Saturday, December 11, 2021

நினைவுகளில் புரண்டாடும் வயதில் - 8

காலனி வாழ்க்கையில நாம மறக்க முடியாத நமக்கு சமமாக எல்லோருடனும் எல்லா வயது க்ரூப்களோடும் சரிசமமாக விளையாடுபவன் மனோ என்கிற மனோகரன் சண்முகம். எல்லோரும் அவனுக்கு ஆப்பையன்னு பட்டப்பேரு வச்சு கூப்பிட்டலும் கவலைப்பட மாட்டான். என்னோடு வயதில் ஓரிரு வயது பெரியவனானாலும் சிறந்த நண்பன். உயிர் காத்த தோழன்.

M A சண்முகம் மாமாவோட மூன்றாவது பையன். அவன் உடன்பிறந்தவர்கள் சிவஞானம், நித்யானந்தம், தனம்,  சசிகலா, வசந்தி. அவன் பெரிய அக்கா பேர் இப்ப எனக்கு மறந்துருச்சு. இவங்க எல்லோரும் எங்களுக்கு மிக நெருக்கமானவர்களானும் மனோ முற்றிலும் வித்தியாசமானவன். 

நல்ல உடல்வலிமை, மிகுந்த தைரியம் துணிச்சல், படிப்பைத் தவிர அவன் வாழ்வில் அவனுக்கு கடினமாக எதுவுமே கிடையாது. எல்லா விளையாட்டும் எல்லா வயதினரோடும் துணிந்து விளையாடுவான். எல்லோருக்கும் மிகவும் அவனைப் பிடிக்கும். Easygoing type கர்வம் கிடையாது, கொஞ்சம் எங்களோடு பெருமை அடிச்சாலும். ஸ்டாப் அசோசியேஷன் கம்பங்களில் அவனோடு உட்கார்ந்தது விளையாடியது அதிகம்.

பபுள், சார்லஸ், முரளி கிருஷ்ணராவ், சிவகுமார் மேல் லைன் பசங்களுக்கு ஈடுகொடுத்து அவங்களோடு கில்லித்தாண்டல் மற்றும் பல கேம்ஸ் ஆடுவான். காலனியில தார்ரோடு போடுவதற்கு முன் எங்களுக்கு மண் தரையில விளையாடுவது வசதி. 

எல்லோரும் முதலிலில் குழுமுகிற இடம் அரசமரத்தடி. பபுல் (babul) கில்லித்தாண்டலில் அரச மரத்தடியிலிருந்து அடிச்சான்னா, அது நேரா ஹாஸ்பிடல் தாண்டி அந்த A line முதல் வீடு தென்னை மரம் பக்கத்துல போய் விழும். பபுலோட goal ரெயில்வே தண்டவாளம் வரைக்கும் அடிக்கனும்ன்னு முயற்சிப்பான். அதை, அந்த கில்லியை, அங்கிருந்து திருப்பி தூக்கிப்போடும் போது சிலருக்கு சினிமா கம்பம் தாண்டி கூட போட முடியாது. மனோ அவங்களுக்கு ஈடு கொடுத்து ஆடுவான். சர்வ சாதாரணமாக அங்கிருந்து throw பண்ணி தாண்டலுக்கு பக்கத்தில் வர்ற வரை அவனால் செய்ய முடியும்.

இந்த கேமை இவங்க ஒரு கட்டத்துல முரட்டுத்தனமாக விளையாடி தோற்றவனை கில்லி அடிச்சு கிட்டே விளையாடி டேம் வரைக்கும், தங்கமாபுரிபட்டணம், கவிபுரம் வரைக்குமெல்லாம் போயிருக்காங்க. என்னால் இவர்களோடு ஆடுவது கடினம். உடம்பில் வலுவில்லை. சகாய் செல்வன் நந்து, முரளி கிருஷ்ணராவ், ஜெயபால் இலியன் முரளி, குமார் (சுப்பாமணி) , சுரேஷ் ராஜாராம் ஆகியோரோடு நிறுத்திக் கொள்வேன். இந்த கில்லி விளையாட்டு முரட்டுத் தனத்தில் பெரியவர்கள் object பண்ண, அப்புறம் அசோசியேஷன் உள்ள இடம் மாறியாச்சு.

அடுத்து மனோ, சகாய் செல்வன் வேலாயுதம் ஈச்சு பாஸ்கரோடு முரளி கே ராவ், இலியன் முரளியோடுவடேபுள் டென்னிஸ் (இங்க அதை ping pong game எனபர்) செமையாக விளையாடுவான். கேரம் போர்ட், பால் பேட்மிண்டன் எல்லாத்திலும் சாஸ்திரி பாலு அண்ணா, விஜயன் போன்றோரோடு சர்வசாதாரணமாக போட்டி போட்டு விளையாடுபவன்.

கிரிக்கெட்டிலும் ANR, kumar (hostel), s raju, குமார் ( p raju), உன்னி (prem), காமராஜ் போன்றோரோடு விளையாடுவான்.

சினிமா கம்பம் முன் நாங்க ஆடற டென்னிஸ்பால் கிரிக்கெட்லையும் இவன் தான் ஹீரோ. இதுல எங்க பசங்க பேர் ஒரு பெரிய லிஸ்ட் போடனும். வயசு வித்தியாசமே இல்லாத ஒன்னு. மிக நிறைவான வாழ்க்கை கொடுத்த இடம் இது.

B1ல் இருந்த காலத்தில் cheena அடிக்கடி வீட்டிற்கு வருவார். அப்ப அந்த ப்ரீயடில் தியாகு சீனா தலமையில் பாலமலை போலாம்ன்னு முடிவு செய்ஞ்சு காலனியிலிருந்து எல்லா பசங்களும் போனோம். காலையில் நெரிஞ்சிப்பேட்டையில் துவங்கி பாலமலை உச்சியை அடையும் போது மதியம் 1 1/2 இரண்டு மணி. என்னால் சீனாவால் முக்கால்வாசி தூரம் மேல் ஏறமுடியவில்லை. தவிச்சுட்டோம். எதற்கும் அஞ்சாத மனோக்கு இதுவெல்லாம் சர்வசாதரணம் மாதிரி ஏறி நிற்பான். 

திரும்பி வரும்போது 5 மணிவாக்கில் வழி தவறி காட்டில் அலையிற சமயத்தில் இருட்ட ஆரம்பிக்க காட்டில் ஒருத்தர் வழிகாட்ட இரவு எட்டு மணிக்கு மேல் கீழ இறங்கினோம். அன்னிக்கு இரவு காட்டுல உணவு இல்லாம கரடிகளோடு தங்க வேண்டிவரும்ன்னு நினைச்சேன். வீடு திரும்பும் போது இரவு 9.30.

திரும்பி வந்தா எங்க வீட்டு வாசல்ல எல்லோரட பேரண்ட்ஸும் நிக்கறாங்க. பாலு வாத்யார் பையன் பவானி சங்கரும் இந்த க்ரூப்ல வந்ததுல பாலு வாத்யார் அவர் பையனை கண்ணுல திரும்பிப்பார்க்கிறவரை எங்க வீட்டு வாசல்ல அமர்களம் பண்ணி வச்சுருக்கார். எங்களுக்கெல்லாம் செம திட்டு.

இந்த பாலமலை போன அத்தனை பேரும் அதே மாதிரி அந்த சம்மர் முழுவதும் டேம்ல நீச்சல் கத்துக்கலாம்ன்னு இறங்கினோம். 

தினமும் மதியம் வீட்டுல யாருக்கும் தெரியாமப்போவோம். அந்த க்ரூப்ல தியாகுக்கு மட்டும் நீச்சல் தெரியும். சீனா ரமேஷ்(போஸ்ட் மாஸ்டர் பையன்)க்கு ஓரளவு தெரிஞ்சாலும் ரொம்ப தூரம் போகத்தெரியாது.

ஒரு நாள் நாங்க கரையில நீச்சல் அடிக்க ட்ரை பண்ணிகிட்டு இருந்தோம். சுரைக்குடுவை ரப்பர் ட்யூப் எதுவும் கிடையாது. உள்ள முழுகி கை கால் அடிக்க முயற்சி செய்வது தலையை தண்ணியை விட்டு தூக்க முயற்சி செய்வது. அவ்வளவுதான்.

நானும் நந்துவும் கரையில தத்துக்கா பித்துக்கான்னு அடிக்க பக்கத்துல எங்களைப்போல சுத்தமாக நீச்சல் தெரியாத மனோ நின்னுகிட்டு இருந்தான். நந்து திடீர்ன்னு தண்ணியில கொஞ்சம் தள்ளிப்போய் முழுக மனோ அவனைக் காப்பாத்த அவன் கையைப்பிடுச்சு தூக்குறான். நந்துவோட இன்னொரு கை என் கையில் பட்டு அவன் என்னை இழுக்க இரண்டு பேரும் மாறி மாறி முழுகறோம். மனோ நீச்சல் தெரியாம எங்களை வெளியே எடுக்க முயற்சி செய்ய, கடைசியில அவன் நந்துவை இழுத்து வெளிய தள்ள அடுத்து என்னை இழுத்தான். சிறு விநாடித்துளிகள் தான் இரண்டு பேரும் உள்ள தண்ணியை முழுங்க எத்தனிக்கிற நேரத்துல, நான் அவ்வளவு தான் இன்று லைஃப் முடிஞ்சதுன்னு நினைக்குற அந்த ஷணத்துல வெளிய இழுத்துட்டான். 

வெளிய வந்த நான் சமாளிச்சுட்டேன். ஆனால் நந்து நிறைய தண்ணி குடித்ததால் வெளிய வந்தும் மூச்சு விட சிரமப்பட்டு தலை குப்புற குனிஞ்சு வெளிய எடுத்து சமநிலைக்கு வந்தான். வெளிய வந்து பார்த்தா எங்களோடு நீச்சல் தெரிஞ்சவங்க எல்லாம் தண்ணியில தள்ளி ஒரு பாறை மேல உட்கார்ந்திருக்காங்க! நீச்சல் தெரியாத மனோவினால் நானும் நந்துவும் இன்று உயிரோட இருக்கிறோம்.

இத்தோடு மனோவும் நந்துவும் டேம் போறதை நிறுத்திட்டாங்க. நான் விடலை. I don’t give up anything easily.

அப்ப என்னோடு p b gopalan மாமா பையன் கஸ்தூரியும் எங்களோடு நீச்சல் கத்துக்க வந்தார். அப்புறம் நிறைய தடவை நானும் கஸ்தூரி மட்டும் போவோம். நான் ப்ளஸ் 2 படிச்சுட்டு இருந்தேன், கஸ்தூரி C A பண்ணிகிட்டு இருந்தார். மதியம் இரண்டு மணிக்குப் போவோம். மேல பம்ப் ஹவுஸ்ல பஞ்சு சித்தப்பா சில சமயம் ட்யூட்டியிலிருப்பார். என்னடா இது வீட்டுல சொல்லாம வர, சரியில்லைடாம்பார். ஓரிரு நாள் கொஞ்சம் இறங்கி எங்களை கவனிப்பார்.

அந்த ப்ரியட்ல கஸ்தூரியோட போன நாட்களில் நான் ஓரளவு கத்துகிட்டேன். கஸ்தூரியினால முடியலை. என்னால how to swimன்னு புக் எழுத முடியும்டாம்பார். ஒரு மாதம் தொடர்ந்து போனோம்.

ஆனால் ஒரு நாள் திடீர்ன்னு எங்க கிட்ட சொல்லாம காமாட்சி டீச்சர் பையன் ராதாவும், ரமேஷ் வீட்டுக்கு வந்து அவர்கள் அத்தையின் வளர்ப்பு பையன் குமாரும் சொல்லிக்காம டேம்ல போய் குளிச்சு தண்ணீரில் மூழ்கி குமார் இறக்க, ராதா ஓடி வந்து சொல்ல. நாங்கெல்லாம் ஓடினோம். ரமேஷ் அவன் மூழ்கின இடத்துல குதிச்சுப் பார்க்க கிடைக்கல. ரமேஷ்ட்ட நானும் வரட்டான்னு கேட்க, ரமேஷ்: நீங்க இப்ப தான் கத்துக்கறீங்க பிழைக்க முடியாது, உள்ள தம் கட்ட முடியாது இருங்கன்னு, இன்னொரு டீப் முழுகலில் குமார் தலைமுடி சிக்க வெளிய எடுத்து வந்தார். 

வீட்டுக்கு வந்து அன்னிக்கு நாங்க வாங்கின திட்டுகள், காலனியே எங்களை ஒரு மாதிரி பார்க்க, அதோட முடிந்தது நாங்கள் டேமில் நீச்சல் கத்துக்கிற வித்து. 

மனோக்கும் நந்துக்கும் இன்னும் நீச்சல் தெரியாதுன்னு நினைக்கேறன். நான் அஸ்ஸாம்ல பிரம்மபுத்திராவில் கூட ஒரு தடவை பரிசலில் சுழலில் மாட்டி மூழ்கியிருப்பேன். பிழைச்சாச்சு.

மனோக்கு என்றும் நன்றியுடன் இனிய மேட்டூர் வாழ்க்கை நினைவுகளில்.

பிகு: வேந்தன், மனோ, நான் (photo courtesy: Subramanian Vaidyanathan chemist மாமா). வேந்தன் தோள் மேல் சாய்ந்திருப்பது மோகன்தாஸ் போல் உள்ளது.

வாழ்வினிது
ओलै सिरिय ।

No comments: