Friday, December 25, 2020

டிசம்பர் மாத அலங்காரங்கள்

 அந்நிய மண்ணில் இருப்பவர்கள் கிறிஸ்துமஸ் சமயத்துல செய்வதெல்லாம் ஒரு ஓவர்ஆக்டிங், சுயவிளம்பரம், இன்னும் என்னன்னவோ பேர் வச்செல்லாம் பகடி வருது.

அடிப்படையில பார்த்தா நகர வாழ்க்கைக்கு நகர்ந்த பின்னர் பக்கத்து ப்ளாட்ல இருக்கிறவங்களோட கூட நட்பாக பழகாத நிலைக்கு நம்ம வாழ்க்கையைச் சுருக்கிய பிறகு, கடந்து வந்த பாதை மறந்து போன பிறகு, எல்லாமே ஒரு சுயநலமாகவும் போலித்தனமாகவும் பார்க்க, புரிந்து கொள்ள வாய்ப்புண்டு!

சின்ன ஊரில கிராமத்துல வளர்ந்த போது, ஒருத்தர் வீட்டுல கல்யாணமோ அல்லது ஏதாவது ஒரு விசேஷம்ன்னா அந்த தெரு முழுவதற்குமே பந்தல் போட்டு தோரணம் கட்டி அந்த தெருவே விழாக்கோலமாக மாறிவிடும். எங்க ஊர்ல ஒருத்தர் வீட்டு பூணலுக்கு கூட அந்த தெருவிலுள்ள அனைவருக்கும் ஒன்னா சமையல் பண்ணி, தெரு மக்களே ஆளுக்கு ஒரு வாளியைத் தூக்கிகிட்டு பரிமாற ஆரம்பிச்சுருவாங்க.

என் நண்பனோட அண்ணனுக்கு பக்கத்து சர்ச்சுல கல்யாணம் நடந்தப்ப, வந்த அனைவருக்கும் இலை போட்டு காலை டிபன் வழங்கியது நானும் இன்னொரு நண்பன் டாக்டர் துவாரக்நாத்தும். 

இதெல்லாம் ஊர் வாழ்க்கையில சகஜம்.

இங்க கிறிஸ்துமஸ்க்கு தெருவெல்லாம் டிசம்பர் மாதம் முதலில் இருந்தே அலங்கரித்து விடுவார்கள். ஒரு சப்டிவிஷனில் 50லிருந்து 200 வீடுகளிருக்கும். அதில் இந்திய வம்சாவளி 10லிருந்து 20 இருந்தா பெருசு! 90 சதவிகித வீடுகள் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் போது, இந்த 5-10 சதவீதம் வேற்று மதம்ன்னு அலங்கரிக்கமாட்டேன்னு சொன்னா, மாலை 5 மணிக்கே இருட்டுகிற ஊரில், மற்ற எல்லா வீடுகளும் பிரகாசமாக இருக்க, உங்கள் வீடு மட்டும் இருளில் இருந்தால் அது எப்படி இருக்கும். வேற்றுமதத்தினர் திட்டமிட்டு பகிஷ்கரிப்பதாக எடுத்துக் கொண்டால் என்ன ஆவது! 

இந்திய இந்துக்களின் முதன்மையான வழிபாடே தீபம் ஏற்றி வழிபடுதல். தீபம் ஏற்றி, விளக்கு ஏற்றி உண்மையாக வழிபடுபவர்கள், கிறிஸ்துமஸ் சமயத்தில் அலங்கரிப்பதை பெருமையாகத்தான் எடுத்துக்கொள்வார்கள்.

ஒரு சப்டிவிஷனில் (குடியிருப்பில்) குடியிருப்பவர்கள் தன் வீட்டு வாசலில் உள்ள புல்லை சரிவர வெட்டாமல், வீட்டு முன்புறம் பளிச்சென இல்லாமல் mold படிந்து இருந்தால் நமது வீடு மட்டும் அந்த குடியிருப்பில் எவ்வாறு தெரியும். மக்கள் இதை எப்படி பார்ப்பார்கள். home owners associationல கேட்பது அப்புறமிருக்கட்டும்.

குடியிருக்கிற வீடு பிரகாசமாக சுத்தமாகஇருக்கனும், அது வாழ்க்கையில் நல்ல சுவாசம் மட்டுமல்ல ஒரு நல்ல மனநிலையோடு வாழ உதவும்கிறது கூட படிச்சது மறந்து போற அளவுக்கு நகர்புற வாழ்க்கையில் ஒளிந்து கொண்டு தன் சுயத்தை இழந்தவர்களால் மட்டுமே சிந்திக்க முடியும்.

இதை வெறும் peer pressure அல்லது ஊரோடு ஒற்று வாழ்ன்னு கடந்து போவது, தனது மனதில் இன்னும் வெளிச்சம் வரவில்லை என்பதைத் தான் காட்டுகிறது.

அதிகாலையில் சூரியனைக் கும்பிடுவதே இருள் விலகி வெளிச்சம் வந்து உலகைப் பிரகாசமாக்கியதின் குறியீடே சூரிய வந்தனம் செய்வது. ஹோமகுண்டத்தில் வளரும் தீயை வணங்குவதும் அதிலிருந்து வரும் ஒளிப்பிரவாகத்தின் vibrations குறித்தே! 

பனிப்பொழிவு காலத்தில், கடும் குளிர்காலத்தில், சூரியன் சீக்கிரம் மறையும் காலத்தில், வீட்டு வாசலில் அலங்கரிக்கப்படும் அலங்கார மின் விளக்குகளும் நம் வாழ்வு பிரகாசமாக ஒளிர ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டு வழக்கப்படி செய்து கொள்ளும் ஒரு வழிபாடே!

புரிந்தவர்கள் வாழ்வினிது!
ओलै सिरिय !

No comments: