எல்லோரோடும் சேர்ந்து படிக்கும் போது அது ஒரு முதியோர் கல்வி போல இருந்தாலும், அங்கு கூடப்படிக்கிறவங்களோட அவங்க சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வது என்பது ஒரு சிறப்பு அம்சம்.
நேற்றும் (10/6/2022) ஆபீஸ் வேலை முடிந்து மாலை ஆறு மணிக்கு புரபசருக்கு உதவ சர்ச்சுக்குப் போனேன். போனவுடனேயே அங்கு படிக்கிற ஒரு வெனிசுலா பெண் என் பெயரைச் சொல்லி, இன்னிக்கு வகுப்பில் பார்ட்டி நடக்கப் போவுது, டான்ஸ் ஆடப்போறோம்ன்னு சொல்ல வந்தாங்க, ஆங்கிலம் தெரியாததால் அவருக்கு சொல்ல வரலை. பாதி ஸ்பானிஷ் பாதி ஆங்கிலம் கலந்து சொன்னாங்க. ஆனாலும் அவங்க விடலை, இதை நான் எப்படி ஆங்கிலத்தில் சொல்வது என சொல்லிக் கொடு, ஒவ்வொரு வார்த்தைக்கும் அதன் உச்சரிப்பை ஒன்னுக்கு இரண்டு தடவை கேட்டு தெரிஞ்சு கிட்டாங்க.
அவங்க கூட வரும் அவங்களோட 4 வயது குட்டிப் பெண்ணுக்கும் ஆங்கிலம் தெரியாது, ஆனால் கிளாஸில் இன்று பார்ட்டி இருக்குன்னு அந்த சின்னதுக்கு அவ்வளவு சந்தோஷம்.
அந்தக் குட்டிப்பெண் காலையில் ஆங்கிலம் அதே புரபசரிடம் அந்த சர்ச்சில் கற்கிறது. அது கூட நிறைய மெக்ஸிகன் குழந்தைகளும் சேர்ந்து படிப்பதால், அந்தக் குழந்தை அவர்களோடு பழகி நிறைய மெக்ஸிகன் ஸ்பானிஷ் dialects பேசுகிறது. இது அவரோட தாய்க்குப் பிடிக்கவில்லை.
இந்த வகுப்பில் பாதி பேர் க்யூபா பாதி வெனிசுவேலா. ஆகவே அவர்கள் எல்லோருடமும் இவள் மெக்ஸிகன் கலந்து பேசுவது பிடிக்காததை பகிரங்கமாக சொல்கிறார்கள்.
ஏற்றதாழ்வு பார்க்காத மக்களும் இல்லை மொழிகளும் இல்லை கலாசாரங்களும் இல்லை, மாறிய சமுதாயங்களுமில்லை. எல்லாவற்றையும் பார்த்து அதன் போக்கிலேயே எல்லோரும் போகிறோம்.
ஒரு ஹோட்டலில் வேலை செய்யும் க்யூபன் பெண்மணி, தன்னோடு தன் மகனும் ஆங்கிலம் கற்க, சேர்ந்து வகுப்புக்கு வருகிறார்கள். அந்தப் பையனுக்கு இந்த வாரம் 22 வயது ஆகப்போகிறது. அந்தப் பையனோட பர்த்டே பார்ட்டியைத் தான் சர்ப்ரைஸாகக் கொடுக்க இன்று வகுப்பில் அத்தனை களேபரம்.
பத்து நிமிடத்தில் பர்த்டே பார்ட்டிக்கான அலங்காரம் முடித்து விட்டார்கள், கலர் லைட் பலூன் கேக் சாலட் என எல்லாம் ரெடி.
இரண்டு மணி நேர வகுப்பு முடிந்தவுடன் பார்ட்டி ஆரம்பம். ஆட்டம் பாட்டமென்ன. கலக்கறாங்க. என் கூட அவர்களுக்கு உதவி செய்யும் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி செம டான்ஸ். அவங்க ஆடறதை வீடியோ எடுக்கப் பல தடவை அநுமதி கேட்டும் முடியாதுன்னுட்டாங்க. இல்லாட்டி அந்தப் பார்ட்டியை அழகாகப் படம் பிடிச்சுருப்பேன்.
அந்த க்யூபன் பெண்மணி இந்த வாரம் தான் தன் வாழ்வில் முதல் தடவையாக கார் ஓட்டுவதும், இங்கு ரோட்டில் ஓட்டும் போது ஏற்படும் பயம், ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி, மகிழ்ச்சி எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாகக் கொட்டி புரபசரிடம் சொல்லி அழ, மேலும் தன் பையனுக்கு இங்கு வகுப்பில் ஒரு சர்ப்பரைஸ் பார்ட்டி நடப்பது பார்த்து அவர்கள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.
Caesar salad க்குத் தேவையானவற்றைக் கொண்டு வந்து ஐந்து நிமிடத்தில் டின்னர் ரெடி. அதில் bacon கலந்து விட்டதால் நான் சாப்பிடவில்லைன்னு அவர்களுக்கு வருத்தம்.
செமையாக கேக் வெட்டி ஆட்டம் பாட்டமுடன் பர்த்டே பார்ட்டி. ஆனால் அதற்கு முன் எந்த தொய்வுமில்லாமல் இரண்டு மணிநேர வகுப்பு.
வகுப்பில் அவர்களுக்கு பலவிதங்களில் உதவமுடிவதை எண்ணி எனக்குள் ஒரு அல்ப சந்தோஷம்.
அவர்களது ஆங்கில கிளாஸ் நோட்ஸை எடுத்து நான் அதை ஸ்பானிஷில் எழுதும் போது அவர்களும் நிறைய உதவுவார்கள். புது ஸ்பானிஷ் வார்த்தைகள் தினமும் அறிந்து கொள்ளலாம்.
ஆனால் மிக மிக வேகமாகப் பேசுகிறார்கள். எழுதிப் படிப்பதற்கும் அவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்வதற்கும் இடையே ஒரு பெரிய கோவர்த்தனகிரி மலை நிற்பது போல் தோன்றுகிறது.
கற்கும் போது கலைநயம் நட்புணர்வோடு கற்பது சிறந்தது.
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Aprende con diversión!