Sunday, June 18, 2023

அன்பானவர்க்கு ஒரு அஞ்சலி

வாழ்க்கையில் எந்த உயரத்துக்குப் போனாலும் எனது சில உறவினர்களில் சிலர் என் அப்பா அம்மாக்கு கொடுக்கும் மரியாதையைப் பார்க்கும் போது மெய் சிலிர்க்கும். அவர்களுக்குள் எந்த அந்தஸ்து ஈகோ எதுவும் அவர்கள் நட்பு மற்றும் உறவுக்கு முன் நிற்காது.

எனது அம்மாவோ பள்ளிக்கூடமே போக வாய்ப்பு இழந்தவர்கள். அப்பா ஏழாவது படிக்கும் போதே எல்லா நிலங்களையும் இழந்து ஊரை விட்டு வந்தவர்.

அப்பாவோட கசின் விங் கமாண்டராக இருந்து ரிடையரானவர். இப்போ அவருக்கு 83 வயது. அவர் அவரது மனைவியெல்லாம் மெத்தப்படித்தவர்கள், ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் எல்லாம் சரளமாக எழுதப் பேசக்கூடியவர்கள். 

மூன்று வருடம் முன் அவர்கள் அம்மாவைப் பார்க்க வந்த போது கூட அம்மா காலில் நெடுஞ்சான்கிடையாக விழுந்து நமஸ்காரம் பண்ணினார்கள்.

நான் அப்பவே அவரைத் தடுத்தேன். சித்தப்பா உங்களுக்கே இப்ப 80 வயசு, இந்த வயசுல கீழ விழுந்து என்னத்துக்கு நமஸ்காரம் பண்றீங்க, அடிபட்டதுன்னா என்ன பண்றதுன்னேன்.

அதுக்கு அவர்கள் இரண்டு பேரும் சொன்ன பதில் ஆடிப்போச்சு, வயசு என்னடா, அவங்க 3 வயசு பெரியவங்க, மன்னி ஸ்தானம் பெருசு, அவங்க ஆசீர்வாதம் கிடைச்சா எனக்குத்தான்டா புண்ணியம்ன்னார்.

அசந்து போய் பார்த்தேன். அம்மா கூட அவங்க போன பிறகு சொன்னாங்க, எவ்வளவு பெரிய பதவி வகிச்சவர், அவர் கமாண்டிங்ல எவ்வளவு பேர் இருந்திருந்துக்காங்க, எவ்வளவு பணம் பதவி படிப்பு எல்லாம் அவருக்கு. என்னையும் அப்பாவையும் பார்க்க வாரம் இரண்டு தடவையாது வருவாங்க, ஒவ்வொரு தடவை வரும் போதும் யாரிருந்தாலும் பார்க்காம நமஸ்காரம் பண்ணாமப்  போக மாட்டாங்க! அப்படி நாம என்ன பண்ணிட்டோம் நாலு வார்த்தை அவங்களோட அன்பாப் பேசறதை விட என்றார்கள்.

அந்த சித்தி இங்கு மறைந்து விட்டார். சித்தப்பாவிற்கும் கொஞ்சம் மறதி ப்ராபளம் இப்ப புதுசா. சித்தியின் funeralக்கு நாளை இரவு ஆஸ்டின் பயணிக்கிறேன். முன் பின் போகாத இடம். 

இங்கிருந்து கிளம்புவதற்குள் இங்கு ஆயிரத்தெட்டு சமாளிக்க வேண்டியிருக்கு. இடி எல்லாப் பக்கத்திலுமிருந்து விழுது. ஆதலால் நாளை இரவு தான் பயணம்.

மரியாதைக்கு மொத்த உருவமாக வாழ்ந்தவர்கள். அவர்களில் ஒருவருக்கு அஞ்சலி செலுத்தவதே சிறந்தது என கிளம்பி விட்டேன். நினைத்ததை விட அதிக செலவு. அதை யோசிக்கக் கூடாத தருணம்.

நம் வாழ்விலிருந்து ஒருத்தர் மறையும் போது தான் அவர்கள் நம்முடன் பழகிய விதம், பேசிய விதம், அன்பு, உதவி மற்றும் மரியாதைகளெல்லாம் நிழல்களாக கூடவே வருகிறது.

மிகவும் அன்பானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப் பயணிப்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Una vida para apreciar!
மார்ச் 15 2023

No comments: