அமெரிக்க தேர்தல் 2020 - பகுதி 2
அமெரிக்க ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றியே அது மாநிலங்களுக்குத் தரும் மாநில சுயாட்சி, பலம் பொருந்திய மாநிலங்களின் ஆட்சியே அதன் அடிப்படை வேர். மத்திய அரசின் ஆணைகள் சிலவற்றை நிராகரிக்கக் கூடிய சக்தி கூட மாநிலங்களுக்கு உண்டு. அத்தகைய பலங்களில் ஒன்று தேர்தல் நடத்தும் அதிகாரம் அதிக அளவில் மாநிலங்கள் கையிலிருப்பது.
தேர்தலில் முக்கியமானது ஒவ்வொரு பிரஜையின் ஓட்டுரிமை. அமெரிக்கப் பெண்களும் சிறுபான்மையினரும் ஒரு நீண்டதொரு போராட்டத்தில் பெற்றது இந்த ஓட்டு போடும் உரிமை. இதைப் பறிக்கக்கூடிய எந்த ஒரு செயலும் அவர்களை கொதித்து எழ வைக்கும்.
அமெரிக்கா பரப்பளவில் ஒரு மிகப்பெரிய நாடு. 3 வித time zone. ஆதலால் ஒரே நேரத்தில் துவங்கி ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை. அந்தந்த மாநிலங்களே நேரத்தை காலத்தை நிர்ணயம் செய்யும். எத்தனை ஓட்டுச்சாவடிகள் என்பதை தேவைக்கேற்ப மாநிலத்திற்குள் உள்ள county நிர்ணயம் செய்யும். இதெல்லாம் உள்ளாட்சித்துறையின் மிகப்பெரிய அதிகாரம், ஜனநாயகத்தின் வெற்றி இது.
இங்கு நீண்டகாலமாக ஓட்டாளரிடம் ஓட்டுச்சாவடியில் ID கேட்கும் பழக்கம் கிடையாது. பெயர் மற்றும் முகவரி மட்டுமே! ஒரே பெயரில் இருவர் இருந்தால் வயது மற்றும் பிறவற்றை சரிபார்க்கனும். தேர்தலில் இந்த தடவை ஓட்டு போடுபவர்கள் ஐடி காண்பிக்கனும்ன்னு எங்கள் மாநிலத்தில் சட்டம் இயற்றினார்கள். கோர்ட் அதை தடை செய்துள்ளது. கோர்ட் தடையை விலக்கும் வரை ஐடியை காண்பி என்று ஓட்டுச்சாவடியில் சொல்ல முடியாது.
மேலும் பல மாநில அரசுகள் தேர்தலன்றே வோட்டாளர் பதிவுகளையும் அனுமதிக்கிறது. ஆகவே முன்னர் அறிவித்த மொத்த வேட்பாளர் எண்ணிக்கைக்கும், தேர்தலன்றும் அதற்கு முந்தைய தினத்தில் பதிவானவர்களையும் முழுமையாக கணக்கிலெடுக்க வேண்டிய நாளை CANVASS date என்பர். இது எங்கள் மாநிலத்தில் நவம்பர் 13. தேர்தலன்று பதிவானவர்கள் இந்த கேன்வஸ் தேதிக்கு முன் எலக்ஷன் கமிசன் அலுவலகத்திற்கு ஏதாவது ஒரு அட்ரஸ் proof கொடுக்கனும் ( ட்ரைவர் லைசன்ஸ், பாஸ்போர்ட், யுடிலிடி பில், இன்னும் பிற வகைகளில் ஏதாவது ஒன்று). அதுவரை இவர்களது ஓட்டுகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படாது சில மாநிலங்களில். இதை provisional ballots என்பர். இந்த canvass date என்பது ஒவ்வொரு countyயும் பதிவான ஓட்டுகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு election processஐ நிறைவு செய்ய certify பண்ணும் நாள். அன்று தான் ஒரு மாநிலத்தின் தேர்தல் முடிவு நிறைவு பெறும் நாள்.
அமெரிக்க மக்கள் இடம் விட்டு இடம் பெயர்வது அதிகம். அத்தகையவர்கள் தங்கள் முகவரி மாற்றும் போது உடனே எலக்ஷன் கமிசனுக்குத் தெரிவித்தால் அது உடனே ரிஜிஸ்டரில் பதிவாகும். இல்லாவிட்டால் லைசன்ஸ் மாத்தும் போது dmvல் சொன்னால் அது எலக்ஷன் ரிஜிஸ்டரில் பதிவாகும். ப்ரைவசி சட்டங்கள் படி வேட்பாளர் சொல்லாமல் எதையும் மாற்ற முடியாது.
இறந்து போனவர்கள் பற்றிய தகவல்களை ஏதாவது ஒரு உறவினர் எழுத்து மூலம் தேர்தல் இடத்திலோ முன் கூட்டியோ தெரிவிக்கலாம். அந்தத் தகவலை எலக்ஷன் கமிசன் சரிபார்த்த பிறகே வோட்டர் லிஸ்டிலிருந்து இறந்தவர்கள் பெயரை எடுக்க முடியும். இறந்தவர்கள் பெயரில் ஓட்டு போடுவது அல்லது பிறரது பெயரில் ஓட்டு போடுவது felony. கண்டுபிடிக்கப்பட்டால் தண்டனை தான்.
ஓட்டு போடுவது ஒவ்வொருவரது உரிமை. அதை தடை செய்ய இயலாது. தேர்தலிடத்தில் வோட்டாளர் குறிப்பில் சரியாக இருந்தால் வோட்டாளரே தங்கள் ballot ஐ tabulator உள்ளே தள்ள முடியும். அவை உடனே கணக்கிலெடுத்துக் கொள்ளப்படும்.
வோட்டாளர் குறிப்பில் (poll book) பெயர் இல்லாதவர்கள் ஓட்டு போட வந்தால் எலக்ஷன் சட்டமுறைகளிலுள்ள செக்லிஸ்ட் ஒவ்வொன்றையும் சரிபார்த்து அவர்கள் provisional ballots மூலம் ஓட்டு போட முடியும். அவை எலக்ஷன் கமிஷனர்ஸ் மற்றும் அப்சர்வர்ஸ் (3, 5, 7 ... மாநிலங்கள் சட்டப்படி) முன் பரிசீலனை செய்யப்பட்டு முடிவுசெய்யப்படும்.
எலக்ஷன் முடிந்து இரண்டு நாள் கழித்தும் ரிசல்ட் தெரியலை என்று வருத்தப்படுபவர்களுக்கு, குறை கூறுபவர்களுக்கு, நான் சொல்ல வருவது: ஒவ்வொருவரும் போராடிப்பெற்றது ஓட்டுரிமை. ஓவ்வொரு ஓட்டையும் முறையாக பரிசீலித்து ஒவ்வொன்றையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டியது ஒரு மிகப்பெரிய ஜனநாயகத்தின் கடமை. Every vote counts. Hail our democracy. அது எவ்வளவு நாட்களானாலும்.
அடுத்த பதிவில் தொடரலாம்!
No comments:
Post a Comment