Thursday, November 5, 2020

அமெரிக்க தேர்தல் 2020 - பகுதி 2

 அமெரிக்க தேர்தல் 2020 - பகுதி 2

அமெரிக்க ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றியே அது மாநிலங்களுக்குத் தரும் மாநில சுயாட்சி, பலம் பொருந்திய மாநிலங்களின் ஆட்சியே அதன் அடிப்படை வேர். மத்திய அரசின் ஆணைகள் சிலவற்றை நிராகரிக்கக் கூடிய சக்தி கூட மாநிலங்களுக்கு உண்டு. அத்தகைய பலங்களில் ஒன்று தேர்தல் நடத்தும் அதிகாரம் அதிக அளவில் மாநிலங்கள் கையிலிருப்பது.

தேர்தலில் முக்கியமானது ஒவ்வொரு பிரஜையின் ஓட்டுரிமை. அமெரிக்கப் பெண்களும் சிறுபான்மையினரும் ஒரு நீண்டதொரு போராட்டத்தில் பெற்றது இந்த ஓட்டு போடும் உரிமை. இதைப் பறிக்கக்கூடிய எந்த ஒரு செயலும் அவர்களை கொதித்து எழ வைக்கும். 

அமெரிக்கா பரப்பளவில் ஒரு மிகப்பெரிய நாடு. 3 வித time zone. ஆதலால் ஒரே நேரத்தில் துவங்கி ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை. அந்தந்த மாநிலங்களே நேரத்தை காலத்தை நிர்ணயம் செய்யும். எத்தனை ஓட்டுச்சாவடிகள் என்பதை தேவைக்கேற்ப மாநிலத்திற்குள் உள்ள county நிர்ணயம் செய்யும். இதெல்லாம் உள்ளாட்சித்துறையின் மிகப்பெரிய அதிகாரம், ஜனநாயகத்தின் வெற்றி இது.

இங்கு நீண்டகாலமாக ஓட்டாளரிடம் ஓட்டுச்சாவடியில் ID கேட்கும் பழக்கம் கிடையாது. பெயர் மற்றும் முகவரி மட்டுமே! ஒரே பெயரில் இருவர் இருந்தால் வயது மற்றும் பிறவற்றை சரிபார்க்கனும். தேர்தலில் இந்த தடவை ஓட்டு போடுபவர்கள் ஐடி காண்பிக்கனும்ன்னு எங்கள் மாநிலத்தில் சட்டம் இயற்றினார்கள். கோர்ட் அதை தடை செய்துள்ளது. கோர்ட் தடையை விலக்கும் வரை ஐடியை காண்பி என்று ஓட்டுச்சாவடியில் சொல்ல முடியாது.

மேலும் பல மாநில அரசுகள் தேர்தலன்றே வோட்டாளர் பதிவுகளையும் அனுமதிக்கிறது. ஆகவே முன்னர் அறிவித்த மொத்த வேட்பாளர் எண்ணிக்கைக்கும், தேர்தலன்றும் அதற்கு முந்தைய தினத்தில் பதிவானவர்களையும் முழுமையாக கணக்கிலெடுக்க வேண்டிய நாளை CANVASS date என்பர். இது எங்கள் மாநிலத்தில் நவம்பர் 13. தேர்தலன்று பதிவானவர்கள் இந்த கேன்வஸ் தேதிக்கு முன் எலக்‌ஷன் கமிசன் அலுவலகத்திற்கு ஏதாவது ஒரு அட்ரஸ் proof கொடுக்கனும் ( ட்ரைவர் லைசன்ஸ், பாஸ்போர்ட், யுடிலிடி பில், இன்னும் பிற வகைகளில் ஏதாவது ஒன்று). அதுவரை இவர்களது ஓட்டுகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படாது சில மாநிலங்களில். இதை provisional ballots என்பர். இந்த canvass date என்பது ஒவ்வொரு countyயும் பதிவான ஓட்டுகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு election processஐ நிறைவு செய்ய certify பண்ணும் நாள். அன்று தான் ஒரு மாநிலத்தின் தேர்தல் முடிவு நிறைவு பெறும் நாள்.

அமெரிக்க மக்கள் இடம் விட்டு இடம் பெயர்வது அதிகம். அத்தகையவர்கள் தங்கள் முகவரி மாற்றும் போது உடனே எலக்‌ஷன் கமிசனுக்குத் தெரிவித்தால் அது உடனே ரிஜிஸ்டரில் பதிவாகும். இல்லாவிட்டால் லைசன்ஸ் மாத்தும் போது dmvல் சொன்னால் அது எலக்‌ஷன் ரிஜிஸ்டரில் பதிவாகும். ப்ரைவசி சட்டங்கள் படி வேட்பாளர் சொல்லாமல் எதையும் மாற்ற முடியாது. 

இறந்து போனவர்கள் பற்றிய தகவல்களை ஏதாவது ஒரு உறவினர் எழுத்து மூலம் தேர்தல் இடத்திலோ முன் கூட்டியோ தெரிவிக்கலாம். அந்தத் தகவலை எலக்‌ஷன் கமிசன் சரிபார்த்த பிறகே வோட்டர் லிஸ்டிலிருந்து இறந்தவர்கள் பெயரை எடுக்க முடியும். இறந்தவர்கள் பெயரில் ஓட்டு போடுவது அல்லது பிறரது பெயரில் ஓட்டு போடுவது felony. கண்டுபிடிக்கப்பட்டால் தண்டனை தான்.

ஓட்டு போடுவது ஒவ்வொருவரது உரிமை. அதை தடை செய்ய இயலாது. தேர்தலிடத்தில் வோட்டாளர் குறிப்பில் சரியாக இருந்தால் வோட்டாளரே தங்கள் ballot ஐ tabulator உள்ளே தள்ள முடியும். அவை உடனே கணக்கிலெடுத்துக் கொள்ளப்படும்.

வோட்டாளர் குறிப்பில் (poll book) பெயர் இல்லாதவர்கள் ஓட்டு போட வந்தால் எலக்‌ஷன் சட்டமுறைகளிலுள்ள செக்லிஸ்ட் ஒவ்வொன்றையும் சரிபார்த்து அவர்கள் provisional ballots மூலம் ஓட்டு போட முடியும். அவை எலக்‌ஷன் கமிஷனர்ஸ்  மற்றும் அப்சர்வர்ஸ் (3, 5, 7 ... மாநிலங்கள் சட்டப்படி) முன் பரிசீலனை செய்யப்பட்டு முடிவுசெய்யப்படும்.

எலக்‌ஷன் முடிந்து இரண்டு நாள் கழித்தும் ரிசல்ட் தெரியலை என்று வருத்தப்படுபவர்களுக்கு, குறை கூறுபவர்களுக்கு, நான் சொல்ல வருவது: ஒவ்வொருவரும் போராடிப்பெற்றது ஓட்டுரிமை. ஓவ்வொரு ஓட்டையும் முறையாக பரிசீலித்து ஒவ்வொன்றையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டியது ஒரு மிகப்பெரிய ஜனநாயகத்தின் கடமை. Every vote counts. Hail our democracy.  அது எவ்வளவு நாட்களானாலும்.

அடுத்த பதிவில் தொடரலாம்!

அமெரிக்க தேர்தல் 2020 - பகுதி 1

அமெரிக்க தேர்தல் 2020

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் அதிபர், செனட், காங்கிரஸ் மற்றும் பல்வேறு மாநிலங்களில் கவர்னர் முதல் மாநில பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்து இப்போது ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது. இன்றைய pandemic காலகட்டத்தில் இது மாதிரி ஒரு தேர்தலை நடத்துவது எளிதான காரியமில்லை. நடத்தியதே ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி.

நடந்து முடிந்த தேர்தல் பல உலக நாடுகளுக்கு இது ஒரு மிகப்பெரிய பாடமாக, உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று. இதுவரை நடந்து முடிந்த தேர்தல்களை விட இந்த தடவை மிக அதிக அளவில் மக்கள் ஓட்டளித்துள்ளனர். கடந்த 10-12 வருடமாக ஓட்டு போடாதவர்கள், மற்றும் தேர்தல் பற்றி இதுவரை கவலைப்படாத பல இளைஞர்கள் தங்களை பதிவு செய்து கொண்டு ஓட்டளித்துள்ள ஒரு மிகவித்தியாசமான் தேர்தல் இது.

முதலில் தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரிகள் கிடைப்பதே அரிதான சூழ்நிலையாக மாறிப்போன ஒன்று இந்த கொரோனா காலம். பெரும்பாலும் ரிடையர் ஆன வயதானவர்களே தேர்தல் நடத்த உதவுபவர்கள், இந்த தடவை அவர்கள் வரவில்லை. பல தேர்தல்களில் என்னுடன் அதிகாரிகளாக வேலை செய்தவர்கள் கொரோனா பயத்தில் வரவில்லை.

புதிய அதிகாரிகள் அநுபவமற்றவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ட்ரைனிங் ஆன்லைனில் மட்டுமே கொடுத்து ஒரு தேர்தல் வேலையில் இறக்கி, முறையான பாதுகாப்பு முறைகளை இக்கொரோனா காலத்தில் கடைபிடித்து நடத்துவது மிகப்பெரிய கடினமான வேலை. அதையும் மிகத் திறமையாக செய்துள்ளனர். வந்த பல புதிய அதிகாரிகளுக்கு கூட இருக்கும் அநுபவமுள்ள அதிகாரிகளே தேர்தலிடத்தில் பலவற்றை சொல்லித்தர வேண்டிய கட்டாயம்.

தேர்தல் அதிகாரிகள் கிடைக்காத பல இடங்களில் தேர்தல் சாவடிகள் குறைந்து போக இதுவும் காரணம். சிலர் நீண்ட க்யூ, திட்டமிட்டு தேர்தல் சாவடிகள் குறைப்பு என்று கருதுகின்றனர். 

இதுவரை நடந்த தேர்தல்களில் தேர்தல் அதிகாரிகளுக்கு குறைந்தது 3 மணி நேரம் நேரில் ஒரு வகுப்பில் ஒரு ட்ரைனர் முன் நடந்தது. என்னைப்போன்றவர்களுக்கு 6 மணி நேர இரண்டு பகுதி ட்ரைனிங். இவையனைத்தும் இந்த கொரோனா காலத்தில் சாத்தியமில்லாமல் போய்விட்டது. அந்த 3 மணி நேர 6 மணி நேர ட்ரைனிங் எல்லாம் இப்ப ஆன்லைன் மூலம் மாற்ற வேண்டியதாகிவிட்டது.

பல தொலைதூர countyகளில் மிகவேகமாக இயங்கக்கூடிய இன்டர்நெட் வசதி இன்றும் சில ஊர்களில் இல்லை. அந்த ஊர்களில் பகுதிகளில் ட்ரைனிங் நேரில் கொடுக்க முடியாத சூழ்நிலை சில countyகளில்.

தேர்தல் சாவடியில் குறைந்தபட்சம் டேபுள் துடைக்க ஆள் வேண்டுமானாலும் அவர்கள் குறைந்தபட்சம் 3 மணிநேரம் ட்ரைனிங் எடுக்கனும். இது உதாரணத்திற்குச் சொன்னாலும் அனைத்து அதிகாரிகளும் எல்லா வேலையும் செய்யனும். கதவு இடுக்குகளைத் துடைப்பது, ஓட்டு போடும் இடங்களை ஒவ்வொருத்தரம் வந்து போன பிறகு ஒவ்வொரு டேபுள் நாற்காலியையும் சானிடைஸ் பண்ணனும். சாதாரணமாக ஏழெட்டு பேர் வேலை செய்யும் சாவடியில் இந்த தடவை 10-12 பேர் வேலை செய்தனர்.

நெருங்கிய மக்கள் தொகை இருக்கும்இடத்தில் சாவடிகள் கம்மி என்று குறைகூறுவது சுலபம். வேலை செய்ய ஆட்கள் தேவை. ட்ரைனிங் எடுத்தவர்கள் மட்டுமே தேர்தலில் வேலை செய்யமுடியும் என்பது சட்டம். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் இந்த 3-6 மணி நேர ட்ரைனிங் அவசியம் என்பதும் சட்டம்.

ஓட்டு போட வரும் ஒவ்வொருவருக்கும் மாஸ்க் மற்றும் பேனா ஒருத்தர் எடுத்துக் கொடுக்கனும். அதை மக்கள் கீழே போடாமல் அவர்களை எடுத்துச் செல்ல வைக்கனும். இல்லாவிட்டால் அவற்றை முறையாக எடுத்து குப்பையில் போடனும். இதுவரை நடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் எலக்‌ஷனில் வேலை செய்யும் ஆட்களுக்கு/அதிகாரிகளுக்கு டபுள் மடங்கு வேலை. ஆட்கள் குறைவு கூட.

போஸ்டல் ballot பற்றி அடுத்த வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

அமெரிக்க தேர்தல் 2020

ஜனநாயகத்துல முக்கியமானது ஓட்டு போடுவது. ஓட்டு போட்ட பிறகு யாரு ஜெயிப்பாக யாரு தோற்கனும்ன்னு தாயகட்டை உருட்டறது ஒரு சுகம். என்ர சுகம் தேர்தல் அன்னிக்கு தேர்தல் அதிகாரியாகப் போய் மக்களுக்கு உதவுவது.

இந்த தடவையும் எங்க ஓட்டுச்சாவடியில தேர்தல் அதிகாரியாகப் போனேன். முதல்ல மொத்த சாவடிக்கு chiefஆகப் போறயான்னு கேட்டாங்க. முன் அனுபவம் இல்லைன்னு அவங்க கிட்டு சொல்லிட்டு, கொடுத்தால் சரி செய்யறேன்னேன். நம் கீழ 10-12 எலக்‌ஷன் அதிகாரிகள் வேலை செய்வார்கள். வேற ஒருவர் கிடைத்ததால், நான் இப்ப கொடுத்திருக்கிற வேலையைச் செய்தாப்போதும்ன்னுட்டாங்க. இதுக்கு முன்னாடி எலக்‌ஷ்ன்ல நீ வேலை செய்தப்ப இருந்த ஒரு சீஃப் ஜட்ஜ் உன்னை ரெகமண்ட் பண்ணியதால் உன்னைக் கேட்டோம்ன்னாங்க.

ஆனால் பாருங்க, இந்த சந்திராஷ்டமம் அன்னிக்குப் போய் இந்த வேலைக்குப் போனால் சந்திராஷ்டமம் சும்மா இருக்குமா! 

அம்மிணி விடியற்காலையில் என்னை ஓட்டுச்சாவடியில் விட்டு விட்டு தான் ஓட்டு போட வரிசையில் நிற்க, 

6.30 மணிக்குத் திறந்த ஓட்டுச்சாவடியில் வந்த முதல் ஆளே என்கிட்ட வந்த ஆளு செமையா பிடிச்சு வெளுத்து வாங்க, அம்மிணிக்கு ஒரே ஆச்சரியம், பயம். அம்மணி உள்ள வந்ததைப் பார்த்தேன், ஆனால் எப்ப வெளியப்போனாப்புலன்னு பார்க்கக் கூட நேரமில்லை. சந்திராஷ்டமம் வெளுத்து வாங்குறான் மனுசன்.

பத்து வருசமாக ஓட்டுச்சாவடிக்கே வராத மனுசன், கடைசியாக ஓபாமா காலத்துல ஓட்டு போட்ட ஆளு, நேத்து வந்து எங்கடா என் ஓட்டுன்னு கேட்க, அவனுக்கு உதவிய அதிகாரிகள் என் கிட்ட அனுப்பிட்டாங்க. மனுசனுக்கு சக்க கோவம். 

காலையில 6.30 மணி, முதல் ஆளு என் கிட்ட, சந்திராஷ்டமத்தின் உக்ரத்தோட, எங்கயா என் பேருன்னு கேட்க, எல்லாம் வெளிறிப்போச்சு எனக்கு. 

எலக்‌ஷன் கமிஷன் ஆபீஸுக்கு முதல் ஆளா போன் பண்ணி, இந்த ஆளுக்கு என்ன பண்ணன்னு கேட்டு, எலக்‌ஷன் சட்டப்படி அந்த ஆளுக்கு ஓட்டு போட உதவி செய்யறதுக்குள்ள அடுத்த இரண்டு பேரை என் கிட்ட அனுப்பிட்டாங்க! என்னடா இன்னிக்கு விட்டு வாங்கப்போவுதுன்னு நினைச்சேன்.

மற்ற அதிகாரிகள் என்னைப் பரிதாபமாகப் பார்க்க, அதுக்குத்தான் நாங்க அந்த வேலையை நாங்க எடுத்துக்கிறதில்லைன்னு எனக்கு அவங்க அறிவுரை சொல்ர மாதிரி சொல்ல, வாழ்க்கையில எவ்வளவோ சந்திராஷ்டமங்களைப் பார்த்து நிந்தனைகளை எதிர்கொண்டு வந்தவனுக்கு இதெல்லாம் ஜுஜுபியா!

இந்த தேர்தலில் எவ்வளவு அநுபவம். ஓட்டுச்சாவடிப் பக்கம் பத்து பன்னிரெண்டு வருசமா வராதவங்கெல்லாம் (மூனு கேஸுக்கு மேல) ஓட்டுச்சாவடி பக்கம் வந்து ஓட்டு போட வர்றாங்க!

அனைவருக்கும் உதவுவதே ஒரு ஜனநாயகக்கடமை!

ஜனநாயக கடமையாற்றிய ஒரு நிறைவோடு!

Monday, November 2, 2020

அசரீரி வாழ்த்தில் நனைகையில்

 டின்னர் சாப்பிடும் போது எதுவும் பேசக்கூடாதுன்னு அமைதியாக தட்டு எடுத்துகிட்டு வந்து டைனிங் டேபுள்ள உட்கார்ந்தேன். நல்லப்பையனா முன்னாடியே டிஷ் லோடு வேறபண்ணியாச்சு. சிக்கல் எதுவும் வேண்டாம்ன்னு அமைதியாக இருந்தேன்.

தோசை வார்த்துகிட்டு இருந்த அம்மணி திடீர்ன்னு ஏதோ சொல்ல, exhaust fan சத்தத்துல ஒரு அசரீரியாட்டும் வந்து விழுந்துச்சு.

அம்மணி முகத்துல சிரிப்போட வேற வந்துச்சா : how come you are always perfect in judging people and say in advance ன்னாப்புல.

பக்குன்னுச்சு. என்னடா ஒன்னுமே சொல்லலை. வசிஷ்டர் வாயில பிரம்மரிஷின்னு வந்து விழுவது. நாளைக்குத் தானே சந்திராஷ்டமம் ஆரம்பம்ன்னு பார்த்தேன். இது என்ன pre-existing conditions மாதிரி வந்து விழுதுன்னு நினைச்சேன்.

வாயில உள்ள போன தோசை தொண்டையிலேயே நின்னுருச்சு.

என் முகம் வெளிறிப்போனதைப் பார்த்த அம்மிணி சிரிச்சுகிட்டே சொல்றாப்புல, அன்னிக்கு வீணைக்கச்சேரிக்குத் தாளம் போட என் நண்பியைக் கூப்பிட்டேன், அப்ப அதெல்லாம் வேணாம்; இத்தனை வருசமா வாசிக்கிற சரளமாக வரவேண்டாமா, வேணும்ன்னா ஃபோன் appஐ வச்சு சவுண்ட் கம்மியாக வச்சு தாளம் போட்டுக்கன்னு சொன்ன, நான் கேட்கலை அப்பன்னாப்புல.

அதுசரி. இப்ப என்ன அதுக்குன்னேன்?

இல்லை. நாலு நாளா உன் கிட்ட சொல்லலை, சொன்னா திட்டுவன்னு. நீ சொன்ன மாதிரியே அந்த நண்பி தப்பு தப்பா தாளம் போட நான் தடுமாறிட்டேன். பக்கவாத்தியம் மிருதங்கம் சின்னப்பையன், அவன் கூட அந்த தாளத்தைத் தவிர்த்துட்டான். 

தாளம் தப்பா போட்டது மட்டுமல்ல, பின்னாடி உடனே ஃபோன்ல கூப்பிட்டு நீ இந்தந்த இடத்துல எல்லாம் கேப் விட்டு வாசிச்சுட்டேன்னு சொல்றா! எனக்கு தலையே சுத்துது ஒன்னும் சொல்ல முடியலைன்னாப்புல.

எப்படி உன்னோட லைப்ல இப்படி பர்பெக்டாவே எல்லாத்தையும் வச்சுக்கிறன்னாப்புல, மறுபடியும்.

என்னய்யா ஆச்சு இன்னிக்கு எனக்குன்னு ஒன்னும் புரியமாட்டேங்குது. சந்திராஷ்டமம் சீக்கிரம் கூட துவங்குமா, இல்லை இந்தியா டயத்துக்கு இங்கிட்டு எபக்டா!

தொண்டையில நின்ன தோசை அதுவும் துப்பாம உள்ள இறங்கிடுச்சு!

அம்மாடி!

வாழ்வினிது.

Friday, October 30, 2020

வாழ்வில் மெய்யறிவைத் தேடுகையில்

ஏணிப்படிகளில் ஏற நினைப்பவனுக்கு 
ஒவ்வொரு படியும் 
ஸ்திரமான நம்பிக்கை.

மேலிருந்து நோக்கின் 
படியேறுபவனின் தடுமாற்றங்கள் 
குடிகாரனின் பாதங்கள்.

நாம் நோக்கும் பாதை
நமக்களிக்கப்படும் மாயை
எளிதில் வழுக்கும் சரிவு!

வாழ்க்கையில் கற்கும் நல்லவை
நம் படிகளின் ஸ்திரங்கள்
கொடுப்பவைகள் நம் முதிர்ச்சி!

வாழ்வில் மெய்யறிவைத் தேடுகையில்!

Sunday, October 18, 2020

வெற்று அப்ளிகேஷனின் தயவில்

 பத்தாவது வரைக்கும் சுகமாக தமிழ் மீடியத்துல படிச்சு வந்தேன். தமிழகத்தில் ப்ளஸ் 2 துவங்கிய இரண்டாவது பேட்ச். பெரியண்ணன் நேரா கொண்டு போய் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில மீடியத்தில் சேர்த்து விட்டான். ஆங்கிலம் கத்துக்கலைன்னா வாழ்க்கையில உருப்பட முடியாது ஒழுங்கா இதுலேயே இருன்னு மிரட்டல் வேற. அப்பா அம்மா படிப்பு பத்தி ஒன்னும் கண்டுக்க மாட்டாங்க, இத்தனைக்கும் அப்பா ஒரு அக்கௌண்டன்ட் வேற.

தட்டுத்தடுமாறி படிச்சு முடிச்சு காலேஜ் போக அப்ளிகேஷன் வாங்கி பூர்த்தி பண்ணனும். வாங்கின 4 காலேஜ் அப்ளிகேஷனும் இங்கிலீஷ்ல இருக்கு. பெரியண்ணனுக்குத் தான் வூட்டுல இங்கிலீஷ் தெரியும். அவன்ட்ட போனா திட்டு அடி தான் விழும்.

அதுக்கு பயந்து வெறும் பெயர் அட்ரஸ் மட்டும் ஃபில்லப் பண்ணி, எந்த கோர்ஸ் எடுக்கனும்ன்னு கூட தெரியாத காலம் அது, திருச்சி ஜோசப் கல்லூரிக்கும் இன்னும் இரண்டுக்கும் அனுப்பினேன். அண்ணன்ட்ட சொல்லலை.

அவன் என்னை சென்னைக்குக் கூட்டிப் போய், சென்னையிலத் தான் படிக்கனும், நல்லா ஆங்கிலம் பேசக்கத்துக்க இங்க தான் முடியும் வான்னு இழுத்துகிட்டு்போய், விவேகானந்தா, பிரசிடன்சியில சேர்க்கனும்ன்னு சொல்லி, என்னைக் கூட்டி அலைஞ்சு ஒன்னும் கிடைக்காம ஊர் திரும்பி வந்தோம்.

ஊர் திரும்பின மறுநாள் திருச்சி ஜோசப் கல்லூரியிலேர்ந்து நான் அரைகுறையாக அனுப்பின அப்ளிகேஷன்லேர்ந்து தேர்ந்தெடுத்து, முதல்ல பி ஏ சரித்திரம் கொடுத்து, அதை அவங்களே அடித்து, புள்ளியியல் மாத்திக் கொடுத்து அனுப்பின போஸ்ட் கார்ட் வந்தது.

பெரியண்ணன் முகத்துல கடுவன் பூனை, அவன்ட்ட சொல்லாமப் போட்டது, இன்னொரு பக்கம் இவ்வளவு சுத்தியும் சென்னையில அலைஞ்சு கிடைக்காம வந்தும், இவன் ஒன்னும்ந்தெரியாம நல்ல காலேஜ்ல வாங்கியிருக்கானேன்னு சந்தோஷமும் கூட.  ஒழுங்காப்படின்னு போயிட்டான். அடி வாங்காம தப்பிச்சோம்டான்னு சந்தோஷம்.

இப்ப இதுவெல்லாம் நினைக்கக் காரணம், பையன் இப்ப காலேஜஸ்க்கு அப்ளை பண்றான். அப்பனுக்கு ஒன்னுந்தெரியாதுன்னு நினேச்சு தானே கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்து, அவன் ப்ரெண்ட்ஸ் வச்சு எல்லாத்தையும் பண்ணிகிட்டு, கடைசியில துட்டுகட்டும் போது உங்கிட்ட வர்றேன், அப்ப நீ அப்ளிகேஷனைப் பார்த்தா போதும்கிறானே!

அப்ளிகேஷனைக் கடைசியில காண்பிக்கும் போது அவன்ட்ட அம்புட்டு சரக்கு இருப்பது தெரியுது. 

மவனே! உன்ர அப்பனுக்கு ஒன்னுந்தெரியாம வாடா இம்புட்டு வருசம் வாழ்ந்திருக்கேன். நாம வேலைக்கு அப்ளை பண்ற நம்ம ரெசூமே மாதிரி காலேஜ் அட்மிஷனுக்கு அப்ளை பண்றானுக! அம்புட்டு சரக்கோட அப்ளை பண்றானுக. 

வெத்து அப்ளிகேஷனை வெறும் பேரும் அட்ரஸும் மட்டும் போட்டு படிச்சுபுட்டு வந்தேன்! அது ஒரு கனாக்காலம்!

அமெரிக்க வாழ்வின் தேவை

 ஒவ்வொருத்தரும் ஒரு நாட்டுல ஒரு குறைந்தபட்ச வசதியோடு அடிப்படை தேவையோடு வாழ்வதற்கு ஏதாவது ஒரு விதத்துல தன்னை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். அது ஒரு நாட்டில் இறங்கியவுடன் அந்த நாட்டில் எது முதலில் தேவைப்படும் என தெரிந்து கொண்டு அதை உடனே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அத்தகைய ஒன்று, அமெரிக்காவில் வாழ்வதற்கு, ஒரு குறைந்தபட்ச அடிப்படை வாழ்வு வாழ்வதற்கே தேவையானது, இன்சூரன்ஸ். 

இன்சூரன்ஸ் இன்றி அமெரிக்காவில் வாழ்வது சாத்தியமில்லை. இல்லாமல் இருந்தால் பிரயோசனமில்லை, என்றாவது ஒரு நாள் கடும் சிக்கலில் மாட்டுவது தவிர்க்க இயலாது.

எனக்கு 20 வயது தான், 30 வயதிற்குள் தான், 40ற்குள் தான், 50ற்குள் தான். அதனால் சில basic இன்சூரன்ஸ் எடுத்தா போதும். பின்னாள் தேவைப்படும் போது மற்றவற்றை எடுத்துக்கொள்ளலாம் என்று நினைப்பதெல்லாம் தவறு. முட்டாள் தனம்.

அமெரிக்காவில் அக்டோபர் 15லிருந்து துவங்கும் ஓபன் என்ரோல்மெண்ட் பீரியட் சில இடங்களில் அக்டோபர் கடைசியிலோ, நவம்பரிலோ அல்லது டிசம்பரிலோ முடியலாம். இது அடுத்த வருடத்திற்குத் தேவையான இன்சூரன்ஸிற்கு இப்போதே தன்னையும் தன் குடும்பத்தையும் குழந்தைகளையும் பதிவு செய்து கொள்வது. இந்த ஓபன் என்ரோல்மெண்டை தவறவிட்டால் பின்னர் ஏதாவது ஒரு லைஃப் சேஞ்சிங் ஈவன்ட் அப்ப தான் மாற்ற முடியும்.

இது அமெரிக்காவில் அனைவருக்கும் மிகவும் தேவையானது. நமது சம்பளத்தில் இது ஒரு கணிசமான தொகையாக இருந்தாலும் இதை தவிர்க்காமல் கண்டிப்பாக எடுக்கனும்.

கீழ்கண்டவை அனைவருக்கும் அனைத்து வயதினருக்கும் தேவை. இதைத் தவறவிட்டால் இழப்பு அதிகமாக இருக்கும், இவையனைத்தும் இருந்தால் இடர்காலத்தில் போண்டியாகாமல் நாம் நமது குடும்பம் மீண்டு வர ஏதுவாக இருக்கும்.

கீழ்கண்டவற்றில் பெருமளவில் என் சொந்த அநுபவத்தில் எடுத்து ஆபத்திலிருந்து மீண்டவை. இப்போதும் தொடர்கிறது.

1. Health insurance that covers pre-existing conditions

2. Life insurance ( term life or whole life)

3. Critical health insurance (that covers heart attack, major surgeries, cancer, etc)

4. Cancer insurance 

5. Accident and Death insurance 

6. Disability insurance 

7. Sports and special games insurance if the family members participate in any school games or professional games 

8. Flexible spending account to keep aside some amount to cover our deductibles and coinsurance.

9. Child day care spending account if you have qualifying children.

10. Home insurance and apt rental insurance 

11. Auto insurance.

12. Long term care insurance 

இவையனைத்தும் இங்கு பாதுகாப்பாக வாழ அனைவருக்கும் தேவை. மாதம் 500$லிருந்து 1000$க்கு மேல் கூட இது வரலாம்.  நமது சம்பளத்தில் இது ஒரு பெருந்தொகையாகக்கூட (one-third) நிற்கலாம். இவை அமெரிக்க வாழ்வின் அத்தியாவசியமானது. நிரந்தரத் தேவை. தவறாமல் எடுக்கனும்.

இவை மட்டுமே இடர்காலத்தில் நம்மை, நம் குடும்பத்தைக் காப்பாற்றும். 

1/3 - வீடு

1/3 - இன்சூரன்ஸ்

1/3 - வாழ்க்கையில் பிறவற்றிற்கு

வரக்கூடிய ஓபன் என்ரோல்மண்ட் பீரியடைத் தவறவிட்டு விடாதீர்கள்.

நம்மைக் காப்போம். நம் குடும்பத்தைக் காப்போம்.