Tuesday, November 26, 2019

நீண்டதொரு பயணம் அது

நீண்டதொரு பயணம் அது

நீண்டதொரு பயணத்தில்
  உடன் பயணித்தவர்கள் இறங்கிவிட்டனர்!
பயனத்தின் களைப்பை உணரும் முன்
  விட்டுச் சென்ற சருகுகளின் சத்தம் குடைகிறது!

ரயில்சிநேகமான பயணத்தில்
  அசைபோடும் விஷயங்கள் பலவானது
அவற்றில் ஒருமித்தவை சில எதிர்த்தவை பல
  கொண்டு செல்லும் நினைவுகள் காற்று போல் கரைந்தது!

அவர் தம் பயணம் அவரவர் இலக்கு நோக்கி
  ரயில் பெட்டி கொண்டு சென்றதென்னவோ ஒன்றாய்
பெட்டிகள் இணைத்துச் செல்லலாம் ஒரே வழியில்
   மனது என்றும் ஒன்றாய் பயணிப்பதில்லை!

அவரவர் எல்லை அவரவர் நியமிப்பில்
  ரயில் செல்லும் பாதை என்றும் ஒன்றே
தண்டவாளம் இரண்டாய் தெரிவது போல்
  நம் பயணமும் இரு தடங்களில் இருக்கலாம்!

நடைபாதையில் நம் கால்கள் பிரிந்தே செல்லும்
  இலக்கை நோக்கிச் செல்ல இரு கால் தேவை!
இருப்புப்பாதையில் சக்கரங்கள் பிரிந்தே செல்லும்
  இலக்கை அடைய ஒரு பிரிதல் தேவை!

பயணம் ஒன்றே எண்ணம் வேறு
  திசை ஒன்றே மனது வேறு
பாதை ஒன்றே களம் வேறு
  நினைவு ஒன்றே திசை வேறு!

நீண்டதொரு பயணம் அது!

Saturday, October 26, 2019

பெருமாள் ஏகாந்தசேவை

மாதத்தின் கடைசி சனிக்கிழமை உள்ளூர் பெருமாள் கோவிலில் ஏகாந்த சேவைக்கு இரவு அரை மணி நேரம் பெருமாள் முன் வீணை வாசிப்பது அம்மிணிக்கு வழக்கம்.

எப்போதும் எலக்ட்ரிக் அட்டாச்மெண்ட்டோட வர்ற வீணையை எடுத்துப்போகாதே, நம்ம தஞ்சை வீணையை எடுத்துப்போம்பேன். நம் பேச்சு எடுபடாது. சொன்னா கேட்க மாட்டாங்க. வீணையில கிடார் சத்தம் வருதும்பேன். அப்புறம் கடந்த சில மாதங்களாக தஞ்சை வீணையை எடுத்துப் போக ஆரம்பிச்சாங்க!

இன்னிக்கு அம்மிணியோட ஏகாந்தசேவை நேரம். இன்னிக்கு எனக்கு கிச்சன்ல நிறைய வேலை, உன் பேச்சைக் கேட்கப் போவதில்லை, கை வலிக்குது, அதனால அந்த சின்ன வீணையைத் தான் எடுத்துப் போவேன்னு அடம்.

பெருமாள் முன்ன வீணை மற்றும் ஸ்பீக்கர் இறக்கி வச்சுட்டு சிவன் கோவில் போய்ட்டு வந்தா, அம்மணி வீணை நாதம் மெலிதாக எந்த எலக்ட்ரிக் சாதனமின்றி வருது. அம்மணிக்கு முகமே மாறிப்போச்சு. வீணை பேட்டரி செத்துப் போச்சு. ஸ்பீக்கர் வேலை செய்யலை. கோவில் மைக் வைச்சா அதுவும் வேலை செய்யல. அம்மிணிக்கு என்னைப் பார்த்து கோவம், முகம் சோகமா மாறியிருந்து.

எந்த எக்ஸ்டர்னல் equipment எதுவும் தேவையில்லை அப்படியே வாசின்னேன். கடவுளே பார்த்து உனக்கு தீபாவளிக்கு வாசிக்க வாய்ப்பு கொடுத்த மாதிரி இருக்கு, ஒழுங்கா அப்படியே வாசின்னு பின்னாடி போயிட்டேன். முகத்துல ஈயாடல.

அதற்கப்புறம் அன்னமாச்சார்யா மற்றும் பிறர் பாடலை வாசிச்சு முடிச்சவுடனே, வந்த பக்தர்கள் ஒவ்வொருவரும் வந்து ரொம்ப ரொம்ப இனிமையா இருந்ததுன்னு சொன்னவுடனே தான் அம்மிணி முகத்துல மலர்ச்சியே வந்தது.

இதே மாதிரி போன தடவை ராமநவமி அன்னிக்கு சான்ஸ் வந்தப்ப கூட இது மாதிரி தான் ஏதோ குண்டக்க மண்டக்க பேசிகிட்டிருந்தாப்புல. நல்லா திட்டி இழுத்து கிட்டுப் போனேன்.

ஏகாந்தசேவை முடிஞ்சு திரும்பும் போது என் அம்மாக்கு போன்ல நான் சொல்லிகிட்டு இருந்தேன். அம்மா பாரு இவளுக்கு ராமநவமி, தீபாவளி அப்பவெல்லாம் ஏகாந்தசேவைக்கு வாசிக்க சான்ஸ் கிடைக்குது பாரு, கொடுத்து வச்சவன்னேன். கேட்டுகிட்டிருந்த அம்மிணி உடனே, நான் என்னிக்கு நல்லா வாசிக்க முடியலையோ அன்னிக்கு நீ வந்து எல்லாம் தலைகீழா சொல்லிகிட்டு திரியறன்னா! 

வேறென்ன சொல்ல! நான் சொல்ற பேச்சையும் கேட்டு நல்லவீணையையும் எடுத்து வரமாட்ட, நீ வாசிக்கிற நாளோட சிறப்பும் உனக்கு தெரியமாட்டேங்குது! சங்கீத ஞானமேயில்லாத எனக்கு புரியறது உனக்கு புரியமாட்டேங்குதுன்னேன்!

பேசி பிரயோசனமில்லைன்னுட்டாப்புல.

வாழ்க்கையில தானா கிடைக்கிற நல்வாய்ப்புகளை அனுபவிக்கவும் ஒரு பக்குவம் வரனும்.


பெருமாள் மகிமை!

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

நாளைய திருநாள் தீப ஒளித் திருநாள்
சுற்றத்தார் கூடிச் சிறப்பாக்கும் நாள்!
புத்தாடைப்புணிந்து புது மங்கலம் பிறக்க
பெண்டிர் சிறார் குதுகளிக்கும் நாள்!

பட்டாசு வெடித்து பகல் வெளுக்க வைக்கும் நேரம்
காசு கரியானாலும் சிறார் மனசு கரையாது
ஊதுபுகை அலை மோதினாலும்
காற்றுவெளியில் புகையிலையாகாது!

பண்டிகைகள் வந்தால் 
கடைகளில் கூட்டம் வழியிது
கூட்டமிருந்தால் நாடு வளமாகுது
உறவுகள் ஒன்று கூடுது
உள்ளங்கள் மகிழுது!

பண்டிகைகளை நேசிக்கும் நாட்கள்
நாட்டை வளமாக்கும் நாட்கள்
மாசுகுறைவாக வரும் வருங்கால பட்டாசுகள்
வானத்தை மாசற்றதாக்கும் நாட்கள்!

அதுவரை எது எதுவாயினும் 
உற்றார் உறவினர் கூடி
நாளைய நாளை பொன்னாளாக்குக!


இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

Thursday, October 24, 2019

தொலைவிற்கோர் தடை கல் நம் அருகில்

முன்னெடுத்துச் செல்ல முனைவதற்குள்
பின்னிழுத்துக்கொள்ள ஓர் தடை மந்திரம்!
எங்கோ அது தொலைவிலில்லை!
அருகில் அசரீரியாய் ஒலிக்கும் எதிரொலி!

தலைநிமிர்ந்து நடக்க எத்தனிக்கும் முன்
தலையிலிடிக்குமாறு வரும் கணைகள்!
எங்கோ அது தொலைவிலில்லை!
அருகிலிருந்து உணர்த்தும் இயலாமை!

வான்வெளியில் மலர்ந்து பயணிக்க எத்துகையில்
காற்றைக் கிழித்து வரும் அம்புகள்!
எங்கோ அது தொலைவிலில்லை!
உன் கை பின்னால் சிக்கிய முட்கள் அவை!

மலர்களைத் தொடுத்து அணிய முற்படுமுன்
மலர் தொடுக்க உதவும் நாறுகளை
இழுத்துப் பிடிக்கத் தெரிந்த உதடுகளுக்கே!
எதுவும் அஃது தொலைவிலில்லை!


தொலைவிற்கோர் தடை கல் நம் அருகில்!

Sunday, September 8, 2019

பிடி ஒரு நினைவில் எனது பாலம்

தினமும் நடந்த பாலம்
  ரொம்ப தூரமாகிப் போச்சு இப்ப
அரசு பள்ளிக்கு பஸ்ஸுல போன பாலம்
   பஸ் தடம் மாறிப் போச்சு இப்ப!

நினைவுகள் நினைந்த கனவு பாலம்
   காலம் கடந்து மாறிப் போச்சு
சைக்கிளேறி மிதித்த பாலம்
    படத்துல பார்க்கிறதா மாறிப்போச்சு!

ஆடிப் பண்டிகைக்கு ஊர் நிறைந்த பாலம்
     அடிமனதில் ஊறிய நினைவாப் போச்சு
தண்ணிப்பந்து பேரிக்காய் பார்த்த பாலம்
    தண்ணியில் ஊறிய காயாகிப் போச்சு!

பாலம் கரை புரண்டு ஓடுற நீராய் நிற்குது
   காணக் கண் எட்டாதூரத்தில் நிக்குது
மனம் கொள்ளும் பார்வை தேடி
  மனது எட்டாய்ப் பறக்குது!

பிடி ஒரு நினைவில் எனது மேட்டூர் பாலம்!

Friday, August 9, 2019

சுவாசமற்ற ஓர் பறிப்பு

வீட்டில் பூட்டி வைத்து பறித்த சுதந்திரம்
   நாளைய விடிதலுக்கு வலுவற்ற நூலிழை!
தலைமுறைகள் மாறிப்போன இடத்தில்
   பறந்து போன வண்டுகள் வந்தென்ன பயன்!

தடிகளும் குண்டுகளும் தலைதான் வாங்கும்
   எஞ்சி நிற்கப்போவது மரமும் செடியும் மட்டுமே!
மண்ணுள் ஒட்டா செடியை பிடுங்கி நட்டாலும்
   மலர்தனைக் கொடுக்காது!

மனித சுதந்திரம் பிறர் தடுப்பில் பறிபோகாது
    பறித்த சுதந்திரம் பலனிற்றி நிற்கும்
அன்பில் இணையா உள்ளங்களை
  தடிகளும் குண்டுகளும் காத்திட முடியாது!

குள்ளநரி திட்டங்களால் சதி செய்யும் மனிதர்கள்
   மண்ணில் ஓர் சாந்தியை பறிக்கலாம்!
மலரிடம் ஒட்டா வண்டுகளின் மகரந்தசேர்க்கையில்
   மலர்வனமும் பாலைவனமும் ஒன்றே!

இழுபறியில் திணிக்கும் ஓர் சுதந்திரம்
    மண்ணின் மக்களின் சுதந்திரமன்று!
ஜனநாயகம் தழைக்க வேண்டிய இடத்தில்
   தாள்பால் போட்ட கதவுகளின் இடையில் சுவாசமில்லை!


சுவாசமற்ற ஓர் பறிப்பு!

பலன் அறியா பலன்

சொன்னாரய்யா சொன்னாரய்யா
    யோகமான நாளுன்னாருய்யா
வந்துதய்யா வந்துதுய்யா
    வந்ததெல்லாம் சோதனையய்யா
சொல்லாம சொன்னாரய்யா சொன்னாரய்யா
   சோதனையை வெல்லும் நாளென!

குறி சொன்னாரய்யா சொன்னாரய்யா
    நல்ல செய்தி வரும்ன்னாரய்யா
வந்ததய்யா வந்ததய்யா சேதி
   விண்ணப்பம் ஏற்கலைன்னு
சொல்லாம சொன்னாரய்யா சொன்னாரய்யா
    இருக்குறதை விட்டுராதேன்னாரய்யா!

பலன் சொன்னாரய்யா சொன்னாரய்யா
   வளமான செல்வம் வரும்ன்னாரய்யா
வந்ததய்யா வந்ததய்யா
  டாக்டர் பில் வந்ததய்யா!
சொல்லாம சொன்னாரய்யா சொன்னாரய்யா!
   நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்ன்னாரய்யா!

கேட்டானய்யா கேட்டானய்யா
  கேட்டதெல்லாம் புரியாம கேட்டானய்யா!
நினைச்சானய்யா நினைச்சானய்யா
  பணமா வரும்ன்னு நினைச்சான்யா
கிடைச்சதய்யா கிடைச்சதய்யா
  நீண்டதொரு வாழ்க்கை நலம்!


ஹரிகேசநல்லூராய நம:

Wednesday, August 7, 2019

என்றும் ஓர் குடை நிழலில்

பாதைதனில் பயணிப்போர் 
    தொடர்பற்றுப் போனாலும்
பயணமது தொடருமன்றோ!

செல்வமதை செலவளிப்போர்
      கோட்டைகள் தகர்ந்தாலும்
செலவது தொடருமன்றோ!

மனது அதைத் தொலைத்தாலும்
    பாதையதை மறந்தாலும்
மரங்கொத்தி மனதன்றோ அது!

மதி குறைந்து போனாலும்
     மதியாதோர் முன் வீழ்ந்தாலும்
சிந்தனை என்றும் குன்றுவதன்றோ!

மண்ணை விட்டுப் போனாலும்
    மன்னவனேயானாலும்
மண்ணின் மணம் மாறோதன்றோ!


என்றும் ஓர் குடையின் நிழலில்!

பட்சி தரும் ஒலி அலைகள்

மனிதன் நடக்கும் பாதையிலெல்லாம்
கூட வரும் பட்சிகளின் தொடர் ஒலிகள்
பறவை உனை வரவேற்பதில்லை
தம் உறவுக்கு ஒலிக்கும் உணர்வலைகள் அது!

பிறர் வீட்டுச் சுவற்றில் வரையும் சித்திரம்
பட்சிகளின் தொடர் ஒலியில் நனையும்
நம் வீட்டுச் சுவற்றின் கலையாத ஒட்டடைகள்
சிலந்தி வலையில் சிக்கும் பூச்சிகளாயின!

அவர்தம் பாதை பதிக்கும் சுவடுகள்
தொடரும் பறவை ஒலியின் பேதமின்றிருப்பின்
வழி சொல்லும் சாலை மரங்களின்
நிழல் தரும் சுகத்தில் பயணிக்கும்!

பட்சிகளின் கூட்டுத் தொடர் போல்
நம் சுவடு நமதாய் ஒலிக்கட்டும்!


பட்சி தரும் ஒலி அலைகள்!

Sunday, August 4, 2019

பொருத்தமில்லா ஒரு பொழுதில்

மனதில் இருப்பது இறுக்கம்
பகிரும் போது அது கிறங்கும்
உள்மனதில் பூட்டி வைப்பது சுரங்கம்
துளை போட்டு திறப்பது ஓர் அம்பு!

எதிர்பார்ப்போடு நின்றால் ஏமாற்றம்
முயன்று வென்றால் கொண்டாட்டம்
படித்து பெற்றால் பட்டம்
அறிவால் பெற்றால் அது கல்வி!

உழைப்பில் தோன்றுவது ஓர் சிலை
செதுக்கி செழுமையாக்கினால் சிற்பம்
அலங்கரித்து போற்றினால் கடவுள்
மனதில் உருவாக்கும் வரை அது கல்!

பொழுதொன்று மீட்டினாள் வீணை
நரம்புகளை பிடித்து இழுத்தாள் இசை
கைத்தவமாடினாள் ஒரு ராகம்
மனதில் பதிந்து எழும் அது ஓர் சுவை!


பொருத்தமில்லா ஒரு பொழுதில்!

Wednesday, July 31, 2019

கூடி ஓர் வாழ்த்து மடல்

நண்பனின் சொல்லில் தெரிவது
நட்பைக் காட்டிடும் ஓர் வழிபாடு
சொல்படி கேட்காதவன் செயல்
வழித்தடத்தில் வரும் ஓர் இடிபாடு!

அன்பின் வழியில் ஓர் சொல்
அரவணைப்பில் ஓர் சொல்
ஆர்ப்பரிப்பில் ஓர் சொல்
இகழ்ச்சியில் ஓர் சொல்
எச்சொல் கேட்பினும் முற்படு!

நட்பில் கரையும் மேட்டிமைத்தனம்
சொல்லில் மிரட்டும் குழந்தைத்தனம்
பணியில் நிமிரும் வல்லமைத்தனம்
அனைத்தும் பெற்ற உன் தினம் இன்று!

இன்று போல் என்றும் மகிழ்ந்திட வாழ்வாய்
நட்பில் என்றும் திளைத்திட வாழ்வாய்!

கூடி ஓர் வாழ்த்து மடல்!

Friday, July 26, 2019

அலை மீது ஓர் ஓடம்

அலைகளுக்குத் தெரியும் 
     கரைகள் சாஸ்வதமில்லையென
ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு 
     கரைகள் சொல்லும்
உன் ஆக்ரோஷங்கள் 
      என் முன் அடங்கிவிடுமென!

அலைகளாய் எழும் ஆக்ரோஷங்கள்
     திடமான கரைகள் முன் 
மணலில் எழும் சுவட்டை அழிக்கலாம்
     கரைகளின் அடித்தட்டுகளையல்ல!

அலைகளின் சமரசங்களில் ஓடங்கள்
     காற்றின் இழுப்பிற்கு அசையும்
ஆர்ப்பரிக்கும் அலைகளில்
      ஓடங்கள் கரை சேரும்
திடமான சிந்தனைகள்
     அமைதியின் ஓடங்களாகும்!

அலைகளின் ஆர்ப்பரிப்பிலும்
      கரைகளின் தடுப்பிலும்

அலை மோதி நிற்கும் ஓடம்!

அலை மீது ஓர் ஓடம்!

Thursday, July 25, 2019

வாழ்வின் பிரதிபலன்

உழைத்து வாழ்பவனுக்கு
      உதவி தேவையில்லை
உதவி தேவைப்படுபவன்
       உழைப்பதில்லை!

கல்வியை மதிப்பவனுக்கு
      கல்வியில் பேதமில்லை
கிடைத்த கல்வியில் கற்காதவன்
     எதையும் கற்பதிற்கில்லை!

தொழில் தெரிந்தவனுக்கு
      தொழிலில் பேதமில்லை
பேதமுற்றவனுக்கு
      தொழில் எதுவுமில்லை!

உழைக்கத் தெரிந்த தொழிலாளிக்கு
      உழைப்பே மூலதனம்!
பிறர் உழைப்பில் வாழ்பவனுக்கு
      உணர்வே இழப்பு!

குடும்பத்தை நேசிப்பவனுக்கு
      குடிசையும் கோவில்
குடிசையில் இருப்பவனுக்கும்
       குடும்பமே கோவில்!

பரம்பொருளை தேடுபவனக்கு
     அனைத்திலும் பரம்பொருள்
கிடைக்காத பொருளை தேடுபவனுக்கு
     கிடைப்பது எதுவும் பொருளல்ல!

போற்றிப்பாடுபவனுக்கு
     எதிலும் மகிழ்சசி!
எதையும் தூற்றுபவனுக்கு
     அனைத்திலும் இகழ்ச்சி!

பிறர் பொருளை பறித்து வாழ்பவனுக்கு
     பொருளும் தங்காது
தன் பொருளைக் கொடுத்து வாழ்பவனுக்கு
    தங்குவதெல்லாம் பொருளே!

அன்பிருக்கும் இடத்தில்
      குழந்தை இருக்கும்
அன்பில்லா அன்னையிடம்
      குழந்தையும் தங்காது!

நட்பிருக்கும் இடத்தில்
      பேதமில்லை!
பேதமுல்ல இடத்தில்

      நட்பில்லை!