Sunday, December 5, 2021

நினைவுகளில் புரண்டாடும் வயதில் - 3

காலனி D line வாழ்க்கை எனக்கு மிக பசுமையானது. ஆனந்தமாக துள்ளி வளர்ந்ததோடில்லாம சிறுவயதில் போட்ட/ போடற சின்ன சின்ன சண்டைகளோட வளர்ந்த பருவம். எதுவும் மனதை விட்டு அகலவில்லை.

அதே போல் டி லைனில் இருந்தப்ப பார்த்த சில மரணங்களும் மனதை விட்டு அகலவில்லை. 

நான் பிறந்து ஒரிரு வயது இருக்கும் போதே அப்பாவின் அண்ணா கிச்சா பெரியப்பா இறந்து டி13 வாசல் திண்ணையில் வைத்திருந்தபோது நான் அம்மா காலை கட்டிக்கொண்டு நிற்பது தெரிகிறது.

ஐந்தாறு வயது இருக்கும் போது D15ல் கம்பௌண்டர் வெங்கட்ராமன் மாமா இறந்தது. ஜெயராமன் அண்ணாவும் சுந்தரராமன் அண்ணாவும் முன் செல்ல, அவர் பேரன் தினேஷ் நெய்பந்தம் பிடிக்க, காலனி் மேல்லைன் நாரயணன் மாமா, சித்தையர் பக்கத்து வீடு வெங்கட்ராமன் அண்ணா ஆகியோர் தூக்கிச் செல்வதை நானும் பக்கத்து வீட்டு கே கே ஜெயஶ்ரீயும் எங்கள் சிறுவயதில் அவள் வீட்டில் கீழே உட்கார்ந்து கொண்டு ஒரு பயம் கலந்த உணர்வுடன் அவர்கள் எடுத்துச் செல்வதைப் பார்த்தது.

இன்னொன்று செக்யூரிட்டி ஆபீசர் ராமராவ் மாமாவுடையது. வெளியே ஆஸ்பத்திரியில் மரணமடைந்த அவரை வீட்டிற்கு சாகர் கொண்டு வரும் போது அவரை காரில் இறக்கும்போதே சாகர் உரக்க அப்பா போயிட்டார்ன்னு வீதியிலிருந்து உஷா லல்லி பேரைச் சொல்லி அலறியது இன்னும் மனதிலிருக்கிறது. 

அதிகம் பாதித்தது மார்க்கெரெட்டோடது. என்னை விட இரண்டு வயது பெரியவள். எனக்கும் செல்வனுக்கும் மூனு நாலு வயசுலேர்ந்து ஏழெட்டு வயது வரை சண்டை வரும் போதெல்லாம் எங்களுக்குள் மத்தியஸ்தம் அவள் தான் செய்வாள்.

சகாயோட எனக்கு அதிகம் சண்டை வராது. செல்வத்தோட இரண்டு மூனு நாளைக்கொரு்தடவை ஏதோ ஒரு சில்லறை சண்டை வந்துடும். நானும் அவனும் ஒரே வயசு, சகாய் சின்னவன். அவங்க வீட்டு திண்ணையிலோ, அல்லது அவங்க வீட்டு சைடுல அவங்க வீட்டு வாசல்ல, அரசமரத்துல போய் விளையாடுவோம்.

சகாயோட சண்டை வராது. ஆனால் செல்வம் ஒரு சின்ன சண்டை வந்தா கூட போதும், நேரா மார்கெரட் கிட்ட போய் சொல்லிருவான். அவள் உடனே கூப்பிட்டு அட்வைஸ். சமாதானமாயிடுவோம் அங்கயே விளையாட்டு தொடரும். அடிதடி நடந்தாலும் கூப்பிட்டு சொல்லுவா ஏண்டா இப்படி அடிச்சுக்றீங்கம்பாள்!

ஒரு தடவை சண்டையில செல்வம் என்னை நீ போய் ஜெயஶ்ரீயைக் கல்யாணம் பண்ணிக்கன்னு சண்டையிலத் திட்ட, நான் அவன்ட்ட நீ போய் மார்கரெட்டைக் கல்யாணம் பண்ணிக்கன்னு திட்ட, அவன் நேரா போய் மார்கரெட் கிட்ட சொல்லிட்டான். 

அவ்வளவு தான். எப்போதும் போல் அவள் கூப்பிட்டு, அவளும் ஏழாவதோ என்னவோ தான் படித்துக் கொண்டிருந்தாள், என்னிடம் எப்படிடா அக்கா தம்பி கல்யாணம் பண்ணிக்க முடியும்ன்னு அவங்க வீட்டு திண்ணையில கேட்க, ஏண்டா நீங்க சண்டை போடறதுக்கு இதெல்லாமாட பேசுவிங்க, இதுக்கு குச்சி எடுத்து அடிச்சுகிட்டீங்கன்னா பரவாயில்லைடா, சின்ன வயசுல எதைச் சொல்றது கூடத் தெரியாம சண்டை போடறீங்கடான்னாள். யாருக்குத் தெரியும் அந்த வயசுல எப்படி சண்டை போடனும்ன்னு.

அவள் திடீர்ன்னு இறந்தது எனக்கு பெரிய இழப்பு. நல்லது கெட்டது எல்லாத்துக்கும் ஆறுதலாக இருப்பாள், எடுத்துச் சொல்வாள். எதனால் அவள் மரணம்ன்னு இன்னும் அதிர்ச்சியாக இருக்கு. பிறகு ரீட்டா அக்காவும் ஸ்டெல்லா அக்காவும் அவள் தலைமாட்டுல உட்கார்ந்து அவள் தலையிலிருந்து வந்த பேனை ஒவ்வொன்னா நசுக்கி கிட்டே இருந்தோம்ன்னு சொன்னதைக் கேட்டது இன்னும் அதிர்வாக இருந்தது. ஒட்டு மொத்த காலனியே அவள் இறுதி ஊர்வலத்துக்குப் போச்சு. அந்த ஊர்வலத்தை அரசமரம் வரை சென்று பார்த்து அங்கயே நின்று விட்டது மனதை விட்டு அகலவில்லை.

அதே போல் பத்தாவது படிக்கும் போது T G ரங்கன் மாமாவோட மனைவி, வீரராகவன் கேசவன் மீராவோட அம்மா போனது. நந்து அம்மா ஆனந்தி மாமி அவங்க வாயில கொஞ்சம் கொஞ்சமாக உத்திரணியில நீர் ஊற்றியதும் மறக்கவில்லை.

சிலவற்றை அசைபோடும் போது மனம் கனக்கிறது.

No comments: