Thursday, November 2, 2023

நினைவுகள் அழிவதில்லை

நமது வாழ்க்கையில் காலங்கள் உருண்டோடினாலும் நினைவுகள் அழிவதில்லை.

திருச்சியில் கல்லூரியில் முதல் வருடம் படித்தப்ப ஹாஸ்டலில் ஒரு குட்டி ரூம்ல நாலு பேர் நாங்க. இப்ப நாப்பது வருடங்கள் ஆகப்போவுது. ஆளுக்கு ஒரு டெஸ்க் மற்றும் சேர். அந்த ரூம்ல நாலு பேர் தரையில ஒன்னாப்படுக்க இடமில்லை.

இரவு ஒரு மணி வரை லைட் போட்டு படிக்கும் படிப்பாளிகள் இருவர். எப்படா வெளியே வராண்டாவில் ஜமக்காளத்தை விரிச்சு படுக்கலாம்ன்னு நானும் இன்னொருத்தனும். இரவு எட்டரை ஒன்பது மணிக்கு ரூம் வெளியே கட்டாந்தரை தான் எங்கள் இரவுகள்.

உள்ளே ரூமுக்குள்ள லைட் போட்டு இரவு படிச்சவனுங்களுக்கு கிடைச்சது அட்வான்ஸ்டு இங்கிலீஷ் செக்‌ஷன். எங்க இரண்டு பேருக்கும் ஜெனரல் இங்க்லீஷ் தான். உள்ளே ரூம்ல படிச்சவன் காலேஜ் ஃபைனல் செமஸ்டர் ஃபிசிக்ஸ் பிராஜக்ட்டுக்கு எழுத்தாளர் சுஜாதாக்கு லட்டர் எழுதி இந்த எலக்ட்ரானிக்ஸ் ப்ராஜகட் பண்ணலாமான்னு கேட்டவன். அவர் சின்னதாக ஒன்னு பண்ணுன்னு அவனுக்கு ரிப்ளை லட்டர் போட்ட காலம் அது.

இன்றும் நாங்க நாலு பேரும் அப்படியேத்தானிருக்கோம்.

கட்டாந்தரையில அந்த வெயில் குளிரில் உருண்டாலும் அவன் படிப்பில் செம கெட்டி. எங்க கையில் ஒரு ஐந்து ரூபாய் அப்ப இருந்தால் நாங்க பெரிய பணக்காரங்க அப்ப. அது எங்கள் கையில் எப்போதும் தங்காது. அவனது பணக்கார செல்வமே மதிப்பே அவனது கல்வியறிவு தான். எனக்கு அது சுத்தம், இரண்டாம் பட்சம் தான். பொது சமூக வாழ்க்கை உறவுகள் பற்றிய படிப்பு தான் நான் தேடி அலைந்த காலம்.

அப்ப கல்லூரியில் செமஸ்டர் எக்ஸாம் முடிஞ்சா, பாஸ் ஆனவங்க பெயர் மட்டும் கல்லூரி நோட்டிஸ் போர்டில் போடுவார்கள். அது போடற அன்னிக்கு எல்லோரும் அந்த லாலே ஹால் வாசலில் சுத்திகிட்டு இருப்பாங்க.

ஹாஸ்டல் நண்பன் ஃபிசிக்ஸ் இயற்பியல், நான் வேற சப்ஜக்ட். நான் கூட என் பேர் நோட்டிஸ் போர்ட்ல இருக்கான்னு தேடமாட்டேன். இவன் போய் எங்க டிபார்ட்மண்ட் லிஸ்ட்ல என் பேர் இருக்கான்னு பார்த்து விட்டு வந்து சொல்வான்.

ரூம்ல வந்து பரவாயில்லைடா உன் பேரும் இருக்குடாம்பான். 

செமஸ்டர் மார்க்‌ஷீட் வந்தவுடன் அமைதியாக உள்ளே வச்சுருவோம்ன்னு நினைப்பேன். எங்கப்பா அம்மா அண்ணன் தம்பிகள் யாரும் இதுவரை என் மார்க்‌ஷீட் கேட்டதில்லை பார்த்ததில்லை. இவன் ரூமுக்கு வந்தவுடனே எங்க மார்க்‌ஷீட் காமிம்பான்.

ரூம்ல மத்த மூனு பேரும் போட்டி போட்டு படிச்சு 85-90க்கு மேலே வாங்குறவங்க. நாம சுமார் தான். என் மார்க்‌ஷீட் கறாராக வாங்கிப் பார்த்துருவான்.

அன்னிக்கு நைட் ரூம் வெளியே வராண்டாவில் கட்டாந்தரையில் உருளும்போது நைஸா சுருக் சுருக்ன்னு இவன்டேர்ந்து திட்டு விழும்.

ஏண்டா படிக்காம போய் எழுபது வாங்கிட்டு வர்ற. அந்தப் புத்தகத்தை திறந்து பார்த்தேனா என்பதுக்கு மேலேயாவது வாங்கலாமில்லடாம்பான். நியாயம்தான் ஆனால் நம்மால் முடியலையே.

திருச்சி கல்லூரி படிப்பு முடிந்து சென்னைக்கு மேல் படிப்புக்கு வந்தோம். அவனுக்கு இஞ்சினியரிங் கிடைச்சது. நமக்கு அது சரி வராது. லயோலா தான்.

இஞ்சினியரிங் போனவன் பத்தே நாளில் இங்க லயோலா ரூமுக்கு வந்துவிட்டான். அங்க ஹாஸ்டல்ல செம ராக்கிங். சம்மர்கட் அடிச்சுவுட்டு காலேஜ் கிரவுண்ட் சுத்த வைக்கறாங்களாம் சீனியர்ஸ். 

இங்கிருந்து ஒரு வாரம் அங்க இஞ்சினியரிங் போயிட்டு வந்தான். அப்பவெல்லாம் ஒரு லயோலா சாப்பாடு 4.50 - 5.50 ரூபாய் வேற. இதெல்லாம் எங்களுக்குப் பெரிய அமௌண்ட் அப்ப. நல்லவேளைஅந்த வருடம் காலேஜ் மெஸ் ரெப் நான் தப்பிச்சேன். ஹாஸ்டல் ஓசி சாப்பாட்டுல தப்பிச்சோம். ஹாஸ்டல் வார்டன் வந்து என்கிட்ட என்ன வெளி காலேஜ் பையனை உன் ரூம்ல விட்டுருக்கன்னார். ஏதோ சொல்லி சமாளிச்சேன். ஒரு வாரம் கழிச்சு அவனைத் தைரியமாப் போடான்னு சொன்னதுக்கப்புறம் அவன் இஞ்சினியரிங் ஹாஸ்டலுக்குப் போனான்.

இப்ப அவன் ஒரு சயன்டிஸ்ட். எலக்ட்ரானிக்ஸ் கம்பெனி முதலாளி. பலருக்கு வேலை போட்டுக் கொடுக்கிறான். அவர்கள் கூடவே வளர்கிறான்.

நண்பனுக்கு போன வாரம் அறுபது வயது பூர்த்தியாகிச்சு. அவன் பொண்ணு அவனுக்கு ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்து கலக்கிட்டாள்.

திறமையான நண்பனுக்கு நல்லத் திறமை வாய்ந்த மகன் மற்றும் மகள் அதே அவனது கம்பெனியில் அவனுக்கு உதவுகிறார்கள். அடுத்த கட்டத்திற்கு அதை நகர்த்தப் போறோம்ன்னு சொல்றாங்க! மனமார்ந்த வாழ்த்துகள்.

காலங்கள் ஓடினாலும் நினைவுகள் அழிவதில்லை.
வாழ்வினிது
ओलै सिरिय ।
11/2/2023
¡La amistad es para siempre!

No comments: