு பெரும் சத்தமா சிரிச்சுக் கிட்டோம், பஸ்சில இருக்கிறவங்க பார்ப்பதைக் கூட கண்டுக்காம.

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

'அரச இலை'. நிறைவான கதை !

ஓலை said...

@ராஜராஜேஸ்வரி நன்றிங்க!