1992ல் டிசிஎஸ் பாம்பேயில் வேலை கிடைத்து ரயிலேறிட்டேன். ஊர் சுத்தமாகத் தெரியாது. முதல் தடவை மும்பை. என்னோட சித்தப்பா/சித்தி வழி உறவினர் ஒருவருக்கு அப்பா கடிதம் எழுதியதை வைத்து, அவர் வீடு தேடிப் போய்ச்சேர்ந்தேன்.
அவர்களுடன் இருந்த ஒரு மாதத்தில் வாழ்க்கையில் மறக்க முடியா பல நேரடி அநுபவங்கள்.
1) ஊரில் இறங்கி பத்து நாட்கள் கூட ஆகவில்லை. சரித்திரத்தில் இடம் பெற்ற மும்பைக் கலவரம், பாபர் மசூதி இடிப்பு தொடர்ச்சியாக 7 நாட்கள் நடந்த கலவரம், ஊரடங்கு, படுகொலைகள். ரோட்டில் நிறைய ரத்தக்கறைகள். 3ம் நாளே வீட்டிலுள்ளவர்கள் பேச்சைக் கேட்காமல் வேலைக்குப் போக ஆரம்பித்தேன், வெறிச்சோடிய அவ்வீதிகளில், பஸ் மற்றும் போக்குவரத்து நின்ற நாட்களிலும், போனேன். இரண்டு நாளில் ஆபீஸ் மூடி விட்டதால், பிறகு வீட்டிலேயே.
2) அந்த உறவினர் சில மாதங்களில் ரிடையர் ஆகப்போகிறார். அவரது சேமிப்புகள் பெரும்பாலும் ஷேர் மார்க்கெட்டில் தான். ஆதலால் தினமும் அவர் ஆபீஸிலிருந்து திரும்பி வந்து மாலை வழிபாடுகளை முடித்து, தினமும் பேப்பரை பிரித்து வைத்துக்கொண்டு அவருடைய ஒவ்வொரு ஷேர் சர்டிபிகேட் எடுத்து அன்றைய மார்க்கெட் விலை மற்றும், தன்னோடு சேமிப்பு குறித்து தினமும் கணக்குப் போடுவார்.
எனக்கு அவரைப் பார்த்தால் மிக சங்கடமாக இருக்கும். கோபக்கார மனிதர். அவர் வயதில் நான் பாதி கூட இல்லை. ஆனால் அவர் செய்வதைப் பார்த்து மனுசன் கவலையில சீக்கிரம் போய்ச்சேர்ந்துருவாரோன்னு பயம். அவரை பயத்தோடு தள்ளி நின்று பார்ப்பேன்.
ஆனால் அங்கு தான், அங்கு மும்பை நகர வாழ்க்கையில் தான், பெரும்பாலோர் ஷேர்ஸ் மற்றும் ம்யூச்சுவல் ஃபண்டில் இன்வெஸ்ட் செய்வதைப் பார்த்தேன். அந்த அளவு நான் அதற்கு முன் இருந்த பல மாநிலங்களில் பார்த்ததில்லை.
ஷேர்ஸ் மற்றும் ம்யூச்சுவல் ஃபண்ட் தேவை பற்றி உணர்ந்த இடம் மும்பை. Irony, இன்று நான் அவரைப் போல் தினமும் என்னோட ஸ்டாக் இன்வெஸ்ட்மண்ட்ஸ் பற்றி அலசுவதே! அவருடைய அத்தனை செயல்களும் என்னையறியாமல் நான் அதையே இயல்பாக செய்வது வியப்பாக இருக்கு. அதே மும்பை நினைவு இப்ப.
3. அந்த உறவினர் வீட்டில் அவரது இன்னொரு உறவினரும் இருந்தார். என்னோட ஏழெட்டு வயது பெரியவர். படித்தது பிஎஸ்சி் தான், ஆனால் அவர் வகித்த பதவி ஒரு இண்டர்நேஷனல் பேங்கில் சீனியர் மேனேஜர். நடிகர் திலீப்குமார் சைராபானு இவரோட பேங்க் கஸ்டமர்ஸ். மாலைவேளையில் கூட பேசுவார்கள். இந்த அண்ணனுக்கு ஆங்கிலம் accentஓட கொட்டும். Coat-suitல தான் அலுவலகம் போவார். எப்படிண்ணா இப்படின்னா, இவ்வளவு பெரிய நகரத்துல நீ வாழ உன்னைத் தயார் பண்ணிக்கனும்பார். சனிக்கிழமையானா நேரா கோரேகாவுன் பாங்கூர் நகர் ஆஞ்சநேயர் கோவில் போயிருவார், வடைமாலை சாத்துவார். இந்த இரண்டு அண்ணன்களுக்கும் நான் அப்ப நாத்திகனாக இருப்பது ஒரு மாதிரி இருக்கும். சொல்ல மாட்டாங்க. வீட்டிலிருந்த மற்ற இரு அண்ணன்கள் சொல்வார்கள்.
அண்ணா ஒரு நல்ல பேண்ட் ஷர்ட் வேணும்ன்னு சொன்னா, அவரோட கார்ல தாதர் கூட்டிப் போய் சில கடைகளில் மட்டும் செலக்ட் பண்ணி துணி வாங்கி அதைத் தைக்க மாதுங்கா கூட்டிப் போய் அங்க ஜான்சன் டைலர் கிட்டத்தான் தைக்க வைப்பார். அவ்வளவு choosy, ஸ்டைலோட செய்வார். என் கல்யாண ட்ரஸ் செலக்ஷன் எல்லாம் இந்த அண்ணன் தான், மாதுங்கா ஜான்சன் டைலர் தான்.
இந்த அண்ணனுக்கு கார் பைத்தியம். இரண்டு கார் வீட்டில். ஒன்னு ஆபீஸ் கார். Foreign magazinesல வர்ற வித விதமான bmw, benz, volvo, Ferrari, என பல கார்களைக் காட்டி, வாழனும்ன்னா இது மாதிரி ஒன்னு வாங்கி அதுல ஃபாரின்ல சுத்தனும்ன்னு பெருசா பேசுவாங்க. அவங்களை வியப்பாக பார்த்துகிட்டிருப்பேன்.
என்னோட டிசிஎஸ் சம்பளம் 4800ரூபாய். அவர் 20கே வோ 25கேவோ வாங்கிகிட்டிருந்தார். அப்ப மும்பை ஃபாளட் விலை 10-13 லட்சத்துல கிடைக்கும். அது அப்ப எட்ட முடியாத அமௌண்ட் எனக்கு. லோன் வாங்கினாலும் கடன் கட்ட வாங்குற சம்பளம் பத்தாது.
இந்த அண்ணன்ட்ட கார்ல போகும் போது ஃப்ரீயா பேச முடியும். நிறைய பேசுவேன். இவரோட அலப்பறைகள், அதீத ஆசைகளைப் பார்த்து, ஒரு நாள் அந்தண்ணன்ட்ட சொன்னேன். அண்ணா! ஒரு 15-18 லட்சம் சேர்க்க முடிஞ்சா போதும், போய் ஊர்ல செட்டிலாயிடலாம்ன்னு சொன்னேன். சத்தமாக சிரிச்சுட்டார். அவ்வளவு பணம் இப்பவே என் கிட்ட இருக்கு, ஆனால் அதுவெல்லாம் வருங்காலத்திலெல்லாம் துளிகூட பத்தாதுன்னார்.
எனக்கு என்னமோ மாதிரி இருந்துச்சு. இவரோட படாடோபமான வாழ்க்கைக்கு வேணா பத்தாம இருக்கலாம், நமக்குப்போதுமேன்னு நினைச்சேன். இன்று நினைச்சா அது எவ்வளவு முட்டாள்தனம்ன்னு தோனுது. அநுபவங்களை கேட்டறிவதும் நலம்.
அந்தக் கூட்டுக்குடும்பத்துல் முதல் ஒரு மாசம் தானிருந்தேன். வீட்டிலுள்ள பெண்களுக்கு, எனக்காக எக்ஸ்ட்ரா சமையல் வேற, இரண்டு பெட்ரூம் ஒரு பாத்ரூம் வீட்டில் ஆறேழு பேர் இருப்பது சிரமம்ன்னு பக்கத்துலேயே ஒரு அபார்ட்மண்ட் இன்னும் இரண்டு பேரோடு சேர்ந்து எடுத்தேன். அவங்களுக்கு நான் போவது சுத்தமாகப் பிடிக்கலை. வீட்டிலிருந்த இன்னொரு கடைசி அண்ணனை, நான் பார்த்த அபார்ட்மண்டை அவரை விட்டு விசிட் அடிக்க வைச்சு சரி்பார்த்த பின்னரே ஒத்துக்கிட்டாங்க!
வார இறுதியில் அவங்க வீட்டுக்குப் போய் இருந்து வருவேன். அங்கு கற்றவை பற்றி எழுத நிறைய இருக்கு.
நினைவலைகளில் நனையும் ஒரு நாளில் இன்று
வாழ்வினிது
ओलै सिरिय !
No comments:
Post a Comment