Friday, April 30, 2021

இடமறிந்து செய்வதல்ல தானம்

பேரிடர் காலங்களில் உலக அளவில் நிதி கொடுப்பவர்கள் எப்போதும் தங்களுக்கு விருப்பமான கட்டமைப்பு, உறவுகள், நண்பர்கள் உள்ள இடங்களைப் பார்த்து தான் நிதி அளிப்பர்.

இந்த நாட்டில்நிதி அளிப்பவர்கள், உலக அளவில் நிதியளிக்க வேண்டுமென்றால் அவர்கள் முதலில் தேடிப்போய் கொடுப்பது ரெட் கிராஸ் (செஞ்சிலுவைச் சங்கம்) கிட்ட தான். தனி நபர் நிதிக்கு கோஃபண்ட்மி போன்ற சில.

இந்திய மக்கள் ஓடிப்போய் கொடுப்பது சேவா மற்றும் Aid India மற்றும் இன்னும் சில தனிப்பட்ட நிறுவனங்களுக்கு.

உலகளவில் ரெட் கிராஸின் கட்டமைப்பு ஒவ்வொரு ஊரிலும் மாநிலத்திலும் குறிப்பாக அமெரிக்காவில் பரவலாக உண்டு. பேரிடர் காலங்களில் அவர்களால் துரிதமாக இறங்க முடியும். அத்தகைய கட்டமைப்பு கொண்டது. எந்த ஒரு நாட்டிற்கும் அவர்களால் விரைவாகச் சென்று பணியில் இறங்க முடியும், மனமுவந்து செய்வார்கள்.

ஆனால் இவர்களுக்கு கொடுக்கப்படும் நிதித்தொகையில் ஒரு கணிசமான பகுதி இவர்கள் கட்டமைப்பிற்குச் செல்லும். மற்றவை நிவாரணங்களுக்குச் செல்லும். கட்டமைப்பு இருந்தால் தான் செயல்பட முடியும். ஆகவே ஒரு அரசு இவர்களுக்கு ஒதுக்கும் நிதி இது இரண்டையும் கணக்கில் கொண்டே கொடுக்கும்.

இப்போது ரெட்கிராஸ் தவிர மற்ற சேவை நிறுவனங்களைப் பார்த்தோமானால், SEWA மற்றும் AID india மற்றும் பிற சேவை நிறுவனங்கள் தங்களோட கட்டமைப்பை இந்தியாவில் எங்கு நிறுவியுள்ளதோ அந்தப் பகுதிகளில் தான் அவர்களால் பணியாற்ற முடியும். மற்ற இடங்களில் உள்ள என்ஜிஓ மற்றும் பிற ஸ்தாபனங்கள் மூலமாகத் தான் அவர்கள் தங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள நிதியை வைத்து அவர்களால் நிவாரணம் வழங்க முடியும்.

ஆதலால் 
ஒன்றிற்கு கொடு, இதற்கு கொடுக்காதே; 
அவங்க அப்படிப்பட்டவங்க, இவங்க இப்படிப்பட்டவங்க;
இது அந்த மாதிரி அமைப்பு, இது இந்த மாதிரி அமைப்பு;
இது அந்த மதம், இது இந்த மதம்;
இது வடக்கு, இது தெற்கு;
இது 10 வருட தொடர்பு, 50, 70, 100, 1000 வருட தொடர்பு, அதனால கொடுக்கோம் கொடுக்கிறாங்க;
அவங்க கிட்ட கொடுக்கிலை, இவங்க கிட்ட கொடுக்கிறாங்க;
கொடுத்தது வடக்குல தான் போச்சு, தெற்குல போல;
மைய அரசு கிட்ட போகலை, மாநில அரசுகிட்ட போகலை;
அது ஆர்எஸ்எஸ் அமைப்பு, இது கிறித்துவ அமைப்பு, இது முஸ்லீம் அமைப்பு;
ன்னு இஷ்டத்துக்கு வரையறை பண்ணிகிட்டு
ஒரு பேரிடர் காலத்துல நிவாரணம் கொண்டு போய் சேர வேண்டிய நேரத்தில் உளறுவது பினாத்துவது, தான் படிச்ச படிப்புக்கும் அழகல்ல, செயலுக்கும் அழகல்ல, சொல்ல வேண்டிய நேரமும் இதுவல்ல, அது எப்போதுமில்லை.

வலது கையில கொடுக்கிற நிதி இடது கைக்குத் தெரியாம கொடுப்பது பேர் தான் தானம்.

உலக அளவில் அமெரிக்க ஐரோப்பிய மற்றும் பல நாடுகள் தங்கள் நிதியை பகிர்ந்து அளிக்கும் போது தெளிவாகவே ஒவ்வொரு அமைப்பிற்கும் எவ்வளவு போகும்ன்னு தெளிவாகவே போகும். அது எல்லாத்தையும் ரெட் கிராஸ்ட்ட கொடுத்து விட்டு வேடிக்கை பார்க்காது. அந்தந்த நாட்டிற்குள் எந்த இடத்திற்கு எது எது செல்லவேண்டும் என்பதை பிரித்தே அனுப்பும். நிதி பெறும் நாடுகளும் இவற்றை எப்போதும் தெரிந்தே பெற்றுக்கொள்ளும். 

ஜப்பான், சீனா, இன்னும் சில நாடுகளே பேரிடர் காலங்களில் உலக நிதியைத் தவிர்த்திடும். அதற்கு காரணங்களும் அவர்களிடம் உண்டு.

இப்ப இன்னாத்துக்கு இதுங்கறீங்களா?

வாட்சப்புல போனா ஒவ்வொரு க்ரூப்பலையும், குடும்ப க்ரூப்பலையும், இதே பேச்சு! யார்ட்ட கொடுக்கனும், யார்ட்ட கொடுக்கலை, யார்ட்ட கொடுக்கக் கூடாதுன்னு. சகிக்கலை.

சிலர் நிதி கொடுக்கலைன்னாலும் கொடுக்கிறவனைப்பற்றி நொரண்டி சுரண்டிகிட்டு இல்லாம இருந்தால்

(நமக்கு இதெல்லாம் கண்ணில் படாமலிருந்தால்)
வாழ்வினிது
ओलै सिरिय !

Tuesday, April 27, 2021

தடுப்பூசி உனக்கு மட்டும் போதாது

பெங்களூர்ல என் அண்ணன் (பெரியம்மா பையன், சின்ன வயசுலேர்ந்து ஒன்னாவே ஊர்ல வளர்ந்தோம்) தான் குடியிருக்கும் apartment complex சொசைட்டியின் பிரசிடண்ட். சொசைட்டியில் 300 குடும்பங்கள்.

போன மாசம் அங்க மாஸ் வேக்சின் கேம்பைன் பண்ணி தடுப்பூசி போட முயன்ற போது, 300 குடும்பங்களில் வெறும் 28 பேர் தான் போட்டுக் கொண்டனர்.

அண்ணன் விடலை.

போய் மினிஸ்டரையும் MLAவையுமே காம்ப்ளக்ஸ்க்கு கூட்டிட்டு வந்து அவங்களோட கோவிட் பாதுகாப்பு பத்தி மீட்டிங் வேற.

மினிஸ்டர் மற்றும் போலீஸோட அவங்க பில்டிங்ல நேற்று நடந்த மீட்டிங் போட்டோ அனுப்பியிருக்காப்புல. இங்க போடத் தயக்கமாக இருக்கு.

அவரின் மெசேஜ்
Yesterday we had a meeting with our MLA and minister regarding covid  controll and support. We have done two test and three vaccine drives.

நீங்க வாழற இடத்துல உங்களை கோவிட் தாக்காம இருக்கனும்ன்னா, எங்கண்ணன் உழைக்கிற மாதிரி உங்க பில்டிங்கில் நீங்க உழைத்தால்

வாழ்வினிது
ओलै सिरिय !

நாவடக்கம் நம்மில் அடங்கும்

35 வருடம் முன்ன கல்லூரியில படிக்கும் போது IMF லோன் கொடுக்கிறவங்க இன்னாத்துக்கு இந்தியா இதைச் செய்யனும் அதைச் செய்யனும்ன்னு ஒரு வெளிநாட்டு சக்தி நமக்கு சொல்றதுன்னு கடுப்பு வரும். கேப்போம்.

இப்ப 35 வருடம் கழித்து, நான் மட்டுமல்ல, பலர் அந்நிய மண்ணிலிருந்து கொண்டு இந்தியா எப்படி இருக்கனும்ன்னு இலவச அட்வைஸ், தூற்றல், நிபந்தனைகளை இலவசமாக அள்ளி வழங்கிகிட்டு இருக்கோம்.

பல பேர் இறந்து, குடும்ப உறவுகள் அல்லல்பட்டு அங்க அவதியுற்று இருக்கிற நேரத்துல 

நாம நம்ம நாவை அடக்கலைன்னா,

அடக்கலைன்னா

அடக்கலைன்னா

அடைத்துக்கொள்ளவில்லைன்னா,

ஒரு நாள் நீங்கெல்லாம் அங்கேயே இருந்துக்குங்க, திரும்பி வந்துராதீக, உங்களுக்கு ஓசிஐ, விசா எல்லாம் கட் ன்னு சொல்லும் போது, கப்சிப் ஆகுற நிலையாயிறப்போவுது!

(எனக்கு சொல்லிக்கிட்டேன்)
நாவடக்கத்தால்
வாழ்வினிது
ओलै सिरिय !

மருத்துவமனை நிவாரணி

 பிணிக்காலங்களில் மருத்துவமனையை நோக்கி ஓடுவோம். அங்க போய் ட்ரீட்மண்ட் கிடைக்குமான்னு பார்ப்போம். மருத்துவனைக்குள்ள டிபார்ட்மண்ட் தேடி அலைய விடுவாங்க, அதைத் தேடுவோம். என்ன மருந்து கிடைக்கும், எப்படி பெட் கிடைக்கும்ன்னு தேடுவோம்.

எல்லாத்துக்கும் மேல எப்படி அதுக்கு துட்டு கட்டுவோம்ன்னு கவலைப்படுவோம். அதுக்கும் மேல உசுரு பிழைப்போமான்னு தான் நினைப்போம்.

ஆனால் இந்த மருத்துவமனைகளை யார் கட்டினான் யார் காலத்துல கட்டினான்னு தேடிப் போய் எவரும் மருத்துவம் பார்த்ததில்லை.

இப்ப இணையத்துல மருத்துவமனைகளை யார் கட்டினாங்கன்னு அட்டைக்கத்தி, சோளக்கம்பு சுத்தறவங்களைப் பார்த்தா, வருங்காலத்துல இப்படியும் வந்து நிக்குமோ:
- பருப்புக்கு ஒரு மாநிலம்
- பூசணிக்கு ஒரு மண்டபம்
- இலுப்பைச்சட்டிக்கு ஒரு மருத்துவமனை
- தேங்காய்க்கு தடுப்பூசி

இந்த நோய்க்கு மருந்தில்லையே!

இவிங்களுக்கு ஒரு சர்வலோக நிவாரணி கிடைச்சா

வாழ்வினிது
ओलै सिरिय !

Sunday, April 25, 2021

மானுடம் என்பது நமக்கு மட்டும் தக்காளி ஜூஸ் அல்ல

 
மானுடம் என்பது நமக்கு மட்டும் தக்காளி ஜூஸ் அல்ல.


இப்ப அமெரிக்காவுல கிட்டதட்ட 30 சதவீதத்திற்கும் மேல் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்இது இந்தவருடம் ஜனவரி பிப்ரவரியில் துவங்கி மூன்று மாதம் ஆகியும் முழுமையடையவில்லைஇன்னும் தடுப்பூசி போடவேண்டிய பணி அதிகமிருக்குதொடர்கிறது வெல்லும்.


இதற்கிடையில் இங்கும் கடந்த நவம்பரில் ஒரு மிகப்பெரிய தேர்தல் நாடு தழுவிய அளவில் மிக அதிகஎண்ணிக்கை வாக்காளரோடு நடந்து முடிந்துள்ளதுஅந்த நேரத்தில் தடுப்பூசியே வரவில்லை.


இப்போது தடுப்பூசி வந்த பிறகும்இங்கு ஒரு கும்பல் தான் தடுப்பூசியே போட மாட்டேன்னு ஒரு பக்கம்இன்னொரு பக்கம் மாடர்னாஃபைசர் இரண்டும் கிடைச்சப்பநான் ஃபைசர் தான் போடுவேன்அதுல சைடுஎபஃக்ட் கம்மி(யாம்), மாடர்னா போட மாட்டேன்னு திரிஞ்ச கும்பல் உண்டுபிறகு ஜான்சன் அண்ட் ஜான்சன்வந்தப்பஅது ஒரு ஊசி அது தான் போடுவேன்னு அலப்பரித்த கும்பல் ஒன்னு உண்டு.


இதனால் அரசுக்கு எவ்வளவு தடுப்பூசிகள் ஒவ்வொரு நாளும் நஷ்டமாச்சுன்னு தெரியுமாவெளிய சொல்லமாட்டாங்கஇதைப்பத்தி பேச மாட்டாங்கநானெல்லாம் நாள் கடைசியில வீணாப் போறதை ஓடிப்போய்பந்திக்கு முந்தி மாடர்னா ஊசி போட்டுகிட்டேன்.


கடந்த பிப்ரவரி முழுவதும் தேடி கிட்டு இருந்தோம்என்னயா இவ்வளவு சாவுன்னு சொல்லறாங்கஆனால் ஒருநாளுக்கு 200–300 பேருக்குப் போட்டுகிட்டிருக்காங்கன்னு நினைப்பேன்வெளிய சொல்லிக்க முடியாதுஅதற்கப்புறம் mass vaccination sites ஆரம்பிச்சு கடகடன்னு போட ஆரம்பிச்சுதல இந்த அளவுக்கு அமெரிக்காதேறி வந்து வரும் ஜூன் ஜூலையில எல்லாத்தையும் திறந்து விடலாமான்னு யோசிக்கிற அளவுக்கு வந்துருக்கு.


இந்த இடைப்பட்ட காலங்களில்எவ்வளவு சாவுஎவ்வளவு வென்டிலேட்டர்ஸ் தட்டுப்பாடுமாத்திரைகள் மற்றும்ஹாஸ்பிடல் பெட் infrastructure க்கு எப்படி பணியாற்றியது இந்த அரசு கடந்த ஆறேழு மாதங்களில்அமெரிக்காவை அப்ப எள்ளி நகையாடினவங்களையெல்லாம் மனதிலேற்றிக் கொண்டு மீண்டு வருகிறதுஇங்கும் எவ்வளவு பிணங்கள்பிணவறை இல்லாமல் கண்டெயினரில் வைத்திருந்த அவலம்திறந்த வெளிகளில்கூடாரம் அமைத்து செயல்பட்டதும் உண்டு.


இப்போது இந்தியாவில் ஏற்படும் உயிர்சேதம் ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தல்அமெரிக்காவைப் பார்த்துஎள்ளிநகையாடிய நேரத்திலாவது தகுந்த ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கலாம்பரவலாக தடுப்பூசிகளைகட்டாயமாக்கியிருக்கலாம்


ஒலி எழுப்பி விளக்கேற்றி கொரோனாவை விரட்ட அறைகூவல் விட்டப்ப வந்து பங்கேற்ற அந்த கோடானுகோடிப்பேருக்காவது முதலில் தடுப்பூசி போடுவதற்கும் அழைப்பு விடுத்துச் செய்திருந்தால் ஓரளவுக்குசாதித்திருக்கலாம்ரயில் பெட்டிகள் வார்டுகளானது என்னவாயிற்றோஅவை பயன்பட்டிருக்கும்அட்மினிஸ்ட்ரேட்டிவ் failure இப்ப.


அமெரிக்கா தன் துன்பங்களைத் துடைத்தெறிந்து மீண்டு வந்த மாதிரி ஒரு தேசிய அளவு மாஸ் கேம்பைன்தடுப்பூசிக்கும் வென்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் உபகரணங்கள எளிதாக எல்லா உள்ளூர் கிராமங்கங்கள்டவுன்ஷிப்நகரங்களில் ஏற்பாடு செய்ய வேண்டும்நோயாளிகளை கூண்டாக ஏர்லிஃப்ட் செய்து வசதியுள்ளஇடங்களுக்கு அனுப்பி போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்கல்யாண மண்டபங்கள்ஸ்டேடியங்கள்ஆஸ்பத்திரிகளாக மாறனும்.


இந்நோயை எதிர்கொள்ள மக்கள் பங்களிப்புஒத்துழைப்பு மிக அவசியம்சாவு அருகில் நெருங்கும் வரையாரும் உணர்வதில்லை.


அமெரிக்க ஜனநாயகம் முன்னுதாரனமாக நிற்கிறதுநிற்கும்உதவும் கூட.


சிறந்த போர்க்கால ஏற்பாடுகள் செய்து

உயிர்சேதம் தவிர்த்தால் தான்

வாழ்வினிது

ओलै सिरिय !

Saturday, April 24, 2021

தடுப்பூசி என்ன விலை

 நிறைய பேர் அமெரிக்காவுல எங்களுக்கு தடுப்பூசி இலவசமாக கிடைப்பதாக சொல்றாங்க. இதுல கொஞ்சம் உண்மையும் துளி மாறியிருக்கு.

மத்திய அரசு தடுப்பூசியை இலவசமாக மாநிலங்களுக்கு வழங்கி விநியோகிக்கிறது. இப்ப அந்த தடுப்பு ஊசியை நம் உடலில் செலுத்துவதற்கு பணியாற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு, மருத்துவமனைக்கு, ஃபார்மசிக்கு ஆகிற செலவை அவர்கள் நமது இன்சூரன்ஸ் கம்பெனிக்கு சார்ஜ் பண்ணுகிறார்கள். ஒவ்வொரு ஊசிக்கும் 75$ வீதம் இரண்டு ஊசிக்கு 150$ எனது இன்சூரன்ஸ்க்கு சார்ஜ் ஆகியுள்ளது. அதை இன்சூரன்ஸ் கம்பெனி கொடுத்துள்ளதால் நமக்கு கட்டணங்களின் நிலமை தெரியவில்லை. இன்சூரன்ஸ் கம்பெனிக்கு நம்ம எம்ப்ளாயர் அல்லது அரசு அந்த சார்ஜை கொடுக்கலாம்.

இது தொடருமா தெரியாது. அடுத்த தடவை இது நமது deductibleலில் போகலாம். 

தடுப்பூசி வருவதற்கு முன், ஒவ்வொரு இடத்திலும் கோவிட் டெஸ்ட் எடுக்க வேண்டி வந்த போது கூட, அந்த டெஸ்ட் உபகரணங்களை மத்திய அரசு இலவசமாகக் கொடுத்தது. 

ஆனால் அதை டெஸ்ட் பண்ண நாங்கள் செல்லும் போது, அந்த இடங்களில் அவர்கள் இதற்கு உங்கள் இன்சூரன்ஸ் கம்பெனி மீது சார்ஜ் பண்ணுவோம் என்று என்னிடம் சொன்னார்கள். ஒரு Urgentcareல் நாங்கள் மூவரும் போய் டெஸ்ட் பண்ண நினைத்த போது, அவர்கள் சொன்னது, நீங்க உங்க deductibles முழுமை அடைந்ததான்னு எங்களுக்கு தெரியரவரைக்கும் உங்கள் ஒருவருக்கு 150$ வீதம் 450$ கட்டனும்ன்னு சொன்னாங்க. 

என்னங்க இது ஃப்ரீன்னு சொன்னாங்களேன்னு அந்த Urgentcare ல கேட்டப்ப, அவங்க கூலா சொல்லிட்டாங்க, சர்வீஸஸ் நாட் ஃப்ரீ, ஒன்லி த டெஸ்ட் ன்னுட்டாங்க!

இன்னாத்துக்கு இந்த பிரச்சனைன்னு நான், வீட்டுலுள்ளவர்கள் என்னை முறைத்தாலும் பரவாயில்லைன்னு, அரசு இலவசமாக டெஸ்ட் செய்யும் county testing sitesக்கு பயணித்து இலவசமாக முடிச்சுகிட்டேன்.

ஆகவே அமெரிக்காவிலிருந்து இது பற்றி யாராவது ரொம்ப சீன் விட்டாங்கன்னா,

வாயைப் பிளந்து கேட்டுகிட்டீங்கன்னா
வாழ்வினிது
ओलै सिरिय !

Friday, April 23, 2021

பொருளாதார விடுதலையே

அம்மா கடைசி வரைக்கும் சொல்லிகிட்டு இருந்தாங்க, உங்களை மாதிரி நாலு வார்த்தைப் படிச்சிருந்தா நாலு காசு சம்பாதிச்சு சுயமா நின்னுருக்கலாம்பாங்க. 

இத்தனைக்கும் வீட்டுல அம்மா வச்சது தான் சட்டம். அம்மா தான் வீட்டு ஃபைனான்ஸ் மேனேஜர் கூட. அம்மா கூட இருந்தவரைக்கும் அம்மா காசு கொடுத்தா தான் எங்களுக்கு. கடைசி வரைக்கும் தன்னோட பேங்க் அக்கௌண்ட்டைத் தானே தான் மெயின்டைன் பண்ணிகிட்டாங்க. கையெழுத்து போட மட்டும் தான் தெரியும். கசினை வச்சு தான் செய்துப்பாங்க, ஆனாலும் ரொம்ப கெட்டி.

கடைசி வரைக்கும் சொன்னாங்க, உங்கப்பா எல்லா காசையும் சம்பாதிச்சு என் கையில கொடுத்துட்டு நீ பார்த்துக்கன்னு பேசாம இருந்து நல்ல பேரை வாங்கிட்டுப் போயிருவாரு. படற கஷ்டம் கெட்டப்பேர் நமக்குத் தான். என்ன, ஒரே ஒரு திருப்தி, பசங்க எல்லோரையும் நல்லா வளர்த்தாச்சு, கடைசி வரைக்கும் உங்க யாருக்கும் ஒரு கடன் வைக்காமப் போறோம்பாங்க.

நானும் என் கசின்ஸ் எல்லா பெண்களுக்கும் சொல்வது இது தான். ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பு தன் தந்தையோ புருஷனோ எந்த ஆணோ கிடையாது. உங்களுக்குத் தேவை நல்ல படிப்பு, சுயமா சம்பாதிக்கிற ஒரு வேலை, முக்கியமாக financial independence. இது தான் ரொம்ப முக்கியம். கடைசி வரைக்கும் நீங்க நிற்க இது தான் உதவும்பேன்.

பெண்கள் இருக்கிற வேலையை விட்டுவிட்டு, குழந்தையைப் பார்த்துக்கனும், day care செலவுக்கு நாமளேப் பார்த்துக்கலாம்ன்னு பல பேர் சொன்னாங்க. அப்பவெல்லாம் சொல்வேன், ஒருத்தர் சம்பளம் முழுசா போனாலும் அது அஞ்சாறு வருஷம் தான் போவும், ஆனால் ஜாப் கன்டியூனிட்டி மற்றும் பல பெனிஃபிட்கள் விட்டு போகும். 

இன்னொரு க்ரூப் கேட்கும், பணமா சேர்த்து வச்சு பணத்தை என்ன பண்றதுன்னு. வேலைக்குப் போய் வாழ்க்கைப் போச்சேன்னு. அவர்களுக்கு சொல்வதும் இது தான். இருக்கிற பணத்தை நிர்வகிப்பதற்கும், வீட்டிலுள்ள ஆண் போன பிறகு தனியாக நிற்கும் போதும், நாம செய்யுற வேலை, சுயமாக வளர்த்துக்கிற independence தான் காப்பாத்தும்.

இப்ப இன்னாத்துக்கு இத்தனையும்கறீங்களா!

வீட்டுல சும்மா உட்கார்ந்து வொர்க ஃபரம் ஹோம்ல வேலை செய்யும் போது, நம்ம அம்மிணியிலிருந்து, வீட்டு maid service ஆட்கள் (பெண்கள்) வந்துவேலை செய்து போகும் போது

அம்மா சொன்ன வார்த்தைகளின் நினைவுகளில்
வாழ்வினிது
ओलै सिरिय !

புத்தக தினம்

 இன்று உலக புத்தக தினமாம். வாழ்த்துகள் அனைவருக்கும்.

எனக்குத் தெரிந்து நான் இதுவரைப் பார்த்த பெரும்பாலான மக்கள், தன் படிப்பு மற்றும் தொழில் சார்ந்த புத்தகங்களைத் தவிர, தான் படித்த பிற புத்தகங்களை வைத்து அதை ஆதாரமாகக்காட்டி பிறரை வசை பாடுவதற்கு மட்டுமே தங்களது படிப்பறிவை வாசிப்பறிவை உபயோகப்படுத்துகின்றனர்.

இது நான் பள்ளி மாணவனாக இருந்த போதிலிருந்தே பார்த்து வருகிறேன். நிறைய புத்தகங்கள் படிப்பதால் வாசிப்பதால் இவர்களுக்கு நல்ல மொழிவளம், உரையாடும் திறன், ஒரு திறந்த மனப்பான்மை, பதவி உயர்வு, இன்னும் பலவற்றிலும் மிகச்சிறந்து விளங்குகிறார்கள். ஆனால் கொஞ்சம் பக்கத்தில் போனால் தெரியவருவது இவர்கள் இத்தகைய தங்கள் மூலதனத்தை உபயோகப்படுத்துவது பிறரை வசை பாட, அதற்கு ஏதுவாக தனது பல புத்தகப்படிப்பை உதாரணம் காட்டுவது, இது மட்டுமே தொடர்ந்து செய்து வருவது.

1978களில் பள்ளி மாணவனாக இருந்த காலம் தொட்டு இதைப்பார்த்து வருகிறேன். (அதுக்கு முன்ன என்ன பண்ணின்னனு கேட்டா, விவரம் தெரியாத பச்ச புள்ள அப்ப).

இதுவே தன் கல்வி சார்ந்த படிப்பு, தொழில் சார்ந்த படிப்பு, தொழில்நுட்பம், ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் தன் துறை சார்ந்த புத்தகங்களைப் படிப்பதால் தன் தனிப்பட்ட வாழ்வில் முன்னேறுவது மட்டுமல்ல, இதில் தன் குடும்பத்திற்கும் வருமானம் ஈட்டித்தரக்கூடிய ஒரு நல்ல மனிதராக, நாட்டில் தொழில்வளம், கல்வி வளம், ஆராய்ச்சிகளில் வெற்றியடைபவராக நாட்டையும் முன்னேற்றுபவராக வழிநடத்துகின்றனர்.

ஆகவே ஆகவே ஆகவே!

இப்ப இன்னாங்குற அதுக்கு!

உமக்குத் தேவையான பாதையில் நீ செல்ல
நன்கு எல்லாவற்றையும் படித்து முன்னேற உதவும் புத்தகங்களால்

வாழ்வினிது
ओलै सिरिय !

Thursday, April 22, 2021

ஆந்திரா நெல்லிக்காய் ஊறுகாய்

 அம்மா முழு நெல்லிக்காய் ஊறுகாய் போட்டாங்கன்னா அதுக்காகவே அன்னிக்கு மோர் சாதம் நிறைய சாப்பிடுவேன். ஒரு பெரிய ஜாடி நிறைய போடுவாங்க. அவ்வளவு சுவையாயிருக்கும். அம்மா போட்ட நெல்லிக்காயைச் சாப்பிட்டு ஏழெட்டு வருஷம் மேலே ஆயிடுச்சு. அதே மாதிரி வடுமாங்காய் மாஹாளிக்கிழங்கும்.

இரண்டு வாரம் முன்ன தான் நினைச்சேன். இனி அம்மா இல்லை. இனி எங்க போய் முழு பெரிய சைஸ் நெல்லிக்காய் சாப்பிடறதுன்னு. ஏக்கத்தோடு பெருமூச்சு தான்.

அம்மிணிக்கு ஆந்திரா ஊறுகாய் தான் ரொம்பப்பிடிக்கும். போன வாரம் சொன்னாப்புல, இங்க ஒரு தெலுகு பொண்ணு அவங்க ஊர்லேர்ந்து fresh homemade ஊறுகாய் ஆந்திராவுலேர்ந்து வரவழைக்கப் போறாங்க! எனக்கு சிந்தக்காய் சொல்லப்போறேன் உனக்குப் பிடிச்ச நெல்லிக்காய் சொல்லப் போறேன்னாங்க! அது என்னமோ சிந்தக்காய் ஏதோ ஒரு தனிரகம்ன்னு கம்முனு இருந்தேன். என்னன்னு மறந்து போச்சு.

இன்னிக்கு ஊறுகாயை அந்த தெலுகு பெண் வீட்டுல பிக்கப் பண்ணப் போனப்ப அம்மிணி தன்னோட சிந்தக்காயைப் பத்தி ரொம்ப அலட்டினாப்புல. எனக்கு நெல்லிக்காயும் சொன்னது ஞாபகமில்லை. 

திரும்பி வரும் போது சிந்தக்காய்ன்னா என்னன்னு ஞாபகம் வந்துருச்சு! இந்த புளியங்காயைப் பெருசா சிந்தக்காய்ன்னு அலட்டற, உன்னால என் கிட்ட அது புளியங்காய்ன்னு சொன்னா இன்னா குறைஞ்சு போயிருவேன்னா, சொல்ல முடியாதுன்னுட்டாப்புல.

வூடு நுழைஞ்ச அடுத்த நிமிஷம், நீ தான் கீழ சிந்தாம கொட்டுவே இப்ப கொட்டுன்னு இரண்டு காலி பாட்டிலை எடுத்து வச்சாப்புல.

நாலு தடவை இதை கொல்டில என்ன எழுதியிருக்குப் படி படின்னு சொல்லி அம்மிணியோட புளியங்காயை (சிந்தக்காய்ன்னு சொல்ல முடியாது போய்க்க) ஒரு பாட்டில்ல கொட்டிபுட்டு, அம்மா போடற மாதிரி நெல்லிக்காயை ஒரு பீங்கான் ஜாடியிலக் கொட்டி வைச்சேன்.

அம்மிணி முதல்ல இரண்டையும் வெறும் சோத்துலப் பிசைஞ்சு ஒரு அலறல், உங்க நெல்லிக்காய் சூப்பரோ சூப்பர்ன்னாப்புல.

தட்டுல தயிர்சோத்தைப் போட்டு ஒரு முழுநெல்லிக்காயைப் போட்டா, வாவ், அமிர்தம். அப்புடியே ஊர்ல பண்ற வீட்டு நெல்லிக்காய் ஊறுகாய். அம்மா போடற முழு சைஸ்ல பாதி தானிருக்கு, சிறுநெல்லி அரைநெல்லிக்காயில்லை இது. முழு நெல்லிக்காய் தான். ஆனால் வளரலை.

ஆனால் அல்டிமேட் வீட்டுச்சுவை. அம்மிணி பாதி லவட்டிப்பேங்கறாப்புல. முன்னாடி இது உனக்கு மட்டும்ன்னாப்புல, இப்ப தானே காலி பண்ணிருவாப்புல.

வீணை கிளாஸ் முடிஞ்சு வந்தும் ஊறுகாய் கணக்கே பேசறாப்புல. இப்ப அவங்க அம்மாகிட்டயும் அதே பெருமை ஓடிகிட்டிருக்கு. 

ஒட்டு கேட்டதில், இவர் எப்பப்பார்த்தாலும் அந்தக்கடை பழைய ஊறுகாயைத் திங்கிறார். இந்த தடவையாவது புதுசா சாப்பிடட்டும்கிறாப்புல

நமக்கு கொஞ்சம் விட்டு வைப்பாப்புல போலிருக்கு.

வாழ்வினிது
ओलै सिरिय !

தடுப்பூசி

 கடந்த பிப்ரவரி மாதம் அங்க தடுப்பூசி கிடைக்குமா இங்க கிடைக்குமான்னு எல்லா இடத்துலையும் நாங்க வீட்டுல எல்லோரும் தேடினோம். பிரையாரிட்டி லிஸ்ட்ல இருந்த என்னைக் கீழ வேற தள்ளிட்டாங்க! என்னய்யா பண்றதுன்னு தேடிகிட்டிருந்தோம்.

பையனுக்கு தான் இப்பவே மெடிக்கல் புரபசனல்ன்னு நினைப்பு வேற. அவன் முடிச்ச டெக்னீஷியன் கோர்ஸ் வச்சு ஹாஸ்பிடல்ல வேலைக்கு சேர்றேன், எனக்கும் கிடைச்சுரும் உனக்கும் கிடைச்சுரும்ன்னான். இரண்டு பேரும் ஒரு big no சொல்லிட்டோம். 17 வயசுல என்ன வேலை வேண்டிக்கிடக்கு, நீ அங்க வேலைக்குப் போனா, நாங்க வேலைக்கும் போக முடியாது, அம்மா வேலைக்குப் போயாவனும் கம்முனு இருன்னு அடக்கிட்டோம்.

பல ஹாஸ்பிடல் கிளினக்ல பெயர் ரிஜிஸ்டர் பண்ணினேன், வேலைக்காவல. எங்க கேட்டாலும் இப்ப உனக்குத் தரமுடியாதுன்னுட்டாங்க!

பையன் ஒரு அருமையான ஒரு பெரிய ஹாஸ்பிடலைக் கண்டுபிடிச்சு சொன்னான். போய் ரிஜிஸ்டர் பண்ணினோம். ஒரு நாள் மாலையில நாள் கடைசியில் அவங்க கூப்பிட, வேக வேகமாக ஒரு மணிநேரம் ட்ரைவ் பண்ணிப் போனோம், மாலை ஐந்து மணி வாக்கில் எங்களுக்கு கிடைச்சது, பையனுக்கு கிடைக்கல. அவனுக்கு இரண்டு வாரம் கழிச்சு நம்ம கோவில்ல கிடைச்சது. இப்ப எல்லோருக்கும் ஓபன் லிஸ்ட்ல கிடைக்குது.

இப்ப இது எதுக்கா? இருக்கு!

எங்கெல்லாம் முன்ன கேட்டேனோ, வாழ்க்கையில எந்தெந்த கிளினிக் ஆஸ்பத்திரி எல்லாம் போனேனோ, அங்கிருந்தெல்லாம் இப்ப கூப்பிட்டனுப்பறாங்க! வந்து தடுப்பூசி போட்டுக்கங்கிறாங்க!

இரண்டும் போட்டாச்சுய்யா, மூனாவதுக்கு ஆறு மாசம் கழிச்சு கூப்பிடுங்கப்பா! உடம்பு தாங்காது! போதும்யா இப்ப! ஆறு மாசம் கழிச்சு வர்றேன். அப்ப குத்து!

வாழ்வினிது
ओलै सिरिय !

பிணி காலங்களில் பொதுமக்களின் பங்கு

 ஒரு நாட்டில் கடும்பஞ்சம் வந்தாலோ, வெள்ளம் அல்லது ஒரு மிகப்பெரிய பிணி/நோய் வந்தாலோ, முன் காலத்தில் பொது மக்களின் பங்கு மகத்தானதாக இருந்தது. 

அரசு இயந்திரங்கள் இயங்குவது ஒரு பக்கம் இருந்தாலும், மருத்துவமனைகள், மருத்துவத் துறை மக்கள் இயங்குவது ஒரு பக்கம் என்றாலும், பொது மக்களும் தாங்கள் இதில் அதிகம் பங்கேற்க முடியும்.

மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தால், பக்கத்திலுள்ள பள்ளிகள் கல்லூரிகளை பகுதி நேர மருத்துவமனையாக மாற்றிட உதவலாம்.

மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளிலிருந்து தருவித்துக் கொடுக்கலாம்.

பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்க்கலாம்.

கூட்டங்களை, ஊர்வலங்களை, திருவிழாக்களை, இறுதி ஊர்வலங்களை, வெளியூர் பயணங்களைத் தவிர்க்கலாம்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையானவற்றைக் கொடுத்துதவ முன் வரலாம்.

தடுப்பூசி கிடைக்கும் இடங்களை அறிந்து மக்களைக் கூட்டிச் செல்ல உதவலாம், கிடைக்க ஏற்பாடு செய்யலாம்.

தடுப்பூசி மக்களிடம் பரவலாக சென்றடைய இன்றைய காலத்தில் frontline workers மட்டும் போதாது.

தடுப்பூசி ஸ்டாக் நிறைய இருக்குன்னா, இங்க வீணாப்போறதுக்கு முன்ன கூப்பிட்டு கூப்பிட்டு இப்ப கொடுக்கிற மாதிரி, இந்தியாவுல பஸ் நிலையத்துல, ரயில் நிலையத்துல, கல்யாண மண்டபங்களில் போர்க்கால ரீதியில் செயல்பட்டு கொடுக்க முன்வரனும் இப்ப. அதற்கான நேரம் வந்துருச்சு இப்ப! பொது மக்கள் அதற்கு உதவலாம், ஏற்றுக்கொள்ளலாம்.

பொது மக்களின் பங்கும் மகத்தானது!
செய்தால்
வாழ்வினிது
ओलै सिरिय !

அந்நிய மண்ணில் நம் பழைய வழக்கங்கள்

 மாவடு், மாகாளி, நெல்லிக்காய் ஊறுகாய் ஒரு வேளையாவது எனக்குக் கிடைச்சா அன்றைய நாளில் நான் அடையும் சந்தோஷம் அளவிடாது.

நல்ல மாவடு கிடைக்க திருச்சி ஆண்டாள் தெருவுல இப்ப யாரை அலையவிடறது. அதனால இங்க கிடைக்குற ஏதோ ஒரு tender மாங்காயை வாங்கி இளைப்பாருவேன்.

பாட்டிலிலுள்ள மாவடு தீர்ந்த பின் அந்த காரத்தண்ணியை வெளிய கொட்ட மனசு வராது. கடைக்குப் போய் ஒரு சின்ன கிளிமூக்கு மாங்காய் வாங்கி துண்டம் போட்டு அதுல ஊறவைச்சு வழிச்சுருவேன்.

மாவடு தண்ணியில மாங்காய்த் துண்டம் டேஸ்ட் மாறி ஒரு மாதிரி இருக்கும். இருந்தாலும் விடுவதில்லை. பாட்டிலை சுரண்டிறது தான்.

இந்த தடவை கடையில் காய்ந்த நெல்லிக்காய் வத்தலைப் பார்த்தேன். வாங்கி இரண்டு மூனு வாயிலப் போட்டுப் பார்த்தேன். சகிக்கிலை. இது என்னடா சோதனைன்னு நினைக்கையில, மாவடு பாட்டிலும் தீர்ந்து போய் ரெடியாகி நிற்க, அந்தக் காரத்தண்ணியில பாதி நெல்லிக்காய் வத்தலைக் கொட்டி வச்சுருக்கேன். ஊறட்டும், பிறவு பார்ப்போம் வாழ்வினிதா கசக்குதான்னு!

2) அன்னிக்கு அந்த ஆந்திரா குண்டூர் நெல்லிக்காய் வாங்கி வந்ததலிருந்து கொஞ்சம் சுகவாசமாயிடுச்சு. மதியம் இரவு தயிர்சாதம் நெல்லிக்காய் சொர்க்கத்தில் தான் ஓடுது.

அந்த தெலுகு குடும்பம் இன்னும் கொஞ்சம் ஊறுகாய் வித்து போகலைன்னு சொன்னாக. அம்மிணி உடனே இன்னொரு செட் அவங்ககிட்டேர்ந்து லவட்டிட்டாங்க! அதை இரவோடு இரவா வாங்கிட்டு வரப்போனேன். வீட்டுக்காரர் கதவைத் திறந்து வாசப்படியில் கொடுக்க, நான் அதற்கானப் பணத்தை நீட்டினேன். 

அவருக்கு 30-35 வயது தானிருக்கும். நடுக்கதவு இடுக்கில் வாசப்படியில் பணம் வாங்க வேண்டாம்ன்னு, வெளிய வந்து வாசலில் நின்னு பணத்தை வாங்கி கண்ணுல ஒத்திகிட்டு போறார். பணமில்லையா, அதான் வாசப்படியில் வேண்டாம்ன்னார்.

நம் சின்ன வயசு சம்பிரதாயங்கள் பழக்கவழக்கங்கள் பண்பாடு பளிச்சுனு அந்த இளவயசு தெலுங்கு குண்டூர் வாலிப மக்கள் இங்க வந்தும் கடைபிடிப்பதைப் பார்த்து சந்தோஷமாக இருந்துச்சு. ஊறுகாய் பிரமாதம்ன்னு சொல்லிட்டு வந்தேன். அவங்களுக்கும் மிகமகிழ்ச்சி!

நம் மண்ணின் சம்பிரதாயங்கள் பழக்கவழக்கங்கள் பண்பாடு கலாச்சாரத்தை இம்மண்ணில் பார்க்கும் போது

வாழ்வினிது
ओलै सिरिय !

நாலு வரி பேசினாலும் நசுங்காம

இங்க ஒரு பஞ்சாபி ரெஸ்டாரண்ட்க்கு கடந்த 18 வருடமாகப் போய் சாப்பிடுகிறேன். அந்த உணவு ரொம்பப் பிடிக்கும். பையனோட முதல் பர்த்டேக்கு அங்கிருந்து வரவழைச்சு தான் ஒரு பெரிய பார்ட்டி கூட வச்சேன்.

போன வருடம் கோவிட் ஆரம்பச்சதிலிருந்து அங்கு போகவில்லை. சில மாதங்கள் மூடப்பட்டது. இப்போது திறந்துட்டாங்க!

இன்னிக்குப் போய் ஒரு கட்டுசோறு கட்டிகிட்டு வந்தேன். அந்த ரெஸ்டாரண்ட் ஓனர் மற்றும் சர்தார்ஜி குக் இருவரும் என்னைப் பார்த்தாலே டேபுளுக்கு வந்து ஹிந்தியில சரளமாகப் பேச ஆரம்பிச்சுருவாங்க! லன்ச் அல்லது டின்னர் கடை மூடற நேரம் போனா, மீதியாவரதைப் pack பண்ணி சும்மா காசு வாங்காம கொடுத்துருவாங்க. அது இரண்டு நாளுக்கு நமக்கு நிக்கும். அவங்க அதை அடுத்த நாள் உபயோகிப்பதில்லை.

அஸ்ஸாம் மேற்கு வங்கம், மும்பை விட்டு வந்த பிறகு ஹிந்தி பேசற வாய்ப்பு விட்டுப் போச்சு. ஹிந்தி படங்கள் பார்ப்பதும் ஒன்று இரண்டாகி விட்டது. ஹிந்தி கேட்பதும் மிக குறைவாகி விட்டது.

இன்று ரெஸ்டாரண்ட் ஓனர் போனவுடனேயே ஹிந்தியில கதை அடிக்க ஆரம்பிச்சுட்டார். திருப்பி ஹிந்தியிலே பேசும் போது நமக்கு வார்த்தைகள் தடுமாறும். அவங்களுக்கும் நான் பேசத் தடுமாறரது தெரியும். இன்னிக்கு என்னமோ சரளமாக வந்துச்சு. எனக்கே ஆச்சிரியமாக இருந்துச்சு. என்னடா இது பேசியே ரொம்ப ரொம்ப நாளாச்சு. கடக் முடக்ன்னு ஒரு கச்சரா ஹிந்தி வாயிலிருந்து விழுமேன்னு எப்போதும் பேசத் தயங்குவேன்.

இன்னிக்கு நமக்குப் பிடிச்ச அந்த பஞ்சாபி சாப்பாட்டைப் பார்த்தவுடனே வார்த்தையும் தானா வந்து கொட்டிச்சு! எதிர்பார்க்கலை. நாலு வரி பேசினாலும் நசுங்காம வந்துச்சு!

வாழ்வினிது
ओलै सिरिय !

Sunday, April 11, 2021

பிள்ளைகளின் படிப்பிற்கு கட்டுவதும் இன்வெஸ்ட்மண்ட் தான்

 

நம் பிள்ளைகளின் படிப்பிற்குஅவர்களின் கல்லூரி படிப்பிற்கு நாம் செலவு செய்வதுஅது ஒரு மிகச்சிறந்தஇன்வெஸ்ட்மண்ட்இதை நான் பலருக்கு இங்கு சொல்லி வருகிறேன்யாரும் அவ்வாறு யோசிக்கவும்மாட்டேன்கிறார்கள்சொன்ன மறுநிமிடம் மறுத்தும் விடுகிறார்கள்.


1987ல் அப்பா ரிடையர் ஆகுற சமயத்தில் நானும் என் தம்பியும் இன்னும் கல்லூரிகளில் படித்து வந்தோம்பெரியண்ணன் சிஏ பண்ணிகிட்டிருந்தாப்புலஅப்பாவோட 70% சம்பளம் எங்க படிப்புக்கே செலவழித்தார்மீதியில் அவரும் அம்மாவும் சிக்கனமாக வாழ்ந்தனர்அவர்களது இன்வெஸ்ட்மெண்டே நாங்க தான்அவர்கள்வாழ்வின் கடைசி வரைக்கும் அவங்க கூடவே நின்னோம்இதைச் சொன்னா யாரும் புரிந்து கொள்வதில்லை!


பையனுக்கு உள்ளூர்ல இந்த மாநிலத்திலேய நல்ல யுனிவர்சிட்டிகளில் கிடைத்திருக்குஅங்கு போகாமல்வேறமாநிலத்திற்குப் போகிறான்அங்க ஃபீஸ் கம்மியாக வருதுன்னு வியாக்யானம் வேற பண்றான்நான் பணம்கட்டறேன்டான்னாஓரளவுக்குத் தான் உன்னால் கட்டமுடியும்வெறும் டிகிரிக்கு என் தலையில 200கே கடன்சுமக்க வைக்காதேங்கிறான்இல்லடா நான் கட்டறேன்னாஎவ்வளவு கட்டிட முடியும்ன்னு எதிர்கேள்விகணக்குகளுடன் சொல்கிறான்.


அதைத்தவிர இன்னொரு லாஜிக் வேறஉள்ளூரில் இவ்வளவு பெரிய படிப்பாளிங்க மத்தியில நான் கிளாஸ்லகடைசியா நின்னு gpa குறைவாக வாங்குவதை விட சாதாரண கல்லூரியில் அவங்க மத்தியில 10-15 ரேங்க்கிற்குள் வருவது எவ்வளவோ பெட்டர், gpa குறையாமப் பார்த்துக்கலாம்கிறான்நாம ஙே ஙே ஙே தான்.


நேற்று டேவ் ராம்ஸியோட வீடியோ அனுப்பறான்அசந்து போய் நிக்குறேன்இவனுக்கு இந்த சின்ன வயசுலடேவ் ராம்ஸி எப்படி தெரிஞ்சதுன்னு ஷாக் ஆயிட்டேன்அதுல வர்ற மாதிரி என் தலையில கடனை சுமத்தி என்வாழ்க்கையை பாழடிச்சுடாதேன்னு ஒரு 17 வயசுப் பையன் என் கிட்ட சொல்றான்மலைச்சு போய் நிக்குறேன்.


என்னோட கடன்றற வாழ்வு வாழ்வதெப்படி சீரீஸ்ல டேவ் ராம்ஸி பற்றி சொல்லியிருப்பேன்அவர் தன்னோடவெப் சீரீஸ் மூலம் கடன்றற வாழ்வு வாழ்வதெப்படின்னு சொல்லித் தருவார்ரொம்ப பாப்புலர் ஷோ இங்க.


இந்த எபிசோட்ல ஒரு லா என்ஃபோர்ஸ்மண்ட் ஆபீசர் தனக்கு 451கே லோன் இருக்கு எப்படி இதிலிருந்துமீள்வதுன்னு ராம்ஸி கிட்ட கேட்கிறார்ராம்ஸி கேட்கிறார் உனக்கு எப்படி இவ்வளவு கடன் வந்துச்சுன்னுஅதற்கு அந்த போலீஸ் சொல்றார் எனக்கு கல்லூரியில் படிக்கும் காலத்து கடனே 250கே க்கு மேல இருக்குஇப்ப மற்ற கடனெல்லாம் வேறன்னு சொல்லும் போதுராம்ஸி ஆச்சரியமாக கேட்கிறார்போலீஸ் வேலைக்குபோவதற்கு எதற்கு படிப்புக்கு அவ்வளவு ஆச்சுதேவையில்லையேன்னு கேட்கும் போதுஅவர் சொல்றார்எங்கப்பா அம்மா மிகப்பெரிய யுனிவர்சிட்டி ஐவீ லீக் போல நல்ல யுனிவர்சிட்டியில படிச்சா தான் நல்லாசம்பாதிக்க முடியும்ன்னு வருசம் 65கே-75கே கடனை சுமத்திட்டாங்கன்னு சொல்றார்இப்ப போலீஸ்வேலையில் குறைவான சம்பளத்தில் கட்ட முடியலைங்கிறார்.


என் பையன் இதைக்காரணம் காட்டி உங்க ஆசைக்கு நான் நல்ல யுனிவர்சிட்டியில சேர்த்து நான் கடைசிரேங்க் வாங்கி என் தலையில கடனை சுமத்திராதேங்குறான்.


வாயடைச்சு நிக்குறேன்இப்படி மடக்குறான்என் கிட்டயே டேவ் ராம்ஸியைக் காட்டுகிறான்ஙே ஙே ஙே தான்.


இன்று இரண்டரை மைல் வாக்கிங் போகும் போதுஎதிர்த்தாப்புல இன்னொரு நண்பர் குடும்பம் வந்ததுஅவங்கபெண் நல்ல ஸ்கோர்ஐவீ லீக் கண்டிப்பாக கிடைக்கும்ன்னேன்கார்னல் தான் கிடைச்சுருக்குவருஷத்துக்கு75கே கட்டனும்இங்கயே லோக்கல்ல சேர்த்துட்டோம்கிறாங்கஇவங்களுக்கும் இன்னிக்கு புரிய வைக்கமுயன்று கடும் தோல்வி தான்.


ஏங்க இரண்டு பேர் சம்பாதிக்கறீங்கஒருத்தர் சம்பளத்துலேர்ந்து கட்டினாப் போதுமேநாம திங்குறதயிர்சோத்துக்கு ஒருத்தர் சம்பளம் போதாதாயாராவது இப்படி கார்னல் கிடைச்சதை வேஸ்ட்பண்ணுவாங்களான்னேன்ஏதோ காரணம் சொல்றாங்கமெத்தப் படிச்சவங்க இப்படி யோசிப்பதை புரிஞ்சுக்கமுடியலை


பெரிய யுனிவர்சிட்டியில படிச்சா ஈசியாக வேலை கிடைக்கும்நிறைய சம்பளம் வரும்இந்தப் பணத்தை 3-4 வருசத்துல சம்பாதிச்சுரலாம்ன்னா கேட்க மாட்டேங்குறாங்க.


என் தம்பி தன் பெண்ணிற்கு ஒரு பெரிய யுனிவர்சிட்டியில சேர்த்து கலிஃபோர்னியால நிறைய கட்டினான்அந்தபெண் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே நானும் என் மனைவியும் இதுவரை இத்தனை வருடத்தில் பார்த்திராதசம்பளம். 3 வருஷத்தில் கல்லூரிக்கு கட்டியதை சம்பாதிச்சாச்சுஇப்ப வீடு வாங்க சேமிக்கிறாள் என் தம்பிவாரிசு.


என்னோட கல்லூரியில் படித்த நண்பர்களும் இப்படியே இருக்கின்றனர்குழந்தைகள் கல்விக்குத் தான் பணம்கட்டாமல் அவர்களை லோன் எடுக்க வைப்பதுஎவ்வளவு சொல்லியும் புரிந்து கொள்வதில்லை.


குழந்தைகளின் கல்விக்கு நாம் கட்டுவது நம்மோட இன்வெஸ்ட்மண்ட்.


இதைப் புரிந்து கொண்டால்

வாழ்வினிது

ओलै सिरिय !

நினைவலைகளில் நனையும் ஒரு நாளில் இன்று

 1992ல் டிசிஎஸ் பாம்பேயில் வேலை கிடைத்து ரயிலேறிட்டேன். ஊர் சுத்தமாகத் தெரியாது. முதல் தடவை மும்பை. என்னோட சித்தப்பா/சித்தி வழி உறவினர் ஒருவருக்கு அப்பா கடிதம் எழுதியதை வைத்து, அவர் வீடு தேடிப் போய்ச்சேர்ந்தேன்.

அவர்களுடன் இருந்த ஒரு மாதத்தில் வாழ்க்கையில் மறக்க முடியா பல நேரடி அநுபவங்கள்.

1) ஊரில் இறங்கி பத்து நாட்கள் கூட ஆகவில்லை. சரித்திரத்தில் இடம் பெற்ற மும்பைக் கலவரம், பாபர் மசூதி இடிப்பு தொடர்ச்சியாக 7 நாட்கள் நடந்த கலவரம், ஊரடங்கு, படுகொலைகள். ரோட்டில் நிறைய ரத்தக்கறைகள். 3ம் நாளே வீட்டிலுள்ளவர்கள் பேச்சைக் கேட்காமல் வேலைக்குப் போக ஆரம்பித்தேன், வெறிச்சோடிய அவ்வீதிகளில், பஸ் மற்றும் போக்குவரத்து நின்ற நாட்களிலும், போனேன். இரண்டு நாளில் ஆபீஸ் மூடி விட்டதால், பிறகு வீட்டிலேயே.

2) அந்த உறவினர் சில மாதங்களில் ரிடையர் ஆகப்போகிறார். அவரது சேமிப்புகள் பெரும்பாலும் ஷேர் மார்க்கெட்டில் தான். ஆதலால் தினமும் அவர் ஆபீஸிலிருந்து திரும்பி வந்து மாலை வழிபாடுகளை முடித்து, தினமும் பேப்பரை பிரித்து வைத்துக்கொண்டு அவருடைய ஒவ்வொரு ஷேர் சர்டிபிகேட் எடுத்து அன்றைய மார்க்கெட் விலை மற்றும், தன்னோடு சேமிப்பு குறித்து தினமும் கணக்குப் போடுவார்.

எனக்கு அவரைப் பார்த்தால் மிக சங்கடமாக இருக்கும். கோபக்கார மனிதர். அவர் வயதில் நான் பாதி கூட இல்லை. ஆனால் அவர் செய்வதைப் பார்த்து மனுசன் கவலையில சீக்கிரம் போய்ச்சேர்ந்துருவாரோன்னு பயம். அவரை பயத்தோடு தள்ளி நின்று பார்ப்பேன்.

ஆனால் அங்கு தான், அங்கு மும்பை நகர வாழ்க்கையில் தான், பெரும்பாலோர் ஷேர்ஸ் மற்றும் ம்யூச்சுவல் ஃபண்டில் இன்வெஸ்ட் செய்வதைப் பார்த்தேன். அந்த அளவு நான் அதற்கு முன் இருந்த பல மாநிலங்களில் பார்த்ததில்லை.

ஷேர்ஸ் மற்றும் ம்யூச்சுவல் ஃபண்ட் தேவை பற்றி உணர்ந்த இடம் மும்பை. Irony, இன்று நான் அவரைப் போல் தினமும் என்னோட ஸ்டாக் இன்வெஸ்ட்மண்ட்ஸ் பற்றி அலசுவதே! அவருடைய அத்தனை செயல்களும் என்னையறியாமல் நான் அதையே இயல்பாக செய்வது வியப்பாக இருக்கு. அதே மும்பை நினைவு இப்ப.

3. அந்த உறவினர் வீட்டில் அவரது இன்னொரு உறவினரும் இருந்தார். என்னோட ஏழெட்டு வயது பெரியவர். படித்தது பிஎஸ்சி் தான், ஆனால் அவர் வகித்த பதவி ஒரு இண்டர்நேஷனல் பேங்கில் சீனியர் மேனேஜர். நடிகர் திலீப்குமார் சைராபானு இவரோட பேங்க் கஸ்டமர்ஸ். மாலைவேளையில் கூட பேசுவார்கள். இந்த அண்ணனுக்கு ஆங்கிலம் accentஓட கொட்டும். Coat-suitல தான் அலுவலகம் போவார். எப்படிண்ணா இப்படின்னா, இவ்வளவு பெரிய நகரத்துல நீ வாழ உன்னைத் தயார் பண்ணிக்கனும்பார். சனிக்கிழமையானா நேரா கோரேகாவுன் பாங்கூர் நகர் ஆஞ்சநேயர் கோவில் போயிருவார், வடைமாலை சாத்துவார். இந்த இரண்டு அண்ணன்களுக்கும் நான் அப்ப நாத்திகனாக இருப்பது ஒரு மாதிரி இருக்கும். சொல்ல மாட்டாங்க. வீட்டிலிருந்த மற்ற இரு அண்ணன்கள் சொல்வார்கள்.

அண்ணா ஒரு நல்ல பேண்ட் ஷர்ட் வேணும்ன்னு சொன்னா, அவரோட கார்ல தாதர் கூட்டிப் போய் சில கடைகளில் மட்டும் செலக்ட் பண்ணி துணி வாங்கி அதைத் தைக்க மாதுங்கா கூட்டிப் போய் அங்க ஜான்சன் டைலர் கிட்டத்தான் தைக்க வைப்பார். அவ்வளவு choosy, ஸ்டைலோட செய்வார். என் கல்யாண ட்ரஸ் செலக்‌ஷன் எல்லாம் இந்த அண்ணன் தான், மாதுங்கா ஜான்சன் டைலர் தான்.

இந்த அண்ணனுக்கு கார் பைத்தியம். இரண்டு கார் வீட்டில். ஒன்னு ஆபீஸ் கார். Foreign magazinesல வர்ற வித விதமான bmw, benz, volvo, Ferrari, என பல கார்களைக் காட்டி, வாழனும்ன்னா இது மாதிரி ஒன்னு வாங்கி அதுல ஃபாரின்ல சுத்தனும்ன்னு பெருசா பேசுவாங்க. அவங்களை வியப்பாக பார்த்துகிட்டிருப்பேன்.

என்னோட டிசிஎஸ் சம்பளம் 4800ரூபாய். அவர் 20கே வோ 25கேவோ வாங்கிகிட்டிருந்தார். அப்ப மும்பை ஃபாளட் விலை 10-13 லட்சத்துல கிடைக்கும். அது அப்ப எட்ட முடியாத அமௌண்ட் எனக்கு. லோன் வாங்கினாலும் கடன் கட்ட வாங்குற சம்பளம் பத்தாது.

இந்த அண்ணன்ட்ட கார்ல போகும் போது ஃப்ரீயா பேச முடியும். நிறைய பேசுவேன். இவரோட அலப்பறைகள், அதீத ஆசைகளைப் பார்த்து, ஒரு நாள் அந்தண்ணன்ட்ட சொன்னேன். அண்ணா! ஒரு 15-18 லட்சம் சேர்க்க முடிஞ்சா போதும், போய் ஊர்ல செட்டிலாயிடலாம்ன்னு சொன்னேன். சத்தமாக சிரிச்சுட்டார். அவ்வளவு பணம் இப்பவே என் கிட்ட இருக்கு, ஆனால் அதுவெல்லாம் வருங்காலத்திலெல்லாம் துளிகூட பத்தாதுன்னார். 

எனக்கு என்னமோ மாதிரி இருந்துச்சு. இவரோட படாடோபமான வாழ்க்கைக்கு வேணா பத்தாம இருக்கலாம், நமக்குப்போதுமேன்னு நினைச்சேன். இன்று நினைச்சா அது எவ்வளவு முட்டாள்தனம்ன்னு தோனுது. அநுபவங்களை கேட்டறிவதும் நலம்.

அந்தக் கூட்டுக்குடும்பத்துல் முதல் ஒரு மாசம் தானிருந்தேன். வீட்டிலுள்ள பெண்களுக்கு, எனக்காக எக்ஸ்ட்ரா சமையல் வேற, இரண்டு பெட்ரூம் ஒரு பாத்ரூம் வீட்டில் ஆறேழு பேர் இருப்பது சிரமம்ன்னு பக்கத்துலேயே ஒரு அபார்ட்மண்ட் இன்னும் இரண்டு பேரோடு சேர்ந்து எடுத்தேன். அவங்களுக்கு நான் போவது சுத்தமாகப் பிடிக்கலை. வீட்டிலிருந்த இன்னொரு கடைசி அண்ணனை, நான் பார்த்த அபார்ட்மண்டை அவரை விட்டு விசிட் அடிக்க வைச்சு சரி்பார்த்த பின்னரே ஒத்துக்கிட்டாங்க!

வார இறுதியில் அவங்க வீட்டுக்குப் போய் இருந்து வருவேன். அங்கு கற்றவை பற்றி எழுத நிறைய இருக்கு.

நினைவலைகளில் நனையும் ஒரு நாளில் இன்று
வாழ்வினிது
ओलै सिरिय !