Saturday, December 12, 2020

செயலற்று நின்ற பொழுதில்

 பொழுதன்னிக்கும் தன்னோட வீணைகளோடே ஜீவனம் செய்யும் அம்மிணி தன்னோட ம்யூசிக் ரூம்ல லைட் பத்தலைன்னாங்க! சரி, இருந்த பல்ப் இரண்டையும் எடுத்துபுட்டு நல்ல பவுர்ஃபுல் பல்பு ஆறு மாதம் முன் போட்டேன். நல்லாத் தான் ப்ரைட்டா இருந்துச்சு.

நேற்று காஸ்ட்கோ போனப்ப ஒரு LED ceiling light பார்த்தேன். டிஸ்கவுண்டல அவங்க போட்டதால வாங்கி வந்தேன். பையன் ரூம்ல ஆறு மாசம் முன்ன போட்ட led விளக்கு பிரகாசமாக இருப்பதால், இப்ப குளிர்காலத்துல சாயந்திரம் 5 மணிக்கே இருட்ட ஆரம்பிப்பதாலும், அம்மிணி சாயவேளையிலிருந்து இரவு தூங்கப் போகும் வரை அங்கயே செலவிடுவதால், இன்று அந்த ரூமைப் பிரகாசமாக்கிடனும்ன்னு செயலில் இறங்கினேன்.

ஆமை புகுந்த இடம் மாதிரி, அம்மிணி ரூம்ல நாம காலை வைச்சா என்ன ஆவும், அதே தான் ஆச்சு.

இருக்குற 4 வீணையையும் அந்த ரூம்ல ஒதுக்கச் சொல்லிபுட்டு, ஒரு 5 அடி ஏணியில ஏறி பழைய சீலிங் லைட் யூனிட்டைக் கழட்டினேன். இரண்டு கையையும் நீளமாக உயர்த்தி செய்ய வேண்டிய அளவு சீலிங் உயரம் வேற அந்த ரூம்ல. ஒரு ஏழெட்டு அடி ஏணியில ஏறியிருந்தா சுலபமாக செய்திருக்கலாம்.

இந்த குட்டி ஏணியில பல தடவை ஏறி இறங்க சிரமமாக இருந்ததால் சமையல்கட்டுல இருந்த அம்மிணியை உதவிக்கு கூப்பிட்டேன். பையனைக் கூப்பிடுங்க அவன் உயரத்துக்கு சுலபமாக முடியும்ன்னாப்புல. எலக்ட்ரிசிட்டி வேலையில ஒன்னும் தெரியாத இளசை விட்டா ஒன்னுக்கு இரண்டா நஷ்டமாகிரும். எது சொன்னாலும் கேட்க மாட்டான். தனக்கு எல்லாம் தெரியும்கிற பருவம். அம்மிணியை கம்முனு இருன்னு அடக்கிட்டேன்.

பழைசை முற்றிலும் கழிட்டிபுட்டு, புதுசோட base unitன் வயர் மூன்றையும் கனெக்‌ஷன் சரியாகக் கொடுத்து, லீக் செக் பன்ற வோல்டேஜ் டிடக்டர் வச்சு எல்லாம் சரி பார்த்துபுட்டு, யூனிட்டை ஸ்க்ரூ பண்ணி டைட் பண்ற நேரத்துல இடது கை மேல தூக்க முடியாமப்போயிருச்சு. இடது கையில பிடிச்சாத் தான் வலது கையில டைட் பண்ணமுடியும். இடது கை தூக்கவே முடியலை. ஒரு விதக்கலக்கம். இது என்ன புதுசா இது மாதிரின்னு பயம். 

யூனிட் வயர் கனெக்‌ஷனோடு தொங்குது. இனி எலக்ட்ரீஷியனை எப்ப கூப்பிட்டு என்ன செய்வதுன்னு கலக்கும். பக்கத்து வீட்டுக்காரரைக் கூப்பிடலாம். ஆனால் வசனங்கள் கேட்க வேண்டி வரும். 

தடுமாறி அந்தரத்துல நிற்கையில அம்மிணி சொல்றாப்புல நீங்க கீழ இறங்குங்க நான் பண்றேங்கிறாங்க. இதென்ன புது சோதனைன்னு நினேச்சேன். அம்மிணி என்னை விட குட்டை. இரண்டடி ஸ்டெப் ஸடூல்ல ஏறுவதற்கே தயங்கும் அம்மிணி, ஐந்தடி ஏணியில ஏறி எம்பி எப்படி டைட் பண்ணுவாப்பல, பின்னாடி கிளாஸ் வைச்சு எப்படி சீல் பண்ணுவாகன்னு சந்தேகம். வாழ்க்கையில இதுவரை அவங்க இதெல்லாம் செய்ததேயில்லை.

என்னோட கஷ்டத்தைப் பார்த்து மிக தைரியமாக ஏணி மேல ஏறிட்டாப்புல. எம்பி கையை மேல உசத்தி துக்கி அதை டைட் பண்ணியதுமில்லாம, நழுவி விழற கிளாஸையும் பிடிச்சு கிட்டு ஃபிக்ஸ் பண்ணியதைப் பார்த்து அசந்து போய் நிக்குறேன். ஒத்த கையில குச்சியைப்பிடுச்சு கொஞ்சம் ஒத்தாசை செய்துகிட்டு இருந்தேன்.

அம்மிணிக்கு இவ்வளவு தைரியம் எப்படி வந்துன்னு தெரியலை. அம்மிணி முகத்துல அம்புட்டு சந்தோஷம். இனி எல்லா ரூமிலும் நாமே மாத்திரலாம், தான் செய்யறேங்குறாப்புல. அவ்வுளவு பெருமை முகத்துல.

சரி எல்லாம் ஆச்சு. என் வீணை ரூமைக் காலி பண்ணுங்க. க்ளீனாக இருக்கனும்கிறாப்புல, இடது கை பழய படி வேலை செய்ய ஆரம்பிச்சுருச்சு. ஒன்னு விடாம எல்லாத்தையும் க்ளீன் பண்ணிபுட்டு வந்தேன்.

என்னவொரு சோதனை தேவையற்ற நேரத்துல வருது! ஒருத்தருக்கு புது தைரியம் வருது! அசாத்தியமானதாக இருக்கு. இனிமேல் எல்லாம் ஆள் வச்சுத்தான் செய்யனும்.

வாழ்வினிது!

ओलै सिरिय !

No comments: