Friday, December 10, 2021

நினைவுகளில் புரண்டாடும் வயதில் - 6

காலனி வாழ்க்கையைப் பற்றி நினைவுகூர்ந்து எழுதும் போது நான் தவிர்க்கும் சில விஷயங்களை சிலர் வேண்டுமென்றே கிளப்பிவிடுகிறார்கள். ஒவ்வொரு போஸ்டின் தொடராக சிலர் காலனிக்குள் இருந்த வேறுபாடுகளை ஜாதி மத உணர்வுகளையொட்டி திசை திருப்பற மாதிரி கமெண்ட்ஸ் மற்றும் பதிவுகள் வருது. இவை வரத்தான் செய்யும், தவிர்க்க இயலாது. அது அங்கு இல்லாமலில்லை, இருந்தது. ஆனால் நான் அதை என் பதிவுகளில் கடந்து செல்ல விரும்புகிறேன்.

இந்தியாவில் ஜாதி மத வேறுபாடுகளெல்லாம் ஆயிரம் காலத்து பயிர் மாதிரி. எல்லா இடத்திலும் பரவிக்கிடந்தது. அது நம் காலனியில் இல்லாமலா இருந்தது. கண்டிப்பாக இருந்தது. எல்லோரும் பார்த்து வந்தது தான்.

ஆனால் அதை அன்றைய காலகட்டத்தில், நான் சிறுவனாக இருந்த காலத்தில், எல்லோரும் இது அவரவர் ஜாதி மற்றும் குலவழக்கம்ன்னு அதிகம் கண்டுக்காம இருந்தாங்க!

ஏன்னா காலனிக்குள்ள இருந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கான எம்ப்ளாயி பெனிஃபிட்டில், குழந்தைகளுக்கான கல்விச்சாலைகள், விளையாட்டு வசதிகள், ஆசிரியர்கள் நியமிப்பதில், வேலை வாய்ப்பிலெல்லாம் ஓரளவுக்கு மிக சமமாகவே கிடைத்து வந்தது. எல்லா ஜாதி மதத்தினரும் இருந்தனர்.

இதை எல்லாவற்றையும் விட இந்த கம்பெனியை மாமன் மச்சான் கம்பெனின்னு சொல்ற அளவுக்கு ஒவ்வொரு எம்ப்ளாயியோட அண்ணன் தம்பிகளுக்கும் மாமன் மச்சான்களுக்கும் சுலபமாக வேலை கிடைத்தது, அதே குடியிருப்புகளில் வீடு, அதே பள்ளிகள், அதே கோஆபரேட்டிவ் ஸ்டோர், அதே லோன், அதே வாழ்க்கை தான். அதே குறைவான சம்பளம், நிறைவான பெனிஃபிட்ஸ் தான் சகலருக்கும் ஒன்றாக கிடைத்தது. எல்லோரும் ஒன்றாகவே வாழ்ந்தோம். ஒரு குடும்பம், குழுமம் இன்னொரு குடும்பம் குழுமத்தில் திருமணம் செய்து வைப்பது வரை இருந்தது.

மேட்டூர் கெமிக்கல்ஸ் பிராமண முதலாளிகளால் ஆரம்பிக்கப்பட்டு, நிறைய பிராமணர்கள் தலைமைப்பதவியிலிருந்தாலும், சிலவற்றை ஆழ்ந்து நோக்கும் போது, அவங்க கொடுத்த, நான் மேலே சொல்லியுள்ள வசதிகள் எம்ப்ளாயீ பெனிஃபிட்ஸெல்லாம் எல்லோருக்கும் ஒரே அளவு தான். சில வித்தியாசங்களிருந்தன, பார்த்திருக்கேன். ஆனால் அதை பிரதானப்படுத்தி முக்கியமாக சொல்லவேண்டியவற்றை குறைத்து மதிப்பிடுவது தவறு.

எல்லா எம்ப்ளாய்ஸ்க்கும் அப்ப சம்பளம் ரொம்பவே குறைவு. வெளிய சொல்லிக்க முடியாத அளவுக்கு குறைவு.

ஆனால் சம்பளம் தவிர மற்றவைகளை லிஸ்ட் பண்ணினால்:
இலவச மற்றும் குறைந்த பிடித்தத்துடன் வீடு, தண்ணீர், plumber, free plumbing, எலக்ட்ரிசிட்டி, எலக்ட்ரீஷியன், கல்விச்சாலைகள் ஹைஸ்கூல் வரை, மருத்துவர்கள், நர்ஸ்கள், வைத்திய சாலைகள், காலனிக்குள்ளே maternity ward, அதிகாரிகளின் கார்களே எல்லோருக்கும் ஆம்புலன்ஸ் மாதிரி, ஆண்களுக்கும் பெண்களுக்கும் விளையாட்டு மைதானங்கள் விளையாட்டுற்குத் தேவையான உபகரணங்கள், ஹாஸ்டல் வசதி, கேண்டீன், ஆன்மீக வழிபாட்டுத்தளங்கள் கோவில், பஜனைமடம், ஸ்டாஃப் அசோசியேயஷனே நமக்கு கல்யாணமண்டபம் மாதிரி, well protected secured family quarters with 24x7 security guards.

இது மாதிரி இன்னும் பெரிய லிஸ்டே என்னால் எழுத முடியும்.

ஒவ்வொருத்தர் சம்பளத்தோட இதையெல்லாம் கணக்கிலெடுத்தா, அங்கிருந்த தொழிலாளிகள் ஒவ்வொருவரும் பணக்காரர்களே! இதற்கெல்லாம் அத்தாட்சி மற்றும் பலன் இன்று காலனியின் அந்த சூழ்நிலையில் வாழ்ந்தவர்கள் இன்று பல நகரங்களில் பல நாடுகளில் எல்லோரும் சிறந்ததொரு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இவ்வாறு வாழ அந்த மேட்டூர் கெமிக்கல்ஸின் அன்றைய நிர்வாகம் வழி வகுத்துக் கொடுத்தது.

சம்பள உயர்வுக்கு மிகவும் உயிர் கொடுத்துப் போராடியது அதே தொழிலாளிகள், தொழிற்சங்கங்கள், சம்பள உயர்வுகள் நிறைய வந்தது. சம்பளம் உயர உயர இதற்கு முன் கிடைத்த இலவச பெனிஃபிட்ஸெல்லாம் குறைந்த கட்டணங்களாக மாறியது, ஆட்டோமேஷன் வர வர விஆர்எஸ் வேலை வாய்ப்பு போச்சு, கடைசியல எல்லா பெனிஃபிட்ஸும் போச்சு. இப்ப காலனியே போச்சு. சம்பள உயர்வ கேட்காம இருக்க முடியாது, தொழிற்சங்கம் இல்லாம இருக்க முடியாது. எல்லாம் தேவையே!

தராசு ஒரு பக்கம் ஏறிச்சுன்னா இன்னொரு பக்கம் இறங்கத் தான் செய்யும்.

ஆனால் அத்தகைய வாழ்வின் ஏற்றத்தையும் இறக்கத்தையும் பார்த்த என்னால் காலனி வாழ்க்கையை வெறும் ஜாதி மதவேறுபாடுகளுக்குள் மற்ற ஏற்றதாழ்வுகளுக்குள் குறுக்கிக் கொள்ள விரும்பவில்லை, நான் பார்த்த அந்த பசுமையான வாழ்க்கையை நான் அந்த கோணத்திலேயே பதிவு செய்ய நினைக்கிறேன்.

நீங்கள் அந்த வாழ்க்கையை, இன்று தமிழகத்திலும் இந்தியாவிலும் இப்போது இருந்து வரும் அரசியல் மற்றும் ஜாதி மத வேறுபாடுகளோடு இந்த மேட்டூர் கெமிக்கல்ஸ் வாழ்க்கையைப் பார்க்க விரும்பினால் அது உங்கள் விருப்பம். 

நானும் அங்கு மாணவனாக இருந்த போதே அரசியல் கல்வியையும் பள்ளி கல்லூரி நேரம் போக எட்டு வருடம் முறையாகப் பயின்றவன். ஆனால் அந்த கோணத்தில் காலனி வாழ்க்கையைப் பார்ப்பது ஒருபட்சமானது. சரியல்ல.

என் பதிவுகளின் நோக்கத்தை திசை திருப்பாமல் நான் செல்லும் பாதையில் இதைத் தொடர விரும்புகிறேன்

வாழ்வினிது
ओलै सिरिय ।

No comments: