Sunday, June 18, 2023

நடைபாதையில் ஒரு நாடகம்

நேர்மறை எண்ணம் தேடி வர
  தினம் தொடும் வெறுப்பைத் தாண்டுதல்
நேசிக்க வைக்கும் நம்மை
  பிறர்தன் பொருளை வார்த்தைகளில் தொடாமலில்!

கூடியிருக்கும் கூட்டில் பறவைகள் பலவிதம்
  சிறகடித்து தன் பாதையில் பறந்தாலும்
கூட்டில் கூடுவதில் இயல்பாய்த் தேவை நேசம்!

வண்ண நிறங்கள் பலவிதம்
  அவை கூடுகையில் மாறிடும் பரிணாமங்கள்
எண்ணங்கள் நம்மில் பலவிதம்
    எதிர்மறை கூட்டலில் அவை மிளிராது!

எட்டி வைக்கும் பாதை இமயமே என்றாலும்
  கூட்டி இழுக்கும் உறவின் பிடியில்
கட்டிப்பிடிக்கும் நேசமன்றி கரையேற தூரமன்றோ!

நடைபாதையில் ஒரு நாடகம் அது!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Camina por la calle!
மே 26 2023

நம் வீட்டு செங்கோல்

எல்லோரும் செங்கோலைப் பத்திப் பேசறாங்க! 

நம்ம கவலையெல்லாம்

இனி ஒவ்வொரு மேடையிலும் வர்றவங்க போகிறவங்க எல்லாம் பரிசுப் பொருளாக சால்வைக்குப் பதில் ஒரு செங்கோலைக் கொடுப்பாங்கன்னு நினைச்சாத் தான் கெதக்ன்னு இருக்கு!

சால்வை போர்த்திக்க உதவும், இந்த செங்கோல் மேடையிலேயே அடிதடிக்கு உதவுமோ!

நம்ம வீட்டு செங்கோலை ஒளிச்சு வக்கனும்பா! செங்கோல் கொடுக்கிறது ட்ரெண்ட் ஆகி நம்மளது பூடப்போறுது!

சால்வையோட நிப்போம்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Bastones o mantas!
மே 26 2023

அர்ச்சனை மாலைகள்

காலையில எழுந்த உடனேயே சூடா காபி கிடைச்ச சந்தோஷத்துல பிஏகே சார் யாரையோ போட்டு சாத்து சாத்துன்னு சாத்திகிட்டே இருக்காறே!

எங்கம்மா அப்பா தினமும் காலையிலே எழுந்தவுடனே முதல்வேலையா வாசலில் விழற எல்லாப் பவளமல்லியையும் மல்லிகையையும் எடுத்து கோர்த்து சாமிக்குப் போட்டது போக பக்கத்திலுள்ள கோவிலுக்கு எட்டு மணிக்குள்ள கோவில்ல கொண்டு போய் கொடுப்பாங்க!

இங்க சாரை மாலை கோர்க்கக்கூட விடமாட்டேங்கறாங்க! சார் டைரெக்டாவே அர்ச்சனையில காலையிலேயே இறங்கிட்டாரே !

யாரப்பா அது! நேத்து டிவி பேட்டியில ஏதாவது ஏடா கூடமா!

மனதில் சாந்தி நிலவட்டும்!
வாழ்வினிது
ओलै सिरिय।
¡Un café tranquilo por la mañana es tan dulce como la sonrisa de un niño!
மே 25 2023

பயங்கலந்த வாழ்க்கை

இரண்டு நாளாகவே நம்ம வீட்டை யாரோ பராக் பார்க்கிறாங்கன்னு எனக்கும் அம்மிணிக்கும் ஒரு ஃபீலிங். 

நாலு நாள் முன்ன இரவு இரண்டு மணிக்கு அம்மிணி எழுப்பறாப்புல, கீழ ஏதோ சத்தம் வாங்கப் போலாம்ன்னு. எந்த சத்தமும் தெரியாத ஒரு ஆழ்ந்த உறக்கம் எனக்கு. இரவு கீழே வந்துப் பார்த்தா ஒன்னுமில்லை. அடுத்த நாள் பார்த்தா ஏதோ ஒரு தட்டுமுட்டு சாமான் விழுந்துருக்கு.

நேற்று ஜுகல்பந்தி போக காரை எடுத்தா பின்னாடி ட்ரைவ் வே ல ஒருத்தன் நிற்கறான். ஏதோ மார்கெட்டிங். அதற்கு முதல்நாள் அவன் கூட்டாளியை ஒன்னும் வேணாம்ன்னு அனுப்பி விட்டேன். இன்னிக்கு இவன். வேண்டாம்ன்னு சொல்லியும் அவன் பக்கத்து வீட்டு வாசலுக்குப் போய் ஃபோன் எடுத்து பேச ஆரம்பிச்சுட்டான்.

சந்தேகத்தோடவே கச்சேரிக்குப் போனோம்.

பொதுவாகவே நான் வேஷ்டி கட்டுவது குறைவு. அதுவும் வேஷ்டி கட்டி சட்டையில்லாம இருப்பது ஏதோ ஒரு விசேஷமான நாட்களில் தான். அதுவும் கொஞ்ச நேரம் தான்.

இன்னிக்கு காலையில எல்லா எடுபுடி வேலையும் செய்துபுட்டு, ஏதோ மனசுல தோணிச்சு குளிச்சு வேஷ்டி கட்டி சாளக்கிராமத்திற்கு பூஜை பண்ணனும்ன்னு. பண்ணி முடிச்சுப் பார்த்தா மணி மதியம் 1.30. 

லேட்டாச்சு சாப்பிட தட்டு எடுத்தேன். வாசல்ல மணி சத்தம். புதுசா 4 பேர் வடக்கத்தி ஃபேமலி நிற்கறாங்க. யாருன்னே தெரியலை. நானோ ஷர்ட்டில்லாம சாமியார் மாதிரி வேஷ்டியோட நிற்கிறேன். இவங்க யாரோ புதுசா! என்ன நினைச்சுருப்பாங்கன்னு தெரியலை!

எப்போதும் பக்கத்தில இருக்கும் சர்ச் ஆளுங்க தான் ஏதாவது பிரச்சாரத்துக்கு வருவாங்க! இவங்க பார்த்தா நெற்றியி்ல் பொட்டோடு வடக்கத்தி மராட்டி குஜ்ஜு தாலியோட நிற்கறாங்க!

நீங்க யாரு உங்களுக்கு எப்படித் தெரியும் நான் இங்கே இருக்கேன்னு கேட்டா எல்லாம் பப்ளிக் ரிக்கார்ட் பார்த்து வாரோம்ங்கிறாங்க! வந்தவங்க குஜராத்தி ஃபேமிலி. அவங்க அதாவளேன்னு ஒரு மராட்டி சாமியார் பேரைச் சொல்லி, அவர் எப்போதும் சொல்வார்: வெளியே போய் 4 பேரைப் பார்த்து வான்னு. அதன்படி உங்க தெருவில இருக்கிற இந்திய மக்களைப் பார்க்க வந்திருக்கோம்கிறாங்க!

ஹிந்தியிலப் பேசலாமான்னு கேட்டு ஹிந்தியிலேயே உரையாடல் அவங்க. நமக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியிலேயே டாம் டமால் டக் னு அடிச்சு விட்டாச்சு!

நம்ம வாய் தான் எப்போதும் சும்மா இருக்காதே! இன்னிக்கு சந்திராஷ்டமம் வேற! நேராவே கேட்டுவிட்டேன். நீங்க குஜராத்தி. ஆனால் ஒரு மராட்டி சாமியார் பேரச் சொல்லி வர்றீங்களேன்னு. அவங்களும் சளைக்காம ஸ்வாமிஜி பெருமைகளை சொல்லிட்டு, உள்ளூர் கம்யூனிட்டி சென்டர்ல ப்ரார்த்தனைக் கூட்டம் வச்சுருக்கோம் வாங்கன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க! ஃப்ரண்ட் ரூம்ல உட்கார வச்சு நல்லபடியாகப் பேசி அனுப்பிட்டேன்!

என்னைப் பார்த்தாலே ஏதோ சாமியாரைப் பார்த்ததா நினைச்சுருப்பாங்க! அமைதியாக சந்தோஷமாக அவங்க முகம் கோணாமப் பேசி அனுப்பிட்டேன்!

அம்மிணி வீட்டுள்ளே போன ஆளு, அவங்க போற வரைக்கும் ரூமை விட்டு வெளியவே வரலை!

இவங்களுக்கெல்லாம் நாம இங்க இருக்கோம்ன்னு எப்படித் தெரியும்ன்னு அவங்க போன பிறகு நம்மகிட்ட கேள்வி வேற!

யாமறியேன் பராபரமே!
ஸ்வராசியமான பயங்கலந்த வாழ்க்கை
வாழ்வினிது
ओलै सिरिय ।
¿Cómo saben que estamos aquí?
மே 21 2023

லால்குடி விஜயலக்ஷ்மி

இன்னிக்கு லால்குடி விஜயலக்‌ஷ்மி மற்றும் உஸ்தாத் சாகித் ஃபர்வேஸ் கானின் ஜுகல்பந்திக்கு போய்ட்டு வந்தோம். 

இரண்டு மணி நேரம் போனதே தெரியலை.

அதுலையும் பண்டிட் பத்ரி சதீஷ்குமாரின் மிருதங்கம், யப்பா அதகளம்.

ஹிந்துஸ்தானி ராக தாள லயத்துக்கு லால்குடி விஜியும் உஸ்தாத் ஃபர்வேஸ் சாகேப்பும் கையில் தாளம் போடறது அவ்வளவு perfect ஆக synchronize ஆவுது. 

செம ட்ரீட் இன்னிக்கு!

வீடு திரும்பும் போது இரவு எட்டேமுக்காலானாலும் இன்னும் இருட்டலை இன்னிக்கு. 

அம்மிணி திடீர்ன்னு இப்ப வாக்கிங் போலாமான்னாப்புல. இதென்ன புதுசா இருக்கு. ரைட்டு. இரண்டு பேரும் முக்கால் மைல் நடந்துட்டு வந்தோம். இருட்டிடுச்சு வேற. 

இரண்டு பேரும் ஒரு வார்த்தை பேசாம நடந்து போய் வந்தோம்.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Caminar en silencio suena nuestra melodía!
மே 20 2023

நடைபாதை பல்புகள்

நாள் பூரா ஆபீஸ் வேலை பார்த்துபுட்டு எப்படா ஆறு மணியாகும், இருட்டறதுக்குள்ள ஒரு நடை வாக்கிங் போய் விட்டு வந்துரலாம்ன்னு நினைச்சா, தெரு விளக்குல பல்ப் இல்லைன்னு நினைச்சாங்களான்னு தெரியலை, ரோட்டுல நடக்குற நமக்கு பல்பு கொடுக்க எல்லோரும் ரெடியாக இருக்காங்கப்பா!

இன்னிக்கு வேலை முடிஞ்சு கிளம்பினேன். வெளிய கொஞ்ச தூரம் கூட போகலை, பக்கத்துல ஒருத்தர் வெளியூர் போறாராம், அவர் வீட்டுச் செடிகளுக்கு தண்ணி காமிக்கனும்ன்னார். சரின்னேன். 

அம்புட்டு தான்.

மநுசன் என் வீட்டுத் தண்ணிக்குழாயை நீ எப்படி திறக்கனும், இந்த hoseல நீ எப்படி தண்ணிப் பாய்ச்சனும்ன்னு லைவ் ட்ரைனிங் கொடுக்க ஆரம்பிச்சுட்டார் வேற. இந்தா பைப்பை திற, ரொம்பத் திறக்காதே, கொஞ்சமா, இங்க வா, இந்த ஹோஸைப் பிடி, இத்துனூண்டு திறக்காத, முழுசா திற என லெக்சர் டெமான்ஸ்ட்ரேஷன்.

ஒரு டெக்னிகல் காலேஜ் போய் டிப்ளமா பல்ப் வாங்கி வந்துருக்கேனப்பா! முடியலை. அந்த பிரபலம் வந்தப்ப கச்சேரியிலேயே தான் பார்க்கப் போறேயேன்னு சொன்ன அதே ஆளு!

அடுத்து, ஒரு அரை மைல் தாண்டல. முன்பு சொன்ன ஒரு லோக்கல் மேனேஜர், இந்தியா மற்றும் வெளிநாட்டு இஞ்சினியர்களை பணியில் அமர்த்தி வேலை வாங்குபவர். 

அவர் பிடிச்சுகிட்டார்!

என்ன இப்படி தலைகுனிஞ்சு சோகமா வர்ற, ஏதும் பிரச்சனையில்லையேங்கிறார்!

ஐயா நீங்க கொஞ்சம் என் பின்னாலே பாருங்க, மூஞ்சிக்கு நேரா வெயில் அடிக்குது. Sunglasses போட்டும் தலை நிமிர்த்தர நிலையிலா இருக்குன்னேன்!

அவர்ட்ட எப்படி கொஞ்ச நேரம் முன்ன வாங்கின பல்ப் பத்தி சொல்றது! மானஸ்தனில்லையா! அது டெக்னிகல் டிப்ளமான்னா, இவர் இஞ்சினியரிங் டிப்ளமா கொடுக்கத் தயாராகிட்டார்!

மநுசன் வாக்கிங் போறவனை தடுத்து நிறுத்தி தன்னோட லெக்சரை ஆரம்பிச்சுட்டார்.

போன வாரம் ஒரு சென்னை இஞ்சினியரை சேர்த்திருக்கேன். அவன் racquetball அமெரிக்காவுக்கே விளையாடற தகுதி பெற்றவன். அவன் இதுக்கு முன்னாடி அங்க கிரிக்கெட்லையும் கலக்குவானாம், ஆனால் அங்க இந்தியாவுல இருக்கிற ஜாதிப்பிரச்சனையினால் அவனுக்கு கீழ இருந்த மூனு பேருக்கு சான்ஸ் கிடைச்சுதாம், அவனுக்குப் போச்சாம்! இங்க அமெரிக்கா தான் அவனுக்கு பெஸ்ட்டுன்னு அவன் சொல்றான்னார்!

அவருக்கு நான் எப்படி பதில் சொல்வேன்னு தெரியும், நம்ம வாய் தான் சும்மாயிருக்காதே, மநுசன் பேச்சை மாத்தி, எனக்கு பல்பு கொடுத்த திருப்தியுடன், இடத்தை காலி பண்ணிட்டார்.

போகறதுக்கு முன்ன, நீ என் முன்ன வந்ததை விட,  இப்ப உன் சிரிப்பு எப்போதும் போலத் தானிருக்குன்னு வாழ்த்தி அனுப்பிட்டார் மநுசன்.

கொஞ்சம் சான்ஸ் கிடைச்சா அந்தப் பையன் இங்க வந்து வண்ணங்களின் சிறப்புகளை நன்கு கத்துப்பான்னு சொல்றதுக்குள்ள மநுசன் பல்பு கொடுத்த திருப்தியோட கடந்து போயிட்டார்.

வீட்டுக்கு வந்து அம்மிணி கிட்ட சொன்னா, அவங்கெல்லாம் நல்லா சொல்லிக் கொடுக்கிறாங்க, நல்லா கத்துக்கங்கிறாப்புல!

யப்பா வாக்கிங் போவது உடல்நலத்துக்கா மனநலத்துக்கான்னு சந்தேகமாக இருக்குப்பா!

பல்பு எல்லாம் பழகிப் போச்சு இப்ப! 
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Caminar es bueno para la salud, pero …
மே 17 2023

பொன்னியின் செல்வன் 2 பார்க்க

அம்மிணி ஒரு வாரமாக சொல்லிட்டிருந்தாப்புல இந்த ஞாயிறு பிஎஸ்2 பார்க்கனும்ன்னு. 

சரி இப்ப மதியம் ஷோ போலாம் வான்னு போனா மதியம் ஷோ மட்டும் தெலுகுல, தியேட்டர் ஃபுல். மத்த மூனு ஷோ தமிழாம், படம் பார்க்க 4 தமிழர்கள் சேர்ந்து வந்தா பெரிய விஷயம், அதுக்கு மூனு ஷோ!

அம்மிணிக்கு பொன்னியின் செல்வன் கதை தெரியாது. தமிழை விட தெலுகு நல்லா பேசப்படிக்கத் தெரியும்.

நாக்கு தெலுகு தெலீதே! நானு தெலுகுல சூஸலேதுன்னு வாபஸ் ஆயிந்தி!

அடுத்த வாரம் போய் தனியா சூஸலாம்ன்னு வந்துட்டோம்!

தமிழில் ஒன்னுக்கு இரண்டு தடவை கதையைப்படிச்சவன் அங்ஙன போய் தெலுகுல பார்த்தா ஆதித்த கரிகாலன் எப்புடு மரிச்சுப்போனாருன்னு அம்மிணியில்ல எனக்கு ட்ரான்ஸ்லேட் பண்ணனும்!

இன்னாத்துக்கு இந்த கஷ்டம். வாபஸ் ஆயிந்தி!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Mira la película en un idioma que entiendas!
மே 7 2023

பிரபலங்களைச் சந்திக்க முடியுமா

யாராவது ஒரு பிரபலத்தைப் பார்த்தா நாம உடனே அவங்க பக்கத்துலப் போய் பேசி, முடிஞ்சா ஒரு சின்ன போட்டோ எடுத்துக்கப் பார்ப்போம்! அதுவும் வீட்டு பக்கத்துலேயே இருக்கும் போது அந்த ஆவல் ஜாஸ்தியாகத்தானிருக்கும்!

நாளைக்கு இங்க ஒரு பிரபல கர்நாடிக் கச்சேரி. ஆர்ட்டிஸ்ட் எல்லாம் வீட்டு பக்கத்துல தான் தங்கியிருக்காங்க! இன்னிக்கு அவங்க இவ்வளவு பக்கத்துல தங்கியிருக்காங்களே பார்க்க முடியுமான்னு ஆவலா இருந்துச்சு.

அவங்களுக்கு ஏதோ வேணும்ன்னு பக்கத்திலிருப்பவர் வந்து கேட்டு வாங்கிப் போனார். 

அவரிடம் நான் அந்த வித்வான் விதுஷியை இன்றோ நாளையோ நேரில் வீட்டில் வந்து பார்க்க முடியுமான்னு கேட்டேன்.

அவர் கூலாக பதில் சொல்றார்: அதான் நாளைக்கு கச்சேரியில் அவங்களைப் பார்க்கப் போறேயே! அப்புறம் என்னன்னு சொல்லிகிட்டுப் போறார்!

அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் மொமண்ட்!

அவங்களிடம் கேட்டுச் சொல்றேன்னு சொல்லியிருக்கலாம், அல்லது அவங்களை டிஸ்டர்ப் பண்ண வேணாம்ன்னு சொல்லலாம்! அதெல்லாம் எதுவுமில்லை. டைரெக்ட் பல்பு தான்!

நாளை கச்சேரியிலேயே பார்ப்போம். வேறென்ன!

பல்பு வாங்கினாலும்
வாழ்வினிது
ओला सिरिय ।
¡Pregúntale a alguien a quien puedas preguntar!
காயத்ரி வெங்கட்ராமன்
மே 5

காரைக்குடி மணி அஞ்சலி

2018ல் க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனை போயிருந்தப்ப பல முன்னணி கர்னாடிக் சங்கீத வித்வான்கள் மற்றும் விதுஷிகளை மிக அருகில் நின்று பார்க்க முடிந்தது, நேரில் கேட்க முடிந்தது. கூட நின்று படம் எடுத்துக் கொள்ள முடிந்தது.

இந்த 2018ம் ஆண்டு ஆராதனையை சிறப்பாகக் குறிப்பிடனும்ன்னா இதில் சில stalwartsன் கச்சேரிகளை கேட்டதும் அவர்களைப் பார்த்து பிரமித்ததும் கூட. தள்ளாத வயதிலும், நடப்பதற்கே சிரமப்படும் நேரத்தில் கூட அவர்களது வித்வத்வம் வாசிப்பில் ஒரு குறையுமில்லாமல் ஒரு இருபது வயது வாலிபனைப் போல தங்களது திறமையைக் காட்டினார்கள். என்ன ஒரு பெரும் அதிர்வு அந்த வாசிப்பில்!

அவர்களில் அன்று நான் கண்டு பிரமித்த இருவர் டி என் கிருஷ்ணன் மற்றும் காரைக்குடி மணி. இவர்கள் இருவரது கச்சேரிகளும் தனித் தனி, ஆனால் வார்த்தையில் விவரிக்க முடியாத அளவுக்கு மிகச்கிறப்பான ஒன்று. ஆடியோ ரிக்கார்டிங் வைத்துள்ளேன்.

இன்று இந்த இருவரும் இம்மண்ணில் இல்லை. காரைக்குடி மணியும் இந்த வாரம் தன் வாசிப்பை நிறுத்திக் கொண்டார். ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் அஞ்சலிகள்.

இணைப்பில் கொடுத்துள்ள வீடியோ அன்று ஆராதனையில் எடுத்தது. அன்று பட ஊர்வல அழைப்பில் தியாகய்யரின் உருவப்படத்தை சென்னை தூர்தர்ஷன் டி வி வரதராஜன் எடுத்து வர அவர் அருகில் காரைக்குடி மணி அவர்களை அழைத்து வந்து க்ளீவ்லேண்ட் சுந்தரம் மாமா நிறுத்தி வைத்து அவர் கையில் ஒரு கிருஷ்ணர் சிலையை கொடுத்து எடுத்து வரச்சொன்னார். 

சுந்தரம் மாமா அவர்களோடு முன் வரிசையில் வராமல் எங்களைப் போல் ஓரமாக ஒதுங்கி வந்தார். நான் அவரை திருப்பி அனுப்பி காரைக்குடி மணி மற்றும் வரதராஜனோடு சேர்ந்து வர அனுப்பி வைத்தேன்.

இணைப்பிலுள்ள இந்த வீடியோவை யாரோ தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். ஆகவே எண்ணிக்கை 40கே தாண்டி விட்டது.

டி என் கிருஷ்ணன் சார் அன்று நடப்பதற்கு மிக சிரமமான நிலையில் இருந்தார். காரைக்குடி மணி சாரை கண் கொட்டாமல் பார்த்த பொழுதில்

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Los incondicionales de la música nunca descansa.!
ஆழ்ந்த அஞ்சலிகள் காரைக்குடி மணி சார் 🙏
மே 4 2023

ஸ்பூர்த்தி குட்டி

இன்னிக்கு ஸ்பூர்த்தி குட்டி எங்க ஊர் கோவில் ப்ரோக்ராம்ல பாடினாங்க! குட்டிக்கு என்ன ஒரு குரல்வளம். உச்சஸ்தாயீ எல்லாம் சர்வசாதாரணமாக வருது.

காணக்கிடைக்க கொடுத்து வச்சிருந்தது.

வித்வான் கலைமாமணி கே வி பிரசாத் மிருதங்கம் வாசிக்கும் போது ஸ்பூர்த்தி குட்டி அதில் லயிச்சு போய் இரண்டு தொடையிலும் ஒரே சமயத்துல தாளம் போடறது குட்டி! பொதுவாக ஒரு தொடையில் தான் தட்டி தாளம் போடுவாங்க! ஸ்பூர்த்தி இரண்டு கைகளிலும் தாளம்!

தமிழில் சின்னஞ்சிறு கிளியே அப்படியே உருகி பாடறாப்புல! வாவ்! கச்சேரி ஆரம்பமே பஞ்சரத்ன க்ருதீஸ்ல ஒன்னுலேர்ந்து தான்!

நல்ல நிறைவான ப்ரோக்ராம்!

நன்றி ஸ்பூர்த்தி குட்டி 🙏
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Esta joven canta muy bien!
ஏப்ரல் 29 2023

ஒரு சரித்திர வீணை

ஒரு சரித்திர நிகழ்வில் ஒரு சரித்திரப்புகழ் வாய்ந்த ஒரு வீணையின் கதையை உங்களிடம் பகிரப்போகிறேன்.

படத்திலுள்ள முதல் வீணை 1863ம் வருடத்திய வீணை. இது இங்கு வர்ஜீனியா கோவில் ஒன்றில் பாழடைந்து காணப்பட்டது. அதை இந்தப் பெண்மணி, எங்களுக்கு மிகவும் தெரிந்தவர் இவர், கண்டெடுத்து மீட்டு புனரமைத்து இந்த நிகழ்ச்சியில் வாசித்தார்.

நிகழ்ச்சி முடிந்த இரவு க்ளீவ்லேண்ட் யுனிவர்சிட்டி வாசலில் நானும் அம்மிணியும் டின்னர் சாப்பிட்டுவிட்டு வர, அந்த குளிரில் இவர் எங்கள் எதிரே வந்தார். அங்கேயே க்ளீவ்லேண்ட் டவுன்டவுன் ரோடில் நின்று பேசிக் கொண்டிருந்தோம்.

அவர் கூறியது: இதை முதலில் பார்த்த போது ஏதோ பழசு தொட்டா உடைஞ்சுருமோன்னு நினைச்சேன். துடைக்க துடைக்க ஏதோ கருப்பா வந்துகிட்டே இருந்தது. ஒரு கட்டத்துக்கு மேல துடைக்கும் போது இது உடைஞ்சுருமோன்னு நினைக்கையில், இந்த வீணையின் குடம் உலோகத்தில் செய்ஞதுன்னு புரிந்தது. அப்புறம் இதை நாம பாத்திரம் தேய்க்கிற மாதிரி உப்பு புளி போட்டு தேய்ச்சு இதை மீட்டேன். அப்புறம் புதுசா மேளம் கட்டி கிடார் ஸ்டிரிங்க் போட எல்லாம் மீட்டெடுத்தாச்சு. இப்ப இந்த கான்செர்ட்டுக்கு கொண்டு வரும் போது கூட இது உடைஞ்சா என்ன செய்யன்னு இன்னொரு வீணையும் கொண்டு வந்தேன்னாங்க!

அப்புறம் எங்க உரையாடல் குடும்பம் குசலவிசாரிப்பாக மாறிடுச்சு.

இந்தப்படம் அவங்க லலிதாவில் ஆலாபனை வாசிக்கும் போது. அவங்க பேரும் அதே.

நிகழ்ச்சியில் இதை விதுஷி நிர்மலா அறிமுகப்படுத்தியவிதமும் மிகச்சிறப்பு. இதற்காக இவங்களுக்கு இந்த பழம் வீணை 1863 வருடத்தியதில் வாசிக்க ஒரு தனி ஆலாபனை லலிதாவில் வாசிக்க கொடுத்தார்.

பார்த்ததில் கேட்டதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Instrumento musical antiguo!
ஏப்ரல் 15 2023

க்ளீவ்லேண்ட் ஆராதனையில் ஒளிப்பதிவு

க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனையில் விதுஷி நிர்மலா ராஜசேகர் வழங்கிய வீணாகானம் நிகழ்ச்சியின் வீடியோக்கள் சிலவற்றைப் பகிர்ந்துள்ளேன். காணொளி லின்க் கமெண்ட்டில்.

மேடையில் அம்மிணிக்கு உதவி செய்துவிட்டு வேகவேகமாக மேடைக்குப் பின்புற டனல் வழியாக வந்து அரங்கினுள் கேமரா ட்ரைபாட் சரியான இடத்தில் செட் செய்ய நேரம் பத்தவில்லை.

ஒரு மூலையில் நின்று எடுத்ததால், இளம்வயது பாடகர்கள் நின்றுகொண்டு பாடியவர்களின் முகங்களைப் பதிவு செய்ய முடியவில்லை. வலது கோடியில் நின்று கொண்டு பாடிய அந்த இளம் வயதினர் தான் நிகழ்ச்சியின் முக்கிய அங்கம். எனது நிலமை புரிந்து மன்னிப்பார்களாக! 

நல்ல இடம் தேடி நின்று ரிக்கார்ட் செய்ய நேரமில்லை. நிகழ்ச்சி முடிந்து வாரி சுருட்டிகிட்டு மறுபடியும் மேடையில் எடுபுடிக்கு ஓட வேண்டிய நிலமை.

முடிந்த வரை செய்துள்ளேன்.
வாழ்வினிது!
ओलै सिरिय ।
¡Grabar un evento musical no es fácil!
ஏப்ரல் 15 2023

க்ளீவ்லேண்ட் ஆராதனை 2023

எடுபுடி வேலைக்கு ஆசைப்பட்டுப் போனா அது மட்டும் அப்படியே 100 பர்சண்ட் நடக்கனுமா! கொஞ்சம் இடைவேளை கொடுத்து இரண்டு கச்சேரியாவது பார்க்க வாய்ப்பு கிடைச்சுருக்கக் கூடாதா! 

கிடைக்கலையே! சித்தாள் வேலைக்குப் போய் பொதி சுமந்ததோட சரி!

அது கிடக்கட்டும், பழகிப் போச்சு நமக்கு!

புதன்கிழமையே போக வேண்டிய பிராக்டீஸ்க்குப் போக முடியலை, வியாழனும் மிஸ்ஸிங். வெள்ளைக்கிழமை காலை ஐந்தரைக்குப் புறப்பட்டு மதியம் 3க்குத் தான் போய்ச் சேர்ந்தோம்.

அன்றைய மாலை பிராக்டீஸ்லயே விதுஷி நிர்மலா ராஜசேகர் சொல்லிட்டாங்க, உங்களுக்காக ஒரு தனி பீஸ் வச்சுருந்தேன்மா, நீ நேற்று வரலை, இப்ப இரண்டு வேளை பிராக்டீஸ்ல ரிஸ்க் எடுக்க முடியாதுன்னுட்டாங்க. ஒரு நல்ல சான்ஸ் போச்சு, ஆனால் அம்மிணிக்கோ இவங்க உள்ளே விட்டதே பெரிய விஷயம்ன்னு இருந்துட்டாப்புல. அப்பவும் ஒரு இடத்துல ஸ்வரம் வாசிக்க இடம் கொடுத்தாங்க. ஆனால் அடுத்த நாள் ப்ராக்டீஸப்ப வித்வான் தஞ்சை முருகபூபதி தனி ஃபீஸ் பலவற்றை தள்ளுபடி செய்துட்டார்.

வெள்ளி இரவு பிராக்டீஸ் முடியரப்ப விதுஷி நிர்மலா ராஜசேகர் ஒரு போனஸ் கொடுத்தாங்க பாருங்க! அசந்து போயிட்டோம். உச்சி குளிர்ந்து போச்சு.

அடுத்த நாள் காலை நடக்கவிருக்கும் க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனையில் மேடையில் பஞ்சரத்ன கீர்த்தனை க்ருதிகளில் பங்கேற்க தன்னோட ஸ்டூடண்ட்ஸ் ஆறு பேருக்கு இடம் வாங்கியிருப்பதாகவும் அதில் அவங்க பின்னாடி உட்கார்ந்து வாசிக்க அம்மணிக்கு முதல் வாய்ப்பு கொடுத்தாங்க பாருங்க, உச்சி குளிர்ந்து போச்சு.

இத்தனை வருடங்கள் அங்கு போனதில் அரங்கில் நிற்கக்கூட இடமில்லாம ஒடுங்கி நெருங்கி பார்த்து திரும்பி வந்தது எங்கே, இப்ப அதே மேடையில அவங்க பக்கத்துல உட்கார்ந்து வாசிக்க அம்மிணிக்கு அவங்களே வாய்ப்பு கொடுத்தது எங்கே!

ஆறில் ஒரு இடம் பாக்கி இருந்தது, யார் வர்றீங்கன்னு கேட்டதில் அம்மிணியோட மாணவிக்கு 4 கீர்த்தனைகள் கத்துக் கொடுத்தது தெரியும்கிறதினால் அந்த மாணவியை நானும் அம்மிணியும் புஷ் பண்ண, அந்த பொண்ணு தான் இப்ப ப்ராக்டீஸ் பண்ணலை வரலைன்னுடுச்சு. வீணை ஒன்னு இரண்டு கீர்த்தனைக்காவது வாசி மத்ததுக்கு சும்மாவது வந்து உட்காருன்னு அவங்களே சொல்லியும் கூட அந்தப் பொண்ணுக்குத் தயக்கம். நல்ல வாய்ப்பு போச்சு. என்ன இப்படி பண்ணிட்டியேன்னு அந்தப் பொண்ணுகிட்ட வருத்தப்பட்டேன். அடுத்த வருடத்திற்காவது ரெடி பண்ணிக்கச் சொல்லியிருக்கேன்.

தியாகராஜ ஆராதனையில் பஞ்சரத்ன க்ருதி வைபவத்தில் சுதா ரகுநாதன், நெய்வேலி, திருச்சி சங்கரன், நாகை முரளி, திருவாரூர் வைத்தியநாதன், காயத்ரி கிரீஷ், சசிகிரண், கிர்ணாவளி, கணேஷ், சந்தீப் நாராயண், ஜெயந்த், லால்குடி வாரிசுகளெல்லாம் நடுநாயகமாக அலங்கரிக்க, விதுஷி நிர்மலா ராஜசேகர் தனது பரிவாரங்களுடன் மேடையின் வலது கோடியில் அலங்கரிக்க, 500 பேர் அமர்ந்து பாடிய/இசைத்த/தாளமித்த ஒரு அமர்களமான அரங்கேற்றம்.

கிடைத்தர்க்கரிய ஒரு வாய்ப்பு கிடைத்த பெருமிதம். 10000 பேர் பக்கம் இருந்த அரங்கில் மேடையில் 500ல் ஒருவராக. இவ்வளவு தூரம் பயணம் பட்ட கஷ்டத்திற்கு கிடைத்த பரிசு.

நிறைவானதொரு ஆராதனை!
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡La música es divina y talentosa!
ஏப்ரல் 14 2023

கேது நமது கிரகத்தில்

நம்ம வீட்டுல கேது. மத்த எல்லா ஆட்களும் நேரெதிரா உட்கார்ந்து கிட்டு நம்மளைப் பார்த்துகிட்டு இருக்காங்க!

யாரு நம்ம தலையில கொட்டப்போறாங்களோ!

இந்த தினபலன்காரங்க வேற சொல்லி வைக்கறதெல்லாம் ஒன்னு இரண்டு நேரடியாகவே நடப்பதைப் பார்க்கும் போது, யப்பா, வெளிச்சம் எப்பயா வரப்போவுது!

இதுவரை நாம பாட்டுக்க வாங்கிக் கட்டினத்துக்கெல்லாம் ஜாலியாகவே எடுத்துக்கப் பழகியாச்சு!

சிரிச்சுக்கினே பார்த்துகிட்டு இருப்போம், அதோ அந்த கோள்கள் எல்லாம் நேரெதிராக நின்னு நம்ம ராசியைப் பார்ப்பதைப் போல!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Las estrellas astrológicas nos están mirando!
ஏப்ரல் 4 2023

தயிர் தோய்க்கத் தெரியலையே

போன தடவை அம்மிணி ஊர் போயிருந்த போது தயிர் நல்லாத் தோய்ச்சிருந்தேன். அதே டெக்னிக்ல முந்தாநாள் ராத்திரியும் உரை குத்தினேன். தோயவேயில்லை.

நேற்று அம்மிணி கிட்ட என்ன பண்ணலாம்ன்னு கேட்டதுக்கு அவங்க சொன்ன ஐடியாவை ட்ரை பண்ணினேன். சரி வரலை.

கடையில போய் வாங்க சோம்பேறித்தனம். வாங்கலை. நேற்றும் இன்றும் தயிர் சாப்பிட முடியலை.

இன்று மதியம் அவங்க சொன்ன டெக்னிக்கை மறுபடியும் ட்ரை பண்ணினேன். இந்த தடவை ப்ரிட்ஜ்ல வைக்காம ovenல வெறும்ன மூடி வைச்சேன்.

எதுக்கும் தயிர் இருக்கட்டும்ன்னு இப்ப கடையில போய் தயிர் வாங்கி வந்தேன்.

திரும்பி வந்து ovenஐத் திறந்தா தயிர் கெட்டி தட்டி நிக்குது.

தேவைப்படும் போது குதிரை வண்டி கிடைக்காது. அப்புறம் நாலு வண்டி வந்து நிக்கும் கதை தான்.

இப்ப எதுக்கு இவ்வளவு தயிர்ன்னு வந்து இறங்கிறவங்களுக்கு நம்மைத் திட்ட ஒரு சாக்கு கிடைச்சுருச்சு வேற!

நம்மை மாட்டி விடறதுக்கு தயிர்/தஹி கூட முன் வரிசையில நிக்குதுப்பா!

தயிர் ட்ரை பண்ணினேன், அது தஹி ஆயிடுச்சுன்னு சொல்லித் தப்பிக்கனும்.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Arte de hacer cuajada!
ஏப்ரல் 3 2023

கோவம் ஒரு இயலாமை

நமது இயலாமை மற்றும் தோல்விகள் இப்பவெல்லாம் கோபமாகத்தான் வெளிப்படுது. சம்பவம் முடிஞ்ச பிறகு தான் தவறு புரிகிறது, ஆனால் நேரம் கடந்த ஞானோதயம் காரியத்திற்கு உதவாது.

ஆன்மீக வழிபாடு உண்மையான சாந்தத்தைக் கொடுக்க உதவும். அதுபடி காலையில் எல்லாம் சுகம்.

அம்மிணி வருவதற்குள் அம்மிணியின் காரை சுத்தம் பண்ணி வைக்கலாம்ன்னு நேரா கோவிலிருந்து கார்வாஷ் பண்ணப் போனேன். போனவுடனேயே இன்னர்டீடெயிலிங் பண்ணமாட்டோம், உள்ளே வெறும் வேக்யூம் மற்றும் கப்ஹோல்டர் மற்றும் டேஷ்போர்ட் மட்டும் தான் க்ளீன் செய்வோம்ன்னுட்டாங்க. எவ்வளவு கேட்டும் வேலைக்காவலை.

வெளியே மெஷின்வாஷ் பளபளக்க வச்சுட்டாங்க. உள்ளே வேக்யூம் பண்ணது எதுவுமே சரியில்லை. டேஷ்போர்ட் கார் ஸ்டியரிங் கூட க்ளீன் பண்ணலை. மேனேஜரைக் கூப்பிட்டு கேட்டா நாங்க இவ்வளவு தான் செய்வோம், முன்னவே சொன்னோமில்ல, நீ கொடுக்கிற காசுக்கு இவ்வளவு தான்கிறாங்கிறாங்க! 

நான் போனது குறைந்தது 150$வது செலவளிச்சு இன்னர் டீடெயிலிங் பண்ணனும்ன்னு. அவங்க செய்ய மாட்டேன்னுட்டாங்க. இப்ப கூட அவங்க சொன்ன கட்டணத்தைத் தான் கட்டியிருக்கேன். அதுக்கே இந்தப் பேச்சு.

செம கோவம் வந்துருச்சு. நான் 100$ தந்தாலும் நீ அந்த சர்வீஸிலும் இதே மாதிரி சொல்லப்பபோற, நீங்களே காருக்குள்ளப் பாருங்க, ஒன்னு கூட சரியா வேக்யூம் பண்ணலை, இது தான் சர்வீஸா, ஷேம் சார்ன்னு சொல்லிட்டு வந்தேன்.

பத்து பேரை அங்கு வேலைக்கு வச்சிருக்காங்க. எல்லோரும் அரைகுறை வேலை செய்து விட்டு பத்து பேரும் கூடி அரட்டை தான் அடிக்கிறாங்க, ஆனால் சர்வீஸ் இல்லை.

வந்த பிறகு தான் புத்தியில உரைக்குது, இன்னாத்துக்கு இவ்வளவு சண்டை, மறுபடியும் அந்த இடத்துக்குப் போக முடியாமப் போச்சு. டபுள் நஷ்டம். நம்ம இயலாமை நம்ம கோவம் நமக்கு நஷ்டம்.

அதே மாதிரி மாலையில் வெளியே போகும் போதும் ஒரு பெண் தன்னோட சின்னக்குழந்தையை கவனிப்பதைக் கண்டு பொறுக்கலை. எல்லோர் முன்னோடியும் பளிச்சுன்னு சொல்லிபுட்டேன், இது மாதிரி பண்ணினே புடிச்சுட்டுப் போயிடுவாங்கன்னு. 

அப்புறம் தான் உரைச்சது. ச்சே ஒரு தன்மையாக சொல்லியிருக்கனுமேன்னு. 

இயலாமை பொறுமையின்மை நாம் பெறும் பல தோல்விகள் ஆகியவை நமது இயல்பை மாற்றி செயல்பட வைக்குது.

எப்ப கோவத்தை அடக்கி எப்ப நம்ம நஷ்டத்தைக் குறைப்பது.

இறைவனது கருணை கிடைக்கட்டும்!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡La ira es tu peor enemigo!
மார்ச் 31 2023

சமையல் கற்பதின் களிப்பு

இன்று வாழ்க்கையில் முதல் முறையாக பருப்பு ரசம் பண்ண ட்ரை பண்ணினேன். எல்லாம் செய்துவிட்டு போட்டா அனுப்பலாம்ன்னு நினைக்கறதுக்குள்ள அம்மிணிகிட்டேர்ந்து ஃபோன் வந்துருச்சு!

அடுப்புல பருப்பு வச்ச குக்கர் விசில் சத்தம் கேட்டுடுச்சு. சமைக்கிறேன்னு கண்டுபிடிச்சுட்டாப்புல.

சரி, ரசம் எப்படி பண்றதுன்னு ஒரு தடவை சொல்லிருன்னு கேட்டுகிட்டேன். சொன்னாங்க!

என்னாலேயே நம்ப முடியலை. அம்மிணி/அம்மா பண்ற டேஸ்ட் அப்படியே வந்துருச்சு! சொக்கிப் போயிட்டான் இந்த சொக்கன். காக்கைக்கும் தன் குஞ்சு கதை தான்.

இனி ஒரு பெண்ணை வருத்தி சமைக்க வச்சு சாப்பிடறோம்கிற குற்ற உணர்விலிருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளியே வந்துரலாம்.

வாழ்வினிது.
ओलै सिरिय ।
¡La autococina también sabe bien!
மார்ச் 29 2023

உழைத்து உண்பதில்

அஸ்ஸாமில் தனியாக இருந்த போது சமைக்க வேண்டிய கட்டாயம் இருந்துச்சு. நண்பன் நாசர் உதவியால் பகல் நேரத்தில் அவன் ஹாஸ்டலில் ஐந்து ரூபாய்க்கு அசாமிய சாப்பாடு கிடைத்தாலும் இரவு உணவுக்காக ராஜஸ்தானி மெஸ் தேடி ரொம்ப தூரம் போவேன்.

கொஞ்ச நாளில் உடுப்பி ஹோட்டல் வந்ததால் அங்கு சாப்பாடு 30 ரூபாய்க்கு வாங்கி சாப்பிடுவேன். அஸ்ஸாமிய நண்பன் நாசர் ரொம்பத் திட்டுவான். இப்படி சாப்பிட்டா மாச சம்பளத்துல பாதிக்கு மேலே செலவு பண்ணுவ, இப்படியெல்லாம் இருக்கக்கூடாது, நீயே சமைன்னு கம்பெல் பண்ணுவான்.

அப்ப ரேசன்கார்ட் அஸ்ஸாமியர்களுக்கு மட்டுமே. நமக்கு கிடையாது. மண்ணெண்ணெய் ரேஷன் கடையிலத் தான் கிடைக்கும். அந்த ஆளுக்கு எக்ஸ்ட்ரா கொடுத்து ஐந்து லிட்டர் வாங்கி வந்தா நமக்கு ஒரு மாசம் ஓடும்.

சமைக்கவே தெரியாத நான் அப்ப செய்த இன்ஸ்டண்ட் ரசத்தை நாசர் டேஸ்ட் பார்த்துட்டு, பாரு இது உடுப்பி ரசத்தை விட செம டேஸ்டாக இருக்கு. இனி அநாவசியமாக 30 செலவு பண்ணக்கூடாதும்பான்.

நாசர் பெரிய பணக்காரன். கால்நடை மருத்துவர். ஊர் downtownல ஃபேன்சி பஜார்ல இரண்டு பில்டிங் அவனுக்கு சொந்தம். அதில் வரும் வாடகையே போதும்.

யானைக்கு குதிரை மேல ஆசை. குதிரைக்கு எலி மேல ஆசை. அவன் படிச்சப்ப நான் அவனுக்குப் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் எழுதிக் கொடுத்தேன். அவனுக்கு நான் உட்கார்ந்த சீட்ல உட்கார ஆசை. அசாமை விட்டு நான் கிளம்பிய பிறகு அவனை பதினைந்து இருபது வருடம் கழிச்சு தான் தொடர்பு கொண்டேன். இப்ப சொல்றான், நீ காலி பண்ண அதே சீட்ல அதே கம்ப்யூட்டர் ரூம்ல நானும் போய் உட்கார்ந்தேன்டாங்கிறான். யானைக்கு குதிரை மேல ஆசை.

அங்கிருந்து வந்த பிறகு சமைக்க வாய்ப்பேயில்லை. அம்மா, அம்மிணி தயவில் காலம் ஓடிடுச்சு.

இப்ப அம்மிணி அவங்கம்மாவைப் பார்க்கப் போயிட்டாங்க. வெளியே போய் சாப்பிடலாம். எதிர்வீட்டு ஶ்ரீரங்கம் குடும்பம் அப்பப்ப ரொம்பவே கவனிக்கறாங்க. அண்ணன் வேற, ஏண்டா சமைக்கத் தெரியாம கஷ்டப்படற, இங்க வீக்எண்ட் வந்து ஒரு வாரத்துக்கு கட்டிண்டு போடாங்கிறான்.

ஆனால் மனசுல ஒரு வைராக்கியம் எப்படியாவது சமைக்கக் கத்துக்கனும்ன்னு. எல்லாத்தையும் தவிர்த்து விட்டு இப்ப ட்ரை பண்ணிகிட்டே இருக்கேன்.

அம்மா சொன்னது உரைச்சுகிட்டே இருக்கு. ஒரு பொண்ணு ஆபீஸ்லையும் நாள் பூரா வேலை செய்ஞ்சுட்டு வீட்டுலையும் வந்து உழைக்கறாள், நீ இப்படி உட்கார்ந்து சாப்பிடறயே! உன் அண்ணன்களாவது பரவாயில்லை சமைச்சு சாப்பிட்டுக்கிறாங்க. நீயும் உன் தம்பியும் ரொம்ப மோசம்டா. உங்களை சின்ன வயசுல அடுக்களையில விடாதது என் தப்பு, இப்ப இன்னொரு பெண்ணை இப்படி படுத்துறீங்களேடான்னாங்க! 

மனைவி சொல்லிக்காமிப்பதை விட அம்மா சொல்வது உரைச்சுகிட்டே இருக்கு.

இன்றும் முயற்சி பண்ணேன். அதுவும் போன வாரம் ட்ரை பண்ணியதும். வெறும் காய் மட்டும் தான் செய்தேன்.

எப்படியாவது ரசம், சாம்பார் கூட்டு செய்ய கத்துக்கிடனும். முயற்சிப்போம்.

உழைச்சு திங்கனும் என்று நினைப்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय !
¡Cocinar uno mismo!
மார்ச் 27 2023

அன்பைத் தேடி

அம்மிணி பாட்டுக்க அம்மா, குலதெய்வம்ன்னு கிளம்பிப் போயிட்டாங்க.

வார இறுதியில் சும்மா இருக்க முடியலை. சின்க்ளையும் பாத்திரம் இல்லை. வெட்டியாக இருக்கிறதை விட எடு மாட்டைப்பூட்டு வண்டியைக் கிளப்பு.

பையனைப் பார்க்க கிளம்பி வந்தாச்சு. பையன் அப்பாயிண்ட்மென்ட்டுக்கு வெயிட்டிங். 

பால்ய நண்பரின் மகள் கொலம்பஸ் டப்ளின் வந்துள்ளதைக் கேள்விப்பட்டு வழியில் அவர்களையும் சந்தித்து விட்டு வந்த திருப்தி.

பையனின் தரிசனத்திற்கு வைட்டிங். நாளை டெட்ராய்ட் நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் கூடுதல் மகிழ்ச்சி.

போன வாரம் தெற்கே பயணம். இந்த வாரம் வடக்கு நோக்கி வந்தாச்சு. போக வர கிட்டத்தட்ட 3000 மைல் பயணம்.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Viajar es tedioso, pero necesario!
மார்ச் 24 2023

ஆஸ்டின் டெக்ஸஸ் பயணம்

வாழ்க்கையில ஒரு நாள் எல்லாவிதமான கஷ்டங்கள் பட்டாலும் அடுத்த நாளே நம்ம நாளை இனிமையாக்கினா பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறந்து போயிடுது. பழகியும் போச்சு.

தம்பியுடையார் படைக்கு அஞ்சார். தம்பி பேச்சைக் கேட்கலைன்னா வனவாசம்.

பொண்டாட்டியுடையார் கஷ்டத்துக்கு அஞ்சார். மனைவி பேச்சைக் கேட்கலைன்னா எல்லா கஷ்டமும் தாராள மனசோட அள்ளிக்க நிறையவே கிடைக்கும்.

அத்தகைய பயணம் ஆஸ்டின் பயணம். முன்ன பின்ன போகாத இடம்.

காலையிலிருந்தே எல்லாப் பக்கமும் இடி விழுது. எதையும் தவிர்க்கமுடியலை. இரவும் அதே. அடி வாங்குவது பழகிப்போச்சு.

வேலை முடிஞ்சு கிளம்பியது இரவில். கனெக்டிங் ப்ளைட் டிலே. கார் ரென்டல் மூடிட்டான். ஹோட்டலில் ரூம் போச்சு பணம் போச்சு. இரவு தூக்கம் போச்சு. கசினைக் கூப்பிட்டா அவர்களும் தூங்கிட்டாங்க. ஏர்போர்ட்லேயே இரவு வாழ்க்கை. 

காலையில் கார் கிடைச்சு funeral முடிஞ்சு மதியம் வேற ஓட்டல். இரவு தூங்கும் போது நடுராத்திரியில் யாரோ ஹோட்டல் ரூம் கதவை ஓங்கி அடிச்சு அடிச்சு தட்ட, எழுந்து பார்த்தா யாருமில்லை. தூக்கம் பாதி போச்சு.

மனசு சந்தோஷமாக இருந்த நேரங்கள் துக்க நேரத்திலும் உறவினர்களின் சந்திப்பு, அளவலாவல்.

இவ்வளவு தூரம் இனி எங்க வரப்போறோம், போவது மத்யமானாலும் பரவாயில்லைன்னு ஆஸ்டின் கோவில் போனேன். பிரமாதம். மனம் சாந்தியுற்றது.

இன்று மார்ச் 18, கார் ரிடர்ன் பண்ணியப்ப அவங்களே கட்டணத்தை 260லிருந்து 180 ஆக்கிட்டாங்க. மொத்தம் ட்ரைவ் பண்ணதே 50 மைல் கூட இல்லை.

டெல்டா ப்ளைட் கேட்டில் வரலாறு காணாத வரவேற்பு அனைவருக்கும் இன்று. கேட் வாசலில் புதுசா காபி போட்டு ஃப்ரீயாக அனைவருக்கும் கொடுக்கிறாங்க. எல்லோருக்கும் அங்கயே பாப்கார்ன் freshஆக பண்ணிக் கொடுத்தனர். ப்ளைட்டில நான் கேட்ட சீட் கட்டணமில்லாமல் கேட்ட உடன் கொடுத்தனர். ஃப்ளைட் 20 நிமிஷம் முன்னாடியே வந்துடுச்சு.

போகும் போது பட்ட அத்தனை கஷ்டங்களையும் வரும் போது மறக்க வச்சு மனசை குளிர வச்சுட்டாங்க. 

போனதால் உறவினர்களின் பந்தமும் சிறப்படைந்தது. அவர்களும் அதை வெளிப்படையாகவே தெரிவித்தனர். நாள் பூரா என்னை எல்லோரும் அண்ணா அண்ணான்னு கூப்பிட்டதை கேட்டது இப்பவும் காதில் எதிரொலிக்கிறது.

அம்மிணி சொன்ன டைமுக்குள் வீடு திரும்பியதால் இங்கிட்டும் எந்தப் பிரச்சனையுமில்லை. அம்மிணி ரெஸ்டாரண்ட்க்கு கூட்டிப் போய் டின்னர் வாங்கிக் கொடுத்தாங்க.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡La vida está llena de subs y bajadas!
மார்ச் 18 2023

அன்பானவர்க்கு ஒரு அஞ்சலி

வாழ்க்கையில் எந்த உயரத்துக்குப் போனாலும் எனது சில உறவினர்களில் சிலர் என் அப்பா அம்மாக்கு கொடுக்கும் மரியாதையைப் பார்க்கும் போது மெய் சிலிர்க்கும். அவர்களுக்குள் எந்த அந்தஸ்து ஈகோ எதுவும் அவர்கள் நட்பு மற்றும் உறவுக்கு முன் நிற்காது.

எனது அம்மாவோ பள்ளிக்கூடமே போக வாய்ப்பு இழந்தவர்கள். அப்பா ஏழாவது படிக்கும் போதே எல்லா நிலங்களையும் இழந்து ஊரை விட்டு வந்தவர்.

அப்பாவோட கசின் விங் கமாண்டராக இருந்து ரிடையரானவர். இப்போ அவருக்கு 83 வயது. அவர் அவரது மனைவியெல்லாம் மெத்தப்படித்தவர்கள், ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் எல்லாம் சரளமாக எழுதப் பேசக்கூடியவர்கள். 

மூன்று வருடம் முன் அவர்கள் அம்மாவைப் பார்க்க வந்த போது கூட அம்மா காலில் நெடுஞ்சான்கிடையாக விழுந்து நமஸ்காரம் பண்ணினார்கள்.

நான் அப்பவே அவரைத் தடுத்தேன். சித்தப்பா உங்களுக்கே இப்ப 80 வயசு, இந்த வயசுல கீழ விழுந்து என்னத்துக்கு நமஸ்காரம் பண்றீங்க, அடிபட்டதுன்னா என்ன பண்றதுன்னேன்.

அதுக்கு அவர்கள் இரண்டு பேரும் சொன்ன பதில் ஆடிப்போச்சு, வயசு என்னடா, அவங்க 3 வயசு பெரியவங்க, மன்னி ஸ்தானம் பெருசு, அவங்க ஆசீர்வாதம் கிடைச்சா எனக்குத்தான்டா புண்ணியம்ன்னார்.

அசந்து போய் பார்த்தேன். அம்மா கூட அவங்க போன பிறகு சொன்னாங்க, எவ்வளவு பெரிய பதவி வகிச்சவர், அவர் கமாண்டிங்ல எவ்வளவு பேர் இருந்திருந்துக்காங்க, எவ்வளவு பணம் பதவி படிப்பு எல்லாம் அவருக்கு. என்னையும் அப்பாவையும் பார்க்க வாரம் இரண்டு தடவையாது வருவாங்க, ஒவ்வொரு தடவை வரும் போதும் யாரிருந்தாலும் பார்க்காம நமஸ்காரம் பண்ணாமப்  போக மாட்டாங்க! அப்படி நாம என்ன பண்ணிட்டோம் நாலு வார்த்தை அவங்களோட அன்பாப் பேசறதை விட என்றார்கள்.

அந்த சித்தி இங்கு மறைந்து விட்டார். சித்தப்பாவிற்கும் கொஞ்சம் மறதி ப்ராபளம் இப்ப புதுசா. சித்தியின் funeralக்கு நாளை இரவு ஆஸ்டின் பயணிக்கிறேன். முன் பின் போகாத இடம். 

இங்கிருந்து கிளம்புவதற்குள் இங்கு ஆயிரத்தெட்டு சமாளிக்க வேண்டியிருக்கு. இடி எல்லாப் பக்கத்திலுமிருந்து விழுது. ஆதலால் நாளை இரவு தான் பயணம்.

மரியாதைக்கு மொத்த உருவமாக வாழ்ந்தவர்கள். அவர்களில் ஒருவருக்கு அஞ்சலி செலுத்தவதே சிறந்தது என கிளம்பி விட்டேன். நினைத்ததை விட அதிக செலவு. அதை யோசிக்கக் கூடாத தருணம்.

நம் வாழ்விலிருந்து ஒருத்தர் மறையும் போது தான் அவர்கள் நம்முடன் பழகிய விதம், பேசிய விதம், அன்பு, உதவி மற்றும் மரியாதைகளெல்லாம் நிழல்களாக கூடவே வருகிறது.

மிகவும் அன்பானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப் பயணிப்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Una vida para apreciar!
மார்ச் 15 2023