பத்தாவது வரைக்கும் சுகமாக தமிழ் மீடியத்துல படிச்சு வந்தேன். தமிழகத்தில் ப்ளஸ் 2 துவங்கிய இரண்டாவது பேட்ச். பெரியண்ணன் நேரா கொண்டு போய் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில மீடியத்தில் சேர்த்து விட்டான். ஆங்கிலம் கத்துக்கலைன்னா வாழ்க்கையில உருப்பட முடியாது ஒழுங்கா இதுலேயே இருன்னு மிரட்டல் வேற. அப்பா அம்மா படிப்பு பத்தி ஒன்னும் கண்டுக்க மாட்டாங்க, இத்தனைக்கும் அப்பா ஒரு அக்கௌண்டன்ட் வேற.
தட்டுத்தடுமாறி படிச்சு முடிச்சு காலேஜ் போக அப்ளிகேஷன் வாங்கி பூர்த்தி பண்ணனும். வாங்கின 4 காலேஜ் அப்ளிகேஷனும் இங்கிலீஷ்ல இருக்கு. பெரியண்ணனுக்குத் தான் வூட்டுல இங்கிலீஷ் தெரியும். அவன்ட்ட போனா திட்டு அடி தான் விழும்.
அதுக்கு பயந்து வெறும் பெயர் அட்ரஸ் மட்டும் ஃபில்லப் பண்ணி, எந்த கோர்ஸ் எடுக்கனும்ன்னு கூட தெரியாத காலம் அது, திருச்சி ஜோசப் கல்லூரிக்கும் இன்னும் இரண்டுக்கும் அனுப்பினேன். அண்ணன்ட்ட சொல்லலை.
அவன் என்னை சென்னைக்குக் கூட்டிப் போய், சென்னையிலத் தான் படிக்கனும், நல்லா ஆங்கிலம் பேசக்கத்துக்க இங்க தான் முடியும் வான்னு இழுத்துகிட்டு்போய், விவேகானந்தா, பிரசிடன்சியில சேர்க்கனும்ன்னு சொல்லி, என்னைக் கூட்டி அலைஞ்சு ஒன்னும் கிடைக்காம ஊர் திரும்பி வந்தோம்.
ஊர் திரும்பின மறுநாள் திருச்சி ஜோசப் கல்லூரியிலேர்ந்து நான் அரைகுறையாக அனுப்பின அப்ளிகேஷன்லேர்ந்து தேர்ந்தெடுத்து, முதல்ல பி ஏ சரித்திரம் கொடுத்து, அதை அவங்களே அடித்து, புள்ளியியல் மாத்திக் கொடுத்து அனுப்பின போஸ்ட் கார்ட் வந்தது.
பெரியண்ணன் முகத்துல கடுவன் பூனை, அவன்ட்ட சொல்லாமப் போட்டது, இன்னொரு பக்கம் இவ்வளவு சுத்தியும் சென்னையில அலைஞ்சு கிடைக்காம வந்தும், இவன் ஒன்னும்ந்தெரியாம நல்ல காலேஜ்ல வாங்கியிருக்கானேன்னு சந்தோஷமும் கூட. ஒழுங்காப்படின்னு போயிட்டான். அடி வாங்காம தப்பிச்சோம்டான்னு சந்தோஷம்.
இப்ப இதுவெல்லாம் நினைக்கக் காரணம், பையன் இப்ப காலேஜஸ்க்கு அப்ளை பண்றான். அப்பனுக்கு ஒன்னுந்தெரியாதுன்னு நினேச்சு தானே கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்து, அவன் ப்ரெண்ட்ஸ் வச்சு எல்லாத்தையும் பண்ணிகிட்டு, கடைசியில துட்டுகட்டும் போது உங்கிட்ட வர்றேன், அப்ப நீ அப்ளிகேஷனைப் பார்த்தா போதும்கிறானே!
அப்ளிகேஷனைக் கடைசியில காண்பிக்கும் போது அவன்ட்ட அம்புட்டு சரக்கு இருப்பது தெரியுது.
மவனே! உன்ர அப்பனுக்கு ஒன்னுந்தெரியாம வாடா இம்புட்டு வருசம் வாழ்ந்திருக்கேன். நாம வேலைக்கு அப்ளை பண்ற நம்ம ரெசூமே மாதிரி காலேஜ் அட்மிஷனுக்கு அப்ளை பண்றானுக! அம்புட்டு சரக்கோட அப்ளை பண்றானுக.
வெத்து அப்ளிகேஷனை வெறும் பேரும் அட்ரஸும் மட்டும் போட்டு படிச்சுபுட்டு வந்தேன்! அது ஒரு கனாக்காலம்!
No comments:
Post a Comment