காலையில அரச மரத்தடி, ஸ்டாஃப் அசோசியேஷன் பாலம் அதை விட்டா அடுத்து காலையில 8.30 - 9.30 நமது காலனி வாலிபர்கள் குழுமுகிற இடம் …
வேறெங்க!
போஸ்ட் ஆபீஸ் தான்.
காலையில ஒரு ritual ஆக போய் நிக்குறதுக்கு பல காரணமிருந்தாலும் மிக முக்கியமானது நம்ம போஸ்ட்மேன் பெருமாளோட கடைக்கண் நம்மேல விழுமான்னு அங்க சுத்தி நிக்குற கும்பல் கண்ணில் அலை பாயும் பாருங்க. அது so lovely.
நான் பத்தாவது முடிக்கிற வரை D13 வீடு தான். கீழ்மேட்டூர் அரசினர் பள்ளியில் +1 +2 படிக்கத்துவங்கும் போது தான் B1லிருந்த GV மாமா ரிடையர் ஆகிப்போனப்பிறகு அந்த வீட்டுக்கு வந்தோம்.
டி லைன்ல இருக்கும் போது எனக்குத் தெரிஞ்சு ராமச்சந்திரன் மாமா (இளங்கோ அண்ணாவோட அப்பா) தான் போஸ்ட்மாஸ்டர். அவருக்கு முன்ன யார் இருந்தாங்கன்னு எனக்கு ஞாபகமில்லை. நாங்க B1 வந்த பிறகு என் நண்பர் ரமேஷோட அப்பா ரங்கராஜன் மாமா தான் போஸ்ட் மாஸ்டர்.
காலனிக்கு கிடைச்ச இந்த இரண்டு போஸ்ட்மாஸ்டர்களும் சொக்கத்தங்கம். அமைதியானவங்க இனிமையானவங்க. அதுவும் ரமேஷோட அப்பாவோட அவர் கடைசி காலம் வரை எனக்கு மிகநெருங்கிய இனிமையான பழக்கம்.
இந்த இரு போஸ்ட்மாஸ்டருக்கும் கீழ நம்ம துளசி டீச்சர் பையன் பாலாஜியோட அப்பா தான் சப்-போஸ்ட்மாஸ்டர்.
போஸ்ட்மாஸ்டர் ராமசந்திரன் மாமா செம உயரம். கொஞ்சம் முதுகு லைட்டாக பின்னாடி கூன் போட்ட மாதிரி இருந்தாலும் மாமா நேராக நடந்து போஸ்ட்ஆபீஸ் போவார். செம உயரம். போஸ்டாபீஸ் முன்ன இருந்த அந்த சாக்கடை பாலம் அடுத்து உள்ள இறங்கினா நேராக போஸ்ட்மாஸ்டர் டேபுள். ஒரு மிகப்பெரிய டேபிள் அது. அதுக்குப் பின்னாடி போஸ்ட்மாஸ்டர் கம்பீரமாக உட்கார்ந்திருப்பார். ஆபிஸ் நுழைவாயில் இடதுபக்கம் பாலாஜியோட அப்பா. வலதுபக்கம் டெலிபிரிண்டர் மற்றும் டெலக்ஸ் மெசேஜ் சத்தம் தொடர்ந்து கேட்கும்.
ஆபீஸ் வலது பக்கம் உள்ள ரூம் தான் போஸ்ட்மேன் பெருமாள் மற்றும் இன்னொரு போஸ்டமேன் (கவிபுரம், ராமமூர்த்தி நகர், பாடிக்கு தபால் கொடுப்பவர்), மற்றும் தபால்தலைகள் counter, money order counter எல்லாம்.
நம் காலனி வாலிபர்கள் எல்லாம் அமர்ந்திருக்கிற இடம் இந்த countersக்கு எதிர்புறம் உள்ள சாக்கடைத்திட்டு தான். அரட்டைகளின் சுவாரசியங்களுக்கு இடையில் போஸ்ட்மேன் பெருமாளோட தரிசனம் அவரோட கடைக்கண் நம் மீது விழுமான்னு எட்டிப்பார்க்கிற அந்த லாவகமானப் பார்வை இருக்கே, அதை ரசிப்பதே ஒரு அலாதி.
பெருமாள் ரொம்பவே பாவம். அந்த ஒட்டு மொத்த காலனிக்கான தபாலையும் அந்தக் கைகளில் தோள் பைகளிலும், அப்பப்ப தன்னோட சைக்கிளிலும் அவ்வளவு சுமையை சுமந்து கிட்டு நடப்பதை தவிர்க்க அவர் விரும்புவது இது மாதிரி வாலிப பசங்க போஸ்ட் ஆபீஸ் வந்து வாங்கிட்டுப் போனாங்கன்னா அவர் தூக்கிகிட்டு நடக்க வேண்டிய சுமை குறையும். அவருக்கும் நல்லது. நம்ம வாலிபர்களுக்கும் காலைப்பொழுது இனிதாகக்கழியும்.
போஸ்ட்மேன் பெருமாள் நான் சின்னவனாக இருந்த போது என் கையில் தபால் தரமாட்டார். சின்னவங்க கையில் தரமாட்டார். வீட்டுக்குப்போ கொண்டு வர்றேன்பார். கிடைக்காதுன்னு தெரிஞ்சாலும் அங்க மத்த பெரிய வாலிபர்கள் நின்னு அரட்டை அடிப்பதை சுத்தி மேய்ஞ்சு வருவது எனக்கு செம இன்ட்ரஸ்டிங் வேலை.
எல்லோரும் போஸ்ட் ஆபீஸ் உள்ள இருக்கிற திட்டுமேல அடிக்கிற அரட்டைச்சத்தம், மற்றும் கூட்டம் அதிகமாக இருப்பதால் counterல் வேலை செய்பவர்களுக்கு தடங்கலுக்கு இடையில், பெருமாள் அண்ணன் போஸ்ட்மாஸ்டர் பார்க்காத நேரம் பார்த்து அந்த ஜன்னல் counter வழியாக டக்குன்னு வந்து ஒன்னு இரண்டு தபால்களை ஜன்னல் வழியாக தள்ளிவிட்டு விடுவார்.
தபால் கிடைச்ச வாலிபர்கள் முகத்துல அப்ப வருகிற பிரகாசம், எனக்கு பஜனை மடத்துல சூறாவளி ராமன் மாமா தொன்னையில மனசு வந்து முழுக்கரண்டி பொங்கலை என் தொன்னையில வைக்கிற போது எனக்கு ஏற்படற சந்தோஷம் மாதிரி, அவங்க சந்தோஷமிருக்கும்.
போஸ்ட்மாஸ்டர் மாமா செம ஸ்மார்ட். அவராக வந்து வெளிய நிற்காதிங்கன்னு சொன்னா, எல்லோரும் அவருக்குத் தெரிஞ்ச காலனிப்பசங்க. ஒன்னா வசிக்கிற இடத்துல தப்பா நினைச்சுப்பாங்கன்னு, பெருமாள் அண்ணன் ஜன்னல் வழியாக கொடுக்கிறதை அவர்ட்ட சொல்லி நிப்பாட்டிட்டு, வெளிய தள்ளிப்போய் கொடுக்கச் சொல்லிட்டார்.
பெருமாள் கடைக்கண்ணுக்கு தவம் கிடக்குற நம்ம காலனிப்பசங்க பெருமாள் என்ன சொன்னாலும் கேப்பாங்களே, அவர் கண்ணால் சைகை காட்ட அடுத்து நம்ம மக்கள் எல்லாம் கோஆப்பரேட்டிவ் ஸ்டோர் தாண்டி ரோட்டுக்கு முன்ன, இந்த கந்து வட்டி மற்றும் சீட்டுபணம் கட்டற மக்கள் நிக்குற இடத்துக்கு இடம் பெயர்ந்தாச்சு.
போஸ்ட்மேன் பெருமாள் அங்கு வந்து அவரோட கடையை விரிச்சு தபால் பட்டுவாடா பண்ணிட்டு, ஒரு சின்ன பீடி பத்த வச்சு ருசி பார்த்துட்டு, தன் சுமை குறைஞ்ச கையோடு 9.30-பத்து மணிக்கு காலனி நோக்கி நடைபோடுவார்.
பெருமாள்ன்னு பேர் வைச்சாலே அவர் தரிசனம் கருணை கிடைக்குமான்னு வாழ்ந்த அந்த காலனி வாழ்க்கை மனதிற்கினியது.
பின்குறிப்பு:
உங்க கிட்ட இங்க நிறைய சுவராசியமான விஷயங்கள் இருக்கும். அள்ளி வீசுங்க!
வாழ்வினிது
ओलै सिरिय ।
No comments:
Post a Comment