Saturday, March 5, 2022

அப்படி என்னயா சொல்லிபுட்டேன்

அருகாமையில் வசிக்கும் ஒருவர் தான் போட்ட ஊறுகாயை ருசிக்க சேம்பிள் கொடுத்தார். செம எண்ணெய்.

போகும் போது நான் வாங்கி வைத்திருக்கிற ஒரு பெரிய கடலையெண்ணைக் கேனை பார்த்து விட்டு,  என்ன இவ்வளவு பெருசா வாங்கியிருக்கீங்க நல்லதுல்லையேன்னார். காஸ்ட்கோவில எல்லாமே பெருசு தானேன்னேன். ஏதோ மனசுல நினைச்சு கிட்டுப் போயிட்டார்.

இரண்டு நாள் கழிச்சு ஃபோன் பண்ணினார். மத்த எண்ணைய் சாப்பிடறதை விட கடலையெண்ணையே பரவாயில்லையேன்னு நானும் வாங்கிட்டேன். அதுலேர்ந்து எண்ணைய் எடுக்க கஷ்டமாக இருக்கு என்ன பண்றீங்கன்னார். (ஙே ஙே)

பக்கத்திலுள்ள ஆட்டோ பார்ட்ஸ் கடையில ஒரு பம்ப் இருக்கு. அதை உள்ளவிட்டு அமுக்கினா ட்யூப் வழியா வருது. இங்க நம்ம ஊர் கெரசின் எடுக்கிற மாதிரி funnel கிடைப்பதில்லை, ஆர்டர் தான் பண்ணனும்ன்னேன். இது நல்லாயிருக்கு. மீன் தொட்டி க்ளீன் பண்ணக்கூட இன்னொரு வேக்யூம் ட்யூப் வச்சுருக்கேன். அது மாதிரி வாங்கி உபயோகித்தால் ஈசியாக இருக்கும்ன்னேன்.

நீங்க சொல்ற எதுவுமே ஃபுட் க்வாலிட்டிக்கு தகுந்ததில்லை, ஆனால் ஐடியா கிடைச்சுருச்சுன்னு போனை வச்சுட்டார். கடுப்பாயிட்டார் போல.

இன்னிக்கு தோட்டத்துல கீழ கிடந்த இலைகளைப் பெருக்கி அள்ளிப் போட்டுகிட்டு இருந்தேன். 

மனுசன் வந்து ஒரு சஜஷன் வேணும்ன்னார். கேட்டேன். பிறகு சொன்னேன். அதெல்லாம் புது கன்ஸ்ட்ரக்‌ஷனுக்கு. நாம அதுல பணம் போடறது வேஸ்ட் ஆஃப் மணின்னேன்.

அதுவொன்னும் வேஸ்ட் இல்லைன்னு, கான்வெர்சேஷனை அங்கிட்டே நிப்பாட்டிட்டு வெடுக்குன்னு போயிட்டார்.

அப்படி என்னயா பெருசா சொல்லிட்டேன். 

அம்மிணி கிட்ட இன்றைய கதையை இன்னும் நான் வாயைத் திறக்கலை. மத்ததைச் சொன்னப்பவெல்லாம், உன் வாயை வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டீகளா, ஊர் சனத்தொட நான் வாழனும்ன்னாப்புல. இதுக்கு என்ன விழுமோ தெரியலை!

கிழக்கு மேற்கா வீட்டு வாசல் இருந்தால் மனுசங்க எண்ணங்களும் அப்படியே வேலை செய்யுதே! எப்படியா அது.

உண்மையைச் சொன்னா திட்டறாக, பிறவு அதையே செய்யுறாக, நடுவுல நான் ஏன்யா மாட்டனும்.

ஏதோ நம்ம ராசி இப்படி சரியாகப் போவதால்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Di la verdad!

ஸ்பானிஷ் கற்கும் பொழுதில - 1

இப்பவெல்லாம் ஸ்பானிஷ் கிளாஸ்ல எல்லோருக்கும் செல்லப்பிள்ளையாயிட்டேன்.

முதல் கிளாஸில் எதிலும் கலந்துக்க என்னைக் கூப்பிடாம மற்றவர்களே தங்களுக்குள் பகிர்வது மாதிரி இருந்துச்சு. ரொம்பவே சங்கடமாக இருந்துச்சு.  ஸ்பெயின்லேர்ந்த வந்த அந்த வகுப்பு டீச்சர் மட்டுமே interaction க்கு ஈடுபடுத்த, ரொம்ப அந்நியமாகப் போச்சு. எப்படி இங்ஙன ஓட்டப்போறேன்னு இருந்துச்சு.

அடுத்த கிளாஸ்லேர்ந்து, நம்மளைக் கடைசியாகவே வச்சுருக்கட்டும், மத்தவங்க பிழைகளை திருத்தும் போது நாம திருத்திகிட்டு தப்பிச்சரலாம்ன்னு நினைச்சேன். முடியலை. டீச்சர் எல்லாத்துக்கும் என்னையே முன்னாடி இழுக்க, நம்மளோட பிழைகளை வச்சு மத்தவங்க திருத்திக்க வாய்ப்பாப் போச்சு.

நம்ம வாய் ஓட்ட வாயோ, நக்கல் புடிச்ச வாயோத் தெரியலை, கூச்சப்படாம ஸ்பானிஷ் கலந்தடிக்க அம்புட்டு பேருக்கும் புடிச்சுப் போச்சு. 

க்ரூப் discussionஆ, உரையாடலா, உச்சரிப்பா, கூப்பிடு இந்த ஓலையனைன்னு இப்ப எல்லோரும் நம்மோடு கிளாஸில் ஜோடி போட்டுக்க கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. வாழ்க்கை எளிதாகப் போய்விட்டது.

இஸ்பானியோல் ஏ பி சி டி உச்சரிப்பு சுத்தமா வேற மாதிரி. கிளாஸ் டீச்சரம்மா, ஏலேய் உன்னை வச்சு நான் மத்தவங்களுக்கு சொல்லித் தரமுடியாது, இந்தா கேட்டுக்கன்னு யூட்யூப் நர்சரி ரைம்ஸ் கிளாஸ்ல போட்டு அதோட என்னைப் பாட விட்டுடாங்க! செத்தான் சேகரு ஓலை. வீட்டுலப் போய் ஸ்பானிஷ் ஏ பி சி டி நர்சரி ரைம்ஸ் வீடியோ பாருன்னுட்டாங்க! 

மறுபடியும் kindergarten உள்ளத் தள்ளிட்டாங்கப்பா!

கிளாஸ் கடைசி வரைக்கும் நம்மளைச் சும்மா விடலை. நம்ம ஈமெயில் அட்ரஸை டைப் அடிக்கச் சொல்லி அதை அம்புட்டு பேரும் ஸ்க்ரீன்ல பார்க்க, ஒவ்வொரு வார்த்தையா இஸ்பானியோலில் சொல்லச் சொல்ல, அம்புட்டு பெத்த ஈமெயில் அட்ரஸை (including @ and dots) கரெக்டா சொல்லிட்டான் இந்த ஓலை.

கிடைச்சது ஒரு சபாஷ்!

வாவ்!
சுற்றமுடன் கற்பது
வாழ்வினிது!
ओलै सिरिय ।
¡Yo soy estudiante!

பட்டங்கள் காகிதமா எனும் புரட்டல்கள்

சில நாட்கள் முன் நான் எழுதிய ஒரு பதிவில் கல்லூரியில் கிடைக்கும் பட்டங்கள் நமது வாழ்விற்கு அது ஒரு ஆரம்பப் படிக்கட்டு் என குறிப்பிட்டு இருந்தேன்.

அதே பதிவில் ஐஐடியில் படித்து பட்டம் வாங்கியிருந்தாலும், வரும் காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, மேலும் தன்னை வளர்த்துக் கொண்டு வளர்பவர்களால் மட்டுமே ஒரு சுந்தர்பிச்சையாகவோ, விஞ்ஞானியாகவோ, மற்றும் பலதுறைகளில் ஒளிர முடியும் என்று எழுதியிருந்தேன். இத்தகைய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாமல் நிறைய பட்டங்களை சேர்ப்பது அது, அந்த பட்டங்கள் வெறும் ஒரு காகிதமாகத் தான் நிற்கும் என்று குறிப்பிட்டு இருந்தேன். இதற்கு என்னையே உதாரணமாகக் கூடச் சொல்லியிருந்தேன்.

மேலும் அதே பதிவின் ஆரம்பத்தில் ஒருத்தர் படிக்க முடியாமற் போவதற்கு காரணம் பெரும்பாலும் ஒருத்தரின் குடும்ப மற்றும் அவர்கள் பொருளாதார சூழ்நிலை மட்டுமே இருக்கும், ஆனால் அதை சமூகத்தின் மேல் போடுவது இயல்பானதாய் இருக்கும் என்றே குறிப்பிட்டு இருந்தேன்.

தன் சொந்த இயலாமையை, குடும்ப உறவு மற்றும் பொருளாதார சூழ்நிலையை சமூகத்தின் மேல் மற்றும் வேறு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மேல் போடும் இவர்களது நுண்ணரசியல், இவர்களது கட்டமைப்பு,  ஒரு நாள் சீட்டுக்கட்டு சரிந்து விழுவது போல் சரிந்து விழுவதைப் பார்ப்போம் என்றும் சொல்லியிருந்தேன்.

அவ்வாறே என் பதிவின் சாராம்சத்தை எதுவும் புரிந்து கொள்ளாமல், பட்டங்கள் வெறும் காகிதங்கள் எனச் சொன்னதாகவும், இத்தகையவர்களின் நுண்ணரசியலாகச் சித்தரிக்கிறார்கள்.

அவரவர் புரிதல், அவரவர் அரசியல், அவரவரது.

தவறான புரிதலில் கட்டமைக்கும் பொய்கள் என்றும் உண்மையாகிவிடாது. சீட்டுக்கட்டு மாதிரி.

நம் பயணத்தில் எவற்றையும் எதிர்கொள்வதில்
வாழ்வனிது
ओलै सिरिय ।
¡Hola!

Sunday, February 27, 2022

இனியவை நம் குழந்தைகளால்

காலையிலேயே போனில் காதினிக்கும் செய்தி கிடைக்கும்ன்னு எங்கிட்டோப் பார்த்தேன். என்னயா விஷயம்ன்னு யோசிச்சு கிட்டு இருந்தேன்.

காலையில ஏழரை மணிக்கே பையனிடமிருந்து ஃபோன் கால். அப்பா நான் இப்ப எங்கே போறேன்னு சொல்லுன்னான். ஏண்டா காலையிலேயே இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்டேன்னேன். நானெல்லாம் காலேஜ்ல படிக்கிறப்ப மதியம் வரை தூங்கிய ஆள்.

பையன் சந்தோஷமாகச் சொல்றான்: பக்கத்து டவுன்ல இருக்கிற fire station ல இன்னிக்கு paramedics டூட்டி. காலையில எட்டு மணியிலிருந்து இரவு பதினோரு வரை. என்னோட இன்னொரு விருப்பமும் இன்னிக்கு நிறைவேறப் போறதுன்னான். அவனுக்கு fire station ல வேலை செய்ய ஆசை உண்டு கூட. ஒரு ஆம்புலன்ஸ் கம்பெனி பேரைச் சொல்லி இன்னிக்கு அந்த ஆம்புலன்ஸை அங்கிருந்து ஓட்டப் போறேன்னான்.

அவன் குரலில் அவ்வளவு சந்தோஷம். அம்மிணி, உங்க பையன் உங்க கிட்ட மட்டும் தவறாம ஃபோன் பண்ணிச் சொல்றான்னு நடுவுல வந்து சேர்ந்துகிட்டாங்க!

நேற்றும் அவன் ERலிருந்து டெக்ஸ்ட் பண்ணான். அப்பா 650 பவுண்ட் இருக்கிற ஒரு பெண்மணிக்கு IV போட இருபது வருட எக்ஸ்பீரியன்ஸ் உள்ள paramedics மற்றும் ஒரு நர்ஸ் சேர்ந்து நரம்பு தேட கிடைக்காம நான் கரெக்டா போட்டேன்பான்னு சந்தோஷமாக டெக்ஸ்ட் பண்ணான். நான் அவன்ட்ட, ஏண்டா இவ்வளவு பேர் சேர்ந்து அவங்க கையைப் பதம் பார்க்கறீங்கன்னு கிண்டல் பண்ணேன், அதற்கு அவன்: என்ன பண்றது அவங்க உயிரைக் காப்பாத்தியாவனுமே! நான் போடலைன்னா அவங்க வாழ்க்கை அங்கயே முடிஞ்சுருக்குமேன்னேன்.

நானெல்லாம் காலேஜ் படிக்கிற காலத்தில் தான் பரவலாக computerization நடந்து கிட்டு இருந்துச்சு. அது வேலை வாய்ப்பைப் பறிக்கும்ன்னு சொல்லி கிட்டு திரிஞ்சுகிட்ட இருந்த நேரம்.

இங்க பையன் காலேஜ் முதல் வருடத்திலேயே தான் தேர்ந்தெடுத்த பாதையில் பயணிக்கிறான். இவ்வளவு இளம் வயதிலேயே இவ்வளவு கஷ்டப்படனுமான்னு நமக்கு கவலையாக இருக்கு. அவன் பார்க்கும் வேலையில் தன்னால் எவ்வளவு பேரைக் காப்பாற்ற முடியும்கிற பாதையில் அவனே தேர்ந்தெடுத்து பயணிக்கிறான். 

இத்தனைக்கும் அங்க கடுமையான வெதர் வேற. இப்ப என்னடா டெம்பரேச்சர்ன்னேன். 24 டிகிரிப்பா, வார்ம் ஆக இருக்குன்னு கிண்டல் பண்றான். அடேய் நான் அதுல உறைஞ்சு போயிடுவேன்டா, இங்க பாருன்னு ஜன்னல் வழியா என் செடிகளைக் காண்பிச்சேன். அது நம்ம ஊருப்பா, இங்க இதுவே சுகம்கிறான்.

இன்றைய காதினிக்கும் செய்தியோடு நாள் துவங்கியது.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Los niños son nuestra felicidad!

Thursday, February 24, 2022

கல்வி தரும் பட்டம் காற்றாடியல்ல

கல்வி என்பது வாங்கி சேர்க்கிற பட்டத்தில் இல்லை என்பது பரவலாக உணர வேண்டிய ஒன்று. கற்பதற்கு வயதுமில்லை, கடைசி வரை கற்க முடியும். ஏளனங்கள் என்றுமே ஏணிகளின் படிகள்.

கற்பதற்கு பொதுவான தடைகள் பெரும்பாலும் குடும்பப் பொருளாதார சூழ்நிலை மற்றும் சுயசார்பு தயக்கங்களே! அதை சமூகத்தின் மேல் போடுவது இயல்பானதாய்ப் பார்க்கிறோம். 

ஐஐடி வளாகத்திற்குள் நுழையாதவர்கள் ஐஐடியில் படித்தவர்களை அடிக்கடி இளக்காரமாக எழுதுவதைப் பார்க்கிறோம். கல்லூரியில் வாங்கும் பட்டங்கள் ஏணிப்படிகள் மட்டும் தான். அவை ஒரு நீண்ட ஒரு வளமான வாழ்க்கைக்கு ஆரம்பப் படிக்கட்டு மட்டுமே. அவை என்றுமே வாழ்க்கையின் உச்சத்தைத் தொட்டுவிடக் கொடுக்கும் வாய்ப்பு இல்லை.

பெரும் வாய்ப்புகளை உபயோகிக்க, மற்றும் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி மேன்மேலும் கற்று உயர்ந்தவர்களால் மட்டுமே ஒரு சுந்தர்பிச்சையாகவோ அல்லது ஒரு விஞ்ஞானியாகவோ பொருளாதார நிபுணராகவோ முடியும். சேர்க்கும் பட்டங்கள் ஒரு வரையறைக்குப் பிறகு பட்டம் விட மட்டுமே உதவும். என் சொந்த மகனே என்னைக் கேட்டிருக்கான். அம்மா வளர்ந்த அளவு நீ வளரவில்லையென.

கல்லூரியில் உடன் படித்த நண்பன் வாங்கியுள்ள பட்டங்களை வரிசைப்படுத்தினால் ஒரு விசிட்டிங்கார்ட் பத்தாது. மிகப்பெரிய கல்லூரியில் அதன் நிர்வாகத்தில் மட்டுமல்ல, கேம்பஸ் ரெக்ரூட்மண்ட் ரிஜிஸ்ட்ரார் கூட. இவரிடம் இரண்டு டாக்டர் பட்டம் கூட உண்டு. ஆனால் இன்று வரை ஆங்கில இலக்கணம் பேசுவதிலும் எழுதுவதிலும் தடுமாற்றம் தான். ஆனால் அவரால் எப்படி இந்த அளவை எட்ட முடிந்தது. தொடர் கல்வி, அயராது உழைப்பு, எல்லாவற்றிற்கும் மேல் சிறந்த குணம் படைத்தவர். பிறரைக் குறை சொல்வதால் நம் வாழ்வு உயராது என்று உணர்ந்தவன். அவரால் பயன் அடைந்தவர்கள் பல மாணவர்கள்.

பிஎம்பி படிக்கும் போது எல்லா requirementsம் பூர்த்தி செய்து எல்லாம் படித்து முடித்து விட்டு, கடைசியாக அப்ளிகேஷனில் மேனேஜரின் கையெழுத்து தேவைப்பட்ட போது அவர்கள் என்னிடம் நேரிடையாகக் கூறியது: நீயெல்லாம் இங்கு மேனேஜர் ஆக முடியாது, எதற்கு இதுன்னு சொல்லிவிட்டு கையெழுத்து போட்டுக் கொடுத்தார்கள். அந்த மேனேஜருக்கு டிகிரி கூட கிடையாது. அவர்களால் இந்த எக்ஸாம் எழுதக்கூட முடியாது. என்ன சொல்வது. கையெழுத்து வாங்கின அந்த பேப்பரை எங்கோ தூக்கி எறிந்து விட்டேன். கற்ற அந்த கல்வி, ஞானம் இன்றும் உதவுகிறது. திறமையாக செயல்பட உதவுகிறது. பட்டம் உதவுவதில்லை.

சமீபத்தில் ஸ்பானிஷ் கற்றுக்க ஆரம்பித்த போது வந்த சிலுசிலுப்புகள் எல்லாம் ஹிந்தி கத்துகிட்டு என்ன பண்ணப்போறோம், பான் பராக் பானிபூரி விற்கவா என்கிற தொனியில் தான். கற்பது நம் புரிதலை விரிவுபடுத்த. நாம் வளர. 

நியாயமாக கிடைக்க வேண்டியவர்களின் வாய்ப்பைத் தடுத்து/தட்டிப் பறித்துப் பெற்ற கல்வியை மறைத்து, சிலர் மேல் பழிபோட்டு சமூகத்தைச் சாடி, தன் மேல் ஏற்றிக்கொள்ளும் அத்தனை பட்டங்களும், சமூகத்தை குறை சொல்லும் மனப்போக்கு எல்லாம் பெற்ற கல்வியை இழிவு படுத்தும் செயல்.

இன்றைய சூழ்நிலையில் கல்வி கற்கும் வாய்ப்பு அனைவருக்கும் இருக்கு. ரிசர்வேஷன் முறையைத் தாண்டியும் வளரக்கூடிய வாய்ப்பு அனைவருக்கும் இருக்கு. ஆனால் அதை உபயோகப்படுத்தி பயனடைந்தவர்களால் மட்டுமே மேலெழ முடியும். சமூகத்தையோ மற்றவர்களையோ குறை சொல்வதால் அல்ல. பொய்யான கட்டமைப்பு அமைப்பது சீட்டுக்கட்டு சரிந்து விழுவது போல் ஒரு நாள் சரிந்து விழும். இந்நாடக உலகத்தில் அனைவரும் நடிகர்களே!

கற்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Escalera!

Saturday, February 19, 2022

சாந்தியுறுக நின் பாதம்

தூணாய் நின்றாய் துணையாய் வந்தாய்
  அன்பெனும் பாதையில் அரணாய் நின்றாய்

உன் முன் பாதம் ஓடிய திசையில்
 பின் தொடர்ந்து ஓடினோம்
நீ சொல்லாமல் செய்த செய்கையால்
  கை கட்டித் தொடர்ந்தோம்!

வாழ்க்கையெனும் நீரோட்டத்தில்
  உன் பாதை நின்று போனாலும்
பின் தொடர்ந்து ஓடும் நினைவுகள்
  என்றும் அன்பாய் தொடர்ந்திடும்!

சாந்தியுறுக நின் பாதம்! 🙏


சின்ன வயசுலேர்ந்தே நாயைக் கண்டா பயம். ஊர்ல தெருவுல ஏதாவது நாயைக் கண்டா ஊர்ப்பசங்க கல்லெடுத்து எறிவாங்க! 

பெங்களூரில் அம்மா எல்லா தெருநாய்களுக்கும் சாப்பாடு அல்லது பிஸ்கட் போட்டு பழக்கி அங்க தெருவோர நாய்கள் அம்மாவைப் பார்த்து குலைக்காது. மற்றவர்களைத் துரத்தி எடுக்கும்.

ஊரில் நண்பர்கள் நாய்களை வீட்டில் வளர்த்த போது கூட அதை அவர்கள் கட்டிப்போடும் வரை அல்லது அதை அவர்கள் வேறோரு இடத்தில் அடைக்கும் வரை  அவர்கள் வீட்டினுள் நுழைய மாட்டேன். அவ்வளவு பயம். ரோட்டுல நிப்பேன்.

கடந்த ஏழெட்டு வருடமாக அந்த பயம் போச்சு. அதற்குக் காரணம் நண்பனோட இந்த ஜெர்மன் ஷெப்பர்ட். என் குடும்பத்துல எல்லோர்க்கும் மிகப் பிடித்தமான நாய். தைரியமாக பக்கத்தில் போவோம். அதுவும் வரும்.

நான்கு வருடம் முன் நண்பன் வீட்டில் தங்கியிருந்த போது உறக்கத்தில் செம குறட்டை விட்டிருக்கேன் போலிருக்கு. இது தூங்க முடியாம தவிச்சிருக்குப் போல. பக்கத்தில் வந்து என் கன்னத்தில் மோதி வாயை முடுறா வெண்ணைன்னு இடிச்சுட்டுப் போனது இன்றும் நினைவில் ஆடுகிறது. இதனுடன் பழகியதில் நாய் பயம் போச்சு.

நேற்று கூட மாலை நேர வாக்கிங்கில் கூட பணி செய்த ஒருவர் ஒரு ஜெர்மன் ஷெப்பர்டை பக்கத்திலுள்ள ஷெல்டரிலிருந்து எடுத்து வந்து வளர்க்கிற நாயைக் கூட்டி வந்தார். அது யாரைப்பார்த்தாலும் குலைப்பதாலும் ஷெல்டரில் வளர்ந்ததால் வித்தியாசமாக இருக்கு என்பார். அது என்னை ஓரிரு தடவை பார்த்துள்ளதால் நேற்று கூட என்னைப் பார்த்துக் குலைக்காமல் பக்கத்தில் வந்து முகர்ந்து பார்த்து விட்டு அருகில் நின்றது.

அந்த அளவுக்கு நாய்கள் மீதான பயம் ஓரளவுக்குப் போனதிற்குக் காரணம் நண்பனின் நாய். இருப்பினும் இப்போதும் பிட்புல் கண்டால் பத்தடி தள்ளித் தான் நிற்பேன். அது வேற வகை!

இன்று நண்பனின் நாய் இங்கு தென்கிழக்குக்கோடி மாநிலத்தில் நீண்ட ஆயுளுக்குப் பிறகு தன் மூச்சை தன் வீட்டில் நிறுத்திக்கொண்டது. நண்பனின் அழுகை மனதை இறுக்கினாலும்

அது கொடுத்துச் சென்றுள்ள தைரியத்தை நினைத்துப்பார்க்கையில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Muchas gracias!
¡Descansa en paz!

Friday, February 11, 2022

இஸ்பானியோல் கற்கும் ஆரம்பம்

அஸ்ஸாமில் போய் இறங்கிய ஆரம்ப காலத்தில் அவங்க என்ன பேசறாங்கன்னே புரியாம இருந்தது. அவங்க முகச்சிரிப்புலேர்ந்து ஏதோ குசலம் விசாரிக்கிறாங்கன்னு புரியும். போகப்போக அவங்க பாஷை கொஞ்சம் புரிய ஆரம்பிச்சது.

இந்த வாரம் இஸ்பானியோல் ஸ்பானிஷ் முதல் கிளாஸ் முடிஞ்சது. கிளாஸ் துவங்குவதற்கு இரண்டு நாள் முன் ஆர்டர் பண்ணியிருந்த புக் வந்துச்சு. சனி ஞாயிறு எங்கயும் நகராம படிக்க ஆரம்பிச்சேன். படிப்பதில் pronunciation அவ்வளவா கத்துக்க முடியாது.

வகுப்புல போனா வந்த ஆசிரியையே இப்பத்தான் கொஞ்ச வருஷம் முன் ஸ்பெயின்லேர்ந்து வந்து இப்ப ஆங்கிலம் கத்துகிட்ட டீச்சர் நமக்கு.

அஸ்ஸாமில நம்மளை சந்திக்கும் போது ‘கீ யோல், பால்?’ அப்படின்னு விசாரிப்பாங்க.
இவங்க அதே மாதிரி, கிட்டத்தட்ட அப்படியே ‘ஹோலா! கீ தல்’ ன்னாங்க பாருங்க, அட அட நம்மப் பக்கம் நெருங்கிட்டாங்களேன்னு இருந்துச்சு.

முதல் கிளாஸ்லேயே நிறைய வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்து, ஒருத்தருக்கொருத்தரையும் பேச வேற வைக்கிறாங்க! யாரும் டபாய்க்க முடியாது.

பேசனும், எழுதனும், quiz, audio கேட்டு சரியா தப்பான்னு சொல்லனும். இதைத் தவிர செம ஹோம்வொர்க் வேற.

முதல் சாப்டர்ல இருக்கிற 84 வாக்கியங்கள் (sentences) படிக்கனும், எழுதனும், பேசனும், கேள்வி பதிலுக்கு சரியாச் சொல்லனும், இலக்கணத்தோட.

செம போடு போடுது!

வயதாகி கற்பதில்
வாழ்வினிது
¡Muchas gracias!
ओलै सिरिय ।