Friday, August 9, 2019

சுவாசமற்ற ஓர் பறிப்பு

வீட்டில் பூட்டி வைத்து பறித்த சுதந்திரம்
   நாளைய விடிதலுக்கு வலுவற்ற நூலிழை!
தலைமுறைகள் மாறிப்போன இடத்தில்
   பறந்து போன வண்டுகள் வந்தென்ன பயன்!

தடிகளும் குண்டுகளும் தலைதான் வாங்கும்
   எஞ்சி நிற்கப்போவது மரமும் செடியும் மட்டுமே!
மண்ணுள் ஒட்டா செடியை பிடுங்கி நட்டாலும்
   மலர்தனைக் கொடுக்காது!

மனித சுதந்திரம் பிறர் தடுப்பில் பறிபோகாது
    பறித்த சுதந்திரம் பலனிற்றி நிற்கும்
அன்பில் இணையா உள்ளங்களை
  தடிகளும் குண்டுகளும் காத்திட முடியாது!

குள்ளநரி திட்டங்களால் சதி செய்யும் மனிதர்கள்
   மண்ணில் ஓர் சாந்தியை பறிக்கலாம்!
மலரிடம் ஒட்டா வண்டுகளின் மகரந்தசேர்க்கையில்
   மலர்வனமும் பாலைவனமும் ஒன்றே!

இழுபறியில் திணிக்கும் ஓர் சுதந்திரம்
    மண்ணின் மக்களின் சுதந்திரமன்று!
ஜனநாயகம் தழைக்க வேண்டிய இடத்தில்
   தாள்பால் போட்ட கதவுகளின் இடையில் சுவாசமில்லை!


சுவாசமற்ற ஓர் பறிப்பு!

No comments: