Sunday, May 27, 2012
வனச்சுவடு
பாணதீர்த்தம் போய் ஆறு மாதமானாலும் அந்த சூழ்நிலை நிகழ்வுகள் மனதை விட்டு விலக மாட்டேங்குது. முண்டந்துறை காடு அதன் வளம் ஒரு நீங்கா நினைவாக அமைந்து விட்டது.
எனது நண்பர்கள் நீண்ட காலமாக இயற்கை, வனாந்திரம், வன விலங்குகளை பார்க்க நீண்ட பயணம் செய்து வனச்சுவடு பதிப்பதில் பேரின்பம் அடைவர். இந்த தடவை ஒரு கீறி பாம்பை இழுத்துச் செல்லும் காட்சியைப் பார்த்ததிலிருந்து தனித்துவம் அடைந்து விட்டது எங்கள் பயணம்.
எனது நண்பர்கள் உணவை விரும்பிச் சுவைத்து சாப்பிடுவார்கள். அதற்கான முன்னேர்ப்பாடுகளை நன்கு செய்து விடுவார்கள். இந்த ஏற்பாடு எதுவும் இந்த தடவை இல்லை. முண்டந்துறை வனக் காவலர்களின் சமையல் காரரிடம் சொல்லி ஏதாவது செய்து கொள்ளலாம் என்று நினைத்ததும் நடக்கவில்லை. தாமிரபரணி ஆற்றின் மீன் சுவை அதிகம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தேடிய பெண்மணி சுட்டுக் கொடுக்க இல்லை.
வனக்காவலர்களே அங்குள்ள ஒரு சிறு உணவு விடுதியைக் காண்பித்தனர். விடுதி ஒரு கூரை வேய்ந்த ஒரு தடுப்புச் சுவற்றுக்குள் நான்கு மேசை மீது. தடுப்புக்கு பின் புறம் காட்டு விறகு வைத்து சமைத்துக் கொடுக்கும் ஒரு பெண்மணி, உதவிக்கு இருவர்.
சில நாட்கள் முன்னர் ஒரு சிறுத்தைப் புலி அந்த விடுதி முன் கண்டதினால், அங்கு யாரும் இரவில் தங்குவதோ, சமைப்பதோ கிடையாது. பாபனாசத்திலிருந்து பொருட்கள் கொண்டு வந்து சமைப்பதால் அங்கு காலையில் வந்து முன்பணம் கொடுத்து பதிவு செய்பவர்களுக்கு மட்டும் தான். முப்பது சாப்பாடு விற்றால் ரொம்ப பெரிய விஷயம் என்று அந்த பெண்மணி சொன்னார்கள். சைவ சாப்பாடு மட்டும் தான்.
நாங்கள் தான் முதலில் முன்பணம் கொடுத்தவர்கள். அருவியில் நன்கு குளித்து நல்ல பசியுடன் ஒரு மணிக்குத் திரும்பினோம். கடை நிரம்பி வழியுது. சிலர் அந்தப் பெண்மணியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். எங்களைப் பார்த்தவுடன், முதல்ல பணம் கட்டிய எங்களுக்கு உணவு இல்லாமப் போயிடுமோன்னு ரொம்ப விசனப் பட்டுது.
எங்களுக்கு ஒரு இடம் ஒதுக்கி சோறு போட்டாங்க. அவங்க பண்ணியிருந்த கொஞ்சமா பூண்டு போட்ட ஒரு மிளகு ரசம், கோசுப் பொரியலுடன் நல்லா இருந்தது. நானும் பையனும் ரசிச்சு சாப்பிட்டோம். ஒரு சின்ன டம்ளர் ல ரசம் குடிக்க கிடைக்குமான்னு நான் கேட்டவுடன் அந்தம்மா முகம் மலர்ந்து கொண்டு வந்து கொடுத்தாங்க.
கடையில கூட்டம் அதிகம் இருந்ததால எங்க மேலும் கேட்டுருவோம்ன்னு ஒரு கவலையும் அவங்க முகத்தில இருந்தது.
வெளிய வரும் போது உணவு ரொம்ப நல்லா இருந்ததுன்னு நாங்க சொன்ன வுடனே அந்த அம்மா முகத்தில கொஞ்சம் ஆனந்தக் கண்ணீர். இத்தனை நேரம் இந்த சோறு தான் சரியில்லைன்னு இத்தினி நேரம் சண்டப் போட்டுட்டு போறாங்கன்னாங்க.
நாங்க உண்மையிலேயே சொல்றோங்க. நீங்களே என் பையன் சாப்பிட்டதைப் பர்த்தீங்கலேன்னு சொன்ன வுடன் இன்னும் சந்தோசமாயிட்டாங்க.
நிறைய நாட்கள் இருபது சாப்பாடு கூட விற்க முடியாம காட்டுல கொட்டியிருக்கோம். இன்னிக்கு நீங்க தான் முதல்ல பணம் கொடுத்தது, முப்பது பேருக்கு சமைச்சதை ஐம்பது பேருக்கு கொடுக்க வேண்டியதாயிட்டுது. உங்களுக்கே இல்லாமப் போயிருமோன்னு கொஞ்சம் சோறு எடுத்து வைக்கச் சொன்னேங்கன்னாங்க. எங்கள் மனம் நெகிழ்ந்து விட்டது. நல்ல சோற்றுடன் கரும்பு தின்னக் கூலி.
ஒரு காட்டில், வெளியூர் லிர்ந்து பொருள் கொண்டு வந்து சமைத்துக் கொடுக்கும் ஒரு பெண்மணியின் செயலை, ஒரு உதவியாகப் பார்க்க முடியாத படி நம்ம சனம் இருக்கு. வியாபார ரீதியாகப் பார்த்தாலும் இரு நூறு முன்னூறுக்கு மேல் சேர்ந்திருக்காது. அதற்கும் எவ்வளவு ஒரு கடினமான உழைப்பு.
நாமும் நம் வீட்டில் இதே தவறு செய்கிறோம். வனச்சுவடுகள் நல்ல பாதை அமைத்துக் கொடுக்கட்டும். :)
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வீட்டுல இடி சோறு தின்னுறவனுக்கு கூட வெளியில வீரம் வரும். நல்ல கட்டுரை சேது.
நன்றி பாலா சார்!
Post a Comment