Sunday, March 11, 2012

வலையூர் பட்டி கணக்கு

செல்வம் மாமன் தோள் மேல கை போட்டு ஒரு வாஞ்சையோட இழுத்து கிட்டுப் போனாலும், தன் மேல் விழுந்த கையின் வலுமை கொஞ்சம் குப்பண்ணன் மனசை இறுக்கி பிடிச்ச மாதிரியே இருந்தது.

ஊரை பார்க்க வந்தேன் மாமான்னு  சொன்னாலும், அது இருக்கட்டும் மாப்பிள்ள, நீங்க வாங்கன்னு வீட்டுக்கே இழுத்துக் கிட்டுப் போயிருச்சு.

அப்பன் கிட்ட சொல்லாம வந்ததுக்கு வசவு வேறு இருக்குன்னு நினைக்கும் போது குப்பண்ணனுக்கு ஒரு பேச்சும் வரமாட்டீங்குது.

குப்பண்ணன் மெதுவா செல்வம் மாமன் கைய நவுத்துனதும், 'பயப்படாத மாப்ள , அப்பன் கிட்ட சொல்லலைன்னு' மாமன் மெதுவா சொல்ல, மாமன் இப்பிடி மனசைப் படிக்குதேன்னு குப்பண்ணனுக்கு இன்னும் பயம் சேர்ந்து ஒட்டிகிச்சு.

விட்டா ஓடுவதர்க்கே இருந்த குப்பண்ணனுக்கு, அல்லியாம்மா மொவத்தைப்  பார்க்க தைரியம் இல்லாம, மாமன் கிட்ட சொல்லி கிட்டு வயல்வெளி  நோக்கி  நட கட்டிச்சு.

குப்பண்ணனுக்கு மனசு சரியில்லைன்னாலும் சந்தோசமாயிருந்தாலும் ஒத்தையடி வயல் பாதையிலோ ஆத்தங்கரை வோரமா நடக்கத்தான் விரும்பும்.

நடவுக்கு வந்த புள்ளைங்க தன்னைப் பார்த்து சிரிப்பதாகவே தோன்றியதால், எங்கயும் நிக்காம மனசு ஊரை பார்க்கக்  கிளம்பிடுச்சு.

இத்தனையும் மத்தவங்க மூலமே கேள்விப் பட்ட அல்லியம்மா, மாமன் தன்னை ஒன்னும் பார்க்காமலேயே ஊர் திரும்பரதைப் பார்த்து ஒரு அழுகாச்சியா அழுவ, வந்ததே கோவம் அதுக்கு.

'எந்த சிறுக்கி மவன் என் மாமனை கல்லெடுத்து அடிச்சுதுன்னு' ஒரு கத்து கத்திகிட்டே வயல் பக்கம் ஓடிச்சு. எதிர கர்ணம் வீட்டு கணக்கின் மவன் சுந்தரவதனம் வர, மாமன் எங்கேன்னு கேப்போம்ன்னு அவனை நிறுத்திச்சு.

அரண்டு போன சின்ன கணக்கு மொவமே  மாறிருச்சு. அல்லியம்மா கோவம் அம்புட்டும் சுந்தரவதனம் மேல சந்தேகத்தோட திரும்பிருச்சு.

'எலேய்! வலையூர் பட்டி கணக்கு! வாரா இங்கே'ன்னு இழுக்க, பயந்து போன சுந்தரவதனம், 'யக்காவ், தெரியாம கல்லை இட்டுபுட்டேன்'னு சொல்லிட்டு ஓட ஆரம்பிச்சவனை துரத்திகிட்டே ஓட ஓட, சுத்து வட்டம் அலப்பறை பண்ணுவதை கூட கண்டுக்காம அல்லியம்மா ஓடிச்சு.

நடவுக்கு வந்த புள்ளைங்க சத்தமா கூவி சிரிக்க, சிரிக்க, எதிர வந்த ஆளை மோதுறது கூட தெரியாம ஓடிச்சு. திடீர்ன்னு நின்ன சுந்தரவதனம், 'யக்காவ், அதான் உன்ர மாமன் 'ன்னு சொல்லிட்டு ஓடிட்டான்.

எலேய்! வலையூர் பட்டி கணக்கு! வைச்சுகறேண்டா உனக்கு ஒரு நாளுன்னு, சொல்லிப்புட்டு, தன் மாமன் நினவு வர கோவமா  மாமனை நோக்கி திரும்பிச்சு.

குப்பண்ணன்க்கு தான் கட்டிக்கிரப் புள்ளையைப் பார்த்து  ஒரு துளி  என்ன சொல்லன்னு திகிலோட கலந்த ஆச்சரியம்.

 'என்னைப் பார்க்கத்தானே வந்தே நீ'ன்னு கேட்கும் அல்லியம்மாக்கு, மறுபடியும் ஊரைப் பார்க்கத்தான்னு சொன்னா  இங்கயே கொன்னுபுடப்  போவுதுன்னு நினைப்பு வர, எதையோ சொல்லிப் புட்டு நடையை கட்டிருச்சு.

அல்லியம்மா மனசு நோவ ஆரம்பிக்க, அழுகாச்சிய அடக்கிகிட்டே இத்தனைக்கும் காரணம் அந்த சிறுக்கி மவன் வலையூர் பட்டி கணக்கை வைச்சுக்கிறேன் ஒரு நாளுன்னு கருவிச்சு.

நடவு புள்ளைங்களைப் பார்த்து ஒரு முறை முறைச்சுக்கிட்டே போங்கடி போக்கத்தவகன்னு  வைஞ்சுகிட்டே வூட்ட நோக்கி நடக்க ஆரம்பிச்சுது.

1, 2.

2 comments:

கலாகுமரன் said...

யார் என்று அறிய 222 பேர் தேடியிருக்கிறார்கள் கவனிக்கவும்.

ஓலை said...

@kalakumaran. நன்றிங்க. தொடர்ந்து எழுத முயல்கிறேன்.