Tuesday, November 9, 2021

சேர்த்து வைத்த பூதத்தைக் காப்பாத்த

 அமெரிக்காவுல இருந்துகிட்டு ஒருத்தர் தான் ஸ்டாக் மார்க்கெட் பத்தி கவலைப்பட மாட்டேன்னு சொல்வது என்பது ஒரு நெருப்புக்கோழி மண்ணுக்குள்ள முகத்தை மறைச்சுகிட்டு நான் இந்த உலகத்தைப் பார்க்க மாட்டேன்னு சொல்வது மாதிரி அபத்தமானது.

வாழ்க்கையில நீண்ட காலம் உழைச்சு சேமிச்சு வச்சதைப் பாதுகாக்க பர்சனல் ஃபைனான்ஸ் சேவிங்க்ஸ் பத்தி தெரியனும். அதற்கு இந்த நாட்டுல ஸ்டாக்ஸ் ம்யூச்சுவல் ஃபண்ட், ஈக்யுட்டி, இன்சூரன்ஸ் பத்தி கண்டிப்பாகத் தெரிஞ்சுக்கனும். இது தெரியாம தெரிஞ்சுக்காம வாழறவங்க என்னிக்காவது ஒரு நாள் குடும்பத்தை இக்கட்டுல தவிக்க விட்டுவிட வாய்ப்புகள் அதிகம்.

நம் ஒவ்வொருத்தரோட சேமிப்பும் சோஷியல் செக்யூரிட்டி, 401கே, ஐஆர்ஏ, ரோத், பென்ஷன் என பல விதத்தில் இருந்தாலும் அத்தனையும் இந்த நாட்டில் பெரும்பான்மையாக அவர்கள் இன்வெஸ்ட் செய்வது ஸ்டாக் மற்றும் பாண்ட் மார்க்கெட்டில் தான். ஸ்டாக் மார்க்கெட் பத்தி ஒன்னும் தெரிஞ்சுக்காம, அடேய் என்னோட ரிடையர்மண்ட் அக்கௌண்ட்ல அவ்வளவு போட்டேன்டா, என்னாச்சுன்னு தெரியலை, எவனோ சாப்பிட்டாண்டான்னு சொல்ற அவல நிலையில வந்து நிப்போம். மார்க்கெட் பத்தி தெரிஞ்சுக்காம, அரசியல் பொருளாதார நிலமை தெரிஞ்சுக்காம, தன்னோட இன்வெஸ்ட்மண்ட்ஸை காலத்துக்கு ஏத்த மாதிரி மாத்திக்கலைன்னா, மேல சொன்ன அந்த நெருப்புக்கோழியே தேவலாம்ன்னு ஆயிரும். பசிக்கும் போது நெருப்புக்கோழி தலையை மண்ணுலேர்ந்து எடுத்து வயிராறச் சாப்பிட்டு உள்ள போயிக்கும், ஆனால் நமக்கு அது கூட இல்லாமப் போக வாய்ப்புண்டு.

ஒரு மிகப்பெரிய நிறுவனத்துக்கு, ஏன் ஒரு சாதாரண சின்ன நிறுவனத்துக்கு தலைமைப் பதவிக்குப் போனால் கூட ஸ்டாக் மார்க்கெட் பற்றி அறியாமல் இருப்பது அந்நிறுவனத்திற்கே கேடு.

ட்ரம்ப், மோடி, பைடன் ஆதரவு எதிர்ப்பெல்லாம் என்னத் தான் ஆக்ரோஷமாகப் பேசினாலும் அவங்க பாலிசி வச்சு ஸ்டாக் மார்க்கெட்ல துடுப்பு போடத் தெரியனும். அது தெரியாம காலாட்டறது, வெட்டி வம்பு சண்டையிலத்தான் நிக்கும்.

இப்ப இன்ஃப்ராஸ்டரக்சர் பில் பாஸாயிருக்கு, 20 மாதம் கழிச்சு அமெரிக்க வான்வெளி வெளிநாட்டு மக்களுக்குத் திறந்து விடப்பட்டிருக்கு, ஒரு பேரழிவு நோயிலிருந்து மீண்டு வர்றோம்; இதெல்லாம் எதற்கு எது உதவுகிறது என யோசித்தெல்லாம் ஸ்டாக் மார்க்கெட் பார்த்து மாற்றியமைப்பது என்ன கஷ்டம்? இதையேத் தானே வேறு விதத்துல ஒரு கட்சிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பேசறீங்க! அதே அரசியலை பொருளாதார கோணத்தில் யோசித்து ஸ்டாக் மார்க்கெட்டைப் பார்த்து கற்றுக் கொள்வது என்ன கடினம்? முதல்ல நம்ம சேமிப்பைக் காத்துக் கொள்ள கூட தெரிய வேணாமா?

இன்னும் தெரிஞ்சுக்காம reallocation பண்ணாம இருந்தா என்ராண் கதை மாதிரி தானே ஆகும். வெட்டி அரசியல் பேசி மல்லுகட்ட நேரமிருக்கும். அதே அரசியலை பொருளாதார ரீதியா ஸ்டாக் மார்க்கெட்டுல பார்க்க எவ்வளவு நேரமாயிரப்போவுது!

தேடி அறிந்து கொள்வதில்
வாழ்வினிது
ओलै सिरिय !

பின்குறிப்பு: நண்பர்களோட உரையாடலைப் பார்த்து தோன்றியதை எழுதியது இது.

No comments: