என்னோட அஸ்ஸாமிய நண்பன் நாசர் அகமது மெத்தப்படித்தவன், நல்ல பணக்காரன், சிறந்த பண்பாளன், அதிக நாட்டுப்பற்று கொண்டவன். அவனது தங்கை அரசு அதிகாரி, அவரும் மெத்தப்படித்தவர்.
நான் அங்க கம்ப்யூட்டர் இன்ஸ்டிட்யூட்ல டீச்சராக இருக்கும் போது நாசர் கால்நடை மருத்துவக்கல்லூரி மேல்நிலைப்படிப்பு மாணவன். அவனது மாஸ்டர்ஸ்க்கு புள்ளியியல் கணக்கெல்லாம் கம்ப்யூட்டர்ல செய்துகொடுன்னு என் கிட்ட வந்தான். அவனுக்காக புதுசு புதுசா பேசிக் மொழியில புரோகிராம் எழுதிக் கொடுத்தேன். அன்றிலிருந்து இன்று வரை சிறந்த நண்பன். இன்று ஒரு அயல்நாட்டில் ஒரு சிறந்த அதிகாரி.
நான் எனது மேல் படிப்புக்கு போய்விட்டு 92ல் திரும்பி வரும் போது, அவன் கல்லூரி மாஸ்டர்ஸ் முடித்த கையோடு அதே மருத்துவக்கல்லூரியில் அசிஸ்டண்ட் புரபசராக சேர்ந்து விட்டான்.
கௌஹாத்தி பூரா அவனோட சுத்தாத இடமில்லை. அவனிடமிருந்து நான் கற்றுக்கொண்டது நிறைய. ஆனால் அவன் இன்றும் சொல்கிறான் இது நமக்குள்ள ம்யூச்சுவல், உன்னிடமிருந்து கற்றுக்கொண்டது நிறைய என்கிறான். அது எந்த அளவுக்கு கிரேசின்னா, 92 கடைசியில் நான் அஸ்ஸாமை விட்டுவிட்டு வந்த பிறகு, நான் உட்கார்ந்திருந்த அதே சீட்டில் அதே கால்நடை மருத்துவக்கல்லூரி அலுவலகத்தில் நான் செய்த அதே கம்ப்யூட்டர் வேலையைச் செய்தானாம். அதில் பெற்ற திருப்தி அநுபவம் பெற்ற பிறகு தான் அவனது பயணத்தில் இன்று அயல்நாட்டில் போய் செட்டிலானானாம். இன்றும் ஒரு சிறந்த அதிகாரி அவன்.
அவனிடமிருந்து நான் கற்றவை மிக அதிகம். இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன். அவனை ஒரு நாள் ஒரு இடதுசாரி கட்சி அலுவலகத்திற்குக் கூட கூட்டிப் போனேன். ஆனால் அந்த அலுவலகத்தில் எங்களிடம் நீங்கள் இங்கு வராதீர்கள் என்று சொல்லிவிட்டார்கள். அல்ஃபா உங்களை எளிதில் அடையாளம் கண்டுகொண்டு போட்டுத் தள்ளிவிடுவார்கள் வராதீர்கள் என்றனர். பிறகு அங்கு போகவில்லை.
அங்கு நான் இருந்த காலத்தில் அல்ஃபாவின் அட்டகாசங்கள் தீராத ஒன்று. பிரதான சாலையிலேயே படுகொலைகள் குண்டுவெடிப்பு நடக்கும். நான் தனியாக குடியிருந்த வீட்டில் பக்கத்து போர்ஷன் ஒரு சப்இன்ஸ்பெக்டர், செம குடிகாரர். ஆனால் அவர் பையன் அல்ஃபாவில சேர்ந்து அப்ப புதுசா பைக் வாங்கியதைப் பெருமையாகச் சொல்வார். அப்ப அங்கு பல பெற்றோர்க்கு அவர்கள் பிள்ளைகள் அல்ஃபாவில்(உல்ஃபாவில்) சேருவது பெருமை கூட. அவரையும் அல்ஃபா போட்டுத் தள்ளி விட்டதாக நான் 92ல் அங்கு படிப்பு முடித்து திரும்பிய போது சொன்னார்கள்.
ஒரு நாள் மதியம் 3 மணிக்கு நாசர் அவன் வீட்டுக்கு வரச்சொன்னான். அவனோட அம்மா போட்டுக்கொடுத்த அஸ்ஸாம் டீயை சுவைச்சிட்டு பேசிகிட்டிருந்தோம்.
அப்ப ஒரு மாருதி 800 கார் வந்தது. வா போலாம்ன்னான். நான் பின் சீட்டுல உட்கார நாசரும் அவனும் முன்னாடி சீட்ல உட்கார்ந்து அசாமில பேசிகிட்டு வந்தாங்க. எனக்கு அஹோமியா புரியும் பேச வராது. ஏதோ farm செட் அப் பண்ணனும்ன்னு அவன் கேட்க, நாசர் கால்நடை மருத்துவன்கிறதால அவனுக்கு பண்ணை வைக்க என்ன பண்ணனும்ன்னு சொல்லுன்னு கேட்டுகிட்டு வந்தான்.
சரி ஏதோ பிசினஸ் டீல்ன்னு நினைச்சேன். அந்த பண்ணை இடம் வந்து சேர்ந்த பிறகு, காரோட்டி இறங்கிப் போனான். நாசர் என் கிட்ட திரும்பி கேட்டான் இவன் யாருன்னு தெரியுமான்னான், தெரியாதுன்னேன். இந்த பையில என்ன இருக்கு தெரியுமா, கைத்துப்பாக்கி இருக்குன்னான்.
என் நெஞ்சு பக் பக்ன்னு அடிக்க ஆரம்பிச்சுருச்சு! அவன் யாருன்னு புரிஞ்சு போச்சு! என்னை ஏண்டா இவனோட கூட்டி வந்தேன்னேன். ஏண்டா இங்க வந்து என் உசுரு போகனுமான்னேன்.
இருடா! வரும்போது அவன் கார் ஓட்டி வந்த விதம் பார்த்தையான்னான். இல்லையேடான்னேன். ஒரு கை அந்த துப்பாக்கியிலும், அவன் கண்ணு இந்த காரை யாரோ ஃபாலோ பண்றாங்களான்னு பார்த்து கிட்டே வந்தான் பாருன்னு இன்னும் பயமுறுத்தினான்.
யார்றா இவன். எதுக்குடா நமக்கு இந்த வேலைன்னேன்.
நான் அரசு கால்நடை மருத்துவன்டா! கால்நடை பண்ணை அமைக்க யார் உதவி கேட்டு வந்தாலும் செய்ய வேண்டியது நம்ம கடமைடான்னான். அரசு வேலைடான்னான். அவன் டிபார்ட்மண்ட் அது.
இவன் யார்றான்னேன்.
அல்ஃபாவோட முன்னாள் பப்ளிசிட்டி செகரெட்டரி இவன். பெயரும் சொன்னான். அந்த பெயரைக் கேட்ட உடனே உசுரேப் போச்சு. இருடா, இவன் இப்ப அரசுகிட்ட சரண்டைந்த முன்னாள் அல்ஃபா, இப்ப சல்ஃபான்னான்.
அடப்பாவின்னேன். அந்த பெயர்களெல்லாம் அசாம் வீதிகளில் மிகப்பிரபலம் அப்ப. எல்லா லோக்கல் பேப்பர்களில் வரும்.
இப்ப அரசு கொடுக்கிற மானியம் மற்றும் பேங்க் லோன் மட்டுமல்ல, அரசு அநுமதி பெற்ற துப்பாக்கி இது. இந்தப் பண்ணை வைக்க இவன் சொல்ற அமௌண்ட் ஏதோ பேங்குல கொள்ளை அடிச்சுருப்பான், கொள்ளையடிக்கத்தான்டா அதுல சேர்றானுங்க, அதோட அரசு கொடுத்த பணத்தையும் போட்டு பண்ணை வைக்கறான். ஒரிஜனல் அல்ஃபா இவனை குறியும் வச்சிருப்பாங்க! அதான் இவ்வளவு உசாரா இருக்கான். பின்னாடி தூரத்துல சிஐடி கார் வரும். இல்லாட்டி இவனுங்க எல்லாம் இந்த பகல்நேரத்துல இவ்வளவு ஃப்ரீயா சுத்த மாட்டாங்கன்னான்.
திரும்பி நாசர் வீடு வர்றவரை கையில உசிரு இல்லை! அந்தக் கார்ல திரும்பும் போது முகம் பேயறைஞ்சு போச்சு எனக்கு.
வந்த பிறகு நாசர் சொல்றான் நான் செய்யற இந்த வேலையும் அரசு வேலைதாண்டா. இவனுங்களுக்கு rehabilitation இதுன்னான்.
இனிமே இது மாதிரி வேலைகெல்லாம் என்னை இழுக்காதே, எனக்கு என் உசிரு முக்கியம்ன்னு சொல்லிட்டு வந்தேன்.
வாழ்க்கையில நேரிலப் பார்த்த பயங்கரவாதி கொலைகாரனுக்கு அரசுதவியோட புனர்வாழ்வு.
நமக்கு பக் பக்ன்னு இவனுகளைப் பார்த்தா அடிச்சுக்குது. எத்தனை கொலைகள் கொடூரங்கள் அந்த கௌஹாத்தி வீதிகளில்!
முகநூலில் பார்த்த இன்னொரு போஸ்ட் பார்த்து பழையது ஞாபகத்திற்கு வந்தது.
முருகா காப்பாத்து!
ओलै सिरिय
No comments:
Post a Comment