Sunday, June 18, 2023

உழைத்து உண்பதில்

அஸ்ஸாமில் தனியாக இருந்த போது சமைக்க வேண்டிய கட்டாயம் இருந்துச்சு. நண்பன் நாசர் உதவியால் பகல் நேரத்தில் அவன் ஹாஸ்டலில் ஐந்து ரூபாய்க்கு அசாமிய சாப்பாடு கிடைத்தாலும் இரவு உணவுக்காக ராஜஸ்தானி மெஸ் தேடி ரொம்ப தூரம் போவேன்.

கொஞ்ச நாளில் உடுப்பி ஹோட்டல் வந்ததால் அங்கு சாப்பாடு 30 ரூபாய்க்கு வாங்கி சாப்பிடுவேன். அஸ்ஸாமிய நண்பன் நாசர் ரொம்பத் திட்டுவான். இப்படி சாப்பிட்டா மாச சம்பளத்துல பாதிக்கு மேலே செலவு பண்ணுவ, இப்படியெல்லாம் இருக்கக்கூடாது, நீயே சமைன்னு கம்பெல் பண்ணுவான்.

அப்ப ரேசன்கார்ட் அஸ்ஸாமியர்களுக்கு மட்டுமே. நமக்கு கிடையாது. மண்ணெண்ணெய் ரேஷன் கடையிலத் தான் கிடைக்கும். அந்த ஆளுக்கு எக்ஸ்ட்ரா கொடுத்து ஐந்து லிட்டர் வாங்கி வந்தா நமக்கு ஒரு மாசம் ஓடும்.

சமைக்கவே தெரியாத நான் அப்ப செய்த இன்ஸ்டண்ட் ரசத்தை நாசர் டேஸ்ட் பார்த்துட்டு, பாரு இது உடுப்பி ரசத்தை விட செம டேஸ்டாக இருக்கு. இனி அநாவசியமாக 30 செலவு பண்ணக்கூடாதும்பான்.

நாசர் பெரிய பணக்காரன். கால்நடை மருத்துவர். ஊர் downtownல ஃபேன்சி பஜார்ல இரண்டு பில்டிங் அவனுக்கு சொந்தம். அதில் வரும் வாடகையே போதும்.

யானைக்கு குதிரை மேல ஆசை. குதிரைக்கு எலி மேல ஆசை. அவன் படிச்சப்ப நான் அவனுக்குப் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் எழுதிக் கொடுத்தேன். அவனுக்கு நான் உட்கார்ந்த சீட்ல உட்கார ஆசை. அசாமை விட்டு நான் கிளம்பிய பிறகு அவனை பதினைந்து இருபது வருடம் கழிச்சு தான் தொடர்பு கொண்டேன். இப்ப சொல்றான், நீ காலி பண்ண அதே சீட்ல அதே கம்ப்யூட்டர் ரூம்ல நானும் போய் உட்கார்ந்தேன்டாங்கிறான். யானைக்கு குதிரை மேல ஆசை.

அங்கிருந்து வந்த பிறகு சமைக்க வாய்ப்பேயில்லை. அம்மா, அம்மிணி தயவில் காலம் ஓடிடுச்சு.

இப்ப அம்மிணி அவங்கம்மாவைப் பார்க்கப் போயிட்டாங்க. வெளியே போய் சாப்பிடலாம். எதிர்வீட்டு ஶ்ரீரங்கம் குடும்பம் அப்பப்ப ரொம்பவே கவனிக்கறாங்க. அண்ணன் வேற, ஏண்டா சமைக்கத் தெரியாம கஷ்டப்படற, இங்க வீக்எண்ட் வந்து ஒரு வாரத்துக்கு கட்டிண்டு போடாங்கிறான்.

ஆனால் மனசுல ஒரு வைராக்கியம் எப்படியாவது சமைக்கக் கத்துக்கனும்ன்னு. எல்லாத்தையும் தவிர்த்து விட்டு இப்ப ட்ரை பண்ணிகிட்டே இருக்கேன்.

அம்மா சொன்னது உரைச்சுகிட்டே இருக்கு. ஒரு பொண்ணு ஆபீஸ்லையும் நாள் பூரா வேலை செய்ஞ்சுட்டு வீட்டுலையும் வந்து உழைக்கறாள், நீ இப்படி உட்கார்ந்து சாப்பிடறயே! உன் அண்ணன்களாவது பரவாயில்லை சமைச்சு சாப்பிட்டுக்கிறாங்க. நீயும் உன் தம்பியும் ரொம்ப மோசம்டா. உங்களை சின்ன வயசுல அடுக்களையில விடாதது என் தப்பு, இப்ப இன்னொரு பெண்ணை இப்படி படுத்துறீங்களேடான்னாங்க! 

மனைவி சொல்லிக்காமிப்பதை விட அம்மா சொல்வது உரைச்சுகிட்டே இருக்கு.

இன்றும் முயற்சி பண்ணேன். அதுவும் போன வாரம் ட்ரை பண்ணியதும். வெறும் காய் மட்டும் தான் செய்தேன்.

எப்படியாவது ரசம், சாம்பார் கூட்டு செய்ய கத்துக்கிடனும். முயற்சிப்போம்.

உழைச்சு திங்கனும் என்று நினைப்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय !
¡Cocinar uno mismo!
மார்ச் 27 2023

No comments: